கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Friday, June 6, 2014

குறுஞ்சாமிகளின் கதைகள்

குல சாமிகள் என்றும், குறுஞ்சாமிகள் என்றும் நாம் அறிந்திருக்கிற சிறு தெய்வங்களின் வரலாற்றைத் தொகுத்துத் தந்திருக்கிற நூல் இது. கல்கி வார இதழில் இக்கதைகள் சனங்களின் சாமிஎன்ற பெயரில் தொடராக வந்திருக்கின்றன. திருநெல்வேலியைச் சுற்றியிருக்கிற கிராமங்களில் வணங்கப்படுகிற குறுஞ்சாமிகளின் கதைகள் நம்மை மீண்டும் கிராமங்களை நோக்கிய பயணத்துக்கு இட்டுச் செல்கின்றன. இந்தச் சாமிகள் எல்லாம் மக்களோடு மக்களாக வாழ்ந்து, ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்கள் மனதில் தெய்வ நிலை எய்தியவர்களாகவே இருக்கிறார்கள். சமுதாயத்தில் விளிம்பு நிலையில் வாழ்கிற மக்களுக்கான தெய்வங்களாக, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்கிற கடவுள்களாகவே இந்தக் குறுஞ்சாமிகள் இருக்கிறார்கள்.
தன்னைப் போன்ற மக்களுக்காக வீரச்செயல் புரிந்து மாண்டு போன வீரன், அதர்மத்துக்குப் பலியான பெண், தவறுதலாக கொல்லப்பட்ட ஒரு மனிதன் இவர்களைப் போன்றோரே பின்னாளில் கடவுள்களாக மாறி, ஒரு பகுதி மக்களால் குல தெய்வமாக வரிக்கப்பட்டு வணங்கப்படுகிறார்கள். கழனியூரன் தொகுத்திருக்கும் இந்தக்கதைகள், ஆன்மீகம் குறித்தான பல சர்ச்சைகளை நம்முள் தூண்டிவிடுகின்றன. இன்று இது போன்ற குறுஞ்சாமிகளின் வழிபாடு என்பது வெகுவாகக் குறைந்து போய், ஒரு சாரார் மட்டுமே செய்கின்ற செயலாக மாறிவிட்டிருக்கிறது. அதுவும் நகரத்து மக்களுக்கு இது போன்ற ஒரு மரபோ, தங்கள் வேர்கள் குறித்த ஒரு ஞானமோ பெரும்பாலும் இருப்பதில்லை. வரலாற்றின் பின் பகுதியில் வந்து சேர்ந்துவிட்ட பெருங்கடவுள்களை வழிபடுவதே இப்போது எங்கும் காணக்கிடைக்கிறது.

மூதாதையரை வணங்கும் பண்பாடு, உலகின் மூத்த நாகரிகங்கள் எல்லாவற்றிலும் இருந்த ஒரு விஷயமாகவே இருக்கிறது. அது இன்று படிப்படியாக அழிந்து போய்விட்டது என்றே சொல்லலாம். தென் தமிழகத்தில் வழங்கப்படுவது போல இந்தக் குறுஞ்சாமிகளின் வழிபாடு மற்ற பகுதிகளில் அவ்வளவாக இல்லை என்பது என் கருத்து.

கதைளைச் சொல்வதோடு, அதில் பின்னிப்பிணைந்திருக்கும் அக்காலத்து மக்களின் வாழ்வு முறை, நம்பிக்கைகள், கலாச்சாரம், அவர்களின் கோபம், ஆசைகள், வீரம், காதல் என்று பல செய்திகளை முன்வைக்கிறார் ஆசிரியர். மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, பட்டினி கிடந்தவனின் சாமியும் மழையிலேயே நனைந்தது; வெயிலிலேயே காய்ந்தது; பட்டினியும் கிடந்தது. சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள், இம்மக்களின் அன்றாடப் பசி தீர்க்கும் பொருட்களாகவே இருந்திருக்கின்றன. சாமிகளின் உருவங்கள், பெரிய கலை வேலைப்பாடுகள் இன்றி கைக்குக் கிடைத்த பொருளகளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன. மாட்டுச்சாணத்தின் மேல் நான்கைந்து அருகம்புல்லை வைத்து உருவாக்கப்பட்டு விடுகிறது ஒரு தற்காலிக சாமி. இந்த வழக்கம் தமிழகக் கிராமங்களில் இன்னும் பின்பற்றப்பட்டு வருகிறது.

தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டவர்கள் செய்ததாகச் சொல்லப்படுகிற அதிசயங்கள், பிற்காலச் சேர்க்கைகளாகக் கொள்ளப்படலாம். கதைகளுக்கு சுவாரஸ்யம் கூட்டும் பொருட்டும் இணைக்கப்பட்டிருக்கலாம்.

பிற்சேர்க்கையாக தான் மெற்கொண்ட களப்பணிகள் குறித்தும், குறுஞ்சாமிகளின் கதைகள் தேடியலைந்த கதையையும் எழுதி இருக்கிறார் கழனியூரன். சுமார் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் படித்து முடித்துவிடக்கூடிய ஒரு கதையை தெரிந்து கொள்ள இவர் பட்டிருக்கும் வேதனைகள், இவர் கொடுத்திருக்கும் உழைப்பு, இவர் செலவிட்டிருக்கும் நேரம், நிச்சயமாக பெரும் மரியாதைக்கு உரியவை. கற்பனையில் உதித்துவிடக்கூடிய கதைகளைக் காட்டிலும் உயிரோட்டமும், வாழ்க்கையும் கலந்திருக்கும் இக்கதைகள் அடுத்தத் தலைமுறைக்கு நம் வேர்கள் குறித்தான ஒரு அறிமுகப் பதிவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

-சேரல்
http://puththakam.wordpress.com/

2 comments:

POSTAL PHOENIX said...

நல்ல முயற்சி நண்பரே உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள் ! நன்றிகள் நண்பரே. நட்புடன்,இராஜா மயிலாடுதுறை

mercy said...

Your article has a very unique and reliable information..
Thanks for the article.
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News