கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 26, 2013

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-16

மாயாண்டி சுவாமிகளின்

சுவாமிகளின் அவதா-ரத்துக்கு வருவோம். கட்டிக்குளத்தில் குப்பமுத்து வேளாளர் – கூத்தாயி அம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர். மண்பாண்டம் செய்வது இவர்கள் தொழில். தவிர, உள்ளூரில் இருந்த ஐயனார் கோயிலில் பூசாரியாகவும் இருந்தார் குப்பமுத்து. சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் பக்தர்களாக இருந்தனர் இந்தத் தம்பதியர். அவ்வப்போது சுவாமிகளின் தரிசனம் பெற்று வந்தனர். ஒரு முறை ராமலிங்க சுவாமிகளிடம் திருவருட் பிரசாதம் பெற்ற பாக்கியத்தால், கூத்தாயி அம்மாளுக்கு காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரன்று (1858 ஜூலை) ஆண் குழந்தை பிறந்தது. அகிலத்தையே ஆளப் பிறந்த அந்த மகவுக்கு ‘மாயாண்டி’ எனப் பெயரிட்டனர். இளம் வயதிலேயே இறை ஞானம் கிடைக்கப் பெற்றது மாயாண்டிக்கு. பெற்றோரும் இதை உணரும் சம்பவம் ஒன்றும் விரைவிலேயே நடந்தது.

தான் பூஜை செய்யும் உள்ளூர் ஐயனார் கோயிலுக்கு சிறுவனான மாயாண்டியையும் கூட்டிச் செல்வது குப்பமுத்துவின் வழக்கம். அப்படி ஒரு நாள் கூட்டிச் சென்றபோது மகனை வெளிக் கூடத்தில் அமர்த்தி வைத்து விட்டு, ஐயனார் பூஜைக்காகக் கருவறைக்குள் சென்றார் குப்பமுத்து. ஐயனாரின் திருமந்திரங்களைச் சொல்லி அவருக்கு அபிஷேக ஆராதனைகளை முடித்து விட்டு வியர்வை சொட்ட வெளியே வந்த குப்பமுத்து அதிர்ந்தார். அவர் கண்ட காட்சி பதற வைத்தது.

குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன. கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்திவிடப் போகிறதோ என்கிற பீதியில், “ஐயனாரப்பா… எம் மகனைக் காப்பாத்து” என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து. பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார். என்னே அதிசயம்! நாகத்தைக் காணோம். தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி. ‘மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது’ என்பதை அப்போது உணர்ந்து கொண்ட குப்பமுத்து, அவனை அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர்.

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-15

.
குகை நமசிவாயர்

குகை நமசிவாயர் அப்போது சிவ பூஜையில் திளைத்திருந்தார். தங்களை மறந்து சிவ சகஸ்ரநாமத்தை துதித்துக் கொண்டிருந்தனர் அடியார்கள். நேராக நமசிவாயரிடம் வந்த ஊர்த் தலைவர், ஐயா... ஒரு நிமிடம்... என் கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு உங்கள் பூஜையைத் தொடருங்கள் என்றார். ஊர்த் தலைவரைப் பார்த்துப் புன்னகைத்த நமசிவாயர், கேளுங்கள்... என்ன உமது கேள்வி? என்றார். கிராமத்தில் உள்ள ஆலய பூஜைக்காக வளர்க்கப்பட்டிருந்த அனைத்து பூச்செடிகளில் இருந்தும் உம் ஆட்கள் அனுமதியே இல்லாமல் மலர்களைப் பறித்துக் கொண்டு போய் விட்டார்கள். எம் ஆலய சிவனுக்கு அணிவிப்பதற்குப் பூக்களே இல்லை. இது நியாயமா? என்று கோபம் கொப்பளிக்கக் கேட்டார். அவரைச் சுற்றி நின்றிருந்த ஊர்மக்கள் நமசிவாயர் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தனர். எல்லாம் சிவனே... நந்தவனத்தில் பூக்கும் பூக்கள் இறைவனுக்கு உரியவை. உங்கள் ஆலய இறைவனுக்கும் அவை சூட்டப்பட்டுள்ளன. எமது பூஜைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார் நிதானமாக. உமது பூஜைக்கு எமது கிராமத்து நந்தவனத்தில் இருந்து பறிக்கப்பட்ட பூக்கள் பயன்படுத்தப்பட்டது பற்றித்தான் இப்போது கேள்வியே. உமது சிவலிங்க பூஜைக்கு இந்தப் பூக்கள் அணிவிக்கப்படுவதற்கு எம் ஆலய இறைவன் ஒப்புக் கொள்ள மாட்டான். நீங்கள் தவறு இழைத்து விட்டீர்கள் என்றார் ஊர்த் தலைவர். எங்கும் நிறைந்தவன், எத்தகைய பூஜையையும் ஏற்றுக் கொள்வான். உங்கள் ஊர் சிவன், எம் சிவன் என்று பிரித்துப் பார்க்க வேண்டாம். இதெல்லாம் பேச்சுக்கு நன்றாக இருக்கும். சரி, நீங்கள் சொல்வது உண்மையானால் - அதாவது உமது சிவ பூஜைக்கு எம் ஆலய நந்தவனத்துப் பூக்கள் பயன்படுத்தியதை எம் கிராமத்து இறைவன் ஏற்றுக் கொண்டு விட்டான் என்றால், உமது செயலை நான் ஏற்றுக் கொள்கிறேன். வணங்குகிறேன் என்றார் ஊர்த் தலைவர். அப்படியே... உம் இறைவன் இதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் நமசிவாயர். இதோ, எம் ஆலய இறைவன் திருமேனியில் ஒரு மலர் மாலை இருக்கிறதே... அந்த மலர்மாலை இங்குள்ள பலரும் காணுமாறு தானாக வந்து உம் கழுத்தில் விழ வேண்டும். அப்படி நிகழ்ந்து விட்டால், உமது பூஜை முறை அனைத்தும் அந்த சிவனாரின் ஒப்புதலோடுதான் நடைபெறுகிறது என்பதை நான்மனமார ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-14

பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்

12வது வயதில் பாடகச்சேரி வருகை தந்து, மாடுகளை மேய்க்கும் பணியைச் செய்தார் ராமலிங்க சுவாமிகள்.
 அந்த வயதில் வடலூர் வள்ளலாரிடம் ஞானோபதேசம் பெற்றார். தனது ஞானத்தால் ஒரே நேரத்தில் இரண்டு ஊர்களில் தரிசனம் தருவது, தோன்றுவது, மறைவது போன்றவற்றை நிகழ்த்தியுள்ளார். உலோகத்தைத் தங்கமாக மாற்றும் ரசவாதம் அறிந்தவர் இவர். தியானத்தில் உடல் துவாரங்கள் ஒன்பதையும் தனித்தனியாகப் பிரிக்கும் "நவ கண்ட யோகம்' பயின்றவர்.பைரவ உபாசகர்.
 வெகு தொலைவில் இருப்பார். இவரை அழைத்து வருமாறு நாய்களிடம் வேண்டினால், அடுத்த நொடியில் அதே நாய்களுடன் கண் முன்பே தோன்றுவார். நூற்றுக்கணக்கான இலைகளில் அறுசுவை உணவு வைத்து, இவர் அழைத்தவுடன் எங்கிருந்தோ பெரும் திரளாக நாய்கள் தோன்றி வந்து உண்டுவிட்டுப் போகும் அதிசயங்களும் நிகழ்ந்தது

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-13

ஸ்ரீ மௌலா சாஹிப் சுவாமிகள்

ஸ்ரீ மௌலா சாஹிப் சுவாமிகளின் சித்தர் பீடம் முல்லா வீதியில் உள்ளது. இவர் பல ஆண்டுகள் லால்பகதூர் சாஸ்திரி வீதியில் தங்கி இறை பிரச்சாரம் செய்தவர். இவர் சவப்பெட்டி ஊர்வலத்தில் பிரெஞ்சு கவர்னரும் கலந்து கொண்டனர் என்பது மிகச்சிறப்பு வாய்ந்தது.

இவரின் சிறப்பு, இவர் இறந்து எத்தனையோ ஆண்டுகள் ஆனபின்பும் சவப்பெட்டியை கவர்னர் திறந்து பார்க்க ஆவல் கொண்டு திறந்து பார்க்கையில் மகானின் உடல் சற்றும் அழுகாமல் இருந்தது.

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-12


பொன்னாயிர சுவாமிகளின் அற்புதங்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதியில் தோன்றி, ஐம்பதாண்டுகள் மண்ணுலகில் மானுடருக்கு அருள்நலம் புரிந்த அந்த சித்தர்குலப் பெருமகனின் அருட்செயல்கள் அநேகம். முந்நூறு குடும்பங்களே உடைய கோட்டைப்புறச் செட்டி குலத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் பொன்னாயிர சுவாமிகள். ஐந்து குழந்தைகளில் கடைசிக் குழந்தையாக அவதரித்தார் பொன்னாயிரம். பெற்றோர் பெயர் தெரியவில்லை. சிறு வயது முதலே சுதந்திரமாகச் சுற்றித் திரிதலில் பெருவிருப்பம் கொண்டிருந்ததால், உடன் பிறப்புகளும் இவரைப் புறக்கணித்தனர்.

 இத்தகைய சுதந்திர மனப்பான்மையால், பல ஊர்கள் சுற்றி, பல்வேறு தொழில்களும் கற்றுக்கொண்டார். சித்தர்களுக்கே உரிய தன்மைகளான எதிலும் பற்றின்மை, காமம், கோபம், விருப்பு வெறுப்பு போன்ற உணர்வுகள் ஏதுவுமற்று இருந்தார் பொன்னாயிரம். பசி, தூக்கம் மறந்து காரியம் செய்தல், எவ்வுயிர்களிடத்திலும் எந்நிலையிலும் அளவற்ற கருணை, எப்போதும் பிறர்க்கு உதவும் இறைகுணம் என கருவிலேயே திருவாக விளங்கினார். இவ்விதம் முப்பத்தைந்து வயது வரை பல ஊர்களைச் சுற்றித் திரிந்த பொன்னாயிரம், பின்னர் தம் சொந்த ஊரான திருவில்லிபுத்தூரை வந்தடைந்தார். நெசவாளப் பெருமக்கள் வாழ்ந்துவந்த தெருக்களில் ஒன்றான ஊருணிப்பட்டித் தெருவில் அடைக்கலமானார்.

பிள்ளையில்லாக் கிழவிக்கு ஈசன் பிள்ளையாகச் சென்ற திருவிளையாடல் கதைபோல, இத்தெருவில் மொச்சை விற்கும் கிழவி ஒருத்திக்குப் பிள்ளையானார் பொன்னாயிரம். மருத்தாமலை எனும் நண்பர் ஒருவரும் பொன்னாயிரத்துக்கு மிக நெருக்கமான உளங்கலந்த நண்பரானார். இவ்விதம் கிழவியின் பராமரிப்பில் பல்லாண்டுகள் வாழ்ந்து வரலானார்.

பொன்னாயிரத்தைப் புடம்போடும்விதமான ஒரு நிகழ்வு முதியவர் ஒருவரால் நிகழ்ந்தது. ஒரு நாள் மாலை பொன்னாயிரம், மருத்தாமலை மற்றும் சில நண்பர்களுடன் முதலியார்பட்டி சுடுகாட்டில் கிணற்றில் குளித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர்கள் வரும் வழியிலுள்ள ஓய்வு மண்டபத்திலிருந்து அச்சமயம் ஒரு முனகல் சத்தம் வந்தது. மருத்தாமலை முன்சென்று பார்க்க, அங்கே மண்டபத்தில் நூறு வயது மதிக்கத்தக்க முதியவரொருவர் செக்கச்சிவந்த மேனியோடு கழுத்தில் உருத்திராட்ச மாலை அணிந்து மதிக்கத்தக்க தோற்றத்துடன் கடைசி நிமிடங்களில் இருந்தார்.
தோற்றம் தந்த மதிப்பில் அவர் அருகே சென்ற மருத்தாமலை அவரிடம், சாமி, என்ன செய்யணும், சொல்லுங்க! எனக் கேட்டார். முதியவரோ அவரிடம் பொன்னாயிரத்தைக் கைகாட்டி, அவரைக் கூப்பிடு என்று சைகை காண்பித்தார். பொன்னாயிரமும் அவர்முன் ஓடிவந்து நின்றார். முதியவர் பொன்னாயிரத்தைத் தன் பக்கத்தில் அமருமாறு சைகை காட்டினார். அமர்ந்தவுடன், தன் மடியிலிருந்து திருநீற்றுப்பையை எடுத்து பொன்னாயிரத்தின் நெற்றியிலும் மார்பிலும் பூசியதோடு, சிறிது வாயிலும் இட்டு, ஈனஸ்வரத்தில், நான் தருவதை நீ வாங்கிக் கொள்வாயா? எனக் கேட்க, பொன்னாயிரமும் சரி என்று தலையாட்டினார்.

பொன்னாயிரத்தின் தலையில் கை வைத்து, கிழவர் காதைக் கொடு என்றவாறே, அவர் காதில் ஏதோ ஒரு மந்திரத்தை முணுமுணுத்தார். அதைக் கேட்ட பொன்னாயிரத்தின் முகம் மலர்ந்த சமயம், முதியவரின் உயிர் பிரிந்தது. பின் அனைவரும் அந்த முதியவரின் நல்லுடலை, தகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்தனர். இதன் பின்னர் மகான் பொன்னாயிரத்தின் தேகம் முழுவதிலும் ஒரு புதிய ஒளி ஊற்று பரவியது. அவரிடமிருந்து இனங்கண்டு சொல்லமுடியாத ஒரு ஈர்ப்பு இருந்ததை அனைவருமே உணர்ந்தனர். பொதுமக்கள், பொன்னாயிரத்திடம் கூடுதல் பய பக்தியும் மரியாதையும் காட்டினார்கள். இயல்பிலேயே இறைகுணங்களோடு வாழ்ந்துவந்த பொன்னாயிரத்தை பொன்னாயிர சுவாமிகளாக, முதியவர் வடிவில் இறைவனே வந்து உயர்த்தி அருள்பாலித்திருப்பார் என்றுதான் இந்நிகழ்வைக் கொள்ளமுடிகிறது. இந்நிகழ்வுக்குப் பின்னர், பொன்னாயிர சுவாமிகளின் இறையருள் லீலைகள் தொடங்கின.

 ஒருமுறை பொன்னாயிர சுவாமிகள் தங்கியிருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து, தெருவில் பல குடிசைகள் எரிந்து தீ பரவிக்கொண்டிருந்தது. தீயை அணைப்பதற்கு மக்கள் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது பொன்னாயிர சுவாமிகளிடம் வந்து பொதுமக்கள் முறையிட, உடன் சுவாமிகள் தன் அறையிலிருந்த ஒரு குடையை எடுத்துவந்து வீதியில் நின்று விரித்து உயர்த்திப் பிடிக்க, உடனே வானில் மேகங்கள் கருகருத்து மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குப் பெய்த மழையில், குடிசைகளில் பற்றிக்கொண்டிருந்த தீக்கனல் முற்றிலும் அணைந்ததில் மக்களின் மனமும் குளிர்ந்தது. இந்நிகழ்வின் மூலம் ஊருணிப்பட்டி மக்களிடையே சுவாமிகளின் புகழ் பரவியது. இதன்பின் அன்றிலிருந்து இன்றுவரை அப்பகுதியில் தீ விபத்து எதுவும் இல்லை என்பதும்

குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.
அவரைத் தேடிச் செல்லும் தொழுநோயாளிகளுக்கும், இன்னும் பல தீராத நோய் கொண்டவர்களுக்கும் சுவாமிகள் தரும் மருந்தென்ன தெரியுமா? அவர் உடலிலிருந்து அழுக்கைத் திரட்டிக் கொடுத்து, இதைப் பாலில் போட்டுக் குடி என்பார். அவர்களும் அப்படியே செய்து குணமான செய்திகளும் உண்டு. சுவாமிகள், யார் வீட்டுக்குள்ளாவது திடீரென நுழைவார். அம்மா, கொஞ்சம் கஞ்சி கொடு என்பார். வீட்டுக்காரப் பெண், அய்யோ சாமி, கஞ்சி இல்லையே என்பாள். சுவாமிகள் சிரித்துக்கொண்டே, ம்! பானையைத் திற, கஞ்சி இருக்கும். கொண்டு வா என்பார். அப்பெண்ணும் கஞ்சி பானையைத் திறக்க, கஞ்சி நிறைந்திருக்கும். வியந்தவாறே அந்தப் பெண், சுவாமிக்குக் கஞ்சியுடன் ஊறுகாயும் சேர்த்துக் கொடுப்பாள். சுவாமிகள் வயிறு நிறையக் குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்புவார். குழந்தைகள் என்றால், பொன்னாயிர சுவாமிகளுக்குத் தனி இன்பம்.

