இல்லத்துப்
பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் இதுவரை பாம்பு கடித்து இறந்தார்கள்
என்று சொல்ல முடியாது.
இதற்கு
திருநெல்வேலி, மேலரத வீதியில்,
அருண் ஜீவல்லரி மார்ட்
எனும் பெயரில் நகைக்கடை வைத்துள்ள சகோதரர் சுத்தமல்லி நடராஜன் அவர்கள்
தெரிவிக்கும் கருத்தைப் பிரதிபலிக்கும் கதையைக் கழனியூரன் அவர்கள் நட்பு எனும்
இணையதளத்தில் பாம்பின் கால் தடம் எனும் தலைப்பில் பதிவு செய்துள்ளார்.
இந்தப்
பதிவிலுள்ள செய்தி அப்படியே தங்கள் பார்வைக்கு...
ஊர்வனவற்றுள்
பாம்பு ஒரு வித்தியாசமான உருவ அமைப்பைக் கொண்டது. பாம்பைப் பார்த்துப் பயந்த ஆதி
மனிதர்கள் பாம்புகளைப் பற்றி நிறையச் சேதிகளையும் படைத்திருக்கிறார்கள்.
பாம்பை மையமாகக்
கொண்ட பல புராண மரபுக் கதைகள் நம்மிடம் உள்ளன. ஆதிசேடன் என்ற பாம்பைப் பற்றிய
புராணச் செய்திகள் பெருந்தெய்வ வழிபாட்டு மரபில் உள்ளன. சிறுதெய்வ வழிபாட்டிலும்
பாம்பிற்கு ஒரு தனி இடம் உள்ளது.
பத்து தலை நாகம்
பாம்புப் படுக்கை என்று தொடங்கி, தாழம்பூவில்
குடியிருக்கும் சிறு நாகம் வரை வண்டி வண்டியாக பாம்புகளைப் பற்றிய சேதிகளை
அடுக்கலாம். பாம்புப் புத்தும் சிறுதெய்வ வழிபாட்டில் மக்கள் வழிபடும் ஸ்தலமாக
உள்ளது. நாகம்மை ஒரு குறுஞ்சாமியாகும்.
நாகராஜனைக்
கடவுளாக வழிபடும் மரபும் தமிழ்ச் சமூகத்தில் உள்ளது. நாகர்கோயிலில் உள்ள ‘நாகராசா’ கோயில் புகழ்பெற்ற ஆலயமாகும். அக்கோயிலின்
பெயரை ஒட்டித்தான் நாகர்கோயிலுக்கு அப்பெயர் வந்தது என்று எழுத்தாளர் பொன்னீலன்
அவர்கள் ஒருமுறை நேர்பேச்சில் என்னிடம் கூறினார்.
பாம்மை மையமாகக்
கொண்ட பழமொழிகள் ஏராளமாக நடப்பில் மக்களால் சொல்லப்படுகிறது. பாம்புகளை மையமாகக்
கொண்ட நாட்டுப்புறக் கதைகள் பல உள்ளன. பாம்பை மையமாகக் கொண்ட சேதிகளை மட்டும்
திரட்டினால் ஒரு தனி நூலே எழுதலாம் என்று தோன்றுகிறது.
இந்த இதழில்
பாம்பைப் பற்றிய இரண்டு பதிவுகளை மட்டும் வாசகர்கள் முன் வைக்கிறேன்.
திருநெல்வேலி
டவுன் மேல ரத வீதியில் ஒரு நகைக்கடையின் விளம்பரப் பலகை. நடிகர் சொக்கலிங்க
பாகவதர் கையில் தேசியக் கொடியை வைத்திருப்பதைப் போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
அந்த வித்தியாசமான விளம்பரத்தைப் பார்த்து, அந்த நகைக்கடைக்குள் சென்றேன்.
அந்த
நகைக்கடையின் உரிமையாளர் பெயர் நடராஜன். தற்போது அவர் சுத்தமல்லி என்ற ஊரில்
வசித்து வருகிறார். அவரோடு பலப்பல பேச்சாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்,
நாங்கள் பிள்ளைமார்
சாதியிலேயே தனி ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள். எங்கள் பிரிவிற்கு ‘இல்லத்துப் பிள்ளைமார்’ என்று பெயர். சிலர் இப்பிரிவினரை ‘ஈழுவர்’ என்றும் சொல்வார்கள். எங்கள் பிரிவைச்
சார்ந்தவர்களுக்கு மட்டும் பாம்பைப் பற்றிய பயம் கிடையாது. எங்கள் பிரிவில் இதுவரை
பெண்கள் யாரும் பாம்பு கடித்துச் செத்ததில்லை” என்று சொன்னார்.
நான் உடனே “ஏன் அப்படி?” என்று கேட்டு அவர் வாயைக் கிளறினேன். நகைக்கடை
அதிபரான சுத்தமல்லி நடராஜன் கூறியதை இனி அப்படியே வாசகர்கள் முன் வைக்கிறேன்.
“எங்கள்
சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அந்தக் காலத்தில் விறகு பெறக்க காட்டிற்குப்
போயிருக்கிறாள். அவளோட சொந்த ஊர் சொக்கம்பட்டி. அந்த ஊருக்கு மேற்கே சற்று
தொலைவில் உள்ள மலங்காட்டிற்குச் சென்று விறகு பெறக்கி இருக்கிறாள். அவள் புள்ள
பெத்த பொம்பளை. குழந்தை பெற்று சுமார் ஆறு மாசம்தான் இருக்கும். எரிக்க விறகு
இல்லாம மலங்காட்டுக்கு விறகு பெறக்க வந்திருக்கிறாள்.
பகலெல்லாம்
அலைந்து திரிந்து காடுகளில் தன்னால முறிந்து விழுந்து கிடக்கும் காய்ந்த
சுள்ளிகளைப் பெறக்கி ஒரு கட்டாகக் கட்டி வைத்துவிட்டு மத்தியான நேர களைப்புத் தீர
ஒரு மரத்தடியில் படுத்தாள். அவள் மட்டும்தான் தனியாக விறகு பெறக்க காட்டிற்குப்
போயிருக்கிறாள். பசி களைப்போடு மரத்தின் நிழலில் படுத்தவள் தன்னை மறந்து
தூங்கிவிட்டாள். தூக்கக் கலக்கத்தில் அவளின் மாராப்புச் சேலை எப்படியோ லேசாக
விலகிட்டு. ஆறுமாசக் கைக்குழந்தைக்கு காலையில் பால் கொடுத்து தொட்டிலில்
போட்டுவிட்டுத் தன் மூத்த மகளிடம் பிள்ளையைப் பார்த்துக்கச் சொல்லி விட்டுத்தான்
காட்டிற்கு வந்திருந்தாள். அவள் நல்லா கட்டுமுட்டான பொம்பளை. பால் சுரப்புள்ள தனம்
அவளுக்கு இயற்கையாக அமைந்து இருந்தது.
காட்டுக்குள்ள
மரத்து நிழல்ல தன்னந்தனியா படுத்துக் கிடந்த அந்தத் தாயின் மார்பைப் பார்த்தது ஒரு
பாம்பு. அந்தப் பாம்பிற்கோ கடுமையான பசி. எனவே மெல்ல ஊர்ந்து போய் அந்தத் தாயின்
மார்புக் காம்பில் வாய் வைத்துச் சுவைத்துப் பாலைக் குடித்தது. தூக்கக்
கலக்கத்தில் பசி மயக்கத்தில் அந்தத் தாய் தன் நினைவு இழந்தவளாகத் தன் பிள்ளைதான்
பாலைக் குடிக்காக்கும் என்று நினைத்துத் தன்னையறியாமல் பாலைச் சுரந்து கொடுத்தாள்.
பாம்பும் தன் பசி
அடங்கும் வரை அந்தத் தாயின் மார்பில் பாலைக் குடித்துவிட்டுத் திரும்பியது.
அப்போது தற்செயலாகத் தூக்கம் கலைந்து கண் விழித்துப் பார்த்த அந்தத்தாய், தன் மார்புகளைப் பார்த்தாள். மார்பில்
அமுதப்பால் சுரந்ததற்கான அடையாளம் இருந்தது. பாம்பு ஒன்று அந்த இடத்திலிருந்து
ஊர்ந்து செல்வதையும் பார்த்தாள். என்ன நடந்திருக்கும் என்பதை ஒருவாறு அந்தத் தாய்
யூகித்துக் கொண்டாள் என்றாலும் அவள் அதைரியப்படவில்லை – ‘பாம்பு கடித்துச் செத்தவர்களைவிட, பாம்பு கடித்துவிட்டதே என்று செத்தவர்கள் தான்
அதிகம்’ என்பதை அந்தப்
பெண் தெரிந்து வைத்திருந்தாள்.
பசியோடு வந்த ஒரு
பாம்பிற்குப் பால் கொடுத்து பாம்பின் பசியை அமர்த்திய பெருமையோடு அந்தப் பெண் –
மாராப்புச் சேலையை
சரிசெய்து கொண்டு மரத்தடியில் கிடந்த விறகுக் கட்டைத் தூக்கித் தலைமேல் வைத்துக்
கொண்டு தன் வீட்டைப் பார்த்து நடந்தாள். இது ஒரு கதை.
எங்கள்
சமூகத்தைச் சேர்ந்த இன்னொரு பெண், காட்டு வழியே
சென்று கொண்டிருந்தாள். வழியில் ஒரு பாம்பைப் பார்த்தாள். ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்கிறது பழமொழி. ஆனால் அந்தப் பெண் அந்தப்
பாம்பைப் பார்த்து பயப்படவில்லை.
அந்தப் பாம்பு
மெலிந்து, தளர்ந்து,
தன் நிலை மறந்து மயங்கிக்
கிடப்பது போல் தோன்றியது. பாம்பும் ஒரு உசுப்பிராணி (உயிர் உள்ள பிராணி) தானேன்னு
நினைச்ச அந்தப் பெண் அந்தப் பாம்பின் பக்கத்தில் போய்ப் பார்த்தாள்.
