கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்-4

 முத்தையன்


ஒரு காலத்துல அகப்ப நாட்டுல பஞ்சம் வந்ததால் ஊருசனம் பூராவும் பொழப்புக்காக வேற ஊருகளுக்கு போனாக அந்த ஊருல இருந்த மாடப்ப தேவரும் அவரு பொன்னாட்டி மாடியும்தெக்க இருந்த அம்பசமுத்திரத்துக்கு பக்கத்துல இருந்த ஊய்க்காடுங்குற ஊருக்கு வந்தாக மாடப்பத் தேவரு ஆளு கட்டு முட்டாவும் கடா மீசையுமா இருந்ததால ஜமீன்தாரு அவர ஊர் காவலுக்கு வைத்தார்.

அந்த ஊருக்கு வந்த ராசியோ என்னமோ ரொம்ப காலமா புள்ளையே இல்லாம இருந்த மாடி கர்ப்பமானா அச்சு அசலா அப்படியே மாடப்பத் தேவரையே உரிச்ச மாதிரி ஒரு ஆம்பளப் புள்ளைய பெத்தா.புள்ளையப் பூப்போல பொத்திப் பொத்தி வளர்த்து முத்தையான்னு பேரு வைச்சா புள்ளையும் வளர்ந்தான் வீர சூரனான எளவட்டமானான் எளவட்டம் முத்தையாவும் அப்பாவோட காவலுக்குப்போக ஆரமித்தானெளவட்டத்துக்குன்னே இருக்கின்ற விசயம் என்ன?காதல் தானே முத்தையாவும் அந்த ஊர்ல இருந்த வீராயியும் காதலிச்சாக ரெண்டு பேரும் ஊர் ஒடுங்குண பிறவு ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒரு மரத்தடியில அடிக்கடி சந்தித்து பேசிப் பிறக்கி இருந்தாக.களவே இல்லாம இருந்த ஊர்ல திடீர்னு வாழத் தோப்புல வாழத்தாருக களவு போக ஆரபிச்சிச்சு இந்த சேதிஜமீன் தாரு காது வரைக்கும் போக அவரு மாடப்பத் தேவரக் கூப்பிட்டு உம்ம காவல் காட்டுல எவனோ ஒரு கொம்பன் கை வரிசக் காட்டு தானே நீரு என்ன பண்றீருன்னு கோவமா கேட்டுட்டாரு.

மாடப்பத் தேவருக்கு மனசே சங்கடமாயிருச்சி அந்த கள்ளாளிப் பெயல எப்படியாவது பிடிச்சிருதேன் எனக்கு நாலு அரண்மன வீரங்களக் கொடுங்கன்னு தயவா கேட்டாரு ஜமீன்தாரும் ஆளு அனுப்பினாரு.
முத்தையாவும் வீராயியும் எப்பவும் சந்திக்குற எடத்துல பொழுது கருகருன்னு மசங்குன நேரத்துல கூடுனாங்க அப்ப அவ எனக்கு ஊடு பழம் சாப்பிடணுன்னு ரொம்ப ஆசையா இருக்கு நாளைக்கு கருக்கல்ல என்ன பாக்க வரும் போது கொண்டுக்கிட்டு வருவீர்களான்னு கேட்டா நீ கேட்டா மலையையே தூக்கிட்டு வருவேன் ஊடுபழம் பெருசா!ன்னு வீரமாச் சொன்னான்.

முத்தையா காவல்க்காரனோட புள்ளைங்கரதால எந்தத் தோட்டத்துக்கும் எப்ப வேணாலும் போயிட்டு வருவான் எந்தெந்தப் பனையில நொங்கு கிடக்கு எந்தெந்தத் தென்னையில எளநி கெடக்குன்னு எல்லாமே அவக்கு அத்துப்படி வீராயி ஊடு பழன்னு சொன்ன நிமிஷத்துல கல்லுடையான் தோட்டத்துல எட்டாவது பத்தியில பன்னிரண்டாவது வரிசையில் இருக்கின்ற வாழத்தாருல இருக்குங்குறது அவன் ஞாபகத்துக்கு வந்துச்சு உடனே மனசுக்குள்ளயே திட்டம் போட்டான்.இன்னிக்கு ராத்திரிக்கு கல்லுடையான் தோட்டத்து ஊடு பழ வாழத்தார வெட்டிட்டி வந்து ஒடப் பொதர்ல ஒளிச்சு வச்சிரணும்னு முடிவு பண்ணினான்.

அன்னிக்கு ஜமீன்தாரு மாடப்பத் தேவரக் கூப்பிட்டு இன்னிக்கு ராத்திரி அந்தக் கள்ளாளிப் பயல உம்ம கையில மாட்டினா மொதல்ல அவன் மொகத்த ஒரு குட்டிச் சாக்கு(கோணிப்பை)மூடுக் கட்டிரு பொறவு அவனை ஊருக்கு கிழக்கே இருக்குற வெட்டுப் பாறைக்கு கொண்டு போய் தலைய துண்டா வெட்டிரும் ரவோட ராவா அவன் பொணத்த நாய் நரி திங்கட்டும் இத செஞ்ச உனக்கு ஒரு பெரிய சன்மானம் இருக்குன்னு சொல்லி அனுப்பி வைச்சாரு.

