கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Sunday, July 28, 2013

மண்பாசம் நூல்குறித்துஉங்கள் எழுத்து முதன் முதலில் எனக்கு அறிமுகம் ஆனது "மறைவாய் சொன்ன கதைகள்" மூலம் தான். அதற்கு முன்பு நான் "கி.ரா"வின் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" படித்திருக்கிறேன்.

அதன் பின்பு உங்கள் நூல் ஏதும் படிக்க கிடைக்கவில்லை. சென்ற வாரம் நூலகத்தில் உங்கள் "மண்பாசம்" புத்தகம் கிடைத்தது. கொண்டு வந்து படிக்க படிக்க மனசு பாரமாகி கொண்டே சென்றது. ஒவ்வொரு கட்டுரையும் மிக அருமையாகவும் நாம் கண்முன்னே இழந்து விட்ட மரபுகளின் வலியாகவும் இருந்தது. எனக்கு சிலசமயங்களில் எங்கள் கிராமத்தில் நடைபெறும் சடங்கு சம்ப்ரதாயங்களை பார்க்கும் பொது ஏதோ முட்டாள்தனமாக தோன்றியது உண்டு. அனால் உங்கள் நூலை படித்த போது அவையெல்லாம் இந்த எளிய மக்களின் மகத்தான நம்பிக்கை என்று புரிந்தது, இந்த எளிய கிராமத்து மக்கள் பேசும் வட்டார மொழியை பண்டிதர்கள் என்னும் படித்தவர்கள் கேலி செய்கிறார்கள் என்றும் கூறி இருப்பது மிகவும் உண்மையான கூற்று, இன்னும் நாம் அவர்களை (நானும் கூட) புரிந்து கொள்ளாமல் ஒதுக்கியே வைத்து இருக்கிறோம்.

அனால் அவர்களின் சொல்லாடல் கலைநயம் மிக்கதாகவும் பொருள்பொதிந்தும் இருப்பது உங்கள் நூலை படித்த பின்பே உரைத்தது.

"நொண்டி ஆட்டின் நன்றி" கட்டுரையில் தன்  எஜமானர் தன்னை எப்போதும் மேச்சலுக்கு தோளில் தூக்கிகொண்டு சென்றதை நன்றி மறக்காமல், நீண்ட காலத்துக்கு பிறகு திரும்பி வந்து அவருக்கு உதவும் அந்த ஆட்டின் நன்றி எத்தகைய மேன்மையானது. அத்தகைய நன்றி உணர்வு இன்றைய மக்களுக்கு இருந்தால் இவ்வுலகில் ஏது துன்பம்?

காதலன், காதலியின் சாமர்த்தியமான புதிர்கள் ரசிக்கும் வண்ணம் மிக அருமையாக இருந்தது.புதிர் போட்டு அதை விடுவிக்கும்  ஆணையே திருமணம் முடிக்கும் பெண்ணின் நுட்பம் வியக்க வைக்கிறது.

செல்வம் எப்போதும் நிலையல்ல என்பதை "தூண்டில்காரன்" கதை மிக உண்மையாக சொல்கிறது. சிறிய தூண்டில் நூலின் மூலம் அவ்வளவு பெரிய இரும்பு பெட்டியில் கிடைத்த தங்க காசுகள், இறுதியில் அந்த இரும்பு பெட்டியை விற்றால் தான் ஜீவனம் நடத்து முடியும் என்னும் நிலையில் அதை இரும்பு சங்கிலிகள் கொண்ட தராசில் வைக்கும் போது இரும்பு சங்கிலி அறுந்து விழுந்துவிடுவதும். "அன்று ஒரு தூண்டில் நூலின் பலத்தில் கிடைத்த செல்வம், இன்று இரும்பு சங்கிலியை அறுத்து கொண்டு போகிறது" என்று அந்த தூண்டில்காரன் சிரிக்கும் சிரிப்பு, வாழ்க்கை நம்மை பார்த்து சிரிக்கும் நமுட்டு சிரிப்பாகத்தான் எனக்கு தோன்றியது.

"இழப்பு" குறித்த பாடல்கள் இழப்பு தரும் வலியையும் அதனால் ஏற்படும் உரிமை இழப்பையும் பாதுகாப்பினமையும் மிக அருமையாக வெளிப்படுத்தி உள்ளது.

இயற்கையின் படைப்பு குறித்த சந்தேகத்தையும் ஐயத்தையும் "படைப்பின் ரகசியம்" சிறுகதை மிக தெளிவாக கூறுகின்றது

குலுக்கை செய்யும் வேளாரின் வாழ்கை தான் எவ்வளவு இனிமை, இன்று குலுக்கைகளையும் பார்க்கமுடிவதில்லை வேளாரையும் பார்க்கமுடிவதில்லை

வாழ்வினை எதிர்கொள்ளும் போது ஏற்படும் ஏற்படும் சவால்களை பல்வேறு பழமொழிகள் மூலம் கூறும் கலைநயம் வியக்க வைக்கிறது. "வெற்று வாய் வார்த்தைகள்" என்று படித்தவர்கள் இதை ஒதுக்கிவிட கூடாது என்பது மிக உணமையான் அக்கறை.

வசவு மொழியினை கூட நம் மக்கள் மிக லாவகமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு, ஒரு தாய் தன மகனை "நாசமத்து போற பயலே" என்று திட்டுவதே போதும்.

முத்துப்பட்டன் என்னும் பிராமணன் அருந்ததியினர் வீட்டு பெண்களின் மீது கொண்ட காதலால், அவர்கள் வீட்டிலே தங்கி மாட்டுக்கறி உண்டு, சாணி சகதிகளை அள்ளி தன காதலை நிரூபித்து அவர்களை மணமுடிப்பது காதலின் மேன்மையை காட்டுகிறது. பின்னர் அவர்கள் மூவரும் ஒரே சிதையில் எரிந்து இறப்பது மனதை துவள செய்கிறது. அனால் ஒரு பிராமணன் அருந்ததி பெண்களை மணமுடிக்கும் முற்போக்கான  இந்த கதையை பல்வேறு "ஒட்டு கதைகளை" சேர்த்து  முத்துபட்டன் ஏன் அருந்ததி பெண்களை மணக்கிறான் என்று ஒரு சாக்கு கூறி தங்கள் சாதியின் அரசியலை காட்டிவிடுகிறார்கள் பிராமணர்கள், இது கொடிய சாதி வன்மமாகவே தெரிகிறது.

வள்ளல் சீதக்காதி குறித்த "வெள்ளிதட்டும் தங்கதட்டும்" கதை அவரின் கொடைவள்ளல் தன்மையை மேலும் அதிகரிப்பதாகவே அமைந்திருப்பது சிறப்பு.

வீட்டிற்கு வரும் மணமகள் குணம் அறிய அவங்கள குத்துவிளக்கு ஏற்ற சொல்லி பார்ப்பதும், சுண்ணாம்பு கொண்டு வரசொல்லி  சோதிப்பதும் ரசிக்கும் வண்ணமாகவும் மதிநுட்பம் மிக்கதாகவும் உள்ளது

யார் ஒருவன் மக்களுக்கு தான தர்மங்கள் நிறைய செய்கிறானோ அவன் கடவுள் நேசிக்கும் மனிதர்களின் பட்டியலில் முதலில் இருப்பான் என்பதை "இரு பட்டியல்கள்" கதை மிக அழகா உணர்த்தியது.

அளவுகோல்களின் வருகைக்கு முன்பு மக்கள் தம் உடல் உறுப்புகளை கொண்டே அளவுகளை வரையறுத்திருப்பது சிறப்பு. குறிப்பாக மழை பெய்த அளவை குறிக்கும் சொற்கள் மிக அருமையாக இருக்கிறது.
 
 வட்டார வழக்கில் தலை, கை, காது, வயிறு, நாக்கு குறித்த பழமொழிகள் வாழ்வின் நிகழ்வுகளோடு மிக கச்சிதமாக பொருந்தி உள்ளன

கர்ணனின் கொடை வள்ளல்லை  குறித்த கதைகள் பிறர்க்கு உதவும் குணத்தை உயர்த்தி காட்டுகிறது. தானத்தில் சிறந்தது அன்ன தானம் என்பதை கர்ண மகாராசர் தன்னுடைய மரணத்தை அடையும் நேரத்தில் தெரிந்து கொண்ட கதை அருமை.

"அறுவடையாகும் கிராமிய பண்பாடு" கட்டுரை என்னையும் இந்த சமுதாயத்தையும் நவீன விவசாயத்தையும் குற்ற உணர்ச்சி கொள்ள செய்கிறது.எல்லாமே இயந்திரமயம் ஆகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், அறுவடைக்கு உரிய மரியாதை இல்லை. விதை நெல்லை சேகரிப்பது முதல் அறுவடை செய்யும் காலம் வரை உள்ள செயற்பாடுகள்  வியக்க வைக்கிறது.
"அறுவடை என்பது பந்தம் வளர்க்கும் திருவிழா" என்ற கூற்றை வேறு எந்த வாக்கியத்தை கொண்டும் ஈடு செய்ய முடியாது. அதே போல் " அறுவடை இயந்திரங்கள் நெற்பயிரைய் மட்டும் அறுப்பதில்லை, கிராமத்து பண்பாட்டு வேர்களையும் சேர்த்தே அறுவடை செய்கின்றன" இந்த வரியை படிக்கும் போது மனம் குற்ற உணர்ச்சியால் தவிக்கிறது.

நம் முன்னோர்கள் மரபாக செய்து வந்த "ஊடு பயிர்" முறை இன்று முற்றாக அழிந்து விட்டு இருப்பது கவலை அளிக்கிறது. அவர்கள் தங்கள் அறிவாலும் அனுபவத்தாலும் கண்டறிந்த வேளாண் தொழில்நுட்பங்களை நாம் மதித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சொல்ல வேண்டும் என்ற அக்கறை, நிச்சயம் இன்றைக்கு மிக தேவை.

மண்பாசம் கட்டுரையில் அறுவடையை உழவர் திருவிழாவாகவும், விதைப்பை வீட்டு விசேஷமாகவும் கொண்டாடுகிறார் என்பது நெகிழ செய்கிறது. வயலுக்கும் உழவனுக்கும் உள்ள உறவை கணவன் மனைவி ஊடலுக்கு உவமையாக வள்ளுவர் கூறி இருப்பது சிறப்பான பொருத்தம்

இந்த நூலின் ஒவ்வொரு வரியிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது ஐயா.
அன்புடன் - தினேஷ்குமார் 

வல்லிக்கண்ணன் வரலாறு

முன்னுரை

மண்ணில் வாழ்கின்ற மக்களில் சிலர் மட்டும் வரலாறாக வாழ்ந்து காட்டுகிறார்கள்.  சிலர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்.  அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர்தான் வல்லிக்கண்ணன்.
தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று ஒரு தனி தடம் பதித்தவர் வல்லிக்கண்ணன்.  வாழ்கின்ற காலமெல்லாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழ் இலக்கியம் பற்றியே பேசியும் எழுதியும் vaaவாழ்ந்தவர்.  சுமார் 17 வயதில் பிடித்த பேனாவை தன் உயிர் பிரியும் வரை அவர் கீழே வைக்கவே இல்லை.  அவர் வாழ்ந்த நாட்களில் எழுதாத நாளெல்லாம் “எதையோ இழந்த நாள்” என்று வாழ்ந்தார்.
பேச்சாலும், எழுத்தாலும், செயல்பாடுகளாலும் தமிழ் இலக்கியதிற்கு நாளும் தொண்டு செய்த நற்றமிழ் அறிஞர் அவர்.  ilஇலக்கியத்தின் எல்லா வகைமைகளிலும் சுவடு பதித்தவர்.  கவிதை, சிறுகதை, நாவல், திறனாய்வு, வரலாறு, நாடகம் என்று அனைத்து வகைமைகளிலும் எழுதிக் குவித்தவர் வல்லிக்கண்ணன்.
தன் வாழ்வையே ஒரு இலக்கிய வேள்வியாக ஏற்றுக்கொண்டார்.  படிப்பதிலும் எழுதுவதிலும் அளவில்லாத ஆர்வம் கொண்டு அதற்காகவே தன் இல்வாழ்வையே தத்தம் செய்து கொண்ட தியாக தீபம் அவர்.
பணத்திற்கும் பதவிக்கும் ஏன் புகழுக்கும் கூட மயங்காதவர்; விலை போகாதவர்.  தன் வீடு, தன் பெண்டு, தன் பிள்ளை என்று கூட வாழாதவர்.  தனக்கென்று வாழ்வில் எந்த சொத்து சுகத்தையும் சேர்த்து வைக்காமல் வாழ்ந்து மறைந்த தியாகி வல்லிக்கண்ணன்.
மரபான தமிழ் இலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் ஒரு சேர புலமை பெற்றவர். “இப்படி தமிழ் இலக்கியத்திற்காகவே ஒரு மனிதன் வாழ முடியுமா?” என்று வாழ்ந்து காட்டியவர்.
இளைஞர்களின் படைப்புக்களைத் தேடிப்படிப்பிடித்துப் படித்து அவர்களுக்கு உடனுக்குடன் கடிதங்கள் எழுதி உற்சாகப் படுத்தியவர்.  தான் வாழ்கின்ற காலத்தில் மூன்று தலைமுறை எழுத்தாளர்களுடன் தொடர்பும், நட்பும் வைத்திருந்த சாதனையாளர்.
மிக, மிக எளிமையாக வாழ்ந்து காட்டியவர்.  ஆடம்பரம் என்ற சொல்லையே தன் வாழ்நாளில் அறிந்திராதவர். உருவத்தால் மிகவும் மெலிந்தவர்.  ஆனால் நெஞ்சுறுதியில் மிகவும் உயர்ந்தவர்.  தாழ்ந்த குரலில் பேசினாலும் வாழ்வில் யார்க்கும் தலை வணங்காதவர்.
இலக்கியப் பணி ஒன்றையே தன் வாழ்வுப் பணியாக கொண்டு வாழ்ந்து காட்டியவர்.  தன் படைப்புகளை சந்தையில் விலை பேசி விற்க விரும்பாதவர்.  ஆனால் ஒரு தேனீயைப் போல சுழன்று சுழன்று சுறுசுறுப்பாக தமிழ் இலக்கியத்திற்காக உழைத்தவர்.
நண்பர்களை மதிப்பதிலும், இளைஞர்களை உற்சாகப்படுத்துவதிலும் இவருக்கு இணை இவரே!  காலங்காலமாய் ஊற்றெடுத்துப் பொங்கிப் பிரவாகமாக வரும் அனைத்து தளத்தின் சிற்றிதழ்களையும் அலுக்காமல் சலிக்காமல் படித்து அப்பத்திரிகைகளைப் பற்றிய தனது அபிப்ராயங்களை உடனுக்குடன் பதிவு செய்த பண்பாளர்.
அனேக எழுத்தாளர்களுக்கு வல்லிக்கண்ணன் தன் வாயால் பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார்.  வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் பெயர் சூட்டியவர் இவரே.
பல எழுத்தாளர்களுக்கு எப்படி இலக்கியம் படைக்க வேண்டும் என்று அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தவர்.  ஒரு தாயின் ஸ்தானத்தில் இருந்து தன் இலக்கியப் பிள்ளைகளுக்கு தமிழ் சுவையை ஊட்டியவர்.  ஒரு தந்தையின் இடத்தில் இருந்து தன் இலக்கியக் குழந்தைகளை தட்டிக் கொடுத்து வளர்த்தெடுத்தவர்.  ஒரு அண்ணனைப் போல பாசத்தோடும் தன் இலக்கியத் தம்பிகளின் விரல் பிடித்து நடை பழக்கியவர்.
இப்படி எண்ணற்ற புகழுக்குச் சொந்தக்காரரான வல்லிக்கண்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் வாய்ப்புக் கிடைத்ததை நான் ஒரு பேராகக் கருதுகிறேன்.  இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சாகித்திய அகதெமி நிறுவனத்திற்கு நன்றி கூறுகிறேன்.  எப்போதும் என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கும் திறனாய்வுத் தென்றல் ஐயா தி.க.சி அவர்களுக்கும் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

Friday, July 26, 2013

செவக்காட்டுச் சேதிகள்-2 பழமொழிகளில் மழை

மழைதான் வாழ்வின் ஆதாரம். மனித வாழ்வில், இந்தக் காலத்தில் தண்ணீர், ஆகாரத்தை அடுத்த இடத்தை வகிக்கிறது. மழையின் தேவையை, மழையின் சிறப்பை மக்கள் காலங்காலமாக உணர்ந்துதான் இருக்கின்றனர்.

தெய்வப்புலவர் திருவள்ளுவர், கடவுள் வாழ்த்துப் பாடிய பிறகு, வான் சிறப்பைத்தான் பாடினார். கடவுள் வாழ்த்தையும், வான் சிறப்பையும் சேர்த்து அதைத் திருக்குறளுக்கான பாயிரம் என்றும் அறிஞர் பெருமக்கள் கூறுகின்றார்கள்.

இளங்கோ அடிகள், தன் சிலப்பதிகார காவியத்தில், கடவுள் வாழ்த்துப் பாடாமல் மாமழை போற்றதும்! மாமழை போற்றுதும் என்று இயற்கையைப் போற்றித்தான் பாடியுள்ளார்.

செவ்வியல் இலக்கியங்கள் இப்படிச் சிறப்புற பதிவு செய்த மழையைப் பற்றிக் கிராமத்து மக்கள் தங்கள் பேச்சு மொழிகளில், பழமொழிகளில், வாழ்வியல் அனுபவத்தில் எப்படி எல்லாம் பதிவு செய்துள்ளனர் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் கூற விரும்புகிறேன்.

மழையின் முக்கியத்துவத்தை உணர்ந்த கிராமத்து மக்கள், மாரி அல்லது காரியம் இல்லை என்று கூறுகின்றார்கள். மாரி என்ற சொல் மழையைக் குறிக்கிறது. மாரி என்ற சொல்லை காளி என்ற தெய்வத்தைக் குறிக்கவும் பயன்படுத்துகின்றார்கள். மழையையே தெய்வமாகப் பாவித்த ஆதி மனிதனின் அடையாளமாகத்தான் மாரி என்ற சொல் மழையையும், கடவுளையும் குறிக்கிறது. முதலில் மனிதன் இயற்கையின் ஒரு கூரான மழையை வணங்கியுள்ளான் என்பதை நாம் எண்ணிப் பார்க்க இடமுள்ளது.

மழையை நம்பி வாழ்கின்ற சம்சாரிகளுக்குத்தான் மழையின் அருமையும் பெருமையும் தெரியும். மழையை மட்டும் நம்பி பயிர் செய்து வாழும் மக்களுக்கு மாதம் மும்மாரி மழை பெய்தால் யோகம்தான்.

சாதாரணத் தாவரங்களுக்கு பத்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு பத மழை பெய்தால் போதும் எந்த நீர் நிலைகளில் இருந்தும் நீர் பாய்ச்ச வேண்டிய தேவை இருக்காது. இந்த உண்மையைத் தான் மாதம் மும்மாரி என்ற தொடர் விளக்குகிறது.

அந்தக் காலத்தில் ராஜாக்கள் நம் நாட்டில் மாதம் மும்மாரி மழை பெய்கிறதா..? என்றுதான் முதலில் மந்திரிகளிடம் கேட்பார்களாம். மாதம் மும்மாரிப் பொழிகிறது ராஜா என்று பதில் கூறிவிட்டால் ராஜாவுக்கு நிம்மதி வந்து விடுமாம். மழை பெய்து செழித்து வெள்ளாமை விளைச்சல் வந்து விட்டால் போதும் மக்கள் சந்தோசமாக வாழ்வார்கள் என்ற உண்மையைத்தான் இச்செய்திகள் பதிவு செய்துள்ளன.

மழையைப் பற்றியே நிறைய பழமொழிகளை மக்கள் கூறுகின்றார்கள். மழைக்கும் சூலுக்கும் காலம் ஏது? என்று கேட்கிறது ஒரு பழமொழி. கருக்கொண்ட மேகம் எப்போது எங்கு இறங்கிப் பெய்யும்? என்று தீவிரமாக ஆராய்ச்சி செய்த கிராமத்து மக்கள், மழை எப்போது, எந்த அளவு பெய்யும் என்பதைக் கணிக்க முற்பட்டுத் தோற்றுப் போனபின் இந்தப் பழமொழியை உருவாக்கி இருக்கின்றார்கள். மழையைப் போலவே கருவுற்ற பெண்ணும் எப்போது பிரசவிப்பாள் என்பதைக் கணித்துக் கூற முடியாது என்பதை உணர்ந்த கிராமத்து மக்கள் உண்டாக்கிய பழமொழிதான் மழைக்கும் சூலுக்கும் காலம் ஏது? என்பதாகும்.

கோடை காலத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். அப்போது கடுமையான மின்னலும் மின்னும். ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும்; அடைச்ச கதவு திறக்காதபடி அடை மழை பெய்யும்.; கார்த்திகை மாதம் கன மழை பெய்யும் என்று பழமொழிகள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்திருக்கிறது. இப்படிப் பெய்யும் மழையைத்தான் அடை மழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்று கூறுகின்றார்கள்.

கோடைகாலத்தில் அந்தி நேரத்தில் மழை பெய்யத் தொடங்கினால் அந்தக் காலத்தில் இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்திருக்கின்றது. அந்தி மழை அழுதாலும் விடாது! என்ற தொடர், கோடை காலத்தின் இரவு நேரத் தொடர் மழையைக் குறிக்கிறது.

நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே,

சேற்று நன்கு சேற்றில் ........

ஏற்றடிக்குதே..

கேணி நீர் படுசொறித் தவளை

கூப்பிடுகுதே! என்ற நாட்டுப் புறப்பாடல் மழை வருவதற்கான அறிகுறிகளைப் பற்றிப் பேசுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து மேகம் திரண்டு வருவதை எங்கள் பகுதி மக்கள் மேகம் கொம்பில் முறுக்குகிறது என்று கூறுவார்கள். குளிர்ந்த தென்றல் காற்று சுற்றிச் சுற்றி வீசினால் மழை வரும் என்று நாட்டுப்புறத்து மக்கள் கணித்திருக்கிறார்கள்.

எறும்புகள், பள்ளமாக உள்ள இடத்தில் இருந்து தன் உணவுகளைத் தூக்கிக் கொண்டு மேடான இடத்திற்குச் சாரை சாரையாகச் சென்றால், விரைவில் மழை வரும் என்று கூறுகிறார்கள். எறும்புகளுக்கு மழையின் வருகையைப் பற்றிய முன் அறிவிப்புகள் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்று இன்றைய அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

நிலநடுக்கம் ஏற்பட இருப்பதைச் சில பறவைகளும் , நாய் போன்ற விலங்குகளும் முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

நண்டு மேடான இடத்திற்கு இடம் பெயர்வது தவளை சத்தம் போடுவது போன்றவை. மழை வரும் என்பதற்கான முன் அறிவிப்பாக கிராமத்து மக்கள் கருதி இருக்கிறார்கள். தவளைகள் போடும் சத்தத்தை கிராமத்து மக்கள் தவளை, உடைக்கட்டா... தவக்கட்டா... என்று மழை கூறுவதாகக் கற்பனை செய்து கூறுகின்றார்கள். அதாவது வயல் வரப்புகள் எல்லாம் உடைத்துவிடும் அளவோடு மழை பெய்யப் போகிறது என்று தவளை ஆளுடம் சொல்வதாகக் கூறுகிறார்கள்.

கோடை காலத்தில் ஈசான மூலையில் மின்னல் மின்னினால், விரைவில் நல்ல மழை பெய்யும் என்று கிராமத்துப் பெரியவர்கள் கூறுகின்றார்கள். ஈசானத்துல மழை கால் ஊன்றி இறங்கிப் பெய்ய ஆரம்பித்தால் ஈசானத்தில் இறங்குன மழை இருந்து பெய்யும் என்று கூறுகின்றார்கள்.

கார்த்திகை மாதம் பெய்யும் கனமழை கார்த்...... திருநாளுடன் நின்றுவிடும் என்று கூறுகின்றார்கள். கார்த்திகைத் திருநாள் அன்று கார்த்திகை தீபம் ஏற்றினால், மழை வெறித்துவிடும் என்று கிராமத்து மக்கள் நம்புகிறார்கள். விளக்கிட்டபின் மழை கிழக்கிட்டுப் போகும் என்று ஒரு பழமொழி கூறுகின்றார்கள். விளக்கு என்பது கார்த்திகை விளக்கு அதாவது கார்த்திகை தீபம் என்று பொருள் கொள்ளலாம். கிழக்கிட்டு என்றால் மெலிந்து அதாவது குறைந்து போகும் என்று பொருள் கொள்ளலாம். கார்த்திகையின் பின் பகுதியில் மழை வெறித்துப் பொசுங்கலிகத்தூவும். அதைக் கெப்பேரி என்ற வட்டார வழக்குன சொல்லில் எங்கள் பகுதியில் கூறுகிறார்கள். கெப்பேரி முடிந்ததும் மார்கழி மாதம் பனி பெய்ய ஆரம்பித்துவிடும்.

புரட்டாசியில் நாற்றுப் பரவினால் ஐப்பசி, கார்த்திகை மாத மழையால் யார் நன்றாக நீர் பாய்ந்து செழிந்து வளரும். மார்கழி மாதப் பனியில் கதிர் தலை காய்ந்து விளையும். தை மாதம் கதிர் அறுத்துப் பொங்கலிடுவார்கள்.

எவ்வளவு வெயில் என்றாலும் அலைந்து திரிகிற மக்கள் மழையில நனைய மாட்டார்கள். ஆயிரம் வரவைத் தாங்களிடம் ஒரு பாராட்டைத் தாங்க முடியுமா? ஆயிரம் வெயிலைத் தாங்கலாம். தலை ஒரு மழையைத் தாங்குமா..? என்று கேட்கிறார்கள் கிராமத்து மக்கள் பாராட்டைத் தாங்க முடியாது என்று கூறுகிறார்கள். அதற்குச் சான்றாக மழையையும், வெயிலையும் கூறியுள்ளார்கள்.

இன்றைக்கு நாகரிக மனிதனால் ஒரு வசவைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், அவனால் ஆயிரம் புகழைத் தாங்கிக் கொள்ள முடிகிறது. இதுதான் கிராமத்தானும், நகரத்தானுக்கும் உள்ள வித்தியாசமாகும்.

மழை முகம் பாராத பயிரும்; தாய் முகம் பாராத பிள்ளையும் ஒன்று என்று கூறுகிறது ஒரு பழமொழி. மழைக்கு முகம் உண்டு என்று கூறும் கிராமத்து மக்களின் ரசனை அனுபவிக்கத் தகுந்ததாகும். மழை கால் ஊன்றி விட்டது என்ற வாக்கியத்தில் மழைக்கு கால் இருப்பதாகக் கூறி இருக்கும் கற்பனையும் ரசனையானதாகும். பனிக் கண் திறந்தால் மழைக் கண் அடைக்கும் என்று கூறுகிறது ஒரு பழமொழி. மழைக்கு கண் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். மழையை ஒரு உயிருள்ள உருவமாகப் பார்த்துப் போற்றிய கிராமத்து மக்களின் அன்பை என்ன சொல்ல...

ரொம்பக் காலமாக மழையே பெய்யவில்லை என்றால் கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் கிராமத்து மக்களிடம் உள்ளது.

தொடர்ந்து தேவைக்கு அதிகமாக மழை பெய்து கொண்டே இருந்தால் தீப்பந்தங்களில் தீப்பற்ற வைத்துக் காட்டி...... மழை நின்று விடும் என்ற நம்பிக்கையும் கிராமத்து மக்களிடம் உள்ளது.

கடித இலக்கியம் -11 கி.ராஜநாராயணன் தி.க.சி .க்கு

அருமை நண்பர் தி.க.சி அவர்களுக்கு.,

நலம். இந்தக் கடிதத்தை அன்பர் கழனியூரனுக்குத்தான் எழுத ஆரம்பித்தேன். பேனா உங்கள் பக்கம் திரும்பி விட்டது !

“ நிச்சயதார்த்த அழைப்பிதழ்” க்கு ஒரு பதில் போடுவோமே என்று உட்கார்ந்தேன் (எழுத்து சரியாக இருக்காது; சாய்ந்து கொண்டே எழுதுகிறதுனால்; காரணம் பிறகு சொல்கிறேன்)

நிச்சயதார்த்தம் உங்கள் தலைமையின் கீழ் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இப்பொ நான் உங்கள் தலைமையின் கீழ் நின்று பேசுகிறேன். மானசீகமாக கலந்து கொண்டு.

நிச்சயதார்த்தம் நடக்கும் போது சொந்த பந்தங்கள் மட்டுமே இருக்கும். திருமணத்துக்குத் தலைமை என்று வரும் போதுதான் மற்றவர்கள் வருவார்கள்.

இப்பொ இது ஒரு படி மேல்.

பேரா.பஞ்சு (பஞ்சாங்கம்) வீட்டில் இரண்டு கலியாணங்கள் நடந்தன. ரெண்டும் காதல்கலியாணங்கள். தமிழ் முறைப்படி, பெற்றவர்களுக்குத் தெரியாமல் உடன்போக்கு போய் மணமக்கள் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் பஞ்சு வீட்டுக் கலியாணங்கள் அப்படி அல்ல ! காதல்கலியாணங்கள் . சாதி விட்டுச் சாதியில். அதுவும் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் சேர்ந்து மகிழ்ச்சியுடன் ஊர் அறிய மேளம் கொட்டி நடந்தன அந்தத் திருமணங்கள் . மாப்பிள்ளைகள் பொண்ணுகள் நால்வரும் ஒரே தொழில் செய்யும் மருத்துவர்கள். அவர்களே தங்களுக்குள் ஒரு ஈக்குஞ்சுயைக் கூட கூப்பிடாமல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். கல்யாணம் மட்டும் தடபுடல். ரெண்டுக்கும் நான்தான் முன்னிலை வகித்தேன். காலநிலைக்கு ஏற்ப பிள்ளைகளும் மாறுகிறார்கள்; நாமும் மாறுகிறோம்.

கழனியூரன் வீட்டு முதல் கலியாணத்திலும் இப்பொ நடக்கும் திருமண விசேடத்திலும் என்னால் வந்து கலந்து கொள்ள முடியாமல் ஆனது எனது துரதிர்ஷ்டம்தான்.

என் மேல் முதுகில் தோன்றிய சிறிய கட்டி ( பிளவை ) ஒரு மாதமாகப் படுத்தியது. ரெத்தமும் நீரும் வடிந்து கொண்டிருந்தது ( சீழ் இல்லை ) . வலியும் கூட அவ்ளவாக இல்லை.

என்ன செய்யப் போகிறதோ என்றுயிருந்தோம். படுக்க முடியாது; ஒரு பக்கமாகவே இருந்து தூங்க வேண்டும். சிகிச்சை தொடர்ந்தது. நீர் வடிதல் நின்றால் அறுத்து விடலாம் என்று காத்திருந்தோம். மேல் கீழ் ஆகாமல் புண் அப்படியே முழித்துக் கொண்டு இருந்தது . தித்திப்பு நீர் (டயாபடீஸ்) கட்டுக்குள் இருந்ததால், தூக்கி விடலாம் என்று டாக்டர்கள் தீர்மானித்து, தியேட்டருக்குப் போய் புண்ணைச் சுத்தம் செய்து கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன், மூன்று தையல்களுடன்.

உடம்பில் மற்றப் பகுதிகள் என்றால் அய்ந்தாம் நாள் தையல் பிரிக்கலாம் ; இது முதுகு; தோல் தடித்திருக்கும் என்பதால் பத்தாம் நாள் தையல் பிரித்தோம். எனது உடம்பு ரொம்ப நல்லதனமானது. வைத்தியத்துக்கு மிகவும் ஒத்துழைக்கும்!

மருந்து கண்டுபிடிக்கப்படாத காலங்களிலெல்லாம் கூட என்னோடு ஒத்துழைத்ததே.

இதுக்காகவே என் உடம்புக்கு ஒரு மருத்துவப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் தரலாமே ! –

வீட்டுக்கு வந்து டாக்டர் தையல் பிரித்து எனது உடம்பை பாராட்டினார் . பிறகுதான் சொன்னார்; இதை ‘ ராஜபிளவை’ என்று சொல்வார்களாம்! கிராமத்தில் சொல்வார்கள்: முகத்தில் வந்தால் பரு; உடம்பில் வந்தால் சிலந்தி; முதுகில் வந்தால் ராஜபிளவை.

இப்பொ பூரண குணமாகி விட்டேன். நண்பர்கள், அன்பர்களின் பிரியங்கள் இருக்கும் போது எதுக்காகத் தயங்க வேண்டும். ரணம் வந்து குணமானாலும் உள்ப்புண் குணமாக நாள் எடுத்துக் கொள்ளும் என்பார்கள். அதனால் கவனமாக பத்தியமாக இருக்கணும் என்று பார்க்க வருகிறவர்கள் போகும் போது உபதேசித்துப் போவார்கள். நாமும் அப்படியே என்று சொல்ல வேண்டும். “ மேலே” போகும் போது இந்த ஈஸிச் சேரை ஒருக்காலும் அனுமதிக்க மாட்டார்கள். அதில் பக்கவாட்டில் தலையணை போட்டுச் சாய்ந்த வாக்கில்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் . அதனால்தான் எழுத்துக்கள் இந்த அழகில் இருக்கிறது.

தினமணியின் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர் எனக்கு முந்தா நாள் (05.07.10ல்) தான் வந்து சேர்ந்தது. இதில் எனது ஒரு பக்க கட்டுரை ஒன்று இருப்பதால் (பக்கம் 49ல்) மலரின் கடேசியில் வந்திருக்கும் “ தமிழ் வளர்த்த சான்றோர்கள் “ மற்றும் “ தமிழ்ப்படைப்பாளிகள் “ இந்தப் பட்டியலைத் தவிர்த்திருக்கலாம். எப்போதுமே பட்டியல் என்றாலே சில முக்கிய நபர்கள் விடுபட்டுப் போவார்கள். வருத்தத்துக்கு ஆளாக நேரிடும்.

பாஸ்கரத் தொண்டமான் படம் சரி; ரசிகமணியின் படம் இல்லை! மாதவையா படம் இருக்கு ; மாயூரம் வேதநாயகம் பிள்ளை இல்லை . வாலி படம் உண்டு. வல்லிக்கண்ணன் படம் இல்லை . தி.க.சி.யும் கிடையாது . அப்புறம் “வேதபுரத்தில் வாழ்ந்தது பற்றி “ எழுதச் சொன்னீர்கள் என்னை . குறிப்புகள் எல்லாம் தயார் பண்ணியாச்சி. எழுத உக்காரணும். பேனாவும் நோட்டும் டயரியும் ரெடி . ஒன் ... டூ ... திரி ... தான் சொல்லணும் .

கழனியூரனிடம் எனது வாழ்த்துக்களைச் சொல்லுங்கள் . மணமக்கள் வாழ்க . நீங்கள் வாழ்க.

என்றும்

கி.ரா

07.07.2010

புதுவை

Thursday, July 25, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-33 காலு தூக்கிக் கணக்கப் பிள்ளைக்க மாசம் பத்து ரூபா

"விளையாட்டு" - என்ற சொற்பிரயோகம் பேச்சு வழக்கில் மிக இயல்பாகப் பயன்படுத்தப்படுகிறது.
"மாப்ளே... சும்மா ஒரு விளையாட்டுக்குச் சொன்னேன்” என்றான் ஒருத்தன்.
இன்னொருத்தன், "விளையாட்டுக்குக் கூட அப்படிச் சொல்லாதே!” என்கிறான்.
"விளையாட்டு வினையாகி விட்டது" என்றான் மற்றொருத்தன்.
"வேட்டையாடு விளையாடு...” என்று ஆரம்பிக்கிறது ஒரு திரை இசைப்பாடல்.
"ஓடி விளையாடு பாப்பா- நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!”
என்று பாடினார் மகாகவி பாரதியார்.
ஆனால் இன்று நம் குழந்தைகள், வீடியோ கேம்களின் முன்னால் இரவு பகலாக ஆணி அடித்த பதுமைகள் போல் உக்கார்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் உக்கார்ந்திருக்கிறார்கள்.
"விளையாட்டு" என்று சொன்னால் குழந்தைகளுக்கு எப்போதும் உற்சாகம்தான்.
"பார்த்து சாப்பிடேன்; சாப்பிடும் போது என்ன விளையாட்டு வேண்டிக் கிடக்கிறது?” என்று குழந்தையைப் பார்த்து கோபிக்கிறாள் (பொய்க் கோபம்தான்!) தாய்.
"விளையாட்டுக்குச் சொன்னேன்" என்கிறான் ஒருத்தன். (சொல்வதில்கூட ஒரு விளையாட்டு இருக்கிறது பாருங்கள்.)
"அந்தக் கவிதையில் வார்த்தை விளையாட்டு மட்டும்தான் இருக்கிறது. மற்றபடி அந்தக் கவிதையில் ஒன்றுமே இல்லை" என்கிறார் ஒரு விமர்சகர்.
"சும்மா விளையாடாதீர்கள்!” என்று சிணுங்குகிறாள் காதலி. தன் காதலன் தன்னைத் தொடக்கூடாத நேரத்தில், தொடக்கூடாத இடத்தில் தொடும்போது.
குழந்தைப் பருவத்தில் பொம்மை வைத்து விளையாடுவதில் தொடங்கும் விளையாட்டு, பருவம் தோறும் பல்வேறு வடிவங்களில் மனித வாழ்க்கையோடு பயணிக்கிறது.
தானே தனியே இருந்து விளையாடுவது, பிறருடன் சேர்ந்து விளையாடுவது, வீட்டில் சிறுவர்களும், சிறுமிகளும் சேர்ந்து விளையாடுவது, சிறுமியர் மட்டும் விளையாடுவது, சிறுவர்கள் மட்டும் விளையாடுவது, வாலிபப் பருவத்தில் கன்னிப்பெண்கள் மட்டும் தனித்தும், பிற கன்னிப் பெண்களுடன் சேர்ந்தும் விளையாடுவது, வாலிபர்கள் மட்டும் விளையாடுவது, நடுத்தர வயதினர் விளையாடுவது, முதியோர்கள் மட்டும் விளையாடுவது, முதியவர்கள் இளைஞர்களுடன் சேர்ந்து விளையாடுவது என்று விளையாட்டுகளில்தான் எத்தனை எத்தனை வகைகள் உள்ளன.
விளையாட்டு உடலையும், உள்ளத்தையும் ஒருசேர வளர்க்கிறது. கிராமப் புறங்களில் சென்ற தலைமுறையினர் விளையாடிய விளையாட்டுகளை இன்று காண முடியவில்லை.
'கிரிக்கெட்' என்ற மட்டைப் பந்து விளையாட்டு வந்து மற்ற விளையாட்டுகளை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டது; கொக்கோகோலாவும், மிரண்டாவும் வந்து உள்ளூர் கலர் கம்பெனிகளை எல்லாம் அடித்து நொறுக்கியதைப் போல... கிராமங்களில் அன்று குழந்தைகள் விளையாடிய விளையாட்டுகளில்தான் எத்தனை... வகைகள் இருந்தது. வீட்டிற்குள் விளையாடுவது, மரத்தடியில் விளையாடுவது, தெருவில் விளையாடுவது, காடுகரைகளில் விளையாடுவது, நீர் நிலைகளில் விளையாடுவது என்று, அவை எல்லாம் இன்று போன இடம் தெரியாமல் போய் விட்டதே!
குழந்தைகள் ஆரம்பத்தில் பொம்மைகள் வைத்து விளையாடுகின்றன; அந்தக் காலத்தில் தச்சாசாரிகள் குழந்தைகள் விளையாட என்று மரப்பாச்சி பொம்மைகளை (மரத்தால் ஆன பொம்மைகளை) செய்து கொடுத்தார்கள்.
பொம்மைகள் வைத்து விளையாடும்போதே பிள்ளைகள் 'அம்மா பொம்மை' 'அப்பா பொம்மை' என்று வேறுபாடு பார்த்து விளையாட ஆரம்பித்து விடுகின்றன.
குழந்தைப் பருவம் முடிந்து சிறுவர் - சிறுமி என்று ஆனபின்பு பிள்ளைகள் மரத்தடியில், மண் வீடு கட்டி, மண் சமையல் செய்து, பிறர்க்கும் கொடுத்து, தானும் சாப்பிட்டு (கற்பனையாகத்தான்!) விளையாடுவார்கள்.
இடது உள்ளங்கையில், வலது கை முட்டாய் பருப்புக் கடைந்து "வண்ணாக்குடிக்குப் போற வழி... எந்த வழி?” என்று பாட்டுப் பாடியும், கிச்சம் காட்டியும் (கூச்சப்பட வைத்தும், சிரிப்புக் காட்டியும்) விளையாடுவார்கள். இதை வீட்டினுள்ளும், வெளியேயும் விளையாடமுடியும்.
"கண்ணாமூச்சி, கடைக்கலாம் மூச்சி, ஒரு முட்டையைத் திண்ணுட்டு, மறு முட்டையைக் கொண்டு வா...”
என்று சிறுமிகள் தெருக்களிலும், பூங்காக்களிலும் கண்களைப் பொத்தி விளையாடினார்கள். சிறுவர்கள் "பந்தே பந்தே பே பந்தே!” என்று தெருக்களில் புழுதி கிளம்ப விளையாடினார்கள்.
பெண் பிள்ளைகள் மரத்தடியில் சமையல் செய்து, இது அப்பாவுக்கு, இது அம்மாவுக்கு, இது அண்ணனுக்கு என்று கற்பனைச் சோறு கொடுத்து விளையாடினார்கள்.
துடிப்பான சிறுவர்கள், காடு கரைகளில் அலைந்து திரிந்து ஓணான் என்ற தெண்டலைப் பிடித்து வந்து அதை சாமியாட வைத்து (அது ஒரு சித்ரவதைக் கலை) விளையாடினார்கள்.
ஊரில் கோயில் கொடை முடிந்த ஒரு வாரத்திற்கு, கோயில் கொடையை மாதிரியாகக் கொண்டு, சிறுவர்கள் கொட்டு அடித்தும், குழல் ஊதியும், சாமி ஆடியும் விளையாடுவதுண்டு.
பூவரச இலையில் குழல் செய்வார்கள். பூவரச இலையில் குழல் செய்கிற போதே.
"பட்டாப் பட்டாக் குழலே - உனக்கு
பாலும் பழமும் தாரேன்.
எனக்கு மட்டும் ஊது!” என்று
ராகத்தோடு பாட்டும் படிப்பார்கள்.
சிறுவர்கள் விளையாடும் நீர் விளையாடுகள் அது தனிரகம். கிணற்று நீரில் நீந்தியபடியே தொட்டுப் பிடித்து விளையாடுவது தனிக்கலை. முங்கு நீச்சல் தெரிந்தவன், மூச்சடக்கி வெகுநேரம் கிணற்றுத் தண்ணீருக்குள் இருக்கத் தெரிந்தவன், நீர் விளையாட்டுகளில் ஜெயிக்க முடியும்.
பெண்குழந்தைகள், பூச்சொல்லி விளையாடுவார்கள். தட்டாங்கல் விளையாடுவார்கள். பட்டுப் பாவாடை தெருப்புழுதியில் அழுக்காகிறதே என்ற கவலை இல்லாமல் மரத்தடியில் உக்கார்ந்து "கோழி சுண்டி... குத்துலக்கை...” என்று பாடிக் கொண்டே விளையாடுவார்கள்.
பூச்சொல்லி விளையாடும்போது, "பூப்பறிக்க வறீகளா..? பூப்பறிக்க வறீகளா..? என்று பாட்டு பாடிக் கொண்டே விளையாடுவார்கள்.,
குழந்தைகளின் விளையாட்டுகளுடன் இசையும், பாடலும் இணைத்த மேன்மையை என்ன சொல்லிப் பாராட்ட..
பையன்களின் விளையாட்டுகள் கொஞ்சம் முரட்டுத்தனத்துடன் காணப்பட்டது. பெண் பிள்ளைகளுக்கு என்று மேன்மையான விளையாட்டுகள்.
நொண்டியடித்து விளையாடும் போதே "நொண்டி, நோக்கா - என்னைப்
பெத்த தவக்க" என்று பாடிக் கொண்டே விளையாட ஆரம்பிப்பது.
செதுக்கு முத்து விளையாடி, முத்துகளை ஒருவன் தோற்பது, மற்றவன் முத்துகளைச் சேர்ப்பது (புளிய முத்து)
பம்பர விளையாட்டில் பையன்கள் மும்முரமாக அலைவார்கள். குறிபார்த்து எதிரியின் பம்பரத்தைத் தாக்கி உடைப்பது என்றெல்லாம் நடக்கும். பம்பர விளையாட்டில்தான் எத்தனை வகைகள்..? எத்தனை சட்ட திட்டங்கள்..?
நடுவர் இல்லாத இந்த விளையாட்டுகளில், சிறுவர்கள் தானே முன் வந்து வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மைதான் என்ன..?
பொன் வண்டு பிடித்து, அதைத் தீப்பெட்டிக்குள் போட்டு, அதற்குத் தீவனமாக (உணவாக) சில தாவர இலைகளையும் போட்டு, அது குட்டி போடும் என்ற கனவோடு காத்திருப்பதென்ன..? பட்டுப் பூச்சிகளுக்கு பூருமத்தை சமைத்துக் கொடுக்கும் அழகுதான் என்னே...!
நொங்கு தின்ன கூந்தலில் வண்டி செய்து அதை கவை (பிளவு) உள்ள கம்பியில் ஒட்டி விளையாடும் காலம் மலை ஏறிவிட்டது!.
கிட்டிப்புல் என்கிற சில்லாங்குச்சி விளையாட்டை நாள் முழுவதும் விளையாடினாலும் சிறுவர்களுக்கு அலுக்காது.
சைக்கிள் டயர், சைக்கிள் ரிம் இவைகளை ஓட்டிக் கொண்டு சிறுவர்கள் எங்கெல்லாம் ஓடுவார்கள்..! இதனால் அந்தக் காலத்து சிறுவர்கள் உடல் வலிமை பெற்று விளங்கினார்கள். இன்றைய 'வீடியோ கேம்' பிள்ளைகள் 'சோளத்தட்டை பயில்வான்கள்' (நோஞ்சான்களாகத் திகழ்கிறார்கள்)
மரத்தடியில் மணலைக் குவியலாக (நீளவசத்தில்) குவித்து வைத்துக் கொண்டு அதில் ஒரு சிறு குச்சியை ஒழித்து வைத்து "கிச்சிக் கிச்சி தாம்பளம்; கீயாளி தாம்பளம்" என்று பாடிக் கொண்டே விளையாடுவார்கள்.
இவை தவிர, "காலு தூக்கிக் கணக்கப்பிள்ளை" என்று ஒரு விளையாட்டை சிறுவர்கள் விளையாடுவார்கள். இந்த விளையாட்டைப் பற்றிய விபரத்தை மட்டும் கீழே தருகிறேன்.
இருவர் ஒரே திசையில் திரும்பி நின்று கொண்டு, ஒருவனது வலது கையுடன் மற்றவன் இடது கையைக் கோத்துக் கொள்வான். மூன்றாமவன் அந்த இருவருக்கும் பின்புறமாக வந்து இருவரது தோள்களிலும் தனது இரு கைகளையும் போட்டுக் கொண்டு, தனது வலது முழங்காலை அவர்களின் கோர்த்த கைகளில் ஊன்றி இருந்து கொள்வான். இப்போது அவனது மற்றொரு கால் பின்புறமாகத் தொங்கும். தொங்கும் காலை நான்காமவன் ஏந்திப் பிடித்துக் கொள்வான். இப்போது கைகோத்த இருவரும் தன் கைகளில் சவாரி செய்கிறவனைத் தாங்கிப் பிடித்தபடி "காலு தூக்கிய கணக்கப் பிள்ளைக்கு மாசம் பத்து ரூபாய்!” என்று பாடிய படியே நடந்து செல்வார்கள். இப்படி நால்வரும், ஒருவர் மாற்றி ஒருவர் மற்ற மூவரின் அரவணைப்பில் சவாரி செய்து மகிழ்வார்கள். அக்காலத்தில் இப்படி குழந்தைகள் விளையாடிய விளையாட்டுகள் யாவும் அர்த்தம் உள்ளதாகவும், மனப்பான்மைகள் வளர்ப்பதாகவும் திகழ்ந்தன.
தமிழகம் எங்கும் வட்டாரத்திற்கு வட்டாரம் இதுபோல எண்ணற்ற விளையாட்டுகள் விளையாடப்பட்டன. அவை யாவும் இன்று வழக்கொழிந்து வருகின்றன. எனவே. அவைகளை எழுத்திலாவது பதிவு செய்து வைக்கலாம் என்று எண்ணுகிறேன்

தெக்கத்திச் சொலவடைகள்

முன்னுரை

இந்தத் தொடரில் நெல்லை மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள சொலவடைகள் மட்டும், நெல்லை வட்டார வழக்கு மொழிநடையில் தொகுத்து தர உள்ளேன்.

நமக்கு இதுவரையில் பழமொழிகள் என்ற பெயரில் கிடைத்திருப்பவை எல்லாம் பண்டிதத் தமிழில் தொகுக்கப்பட்டவைகளாகவே உள்ளன.

பழமொழி தொகுப்பு நூல்களில் பழமொழி அல்லாத பல வாக்கியங்களும் பழமொழி என்ற போர்வையில் பதிவாகியுள்ளன. வடமொழிச் சொற்களும், செந்தமிழ்ச் சொற்களும், கொடுந்தமிழ்ச் சொற்களும் விரவிய பல பழமொழிகள் நம்மை அண்ட விடாமல் விரட்டுகின்றன.

பழமொழிகள் என்பதும் சொலவடைகள் என்பதும் ஒன்றல்ல. அவைகளுக்குள் நுட்பமான பல வேறுபாடுகள் உள்ளன. அதுகுறித்து விரிவாக விவாதிக்கவும் சிந்திக்கவும் இடம் உள்ளது.

கிராமத்து மக்கள் பேச்சு வாக்கில் பயன்படுத்துகிற சொலவடைகள், வட்டார வழக்குமொழி நடையிலேயே உலவுகின்றன. அவைகளை மட்டும் தனியே அகர வரிசைப்படி தொகுத்தால், எதிர்கால நம் சந்ததியினர்களுக்கும், இன்றைய நாட்டுப்புறவியல் துறைசார்ந்த ஆய்வாளர்களுக்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கிராமத்துச் சொலவடைகள் சிலவற்றிற்கு ஒரு வாசிப்பில் பொருள் புரியாமல் போகலாம். அத்தகைய-சொலவடைகளுக்கு பின்னாளில் நாம் அவற்றின் அர்த்தத்தைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிவு செய்யலாம்.

பொதுவாக சொலவடைகளுக்கு அவை சொல்லப்படும் சூழலை வைத்தே பொருள் புரிந்து கொள்ளவேண்டும். சொலவடைகளுக்கு விளக்கம் தேடும்போது அதுகுறித்து நாம் விவாதிக்கலாம். இத்தகைய சொலவடைகளில் ஒரு காலத்திய நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களையும், பண்பாட்டுக் கலாச்சார கூறுகளையும் தேடி இனம் கண்டுகொள்ளும் வாய்ப்பு உள்ளது.

புதிய, புதிய கலைச் சொற்களும், மொழி ஆளுமைகளும் இவற்றில் பதிவாகியுள்ளன. சொலவடைகளின் வார்த்தைக்கட்டமைப்பு, வடிவம், ஓசைநயம் போன்றவைகள் குறித்து விரிவாக ஆராய இடம் உள்ளது.

“என்று தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது?” என்று ஆராய முடியாத அளவுக்கு இவைகள் பழமையானவையாகும். தமிழகம் எங்கும் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள சொலவடைகளை எல்லாம், அந்தந்த வட்டாரத்து வழக்கு மொழி நடையில் தொகுத்தால் நமக்கு ஒரு பெறும் “சம்பத்து” கிடைக்கும்.

பழமொழிகள் உலகம் எங்கும் உள்ளன. அவைகள் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டுள்ள தமிழ்ப் பழமொழிகளோடு உலகப்பழமொழிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் வாய்ப்பும் உள்ளது.

கிராமத்து தரவுகள் என்றால், அவைகளில், சில பிற்போக்கான விசயங்களும், அறக்கழிவான சொல்லாடல்களும் இருக்கத்தான் செய்யும். சொலவடைகளும் அதற்கு விலக்கல்ல.

ஒரு செடியை மண்ணிலிருந்து புடுங்கும்போது, செடியின் வேரோடு மண்ணும் ஒட்டிக்கொண்டுதான் வரும் எனவேதான் பாரதி “வேரும் வேரடி மண்ணும்” என்று பேசினார். நமக்கு வேரடி மண் வேண்டாம் என்றால், தண்ணீரால் செடியின் வேரைக் கழுவத்தான் வேண்டும். மண்வாசனையோடு சில பதிவுகளைச் செய்யும் போது இதுபோன்ற சில அறக்கழிவுகளை நாம் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இத்தொடரில் எனது சேகரிப்பில் இருந்து அகர வரிசைப்படி, சொலவடைகளை மட்டும் பதிவு செய்கிறேன். அதில் சில சொலவடைகள் பதிவு செய்யப்படாமல் விடுபடலாம். இத்தொடரை வாசிக்கும் வாசகர்கள் விடுபட்ட சொலவடைகளை எனது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பினால் அவைகளையும் பின் இணைப்பாகச் சேர்த்துக் கொள்கிறேன்.

இனி சொலவடைகளுக்குள் செல்வோம்.

1. அகல உழுவதைவிட, ஆழ உழு.

2. அகல் வட்டம் பகல் மழை (அகல் வட்டம்-இரவில் நிலவைச்சுற்றிக் காணப்படும் வட்டக் கோடு,   இதை கோட்டை கட்டியிருக்கு என்றும் சொல்வார்கள்)

3. அகழியிலே விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்.

4. அக்காள் பண்டம் அரிசி, தங்கச்சி பண்டம் தவிடா?

5. அகப்பட்டவனுக்கு அட்டமத்துல சனி(கெட்ட நேரம்). ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில்  வியாழன்

6. அகப்பை (சாப்பாட்டின் அளவு) குறைந்தால் கொழுப்பு குறையும். (ஆப்பை என்பது அகப்பைக்கு இணையான வழக்குச் சொல்).

7. அகம் (ஆணவம்) குறைந்தால், அஞ்சும் குறையும்! (ஐந்து-கோவம், அகம்பாவம், வன்பம், பகை, மூர்க்கம், ஐந்தும் என்பதன் வழக்குச் சொல் அஞ்சும்)

8. அகலப் பழகினால் நெகிழும் உறவு.

9. அகலாது அணுகாது தீக்காய வேண்டும்.

10. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.        

11. அக்கரையில் படர்ந்த பாகற்கொடிக்கு, இக்கரையில் பந்தலிடுவானேன்?

12. அக்கரைக்கு இக்கரை பச்சை.

13. அக்காள் (உயிரோடு) இருக்கிற வரைதான்-மச்சான் உறவு செல்லும்.(செல்லும்-செல்லுபடியாகும்)

14. அக்காளை பழித்த தங்கை அவிசாரி ஆனால் (அவிசாரி-விபச்சாரி)

15. அக்கு தொக்கு(சொந்த பந்தம்) இல்லாதவனுக்கு தூக்கம் ஏது?

16. அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால் வெங்காயம்... ம்... கரிவேப்பிலை..என்பாள்.

17. அங்கும் இருப்பான், இங்கும் இருப்பான், ஆக்கிய சோத்துக்குப் பங்கும் இருப்பான்- வெங்கப்பெயல்.

18. அங்கேண்டி மகளே புருசன் வீட்டிலே, கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வாயேண்டி காற்றாய் பறக்கலாம் என்றானாம் அப்பக்காரன்.

19. அசல் வீட்டுக்காரனுக்கு(பக்கத்து வீட்டுக்காரனுக்கு) ஏண்டுக்கிட்டு(பரிந்து பேசிக்கொண்டு) அப்பக்காரனை அடிக்கலாமா...?

20. அசைந்து தின்கும் யானை; அசையாமல் தின்கும் வீடு (வீடுகட்ட ஆகும் செலவு)

21. அச்சாணி இல்லாத தேர்; முச்சாணும் ஓடாது.(சாண்-கைவிரல்களை நீட்டி அளக்கும் ஒரு வித அளவு)

22. அஞ்சாவது (பிறக்கும்) பெண் கெஞ்சினாலும் கிடைக்காது.

23. அஞ்சாறு பெண்ணாய்ப் பிறந்தால், அரசனும் ஆண்டியாவான்.

24. அஞ்சிலே (ஐந்திலே) வளையாதது, ஐம்பதிலே வளையாது.

25. அஞ்சுகிறவனைக் (அச்சம் உடையவனை) கோழிக்குஞ்சும் விரட்டும்.

26. அஞ்சு காசுக்குக் குதிரையும் வேண்டும்; அது காற்றாய்ப் பறக்கவும் வேண்டும் என்றால் எப்படி?

27. அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை!

28. அஞ்சு பணமும் கொடுத்து கஞ்சித்தண்ணியும் குடிப்பானேன் (பணம்-ரூபாய்)

29. அஞ்சும் மூன்றும் உண்டென்றால், அறியாப் பெண்ணும் சமைத்திடுவாள்(ஐந்து-அடுப்பு, விறகு,நெருப்பு, பாத்திரம், அரிசி; மூன்று-உப்பு, காரம், புளி)

30. அஞ்சு வயதுப் பிள்ளைக்கு ஐம்பது வயசுப் பெண் கால் மடக்க வேண்டும்.(பிள்ளை ஓடியாடி விளையாடும் போது கீழே விழுந்து விடக் கூடாது என்பதால்)

31. அடக்கம் ஆயிரம் பொன் பெரும்!

32. அடி உதவுகிறது போல அண்ணன் தம்பி உதவமாட்டான்.

33. அடியாத மாடு பணியாது.

34. அடி என்று சொல்ல அப்பனும் இல்லை; பிடி என்று சொல்ல ஆயாளும்(தாயும்) இல்லை!

35. அடிச்சட்டி ஓட்டையாய் இருந்தாலும் கொழுக்கட்டை வெந்தால் சரிதான்.

36. அடிக்க அடிக்க பந்து அதிகமாய்த் துள்ளும்.

37. அடிக்கிற காத்து(காற்று) வெயிலுக்குப் பயப்படுமா?

38. அடிக்கிற கைதான் அணைக்கும்.

39. அடிக்கும் பிடிக்கும் சரி; ஆனைக்கும் பானைக்கும் சரி.

40. அடித்து வளர்க்கணும் பிள்ளையை; முறித்து வளர்க்கணும் முருங்கையை; திருக்கி வளர்க்கணும்  மீசையை!

41. அடிநாக்கிலே நஞ்சு, நுனி நாக்கிலே அமுதம்.

42. அடிப்பானேன், பிடிப்பானேன்? அடக்குகிற வழியாய் அடக்கப்பார்!

43. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

44. அடியற்றால் (இத்துப்போனால்) நுனி விழாது இருக்குமா?

45. அடிக்கு (தூர் பகுதிக்கு) உள்ளதுதான் நடுவுக்கும்; நடுவுக்கு உள்ளதுதான் நுனிக்கும்.

46. அடியும் பட்டு புளித்த கூழும் குடிக்கணுமா?

47. அடியே...ன்னு கூப்பிட பெண்டாட்டியே இல்லை. அவன் என்னடாவென்றால், பிள்ளை எத்தனை? என்கிறான்.

48. அடிவானம் கறுத்தால் அப்போதே மழை பெய்யும்.

49. அடுக்குகிற அருமை, உடைக்கிற நாய்க்குத் தெரியுமா?

50. அடுத்த வீட்டு கூரையில் பிடித்த தீ, உன் வீட்டுக்குத் தாவ எத்தனை நாழி(நாழிகை-நேரம்)  ஆகும்?

51. அடுத்தது காட்டும் பளிங்கு(கண்ணாடி).

52. அடுத்த வீட்டுக்காரி ஆம்பளப் புள்ளை பெத்தாள்னு பக்கத்து வீட்டுக்காரி அம்மிக்குழவியை எடுத்து தன் அடி வயிற்றில் குத்திக்கிட்டாளாம்!

53. அடுப்பு அனலில் (வெக்கையில்) வெண்ணையை வைத்த கதை போல.

54. அடுப்புக் கட்டிக்கும் அழகு வேண்டும்.

55. அடுத்த வீட்டுக்காரனுக்கு யோகம் வந்ததால் (பணம் வந்ததால்) அண்டை வீடு குதிரை லாயமாச்சு.

56. அடைமழை விட்டும் செடி மழை(செடியின் இலையில் இருந்து விழும் மழைத்துளிகள்) விடவில்லை.

57. அட்டமத்துச் சனி பிடித்து பிட்டத்து (உடுத்தியிருந்த) துணியையும் பிடுங்கிக் கொண்டது.

58. அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்காதே!

59. அட்டையை (பூச்சி இனத்தைச் சேர்ந்த புழு) பிடித்துக் கட்டிலில் போட்டால் அது அங்கும் கிடக்காது.

60. அணில் ஊணும், ஆமை நடையும் மெல்லத்தான்.

61. அணில் பிள்ளைக்கு நொங்கும் ஆண்டிச்சி (ஆண்டி என்பதன் பெண்பால்) பிள்ளைக்கு சோறும் எளிதில் கிடைத்து விடும்.

62. அணை உடைந்து சென்ற வெள்ளம், அழுதாலும் திரும்ப வராது!

63. அண்டத்திற்கு உள்ளது, பிண்டத்திற்கும் உண்டு.

64. அண்டத்தைக் கையில் வச்சுக்கிட்டு ஆட்டுகிற பிடாரிக்குச் சுண்டைக்காய் எம்மாத்திரம்?

65. அண்டர் (தலைவர்) எப்படியோ... தொண்டரும் அப்படியே!

66. அண்டை வீட்டுக் கடனும், பிட்டத்துச் சிரங்கும் ஆகவே ஆகாது!

67. அண்டை வீட்டுச் சண்டை, ஆஹா பேஷ்.. பேஷ்!

68. அண்ணனிடத்தில் ஆறுமாதம் வாழ்ந்தாலும், அண்ணியிடத்தில் அரை நாழிகை(நேரம்) வாழ முடியுமா?

69. அண்ணணுக்குத் தம்பி இல்லை என்று போகுமா?

70. அண்ணன் சாப்பிடாட்டா, மதினிக்கு லாபம்தான்.

71. அண்ணன் சம்பாதிக்கிறது, தம்பி அண்ணாக்கயித்துக்கு(அரைஞாண் கயிற்றுக்கு) காணாது.

72. அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்ப கிடைக்கும்?

73. அண்ணனுக்குத் தம்பிதான் ஜென்மப் பகையாளி.

74. அண்ணன்தான் கூடப் பிறந்தான், அண்ணியுமா கூடப் பிறந்தாள்?

75. அண்ணன் பெரியவன் என்று சித்தப்பனிடம் தீப்பெட்டி கேட்டானாம்!(பீடி பத்த வைக்க).

76. அண்ணன் மேல் உள்ள கோவத்தை, அண்ணன் வீட்டு நாயிடம் காட்டினானாம்.

77. அண்ணாவிப் பிள்ளைக்கு ஏட்டுக்குப் பஞ்சமா?.. அம்பட்டன் பிள்ளைக்கு மயித்துக்குப் பஞ்சமா?..

78. அதிக ஆசை: அதிக தரித்திரம்.

79. அதிகாரியும், தலையாரியும் கூட்டு சேர்ந்தால் விடியும் மட்டும் திருடலாம். (வேண்டிய மட்டும் திருடலாம்)

80. அதிகாரி வீட்டில் திருடி விட்டு, தலையாரி வீட்டில் ஒழியக்கூடாது.

81. அதிகாரி வீட்டுக் கோழி முட்டை, குடியானவன் வீட்டு அம்மிக்கல்லையும் உடைக்கும்!

82. அக்கிரமமான ஊரில், கொதிக்கிற மீனும் சிரிக்குமாம்!

83. அதிர எரு அடித்தால் உதிர(நெல்) விளையும்.

84. அதிர்ஷ்டம் இருந்தால் ஊரை ஆளலாம். இல்லை என்றால் கழுதை மேய்க்கலாம்.

85. அதிர்ஷ்டம் உள்ளவன் மண்ணைத் தொட்டாலும் பொன் ஆகும்.

86. அதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லை! ஆட்டடா மணியை என்றாராம் பூசாரி!

87. அததற்கு ஒரு கவலை, ஐயாவுக்கு எட்டுக் கவலை.

88. அதை விட்டாலும் வேறு கதியில்லை! அப்புறம் போனாலும் வேறு விதியில்லை!

89. அத்தனையும் சமைத்தாள், உப்பிட மறந்தாள்.

90. அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அங்கொரு சொத்தை, இங்கொரு சொள்ளை.

91. அத்தி பூத்தாற் போல் இருக்கிறது(அத்திமரம் அடிக்கடி பூக்காது, எப்போதாவது தான் பூக்கும்)

92. அத்திப் பூவை யார் அறிவார்? ஆந்தையின் குஞ்சை யார் பார்த்தார்?