பாம்பின் கண்கள்
ஒளி இழந்து காணப்பட்டது. பார்க்கவே பாவமாக இருந்தது. பாம்பும் அப்பெண்ணைக் கண்டு
கலைந்து ஓடவில்லை. காட்டு வழி தனி ஆளாக இருக்கிறோம். ஆயிரம்தான் இருந்தாலும்
பாம்பு விஷமுள்ள ஜந்து என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அந்தப் பெண்ணுக்கு ‘அந்தப் பாம்பிற்கு ஏதோ ஒரு நோய் அல்லது சிக்கல்
இருக்கிறது. எனவே தான் நடைபாதையில் கிடந்து இப்படி மருவிக் கொண்டு கிடக்கிறது”
என்று நினைத்தாள்.
நடப்பது
நடக்கட்டும் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்தப் பாம்பின் அருகில்
சென்றாள். அப்போது அவள் உள் மனசு வேண்டாம் இந்த விஷப்பரீட்சை என்று சொன்னது.
நல்ல மத்தியான
நேரம். காட்டு வழி அது. வழிப்போக்கர்களாக யாராவது வருகிறார்களா என்று கண்ணுக்கு
எட்டிய தூரம் வரைப் பார்த்தாள். ஒரு ஈங்குருவியையும், சுடுகுஞ்சையும் காணலை! “சவத்தப் பெய பாம்பு எக்கேடும் கெட்டுப்
போகட்டும்” என்று நினைத்து
பாதையில் செல்லவும் அந்தப் பெண்ணுக்கு மனசு வரவில்லை. எனவே ‘நடக்கது நாயகன் செயல்’ என்று கடவுளின் மேல் பாரத்தைத்
தூக்கிப்போட்டுவிட்டு, அந்தப் பாம்பின்
பக்கத்தில் போய் உற்றுப் பார்த்தாள்.
முதல் பார்வையில்
ஒண்ணும் தெரியவில்லை, பாம்பின் வால்
முதல் வாய் வரை உடம்புல புண் அல்லது காயம் இருக்கிறதா என்று பார்த்தாள் – ஒன்றும் துப்புத் தெரியவில்லை. பாம்பு அழுவதைப்
போல் இருந்தது. எனவே மேலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாம்பின் கிட்டப் போய்
அதன் வாயைப் பார்த்தாள்.
அப்போதுதான்
பாம்பின் வாயில் மேல் அன்னத்திற்கும், கீழ் அன்னத்திற்கும் நடுவில் ஒரு முள் குத்தி இருப்பது தெரிந்தது. பாவம் வாயில்லா
ஜீவன் அது. அதன் வாயில் முள்ளும் குத்தி விட்டால் என்னவாகும். பாம்பு தன் வாயை
எப்படியெல்லாமோ மேலும் கீழும் அசைத்துப் பார்த்திருக்கிறது. வசமாக வாயின் மேல்
அன்னத்திற்கும் கீழ் அன்னத்திற்கும் சேர்ந்து தைத்த முள் நகரவில்லை!
அப்போது அந்தப்
பெண்ணிற்கு பாம்பின் வாட்டத்திற்கான காரணம் தெரிந்து விட்டது. நடப்பது நடக்கட்டும்
என்று நினைத்து துணிந்து அந்தப் பாம்பின் வாயில் குத்தியிருந்த நீளமான முள்ளை
பையப் பூப்போலப் பிடுங்கி எடுத்தாள். பாம்பின் வாயில் இருந்து லேசாக ரத்தம்
கசிந்தது. அந்தப் பாம்பு நன்றியோடு ஒரு முறை அப் பெண்ணை ஏறெடுத்துப்
பார்த்துவிட்டு பாதையை விட்டு ஊர்ந்து ஒரு புதருக்குள் சென்று மறைந்து உயிர்
பிழைத்துக் கொண்டது.
‘பாம்பிற்குப்
பால் வார்க்கதே’ என்கிறது ஒரு
பழமொழி. எங்கள் குலப்பெண் ஒருத்தி பாம்பிற்குத் தாய்ப்பாலே கொடுத்திருக்கிறாள். ‘பாம்பைக் குட்டியிலேயே கொன்று விடு’ என்கிறது இன்னொரு பழமொழி. எங்கள் குலப்பெண்
ஒருத்தி பாம்பிற்கு உயிர் பிச்சையே கொடுத்திருக்கிறாள். எனவே தான் எங்கள்
குலப்பெண்கள் யாரையும் பாம்புகள் தீண்டுவதில்லை’ என்று பாம்புகளைப் பற்றிய சேதிகளை
உணர்ச்சிமயமாய்ச் சொல்லி முடித்தார் தகவலாளர்.
பாம்புகளைப்
பற்றிய இந்தத் தரவுகள் நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்டிருந்தாலும், அவைகள் உணர்த்தும் சேதிகள் அன்புமயமாய்
இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். நாட்டார் தரவுகளை அறிவுபூர்வமாக அணுகுவதைவிட
உணர்வுபூர்வமாக அணுகுவதே நல்லது.