குழந்தைகளுக்கு எந்த நோய் என்றாலும், சுவாமிகளிடம் தூக்கிக்கொண்டு வருவார்கள் பெற்றோர், உடன் திருநீற்றை அள்ளி, குழந்தைகள் உடல் முழுதும் பூசி வாயிலும் சிறிது போடுவார். உடன் நோய் நொடியில் மறையும். ஒருமுறை சிதம்பரம் போய் வருகிறேன் என்று சொல்லிப் புறப்பட்ட நண்பருக்கு, எதற்குக் காசெல்லாம் செலவழிக்கிறாய்? இங்கேயே நான் உனக்கு சிதம்பரத்தைக் காட்டுகிறேன் எனக் கூறி, அவர் தங்கியிருந்த நந்தவனச் சுவரில் ஒரு கரித்துண்டால் சதுரமாகக் கட்டம் போட்டு, இதோ பார் சிதம்பரம் என்று கூற, அந்தச் சுவரில் சிதம்பரம் கோயில் வாசலிலிருந்து சுவாமி சன்னதி வரை தெரிந்ததோடல்லாமல், போய் வருகின்ற மக்களும் தெளிவாகத் தெரிந்தார்கள். உடன் நண்பர், சுவாமிகளை விழுந்து வணங்கினார். சுவாமிகளைப் பார்க்கவரும் அன்பர்கள் தரும் பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் அனைத்தையும் ருசித்து ரசித்துச் சாப்பிட்ட பின், வாயிலிருந்து பல வண்ணப்பூக்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்து வந்தவர்களை ஆசிர்வதிப்பார் சுவாமிகள். பூவைப் பெற்றுச் செல்லும் பலருக்கும் அவர்கள் குடும்பத்தில் பல நன்மைகள்

பிறருக்காகவே வாழ்ந்த பொன்னாயிரம் சுவாமிகள், தாம் முக்தி பெறும் நாளை அறிந்தார். நெருங்கிப் பழகும் சிலரிடம் அதைத் தெரிவித்தார். மார்கழி மாத சித்திரை நட்சத்திரத்தில் நான் முக்தி அடைவேன். அப்போது திருப்பதியிலிருந்து ஒரு கிரீடம் வரும். அதை ஒரு நாள் முழுதும் என் தலைமேல் வைத்து எடுத்த பின்னர், என்னை அடக்கம் செய்யுங்கள். என் சமாதிமீது அமைக்கும் லிங்கத்தின்மேல் அந்த கிரீடத்தை வைத்து அனுதினமும் பூஜை செய்யுங்கள் என ஆசியருளினார்.


குறித்த நாளில் சுவாமிகள் முக்தியடைய, சிறிது நேரத்தில் ஓர் இளவயதுத் துறவி, கருப்பு நிற நெடிய உருவத்துடன், ஓங்கி உயர்ந்த கட்டான உடலழகோடு, நாகபடத்துடன் வண்ணக் கலை நுணுக்கங்களுடன் கூடிய கிரீடத்தைக் தாங்கி நந்தவனத்தில் நுழைந்தார். துறவியை வரவேற்ற சுவாமியின் பக்தர்கள், உள்ளே முக்தியடைந்திருக்கும் சுவாமிகளின் தலையில் அந்த கிரீடத்தைச் சூட்ட, சுவாமிகளின் உடல் மேலும் புதுப் பொலிவு பெற்றது. பொன்னாயிரம் சுவாமிகளுக்குத் தலையில் சூட்டிய கிரீடத்தை தன்னை மறந்து ரசித்துப் பார்த்த அந்தத் துறவி, அங்கிருந்து மறைந்தார். தலையில் கிரீடம் வைத்து ஒரு நாள் ஆன பின்னர், சுவாமிகளை அடக்கம் செய்யும் திருப்பணி ஆரம்பாகியது. ஆறடி அகலம், எட்டடி ஆழத்தில் குழி வெட்டி, துறவிகளை அடக்கம் செய்யும் விதிமுறைகளோடு பூக்கள், வாசனை திரவியங்கள் என்று பலவும் குவித்து சுவாமிகளை அமர்ந்த நிலையில் உள்ளே இருத்தி சமாதி ஏற்படுத்தினார்கள். இதன்பின் ஒரு வாரத்தில், சுவாமிகளின் சமாதிமீது அழகிய சிவலிங்கம் நிறுவப்பட்டது.

சமாதி எழுப்பி இரு வாரங்கள் கழிந்த நிலையில், எங்கள் தேவாலயத்துக்கு எதிரே இந்தச் சமாதி அமைத்துள்ளீர்களே! எனவே, அதை அகற்றுங்கள் என்று சொல்லிய வேற்று மதத்தைச் சார்ந்த சிலர், அப்போதிருந்த ஆங்கிலேயே மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தார்கள். இதன்பின் மாவட்ட ஆட்சியர் பரிவாரங்களுடன் வந்து சுவாமிகளின் சமாதியைப் பார்வையிட்டு, சமாதியை அகற்ற உத்தரவிட்டார். அவ்விதமே பணியாட்களும் சமாதியை இடித்து சிவலிங்கத்தை அகற்றி, சுவாமியை அடக்கம் செய்த பகுதியைத் திறந்தார்கள். பக்தர்களோ செய்வதறியாமல் சுவாமிகளை மானசீகமாக வேண்டியவாறு இருந்தனர்.

என்ன ஆச்சரியம் ! குழிக்குள், அதே அமர்ந்த நிலையில், ஒரு சிறிதும் வாடாமல் வதங்காமல், அன்றலர்ந்த செந்தாமரையாய்த் திகழ்ந்தது சுவாமிகளின் உடல். குழிக்குள் கொட்டப்பட்டிருந்த பூக்கள் அத்தனையும்கூட வாடாமல் புது மலர்களாய்க் காட்சி தந்தன. வாசனை திரவியங்களும் சுற்றுவட்டாரத்தில் பரவி கமகமத்தன. மாவட்ட ஆட்சியரும் பணியாட்களும், மனு தந்த வேற்று மதத்தினரும் சுவாமிகளின் அருளாற்றலை எண்ணி வியந்தார்கள். சமாதியை இடிக்கவந்த மாவட்ட ஆட்சியர் தன்னையறியாமல் சுவாமிகளைக் கைகூப்பி வணங்கினார். இதன்பின் மீண்டும் சமாதியை மூடி, சிவலிங்கத்தை அந்த இடத்திலேயே நிறுவச் செய்து, அங்கே பெரிய கோயில் எழுப்பவும் ஆலோசனைகள் சொல்லி விடைபெற்றார்.

 இதன்பின் நந்தவனத்துடன் கூடிய பெரிய அழகிய கோயிலை எழுப்பியதுடன், அற்புதமான வற்றாக்கிணறும் அமைத்தார்கள். கலையழகுமிக்க விநாயகர் சிலையும், ஆண்டிக்கோல அழகிய முருகன் சிலையும், கண் மயக்கும் எழில்மிகு நந்திச் சிலையும் என கோயில், பல அழகிய கலைநயமிக்க இறைவடிவங்களுடன் எழிலுறத் தொடங்கியது. கடைசியாக, பொன்னாயிர சுவாமிகள் சமாதி அடைவதற்கு சில தினங்களுக்கு முன் எடுத்துக் கொண்ட அந்தக் கால புகைப்படம் ஒன்றும் கோயில் முகப்பில் அழகுமிளிர அருளாசி தருகிறது. இடுப்பில் கட்டிய துண்டுடன், அமர்ந்த நிலையில்

 ஒரு துறவிக்குரிய அனைத்து லட்சணங்களுடன் தோற்றம் தருகிற சுவாமிகளின் கோலம் கண்கொள்ளா விருந்து ! இன்றும் தன்னைத் தேடிவரும் பக்தர்களுக்கு, பொன்னாயிரம் சுவாமிகளின் அருள்வெள்ளம் வற்றாத ஊற்றாகப் பெருகி வழிவதை காணலாம். நம் வாழ்நாளில் ஒருமுறையாவது பொன்னாயிரம் சுவாமிகளின் ஜீவ சமாதிக்குச் செல்வோம். வாழ்வில் எல்லா வளங்களும் பெறுவோம்

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-11

மூட்டை சுவாமிகளின் அற்புதங்கள்:

 ''ஒரு மழைக் காலத்தில், அதிக வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின் வயர் ஒன்று அறுந்து, நடு ரோட்டில் விழுந்து கிடந்தது. இதைக் கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கி அந்தப் பக்கமே செல்லாமல் இருந்தனர். சுவாமிகள் ரொம்ப சாதாரணமாகச் சென்று அந்த வயரைத் தன் கையால் எடுத்து அப்புறப்படுத்திப் போட்டார்...

சுவாமிகள் தியானத்தில் ஒரு முறை பேச்சற்றுக் கிடந்தபோது, பதறிப் போன சேலத்து பக்தர் ஒருவர், இவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டுப் போயிருக்கிறார். அங்கு சுவாமிகளைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், 'மூச்சே இல்லை. இறந்து விட்டார்!' என்று ரிப்போர்ட் எழுதி, இவரை மார்ச்சுவரியில் வைத்திருக்கிறார்கள்.
அடுத்த சில மணி நேரங்களில் சுவாமிகள், பழநியில் ஒரு மலையில் தவத்தில் இருந்தாராம். மார்ச்சுவரியில் சுவாமிகள் இருந்த அறையைத் திறந்து பார்த்த ஆசாமிக்கு அதிர்ச்சி... அங்கே இவர் இல்லை.
பழநி கல்லூரியில் வேலை பார்த்து வந்த பேராசிரியர் ஒருவர், இன்ன தேதியில் இறக்கப் போகிறார் என்பதை முன்கூட்டியே சொல்லி இருந்தார் சுவாமிகள். எந்த ஞான திருஷ்டி மூலம் சுவாமிகள் சொன்னாரோ தெரியவில்லை...

சுவாமிகள் சொன்ன தேதியில் திடீரென உடல் நலக் குறைவாகி இறந்து விட்டார்.

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-10

முருகம்மை:

இளமை முதலே பெற்றோரைப் போலவே முருக பக்தியில் திளைத்தார் முருகம்மை. நடந்தால் முருகா, படுத்தால் முருகா, அமர்ந்தால் முருகா, சாப்பிடும் போது முருகா, தந்தையையும் முருகா, தாயையும் முருகா, தோழியரையும் முருகா, விளையாடும்போதும் முருகா, என்றபடி முருகனின் திருநாமத்தை உச்சரித்தபடியே இருப்பார். இதுகண்டு பெற்றோர் அகமகிழ்ந்தனர். வயதுக்கு வந்ததும், இப்பக்தைக்கு ஏற்ற பதி வேண்டுமே என்ற கவலை பெற்றோருக்கு ஏற்பட்டது. குணத்தில் சிறந்த தனஞ்செயன் என்ற வாலிபனுக்கு இவளை மணம் முடித்து வைத்தனர். கணவனின் மனம் கோணாமல், அவன் வைத்த மீதியை பிரசாதமாய்க் கருதி அருந்தி, கற்புநிலை பேணினாள் முருகம்மை. நாத்தனாரிடமும் அன்பு பேணினான்.


மனைவி மீது கணவனும் கொள்ளைப்பிரியம் வைத்திருந்தான். இது மாமியாருக்கும், நாத்தனாருக்கும் பொறுக்கவில்லை. இந்த தனஞ்செயன் அவள் பின்னாலேயே சுற்றுகிறான். அவள் இவனை மயக்கி வைத்திருக்கிறாள். நாளைக்கு, அவள் அவனுடைய எல்லா வருமானத்தையும் சுருட்டிக் கொண்டால், நம் வயிறு காயுமேடி, என தேவையில்லாமல் பொறாமைப்பட்டனர். அவளை பழிதீர்க்கும் நாளுக்காக எதிர்பார்த்திருந்தனர். இதற்கு சில உறவினர்களும் தூபம் போட்டனர். எப்பேர்ப்பட்ட மனிதனையும் கெட்டநேரம் விதியில் சிக்க வைத்துவிடும். இவள் மட்டும் விதிவிலக்கா என்ன ! தனஞ்செயனின் வணிகம் நஷ்டத்தில் ஆழ்ந்தது.

 மனம் வெறுத்த அவன் வேறுவேலைக்காக வெளிநாடு சென்று விட்டான். போகும்போது முருகன் என்ற வேலைக்காரனை வீட்டுப்பணியில் அமர்ந்தினான். மணாளன் திரும்பும் வரை அவன் நினைவிலேயே இருந்தாள் முருகம்மை. முருகா, முருகா என அவள் அடிக்கடி அழைப்பதைப் பயன்படுத்தி, அவளுக்கும், வேலைக்காரன் முருகனுக்கும் தொடர்பிருப்பதாக கட்டுக்கதை எழுப்பினர். ஊர்திரும்பிய தனஞ்செயனும் அதை நம்பி அவளது கைகளை வெட்டிவிட்டான்.

முருகா, உன் திருநாமம் சொன்னதற்காக எனக்கு இப்பேர்ப்பட்ட சோதனையைத் தந்தாயே, என அலறித்துடித்தாள். தன் கற்புக்கு விளைந்த களங்கத்தை துடைக்க முருகனே கதியென உண்ணாமல், உறங்காமல் கிடந்தாள். சோதனையை முடித்த முருகப்பெருமான் அவள் முன் வள்ளியுடன் வந்தார். இழந்த கைகளை திரும்பக் கொடுத்து அதிசயம் நிகழ்த்தினார். கணவன், அவளிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடினான். விதியால் வந்ததை யார் தடுக்க முடியும் என அவள் கணவனைத் தேற்றினாள். மாமியார், நாத்தனாருக்கு எந்த தண்டனையும் தரக்கூடாது என அவள் முருகனிடம் வேண்டிக் கொண்டான். அவளது நல்ல மனதைப் பாராட்டிய முருகன், நீண்டகாலம் பூமியில் வாழச் செய்து, இறுதியில் தன்னுலகில் சேர்த்துக் கொண்டார்.

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-9

போகர்

போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி “போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.

சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே “போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.

பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.

“யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.

அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர்.

போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.

போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.

அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோண்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.

அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.

தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.

போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.

தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.

போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.

போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.

இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே
இமயமலையில் தவம் செய்த முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும் அவர் தங்கம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தார். பொருள் என்பது தக்கவர்களிடம் இருக்க வேண்டும். முனிவர்களுக்கு அதிகப் பொருள் தேவையில்லை. பொருளை வெறுக்கும் அவர்கள், நிச்சயமாக உலக மக்களின் நன்மைக்கே அதைச் செலவிடுவார்கள் என்பதால் போகர் இந்த ஏற்பாட்டைச் செய்தார்.இமயமலையில் அவர் தங்கியிருந்த போது பல மாணவர்கள் அவரைச் சந்தித்தனர். அவரது திறமையை அறிந்த அந்த மாணவர்கள் போகரின் சீடர்கள் ஆயினர். அவர்களில் புலிப்பாணி, கருவூரார், சட்டைமுனி, இடைக்காடர் உள்ளிட்ட 63 பேர் இருந்தனர்.

மனிதர்களை ஒரே ஒரு ஆணவ குணம் இன்று வரை வாட்டி வதைக்கிறது. அதாவது, தனக்கு தெரிந்த நல்ல விஷயங்களை பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்த போக்கை போகர் அறவே வெறுத்தார். தனக்கு தெரிந்த நல்ல சித்து வேலைகளை தன் சீடர்கள் 63 பேருக்கும் சொல்லிக் கொடுத்து, பாரததேசத்திலுள்ள மக்கள் அனைவரும் அதனால் பயன்படும் ஏற்பாட்டைச் செய்தார். வானில் பறப்பது, நீரில் மிதப்பது, காயகல்பம் எனப்படும் உடலை நீண்ட நாள் ஆரோக்கியமாக வைத்திருக்கும் மருந்துகளைத் தயாரிப்பது உள்ளிட்ட பல விஷயங்களை சீடர்களுக்கு கற்றுத் தந்திருந்தார்.
அவர்களுக்கு தேர்வும் வைத்தார். தேர்வில் அனைவரும் வெற்றி பெற்றனர்.பின்னர், அந்த சீடர்கள் தேசத்தின் பல திசைகளுக்கும் சென்றனர். தங்கள் சித்துவேலைகளை மக்களிடம் கற்றுக் கொடுக்க முயன்றனர். அறியாமையில் தவித்த மக்களோ, அவற்றை அவர்களிடம் கற்றுக் கொள்ள முன்வரவில்லை. இதையறிந்த போகர் வருத்தப் பட்டார்.இருந்தாலும், அவர் மனம் தளரவில்லை.

இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரத்தை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம், அவர்கள் சித்து வித்தைகளை கற்று நன்மை பெற வேண்டும் என உறுதியெடுத்தார். இமயமலையில் பல மூத்த சித்தர்களையும் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்த போது, இந்தக் கதையின் துவக்கத்தில் எழுதப்பட்டுள்ள உரையாடல் சித்தர்களுக்கும், போகருக்கும் இடையே நிகழ்ந்தது. சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுத்தர மூத்த சித்தர்கள் மறுத்துவிட்டதால், உலக மக்களின் சாவுப்பிணியை தீர்க்க முடியாமல் போனது குறித்து போகர் வருந்தினார். மக்களைக் காப்பாற்ற முடியாத நான்உலகில் வாழ்ந்து பயனில்லை. நான் சாகப்போகிறேன் எனச் சொல்லி தரையில் புரண்டு அழுதார்.மற்ற சித்தர்கள் அவரைத் தேற்றினர்.போகா, நீ எடுத்த முடிவு சரியல்ல. நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக, உயிரை விட்டால், உலகில் யாருமே மிஞ்சமாட்டார்கள். நினைப்பது எதுவும் நடப்பதில்லை. மரணம் என்பது உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் வகுத்த நியதி.

இறைநியதியை மீறுவது நல்லதல்ல. மேலும், நீ அவரது கோபத்திற்கு ஆளாவாய். உன் தற் கொலை எண்ணத்தை மாற்றிக் கொள். நீ காயகல்பம் உள்ளிட்ட மருத்துவ முறைகளைக் கற்றவன். அதைக் கொண்டு, மக்களுக்கு தீர்க்காயுள் தர முயற்சிக்கலாமே தவிர, நிரந்தர வாழ்வு தரும் எண்ணத்தை விட்டு விடு. நடக்காததைப் பற்றி சிந்திக்காதவனே ஞானி, என்று அறிவுரை கூறினர்.போகர் அரை மனதுடன் அங்கிருந்து கிளம்பி மேருமலைக்குச் சென்றார். அங்கே காலங்கிசித்தரின் சமாதி இருந்தது. அதை வணங்கியபோது, அவர் முன்னால் பல சித்தர்கள் தோன்றினர்.

போகரே! நாங்கள் காலங்கி சித்தரின் சீடர்கள். ராமன், பாண்டவர்கள், திருதராஷ்டிரன், அரிச்சந்திரன், ராவணன் போன்றவர்களெல்லாம் இப்போது நாங்கள் தங்கியிருக் கும் இடத்திற்கு வந்து, தாங்கள் படித்த வித்தைகளை சோதித்து பார்த்தனர். அந்தக்காலம் முதலே இங்கு தங்கியிருக்கிறோம். உனக்கு என்ன வேண்டும்? என்றனர்.


உலகத்தில் பிறந்த எவரும் இறக்காத சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்வதே தனது நோக்கம் என்பதை போகர் அவர்களிடம் பணிவுடனும், கருணை பொங்கவும் கேட்டார். அந்த சித்தர்கள் போகரிடம், மகனே! இதோ, அங்கே பார் என ஓரிடத்தைச்சுட்டிக்காட்டினர். போகர் வியந்தார். அங்கே ஏராளமான நவரத்தினங்கள் மலை போல் குவிந்து கிடந்தன. இன்னொரு இடத்தை அவருக்கு காட்டினர். அங்கே தங்கம் குவிந்து கிடந்தது. எங்கும் பிரகாச மயம்! போகரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அந்நேரத்திலும் மக்களைப் பற்றிய சிந்தனையே அவர் உள்ளத்தில் எழுந்தது. சாதாரண மனிதனாக இருந்தால் என்ன செய்திருப்பான்? இது அத்தனையையும் வெட்டியெடுத்து, உலகின் முதல் பணக்காரன் என்ற அந்தஸ்தைப் பெற்று, பெருமையடிக்கலாம் என்ற எண்ணம் கொண்டிருப்பான்.

போகரோ, அந்த சித்தர்களிடம், சித்தர்களே! இது இங்கே வீணாகக் கிடக்கிறதே. உலக மக்கள் அனைவருக்கும் இதை அள்ளிக்கொடுத்தாலும் கூட, மிஞ்சும் போல தெரிகிறதே. எல்லோரும் வளமுடன் வாழ்வார்களே! இது இங்கிருந்தும் மக்களுக்கு கொடுக்காமல் வீணடிக்கிறீர்களே! என்றார். சித்தர்கள் வேதனையுடன் சிரித்தனர். போகா! எதற்காக இந்த மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறாய்? நம்மைப் போன்ற ஆன்மிக சிந்தனையுள்ளவர்களை அவர்கள் மதிப்பதும் இல்லை; இறையருளை நாடுவதுமில்லை. நிஜமான இன்பத்தை பற்றி நாம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரிவதில்லை. அந்த நன்றிகெட்ட ஜனங்களுக்கு இதெல்லாம் போய் சேர வேண்டும் என எண்ணுகிறாயே! அவர்கள் இந்த செல்வத்தை அனுபவிக்க தகுதியில்லாதவர்கள், என சொல்லிவிட்டு, போகரின் பதிலுக்கு காத்திராமல் மறைந்தனர்.

ஐயையோ! இந்த சித்தர்கள் திடீரென மறைந்து விட்டார்களே! இந்த செல்வத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவசரத்தில், அவர்களை நிரந்தரமாக வாழ வழி செய்யும் மந்திரம் பற்றி பேச மறந்து விட்டேனே! இந்த செல்வம் தான் மனங்களை எப்படி மாற்றி விடுகிறது! கொண்ட கடமையையே மறக்கச் செய்து விடுகிறதே, என வருந்திய போகரை நோக்கி ஏதோ ஒரு ஒளி பாய்ந்தது. அது அவரது கண்களை கூசச் செய்தது.
போகர் தன் கைகளை மடக்கி, கண்களை மறைத்தபடியே, ஒளி வந்த திசையை நோக்கினார். ஆள் அளவு உயரமுள்ள ஒரு புற்றில் இருந்து அந்த ஒளி பாய்ந்து வந்தது. அந்த புற்றை நோக்கி நடந்தார் போகர். புற்றுக்குள்ளிருந்து மூச்சு வந்தது. இது பாம்புகளின் மூச்சு போல இல்லையே! யாரோ ஒருவர் புற்றுக்குள் அமர்ந்திருக்கிறார் போல் தெரிகிறதே, என கணித்த அவர், உள்ளிருப்பவர் மகா தபஸ்வியாகத்தான் இருக்க வேண்டும். இவர் மூலமாக சஞ்சீவினி மந்திரத்தை கற்று விடலாம் என்ற ஆர்வத்தில், அவர் வெளியே வரும் வரை காத்திருப்பது என முடிவு செய்து, உள்ளிருக்கும் முனிவரை மனதில் எண்ணி தவம் செய்யத் தொடங்கி விட்டார்.இவரது தவத்தின் வெப்பம் உள்ளிருந்த முனிவரைத் தாக்கியது. அவர் புற்றில் இருந்து வெளியே வந்தார்.


அந்த முனிவர் கடந்த காலத்தில் நிகழ்ந்ததையும், எதிர்காலத்தில் நிகழப்போவதையும் அறிந்த மகாஞானி. அவர் தவமிருந்த போகரை எழுப்பி, போகரே! என ஆரம்பித்ததும், சுவாமி! என் பெயர் தங்களுக்கு எப்படி தெரியும்? என வியப்புடன் கேட்டார். எல்லாம் அறிந்த அந்த சித்தர் சிரித்துக் கொண்டார். போகரே! தவ சித்தர்கள் அனைவருக்கும் ஒருவரை அடையாளம் கண்டுபிடிப்பது கடினமல்ல, என்ற சித்தரிடம், சித்தரே! தாங்கள் எவ்வளவு காலமாக இங்கே தவம் செய்கிறீர்கள்? என்றார் போகர். இப்போது எந்த ஆண்டு நடக்கிறது? என சித்தர் கேட்கவே, சித்தரே! இது கலியுகம் துவங்கி சில ஆண்டுகள் ஆகிறது, என்றதும், ஆஹா...காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.


நான் துவாபராயுகத்தின் துவக்கத்தில் இருந்து இங்கே தவமிருக்கிறேன். ஒரு யுகமே முடிந்து விட்டதா? என்ற சித்தர், போகனே! உன் குறிக்கோளையும் நான் அறிவேன். முதலில், அதோ தெரிகிறதே! அந்த மரத்திலுள்ள பழத்தை சாப்பிட்டு பசியாறு. பிறகு பேசலாம், என்று சித்தர் சொன்னதும், போகர் அந்த மரத்தை நோக்கி நடந்தார். அதிலுள்ள கனியைப் பறித்து சாப்பிட்டதும், எங்கோ மிதப்பது போல் இருந்தது. தன்னை மறந்த நிலையில் ஓரிடத்தில் அமர்ந்து விட்டார். புற்றில் இருந்து வந்த சித்தர், அவரிடம் ஒரு மூலிகை பொம்மையைக் கொடுத்து, போகா! இந்த பதுமை உன் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும், என சொல்லிவிட்டு, மீண்டும் புற்றுக்குள் போய் விட்டார்.

போகர் அந்த பதுமையிடம், இறப்புக்குப் பின் உயிர் வாழும் வித்தை பற்றி கேட்டார். அந்தப் பொம்மையோ, பிறந்தது முதல் இறக்கும் வரை உள்ள விஷயங் களை பேசியதே அன்றி, அந்த வித்தையும், அதற்குரிய மூலிகைகளும் தனக்குத் தெரிந்தாலும், உலக நியதிப்படி அதைச் சொல்லித் தர முடியாது எனச் சொல்லி மறைந்து விட்டது.எவ்வளவு முயன்றாலும், இந்த ஒரு விஷயம் மட்டும் நடக்க மறுக்கிறதே என கலங்கிய போகசித்தர், தன் முயற்சியை விட்டாரில்லை. முயற்சி உடையவனுக்கு அவன் முயலுவது கிடைக்காமல் போனதில்லை. சித்தருக்கும் அந்த நல்ல நாள் வந்தது.அவர் ஒருமுறை, மேருமலை உச்சியில் ஏறினார். அந்த மலையில் சித்தர்கள் பலர் வசித்து, பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தியதன் விளைவாக தங்கப் பாறைகள் நிறைந்ததாக இருந்தது. ஓரிடத்தில், தங்கத்தின் ஒளி கண்ணைப் பறிக்கவே, அதன் பிரகாசம் தாங்க முடியாமல், போகர் தடுமாறி கீழே விழுந்தார். அவரை சில சித்தர்கள் தாங்கிப் பிடித்தனர்.


போகனே! நாங்கள் நான்கு யுகங்களாக இங்கே வசிப்பவர்கள். உலகை வாழ வைக்க வேண்டுமென்ற உன் விடாமுயற்சியைப் பாராட்டுகிறோம். வா எங்களுடன்!இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மூலிகை இந்த மலையிலுள்ள ஒரு குகைக்குள் இருக்கிறது. அதை உனக்கு காட்டுகிறோம். சஞ்சீவினி மந்திரத்தையும் போதிக்கிறோம், என்றதும், போகரின் கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன. குகைக்குள் சென்றதும், பச்சை பசேலென பல மூலிகைச் செடிகள் காணப்பட்டன. அவற்றில் யாரும் கை வைக்காததாலும், தூசு பட வழியே இல்லாததாலும், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் தெய்வத்தன்மை வாய்ந்ததாலும் பளபளவென மின்னின.

போகரை அழைத்துச் சென்ற மற்ற சித்தர்கள் அந்த மூலிகைகளின் தன்மை, அதைப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றை பற்றி விளக்கமாக எடுத்துச்சொன்னார்கள். பிறந்த பலனை அடைந்த மகிழ்ச்சியில் போகரின் நெஞ்சு ஆனந்தத்தால் விம்மியது. உணர்ச்சிக்கடலாக மாறிப்போன அவர், தனக்கு தகவல் தந்த சித்தர்களின் பாதங்களில் பணிந்து வணங்கி, இனி, இவற்றைக் கொண்டு உலகில் இறப்பில்லாமல் செய்வேன் எனச் சொல்லி அவர்களிடம் விடை பெற்றார். மனிதனுக்கு கிடைக்காத ஒன்று கிடைத்து விட்டால், அவன் ஆனந்தக் கூத்தாடுகிறான். ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான். போகரைப் போன்ற சித்தர்கள் கூட, இதற்கு விதிவிலக்கல்ல போலும்! மிதமிஞ்சிய கவலையும் ஆபத்து, மிதமிஞ்சிய மகிழ்ச்சியும் ஆபத்தான விஷயம் தான்! எதற்கும் ஒரு அளவு வேண்டும்.

போகர், தனக்கு கிடைக்காத ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் குகையை விட்டு வெளியே வந்து துள்ளித் துள்ளி குதித்தார். ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம்! அவர் ஆடிய ஆட்டத்தில் பூமியே அதிர்ந்தது. அப்போது, அப்பகுதியில் தவமிருந்த கண்ணுக்குத் தெரியாத சித்தர்கள் பலர் அவர் முன்பு தோன்றினர். போகா! என்ன இது! மகிழ்ச்சியின் போது தான் மனிதன் அடக்கத்துடன் இருக்க வேண்டும். உன் நடனத்தால், கலையாத எங்கள் தவத்தைக் கலைத்து விட்டாய். பல யுகங்களாக நாங்கள் செய்த தவம் வீணாகிப் போய் விட்டது. இதற்கு கடும் தண்டனையை உனக்கு அளிக்கப் போகிறோம். ஒருவர் செய்த வினையின் பலனை அனுபவித்தே தீர வேண்டும்.

எங்கள் நீண்ட கால தவம் எப்படி பயனற்றுப் போனதோ, அதே போல நீ இங்கே பார்த்த சஞ்சீவினி மூலிகைகளை பயன்படுத்தி உயிர்களைக் காக்க நினைத்த உங்கள் நீண்ட நாள் முயற்சி பயனற்றுப் போவதாக! இந்த மூலிகைகளை நீ பறித்துச் சென்றாலும், நீ அதைப் பயன்படுத்தும் போது அதற்குரிய மந்திரம் உனக்கு மறந்து போகும் என சாபமிட்டனர். போகர் அலறித்துடித்தார்.
சித்தர் பெருமக்களே! செய்தற்கரிய தவறு செய்து உங்களின் சாபத்தை அடைந்தேனே! வேண்டாம்.... வேண்டாம்... இந்த உலகைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதல்லவா! நமக்குள் நடந்த இந்த விவாகரத்துக்காக உலகத்தை பழி தீர்த்து விடாதீர்கள். மன்னியுங்கள், மன்னியுங்கள், என கண்களை மூடிக்கொண்டு கதறினார்.

அவரது கதறலைக் கேட்க அங்கே சித்தர்கள் இருந்தால் தானே! அவர்கள் காற்றில் கரைந்தது போல மறைந்து விட்டனர். ஐயோ! என் வாழ்க்கை லட்சியம் அழிந்ததே! இனி இந்த மக்கள் மரணத்தின் பிடியில் இருந்து எப்படி மீள முடியும்? இறைவா! என்னை சோதித்து விட்டாயே, என புலம்பியவர், வேறு வழியின்றி அப்படியே மயங்கி சாய்ந்து விட்டார். எதுவும் காரணத்துடனேயே நடக்கிறது. வந்தவரெல்லாம் தங்கி விட்டால், இந்த உலகம் தாங்காது. உலகத்திற்கு வருபவர்களெல்லாம் பிழைத்திருக்க வேண்டுமானால், அவர்களை வழி நடத்துவது யார்?

இயற்கைக்கு இறைவன் விதித்திருக்கும் கட்டளைகளில் மிக முக்கியமானது மரணம். அதை இயற்கை எப்படி மீறும்? அதனால் தான், இறைவன் இப்படி ஒரு லீலையை சித்தர்கள் மூலமாக நிகழ்த்தியிருக்கிறான். அப்படியானால், அவன் ஏன் சஞ்சீவினி போன்ற மூலிகைகளைப் படைத்திருக்க வேண்டும் என்றால், அது தான் தெய்வ ரகசியம். தெய்வத்தின் சூட்சுமங்கள் முழுவதுமாக நமக்கு புரிந்து விட்டால், அதெப்படி தெய்வமாக இருக்க முடியும்? மயங்கிக் கிடந்த போகரை நோக்கி ஒரு பறவை வந்தது. அந்தப் பறவையை கண்டப் பேரண்டம் என்பார்கள். அது, குகைக்குள் சென்று ஒரு மூலிகையைப் பறித்து வந்து போகரின் மூக்கருகே நீட்டியது. போகர் மயக்கம் தீர்ந்து எழுந்தார்.

போகரே! நடந்ததை நினைத்து வருத்தப்படக்கூடாது. இங்கே லட்சக்கணக்கான சித்தர்கள் தங்களை மறந்த நிலையில் தவமிருந்து வருகின்றனர். உன் நடமாட்டம் அவர்களை விழிக்கச் செய்து விடும். இப்போது கற்ற வித்தைகளே போதும்! இதைக் கொண்டே நீ உலகிலுள்ளோரின் ஆயுளை விருத்தி செய்து, தீர்க்காயுளுடன் வாழ வழி செய்யலாம். இங்கிருக்கும் மற்ற சித்தர்களையும் விழிக்கச் செய்து, இருப்பதையும் இழந்து விடாதே. இருப்பதைக் கொண்டு திருப்தியடைபவனே புத்திமான், என அறிவுரை கூறியது. போகரும் அங்கிருந்து கிளம்பி ஆகாயமார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். தியானத்தில் ஆழ்ந்த அவருக்கு அன்னை உமையவள் காட்சி தந்தாள்.போகா! வருந்தாதே! உலகை அழிப்பதும், காப்பதும் எனது பணி. நீ இங்கிருந்து பழநிமலைக்குச் செல். அங்கே என் மகன் முருகனை வழிபடு, என்று கூறி மறைந்தாள். அன்னையின் கட்டளையை ஏற்று போகர் பழநிக்கு வந்தார். கடும் தவமிருந்தார். அவர் முன்னால் முருகப்பெருமான் கோவணத்துடன், தண்டாயுதபாணியாகக் காட்சி தந்தார். போகரே! நீர் நவபாஷாணத்தால் எனக்கு சிலை வடிக்க வேண்டும்.


நான் சொல்லும் வழி முறைகளின் படி வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், எனக்கூறி அதுபற்றி தெளிவாகச் சொன்னார். போகரும் மனம் மகிழ்ந்து நவபாஷாணத்தால் சிலை வடித்தார். முருகப்பெருமான் அருளியபடியே அதை பிரதிஷ்டை செய்து அபிஷேகமும் பூஜையும் செய்து வந்தார். அந்த அபிஷேகப் பிரசாதத்தைப் பெற்றவர்கள், நோய்கள் நீங்கி, சுகவாழ்வு பெற்று, தீர்க் காயுளுடன் வாழ்ந்தனர். இதனால் தான் இன்றைக்கும் பழநிமலைக்கு மக்கள் ஏராளமாக வருகின்றனர். தமிழகத்திலேயே அதிக வருமானம் உள்ள கோயிலாகவும் இது விளங்குகிறது. போகர், நாமக்கல் அருகிலுள்ள திருச்செங்கோடு சென்றார். அங்கிருக்கும் அர்த்தநாரீஸ்வரரையும் நவபாஷாணத்தில் வடித்தாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

அவர் சீனாவுக்கும் அடிக்கடி வானமார்க்கமாக சென்றார். ஒரு கட்டத்தில் சீன அழகிகள் சிலருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு, தனது சக்தியை இழந்தார். புலிப்பாணி அங்கு சென்று, அவரை மீட்டு வந்து மீண்டும் சக்தி பெற ஏற்பாடு செய்தார். கொங்கணர், இடைக்காடர், கமலமுனி, மச்சமுனிவர், நந்தீசர் ஆகிய சித்தர்களும் இவரது சீடர்களாக இருந்தவர்களே! சீனாவில் இருந்து திரும்பி, பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-8

சிவயோகியர்                

திருமூலர் சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமான் மற்றும் நந்தீசரிடம் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் தெரிந்தவர். திருமூலருக்கு அகத்தியர் மீது அதிக அன்பு மற்றும் மரியாதை உண்டு, எனவே அகத்தியரை சந்தித்து சிலகாலம் அவருடன் தங்குவதற்கு விரும்பினார், தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை நோக்கிச் சென்றார்.போகும் வழியில் பசுபதி, திக்கேதாரம்,  காசி, நேபாளம் , விந்தமலை, த்ருவாலங்காடு, திருப்பருப்பதம், திருக்காளத்தி, காஞ்சி ஆகிய திரு-தலங்களை தரிசித்து ஆங்கே இருந்த சிவயோகிகளை கண்டு அளவளாவி மகிழ்ந்தார்,தில்லையில் இறைவனின் அற்புத திருக்கூத்தாடியருளும் திருநடனத்தை கண்டு மகிழ்ந்தார், திருவாவடுதுறையில் இறைவனை வழிபட்டு சென்றபோது  காவிரி கரையில் பசு கூட்டங்கள் கதறி அழுவதனை கண்டார்.
மூலன் என்பவர்  தினமும் அங்கு வந்து பசுக்களை மேய்ப்பார். அவர் தன் விதி முடிந்த காரணத்தினால் உயிர் நீங்கி இறந்து கிடந்தார். மூலன் இறந்ததை கண்ட பசுக்கள் அவரது உடம்பினை சுற்றி சுற்றி வந்து வருந்தி கதறி கண்ணீர் விட்டன.பசுக்களின் துன்பம் கண்ட திருமூலர் அவற்றின் துயரை துடைக்க எண்ணினார்,   எனவே  தன்னுடைய உடம்பை மறைவான இடத்தில் வைத்துவிட்டு பரகாயப் பிரவேசம் (கூடு விட்டு கூடுபாய்தல்) என்னும் பவன முறையினால் தனது உயிரை மூலன் உடம்பினுள் புகுமாறு செலுத்தி திருமூலராய் எழுந்தார்.

மூலன் உயிருடன் எழுந்ததை கண்ட பசுக்கள் மகிழ்ந்தன  மூலனின் உடலினை மோந்து, நக்கி, களிப்போடு துள்ளி குதித்தன. மனம் மகிழ்ந்த திருமூலர் பசுக்களை மிகவும் நன்றாக மேய்த்தார். வயிரார மேய்ந்த அந்த பசுக்கள் தங்களது ஊரை நோக்கி நடந்தன.

அவற்றை பின் தொடர்ந்து சென்ற திருமூலர் பசுக்கள் தங்களது வீடுகளுக்கு சென்றதை கண்டு மகிழ்ந்தார். அப்பொழுது வீட்டில் இருந்து வெளியே வந்த மூலனினுடைய மனைவி, மூலன் வடிவிலிருந்த திருமூலரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்ல என்றும், மூலன் இறந்துவிட்டான் எனவும் கூறினார். இதை நம்பாத அவள் அவ்வூர் பெரியவர்களிடம் முறையிட்டால், திருமூலர் தான் ஏற்றிருந்த மூலனின் உடலில் இருந்து விலகி தான் ஒரு சிவயோகியார் என்பதனை நிருபித்தார். பிறகு மறுபடியும் மூலனின் உடலில் புகுந்தார். இதனை கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியை தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

அவர்களிடம் இருந்து விடைபெட்ற்ற திருமூலர் தனது உடலை தேடி சென்றார், அனால் எங்கு தேடியும் அவர் உடல் கிடைக்கவில்லை.

மூலனின் உடம்பிலேயே தங்கி திருவாடுதுறை திருக்கோவிலை அடைந்தார்.

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-7


பூண்டி மகான்

பூண்டி மகான் எந்த ஊரைச் சார்ந்தவர்? அவர் எவ்விதம் துறவியானார்? இதுபோன்ற வினாக்களுக்கு இன்றுவரை விடையில்லை. அவர் எங்கிருந்தோ ஒருநாள் பூண்டிக்கு வந்தார். அது பூண்டி செய்த பாக்கியம். பின்னர் அவர் அங்கேயே தங்கினிட்டார். அதனாலேயே அவர் பூண்டி மகான் என்று அடியவர்களால் அன்போடு அழைக்கப்படலானார். அவருக்கு மக்கள் இன்னொரு திருநாமத்தையும் சூட்டினார்கள்- ஆற்று சுவாமிகள் என்று! பூண்டி கலசப்பாக்கம் ஆற்றங்கரையில் எந்நேரமும் யோகத்தில் ஆழ்ந்திருந்ததால் அவரை ஆற்று சுவாமிகள் என்றழைக்கும் வழக்கம் தோன்றியது. ஆனால் யோசித்துப் பார்த்தால் இந்தப் பெயருக்கு நாம் இன்னொரு பொருளையும் காணமுடியும். தன் ஆன்மிகத் தவ ஆற்றலால் மக்களை நன்னெறிப்படுத்தி ஆற்றுப்படுத்தியவர் அவர். ஆற்றுப்படுத்துபவரை ஆற்று சுவாமிகள் என்றழைப்பது பொருத்தம் தானே? அவரை முதலில் பார்த்தவர்கள் ஏதோ பைஅவரைத் தொடக்கத்தில் பைத்தியம் என்று நினைத்தவர்கள் மெல்ல மெல்ல அவர் பைத்தியமில்லை. மாபெரும் மகான் என்று உணரத் தலைப்பட்டார்கள். தங்கள் வாழ்வில் நேரும் துயரங்களுக்கெல்லாம் அவரையே சரண் புகுந்தார்கள்.

 ஆற்றங்கரையில் தவம் செய்த அவரது அருள் சக்தி மக்களை நோக்கி ஆற்று வெள்ளமாகப் பாய்ந்தது. முன்வினை காரணமாக மனிதர்களுக்கு நேர்ந்த எல்லா உலகியல் துன்பங்களையும் தம் அருளாற்றலால் நீக்கி மக்களுக்கு நல்வாழ்வை அருளினார் அவர். பின்னாளில் அவரது மகிமை உணர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக அவரைப் போய் வணங்குவதும் வழக்கமாயிற்று. ஆனால் இயன்றவரை எப்போதும் கூட்டத்திலிருந்து தனிப்பட்டே அவர் வாழ்ந்தார். அந்த சித்த புருஷரை பூண்டியில் முதலில் பார்த்தவர்கள் சில விவசாயிகள்தான்த்தியகாரர் போலிருக்கிறது என்றுதான் நினைத்தார்கள்.

கையில் ஏரும் கலப்பையுமாக வந்து கொண்டிருந்த அவர்கள், நாகதாளி முட்புதரில் உள்ளே சிக்கியவாறு அமர்ந்து மோனத்தவத்தில் ஆழ்ந்திருந்த அவரை தரிசித்தார்கள். யார் இவர்? முட்புதரின் அடர்த்திக்குள் இவர் எப்படிப் போய் உட்கார்ந்தார்? இவர் உட்கார்ந்த பின்னர் முட்புதர் வளர்ந்து இவரை முடியதா? அல்லது முட்புதருக்குள் ஒரு செடிபோல இந்த விந்தையான மனிதச் செடி தானாகவே முளைத்ததா? அவர்கள் மிகுந்த கவனத்தோடு முட்புதரை வெட்டி சுவாமியை எடுத்து வெளியே வைத்தார்கள். மூச்சு வந்துகொண்டிருந்ததால் அது மனித உருவம்தான் என்று புரிந்தது. இல்லாவிட்டால் ஒரு சிலை என்றுதான் கருதியிருப்பார்கள். அசைவே இல்லை முகத்தைப் பார்த்தால் குழந்தைபோல் இருந்தது. அவரைப் பார்க்கப் பார்க்க அவர்மேல் அளவற்ற பிரியம் எழுந்தது. கோவிலில் இருக்கும் சிலைக்கும் இந்த மனித உருவத்திற்கும் அதிக வித்தியாசத்தை அவர்களால் காண இயவில்லை. அவர்கள் பக்தியோடு அவரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். திடீரென எழுந்தார் பூண்டி மகான் சரசரவென்று கம்பீரமாக நடக்கத் தொடங்கினார்! அது நடையல்ல; ஓட்டம் விவசாயிகள் அவரைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள்!


கொஞ்சம் கஞ்சி சாப்பிடுங்கள், கொஞ்சம் கூழ் சாப்பிடுங்கள்! என்று வேண்டினார்கள். அவர் அந்த எளிய உழவர்களின் அன்பான உபசாரம் எதையும் மறுக்கவில்லை கொடுத்ததை வாங்கிக் குடித்தார். எதுவும் வேண்டுமென்றும் அவர் கேட்கவில்லை. ஆற்று மணலின் இன்னொரு இடத்தில் அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்தார். அவ்வளவு தான் மறுபடி அசைவே இல்லாத சிலையாகிவிட்டார்! பசி என்றோ தாகம் என்றோ அவர் என்றும் எதுவும் சொன்னதில்லை எங்கோ சூனியத்தை வெறித்த ஒரு நிலைகுத்திய பார்வை. சுற்றுப்புறச் சூழலை முற்றிலும் மறந்த ஒரு மோன நிலை. ஆற்றங்கரையை விட்டால், காக்கங்கரை விநாயகர் கோவில் வாயில் படியில்தான் அவர் பெரும்பாலும் அமர்ந்திருப்பார். சந்தைக்கு வரும் மக்கள் கூட்டத்தைப் பராக்குப் பார்த்துக் கொண்டிருப்பார் எங்கோ வெறித்த பார்வை. சிலர் அவருக்கு டீ வாங்கிக் கொடுப்பார்கள். அதைச் சாப்பிடுவார்.


யாரும் எதுவும் கொடுக்கவில்லையா? வேண்டும் என்று எதையும் கேட்க மாட்டார். நேரே ஆற்றங்கரைக்குப் போவார். கைப்பிடியளவு மணலை எடுப்பார். அதைப் சாப்பிட்டு ஆற்றுத் தண்ணீரை அள்ளிக் குடிப்பார்! அவர் சாப்பிட்ட மணல் அவரளவில் எந்தக் கெடுதலும் செய்யாமல் ஜீரணம் ஆயிற்று என்பதுதான் விசேஷம்! மண்ணுக்குள் உடல் போகப்போகிறது. இப்போது உடலுக்குள் மண் போகட்டும் என்று நினைத்தாரோ என்னவோ! அவர் மணலைச் சாப்பிடும் வைபவத்தை ஒருநாள் ஓர் அன்பர் பார்த்து விட்டார். பார்த்தவர் திகைப்பில் ஆழ்ந்தார். ஆனால் ஆற்று சுவாமிகளோ, மேலும் ஒரு கைப்பிடி மணலை எடுத்து, நீயும் சாப்பிடுகிறாயா என்று சைகையால் வினவியபோது அன்பருக்கு அடிவயிறு கலங்கியது! ஆற்று சுவாமிகள் ஏதோ பலகாரம் சாப்பிடுவதுபோல் மணலை சாப்பிடுகிறார் என்ற செய்தி ஊர் முழுவதும் பரவியது. மக்கள் திகைப்படைந்தார்கள். ஜாதி மத வேறுபாடுகளை ஒருநாளும் அவர் பார்த்ததில்லை. நிறைய முஸ்லிம்கள் வெகு பிரியமாக அவருக்குக் கூழ் கொடுப்பார்கள். அவர் ஆனந்தமாக அந்தக் கூழை அருந்தி மகிழ்வார்.


கலசப்பாக்கம் பாலகிருஷ்ண முதலியாருக்கு அவர்மேல் பிரியம் அதிகம். அவர் ஒரு சோடாக்கடை வைத்திருந்தார். அந்த சோடாக் கடைப்பக்கமாக வந்து சுவாமிகள் அவ்வப்போது அமர்வதுண்டு. சுவாமிகளுக்கு சோடாவோ கலரோ கொடுப்பார் அவர். சுவாமிகள் அதை வாங்கிக் குடித்துவிட்டுப் போய்விடுவார். சில நேரங்களில் அவர் செய்யும் சித்துகள் வியப்பைத் தரும், நல்ல உச்சி வெய்யிலில், நடந்தால் கால் பொரியும் ஆற்றங்கரை மணலில் ஏதோ பஞ்சு மெத்தையில் படுத்திருப்பது போல் சுகமாகப் படுத்துக் கொண்டிருப்பார். அப்படியே நிஷ்டையிலும் ஆழ்ந்து விடுவார். அந்தப் பக்கமாக வரும் பள்ளி மாணவர்கள் அவர் உடலை அசைத்துப் பார்ப்பார்கள்.

தேக்குக் கட்டைப்போல் உறுதியான உடல் அவருக்கு. அதில் எந்த அசைவும் இருக்காது. எறும்பும் பூச்சிகள் சிலவுர் அவர் உடலில் ஊர்ந்துகொண்டிருக்கும். மாணவர்கள் அந்த எறும்பையும் பூச்சிகளையும் ஊதி அகற்றி விட்டு, அவரது பாதத்தைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுச் செல்வார்கள். சுவாமிகளுக்கு எறும்பு ஊர்ந்ததும் தெரியாது; சிறுவர்கள் தன் பாதங்களைத் தொட்டு கும்பிட்டதும் தெரியாது.


அப்படியே படுத்திருப்பவர் இரவெல்லாம் அங்கேயேதான் கிடப்பார். வெய்யில் மாறி மழை கொட்டு கொட்டென்று கொட்டும். அந்த மழைநீரில் அவர் உடல் கட்டைப்போல் அப்படியேதான் கிடக்கும். இப்படி அந்த வைபவம் பல நாட்கள் நீடிக்கும். பின்னர் பழையபடி எழுந்து கடைகளுக்கு வரத் தொடங்குவார். பூண்டி மக்களெல்லாம் அவரை தெய்வமென்றே கருதினார்கள்.

சிறுவர்களுக்குத் தேர்வு வந்துவிட்டால் போதும். பூண்டி சுவாமிகளை மாணவர்கள் ஏராளமான பேர் சூழ்ந்து கொள்வார்கள் சாமி! நான் பரீட்டையில் தேறுவேனா? என்று ஆர்வத்தோடு கேட்பார்கள். சிலர் கேள்விக்குத் தலையாட்டுவார் சுவாமிகள் வேறு சிலர் கேள்விக்குப் பேசாமல் இருந்து விடுவார்.  சில சிறுவர்கள் வரும்போது அவர்களை அவர் அழைக்கும் விதமே அலாதி ஒரு சிறுவனை அடேய் ஜட்ஜ்! இங்கே வாடா! என்று அழைப்பார். அந்தச் சிறுவன் பிற்காலத்தில் ஜட்ஜ் ஆனான் என்பதுதான் விசேஷம் இப்படி மற்றவர்களின் எதிர்காலத்தை முன்னரே அவர் கணித்துச் சொன்ன சம்பவங்கள் அவர் வாழ்வில் அதிகம்.


வடஆற்காடு மாவட்டத்தில் போளுர் தாலுகாவில் உள்ளது பூண்டி என்னும் சிறிய கிராமம். அங்கு வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தியவர் பூண்டிமகான் ஆவார். இவர் எப்போதும் ஆனந்த நிலையிலேயே காணப்படுவார். ஒருநாள் இம்மகான் அவ்வூரில் உள்ள செய்யாற்றின் கரையோரம் சமாதியில் ஆழ்ந்திருந்தபோது ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.

இதனைக்கண்ட கிராமமக்கள் ஒரு மூங்கில் கூடை மூலம் மகானைக் காப்பாற்ற முயன்றார்கள். வெள்ளம் மேலம் தீவிரமாகவே மூங்கில்கூடையுடன் மகானை வெள்ளம் இழுத்துச் செல்ல, மக்கள் மட்டும் தப்பினர். சிலநாள் கழித்து வெள்ளநீர் வடிந்தபோது ஓரிடத்தில் அந்த மூங்கில்கூடை தெரியவே கிராமமக்கள் சென்று பார்த்தபோது மகான் எப்போதும் போல சமாதிநிலையில் இருந்தார். அவருக்கு எந்த பாதிப்பும் இல்
லை. உடலினை பல துண்டுகளாக பிரித்து மீண்டும் ஒன்றாக்கிக் கொள்ளக்கூடிய நவகண்டயோகம் எனும் அற்புத சித்தியும் படைத்தவர் பூண்டி மகான்.

 ஒருமுறை மகானிடம் மதிப்பும், மரியாதையும் கொண்ட ஒரு பக்தர் தனது மகளின் திருமணத்திற்கு பணம் இல்லையெனக்கூறி தன்மகளின் திருமணம் நல்லபடி நடக்க ஆசி வழங்கும்படி கேட்க, மகானோ 'கவலைப்படாதே, எல்லாம் நல்லபடி நடக்கும். உனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள விவசாயிடம் பழைய தேய்ந்த கொலுவு ஒன்று வாங்கிவா' என்றார். கொலுவு என்பது ஏர் கலப்பையின் கீழே அமைக்கப்படும் இரும்பாலான நிலத்தைத் தோண்ட உதவும் கருவியாகும்.

இது தேயத்தேய சிறிதுசிறிதாக கீழே இறக்கி அமைப்பார்கள். அதிகம் தேய்மானமாகிவிட்டால் அதனை எடுத்துவிட்டு, வேறு புதிதாக அமைத்திடுவார்கள். பழையது எதற்கும் உதவாது. பழைய இரும்பென எடைக்குப்போட மட்டுமே பயன்படும். அத்தகைய கொலுவு ஒன்றை வாங்கிவரும்படி பூண்டிமகான் சொன்னார். அந்த பக்தரும் அதேபோல அவ்விவசாயியிடம் கொலுவு ஒன்றை கேட்டு வாங்கிவந்து மகானிடம் தந்தார். அந்த இரும்பு கொலுவை வாங்கிய மகான் அதனை சிலதடவைகள் தனது கையினால் தடவிட அந்த இரும்புகொலுவு தங்கமாக மாறியது. 'இதனை விற்று உனது மகளின் திருமணத்தை நல்லபடி நடத்து போ' எனக் கூறி மகான் அனுப்பிவைத்தார்.

 பூண்டி மகான் அவர்கள் செய்த எத்தனையோ அற்புதங்களில் இதுவும் ஒன்றாகும். கையால் தொட்டு, தனது யோகசக்தியின் மூலம் இரும்பைத் தங்கமாக மாற்றுவது வள்ளலார் குறிப்பிட்டதுபோல யோகசித்தி வகையைச் சார்ந்ததாகும். நினைத்த நேரத்தில் ஒரு சாதாரண உலோகத்தை உயர்ந்த (தங்க) உலோகமாக மாற்றும் அற்புத சித்தியினை பூண்டிமகான் பெற்றிருந்தார்

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-6


யோகி ராம்சுரத்குமார்

புன்னை மரத்துக்கருகே ஒரு கிணறு. அதில் இரவில் மேய்ந்து கொண்டிருந்த குதிரை விழுந்துவிட்டது. மேலே ஏற பலத்த முயற்சிகள் செய்தது. அருகே போய் அதை கயிறு கட்டித் தூக்கிவிட எவராலும் இயலவில்லை. யோகி ராம்சுரத்குமார் சிறிது நேரம் காத்திருந்தார். பிறகு எல்லோரையும் விலகிப் போகச் சொன்னார். குதிரையை உற்றுப் பார்த்தார். குதிரை அவரைப் பார்த்தது. குதிரையின் உள்ளுக்குள் தன் கவனத்தை செலுத்தினார். குதிரையின் உடம்புக்குள் சக்தி ஏறியது. தாண்டுவதற்குண்டான உத்வேகத்தை தன் மனதின் மூலமாக குதிரையின் மனதுக்குள் செலுத்தினார். குதிரை தயாராக இருந்தது. ‘ஜெய் ராம்’ என்று ஒரு முறை உரக்கக் கத்தினார். குதிரை ஒரே துள்ளலில் கரையேறி ஓடிப் போயிற்று. அருகிலிருந்தவர்கள் வியந்தார்கள்.

கணவன் – மனைவிக்குள் சண்டை! மனைவியைக் கண்டபடி கணவன் ஏச, மனைவி ‘உங்களோடு வாழ்வதற்குப் பதிலாக செத்துப் போகலாம்’ என்றார்! ‘ரொம்ப நல்லது. செத்துப் போ. நானே உனக்கு விஷம் கொடுக்கிறேன்’ என்று, ஒரு குப்பி நிறைய விஷம் கொடுத்தான் கணவன். அந்த விஷத்தை ‘யோகி ராம்சுரத்குமார்’, ‘யோகி ராம்சுரத்குமார்’, ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று மூன்று முறை சொல்லி, மட மடவென்று அவள் குடித்தாள்.
என்னாயிற்று..? எதுவும் ஆகவில்லை. விஷம் வேலை செய்யவில்லை. ஒரு வாரம் கழித்து யோகியிடம் வந்தாள் அந்தப் பெண்மணி…
”பகவான்… உங்கள் பெயரைச் சொல்லி விஷம் குடித்தேன். வேலை செய்யவில்லை. மாறாக, என் கணவர் தன் மீது கொலைப் பழி விழுந்து விடுமோ என்று பயந்தார். நான் உங்கள் பெயரைச் சொல்லி விஷம் குடித்ததும், விஷம் வேலை செய்யாததும் கண்டு திகைத்து மன்னிப்பு கேட்டார். அவரும் வந்திருக்கிறார்- உங்களுடைய பக்தராக!” என்றாள். அந்தக் குடும்பம் அதற்குப் பிறகு வெகு சௌக்கியமாக வாழ்ந்தது

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-5

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்

பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம். ஒரு ஆங்கிலேய அதிகாரி தனது குதிரையில் காட்டு வழியில் சென்று கொண்டிருந்தார். அது மனித நடமாட்டம் இல்லாத காடு. வழியில் ஒரு பாறை மீது மனிதர் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார் அவர். அந்த மனிதர் நிர்வாணியாக அமர்ந்திருந்து எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். குதிரை செல்வதையோ, அதன் மீது வேகமாக ஒரு மனிதன் செல்வதையோ அவர் கவனிக்கவில்லை. அதைக் கண்ட அந்த அதிகாரி ’யாரோ பாவம் மன நோயாளி போலிருக்கிறது. இந்தியாவில் இது போன்று நிறைய பேர் இருக்கிறார்கள்’ என்று நினைத்து, வேகமாக குதிரையைச் செலுத்தினார்.

சில மைல் தூரம் போயிருப்பார். அதே மனிதர் எதிர்ப்புறம் ஒரு பாறை மீது அமர்ந்து கொண்டிருப்பதைக் கண்டார். அதிகாரிக்கு ஒரே அதிர்ச்சி. ஆச்சரியம். ’எப்படி இந்த மனிதர் தனக்கு முன்னால் இங்கே வந்தார்’ என்று. ஒரு வேளை இந்த மனிதன் அந்த மனிதரின் சகோதரராக இருக்கலாம் அல்லது பித்தர்கள் என்பதால் ஒரே தோற்றம் கொண்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

சில மணி நேரம் சென்றது. அந்த அதிகாரிக்குத் திடீரென தண்ணீர் தாகம் எடுத்தது. அருகில் எங்காவது குடிநீர்  கிடைக்குமா என்று தேடிப் பார்த்தார். ஒரே செடியும், கொடியும், மரமுமாக இருந்ததே அன்றி கிணறோ, குளமோ, ஆறோ எதுவும் தட்டுப்படவில்லை. தாகத்துடனே பயணம் செய்தவர், சற்றுத் தொலைவில் ஒரு மனிதன் நடந்து சென்று கொண்டிருந்ததைப் பார்த்தார்.  அருகில் எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று அந்த மனிதனிடம் கேட்கலாம் என நினைத்து வேகமாக குதிரையைச் செலுத்தினார். அந்த மனிதர் அருகே சென்று குதிரையை நிறுத்தி விட்டு, நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தவர் அதிர்ந்து போனார். காரணம், வழியில் அவர் இரண்டு முறை சந்தித்த அதே மனிதர் தான் இவர்.

தான் இவ்வளவு விரைவாக குதிரையில் வந்து கொண்டிக்கும் போது, தன்னைக் கடந்து செல்லாமல் எப்படி அந்த மனிதர் தனக்கு முன்னால் செல்ல முடிந்தது என்று யோசித்தார். இவர் ஒரு மிகப் பெரிய மகான். அவர்களால் தான் இவையெல்லாம் சாத்தியம் என நினைத்தவர், அந்த மனிதர் முன் போய் நின்று தங்கள் வழக்கப்படி ஒரு ’சல்யூட்’ வைத்தார்.

அதுவரை பிரம்மத்தில் லயித்திருந்த அந்த மனிதர் அக உணர்வு பெற்றார். ஆங்கிலேயரை கருணையுடன் நோக்கினார். அந்த விழியின் தீக்ஷண்யத்தில் அந்த ஆங்கிலேய அதிகாரி திளைத்து மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே, அந்த மனிதர் மெல்ல நடந்து முன்னே சென்று திடீரென காணாமல் போனார்.

அதிகாரி திகைத்தார். அங்கும் இங்கும் ஓடினார். தேடினார். கத்தி, கூப்பிட்டுப் பார்த்தார். அந்த மனிதர் கண்ணில் படவே இல்லை. அது மட்டுமில்லை`. அவருக்கு இருந்த தாகமும் தீர்ந்ததுடன், உடல் களைப்பும் நீங்கி முழுமையான புத்துணர்ச்சியோடு இருந்தது.

தலைமையகத்துக்குச் சென்று இந்த விஷயங்களை சக ஆங்கிலேய நண்பர்களிடம் தெரிவித்தவர், தனது நாட்குறிப்பிலும் இதைப் பதிவு செய்தார். அது பின்னர் அரசாங்க கெஜட்டிலும் அக்காலத்தில் வெளியிடப் பட்டது.

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-4

ஸ்ரீஆதிசங்கரர்

நெல்லி மழை

ஸ்ரீஆதிசங்கரர் சோமதேவர் என்பவர் வீட்டின் முன்பாக சென்று “பவதி பிக்ஷாந்தேஹி“ என ஒருமுறை உச்சரித்தார். “இதுவே ஒரு யாசகன் வீடு. இது தெரியாமல் இந்த வீட்டுக்கு யாரோ ஒரு அந்தணர் யாசகம் கேட்டு வந்துள்ளாரே. அவருக்கு யாசகம் தருவதற்கு வீட்டில் ஏதும் இல்லையே….அம்மா இது என்ன சோதனை.?“ என்று தன் குடும்ப வறுமையை நினைத்து அழுதாள் அந்த குடும்பத்தின் தலைவி. மறுபடியும் ஆதிசங்கரர் “பவதி பிக்ஷாந்தேஹி“ என்று குரல் கொடுத்தார். “அடடா… சிவனே நேரில் வந்திருப்பது போல தெய்வீகமாக இவன் இருக்கிறானே. இவனிடம் வீட்டில் ஒன்றும் இல்லை போ என்று எவ்வாறு கூறுவது?. அப்படிச் சொன்னால் அவன் முகம் வாடிவிடுமே. இறைவா ஏன் இந்த கொடுமையான வறுமை.“ என்ற கலங்கி நின்றாள் சோமதேவர் மனைவி. ஆதிசங்கரர் மூன்றாவது முறையாக “பவதி பிக்ஷாந்தேஹி“  என்றார். தண்ணீரில் விழுந்தவன் தப்பி பிழைக்க தெய்வம் மூன்று முறை சந்தர்ப்பம் தரும். அந்த மூன்று சந்தர்ப்பத்தில் தண்ணீரில் விழுந்தவன் தப்பிக்க வழி தேட வேண்டும். நான்காவது சந்தர்ப்பம் கிடையாது – மரணம்தான் முடிவு. அதைபோல இந்த அந்தணச் சிறுவன் “பவதி பிக்ஷாந்தேஹி“ மூன்றுமுறை சொல்லிவிட்டான். நான்காவது முறை சொல்ல மாட்டான். சாபம் விடுவான். இருக்கின்ற வறுமை போததென்று அவன் சாபக் கொடுமை வேறு சுமக்க வேண்டும். வேண்டாம் அந்த நிலை. வீட்டில் எது இருக்கிறதோ அதை கொடுப்போம்.“ என்று அந்த தாய் தேடினாள். அவள் வீட்டில் சாப்பிடும்படி ஏதும் இல்லை. ஒரு காய்ந்த நெல்லிக்கனியை தவிர. அந்த காய்ந்த நெல்லிக்கனியை தயக்கத்துடன் ஆதிசங்கரருக்கு தந்தாள். அதை மகிழ்ச்சியுடன் பெற்று கொண்ட ஸ்ரீஆதிசங்கரர், அந்த தாயின் தயக்கத்தை – அந்த குடும்பத்தின் வறுமை நிலையை உணர்ந்தார். “அம்மா, ஏன் உங்கள் கண்களில் கண்ணீர். நீங்கள் தந்த இந்த நெல்லிக்கனி ஸ்ரீமகாலஷ்மிக்கு உகந்தது. இன்று அட்சயை திருதியை. தூய அன்புடன் நீங்கள் தந்த தானத்தில் நான் மனம் மகிழ்ந்தேன். என்று கூறி, ஸ்ரீ கனகதார ஸ்தோத்திரத்தை பாடி, ஸ்ரீமகாலஷ்மியை அழைத்தார் ஆதிசங்கரர். ஆதிசங்கரரின் அழைப்பை ஏற்று அன்னை ஸ்ரீமகாலஷ்மி வந்தாள். தானம் தந்த அந்த பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனிகளை மழையெ பொழிந்தாள்.

ஒருநாள் சங்கரர் ஆற்றுக்குக் குளிக்கச் சென்று கொண்டிருந்தார். அவரைப் புலையன் ஒருவன் பின் தொடர்ந்து வந்தான். அவன் பின்னால் நான்கு நாய்கள் வந்து கொண்டிருந்தன. அவனது கையில் கள் குடம் ஒன்று இருந்தது. கருப்பான அவன், குளித்து பலநாள் ஆனதால் அவனிடமிருந்து துர்நாற்றம் வீசியது. அவன் மாமிசத்தைச் சாப்பிட்டபடி சங்கரரை நெருங்கினான்.

இதைக் கண்ட சங்கரர், “டேய், விலகிப் போடா!'' என்று எச்சரித்தார். அவன் உடனே, “நீயும் கடவுள். நானும் கடவுள். எனக்குள்ளும் உனக்குள்ளும் ஒரே ஒளியே இருக்கிறது. நான் ஏன் உன்னைக் கண்டு விலக வேண்டும்?'' என்று எதிர்க் கேள்வி கேட்டான். அப்போது சங்கரரின் உள்ளத்தில் ஞானஒளி தோன்றியது. இதையடுத்து "மனீஷா பஞ்சகம்” என்னும் பாடலைப் பாடினார். அப்போது அங்கு புலையன் வேடத்தில் வந்த சிவபெருமான் காசிவிஸ்வநாதராக மாறிக் காட்சியளித்தார்

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-3

பட்டினத்தார்

திருவெண்காடரின் மகனாக வந்தடைந்த மருதவாணர் வளர்ந்து சிறந்து வாணிபத்தில் வல்லவராய்ப் பெரும் பொருள் ஈட்டித் தம் பெற்றோரை மகிழ்வித்து வந்தார். வணிகர் சிலருடன் கடல் கடந்து சென்று வாணிபம் புரிந்து பெரும் பொருள் ஈட்டி திருக்கோயில் பணிகட்கும், சிவனடியார்கட்கும் அளித்து வந்தார். அவ்வாறு கடல் வாணிபம் செய்து வரும்போது ஒருமுறை வணிகர்கள் பலரோடு கடல் கடந்து சென்றவர் அங்கிருந்து எருமுட்டைகளையும் தவிட்டையுமே வாங்கித் தம் மரக்கலத்தில் நிரப்பிக்கொண்டு ஊர் திரும்பினார். 

வழியில் அனைவர் மரக்கலங்களும் காற்றில் திசைமாறிப் போயின. உடன் வந்த வணிகர்கள் உணவு சமைத்தற்கு இவரிடம் கடனாக எரு மூட்டைகளை வாங்கிப் பயன்படுத்தி உணவு சமைத்தனர். சில நாட்கள் கழித்து அனைவரும் காவிரிப்பூம்பட்டினம் மீண்டனர்.

வரட்டியும் தவிடும்

வந்தடைந்த வணிகர்களில் சிலர் திருவெண்காடரிடம் மருத வாணர் பித்தராய் வீணே பொருளைச் செலவிட்டு தவிடும் வரட்டி யுமே வாங்கி வந்துள்ளார் என்று குறை கூறினார். திருவெண்காடர் மருதவாணர் வாங்கி வந்த வரட்டியைச் சோதித்துப் பார்த்தபோது அவற்றுள் மாணிக்கக் கற்கள் இருத்தலையும் தவிட்டைச் சோதித்த போது அதனுள் தங்கப்பொடி மறைத்து வைக்கப்பட்டிருத்ததையும் கண்டு தன் மகன் கடல் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க இவ்வாறு செய்துள்ளான் என வியந்து அதனை வணிகர்களிடம் கூறிப் பெருமையுற்றார். 

காதற்ற ஊசி

சில நாட்களில் சென்றபின் அனைத்து வரட்டிகளையும் தவிட்டையும் சோதித்தபோது அவற்றுள் ஒன்றும் இல்லாதிருத்தலைக் கண்டு தன் மகன்மீது சினம் கொண்டு அவரைத் தண்டிக்கும் கருத் துடன் தனி அறையில் பூட்டி வைக்கச் செய்து வாணிபத்தைத் தான் கவனித்து வரலானார். மருதவாணரின் தாயார் அவரைக்காண அறைக்குச் சென்றபோது சிவபிரான் மருகனோடும் உமையம்மை யோடும் அங்கிருத்தலைக் கண்டு தன் கணவர்க்கு அறிவிக்க அவரும் சென்று அவ்வருட் காட்சியைக் கண்டு அறையைத் திறக்குமாறு பணித்தார். மருதவாணரிடம் தன் செயலுக்கு மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினார். மருதவாணர் மெய்ந்நூற்பொருளை அவருக்கு உபதேசம் செய்தார். எனினும் பெருஞ்செல்வராகிய அவர்க்கு உலகப் பற்று ஒழியாமை கண்டு காதற்ற ஊசி ஒன்றையும் நூலையும் `காதற்ற ஊசியும் வாராது காண்நும் கடைவழிக்கே` என்றெழுதிய ஒலை நறுக்கினையும் ஒரு பெட்டியில் வைத்து மூடி வளர்ப்புத் தாயிடம் அளித்துத் திருவெண்காடரிடம் அதனைச் சேர்ப்பிக்குமாறு கூறி இல்லத்தை விட்டு மறைந்து சென்றார்.

திருவெண்காடர் மருதவாணர் அளித்ததாக மனைவி அளித்த பெட்டியை வாங்கித் திறந்து பார்த்தபோது காதற்ற ஊசி, நூல் ஆகியன வும் அறவுரை அடங்கிய ஓலை நறுக்கும் இருக்கக்கண்டு அவை உணர்த்தும் குறிப்பை உணர்ந்து இருவகைப் பற்றுக்களையும் அறவே விட்டுத் துறவறமாகிய தூய நெறியை மேற்கொண்டு ஊர் அம்பலத்தை அடைந்து அங்கேயே வாழ்ந்து வரலானார். திருவெண்காடர் தூறவு பூண்டதை அறிந்த அரசன் அவரை அணுகி `நீர் துறவறம் பூண்டதனால் அடைந்த பயன் யாது` என வினவிய போது `நீ நிற்கவும் யான் இருக்கவும் பெற்ற தன்மையே அது` என மறுமொழி புகன்றார். எல்லோரும் திருவெண்காடரைத் திருவெண்காட்டு அடிகள் என அழைத்தனர்.

தன்வினை தன்னைச்சுடும்

பெருஞ்செல்வரான திருவெண்காடர் துறவு பூண்டு பலர் வீடுகளுக்கும் சென்று பிச்சை ஏற்று உண்ணுதலைக் கண்டு வெறுப்புற்ற உறவினர் சிலர் அவர்தம் தமக்கையாரைக் கொண்டு நஞ்சு கலந்த அப்பத்தை அளிக்கச் செய்தனர். அதனை உணர்ந்த அடிகள் அதனை வாங்கி `தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்` எனக் கூறி தமக்கையார் வீட்டின் இறப்பையிற் செருகிய அளவில் வீடு தீப்பற்றி எரிந்தது
.
 தாயார் இறந்தபோது வாழைப் பட்டைகளை அடுக்கித் தாயின் உடலை அதன் மீது வைத்துச் சில பாடல்களைப் பாடி ஞானத்தீயால் அவ்வுடலை எரித்து ஈமக்கடன்களை ஆற்றினார்

இரவில் பத்ரகிரி மன்னன் அரண்மனையில் அணிகலன்களைத் திருடியவர்கள் தாம் வேண்டிச் சென்று வெற்றியோடு களவாடிய அணிகலன்களில் மணிமாலை ஒன்றை விநாயகர்மீது வீசி எறிந்து சென்றனர். அம்மாலை விநாயகர் கோயிலில் தவமிருந்த திருவெண்காடர் கழுத்தில் விழுந்திருந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் திருடர்களைத் தேடி அரண்மனைக் காவலர்கள் வந்தனர். அடிகள் கழுத்தில் மணிமாலை இருத்தலைக் கண்டு அவரைக் கள்வர் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று கருதி பிடித்துச் சென்றனர். அரசனிடம் தெரிவித்து கழுமரத்தில் அவரை ஏற்றுதற் பொருட்டு கழுமரம் இருக்கு மிடத்துக்கு அழைத்து வந்தனர். அடிகள் தான் குற்றம் செய்யாமல் இருக்கவும் தன்னைத் தண்டித்த அரசன் செயலுக்கு வருந்தி `என் செயலாவது யாதொன்றுமில்லை` என்ற பாடலைப் பாடிய அளவில் கழுமரம் தீப்பற்றி எரிந்தது

அடிகள் இறைவன் கருணையை வியந்து `என்னையும் என் வினையையும் இங்கு இருத்தி வைத்தனை போலும்` என இரங்கிக்கூற சிவபிரான் திருஒற்றியூருக்கு அவரை வருமாறு பணித்தருளினார். அடிகள் எப்போது தனக்கு முத்தி சித்திக்கும் எனக் கேட்க பெருமான் பேய்க்கரும்பு ஒன்றை அவர் கையில் தந்து இக்கரும்பு எங்கு தித்திக்கிறதோ அங்கே உனக்கு முத்தி சித்திக்கும் எனக் கூறியருளினார்
திருவெண்காட்டு அடிகள் திருஒற்றியூரில் தங்கியிருந்த போது, கடற்கரையில் விளையாடும் சிறுவர்களோடு தாமும் சேர்ந்து மணலில் புதைதல் பின் வெளிப்படல் போன்ற விளையாட்டுக்களை நிகழ்த்தினார். முடிவில் சிறுவர்களைக் கொண்டு மணலால் தன்னை மூடச் செய்தார். நெடுநேரம் ஆகியும் அவர் வெளிப்படாதிருத்தலைக் கண்டு சிறுவர்கள் மணலை அகழ்ந்து பார்த்தபோது அடிகள் சிவ லிங்கமாக வெளிப்பட்டருளினார்.

Wednesday, August 21, 2013

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-2

ரமணர் நிகழ்த்திய அற்புதங்கள் -1 அட்ஷய பாத்திரம்

ரமணர் விருபாஷிக் குகையில் தங்கி இருந்த காலம். ஒரு நாள் மாலை வேலையில் திரளாக பக்தர்கள் கூட்டம் வந்திருந்தது. வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக ஸ்ரீ பகவானை தரிசித்துக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் திடீரென மழை பொழியத் துவங்கியது. மெதுவாக ஆரம்பித்த மழை பேய் மழையாகக் கொட்டித் தீர்த்தது. தரிசிக்க வந்தவர்கள் யாரும் கீழே இறங்கிச் செல்ல முடியாத நிலை. மாலை கடந்து இரவும் வந்து விட்டிருந்தது. இரவு எட்டு மணியைக் கடந்து விட்டதால் ஒவ்வொருவருக்கும் நல்ல பசி ஏற்பட்டது. ஆனால் அத்தனை பேருக்கும் போதுமான உணவு கையிருப்பில் இல்லை. பகவானின் அடியவரான பழனிசாமிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பகவானின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.பகவானும், ‘சரி, சரி மழை விடுவதாகத் தெரியவில்லை. இவர்களோ பாவம் பசிக்களைப்பில் இருக்கிறார்கள். அதனால் இருக்கும் உணவை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுஎன்றார்.உடனே பழனிசாமி உணவை  சிறு சிறு உருண்டையாக உருட்டி வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கத் தொடங்கினார். அவர்களும் அந்தச் சிறு கவளங்களை ரமணப் பிரசாதமாக நினைத்து வாங்கி உண்டனர். மூன்று பேருக்கு மட்டுமே வைத்திருந்த அந்த உணவு கிட்டத்தட்ட முப்பது பேர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. சற்று நேரத்தில் அனைவருக்கும் வயிறு நிறைந்து விட்டதுடன் அறுசுவை உணவு உண்ட திருப்தியும்  ஏற்பட்டது. தண்ணீர் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு வயிறு நிறைந்திருப்பதைக் கண்டு எல்லாம் ரமணரருள்என்று எண்ணித் தொழுதனர் பக்தர்கள். எல்லாவற்றிற்கும் காரண சூத்ரதாரியான ரமணரோ ஒன்றும் பேசாமல் எங்கோ மௌனமாய் நோக்கிக் கொண்டிருந்தார்.

ரமணர் நிகழ்த்திய அற்புதங்கள்- 2 ஞான வைத்தியம்

கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு. ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.அதற்குக் காரணம் இருந்தது.பல முறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.ஏன்?கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று. குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார்.அதனால் கடைசி முறையாக திருவண்ணா-மலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.விந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது,பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான்.பெரியவரை நெருங்கிய வாலிபன், “ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது. இதெல்லாம் உனக்குச் சரிப்படாது’’ என்று கூறிக் கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான். ஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு,அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான்.அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான், தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான்? ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து, அப்படியே நின்றார்.ஆமாம்.கால் ஊனம் காணாமல் போய்,கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை.இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான். இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது. அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள். அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார்.ஆனால் இந்த உண்மைக் கதையில் பகவான் சொல்லாத ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். பகவான் கடைசி வரை அதன் க்ளைமாக்ஸைத் தன் வாயால் சொல்லவே இல்லை.ஆமாம். அது என்ன தெரியுமா?விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது அவரது வயது என்ன? 20. கால் சுவாதீனமில்லாத பெரியவரின் ஊன்றுகோலைப் பிடுங்கி எறிந்து குறும்பு செய்தது யார்? ஓர் இளைஞன்.ஆமாம். நம் பகவான் ரமண மகரிஷிதான் அந்த இளைஞன்!

ரமணர் நிகழ்த்தியஅற்புதங்கள் -3 கள்வருக்கும் கருணை

1924-ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 26-ஆம் நாள் நள்ளிரவு; மணி 11-30 இருக்கும். சில கீற்றுக் கொட்டகைகளேஅப்பொழுது இருந்த ரமணாசிரமம். ஆனால், இது பணம் பெருத்த திருமடம் என்றெண்ணிய சில திருடர்கள் அங்கு வந்து புகுந்து ஜன்னல்களை நொறுக்கி அட்டகாசம் செய்தனர். பகவான் ஸ்ரீ ரமணர் படுத்திருந்த அறையில் கூடவே சில அடியார்களும் இருந்தனர். பகவான் திருடர்களை உள்ளே வரச் சொல்லி, அவர்களுக்கு வேண்டியதை இருளில் பார்த்து எடுத்துக் கொள்வதற்காக ஹரிக்கேன் விளக்கு ஒன்றை ஏற்றித்தரச்செய்தார். " உன் பணமெல்லாம் எங்கே வைத்திருக்கிறாய்?" என்று உறுமினர் கள்வர்கள். " நாங்கள் பிட்சை எடுத்து உண்ணும் சாதுக்கள்; எங்களிடம்பணம் இல்லை; இங்கே உள்ள எதை வேண்டுமானாலும் எடுத்துச்செல்லுங்கள்; நாங்கள் வெளியேறி விடுகிறோம்." என்று  பகவான் கூறி அடியார்களுடன் வெளியில் வந்து உட்கார்ந்தார். வெளியேறும் போது ஒவ்வொருவரையும் திருடர்கள் அடித்தனர். ஸ்ரீ பகவானுக்கும் இடது தொடையில் ஓர் அடி விழுந்தது! "அப்பா! உனக்கு திருப்தியாகாவிட்டால் மற்றொரு தொடையிலும் அடி" என்று பரிந்து கூறினார் பகவான்!கள்வர்க்கும் காட்டிய கருணை அம்மட்டோ! எதிர்த்துத் திருடரைத் தாக்கக் கிளம்பிய இளஞ்சீடர் ஒருவரைப் பகவான் தடுத்து," அவர்கள் தர்மத்தை அவர்கள் செய்யட்டும்; நாம் சாதுக்கள்; நம் தர்மத்தை நாம் கைவிடக்கூடாது; எதிர்ப்பதால் சம்பவிக்கும் விளைவுக்கு நாளை உலகம் நம்மையே குறை கூறும். நம் பற்கள் நம்நாக்கைக் கடித்துவிட்டால் பற்களை உடைத்தா எறிந்துவிடுகிறோம்?" என்று சாந்தோபதேசம் செய்தனர்.சில நாட்களில் அத் திருடர்களை காவல் துறையினர் பிடித்துக் கொண்டுவந்து ஸ்ரீ பகவான் முன்னிலையில்நிறுத்தினர்.. "பகவானே, இவர்களுள் யார் தங்களை அடித்தவன்; காட்டுங்கள்! " என்று அவர்கள் வேண்டினர். " நான்  யாரை(முன் ஜன்மத்தில்) அடித்தேனோ அவன் தான் என்னை அடித்தான்! அவனை நீர் கண்டுபிடியும்!! " என்று கூறி நகைத்தனரே தவிர அக்குற்றவாளியைக் காட்டியே கொடுக்கவில்லை.

ரமணர் நிகழ்த்திய அற்புதங்கள்-4
பிள்ளையாருக்குக் கொடுத்த பழம்

கே.என்.சாஸ்திரி என்பவர் ரமணரைப் பார்க்கப் போகும்போது கையில் ஒரு சீப்பு வாழைப்பழம் கொண்டுபோனார். போகும் வழியில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குப் போனார். சீப்பிலிருந்து பழத்தைப் பிய்த்தெடுக்காமலே சாஸ்திரி ஒரு பழத்தை மட்டும் அங்கிருந்த பிள்ளையாருக்கு மனதாலே நிவேதனம் செய்தார்.இறுதியில் அவர் பகவானைப் பார்த்து பழங்களைக் கொடுத்தார். அங்கிருந்த ஒரு சாது பழச்சீப்பை குகைக்குள் வைப்பதற்காக எடுத்துப் போகும் நேரம் பகவான் ஒரு நிமிஷம், பிள்ளையாருக்குக் கொடுத்த பழத்தை நாம எடுத்துக்கலாம்என்று சொல்லி ஒரு பழத்தை வாங்கிக் கொண்டதும் சாஸ்திரியார் வியந்து போனார். எது தெரியாது பகவானுக்கு?

ரமணர் நிகழ்த்திய அற்புதங்கள்-5
உணர் நிலையில் அறுவை சிகிச்சை

ரமண மகரிஷிக்கு புற்று நோய் வந்து அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்த போது ரமணர் தனக்கு மயக்க மருந்து தர வேண்டாம் என்று கூறி விட்டார்! டாக்டர்கள் எத்தனையோ சொல்லியும் ரமணர் பிடிவாதமாக இருக்கவே வேறு வழியின்றி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதை ரமணர் புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். இது எப்படி சாத்தியமாயிற்று? தேகம் வேறு ஆன்மா வேறு என்பதை ரமணர் புரிந்துகொண்டிருந்தார். தேகத்திற்குத்தான் வலி. ஆன்மா, வலி உணராது. அவர் மனம் ஆன்மாவில் லயித்து விட்டதால் தேகம் வலி உணரவில்லை! இந்த மெய்ஞான உண்மைக்கு எந்த மருத்துவ அகராதியிலும் விளக்கம் கிடையாது.இந்த ஆன்மா, மனம் என்கிற கடிவாளத்தைப் பிடித்தபடி உணர்வுகள் என்ற குதிரைகளை வாழ்க்கை என்கிற பாதையில் வழி நடத்திச் செல்கிறது. புத்தி தான் ஆத்மா. அதுதான் பிரும்மம். ஜீவன் வெறும் ஏஜெண்டு மாத்திரம்தான். ஆத்மாவின் ஆணைகளை வழி நடத்தும் தொழிலாளி. வலியை உடல் உணருகிறது. ஆன்மா உணருவதில்லை.இந்த மெய்ஞான வேறுபாடுகளை ஞானிகள் உணர்ந்திருந்தார்கள். அதுதான் பிரும்ம தத்துவம்

ரமணர் நிகழ்த்திய அற்புதங்கள்-6 மகான் சேஷாத்ரி உருவில் ரமண்ர்

அவர் ஒரு ரமண பக்தர். ஆசார அனுஷ்டானங்களில் நம்பிக்கை உடையவர். ஆனால் அவரிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. கஞ்சா போன்ற போதை வஸ்துவை தியானம் செய்யும் பொழுது உபயோகித்து வந்தார். அவ்வாறு உபயோகிப்பதன் மூலம் இறை உணர்வில் தீவிரமாக நிலைத்து இருக்க முடியும் என்று நம்பினார். சித்தர்கள் சிலரும், முனிவர்கள் பலரும் உபயோகித்தது தானேஎன்று தமக்கு அறிவுரை கூறிய நண்பரிடம் எதிர்வாதம் செய்தார். அவர் இவ்வாறு போதைப் பொருளைப் பயன்படுத்துவது ஒரு நாள் பகவான் ரமணரின் கவனத்துக்கு வந்தது. ரமணர் பக்தரைக் கூப்பிட்டு கண்டித்தார். அத்துடன், “இதைச் சாப்பிடாதே. இது நிச்சயமாய் கெடுதல்தான் பண்ணும்என்று அறிவுறுத்தினார்.ஆனால் பக்தர் அதனைக் கேட்கவில்லை. தினந்தோறும் கஞ்சாவை உபயோகித்து வந்தார்.ஒருநாள் தியானத்தில் அமர்வதற்கு முன் அதனை உபயோகித்தார். அவ்வளவு தான். சிறிது நேரத்தில் அவருக்கு தலை சுற்றியது. மயக்கமாய் வர ஆரம்பித்தது. இறை உணர்விற்குப் பதிலாக வரிசையாக கீழ்த்தரமான எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன. உடலெல்லாம் எரிய ஆரம்பித்தது. பித்துப் பிடித்தவர் போலானார். ரமணரிடம் போய்ச் சொல்லலாமென்றால் அவர் அறிவுறுத்தியதை மீறித் தான் போதை வஸ்துவைப் பயன்படுத்தியது தெரிந்தால் கோபிப்பார் என்று எண்ணினார். பகவான் முகத்தில் விழிக்க வெட்கப்பட்டு ஒன்றும் புரியாமல் கோவிலைச் சுற்றி சுற்றி வந்தார்.
வழியில் சிவகங்கைக் குளம் அருகே மகான் சேஷாத்ரி சுவாமிகள் உட்கார்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தார். மகான் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். கேவினார். தன் நோயைத் தீர்க்குமாறு இருகரம் கூப்பிவேண்டினார்.சுவாமிகள், “அடேய், நான் தான் அப்போவே சொன்னேனே! சாப்பிடாத, சாப்பிடாதன்னுகேட்டியா? இப்போ ஏன் இப்படி அவஸ்தைப்படறே!என்று கோபித்தார்.பக்தருக்கோ ஒன்றுமே புரியவில்லை. இவர் எப்போது நம்மிடம் கஞ்சாவைச் சாப்பிடாதே என்று சொன்னார், ஏன் இப்படி உளறுகிறார்என்று நினைத்தார்.சுவாமிகளோ மீண்டும் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொன்னார். பக்தருக்கு ஒரே ஆச்சர்யமாகி விட்டது. தான் இதற்கு முன் சேஷாத்ரி சுவாமிகளைச் சந்தித்ததும் இல்லை. தன் போதைப் பழக்கம் பற்றி மகானிடம் எதுவும் கூறியதுமில்லை. அப்படி இருக்க மகான் ஏன் இப்படிக் கூறுகிறார் என நினைத்து வியந்தார்.பின்னர் சேஷாத்ரி சுவாமிகள், சிறிது மணலை அள்ளி அவர் மீது வீசினார். உடன் பக்தரின் மேனி எரிச்சல் நின்று விட்டது.பின்னர் தான் பக்தருக்குப் புரிந்தது, “நான்என சேஷாத்ரி சுவாமிகள் குறிப்பிட்டது பகவான் ரமணரைத்தான் என்று. பகவான் ரமணர் தனக்குக் கூறிய அறிவுரையையே சேஷாத்ரி சுவாமிகள் தான் கூறியதாக திரும்பக் கூறினார் என உணர்ந்து கொண்டார். இருவரும் உடல் வேறாக இருந்தாலும், உணர்வால் ஒன்றாகவே இயங்கி வந்தனர் என்பதைப் புரிந்து கொண்டார். அது முதல் அந்த தீய போதைப் பழக்கத்தை விட்டு விட்டார்.மகான்கள் நேரடியாக ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளாவிட்டாலும், சூட்சுமத்தில் தொடர்பில் இருப்பர் என்பதையும், ஓரிடத்தில் நிகழ்வதை மற்றொருவர் அங்கில்லாவிட்டாலும் தெளிவாக உணர்ந்திருப்பர் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்துகிறதல்லவா


ரமணர் நிகழ்த்திய அற்புதங்கள்-6 வெள்ளிக்காசும் தங்கக்காசும்

பகவானை நாடி வந்த பக்தர்களில் பல தரத்தினர் இருந்தனர். மந்திர ஜபம் செய்பவர்கள், உபாசகர்கள், சக்தியை வழிபடுவோர் இடைவிடாது தவம், தியானம் செய்பவர்கள் என பலர் அவர்களில் இருந்தனர். அவர்களுக்கும் ரமணர் “உன்னையே நீ அறிவாய்” என்பதையே உபதேசித்தார். ”’தான்’ என்ற அகந்தை இருக்கும் வரை ஒருவரால் ஒருக்காலும் ஆண்டவனைப் பற்றி அறிய முடியாது. முதலில் ’தான், தான்’ என்று தோன்றும் அந்த எண்ணத்தின் பிறப்பிடம் எது என்பதை அறிவாய். அதை அறிந்து கொண்டு விட்டால் பின்னர் எல்லாமே தாமாய் விளங்கும்” என்பதே மஹரிஷிகளின் அருள் மொழி.

ஒருநாள் ஒரு சாது பகவானை நாடி வந்தார். அவர் மந்திர சித்தி பெற்றவர். அவர் அங்கிருந்த பக்தர்களைப் பார்த்து, “ இதோ பாருங்கள் என்னால் ஒரு செப்புக் காசை தங்கமாக மாற்ற முடியும். உங்கள் பகவானால் முடியுமா?” என்றார்.
பகவான் வழக்கம் போல் மௌனமாக இருந்தார்.
ஆர்வம் கொண்ட சில பக்தர்கள் அந்தச் சாதுவிடம் ஒரு செப்புக் காசைக் கொடுத்தனர். அவர் அதை வாங்கித் தன் கையில் சில நிமிடம் வைத்திருந்தார். பின்னர் அவர் அதை பக்தர்களிடம் திருப்பிக் கொடுத்த போது அது தங்கமாக மாறி ’பள பள’வென மின்னியது.“பார்த்தீர்களா, என் ஆற்றலை. உங்கள் பகவானால் இது முடியுமா, சொல்லுங்கள்” என்று எகத்தாளமாகப் பேசிய அந்தச் சாது பகவானைப் பார்த்தும் கிண்டலாகச் சிரித்தார்.பகவான் உடனே, “சரி, சரி. இன்னொரு செப்புக் காசையும் அவரிடம் கொடுங்கள். அதையும் தங்கமாக மாற்றட்டும்” என்றார்.

அந்தச் சாது, ‘ஆஹா.. என்ன பிரமாதம். கொடுங்கள். என் மந்திர சக்தியால் மாற்றிக் காட்டுகிறேன்” என்று சொல்லி வாங்கிக் கொண்டார்.
நிமிடங்கள் கழிந்து நாழிகை ஆனது. அந்தச் சாதுவும் விடாமல் பல மந்திரங்களை முணுமுணுத்தவாறு இருந்தார். காசை வலக் கையிலிருந்து இடக் கைக்கும் இடதிலிருந்து வலதிற்கும் மாற்றிக் கொண்டே இருந்தார். பல மணி நேரம் தான் கடந்ததே தவிர, அந்தச் செப்புக் காசை தங்கமாக்க அவரால் முடியவில்லை.
“என்னால் முடியவில்லை. பகவானுக்கு முன்னால் என் சக்தி எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன்” என்று சொல்லி தனது தோல்வியை ஒப்புக் கொண்டு பகவானை நமஸ்கரித்து விட்டு அந்த இடம் விட்டுச் சென்றார் அந்தச் சாதுபகவான் பக்தர்களிடம், “இந்த மாதிரி சித்து விளையாட்டுகள் எல்லாம் சில பயிற்சிகளால், மந்திர அப்பியாசத்தால் சித்திக்கும். ஆனால் அதனால் ஆன்மாவிற்கு எந்தப் பயனும் இல்லை. ஆத்ம விசாரமே தவம். யோகம், மந்திரம் தவம், தியானம் எல்லாமே ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுதான் மிகவும் முக்கியம். இந்த மாதிரி சித்து விளையாட்டுக்களில் கவனம் கொள்ளாதீர்கள். அது உங்களை கீழே இழுத்து விடும்” என்று அறிவுரை பகன்றார்.

ரமணரின் பரிவு

1.குழந்தையும் குரங்குக் குட்டியும்

ஒரு நாள் ஸ்ரீ ரமணர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஜன்னல் வழியே புதிதாகப் பிறந்த இளங்குட்டியுடன் ஒரு தாய்க்குரங்கு எட்டிப் பார்த்தது. ரமணரிடம் வர முயற்சி செய்துகொண்டிருந்தது. அன்பர்கள் அந்தக் குரங்கை விரட்டினார்கள்.அப்போது ரமணர், “ஏன் அதைத் துரத்துகிறீர்கள்? அது இங்கே வந்து தன் இளங்குழந்தையை எனக்குக் காட்ட ஆசைப்படுகிறது. உங்களுக்குக் குழந்தை பிறந்தால் மட்டும் என்னிடம் நீங்கள் கொண்டு வந்து காட்டுகிறீர்களே? அப்படி நீங்கள் உங்கள் குழந்தையை என்னிடம் கொண்டு வரும்போது யாராவது தடுத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் ? நீங்கள் உங்கள் குழந்தைகளைக் கொண்டு வந்து காட்டலாம். இந்தக் குரங்கு மட்டும் கொண்டு வந்து காட்டக்கூடாதா ? இது என்ன நியாயம் ?” என்று கேட்டார்.அன்பர்கள் அடங்கி விட்டனர். குரங்கு தன் குட்டியுடன் உள்ளே வந்து பகவானிடம் சிறிது நேரம் தன் குட்டியை வைத்திருந்துப் பின் எடுத்துச் சென்றது.
2.முக்த்தி அடைந்த பசு

ஆஸ்ரமத்தில் லட்சுமி என்ற பசு இருந்தது. அது 6 மாதக் கன்றுக் குட்டியாக இருக்கும்போது ரமணரிடம் வந்தது. 1924 முதல் 1948 வரை அவருடன் வாழ்ந்தது. ஒரு நாள் அது நோய்வாய்ப்பட்டு படுத்துவிட்டது. ரமணர் மாட்டுப் பட்டிக்குச் சென்று லட்சுமிக்கு அருகில் அமர்ந்து தம்மடியில் அதன் தலையை எடுத்து வைத்துக் கொண்டார்.“லட்சுமியம்மா ! லட்சுமியம்மா !” என்று சொல்லி தம் திருக்கரத்தால் அதன் தலையைத் தடவிக் கொடுத்தார். லட்சுமியின் உயிர் பிரிந்தவுடன், சடலத்தை நன்னீரால் குளிப்பாட்டி, மஞ்சள்பூசி, நெற்றியிலே குங்குமம் இட்டு, மாலை அணிவித்து, பட்டுத்துணி கட்டி, தூபதீபம் காட்டி, சமாதி செய்தார்கள். கடைசிவரை ரமணர் அருகே இருந்தார்.


3.நானும் ஒரு பரதேசிதானே

ஒரு சமயம் ஆஸ்ரமத்திலே விசேஷ பூஜைகள் நடந்தபோது சாப்ப்பாட்டுக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்தன. கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் ஆஸ்ரம நிர்வாகி கோபம் அடைந்து ஏழைப் பரதேசிகளைப் பார்த்து, “பரதேசிகள் உள்ளே வரவேண்டாம். சற்று நேரம் பொறுத்துப் பின்பு வரலாம்” என்று கடுமையாகச் சொன்னார். மற்றவர்கள் சாப்பிட அமர்ந்தார்கள். அனைவருக்கும் இலை போடப்பட்டது. வழக்கமான இடத்தில் ரமணர் இல்லை. பகவான் எங்கே ? எல்லாரும் தேடினார்கள். பகவானைக் காணவில்லை.அவர் தொலைவில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஆஸ்ரம நிர்வாகஸ்தர்கள், “பகவான் ஏன் இங்கு வந்து விட்டீர்கள்? சாப்பிட எல்லோரும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று கேட்டார்கள்.அதற்கு ரமணர், “பரதேசிகள் உள்ளே வர வேண்டாம் என்று சொன்னார்கள். நானும் ஒரு பரதேசிதானே?” என்றார். ஆஸ்ரமவாசிகள் தங்கள் தவறை உணர்ந்து அனைவரையும் ஒரே நேரத்தில் அமர்த்தி சமாராதனை செய்தார்கள்.
4.குருவி முட்டை பெற்ற பேறு

ஒரு நாள் பகவான் மூங்கில் கொடியில் உலர்த்தியிருந்த தம் துண்டை எடுக்கும்போது அங்குக் கட்டப்பட்டிருந்த குருவிக்கூடு அசைந்து அதில் இருந்து ஒரு முட்டை கீழே விழுந்துவிட்டது. விரிசல்விட்டது. பகவான் மிகுந்த வருத்தமடைந்தார்.ஒரு துணியினால் விரிசலடைந்த முட்டையைச் சுற்றி மீண்டும் கூட்டுக்குள் வைத்தார். “ஐயோ, பாவம் ! இதன் தாய் எவ்வளவு வருத்தமடையும் !”இதன் தாய்க்கு என் மீது எவ்வளவு கோபம் உண்டாகும்?”இந்த விரிசல் கூட வேண்டும்” என்றார்.மூன்று மணிநேரங்களுக்கு ஒருமுறை முட்டையை எடுத்துத் துணியை நீக்கிப் பார்ப்பார். முட்டையைத் தம் உள்ளங்கையில் வைத்துக் கொள்வார். அதன்மீது தம் கருணைப் பார்வையை செலுத்துவார். பிறகுக் கூட்டில் வைப்பார். இப்படி ஒரு வாரம் கழிந்தது.
குருவி அடைகாத்ததோ இல்லையோ பகவான் அதைவிட அன்புடன் அந்த முட்டையைப் பாதுகாத்தார். தம் திருக்கண் பார்வையினால் கவசமிட்டுக் காப்பாற்றினார். ஏழாவது நாள் விரிசல் மூடிக்கொண்டு விட்டது !பகவானுக்குப் பரம சந்தோஷம். பரமதிருப்தி.சில நாட்கள் சென்றன. அந்த முட்டையில் இருந்து சின்னஞ்சிறு குஞ்சு வெளி வந்தது. பகவானுக்கு மேலும் சந்தோஷம் ! அந்தக் குஞ்சைத் தம் திருக்கரத்தில் எடுத்துக் கொஞ்சினார். தடவிக் கொடுத்தார்.தாமே முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தவரைப் போல ஆனந்தமடைந்தார்.

5.உயரம் உயர்வு அல்ல

முற்பகல் நேரம்.ஹாலின் உள்ளே வெயிலின் தாக்கம் அதிகமிருந்ததால் பகவான் வெளியே உள்ள மரத்தடியில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். சுற்றி பக்தர்கள் அமர்ந்திருந்தனர். பகவான் உபதேச சாரத்திலிருந்து சில பாடல்களைக் கூறி அதன் பொருளை விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு வெளிநாட்டு பக்தர் ஒருவர் வந்தார். எல்லோரும் கீழே அமர்ந்திருந்ததைப் பார்த்த அவரும் கீழே அமர முயற்சித்தார். அவருக்கு அப்படி அமர்ந்து பழக்கமில்லாததால் முடியவில்லை. அதனால் சற்று தூரத்தில் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்து அதில் அமர்ந்தார். பகவான் சொல்வதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார்.
”உபதேசிக்கும் குரு மேலே இருக்க சீடர்கள் கீழே அமர வேண்டும். அதுதான் நியதி. அது தெரியாத இந்த வெள்ளைக்காரர் பகவானுக்குச் சரிசமமாக நாற்காலியில் அமர்ந்திருக்கிறாரே, இது என்ன நியாயம்?” சீடர் ஒருவர் மற்றொரு சீடரிடம் முணுமுணுத்தார். மேலும் பல சீடர்களுக்கும் அதுவே எண்ணமாக இருந்தது. அவர்களில் ஒருவர் எழுந்து வெள்ளைக்காரரிடம் சென்றார்.“நீங்கள் இதில் உட்காரக் கூடாது. கீழே தான் உட்கார வேண்டும்” என்றார்.“ஐயா, நான் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் என்னால் உங்களைப் போல் காலை மடக்கிக் கீழே உட்கார முடியவில்லை. எனக்கு அது பழக்கமுமில்லை” என்றார் அந்த வெளிநாட்டவர் ஆங்கிலத்தில்.“எங்கள் குருவுக்குச் சமமாக நீங்களும் உட்கார்ந்திருப்பது எங்கள் குருவை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. எல்லா சீடர்களும் இதையே நினைக்கிறார்கள்”
“ஓ.. சரி, என்னால் கீழே அமரவும் முடியாது. இப்படி நாற்காலியில் அமர்ந்தால் உங்களுக்கும் கஷ்டம். அதனால் நான் சென்று விடுகிறேன்” என்று சொல்லி விட்டு எழுந்து மெள்ள வெளியே நடக்க ஆரம்பித்தார்.இதை கவனித்துக் கொண்டிருந்த ரமணர், அந்த சீடரிடம், ”என்ன ஆச்சு, ஏன் வந்தவர் உடனே வெளியே போகிறார்?” என்று கேட்டார்.உடனே அந்தச் சீடர், “பகவான். அவரால கீழே உட்கார முடியாதாம். நாற்காலியில தான் உட்கார முடியுமாம். அப்படியெல்லாம் இங்க உட்கார்றது முறையில்ல. அது பகவானை அவமானப்படுத்தறமாதிரின்னு சொன்னேன். அவரும் சரின்னுட்டு போயிட்டார்” என்றார்.உடனே பகவான் ரமணர், “ஓஹோஹோ, குரு மட்டும்தான் உசந்த ஆசனத்துல உட்காரணுமா? சரிதான். இதோ இந்த மரத்து மேலே ஒரு குரங்கு உட்கார்ந்திண்டு இருக்கு. அதுவும் என்னை விட உசரமான இடத்தில் தான் இருக்கு. அதை என்ன பண்ணுவ? அதையும் வெளியில அனுப்படுவியா நீ? என்றார்.சீடர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பகவானையே பார்த்துக் கொண்டிருந்தார்.பகவான் உடனே, “இதோ பார், இந்த உலகத்துல யாரும் உசத்தியும் இல்லே! யாரும் தாழ்ச்சியும் இல்லே! அவரை உடனே கூப்பிட்டு அங்க உட்கார வைங்கோ.” என்றார் சற்றுக் கடுமையாக.சீடர்களும் அந்த வெளிநாட்டவரை அழைத்து வந்து ஆசனத்தில் அமர வைத்தனர்.

6.உள்ளே செல்ல அனுமதி இல்லை

ரமணருக்கு முதுமையுடன் நோயும் சேர்ந்து உடல் மிக நலிந்திருந்த சமயம். ஆனால் எப்போதும் யாராவது அவரைத் தரிசிக்க வந்தவண்ணம் இருந்தனர். மருத்துவரோ கண்டிப்பாக ஒய்வு தேவை என்று கூறினார். குறைந்தபட்சம் மதியச் சாப்பாட்டுக்குப் பின் பகவான் சற்று ஒய்வு எடுக்கட்டும் என்று மிகுந்த நல்லெண்ணத்தோடு தீமானித்த நிர்வாகம் ஒரு போர்டு வைத்தது. ‘பகல் பன்னிரண்டு மணி முதல் இரண்டு மணி வரை யாருக்கும் அனுமதியில்லை’ என்று அதில் எழுதியிருந்தது.
சாப்பிடப் போயிருந்த பகவான் திரும்பி வந்தார். போர்டைப் பார்த்தார். பேசாமல் கூடத்துக்கு வெளியே உட்கார்ந்து விட்டார்.பகவான் உள்ளே போகலாமே’ என்று மற்றவர்கள் கூறினர்.
‘யாருக்கும் அனுமதியில்லை என்று எழுதியிருக்கிறதே. அது நமக்கும் தானே’ என்று சொல்லிப் பகவான் எல்லோரையும் திகைக்க வைத்தார்.
7.வந்த வேலையைப் பார்
நடராஜன் என்பவர் பகவானின் பக்தர். அவர் முதன்முறை அண்ணாமலைக்கு வந்தபோது பகவான் ரமணரின் அருட்காட்சி கிடைத்தது. அதன் ஈர்ப்பினால் மறுமுறையும் அண்ணாமலைக்கு வந்தார். விடியற்காலையில் எழுந்தவர், மலை மேல் சென்று ஏகாந்தத்தில் திளைத்திருந்தார். அவ்வப்போது தோன்றிய உணர்வுகளை கவிதையாக எழுதிக் கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை., ஆச்ரமத்தில் காலை உணவுக்கான நேரம் கடந்து விட்டது. உடனடியாக ஆச்ரமத்திற்கு விரைந்தார்.அங்கே எல்லோரும் உணவு உண்டு விட்டு ஒருவர் பின் ஒருவராக வெளியே வந்து கொண்டிருந்தனர். அதனால் நடராஜன் தயக்கத்துடன் ஒதுங்கி நின்றார். அங்கிருந்தவர்களில் ஒருவர், “ஏன் இங்கேயே நிற்கிறீர்கள் உள்ளே இலை போடப்பட்டு உங்களுக்கு உணவு தயாராக இருக்கிறது.. பகவான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். உள்ளே செல்லுங்கள்” என்றார்.நடராஜன் உள்ளே சென்றார். பகவான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நடராஜனுக்கும் இலை போடப்பட்டிருந்தது. சாப்பிடுமாறு அங்குள்ளோர் வலியுறுத்தவே கூச்சத்துடன் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் உணவை உண்டு விட்டு கை சுத்தம் செய்வதற்காக பகவான் எழுந்தார்.பகவான் எழுந்து நிற்கும்போது தாம் அமர்ந்திருப்பது சரியன்று என்று நினைத்தார் நடராஜன். அதே சமயம் இலையிலிருந்து எழுந்தால் மீண்டும் அமர்ந்து உண்பது நியதிப்படி சரியல்ல என்றும் எண்ணியதால் இருக்கையிலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தன் உடலை உயர்த்தினார்.அதைப் பார்த்த பகவான், “வந்த வேலையைப் பார்” என்று சொல்லி விட்டு நகர்ந்தார். ”சாப்பிடுவதற்காக வந்த நீ சாப்பிடு. அதை விட்டு விட்டு இந்த மாதிரி எல்லாம் எழுந்து நின்று எனக்கு மரியாதை செய்ய வேண்டியதில்லை” என்று பகவான் சொன்னதாக உணர்ந்தார், நடராஜன். ஆகவே மீண்டும் சரியாக இலை முன் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார். அதே சமயம் பகவானையே பார்த்துக் கொண்டிருந்தார். சமையற்கூட வாசல் தாண்டிய பகவான் திரும்பி நடராஜனை உற்றுப் பார்த்தார். பின் மீண்டும், “வந்த வேலையைப் பார்” என்று சொல்லி விட்டு படி இறங்கினார். நடராஜனுக்கு ஒரே திகைப்பு. பகவான் எதற்காக மீண்டும் அப்படிச் சொன்னார் என்பது தெரியாமல் குழம்பினார். “ஓ.. நாம் சாப்பிடுவதை விட்டு விட்டு பகவானை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதைத் தான் பகவான் அப்படிச் சொல்கிறாரோ, ஒருவேளை கவிதை எழுதிக் கொண்டிருந்தோமே, அதை பாதியில் விட்டு விட்டு சாப்பிட ஓடி வந்து விட்டோம். அதைத் தான் சொல்கிறாரோ என நினைத்துக் குழம்பினார். பின் உணவை உண்டு விட்டு மீண்டும் மலைமேல் சென்று கவிதை எழுத ஆரம்பித்தார். மதியம் ஆச்ரமம் வந்தவர், உணவு உண்டு விட்டு பகவானின் ஹாலில் போய் அமர்ந்தார். அப்போது பகவான் இவரை மீண்டும் உற்றுப் பார்த்தார். பின் மறுபடியும், “வந்த வேலையைப் பார்” என்று சொன்னார்.. பகவான் ஏன் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்கிறார் என்பதும் தெரியவில்லை. பகவானிடம் விளக்கம் கேட்கவும் தயக்கமாக இருந்தது ஆகவே அதுபற்றிச் சிந்தித்து பேசாமல் அமர்ந்திருந்தார்.”ஓ.. நாம் எதற்கு அருணாசலம் வந்தோம்? கவிதை எழுதவா? இல்லை அருணாசலரை தரிசிக்க. பகவானின் உபதேசம் பெற. அதை விடுத்து எதை எதையோ செய்கின்றாய் என்பதைத் தான் பகவான் “வந்த வேலையைப் பார்” என்று சொல்லி குறிப்பால் உணர்த்துகிறார் என்று நினைத்தார்.சில நாட்கள் ஆச்ரமத்தில் தங்கினார். பின் தன் சொந்த ஊரான புன்னை நல்லூருக்குச் சென்றார். ஆனால் அங்கேயும் இருப்புக் கொள்ளவில்லை. “வந்த வேலையைப் பார்” என்ற குரல் அவருள் ஒலித்துக் கொண்டே இருந்தது தன் வேலையை விட்டு இட்டு ஆச்ரமத்துக்கே வருவதாக பகவானுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் பகவானின் சம்மதம் கிடைக்கவில்லை.தினந்தோறும் தனிமையால் அமர்வார். தியானத்தில் ஆழ்வார். பகவானைப் பற்றிச் சிந்திப்பார்.ஒருநாள் “வந்த வேலையைப் பார்” என்று பகவான் சொன்னதன் உண்மையான பொருள் அவருக்கு விளங்கியது. “உடல் தாங்கி வந்திருக்கும் நீ இந்த உடலல்ல. ஆத்மா என்பதை உணர். அதற்காகத் தான் நீ வந்திருக்கிறாய் என்பதைப் புரிந்து அந்த உண்மையில் நிலைத்திரு” என்பதையே பகவான் உபதேசமாக தனக்கு உணர்த்தியாக உணர்ந்தார். அதன்பின் தன் சொத்துக்களை எல்லாம் விற்று விட்டு ரமணாச்ரமம் வந்தார். பகவானின் அனுமதி பெற்று துறவறம் பூண்டார். ”சாது ஓம்” ஆனார். ’ஜானகி மா’ ஆச்ரமத்தில் சில காலம் வசித்தவர், பகவானின் மறைவுக்குப் பின் அருணாசலத்தையே சரண் அடைந்தார். அங்கேயே வாழ்ந்து நிறைவெய்தினார்.