93. அத்தி மரத்திலே தொத்திய கிளி போல..!

94. அத்து மீறிப் போனான், பித்துக்குளி ஆனான்.

95. அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று “முறை” சொல்லலாம்.

96. அத்தோடு நின்றது அலைச்சல், கொட்டோடு நின்றது குலைச்சல்(இரைச்சல்).

97. அந்தப் பருப்பு இங்கே வேகாது!

98. அந்தரத்தில் கல் எறியலாமா அந்தகன்(குருடன்)

99. அந்தலை, சிந்தலை(கால்மாடு, தலைமாடு) ஆகிப்போச்சி கோலம்.

100. அந்தியில் ஈசல் வெடித்தால், அடை மழை நிச்சயம் உண்டு.

101. அந்தி மழை அழுதாலும் விடாது.

102. அப்பச்சி குறும்பையை(விளையாத இளநீரை) உடைக்க, பிள்ளை தேங்காய்ச்சில்லு கேட்டு அழுதானாம்.

103. அப்பச்சி கோவணத்தைக் காக்கா தூக்கிக்கிட்டுப் போயிட்டு. பிள்ளை காஞ்சிபுரம் பட்டுக் கேட்டு அழுதாளாம்!

104. அப்பத்தை எப்படிச் சுடுகிறது? அதற்குள்ளே தித்திப்பை எப்படி அடைக்கிறது?

105. அப்பம் என்று சொன்னால் போதாதா..? பிட்டு வேறு காட்ட வேண்டுமா..?

106. அப்பனோடு போகிறவளுக்கு(உறவு வைத்துக் கொள்கிறவளுக்கு) அண்ணன் ஏது? தம்பி ஏது?

107. அப்பன் அருமையும், உப்பின் அருமையும் இல்லாத போது தெரியும்.

108. அப்பன் ஒட்டுக் கோவணத்துடன் படுத்திருக்கும் போது, பிள்ளை பக்கத்தில் படுத்துக் கொண்டு “`இழுத்து மூடப்பா”` என்றானாம்.

109. அப்பன் சோத்துக்கு அலைகிறான் இங்கே, பிள்ளை அன்னதானம் செய்கிறான் அங்கே!

110. அப்பியாச (நித்திய பயிற்சி) வித்தைக்கு அழிவில்லை ஒருநாளும்!

111. அமாவாசை இருட்டிலே பெருச்சாளிக்கு(பெரிய எலி) போன இடம் எல்லாம் வழிதான்.

112. அமாவாசை பருக்கை(சோறு) எப்போதும் கிடைக்குமா?

113. அம்பட்டன் குப்பையைக் கிண்டக் கிண்ட மயிர்-தான் வரும்!

114. அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.

115. அம்மா குதில்(குலுக்கை) போல, ஐயா கதிர் போல(உருவத்தில்).

116. அம்மியும் குழவியும் ஆடிமாதக் காற்றில் ஆகாயத்தில் பறக்கும் போது, எச்சிலை எம்மாத்திரம்?

117. அம்மையார் நூற்கிற நூல், பேரன் அண்ணாக் கொடிக்கே காணாது!

118. அய்யா, அய்யா..அம்மா குறைக் கேப்பையையும் திரிக்க வரச்சொன்னாள்(இந்தப் பழமொழிக்குப் பின்னால் ஒரு கதை உள்ளது).

119. அய்யாசாமிக்குக் கல்யாணமாம், அவரவர் வீட்டுல சாப்பாடாம்! கொட்டு முழக்கம் கோயிலிலாம், வெற்றிலை பாக்கு கடையிலாம், சுண்ணாம்பு சூளையிலாம்.

120. அரசனில்லாப் படை ஜெயிக்குமா..?

121. அரசனுக்கு என்ன ஒரு வார்த்தையில் சொல்லிவிடுவார், அடிமைக்கல்லவோ தலைச்சுமை(தண்டனை).

122. அரசனைப் பார்த்த கண்ணுக்குப் புருசனைப் பார்த்தா பிடிக்காது.

123. அரசனுடன் பழகுவதும் அரவுடன்(பாம்புடன்) பழகுவதும் ஒன்று!

124. அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல!

125. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்!

126. அரசன் இல்லாத நாடும், அச்சாணி இல்லாத தேரும் ஒன்று.

127. அரசன் எவ்வழி, குடிகள்(மக்கள்) அவ்வழி!

128. அரசன் கல்லின் மேல் கத்தரிக்காய் காய்க்கும் என்றான், கொத்தாயிரம், குலையாயிரமாய்க் காய்க்கும் என்றான் மந்திரி!

129. அரண்டவன் கண்ணுக்கு, இருண்டதெல்லாம் பேய்.

130. அரண்மனை காத்தவனுக்கும், அடுக்களையைக் காத்தவனுக்கும் கைமேல் பலன் கிடைக்கும்.

131. அரண்மனைக்கு ஆயிரம் செலவாகும், அதற்கு குடியானவன் என்ன செய்வான்?

132. அரத்தை அறுக்க அரமே வேண்டும்.

133. அரமும், அரமும் சேர்ந்தால் கிண்ணரம்.

134. அரவத்தைக் கண்டால் விடுமோ கீரி..?

135. அரிசி என்று அள்ளிப் பார்ப்பாரும் இல்லை, உமி என்று ஊதிப் பார்ப்பாரும் இல்லை!

136. அரிசி ஆழாக்கானாலும்(ஒரு பக்காவில் எட்டில் ஒரு பங்கு) அடுப்புக் கட்டி மூன்று வேணும்.

137. அரிசி உண்டானால் சோறும் உண்டு. அக்காள் உண்டானாள்(கருத்தரித்தால்) மச்சானும் உண்டு.

138. அரிசி கொண்டுக்கிட்டுப் போய் அக்கா வீட்டில் உறவா..?

139. அரிசி கொண்டு வா..நீ, உமி கொண்டு வருகிறேன் நான், ரெண்டையும் கலந்து ஊதி, ஊதித் தின்னலாம் நாம்.

140. அரிசி இல்லாத கூழுக்கு, உப்பில்லைன்னா என்ன..?

141. அரிசிக்குத் தக்கதான் அடுப்பு(அளவில்) புருசனுக்குத் தக்கதான் பொல்லாப்பு(சண்டை).

142. அரிசியும் கறியும் உண்டானால் ஆக்கித்திங்க அக்கா வீடு எதுக்கு..?

143. அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரனா நீ?

144. அரிதாரம் கொண்டு போகிற நாய்க்கு அங்கு இரண்டடி; இங்கு இரண்டடி.

145. அரிது அரிது ஐந்தெழுத்து மந்திரத்தை உணர்தல் அரிது. (ஐந்தெழுத்து மந்திரம் - நமச்சிவாய)

146. அரியது செய்து; எளியதற்கு ஏமாந்து திரிகிறான் (மேதைகளும் சாமான்யமானவர்களிடம் ஏமாந்து விடுவதுண்டு)

147. அரியும் சிவனும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயில மண்ணு. (சைவத்திற்கும், வைணவத்திற்கும் சண்டை நடந்த காலத்தில், இரண்டும் ஒன்றுதான் என்ற உண்மையை உணர்ந்த நாட்டுப் புறந்து மக்கள் உண்டாக்கிய பழமொழி இது)

148. அருகாகப்(அழகாக) பழுத்தாலும் விளாமரத்தில் வௌவால் சேராது. (வௌவால் நாவல் பழத்தையை விரும்பி உண்ணும். விளாம்பழத்தை வௌவால் வெறுத்து ஒதுக்கும்)

149. அருஞ்சுனை நீருண்டால் அப்போதே ரோகம். (நோய்குறை மாகும்).

150. அருண்டவன் (அரண்டவன்) கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்( உளவியல் சார்ந்த பழமொழி)

151. அருமை அறியாதவன் ஆண்டு என்ன...? மாண்டு என்ன...? (எல்லாம் ஒன்றுதான்)

152. அருமை அறியாதவனிடத்தில் போனால், நம் பெருமை குறைந்து போகும்.

153. அருமை அற்ற வீட்டில் எருமையும் (மாடும்) குடியிராது.

154. அருமை மகன் தலை போனாலும் போகட்டும் ஆதிகாலத்து உரல் போய்விடக்கூடாது (இந்தப் பழமொழிக்குப் பின்னால் ஒரு நாட்டுப்புறக்கதை உள்ளது)

155. அரும்பு(பூவின் இதழ்) கோணினால் என்ன...? அதன் மணம் குறையவா செய்யும்?

156. அரைக்காசுக்கு அழிந்த கற்பு; ஆயிரம் பொன் கொடுத்தாலும் திரும்ப வராது.

157. அரைக்காசுக்குத்தான் குதிரை வாங்க வேண்டும், அது காற்றாய்ப் பறக்கவும் வேண்டும் என்றால் எப்படி...?

158. அரைக்கிறவன் (மருந்தை அரைக்கிறவன் வைத்தியன்) ஒன்றை (நோயாளி) வேறொன்றை நினைத்துக் குடிக்கிறான்.

159. அரைக்க, அரைக்க சந்தனத்தின் மணம் குறையாது.

160. அரைக்குடம் ததும்பும்; நிறை குடம் ததும்பாது.

161. அரைச்சீலை (இடுப்பில் சேலை) கட்ட, கைக்கு உபச்சாரமா? (அவனவன் இடுப்பில் அவனவன் துணி கட்டவும் சம்பளம் கொடுக்கவா முடியும்?)

162. அரைச்சொல் (அரை குறையான படிப்பு) கொண்டு அம்பலம் (சபை) ஏறலாமா?

163. அரைச் சொல் கொண்டு அம்பலம் ஏறினால் அரைச் சொல்லும் முழுச் சொல்லாகுமோ..?

164. அரைத்த பயிறு(விதை) முறைக்காது.

165. அரைத் துட்டுலே கல்யாணமாம்; அதுலே கொஞ்சம் வான வேடிக்கையாம். (முழுக்கஞ் சத்தத்தைப் பற்றி இப்பழமொழி பேசுகிறது. ‘துட்டு’ என்ற நாணயம் புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் உருவான பழமொழி இது)

166. அரைப்பணம் கொடுக்க (வரிகொடுக்க) சோம்பரைப் பட்டு; ஐம்பது பொன் கொடுத்து வழக்கை முடித்த கதையாக இருக்கிறதே!

167. அரைப்பணம் கொடுத்து அழச்சொல்லி; ஒரு பணம் கொடுத்து ஓயச் சொன்ன கதையாக இருக்கிறதே! (‘பணம்’ என்ற நாணயம் புழக்கத்தில் உள்ள காலத்தில் உருவான பழமொழி இது!)

168. அரைப்பணச் சேவகம் ஆனாலும், அரண்மனைச் சேவகம் போல் ஆகுமா? (வேலைக்குக் கிடைக்கிற ஊதியம் குறைவானாலும், வேலை செய்கிற இடம் உயர்ந்ததாக இருந்தால், அதைக் காட்டி வேறு விதத்தில் சம்பாதித்துக் கொள்ளலாம்.)

169. அரையிலே (இடுப்பிலே) புண்ணும்; அண்டையிலே (பக்கத்து வீட்டிலே) கடனும் ஆகவே ஆகாது!

170. அலுத்துச் சடச்சி (களைத்து) அக்காள் வீட்டிற்குப் போனாளாம் (சட வார ஓய்வெடுக்க) அக்காள் பிடித்து மச்சான் மேலே தள்ளினாளாம் (புலியூருக்குப் பயந்து எலியூருக்குப் போனால், எலியூரும் புலியூர் ஆன கதைதான்)

171. அலை (கடல் அலை) எப்ப ஓய? கால் எப்ப கழுவ...? (கால் கழுவி வந்தான் என்பது மலம் கழுவி வந்தான் என்பதின் இடக் கரடக்கலாக வந்தது போல். இப்பழமொழியில் 'கால்' என்பது மலத்துவாரத்தைக் குறிக்க வந்துள்ளது).

172. அலைவாய்த் துரும்பு போல் அலையாதே!

173. அல்லல் (துரும்பு) அற்ற படுக்கை(நிம்மதியான தூக்கம்) அழகிலும் அழகு.

174. அல்லல் பட்டு (ஏழைகள் துன்பப்பட்டு) அழுகிற கண்ணீர் செல்வத்தைக் (கொடுமைக் காரர்களின் பிழைத்தை) குறைக்கும்!(இதே கருத்தில் திருக்குறள் ஒன்றும் உள்ளது.

175. அவசரக் கோலத்திலே அள்ளித் தெளித்தது போல

176. அவசரத்தில் (ஆத்திரத்தில்) அண்டாவுக்குள்ளும் கை நுழையாது. (மனம் சார்ந்த பழமொழி இது)

177. அவிசாரித்தனமே (தேவடியாத்தனமே) பண்ணினாலும் அதிர்ஸ்டம் வேண்டும்; திருடப் போனாலும் திசை (நல்ல திசை- யோகம்) வேண்டும்.

178. 'அவிசாரி' என்று ஆனைமேலேயும் ஏறி ஊர்வலம் வரலாம்; திருடி என்று தெருவில் வர முடியாது (திருட்டுத்தொழிலின் கீழ்மையைச் சுட்டுகிறது இப்பழமொழி)

179. அவிசாரியாக ஆசையும் இருக்கும் (ஆழ்மனதில்) அடிப்பானோ (புருசன் உதைப்பானே) என்று பயமாகவும் இருக்கிறது. (அடிக்குப் பயந்துதான் பல பெண்கள் பத்தினியாக வாழ்கிறார்கள் என்று சொல்கிறது இப்பழமொழி)

180. அவிசாரிக்கு (விபச்சாரிக்கு) ஆணை இல்லை! கட்டளை இட்டுத் தடுத்தாலும் கேட்க மாட்டாள்) திருடிக்குத் தெய்வம் இல்லை. (கடவுளுக்கும் திருடி பயப்படமாட்டாள்)

182. அவப்பொழுதினும் (வீணாகப் பொழுதைப் போக்குவதினும்) தவப்பொழுது நல்லது.

183. அவரை விதைத்ததில் துவரை முளைக்குமா..?

184. அவலட்சணமான குதிரைக்கு ‘சுழி சுத்தம்’ (மாடுகளுக்கு சுழிசுத்தம் பார்ப்பது போல, குதிரைகளையும் சுழிசுத்தம் பார்த்தே வாங்குவார்கள்) பார்க்கனுமா..?)

185. அவலை நினைச்சி உரலை இடிச்ச கதையா.. இருக்கே..! (தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது).

186. அவலை (தேன்பாகில்) முக்கித்தின்னு; எள்ளை (எள் உருண்டையை) நக்கித்தின்னு. (எதை எதை எப்படித் திங்க வேண்டுமோ, அதை, அதை அப்படித் திங்க வேண்டும். அப்போதுதான் சுவைகிட்டும்)

187. அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள் (இந்தப் பழமொழிக்குப் பின்னால் ஒரு நாட்டுப்புறக் கதை உள்ளது).

188. அவள் எமனைப் பலகாரம் பின்னி; இந்திரனை ‘போண்டா’ (ஒரு பலகாரத்தின் பெயர்) போட்டு விடுவாள் (சாமர்த்தியக்காரி).

189. அவள் பேர் (பெயர்) தங்கமாம்; அவள் காதில் போட்டிருக்கிறதோ பித்தளைக் கம்மலாம்.

190. அவள் பெயர் கூந்தலழகி; அவள்தலையோ மொட்டை.

191. அவனின்றி (இறைவனின்றி) அணுவும் அசையாது.

192. அவனிடம் உன் ‘பருப்பு’ (ஏமாத்து வேலை) வேகாது (நடக்காது).

193. அவன் ஆகாயத்தை வடுப்படாமல் (கோரைபடாமல்) கடிப்பேன் என்கிறான்.

194. அவன் என்ன என் தலைக்கு அறைத்த பத்தா? (மருந்துக் கலவையா.?).

195. அவன் காலால் இட்ட வேலையை, அவள் நிலையால் செய்கிறாள்.

196. அவன் கிடக்கிறான் குடிகாரப்பெயல்; எனக்கு ரெண்டு மொந்தை(கள்) ஊற்று (அங்கதச் சுவையுள்ள பழமொழி இது)

197. அவன் கை விரலைக் கொண்டே, அவன் கண்ணைக் குத்துகிற வேலை.

198. அவன் ‘சுயம்’ (நடிப்பு) வெளுத்துவிட்டது(தெரிந்துவிட்டது).

199. அவன் வைத்ததே சட்டம்; இட்டதே கட்டளை என்று வாழ்கிறான்.

200. அவன் தன்னால் கெட்டால், அண்ணாவி என்ன செய்வார்!
201. அவன் தொட்டுக் கொடுத்தான்; நான் இட்டுக் கொடுத்தேன்.

202. அவன் நா (நாக்கு) அசைந்தால், (பேசினால்) நாடு அசையும்.

203. அவன் பேசுகிறது தில்லு முல்லு; போகிறது திருவாதிரை, திருவோணம்.

204. அவன் பேச்சைத் தண்ணியில்தான் எழுதணும் (நம்பக் கூடாது).
 
205. அழகு (அழகி) இருந்து அழும் (அழுவாள்); அதிர்ஷ்டம் இருந்து உண்ணும்.

206. அழகு (அவளுக்கு) ஒழுகுகிறது; ஓட்டைப் பானையைக் கொண்டுவா. பிடித்து வைக்க. (அங்கதச் சுவை உடைய பழமொழி இது)

207. அழகுப் பெண்ணே காத்தாயி, உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி. (அங்கதச் சுவை)
 
208. அழச் சொல்வார் தமர் (உறவினர்) சிரிக்கச் சொல்வார் பிறர்.

209. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் (திருக்குறளின் கருத்தில் அமைந்த பழமொழி இது. ஏழைகளை அழவைத்துச் சேர்த்த பணம் எல்லாம்; சேர்தவனை அழவைத்து விட்டுச் சென்று விடும்)

210. அழித்துக் கழித்துப் போட்டு; ‘வழித்து நக்கி' என்று பெயரிட்டானாம். (அங்கதச்சுவை)

211. அழிந்த கொல்லையிலே, குதிரை மேய்ந்தால் என்ன...? கழுதை மேய்ந்தால் என்ன..? (எந்தப் பயனும் இல்லை என்பது பொருள்)

212. அழிந்தவள் யாரோடு போனால் என்ன..?

213. அழி வழக்குச் (பொய் வழக்கு) சொன்னாலும், பழிபொறுப்பான் மன்னவன்.

214. அழுகிற ஆணையும்; சிரிக்கிற பெண்ணையும் நம்பாதே( எப்போதும் அழுகிற ஆண்; சிரிக்கிற பெண்)

215. அழுகிற பிள்ளையிடம் வாழைப்பழத்தைக் காட்டி ஏமாற்றுவதைப் போல. . . (நகைச்சுவை)

216. அழுகிற வீட்டில் இருந்தாலும், ஒழுகுகிற வீட்டில் குடியிருக்க முடியாது.

217. அழுகை ஆங்காரத்தின் (கோவத்தின்) மேல்; சிரிப்பு கெலிப்பின்(மகிழ்வின்) மேல்.

218. அழுக்கை அழுக்கு கொல்லும் (பழங்காலத்தில் அழுக்கான துணியை வெளுக்க வண்ணான் அழுக்குத் துணியுடன் உவர் மண்ணைச் சேர்த்து அத்துணியை மேலும் அழுக்காக்கிபின் அடித்துத்துவைப்பான். இப்போது துணியில் ஏறிய உவர்மண் என்ற அழுக்குடன் துணியில் ஏற்கனவே இருந்த அழுக்கும் சேர்ந்து ஆற்று நீரோடு போய்விடும். துணி வெள்ளையாய் வெளுத்துவிடும். இங்கு அழுக்கை அழுக்கே கொன்றுவிடுகிறது)

219. அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் எப்போதும் இருக்காதே! (அவலச்சுவை)

220. அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்!
201. அவன் தொட்டுக் கொடுத்தான்; நான் இட்டுக் கொடுத்தேன்.

202. அவன் நா (நாக்கு) அசைந்தால், (பேசினால்) நாடு அசையும்.

203. அவன் பேசுகிறது தில்லு முல்லு; போகிறது திருவாதிரை, திருவோணம்.

204. அவன் பேச்சைத் தண்ணியில்தான் எழுதணும் (நம்பக் கூடாது).
 
205. அழகு (அழகி) இருந்து அழும் (அழுவாள்); அதிர்ஷ்டம் இருந்து உண்ணும்.

206. அழகு (அவளுக்கு) ஒழுகுகிறது; ஓட்டைப் பானையைக் கொண்டுவா. பிடித்து வைக்க. (அங்கதச் சுவை உடைய பழமொழி இது)

207. அழகுப் பெண்ணே காத்தாயி, உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி. (அங்கதச் சுவை)
 
208. அழச் சொல்வார் தமர் (உறவினர்) சிரிக்கச் சொல்வார் பிறர்.

209. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் (திருக்குறளின் கருத்தில் அமைந்த பழமொழி இது. ஏழைகளை அழவைத்துச் சேர்த்த பணம் எல்லாம்; சேர்தவனை அழவைத்து விட்டுச் சென்று விடும்)

210. அழித்துக் கழித்துப் போட்டு; ‘வழித்து நக்கி' என்று பெயரிட்டானாம். (அங்கதச்சுவை)

211. அழிந்த கொல்லையிலே, குதிரை மேய்ந்தால் என்ன...? கழுதை மேய்ந்தால் என்ன..? (எந்தப் பயனும் இல்லை என்பது பொருள்)

212. அழிந்தவள் யாரோடு போனால் என்ன..?

213. அழி வழக்குச் (பொய் வழக்கு) சொன்னாலும், பழிபொறுப்பான் மன்னவன்.

214. அழுகிற ஆணையும்; சிரிக்கிற பெண்ணையும் நம்பாதே( எப்போதும் அழுகிற ஆண்; சிரிக்கிற பெண்)

215. அழுகிற பிள்ளையிடம் வாழைப்பழத்தைக் காட்டி ஏமாற்றுவதைப் போல. . . (நகைச்சுவை)

216. அழுகிற வீட்டில் இருந்தாலும், ஒழுகுகிற வீட்டில் குடியிருக்க முடியாது.

217. அழுகை ஆங்காரத்தின் (கோவத்தின்) மேல்; சிரிப்பு கெலிப்பின்(மகிழ்வின்) மேல்.

218. அழுக்கை அழுக்கு கொல்லும் (பழங்காலத்தில் அழுக்கான துணியை வெளுக்க வண்ணான் அழுக்குத் துணியுடன் உவர் மண்ணைச் சேர்த்து அத்துணியை மேலும் அழுக்காக்கிபின் அடித்துத்துவைப்பான். இப்போது துணியில் ஏறிய உவர்மண் என்ற அழுக்குடன் துணியில் ஏற்கனவே இருந்த அழுக்கும் சேர்ந்து ஆற்று நீரோடு போய்விடும். துணி வெள்ளையாய் வெளுத்துவிடும். இங்கு அழுக்கை அழுக்கே கொன்றுவிடுகிறது)

219. அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் எப்போதும் இருக்காதே! (அவலச்சுவை)

220. அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்!

221)அழுதபிள்ளை சிரிச்சிதாம்; கழுதைப் பாலைப் குடிச்சிச்சாம் (இது ஒரு நகைச்சுவையான வழக்குத் தொடர்).

222) அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்.

223) அழுவார் (ஒப்பாரி வைத்து அழுவார்) அற்ற பிணமும்; ஆற்றுவார் (தீயை அணைப்பார்) அற்ற சுடலையும் (சுடுகாடும்) வீண்.

224) அழையா வீட்டிற்குள் நுழைய மாட்டார் சம்பந்தி (பெண்ணைக் கட்டிக் கொடுத்தவர்).

225) அழகாரி பட்டணத்திலும் (இந்திரலோகத்தின் தலைநகரிலும்) விறகுத் தலையன் (அசிங்கமான தோற்றம் கொண்டவன்) உண்டு.

226) அளக்கிற நாழி அகவிலையை (விலைவாசி உயர்வை) அறியுமா...? (நாழி என்ற முகத்தல் அளவை புழக்கத்தில் இருந்த கால கட்டத்தில் உருவான பழமொழி இது).

227)அளந்த நாழி கொண்டு அளப்பான் (நாம் செய்த வினைகள் திரும்பவரும் - விதைத்தது தான் விளையும் என்பது போன்ற பொருள் உடைய பழமொழி).

228)அளந்தால் ஒரு சாணுக்கில்லை (ஜான்-உயரம்) அரிந்தால் ஒரு சட்டிக்கு இல்லை(அளவு) அது பண்ணுகிற சேட்டையோ தாங்க முடியவில்லை (சேட்டை செய்கிற பூனை முதலிய வளர்ப்பு மிருகங்களைப் பார்த்து இப்படிச் சொல்வார்கள்).

229) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.

230) அள்ளாது குறையாது; சொல்லாது பரவாது (வார்த்தை- வதந்தி).

231) அள்ளிக் குடிக்கத் தண்ணி இல்லை; அவள் பேர் (பெயர்) கங்கா தேவி.

232) அள்ளிக் கொடுத்தால் ‘சும்மா’(ஓசி), அளந்து கொடுத்தால் ‘கடன்’.

233) அள்ளிக் கொண்டு போகும் போதும், நுள்ளிக் கொண்டு போகிறான்.

234) அள்ளுகிறவன் பக்கத்தில் இருந்தாலும் பரவாயில்லை கிள்ளுகிறவன் பக்கத்தில் இருக்காதே!

235) அறக்கப் பறக்கப்(வேக வேகமாகப்) பாடுபட்டாலும்; படுக்கப் பாய் இல்லை!

236) அறக்காத்தான் பெண்டிழந்தான்; அலுகாத வழி (தூரம்) சுமந்து அழுதான்( காதவழி என்ற நீட்டல் அளவை வழக்கில் இருந்த காலத்தில் இந்தப் பழமொழி தோன்றியிருக்க வேண்டும்; இந்தப் பழமொழியை மையமாகக் கொண்டு ஒரு பாலியல் நாட்டார் கதை உள்ளது).

237) அறக் குழைத்தாலும்  குழைப்பாள் (சோற்றை) அரிசியாய் இறக்கினாலும் இறக்குவாள்(அது மனைவியின் அப்போதைய மனநிலையைப்  பொறுத்தது).

238) அறச் செட்டு(சட்டத் திட்டம்) முழு நஷ்டம்( அளவுக்கு அதிகமான சிக்கனத்தாலும் நஷ்டமே வரும்).

239)அறத்தால் வருவதே இன்பம் (திருக்குறளின் கருத்தைச் சொல்லும் பழமொழி. இந்தப்பழமொழியில் இருந்து திருக்குறள் படைக்கப்பட்டதா, இல்லை. திருக்குறளை மையமாகக் கொண்டு இந்தப் பழமொழியைப் படைத்தார்களா.  . என்பதை ஆராய வேண்டும்).

240) அற நனைந்தவனுக்கு (முழுவதும் நனைந்தவனுக்கு) கூதல் (வாடை- விரையல்) ஏது? (முழுக்க நனைந்தவனுக்கு முக்காடு எதுக்கு? என்ற பழமொழியும் இதே கருத்தைத்தான் விளக்குகிறது).

241) அறப்படித்த (சேட்டை செய்யும்) பூனை. காடிப்பானையில் தலையை விடும். (வழுவி உள்ளே விழுந்து விடும்.)

242) அறப்படித்த மூஞ்சுறு (எலியில் இது ஒரு வகை) கழனிப்பானையில் (எச்சித்தண்ணீர் உள்ளபானையில்) விழுந்ததைப் போல் (கழனிப்பானையில் விழுந்த மூஞ்சுறு வெளியே வர முடியாமல் பானைக்குள்ளேயே கிடந்து மாண்டுவிடும்)

243) அறப்படித்தவன் (சட்டம் பேசுகிறவன்) அங்காடிக் (கடைவீதிக்குப்) போனால் விற்கவு ம் மாட்டான்  வாங்கவும் மாட்டான் (வியாபாரத்திற்கு நெளிவு சுழவு வேண்டும்)

244) அறம் பொருள் இன்பம் - அனைவருக்கும் கிடைக்காது (ஏதாவது குறைந்தே கிடைக்கும்)

245) அறவடிக்கும் ‘முன் சோறு’ (பானையின் வாய்வளையத்தில் இருக்கும் சோறு) காடிப்பானை (கூழப்பானை)யில் விழுந்தாற் போல.

246) அறவும் (மிகவும்) கொடுங்கோல் செய்யும் அரசன் கீழ குடியிருப்பதைவிட, குறவன் (நாடோடி) கீழ குடியிருப்பது நல்லது.

247) அறிஞர்க்கு அழகு; அகத்துணர்ந்து (மனதை உணர்ந்து) கொள்வது.

248) அறிந்த (பழக்கமான) ஆண்டை (பண்ணையார்) என்று கிட்டப் போய் கும்பிடப்போனேன். ஆண்டையோ, உன் அப்பன் ஐந்து பணம் கடன் தர வேண்டும், எடுடா பணத்தை என்றான். (நாடகப் பாங்கான காட்சி வடிவான பழமொழி)

249) அறிந்தவன் (முன்பே பழக்கமானவன்) என்று கும்பிடப் போனால், அடிமை வழக்கிட்ட கதையாக இருக்கிறதே!)

250) அறிந்தும் கெட்டேன்; அறியாமலும் கெட்டேன். கடைசியில் சொறிந்த இடம் புண் ஆயிற்று. (விபச்சாரி ஒருத்தி கூறிய பழமொழ)

251) அறியாமல் தாடியை வளர்த்து, அம்பட்டன் (நாசுவின்) கையில் கொடுக்கவா..?

252) அறிவுடன் ஞானமும் வேண்டும்; அன்புடன் ஒழுக்கமும் வேண்டும் (அறிவு என்பது வேறு - ஞானம் என்பது வேறு)

253) அறிவுடையினரை அடுத்தால் (அண்டினால்) போதும்.

254) அறிவு உடையாரை, அரசனும் விரும்புவான்.

255) அறிவை உரைக்கும் (சொல்லும்) வாய் (உதடு) அன்பை உரைக்கும் நா(நாக்கு)

256) அறிவேன், அறிவேன், ஆலிலை புளிய இலை போலிக்கும் என்றானாம் (அங்கதச்சுவை)

257) அறுகம்புல்லும் ஆபத்துக்கு உதவும்.

258) அறுக்க ஊறும். பூம்பாளை (தென்னம்பிள்ளை - கள்ளைச் சுரக்கும்) அணுக ஊறும் சிற்றின்பம்.

259) அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி ஐம்பத்தெட்டு அருவாளைக் கட்டி இருக்கிறான் (அங்கதச் சுவையுடைய பழமொழி இது)

260) அறுதலி மகனுக்கு வாக்கப்பட்டு (வாழ்க்கைப்பட்டு) விருதாவிலே தாலி அறுந்தேன். (வீணாக விதவை ஆனேன்)

261) அறுத்தவள் ( தாலியறுத்தவள்- விதவை) ஆம்பளப் புள்ளை பெற்ற கதையா இருக்கே!

262) அறுத்த விரலுக்கு (மருந்தாகத் தடவ) சுண்ணாம்பு கொடுக்க மாட்டாளே! (அங்கதச் சுவை)

263) அறுத்துக் கொண்டதாம் (காலில்கட்டி இருந்த தளையை அறுத்து கொண்டதாம்) கழுதை; எடுத்ததாம் ஓட்டம். (அறுத்து என்பதற்குப் பதில் ‘அத்து’ என்ற வட்டார வழக்குச் சொல்லுடனும் இப்பழமொழி வரும்)

264) அறுபத்தினாலடி கம்பத்தில் ஏறி வித்தை காட்டினாலும் அடியில் இறங்கித்தான் (தரையில் இறங்கித்தான்) ‘காசு’ வாங்க வேண்டும்.

265) அறுப்புக் காலத்திலே (அறுவடைநாளிலே) எலிக்கும் அஞ்சாறு வப்பாட்டிகளாம் (நகைச்சுவை)

266) அரையிலே ஆடிய பின்தான் ஒத்திகை பார்த்த பின்தான்; அம்பலத்தில் ஆட வேண்டும்.

267) அற்ப ஆசை (பொன்னாசை முதலியன) கோடித்தவத்தைக் கெடுத்து விடும்.

268) அற்பக் கோபத்தினால் அறுந்த மூக்கை, ஆயிரம் சந்தோஷத்தாலும் ஒட்ட வைக்க முடியாது.

269) அற்பனுக்கு பவுசு (வாழவு) வந்தால், அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.

270) அற்பின் கையில் ஆயிரம் பொன் வாங்குவதை விட, நற்புத்திரன் (நல்லவன்) கைத்தவிடு நன்று.

271) அற்பன் கையில் ஆயிரம் பொன் கிடைத்தால் வைக்கிட இடம் அறியான்.

272) அற்றது ‘பற்று’ எனில் உற்றது வீடு.( ஆசையை விட்டவன் சொர்க்கம் புகுவான்)

273) அன்பற்ற (வேண்டாத) மாமியார்க்கு கால்பட்டாலும் குற்றம்; கை பட்டாலும் குற்றம்.

274) அன்பற்ற மாமியாளைக் கும்பிட்டாலும் குற்றம் சொல்வாள்.( மாமியார்- மருமகள்- உளவியல் இது)

275) அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறியலாம். (ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை என்ற பழமொழியுடன் ஒப்புமை உடைய பழமொழி இது).

276) அன்புள்ள வாழ்வு; அலையற்ற நதி.

277) அன்பே பிரதானம்; அதுவே வெகுமானம் (பரிசு).

278) அன்று (தாத்தாகாலத்தில் இருந்ததாகச் சொல்லும்) ஆயிரம் பொன்னிலும், இன்று நின்ற (தற்போது கையிலிருக்கும்) ஒரு காசு பெரியது.

279) அன்றில்லை, இன்றில்லை அழுகல் பலாக்காய், கல்யாண வாசலிலே கலிந்துண்ண வந்தாயோ...? (திடீர் நட்பைக் கேலி செய்யும் அங்கதச்சுவையுடைய பழமொழி).

280) அன்று இருந்திருக்கலாம் (கெட்ட பழக்கம்) நின்றிருக்கல் ஆகாது!(என்றும் அது நீடிக்கலாகாது).

281. அன்று (ஆண்டவன்- இறைவன்) எழுதிய எழுத்தை (தலை எழுத்தை) யாராலும் அழித்தெழுத முடியாது.

282. அன்று கண்டதை அடுப்பிலே போட்டு; ஆக்கின பானையைத் தோளிலே போட்டுக் கொண்டு திரிகிறதைப் போல . . .(நகைச்சுவை)

283. அன்று கண்ட மேனிக்கு(உடல் அழகு) அப்படியே இருக்கிறாள், அம்சவல்லி. (பெருமிதச்சுவை)

284. அன்று (முகந்து) குடிக்கத் தண்ணீர் இல்லை; ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.

285. அன்று தின்ற ஊண் (சாப்பாடு) ஆறுமாதப் பசியைத் தாங்குமா..?

286. அன்று பொத்தும் துணியில் கிழிசலும் இல்லை; இன்று தையலும் இல்லை.

287. அன்றைக்கு (நாளைக்கு) கிடைக்க இருக்கிற ஆயிரம் பொற்காசை விட, இன்றைக்குக் கிடைக்கிற அரைக்காசு (நாணயம்) பெரியது.

288. அன்னதானத்திற்கு இணையாக என்ன தானமிருக்கிறது உலகில். . ?

289. அன்ன நடை (அலங்கார நடை) நடக்கப் பழகப் போய் காக்காய் (காகம்) தன்நடையும் மறந்த கதையாய் இருக்கிறதே!(இப்படி மொழியில் அங்கதச் சுவை உள்ளது)

290. அன்னப்பயிலுக்கு (சோறு வடித்த தண்ணீர்) சிங்கி அடித்தவன் (கிடைக்காமல் அலைந்தவன்) ஆவின் (பசுவின்) பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.

291. அன்னம் (சோறு) இட்ட வீட்டில்; கன்னம் (கன்னக்கோல்) வைக்கலாமா? (திருடலாமா..)

292. அன்னம் ஒடுங்கினால்; அஞ்சும் ஒடுங்கும். (ஐந்து புலன்களும் - மெய்- வாய்-கண்-மூக்கு- செவி)

293. அன்னம் இறங்குவது (தொண்டையை விட்டுக் கீழே உணவுக்குழாய்க்குச் சோறு இறங்கியது) அபான வாயுவால் (குதத்தில் இருந்து காற்று (குசு) வெளியேறுவதால்தான்)

294. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். (கண்கண்ட தெய்வம்) - முதுமொழி சார் பழமொழி)கடித இலக்கியம் -10 திருமதி. கி.ரா. (கணவதி அம்மையார்) அவர்களுக்கு, தீப.தங்கம்மாள் (ரசிகமணி டி.கே.சி.யின் பேத்தி) எழுதியது.

மத்தளம்பாறை

8-2-1960

அன்புள்ள பிள்ளையார் அம்மாவுக்கு,

"என்னம்மா ஒரே அடியாத்தான் கொஞ்சிகிட்டு இருக்கேங்க". "யார் அம்மா கொஞ்சுகிறது. நீங்களா? நானா? நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் நீங்க என்னண்ணா ஒவ்வொரு கடிதத்திலும் பங்காரு அம்மா, அபரஞ்சி அம்மா என்று என்னத்தையாவது எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். அப்படியாவது அர்த்தத்தையாவது சொல்லித்துலைக்கிறீர்களா? அதுவும் மாட்டேன் என்கிறீர்கள். பதில் கடிதத்தில் அபரஞ்சி அம்மாவுக்கும், பங்காரு அம்மாவுக்கும் என்ன பாஷையில் என்ன அருத்தம் என்று விவரமாக எழுதி அனுப்புங்கள் தயவுசெய்து. அருத்தம் தெரியாமல் ரெண்டாட்டில் ஒரு ஆடு முளித்த மாதிரி முளித்துக்கொண்டு இருக்கிறேன். நான் பிள்ளையார் அம்மா என்று எழுதியதிற்கு மாத்திரம் நீங்க 2 பலம் கோபப்படுகிறீர்களே? நீங்க இப்படியெல்லாம் எழுதுவதற்கு நான் எத்தனை பலம் கோபமோ படலாமே.

நான் அப்படியா உங்களைப்போல் கோபப்படுகிறேன்?" "ஐயே நேரில் வந்து பார்த்தால் அல்லவா அம்மா கோபத்தில் உங்கள் முகம் போரபோக்குத் தெரியும். யார் கிட்ட அம்மா வைத்துக் கொண்டீர்கள் உங்கள் டூப்பெல்லாம். அதெல்லாம் இந்த ஆசாமிகிட்ட நடக்காது அம்மா நடக்காது." "டூப்பும் இல்லை கீப்பும் இல்லை, நிசமாகவேத்தான் சொல்லுகிறேன். வேணுமானால் நீங்கள் இங்கு வந்து நேரில் நான் கோபப்படுகிறேனா இல்லையா என்று பாருங்களேன்". "நான் வந்த நேரம் கோபப்படாமல் இருப்பீர்கள்.

நான் ஊருக்கு திரும்பியதும் கோபப்படுவீர்கள்". "இது என்னடா தொல்லையாக இருக்கிறது அப்படின்னா இப்படி இப்படினா அப்படி என்று கொண்டு இருக்கிறது" "என்ன இருக்கிறது? யானையா பூனையா இருக்கிறார்கள் என்று சொல்ல முடியவில்லையோ? இல்ல கேட்கிறேன்" "அம்மா தாயே மகாலச்சுமி, வாய் தவறி வந்துவிட்டது மன்னித்துக்கொள்ளுங்கள். இனிமேல் அப்படி எல்லாம் சொல்லவில்லை. தப்பு தப்பு தப்பு. இது எதற்கு இவ்வளவு சண்டை போட வேண்டும். நான் முதல்க் கடிதத்தில் கேலியாக பேர் எழுதிவிட்டு மறு கடிதத்தில் உங்கள் பேரை எழுதி இருந்தேன் அல்லவா? அதை மாதிரி நீங்களும் இரண்டாவது கடிதத்தில் என் பேரை எழுதி இருந்தால் இவ்வளவு சண்டை வந்து இருக்காது அல்லவா? இனிமேல் நீங்களும் இப்படி எல்லாம் எழுதாதீர்கள். நானும் எழுதவில்லை. இப்படியெல்லாம் எழுதாவிட்டால் நம்மளுக்குள் சண்டை வராது அல்லவா? இது எதற்கு வம்பு சண்டையும் கொண்டையும் போட்டுக்கொண்டு இருக்கவேண்டும்?" "என்னம்மா கொண்டையும் போடவேண்டாம் என்றா சொல்லுகிறீர்கள்?" "கொண்டை போடாவிட்டால் என்ன? ஜடை பின்னிப்போட்டுக் கொள்ளவேண்டியதுதானே? கொண்டை போடுவதற்கு நமக்கு என்ன அப்படியா வயசு ஆய்விட்டது? ரொம்ப வயசு ஆனவர்கள்தானே கொண்டை போடுவார்கள்? நம்ம இருவருக்கும் வயசுதான் ஆகவில்லை என்றால் பார்ப்பதற்காவது பெரிய ஆளாக இருக்கிறோமா? அதுவும் இல்லை. நீங்களும் சின்னப்பிள்ளை மாதிரித்தான் இருக்கிறீர்கள். நானோ கேட்கவே வேண்டாம். நீங்களாவது சிறு பிள்ளை மாதிரியாவது இருக்கிறீர்கள். நான் என்னடா என்றால் குட்டைச் சுரைக்காய் மாதிரியேதான் இருக்கிறேன். ஆகையால் நம்ம இரண்டு பேரும் இன்னும் கொஞ்ச நாளைக்கு ஜடை பின்னிப் போட்டுக் கொள்ளலாம் அல்லவா?

தங்கள் கடிதமும் பொங்கல் வாழ்த்தும் கிடைத்தது ரொம்ப சந்தோஷம். இது நாள்வரை பதில் போடாததற்கு வருந்துகிறீர்களா? வருத்தப்படாதேர்கள். இங்கு ஒரு சந்தோஷ செய்தி நடந்தது. ஆகையால்த்தான் இதுநாள் வரை தாமதம் ஏற்பட்டது. "அது என்னம்மா சந்தோஷ செய்தி? அதை என்னிடம் சொல்லக் கூடாதா?" "உட்காருங்கள் சொல்லுகிறேன். அதாவது என் நாத்தனா. நாத்தனா என்றால் என் சொந்த நாத்தனா இல்லை. வாடகைக்கு வாங்கின நாத்தனா."

"இது என்னடா கூத்தா இருக்கு. சொந்த நாத்தனா என்றால் என்ன வாடகைக்கு வாங்கின நாத்தனா என்றால் என்ன"என்று நினைக்கிறீர்களா? சொந்த நாத்தனா என்றால் மீனா அப்பாகூட பிறந்த தங்கை. வாடகைக்கு வாங்கின நாத்தனா என்றால் அவர்களுக்கு வேறு எந்த வழியிலாவது தங்கையாக இருக்கவேண்டும். என்ன புரியரதா இல்லையா?" "ஊம் ஊம் புரிகிறது புரிகிறது. அப்புறம் அந்த வாடகைக்கு வாங்கிய நாத்தனாக்கு என்ன? குறையும் சொல்லுங்கள்". "அந்தப் பிள்ளை பாளையங்கோட்டை காந்திமதி பள்ளிக்கூடத்தில் ருது ஆய்விட்டாள். அந்தச் சமயத்தில் அவள் அப்பாவும் அம்மாவும் தென்காசி ஆஸ்பத்திரியில் இருந்தார்கள். அவர்கள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போக முடியாததால் எங்கள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்து 10 நாள் கழித்து சடங்கு விசேஷம் நடத்தி திரும்பவும் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டோம். அந்தப் பெண் இருந்ததால் அந்தப்பெண்கூட பல்லாங்குளி, தாயக்கட்டம், சீட்டு எல்லாம் விளையாடிக்கொண்டு இருந்தேன்.

பொழுது போகிறது தெரியாமல் போய்விட்டது. ஆகையால்த்தான் உங்களுக்கு கடிதம் எழுத நேரமில்லை. இந்த விளையாட்டில் பாதிநேரம் போய்விடும்.

அவளுக்கு புட்டு, களி, பருப்புச்சோறு எல்லாம் வேலையாட்களை செய்ய சொல்லுகிறதில் பாதி நேரம் போய்விடும்.

"பொய் தானே! சொன்னேங்க" "யாரு நானா என்ன பொய் சொன்னேன் என்றா கேட்கிறீர்கள். அன்று ஒருநாள் உங்களைமாதிரி எனக்கு வக்கணையாக கடிதம் எழுத தெரியாது. அப்படி இப்படி என்று. இப்போ எனக்கு எழுதின கடிதத்தில் வெளுத்து வாங்கி இருக்கிறீர்களே. அடி சக்கே பொடிமட்டே உங்கள் சார்வாள் கி.ரா.கிட்டே மார்க்கு கூட 10/100 வாங்கி இருக்கிறீர்களே?

எங்கள் ஊர்க்கோயிலில் ஒரு கலியாணம் தை 29ந்தேதி நடக்கப் போகிறது. "கலியாணம் கோயிலில்லா அது யாருக்கு அம்மா?" "அது ஒருத்தருக்கும் இல்லை. வேப்பமரத்துக்கும் அரசமரத்துக்கும். .ஈஸி ஈஸி . . . என்னம்மா விழுந்து விழுந்து சிரிக்கிறீர்கள்?" "பின்ன என்னம்மா? மரத்துக்கு கலியாணம் என்று சொல்லுகிறீர்கள், சிரிக்காமெ என்ன செய்கிறது?" "அப்படினா நான் சும்மா விளையாட்டுக்கு சொல்லுகிறேன் என்று நினைக்கிறீர்களா?" "அதெல்லாம் இல்லை நிஜமாகவேதான் சொல்லுகிறேன். மரத்துக்கு கலியாணம் நடக்குமா நடக்காதா என்று நீங்களே வேண்டுமானாலும் யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். இல்லாவிட்டால் இங்கு வந்து நேரிலே பார்த்தே சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாமே? கட்டாயம் கல்யாணத்திற்கு வந்துவிடுங்கள்."

"ஏ அம்மாடி என் கையும் குருக்கும் வலிக்கிறதே." "ஏன் உங்களுக்கு உடம்பு சௌகரியம் இல்லையா?" "உடம்பு எல்லாம் சௌகரியமாகத்தான் இருக்கிறது. எல்லாம் உங்களால்தான் வலிக்கிறது" "என்னாலா அது என்னம்மா என்னால் என்கிறீர்கள்? நான் என்னம்மா செஞ்சேன்?" "நீங்கதானே அம்மா 8 பக்கம் கடிதம் எழுதச் சொன்னீர்கள். 8 பக்கம் எழுத 4 மணி நேரம் ஆகி இருக்கிறது. ஒரே அடியாக 4 மணி நேரம் எழுதியதால்த்தான் எனக்கு குருக்கு வலிக்கிறது. இனிமேல் எல்லாம் என்னால் இப்படி எல்லாம் எழுத முடியாது அம்மா"

மற்றப்படி இங்கு யாவரும் சுகம்.

இப்படிக்கு

தீப.தங்கம்மாள்.

பின்குறிப்பு:

இலக்கியப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்ட ரசிகமணி டி.கே.சி. அவர்களின் பேத்தியார் எழுதிய இக்கடிதம் கேலியும் கிண்டலும் எள்ளலும் மிக்கதாய், பாமரத்தனம் நிரம்பியதாய்த் திகழ்கிறது.

ரசிகமணி அவர்களின் ரசிப்புத் தன்மையும், அங்கதச் சுவையும் நிகழ்ச்சி விவரணையும் இக்கடிதத்திலும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலக்கியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, எழுத்தாளர் ஒருவரின் வாழ்க்கைத்துணைவிக்கு எழுதிய கடிதம் இது. பெண்களின் தனிமை வாசிப்பிற்கான இக்கடிதம் பொது வாசிப்பிற்கு இப்போது வருகிறது. பெண்களின் மனம்சார் பதிவாக இக்கடிதம் திகழ்கிறது.

கடிதச்சேகரம்: கழனியூரன்

செவக்காட்டுச் சேதிகள்-3 பாம்பின் கால் தடம்


ஊர்வனவற்றுள் பாம்பு ஒரு வித்தியாசமான உருவ அமைப்பைக் கொண்டது. பாம்பைப் பார்த்துப் பயந்த ஆதி மனிதர்கள் பாம்புகளைப் பற்றி நிறையச் சேதிகளையும் படைத்திருக்கிறார்கள்.

பாம்பை மையமாகக் கொண்ட பல புராண மரபுக் கதைகள் நம்மிடம் உள்ளன. ஆதிசேடன் என்ற பாம்பைப் பற்றிய புராணச் செய்திகள் பெருந்தெய்வ வழிபாட்டு மரபில் உள்ளன. சிறுதெய்வ வழிபாட்டிலும் பாம்பிற்கு ஒரு தனி இடம் உள்ளது.

பத்து தலை நாகம் பாம்புப் படுக்கை என்று தொடங்கி, தாழம்பூவில் குடியிருக்கும் சிறு நாகம் வரை வண்டி வண்டியாக பாம்புகளைப் பற்றிய சேதிகளை அடுக்கலாம். பாம்புப் புத்தும் சிறுதெய்வ வழிபாட்டில் மக்கள் வழிபடும் ஸ்தலமாக உள்ளது. நாகம்மை ஒரு குறுஞ்சாமியாகும்.

நாகராஜனைக் கடவுளாக வழிபடும் மரபும் தமிழ்ச் சமூகத்தில் உள்ளது. நாகர்கோயிலில் உள்ள ‘நாகராசா’ கோயில் புகழ்பெற்ற ஆலயமாகும். அக்கோயிலின் பெயரை ஒட்டித்தான் நாகர்கோயிலுக்கு அப்பெயர் வந்தது என்று எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் ஒருமுறை நேர்பேச்சில் என்னிடம் கூறினார்.

பாம்மை மையமாகக் கொண்ட பழமொழிகள் ஏராளமாக நடப்பில் மக்களால் சொல்லப்படுகிறது. பாம்புகளை மையமாகக் கொண்ட நாட்டுப்புறக் கதைகள் பல உள்ளன. பாம்பை மையமாகக் கொண்ட சேதிகளை மட்டும் திரட்டினால் ஒரு தனி நூலே எழுதலாம் என்று தோன்றுகிறது.

இந்த இதழில் பாம்பைப் பற்றிய இரண்டு பதிவுகளை மட்டும் வாசகர்கள் முன் வைக்கிறேன்.

திருநெல்வேலி டவுன் மேல ரத வீதியில் ஒரு நகைக்கடையின் விளம்பரப் பலகை. நடிகர் சொக்கலிங்க பாகவதர் கையில் தேசியக் கொடியை வைத்திருப்பதைப் போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த வித்தியாசமான விளம்பரத்தைப் பார்த்து, அந்த நகைக்கடைக்குள் சென்றேன்.

அந்த நகைக்கடையின் உரிமையாளர் பெயர் நடராஜன். தற்போது அவர் சுத்தமல்லி என்ற ஊரில் வசித்து வருகிறார். அவரோடு பலப்பல பேச்சாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அவர், நாங்கள் பிள்ளைமார் சாதியிலேயே தனி ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள். எங்கள் பிரிவிற்கு ‘இல்லத்துப் பிள்ளைமார்’ என்று பெயர். சிலர் இப்பிரிவினரை ‘ஈழுவர்’ என்றும் சொல்வார்கள். எங்கள் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் பாம்பைப் பற்றிய பயம் கிடையாது. எங்கள் பிரிவில் இதுவரை பெண்கள் யாரும் பாம்பு கடித்துச் செத்ததில்லை” என்று சொன்னார்.

நான் உடனே “ஏன் அப்படி?” என்று கேட்டு அவர் வாயைக் கிளறினேன். நகைக்கடை அதிபரான சுத்தமல்லி நடராஜன் கூறியதை இனி அப்படியே வாசகர்கள் முன் வைக்கிறேன்.

“எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அந்தக் காலத்தில் விறகு பெறக்க காட்டிற்குப் போயிருக்கிறாள். அவளோட சொந்த ஊர் சொக்கம்பட்டி. அந்த ஊருக்கு மேற்கே சற்று தொலைவில் உள்ள மலங்காட்டிற்குச் சென்று விறகு பெறக்கி இருக்கிறாள். அவள் புள்ள பெத்த பொம்பளை. குழந்தை பெற்று சுமார் ஆறு மாசம்தான் இருக்கும். எரிக்க விறகு இல்லாம மலங்காட்டுக்கு விறகு பெறக்க வந்திருக்கிறாள்.

பகலெல்லாம் அலைந்து திரிந்து காடுகளில் தன்னால முறிந்து விழுந்து கிடக்கும் காய்ந்த சுள்ளிகளைப் பெறக்கி ஒரு கட்டாகக் கட்டி வைத்துவிட்டு மத்தியான நேர களைப்புத் தீர ஒரு மரத்தடியில் படுத்தாள். அவள் மட்டும்தான் தனியாக விறகு பெறக்க காட்டிற்குப் போயிருக்கிறாள். பசி களைப்போடு மரத்தின் நிழலில் படுத்தவள் தன்னை மறந்து தூங்கிவிட்டாள். தூக்கக் கலக்கத்தில் அவளின் மாராப்புச் சேலை எப்படியோ லேசாக விலகிட்டு. ஆறுமாசக் கைக்குழந்தைக்கு காலையில் பால் கொடுத்து தொட்டிலில் போட்டுவிட்டுத் தன் மூத்த மகளிடம் பிள்ளையைப் பார்த்துக்கச் சொல்லி விட்டுத்தான் காட்டிற்கு வந்திருந்தாள். அவள் நல்லா கட்டுமுட்டான பொம்பளை. பால் சுரப்புள்ள தனம் அவளுக்கு இயற்கையாக அமைந்து இருந்தது.

காட்டுக்குள்ள மரத்து நிழல்ல தன்னந்தனியா படுத்துக் கிடந்த அந்தத் தாயின் மார்பைப் பார்த்தது ஒரு பாம்பு. அந்தப் பாம்பிற்கோ கடுமையான பசி. எனவே மெல்ல ஊர்ந்து போய் அந்தத் தாயின் மார்புக் காம்பில் வாய் வைத்துச் சுவைத்துப் பாலைக் குடித்தது. தூக்கக் கலக்கத்தில் பசி மயக்கத்தில் அந்தத் தாய் தன் நினைவு இழந்தவளாகத் தன் பிள்ளைதான் பாலைக் குடிக்காக்கும் என்று நினைத்துத் தன்னையறியாமல் பாலைச் சுரந்து கொடுத்தாள்.

பாம்பும் தன் பசி அடங்கும் வரை அந்தத் தாயின் மார்பில் பாலைக் குடித்துவிட்டுத் திரும்பியது. அப்போது தற்செயலாகத் தூக்கம் கலைந்து கண் விழித்துப் பார்த்த அந்தத்தாய், தன் மார்புகளைப் பார்த்தாள். மார்பில் அமுதப்பால் சுரந்ததற்கான அடையாளம் இருந்தது. பாம்பு ஒன்று அந்த இடத்திலிருந்து ஊர்ந்து செல்வதையும் பார்த்தாள். என்ன நடந்திருக்கும் என்பதை ஒருவாறு அந்தத் தாய் யூகித்துக் கொண்டாள் என்றாலும் அவள் அதைரியப்படவில்லை – ‘பாம்பு கடித்துச் செத்தவர்களைவிட, பாம்பு கடித்துவிட்டதே என்று செத்தவர்கள் தான் அதிகம்’ என்பதை அந்தப் பெண் தெரிந்து வைத்திருந்தாள்.

பசியோடு வந்த ஒரு பாம்பிற்குப் பால் கொடுத்து பாம்பின் பசியை அமர்த்திய பெருமையோடு அந்தப் பெண் – மாராப்புச் சேலையை சரிசெய்து கொண்டு மரத்தடியில் கிடந்த விறகுக் கட்டைத் தூக்கித் தலைமேல் வைத்துக் கொண்டு தன் வீட்டைப் பார்த்து நடந்தாள். இது ஒரு கதை.

எங்கள் சமூகத்தைச் சேர்ந்த இன்னொரு பெண், காட்டு வழியே சென்று கொண்டிருந்தாள். வழியில் ஒரு பாம்பைப் பார்த்தாள். ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்கிறது பழமொழி. ஆனால் அந்தப் பெண் அந்தப் பாம்பைப் பார்த்து பயப்படவில்லை.

அந்தப் பாம்பு மெலிந்து, தளர்ந்து, தன் நிலை மறந்து மயங்கிக் கிடப்பது போல் தோன்றியது. பாம்பும் ஒரு உசுப்பிராணி (உயிர் உள்ள பிராணி) தானேன்னு நினைச்ச அந்தப் பெண் அந்தப் பாம்பின் பக்கத்தில் போய்ப் பார்த்தாள்.

பாம்பின் கண்கள் ஒளி இழந்து காணப்பட்டது. பார்க்கவே பாவமாக இருந்தது. பாம்பும் அப்பெண்ணைக் கண்டு கலைந்து ஓடவில்லை. காட்டு வழி தனி ஆளாக இருக்கிறோம். ஆயிரம்தான் இருந்தாலும் பாம்பு விஷமுள்ள ஜந்து என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அந்தப் பெண்ணுக்கு ‘அந்தப் பாம்பிற்கு ஏதோ ஒரு நோய் அல்லது சிக்கல் இருக்கிறது. எனவே தான் நடைபாதையில் கிடந்து இப்படி மருவிக் கொண்டு கிடக்கிறது” என்று நினைத்தாள்.

நடப்பது நடக்கட்டும் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்தப் பாம்பின் அருகில் சென்றாள். அப்போது அவள் உள் மனசு வேண்டாம் இந்த விஷப்பரீட்சை என்று சொன்னது.

நல்ல மத்தியான நேரம். காட்டு வழி அது. வழிப்போக்கர்களாக யாராவது வருகிறார்களா என்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரைப் பார்த்தாள். ஒரு ஈங்குருவியையும், சுடுகுஞ்சையும் காணலை! “சவத்தப் பெய பாம்பு எக்கேடும் கெட்டுப் போகட்டும்” என்று நினைத்து பாதையில் செல்லவும் அந்தப் பெண்ணுக்கு மனசு வரவில்லை. எனவே ‘நடக்கது நாயகன் செயல்’ என்று கடவுளின் மேல் பாரத்தைத் தூக்கிப்போட்டுவிட்டு, அந்தப் பாம்பின் பக்கத்தில் போய் உற்றுப் பார்த்தாள்.

முதல் பார்வையில் ஒண்ணும் தெரியவில்லை, பாம்பின் வால் முதல் வாய் வரை உடம்புல புண் அல்லது காயம் இருக்கிறதா என்று பார்த்தாள் – ஒன்றும் துப்புத் தெரியவில்லை. பாம்பு அழுவதைப் போல் இருந்தது. எனவே மேலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாம்பின் கிட்டப் போய் அதன் வாயைப் பார்த்தாள்.

அப்போதுதான் பாம்பின் வாயில் மேல் அன்னத்திற்கும், கீழ் அன்னத்திற்கும் நடுவில் ஒரு முள் குத்தி இருப்பது தெரிந்தது. பாவம் வாயில்லா ஜீவன் அது. அதன் வாயில் முள்ளும் குத்தி விட்டால் என்னவாகும். பாம்பு தன் வாயை எப்படியெல்லாமோ மேலும் கீழும் அசைத்துப் பார்த்திருக்கிறது. வசமாக வாயின் மேல் அன்னத்திற்கும் கீழ் அன்னத்திற்கும் சேர்ந்து தைத்த முள் நகரவில்லை!

அப்போது அந்தப் பெண்ணிற்கு பாம்பின் வாட்டத்திற்கான காரணம் தெரிந்து விட்டது. நடப்பது நடக்கட்டும் என்று நினைத்து துணிந்து அந்தப் பாம்பின் வாயில் குத்தியிருந்த நீளமான முள்ளை பையப் பூப்போலப் பிடுங்கி எடுத்தாள். பாம்பின் வாயில் இருந்து லேசாக ரத்தம் கசிந்தது. அந்தப் பாம்பு நன்றியோடு ஒரு முறை அப் பெண்ணை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு பாதையை விட்டு ஊர்ந்து ஒரு புதருக்குள் சென்று மறைந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

‘பாம்பிற்குப் பால் வார்க்கதே’ என்கிறது ஒரு பழமொழி. எங்கள் குலப்பெண் ஒருத்தி பாம்பிற்குத் தாய்ப்பாலே கொடுத்திருக்கிறாள். ‘பாம்பைக் குட்டியிலேயே கொன்று விடு’ என்கிறது இன்னொரு பழமொழி. எங்கள் குலப்பெண் ஒருத்தி பாம்பிற்கு உயிர் பிச்சையே கொடுத்திருக்கிறாள். எனவே தான் எங்கள் குலப்பெண்கள் யாரையும் பாம்புகள் தீண்டுவதில்லை’ என்று பாம்புகளைப் பற்றிய சேதிகளை உணர்ச்சிமயமாய்ச் சொல்லி முடித்தார் தகவலாளர்.

பாம்புகளைப் பற்றிய இந்தத் தரவுகள் நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்டிருந்தாலும், அவைகள் உணர்த்தும் சேதிகள் அன்புமயமாய் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். நாட்டார் தரவுகளை அறிவுபூர்வமாக அணுகுவதைவிட உணர்வுபூர்வமாக அணுகுவதே நல்லது.

Wednesday, July 24, 2013

செவக்காட்டுச் சேதிகள்-21 தெய்வங்களான பலி ஆடுகள்

'தான்' என்ற ஆணவத்திற்காகவும் 'தன் சாதி உயர்ந்தது' என்ற போலி கௌரவத்திற்காகவும் விலையாகி பெற்ற தந்தையும் உடன் பிறந்த சகோதரனும் சேர்ந்து கைகோர்த்து நின்று எத்தனையோ கன்னிப் பெண்களை உயிரோடு புதைத்திருக்கிறார்கள் . தலையை வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள் . இப்படி கொலை செய்த பின் மனசாட்சி உள்ள சில மனிதர்கள் அதை நினைத்து வருந்தியிருக்கிறார்கள் . அதோடு பரிதாபமாக செத்த அந்த கன்னிப் பெண் பின்னாளில் ஆவியாக தனக்கோ , தன் குடும்பத்திற்கோ, அல்லது தன் வாரிசு பரம்பரையினருக்கோ தீங்கு செய்வாளோ என்ற பயமும் இருந்திருக்கிறது. எனவே கொலையுண்ட கன்னிப்பெண்ணை குலதெய்வமாக்கி வழிபட்டு தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்திட முயன்றிருக்கிறார்கள் . அதன்மூலம் மன அமைதி அடைந்திருக்கிறார்கள் .

இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் கடந்து வந்த பாதை மிகக்கடுமையானது . பெண்கள் அக்கினிக் குண்டங்களையும் நெருப்பாற்றையும் நீந்திவந்த நெடிய வரலாற்றுக்கு சான்றாதாராமாக எத்தனையோ நாட்டுப்புறக் கதைகளைக் கூறமுடியும் . இத்தகையை கதைகளில் எல்லாம் சம்பந்தப்பட்ட பெண் தவறு செய்தாள் என்பதற்கு எந்தவித சான்றும் இல்லை . அவள் அழகாய் இருந்தாள் என்பதைத் தவிர .

சாதிய பிரமைக்கு ஆட்பட்ட ஒருவன் , வலிமையானவனை எதிர்த்து போராட முடியாமலும் , தன் சாதி போலி கௌரவத்தை விட்டுக்கொடுக்கமுடியாமலும் இருதலைக்கொள்ளி எறும்பாக தத்தளித்தபோது , தான் பெற்ற மகளையே அழித்துவிடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளான் .

இங்கே சொல்லப்படப்போகிற கதையும் வழக்கமான 'கன்னித் தெய்வ வழிபாடு' சார்ந்த கதைதான் . ஆனால் அதில் அந்த பெண்ணை கொலை செய்த முறை மட்டும் புதுமையாக இருந்தது .. இனி கதை.

 நம்ம ஊர்ல ரொம்பக் காலத்துக்கு முன்னால காவக்காரன் குடும்பம்னு ஒண்ணு இருந்துச்சு . வாரிசு பரம்பரையா, அந்தக் குடும்பத்துக்காரங்க அரண்மனைக் காவக்கரங்களா இருந்தாங்க . அந்த குடும்பத்தை சேர்ந்த ராக்கு முத்துத் தேவர்க்கு ஒரு அழகான மகள் இருந்தா . அவ பேரு பூவாத்தா , பூவாத்தா செக்க செவேலுன்னு செவத்த ரெட்டுப் போல இருப்பா. அவளுக்கு கரண்டக்கால் வரை தலைமுடி இருந்துச்சு .

ஒருநா பூவாத்தா குளத்துக்கு குளிக்கதுக்குப் போனா. குளிச்சி முடித்து, குளத்துக்கரையோரம் இருந்த மரத்தடியில் நின்று தன் தலைமுடியை விரித்து உலர்த்தியபடி, , தன் தலைக்கு சிக்கு எடுத்துகிட்டிருந்தா . அப்ப அந்த வழியா குதிரையில போன இளைய மகராஜா, பூவாத்தாளையும் அவளோட தலைமுடி அழகையும் பார்த்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு சூறாவளி காத்து அடித்து, அவளோட முடி, பக்கத்திலிருந்த கள்ளிச்செடி மேல் விழுந்துருச்சு . அத பார்த்த மகராஜா அதனை எடுக்கப்பொனாரு. 'அன்னிய ஆம்பளைகள் என் கேசத்தை தொடக்கூடாது' என்று சொன்னாள் பூவாததா . அத கேட்டதும் மகராஜா 'நான் யாருன்னு தெரியுமா'ன்னு கேட்டார். 'ஏன் தெரியாது? நீங்க இளைய மகாராஜாதான்னு தெரியும். தெரிஞ்சிதான் சொல்லுதேன்னா பூவாத்தா .

இளைய மகாராஜா தான் இன்னார்னு தெரிஞ்சும் தன் கேசத்தை தொடக்கூடாதுன்னு சொல்லிட்டாளேன்னு நினைச்சி, கோவத்துல தன் கையில இருந்த வாளால, கள்ளிச் செடியில மாட்டியிருந்தது போக மீதி உள்ள தலைமுடியை வெட்டிட்டார் .

தான் ஆசையா வளர்த்த தலைமுடியை இளைய மகாராஜா வெட்டிட்டாரேன்னு அழுதுகிட்டே வீடு போய் செர்ந்து 'நடந்த கதை'யை தன் அண்ணன்மாரிடம் சொன்னா பூவாத்தா . அண்ணன்மார்களுக்கு கோபம் தாங்க முடியவில்லை . 'என்ன செய்ய . அரண்மனையை எதிர்க்கவா முடியும்? இப்படிச் செய்யலாமா? இது முறையான்னு அவங்களுக்கா தெரியனும்! வேலியே பயிரை மேஞ்ச கதையா இருக்கேன்னு நினச்சு மனசுக்கு உள்ளேயே குமுறுனாங்க .

இதுக்கிடையில , மகாராஜா அவர்களைக் கூப்பிட்டு , 'பூவாத்தாளை கட்டிக்க ஆசப்படுதேன் .எப்ப கல்யாணத்தை வச்சிக்கலாம்னு இன்னும் ஒரு வாரத்தில் சொல்லி அனுப்புங்க' என்றார் .

'சரி மகராஜா'ன்னு சொல்லி தலையை ஆட்டிட்டு வந்தாங்க . வீட்டுக்கு வந்ததும் , குடும்பத்துக்காரன் ஆம்பளைங்க எல்லொருமாச் சேர்ந்து கூடி ஆலோசனை செய்தார்கள் .

குடும்பத்து மூப்பன் 'இந்த மகாராஜாவுக்கு நன்றியே இல்லை. நாம தலைமுறை தலைமுறையா உயிரை பணயம் வைத்து காபந்து பண்ணியிருக்கோம் . ஆனா இளைய மகாராஜா நம்ம வீட்டு பிள்ளை தலைமுடிய அறுத்து மானபங்கபடுத்துனது காணாது, பெண் வேறு கேட்கிறார். என்னதான் நாட்டை ஆளற ராஜாவானாலும் அவங்க குலம் கோத்திரம் வேற; நம்ம சாதி சனம் வேறதான் . அதனால , நாம மகாராஜாவுக்கு இந்த விசயத்துல விட்டுகொடுக்ககூடாது' என்றார் .

பிறகு , ஆம்பளைங்க எல்லோருமா கலந்து பேசி , 'நமக்கு நம்ம சாதியோட கௌரவம்தான் முக்கியம். இந்த ராஜாவுக்கு பெண் கட்டி கொடுக்கக் கூடாது . அதே சமயம் நாம ராஜாவை பகைச்சிக்கிட்டு இந்த நாட்டுல வாழவும் முடியாது . ராஜா அவமானப்படுத்துன பிள்ளையையும் நம்மோடு வச்சிக்கிட முடியாது . அதே சமயம் இந்த ராஜாவையும் தலைகுனிய வைக்கனும்' என்று முடிவெடுத்தாஙக .

அதுபடிக்கு மறுநாள் , அரண்மனைக்கு வார வெள்ளிக்கிழமை ராத்திரியில் எங்கள் வீட்டு பெண்ணை வில்வண்டியில் 'பெண் அழைத்து' அனுப்புகிறோம். ஆனால் நாங்கள் யாரும் கூடி வரமாட்டோம் . வண்டிக்காரன் மட்டும்தான் வருவான் என்று சொல்லை அனுப்பினார்கள் .

வெள்ளிக்கிழமை வந்தது . அன்னக்கி காலையில, பூவாத்தாளை குளிப்பாட்டி , புதுச்சேலை , சட்டை கொடுத்து உடுத்தச் சொல்லி ஜோடிச்சு , சாமிகும்புடச் சொன்னாங்க. பூவாத்தாளுக்கு , நம்மளை என்ன செய்யப் போறாங்கன்னே புரிய்லே. என்றாலும் ஐயாவும் அண்ணண்மாரும் சொன்னபடி செஞ்சா.

காவக்காரங்களோட மூப்பன் வீட்டுல ஒரு பெரிய 'மரிசல்' இருந்துச்சு . மரிசல்னா, தானியம் போட்டு சேர்த்து வைக்கிற இடம் . மூப்பன் வீட்டுல இருந்த மரிசல் , ரொம்ப பெரிசு . அதுல நூறு இருநூறு கோட்டைத் தானியம் போட்டு வைக்கலாம் . மகராஜாவுக்கு வரிக்குப்பதிலா அளந்து வாங்குற தானியத்தையெல்லாம் அதுலதான் போட்டு வைப்பாங்க .

மூப்பன் வீட்டு மரிசல் நிறைய அந்த வருசம் வரியா வந்த காடக்கன்னியை (தினைமாதிரியான ஒரு வகை தானியம் ) போட்டு வச்சிருந்தாங்க. காடக்கண்ணி 'கம்பு' என்ற தாணியம் மாதிரி இருக்கும் . ஆனா அதோட தொலி வழுவழுன்னு பட்டுமாதிரி இருக்கும் . காடக்கன்னி குமிஞ்சி கிடக்கிற இடத்துல காலை வைக்க முடியாது . ஒரு சாக்கு நிறைய காடக்கன்னியை அள்ளிக்கிட்டு அதன் மேலே ஒரு பனங்காயைப் போட்டா, அது வழுவி , வழுவி, சாக்கின் தூருக்கே போயிரும். அப்படி வழுக்கும் அந்த தானியம் .

பூவாத்தாளை கூட்டிக்கிட்டுப்போயி , மூப்பன் வீட்டுல இருந்த காடக்கன்னி மருசல்மேல் போட்டு இருந்த பலகை மேல் நின்னு சாமி கும்புடச் சொன்னாங்க . பூவாத்தாள் மருசல் மேல ஏறி நின்னு கண்களை மூடி கைகளை உயர்த்தியபடி சாமி கும்பிட்டாள் . அப்ப மூப்பன் ஒரு விசையைத் தட்டினான் . பூவாத்தா நின்ற பலகை தாழ்ந்தது .

பலகையில் நின்ற பூவாத்தாளும் காடக்கன்னி மறுசலின் உள்ளே இறங்கினாள் . 'தன்னைக் கொல்லத்தான் இத்தனை வேலையும் பார்த்தார்கள் ' என்பதை அப்போதுதான் உணர்ந்த பூவாத்தாள், 'சண்டாளப்பாவிங்களா.. நீங்களும் உங்க ராஜாவும் மண்ணாப் போவிங்க' என்று சாபம் கொடுத்துக் கொண்டே, காடக்கன்னி குவியலில் மூழ்கி , மூச்சுத் திணறி செத்துப்போனாள் .

அன்னக்கி ராத்திரி, மூப்பன் வீட்டு வில் வண்டியில் ஒரு பெரிய பெட்டியை ஏற்றி, அதில் ஒரு பெட்டைக் கழுதையை ஜோடித்து பெட்டிக்குள் வைத்துப்பூட்டி, அரண்மனைக்கு அனுப்பிவிட்டு , காவக்காரன் குடும்பத்துக்காரங்க அனைவரும் ராவோடு ராவா, ஊரைக் காலி பண்ணிட்டு போயிட்டாங்க .

அன்னையிலிருந்து அவங்க செஞ்ச காரியத்துக்குப் பரிகாரமா பூவாத்தாளுக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடுதாங்க. காடக்கன்னி தானியத்துல மாவிடிச்சி, பூவாத்தா சாமிக்கு படையல் வைச்சு கும்புடுறாங்க'.

FROM :மண் மணக்கும் மனுஷங்க


கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-32 ஊரும் பெயரும்

பல இனக்குழுமக்கள் ஒரு இடத்தில் சேர்ந்து வாழ ஆரம்பித்த பிறகு, அந்த இடத்திற்கு அம்மக்கள் ஒரு பெயரையும் சூட்டிக் கொண்டார்கள்.

இப்படிச் சூட்டப்பட்ட ஊரின் பெயர்கள், வெறும் பெயர்களாக மட்டும் அல்லாமல், அவைகளும் நம் பண்பாட்டின் அடையாளமாகவும், இயற்கையின் அமைப்பையும் குறிப்பனவாக உள்ளன.

பொத்தாம் பொதுவாகப் பார்க்கும்போது, ஊரின் பெயர்கள் சாதி சார்ந்ததாகவும், நில அமைப்பு, தாவரம், மரம் போன்றவற்றின் பெயர் சார்ந்ததாகவும் திகழ்கின்றன.

சில ஊரின் பெயர்களில் இருந்து அப்பகுதி மக்கள் செய்யும் தொழிலையும், அவர்கள் வணங்கும் தெய்வத்தையும், அறிந்து கொள்ளமுடிகிறது. வரலாற்றுச் சுவடுகளாகவும், புராண மரபுக் குறியீடுகளாகவும், போர்கள், மானியங்கள், அரசமைப்புகள் சார்ந்ததாகவும் சில ஊரின் பெயர்கள் திகழ்கின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சில ஊர்ப் பெயர்களையும், அப்பெயர்களுக்குப் பின்னால் உள்ள செய்திகளையும் பற்றி இக்கட்டுரையில் பேசலாம் என்று எண்ணுகிறேன்.

‘திருநெல்வேலி’ என்ற ஊரின் பெயருக்குப் பின்னால் ஒரு புராண மரபுக்கதை உள்ளது. நெல்லுக்கு வேலியிட்ட அக்கதையின் நினைவாகவே, திருநெல்வேலிக்கு அப்பெயர் சூட்டப்பட்டதாம்.

பாளையக்காரர் ஒருவரின் கோட்டை இருந்ததால், பாளையங்கோட்டை என்று பெயர் பெற்றது.

குற்றால நாதரும், குழலாள்மணி அம்மையும் வீற்றிருந்து அருளாட்சி செய்யும் ஊர் குற்றாலம். செம்மையான கோட்டை அமைந்த ஊர் செங்கோட்டை.

தேன்கூடுகள் அதிகம் காணப்படும் பொத்தை (சிறிய மலை) உள்ள ஊர் தேன்பொத்தை. பசுமையான பொழில்கள் (சோலைகள்) சூழ்ந்த ஊர் பைம்பொழில்.

ஆற்றின் தெற்குக் கரையில் அமைந்த ஊர் தென்கரை. ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்த ஊர் வடகரை.

ஜாதி மோதல் வந்தபோது, குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால், அடைக்கலபட்டணம் என்று ஒரு ஊர் பெயர் பெற்றுள்ளது.

இரண்டு பிரிவாகச் செல்லும் ஆற்றின் நடுவே அமைந்த ஒரு ஊரின் பெயர் உள்ளாறு என்பதாகும். ஆற்றின் போக்கில் (வழியில்) அமைந்த ஊர் ஆற்றுவழி.
குத்துக்கல் போன்ற அமைப்பிலான கற்கள் அதிகம் காணப்படும் ஊரின் பெயர், குத்துக்கல் வலசை. அம்மையாய் அப்பனாய் இறைவன் வீற்றிருக்கும் ஊர் அம்மையப்பபுரம்.

அழகான மலைமேல் கோயில் அமைந்த ஊர் திருமலைக்கோயில். தந்தை (அச்சன்) ஸ்தானத்தில் உள்ள போர்வீர் ஒருவரின் நினைவாகத் திகழும் ஊர் அச்சன்புதூர்.
வாள் ஏந்திப் போர் புரிந்து வெற்றி பெற்றதன் அடையாளமாக ஒரு ஊருக்கு, நம் முன்னோர்கள் வாளேந்தி ரஸ்த்தா என்று பெயர் வைத்துள்ளார்கள்.

குறுநில மன்னர்கள், கட்டளையாக (தானமாக) வழங்கிய ஊர் கட்டளையூர் ஆகும். பனைகள் அதிகம் காணப்படும் ஊர் பனையூர். கட்டளை ஊரை அடுத்து, ஒவ்வொரு மைல் தொலைவிலும் மேற்கு நோக்கிச் சென்றால், வரும் ஊரின் பெயர்கள், வரிசையாக, ஒன்றாம் கட்டளை, இரண்டாம் கட்டளை, மூன்றாம் கட்டளை, நான்காம் கட்டளை, ஐந்தாம் கட்டளை என்று அமைந்துள்ளது.

கரிசல்மண் அதிகமாகக் காணப்படும் ஊர் கரிசலூர். பொட்டலான இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஊர் பொட்டல்புதூர்.

இடையர் என்ற ஜாதியைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழும் ஊர் இடையர்தவணை. ரெட்டியார் என்ற ஜாதியைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழும் ஊர் ரெட்டியார்பட்டி என்பதாகும்.

தேவர் இனமக்கள் அதிகமாக வாழும் ஊர் தேவர்குளம். நாடார் சமுதாய மக்கள் அதிகமாக வாழும் ஊரின் பெயர் அணைந்தநாடார்பட்டி என்பதாகும்.

நெல் அதிகமாக விளையும் செவக்காட்டு நிலம், நெல்கட்டும்செவல் என்று பெயர்பெற்றது.

நீர்நிலைகளைக் குறிக்கும் சொற்களுடன் சில ஊர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இனிப் பார்ப்போம்.

‘குளம்’ என்று முடியும் ஊரின் பெயர்கள் பல இம் மாவட்டத்தில் உள்ளது. ஆலங்குளம், துந்திகுளம், கழுநீர்குளம் என்பன அவற்றில் சிலவாகும்.

நீர் ஊற்றைக் குறிக்கும் வகையில், தன்னூற்று, கல்லூத்து, ஊத்துமலை போன்ற ஊரின் பெயர்கள் உள்ளன.

குட்டம் (சிறியகுளம்) என்ற நீர் நிலையைக் குறிக்கும் வகையில் அச்சன்குட்டம், ஆண்டான்குட்டம் போன்ற ஊர்கள் திகழ்கின்றன.

கடவுள் பெயரை அடையாகக்கொண்டு, இராமனூர், சீதைகுறிச்சி, நவநீதகிருஷ்ணபுரம், பிரம்மதேசம், முருகன்குறிச்சி போன்ற ஊர்களின் பெயர்கள் அமைந்துள்ளன.

குறிப்பன்குளம், குத்தப்பாஞ்சான், மாயமான்குறிச்சி போன்ற ஊர்களின் பெயர்கள் இராமாயணக் கதையை நினைவுபடுத்துகின்றன. புராண மரபுக் கதைக்களமாகத் திகழ்ந்ததால் இவ்வூர்கள் இப்பெயர்களைப் பெற்றதாக இப்பகுதி கதைசொல்லிகள் கூறுகின்றார்கள்.

இராமகதையில் மான் வடிவில் வந்த மாரீசன் இந்த இடத்தில்தான் மாயமாக மறைந்து போனான் எனவேதான் இந்த இடத்திற்கு (ஊருக்கு) மாயமான் குறிச்சி என்று பெயர் வந்தது என்கிறார்கள் கதைசொல்லிகள்.

மாயமானை குறிவைத்துக் குத்துவதற்காக இராமன் பாய்ந்து சென்ற இடமே குத்தப்பாஞ்சான் என்று பெயர் பெற்றது என்று கதைசொல்லிகள் கூறுகின்றார்கள்.

இப்படி, புராணமரபுக் கதைகளோடு பொருத்தமான தொடர்புடைய ஊர்ப் பெயர்கள் தமிழகம் எங்கும் பரவலாகக் காணப்படுகின்றன.

எங்கள் வட்டாரத்தில் உள்ள பல ஊர்களின் பெயர்கள், சமுத்திரம், குளம், நல்லூர், புதூர், ஊற்று, மலை என்ற பொதுப்பெயருடன் முடிகிறது. மனிதர்களின் பெயர்களுக்கு இன்சியல் இருப்பதைப் போன்று சில ஊரின் பெயர்களுக்கு முன்னாலும் இன்சியல் உள்ளது. ஆர்.என்.கே.புரம், வீ.கே.புரம், கே.நவநீதகிருஷ்ணபுரம், எம்.கல்லத்திகுளம் என்ற ஊர்ப் பெயர்களை அதற்குச் சான்றாகக் கூறலாம்.

காடு, கரை, கம்மா, வரப்பு, தவணை என்று விவசாயிகளின் பயன்பாட்டில் உள்ள சொற்களை ஈறாகக் (கடைசியாக) கொண்டு சில ஊரின் பெயர்கள் அமைந்துள்ளது.
தானம், மான்யம், கட்டளை, என்ற வார்த்தைகளுடன் முடியும், ஊர்கள் எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக குறுநில மன்னர்களின் ஆட்சிக் காலத்தில அன்பளிப்பாக, குறிப்பிட்ட ஒரு சமூக மக்களுக்குக் கொடுக்கப்பட்டதுதான் ஏன், எதற்காக, யாரால், யாருக்கு இந்த மானியம் வழங்கப்பட்டது என்று ஆய்வு நோக்கில் தேடினால், அவ்வூரின் பெயர்களுக்குப் பின்னால் நிச்சயம் ஒரு கதை கிடைக்கும்.

இன்றைக்குப் புதிதாக உருவாக்கப்படுகின்ற நகர்கள் அல்லது ஊரின் பெயர்கள் பெரும்பாலும் அரசியல் தலைவர்களின் பெயராகவோ. .  அல்லது அப்பகுதியில் புகழ் பெற்ற நபரின் பெயராகவோ. . . அல்லது கடவுளின் பெயராகவோ உள்ளன. அதேபோல் அந்தக் காலத்தில் அப்பகுதியை அண்ட குறுநில மன்னர்களின் பெயர்கள் சில ஊர்களுக்குச் சூட்டப்பட்டுள்ளது.

சேரமான் பெருமாளூர், பாண்டியாபுரம் போன்ற பெயர்களை அதற்குச் சான்றாகக் கூறலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊர்களின் பெயர்களை மட்டும் ஆய்வு செய்வதும் ஒருவிதத்தில் நாட்டார் களஆய்வு சார்ந்ததுதான்.

ஊர்ப்பெயர்களின் ஆய்வுக்கு இக்கட்டுரை ஒரு வழிகாட்டி மட்டுமே. விரிவாகவும், விளக்கமாகவும் ஊர்களின் பெயர்களை ஆய்வு செய்ய இடம் உள்ளது. அந்தந்த வட்டாரத்தில் உள்ள நாட்டுப்புறவியல்துறை சார்ந்த ஆய்வாளர்கள் இத்தலைப்பில் ஆராய்ந்தால் நமக்குப்புதிய பல செய்திகள் கிடைக்கும்.

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-31 வெண்டைக்காய் பிறந்த கதை

இந்த வாரமும் ஒரு பாலியல் நாட்டார் கதையை வாசகர்களுக்குத் தருகிறேன். இக்கதையும் அமரர் வ. க. அவர்களின் உபயம்தான்.

நாட்டார் கதைகளில் ‘காரணக் கதைகள்’ என்று ஒரு பிரிவு உள்ளது. வித்தியாசமான பறவைகள், விலங்குகள், தாவரங்கள், காய், கனிகள் என்று ஒவ்வொன்றும் தோன்றியதற்கான காரணக்கதை என்னை நாட்டுப்புறத்து மக்கள் கற்பனையாகப் படைத்து உலவ விட்டிருக்கிறார்கள்.

‘மறைவாய் சொன்ன கதைகள்’ என்ற தொகுப்பில் வெற்றிலை பிறந்த கதை ஒன்றைப் பதிவு செய்துள்ளேன். அதுவும் ஒரு காரணக்கதைதான்.முள்ளம் பன்றியின் வடிவம் வித்தியாசமாக இருக்கிறது. எனவே அதைப்பார்த்த கதை சொல்லி ஒருவர், முள்ளம் பன்றிக்கு ஏன் அப்படி ஒரு உருவம் வாய்த்தது என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து ஒரு கதையை உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்.

வரிக்குதிரையின் உடம்பில் போடப்பட்ட வரிகளுக்கான காரணக் கதையும், நீர் யானையின் முக அமைப்பிற்கான காரணக் கதையும், ‘வௌவால்’ என்ற பறவை, தின்ற வாய்மூலமே கழிக்கும் காரணத்திற்குப் பின்னால் உள்ள கதையும் எனது சேகரிப்பில் உள்ளன. இதில் பாலியல் கதைகளும் உண்டு.

வெண்டைக்காயின் வித்தியாசமான உருவ அமைப்பும் அதன் வழவழப்பும் ஒருகதை சொல்லியை இப்படிப்பட்ட ஒரு நாட்டார் பாலியல் கதையை உருவாக்கச் செய்திருக்கிறது.

உலகம் முழுவதிலும் இத்தகைய நாட்டார் காரணக் கதைகள் உள்ளன. குறிப்பாகத் தென்னாப்பிரிக்காவில் இத்தகைய கதைகள் அதிகம் சொல்லப்படுகின்றன.

தமிழகத்தில் உலவும் நாட்டார் காரணக் கதைகளை மட்டும் தொகுத்து தனி ஒரு தொகுப்பு நூலே வெளியிடலாம். அந்த அளவுக்கு தமிழில் காரணக் கதைகள் புழக்கத்தில் உள்ளன.

அமரர் வல்லிக்கண்ணன் எழுத்து வாயிலாக, எனக்கு அனுப்பிய, இந்த நாட்டார் பாலியல் காரணக் கதையை இனி வாசகர்கள் முன் வைக்கிறேன்.

இனி, கதைக்குள் செல்வோமா. . .

இது ரொம்ப காலத்துக்கு முன்னே- ரொம்ப ரொம்ப காலத்துக்கு முன்னே- நடந்தது.

பூமியில் பிருமாண்டமான உருவங்கள் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த காலத்தில் நடந்தது. வானத்தில் இருக்கும் தேவாதிகள் பூமியிலிருக்கும் மனுஷாள்களின் நல்லது கெட்டதில் அக்கறை காட்டிவந்த காலம் அது.

இரண்டு ஊர்கள். ஆற்றின் இக்கரையில் ஒன்றும், அக்கரையில் ஒன்றுமாக இருந்தன. நடுவிலே பாலம் கிடையாது. ஆற்றைக் கடந்து அந்த ஊரிலிருந்து இந்த ஊருக்கு வருகிறவர்களும், இந்த ஊரிலிருந்து அந்த ஊருக்குப் போகிறவர்களும், வண்டிகள் மாடுகள் முதலானவைகளும் ஆற்றுக்குள் இறங்கித்தான் வந்து போயாக வேண்டும்.

ஆற்றிலே தண்ணீர் அதிகம் இல்லாத நாட்களில் இதிலே கஷ்டம் ஒன்றுமில்லை. ஆற்றில் அதிகமாகத் தண்ணீர் ஓடும் நாட்களில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிற போது, இரண்டு ஊர்க்காரர்களும் கஷ்டப்பட்டார்கள்.

அந்த வட்டாரத்திலே அசுரன், ராட்சஸன் என்றெல்லாம் சொல்றார்களே, மலைமாதிரி உடம்பும், பனைமரங்கள் மாதிரி கைகளும் கால்களும் படைத்த பிறவி - அப்படிப்பட்ட ஒருவன் இருந்தான். மனுஷாள்ளே இருக்கிற மாதிரி ராட்சஸாள்ளேயும் நல்லவங்களும் அபூர்வமாக உண்டு. இவன் நல்லவன். கஷ்டப்படுகிற மனுஷப் பயபுள்ளெகளுக்கு உதவி செய்யலாமேன்னு நெனச்சான். ஆற்றுக்குக் குறுக்கே, வாய்க்கால் ஊடே நடப்பதுக்குப் பாலம் போலே பனைமரம், தென்னைமரம் இவைகளைப் போட்டு வைப்பாளே அதுமாதிரி, இவன் தன்னையே கிடத்திக்கிட்டான். ‘டே பயல்களா, என் மேலே ஏறிப் போங்கடா. வண்டி, மாடு எல்லாமே போலாம். நான்தான் பாலம்’னான். மனுசங்க முதல்லே பயந்தாங்க. ‘பயப்படாதீங்கடா. நான் உங்களுக்கு நல்லதுதான் செய்றே’ன்னான் இவன். அந்த ராட்சஸன் எல்லாரும் அவன் மேலே ஏறிப் போனாங்க. வந்தாங்க. வண்டிகளும் போச்சு. ரொம்ப வசதியாக இருந்தது. மனுசங்க நன்றி அறிதலோடு அவனைக் கும்பிட்டாங்க.

இப்படிச் சிலகாலம் ஒழுங்கா நடந்துக் கிட்டிருந்தது.

ஒரு சமயம் என்ன நடந்ததுன்னு சொன்னா - அதுதான் ரசமான விஷயம்.

அப்போ ஆற்றிலே வெள்ளம். அந்த ராட்சஸன் பாலமாக் கிடக்கான். அவன் மேலேகூடி ஆள்கள் - ஆம்பிளைகளும் பொம்பிளைகளும் - போய் வந்துக்கிட்டிருக்கு. வண்டிகள் - கட்டை வண்டி, வில்லு வண்டி எல்லாம்தான் - போகுது. திடீர்னு அந்த ராட்சஸனுக்கு ஏதோ கிளுகிளுப்பு ஏற்பட்டுது. எதையாவது நெனச்சானோ! கனவு மாதிரிக் கண்டானோ! அவன் என்ன எழவோ - அவனுக்கு ஆசை கிளம்பிட்டுது. அவன் ராட்சஸப் பயலா சும்மாவா? அதோ ஒரு தடிப் பனை மாதிரி நிமிர்ந்து நின்னுது. அதிலேருந்து வெள்ளம் மாதிரி வெள்ளை நீர் பொங்கி வழிஞ்சுது. அப்படி அது எழும்பிய வேகத்திலும், அருவி மாதிரிப் பாய்ந்து வழிந்த தண்ணியிலும் அடிபட்டும் இழுபட்டும் மனுசங்க, மாடுக, வண்டிக எல்லாம் ஆற்றோடு சேர்ந்து, ஐயோன்னு போயிட்டாங்க. பெருகிப் புரண்டு வந்த வெள்ளம் அவனையும் அடிச்சு ஒதுக்கி கரையிலே ஒரு பக்கமாச் சேர்த்திட்டுது.

அப்புறம் சூரியன் எத்தனையோ தடவைகள் தோன்றி மறைந்துவிட்டான். மழை பெய்தது. ஓய்ந்தது. ராட்சஸன் தேகம் மக்கி, மண்ணாகி, பூமியோடு கலந்துவிட்டது.

சில நாட்களுக்குப் பிறகு அந்த இடத்திலே பசுமையாய் ஒரு செடி முளைத்து வளர்ந்தது. அது அதிசயமான ஒன்றாகத் தோன்றியது.

உரிய காலத்தில், அதில் பூக்கள் பூத்தன. காய்கள் தோன்றின.

அதன் காய் விசித்திரமானதாகத் தோன்றியது. அடி பருத்து, நுனி சிறுத்து, வானத்தை நோக்கி விறைப்பாக எழும்புவது போல் நின்றது ஒவ்வொரு காயும்.

அதை அதிசயமாகப் பார்த்தவர்களில் ஒருவன், ஒரு காயைப் பறித்து, முறித்துப் பார்த்தான். அவன் கை பிசுபிசுத்தது. அப்படிப் பிசுபிசுக்க வைக்கும் வழ வழப்பான திரவம் ஒன்று அந்தக் காயில் உள்ளுறை பொருளாய் இருந்தது.

அப்போது பலருக்கும் அந்த ராட்சஸனின் ‘சங்கதி’ நினைவே வந்தது. அவன் ஞாபகார்த்தமாகத்தான் தேவாதிகள், அவன் செத்த இடத்திலே, இந்தச் செடியையும் அதில் இப்படி ஒரு காயையும் உண்டாக்கி விட்டிருக்கிறார்கள் என்று அவர்கள் கருதினார்கள். ராட்சஸனை நினைத்தும், கடவுளை நினைத்தும், அந்தக் காயைப் பார்த்துக் கும்பிட்டார்கள்.

அதுதான் வெண்டைக்காய்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் -30 முஸ்லீம் நாட்டாரியல் - தாலாட்டு

இலக்கியம் ஒருபுறம் நவீனப்பட்டுக் கொண்டே வந்தாலும், மறுபுறம் தன் ஆதி வடிவத்தை வெவ்வேறு விதங்களில் புதுப்பித்துக் கொண்டே வருகிறது. தாலாட்டு என்ற வாய்மொழிப்பாட்டு, மறைந்து வழக்கொழிந்து கொண்டு வரும்போது, அதே தாலாட்டு எழுத்து மொழியில் அம்மானை, தாலாட்டு என்று மாற்றுருவம் பெற்று படைப்பிலக்கியமாக மக்கள் மத்தியில் வலம் வருகிறது.

அம்மானை என்ற சிற்றிலக்கியத்தின் ஆணிவேர் பெண்கள் பாடிய தாலாட்டுப் பாடல்களே. தாலாட்டுப் பாடல்களின் சாயலில் பிற்காலத்தில் கவியரசர் கண்ணதாசனால் இயற்றப்பட்ட திரையிசைப் பாடல்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இஸ்லாமியப் பெண்கள் பாடிய தாலாட்டுப் பாடல்களைப் போலவே பிற்காலத்தில், இஸ்லாமியப் புலவர்கள் சிலரால், இலக்கியத் தாலாட்டுப் பாடல்கள் பல இயற்றப்பட்டன. இவைகளையும் இஸ்லாமிய நாட்டார் செல்வங்கள் என்று வரிசைப்படுத்தலாம். இனி, பிற்கால இஸ்லாமியப் புலவர்களும், மகான்களும் இயற்றிய சில இலக்கியத் தாலாட்டுப் பாடல்களைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

தாலாட்டுப் பாடல்களின் இசையும், சந்த லயமும், மக்கள் அப்பாடல்களை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள உதவுகின்றன. எளிமையான, இனிமையான பாடல்வரிகள் அனைவரையும் கவர்கின்றன. எனவே, ‘தாலாட்டு’ என்ற நாட்டார் கலை வடிவம் இலக்கியமாகப் படைக்கப்படும்போது அவை அனைவராலும் கவனிக்கப்படுகின்றன.

திருநெல்வேலி நகருக்கு அருகில் உள்ள பேட்டை என்ற ஊரில் வாழ்ந்த முத்தமிழ் மதியமிர்தப் புலவர் அவர்கள் இயற்றிய இஸ்லாமியத் தாலாட்டு என்ற நூல் ஐம்பது கண்ணிகளைக் கொண்டது. அக்கண்ணிகளில் ஒன்றை மட்டும் மாதிரிக்காக வாசகர்கள் முன் வைக்கிறேன்.

மார்க்க சட்ட திட்டங்களுக்கு எதிரான அனாச்சாரங்களை விலக்கி விடுவதில், குறிப்பாக மூட நம்பிக்கைகள், சகுனம், சாஸ்திரம், சம்பிரதாயம் பார்ப்பது, பில்லி, சூனியம், ஏவல் செய்வது போன்ற இணை வைக்கும் விசயங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை,

சகுனம் குறிகள் பக்ஷி
சாஸ்திரமும் ஜோதிடமும்
தகுதியெனக் கேட்டலையும்
தவறை விடு கண்மணியே!

சொல்லும் பலாய் முஸீபத்
சூனியங்கள் ஏவல் பில்லி
எல்லாம் அகற்ற நிதம்
இறைவனைக் கேள் கண்மணியே!
என்ற தாலாட்டுப் பாடல் மூலம் கவிஞர் விளக்குகின்றார்.

நாகப்பட்டணம் வட்டத்தில் உள்ள இரட்டமத கடி என்ற ஊரில் வசித்து வரும் கவிஞர் ஆதம் குமார் (எ) எம்.ஏ.அப்துல் ஹாதி, உம்தத்துல் இக்வான் (பி) நஸாயிஹீல் லுக்மான் என்னும் நூலைத் தழுவி, தமிழில் உபதேசத் தாலாட்டு என்ற நூலை இயற்றியுள்ளார். அதில் உள்ள சில பாடல் வரிகளை மட்டும் இங்கு தருகிறேன்.

“வருவாய்க்குத் தகுந்தாற் போல் செலவீந்திடு
வரும் நாளை மனம் வைத்தே செயலாற்றிடு
வருகின்ற விருந்தாளர்க்கு உணவீந்திடு
வகையற்ற ஏழைக்குத் தனமீந்திடு
பெறுகின்ற வேலையிலே பொறுப்பாயிரு
போம் வீட்டில் கண், நாவின் தடுப்பாயிறு!”

இப்பாடல் பெயருக்கு ஏற்றாற்போல் நல்ல உபதேசங்களை வாழ்கின்ற மக்களுக்கு வாரி வழங்குகிறது. இந்த நூல் இன்னும் அச்சேரவில்லை என்பது பெரும் சோகமாகும். இலங்கையைச் சேர்ந்த ஜனாபா சாரணா கையூம் அவர்கள் ‘இஸ்லாமிய தாலாட்டு மாலை’ என்ற நூலை வெளியிட்டுள்ளார்கள். அதில் சில பாடல்களை வாசகர்கள் முன் வைக்கிறேன்.

நோய் பிணி துன்பம் வந்தால்
நேர்ச்சை வைத்துக் கொண்டாடும்
பேயோட்டி கூத்தெல்லாம்
பித்அத்தாகும் கண்மணியே!

பால் பார்த்து பக்குவமாய்
பெயர் வைத்து குறி சொல்லும்
மாய்மாயப் பேர்வழியை
மதியாதே கண்மணியே!

இப்பாடல் வரிகள் மௌடீகப் பழக்க வழக்கங்களைக் கண்டிக்கின்றன. இப்பாடல்களைப் படைத்த கவிஞர் பெண் என்பதால், பெண்களுக்கு ஆதரவாகவும், ஒரு தாலாட்டுப் பாடலை,

‘பெண்குலத்தை இழிவு செய்து
பகடையாய் ஆட்டி வைக்கும்
கண்கெட்ட பாவிகளைக்
காறியுமிழ் கண்மணியே!’
என்று பாடியுள்ளார்.

இத்தொகுப்பில் கடைசியாக வரும் பாடல் சிறந்த இலக்கியப் பிரதியாகக் கலையழகுடன் திகழ்கிறது. இதோ அப்பாடல்,

கண்ணுறங்கு கண்ணுறங்கு
விண்ணுறங்கிப் பொழுதாச்சு
மண்ணுறங்கி விழிக்கு முன்னே
மன்னவனே நீ உறங்கு!

‘வானம் பகலெல்லாம் உறங்குகிறதாம் அதனால் ‘அந்தி’ என்ற பொழுது வந்ததாம். மண் இரவெல்லாம் உறங்குகிறதாம். அதனால் ‘விடியல்’ பொழுது வந்ததாம்’ என்ற கற்பனை மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது.

கவிஞர் சாரண பாஸ்கரனார் (எ) டி.எம்.அஹ்மத் அவர்கள் தன் மகனுக்கு எழுதிய தாலாட்டுப் பாடல்கள் சுவையாக உள்ளது. அதிலிருந்து ஒரு பாடலைப் பார்ப்போம்.

தள்ளாடிக் காலூன்றித்
தகிங்கனத்தோம் தாளமிட்டு
சொல்லாட வந்தவனே
சோர்வகற்றத் தூங்கி விழி! என்ற பாடலில் குழந்தையின் தளர் நடை பற்றிய வர்ணனை மிக அழகாகப் பதிவாகியுள்ளது.
கவிஞர் காயல் பிறைக் கொடியான் இயற்றியுள்ள தாலாட்டுப் பாடலில், எதுகையும் மோனையும் பின்னிப் பிணைந்துள்ளன.


பொன்னே! பெருநிதியே!
பேரன்புப் பெட்டகமே...!
கண்ணே! கனிரசமே!
கண்மணியே கண்ணுறங்கு..!
தேனே! திரவியமே!
தெவிட்டாத தீங்கனியே!
மானே! மரிக்கொழுந்தே!
மனமுவந்து கண்ணுறங்கு!
இந்தத் தாலாட்டில் செந்தமிழ் வார்த்தைகள் இசையோடு இயைந்து வந்து அடுக்கடுக்காய் நிற்பதால், இப்பாடல் படிப்பவர்க்கு ஒருவித ஓசை இன்பத்தைக் கொடுக்கின்றன.
அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் சந்ததியரான கீழக்கரையைச் சேர்ந்த ஜனாபா செய்யது ஆமினா சுஐபு ஆலிம் என்ற பெண்பால் கவிஞர் பாடியுள்ள ஒரு தாலாட்டுப் பாடலில் எத்தனை கனிகள் அணிவகுத்து நிற்கின்றன பாருங்கள்.

அத்திப் பழமே! சிவந்த
அருங்கதழி, மாதுளையே!
முத்திப் பலா மாங்கனியே!
உயர்வான மலைப் பழமே!
சுத்தம் தரும் தேன் கரும்பே!
துய்ய பேரீத்தங்க குலையே!
நித்தம் தெவிட்டாத கனி
முஹம்மது பின் காதிருவே!
எத்தனை முறை பாடினாலும் சலிக்காத சுவையுடன் இப்பாடல் இனிக்கிறது.
நபிகள் நாயகம் மேல் ஒரு கவிஞர் ‘நபி மேல் தாலாட்டு’ என்று பாடியுள்ளார். நாயகத்தின் வரலாற்றை உள்ளடக்கிய இந்தத் தாலாட்டுப் பாடல்கள் இலக்கியப் பிரதியாகவும், நாட்டார் பதிவாகவும் திகழ்கின்றன. அந்தப் பாடலில் இருந்து ஒருசில வரிகளை வாசகர்களுக்குத் தருகிறேன்.

வெண்மதியை அழைத்த நபி
விரல் நதியால் தாகம் தீர்த்த நபி
ஹக்கன் அருள் பெற்ற நபி
மஹ்ஷரினில் காக்கும் நபி

வள்ளல் நபி ஆதாமுக்கு
வரும் துயரம் தீர்த்த நபி
வெள்ளம் தனில் நூஹுதனை
வெளிவரச் செய்த நபி... என்று நீள்கிறது ‘நபி மேல் தாலாட்டு’ ‘விரல் நதியால் தாகம் தீர்த்த நபி’ என்ற வரியில் உள்ள உவமை பாராட்டும் படியாக அமைந்துள்ளது.

தத்துவக் கவிஞர் இ.பதுருத்தீன் அவர்கள் இயற்றியுள்ள ‘கண்மணிக்குத் தாலாட்டு’ என்ற பாடல் சிறந்த இலக்கியத் தரத்துடன் உள்ளது.

தேனுக்குள் தேனெடுத்து
தென்றலிலே சாறெடுத்து
மானுக்குள் விழியெடுத்த
பூங்கொழுந்தே!
மாணிக்கக் கண்வளராய்
தீன் கொழுந்தே!
 இப்பாடலில் உள்ள ‘தேனுக்குள் தேன் எடுத்து’, ‘தென்றலிலே சாறெடுத்து’ என்ற வரிகளில் உள்ள இலக்கிய நயம் போற்றிப் பாராட்டப்படத்தக்கதாக உள்ளது.

இலக்கியத் தாலாட்டுகளில் ஞானவழித் தாலாட்டு என்று ஒரு பிரிவும் உள்ளது.

கீழக்கரை மற்றும் காயல்பட்டிணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் வாழும் இஸ்லாமியப் பெண்களிடையே பிரசித்தமானது. அரபுத் தமிழில் எழுதப்பட்ட ‘மஃரிபத் ஆராட்டு’ என்ற பாடல்கள். இப்பாடல்கள் யாவும் மெய்ஞானப் படித்தரங்களின் சூட்சுமங்களைத் தன் மகளுக்குப் புரிய வைப்பதுபோல் எழுதப்பட்டுள்ளது.

அல்லாமா மாப்பிளை லெப்பை ஆலீம் என்ற சையிது முஹம்மது அவர்கள் இயற்றியுள்ள ஞானவழித் தாலாட்டுப் பாடலின் முதல் கண்ணிக்கு மட்டும் விளக்கம் எழுதுவது என்றால் அதுவே தனித்த ஒரு தத்துவார்த்தமான கட்டுரையாகிவிடும். அந்த அளவிற்கு அடர்த்தியான கருத்துக் கருவூலமாக அப்பாடல் வரிகள் திகழ்கின்றன. இனி அந்த ஞானத் தாலாட்டின் முதல் கண்ணியை மட்டும் வாசகர்கள் முன் வைக்கிறேன். வாசகர்கள் சிந்தனை முத்துகளை எடுக்க முயற்சி செய்யுங்கள்.

ஆராரோ ஆராரோ
ஆராரோ வேறாரோ
ஆரென்பதாரோ நீ
ஆராய்ந்து அறிந்திடு புத்திரியே!

ஆடும் சரம் தனிலே அசையாமல்
ஆறைந்தையும் இது
ஓடும் குதிரையென்றே உழாத்தி
சுழாற்றிக் கொள் புத்திரியே!

இக்கட்டுரையில் உள்ள இலக்கியத் தாலாட்டுப் பாடல்கள் யாவும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நம் தாய்மார்கள் பாடிய அல்லது பாடிக் கொண்டிருக்கிற தாலாட்டுப் பாடல்களின் தாக்கத்தால் எழுந்தவைகளே. எனவே இலக்கியத் தாலாட்டுப் பாடல்களையும் நம் இஸ்லாமிய நாட்டார் மரபுகளில் சேர்த்துக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.

இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள இலக்கியத் தாலாட்டுப் பாடல்கள் யாவும் சகோதரியார், எழுத்தாளர்கள் ஜனாபா, பாத்திமுத்து சித்திக் அவர்கள் சமீபத்தில் பாமு பதிப்பகம் வாயிலாக வெளியிட்டுள்ள ‘கண்மணியே கண்ணுறங்கு - இன்பத் தமிழில் இஸ்லாமியர் தாலாட்டு’ என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரும்பாடுபட்டு இஸ்லாமியத் தாலாட்டுப் பாடல்களைத் திரட்டி நூலாக வெளியிட்டுள்ள சகோதரியார் - பாத்தி முத்து சித்திக் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பின்குறிப்பு

முஸ்லீம்கள் தங்களுக்குள் புழங்கிக் கொள்ளும் சில கலைச் சொற்களுக்கான பொருளை கீழேத் தருகிறேன் (கட்டுரையில் உள்ளது)

பலாய், மூஸீபத் - துன்பம், கேடு

பித்அத்தாகும் - தவிர்க்க வேண்டியதாகும்

பால் பார்த்து - பால் கித்தாப் பார்த்து (பால் கித்தாப் பார்த்து மௌலவிகள் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுவது)

ஹக்கன் - இறைவன்

மஹ்ஷரில் - மறுமையில்

படித்தரங்களின் - தத்துவங்களின்