முத்தையாவுக்கோ தூக்கமே வரல எப்படா ரெண்டாஞ்சாமம் வரும்னு கணக்கு பண்ணிக்கிட்டே இருந்தான் ரெண்டாஞ்சாமம் வந்ததும் எந்திரிச்சி எரவாணத்துல சொருகியிருந்த வெட்டருவாளை எடுத்துகிட்டு தோட்டத்துக்குப் போனான்
வாழத் தோட்டத்தைச் சுத்தி ஆளு உசரத்து உயிர்வேலி தோட்டத்து ஈசான மூலையில் மட்டும் போக வர ஒத்த வழிப்பாதை.
நல்ல கும்மிருட்டு அந்த இருட்டுலயும் ஒருத்தன் வாசத் தட்டியத் தொறந்துட்டு கொஞ்சங்கூட பதட்டமே இல்லாம போறத மாடப்பத் தேவரும் கூட இருந்த இரண்டு வீரங்க இரண்டு பேரும் பாத்துட்டாங்க அந்த விரங்கிட்ட மாடப்பத்தேவரு புள்ளிக்காரன் வசமா வந்து கண்ணியில மாட்டிகிட்டான் குட்டிச்சாக்கையும் கயித்தையும் எடுத்துத் தயாரா வச்சிக்கிட்டு மெள்ள பூன மாதிரி நடந்து வாங்க புள்ளிக்காரன் வாழத்தாரு வெட்டிட்டு இந்த வழியாத்தான் வருவான்னு மெதுவாச் சொல்ல ரெண்டு பேரும் சரின்னு தலையை ஆட்டினாங்க.
அந்த மையிருட்டுலையும் முத்தையா ஊடு பழத்தை கண்டுபிடிச்சி அழுக்கிப் பாத்து அது ஊடு பழந்தான்னு சரியா பூகிச்சி அருவாள ஒங்கி வாழத்தாரு தண்டுல ஒரு வெட்டு வெட்டினான் அவன்வெட்டுன சத்தத்தைக் மாடப்பத் தேவரும் வீரங்களும் உசாரானாங்க..

வாழத்தாரு ஒராளு சொமை இருந்துச்சு ஆனா முத்தையா வாழத்தார அனாயசமா ஒரு கையால தூக்கித் தோள் மேல போட்டுக்கிட்டு வந்தான் இவுக திட்டம் போட்டப்படியே சாக்குபையை அவன் மேலப் போட்டுக் கவுத்திட்டாக முத்தையாவால சத்தம்கூட போட முடியல முத்தையாவ குண்டுக்கட்டாக கெட்டி அப்பிடியே வெட்டுப் பாறைக்கு கொண்டு போயிட்டாங்க.
அங்க போனதும் விரங்க மாடப்ப தேவர்கிட்ட உங்கள ஜமீன்தாரு இந்தக் கள்ளாளிப் பயலோட தலைய வெட்டச் சொன்னாரேன்னு சொன்னாங்க உடனே இவரும் வெகுமதிக்கு ஆசப்பட்டு ஒரே வெட்டா வெட்டிடார் முத்தையாவோட தலை அப்படியே சுத்திப்போய் தனியா விழுந்திருச்சி பொறவு மாடப்பத் தேவரு ரொம்ப பெருமிதத்தோட வீட்டுக்கு போயிட்டாரு மறுநா விடிஞ்சானதான் தான் வெட்டினது தன்னோட புள்ளைங்கிற உண்மையே தெரிஞ்சுது தான் தவமா தவமிருந்து பெத்த புள்ளையோட ஒடம்ப நாய் நரி திங்கறதப் பார்த்த மாடி புருசன மனசு ஆறுற வரைக்கும் திட்டினா மனசு ஆறுமா?துக்கம் தாங்காம பாழங்கெணத்துல செத்து மடிஞ்சா பெத்த புள்ளையையே கொன்னுட்டோமே இனி உயிரோட இருக்கலாமான்னு நெனச்சு மாடப்பத் தேவரும் புளிய மரத்துல தூக்கு போட்டு நாண்டுகிட்டாரு.

ஒரு குடும்பமே அழிஞ்சு போக நாமதான் காரணம் னு வீராயியும் அரளி வெதையை அரச்சுக் குடிச்சிட்டு செத்துப்போனா
ஒரு வம்சமே அழிஞ்சு போக தாணும் ஒரு காரணம்னு நனச்சு மகராசா ஊய்க்காட்டு மாடன் கோயில ஒட்டி ஊய்க்காட்டு முத்தையாவோட சிதைஞ்ச சடலத்தையும் வெட்டுப்பட்ட தலையையும் அடக்கம் பண்ணி அந்த இடத்துல ஒரு பூடத்தையும் கெட்டி வச்சார்ன்னு ஊய்க்காட்டு முத்தையாசாமியோட வரலாறச் சொன்னாரு செம்புலிப் பட்டணம் தங்கராசு

No comments: