கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Friday, June 6, 2014

குறுஞ்சாமிகளின் கதைகள்

குல சாமிகள் என்றும், குறுஞ்சாமிகள் என்றும் நாம் அறிந்திருக்கிற சிறு தெய்வங்களின் வரலாற்றைத் தொகுத்துத் தந்திருக்கிற நூல் இது. கல்கி வார இதழில் இக்கதைகள் சனங்களின் சாமிஎன்ற பெயரில் தொடராக வந்திருக்கின்றன. திருநெல்வேலியைச் சுற்றியிருக்கிற கிராமங்களில் வணங்கப்படுகிற குறுஞ்சாமிகளின் கதைகள் நம்மை மீண்டும் கிராமங்களை நோக்கிய பயணத்துக்கு இட்டுச் செல்கின்றன. இந்தச் சாமிகள் எல்லாம் மக்களோடு மக்களாக வாழ்ந்து, ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்கள் மனதில் தெய்வ நிலை எய்தியவர்களாகவே இருக்கிறார்கள். சமுதாயத்தில் விளிம்பு நிலையில் வாழ்கிற மக்களுக்கான தெய்வங்களாக, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்கிற கடவுள்களாகவே இந்தக் குறுஞ்சாமிகள் இருக்கிறார்கள்.
தன்னைப் போன்ற மக்களுக்காக வீரச்செயல் புரிந்து மாண்டு போன வீரன், அதர்மத்துக்குப் பலியான பெண், தவறுதலாக கொல்லப்பட்ட ஒரு மனிதன் இவர்களைப் போன்றோரே பின்னாளில் கடவுள்களாக மாறி, ஒரு பகுதி மக்களால் குல தெய்வமாக வரிக்கப்பட்டு வணங்கப்படுகிறார்கள். கழனியூரன் தொகுத்திருக்கும் இந்தக்கதைகள், ஆன்மீகம் குறித்தான பல சர்ச்சைகளை நம்முள் தூண்டிவிடுகின்றன. இன்று இது போன்ற குறுஞ்சாமிகளின் வழிபாடு என்பது வெகுவாகக் குறைந்து போய், ஒரு சாரார் மட்டுமே செய்கின்ற செயலாக மாறிவிட்டிருக்கிறது. அதுவும் நகரத்து மக்களுக்கு இது போன்ற ஒரு மரபோ, தங்கள் வேர்கள் குறித்த ஒரு ஞானமோ பெரும்பாலும் இருப்பதில்லை. வரலாற்றின் பின் பகுதியில் வந்து சேர்ந்துவிட்ட பெருங்கடவுள்களை வழிபடுவதே இப்போது எங்கும் காணக்கிடைக்கிறது.

மூதாதையரை வணங்கும் பண்பாடு, உலகின் மூத்த நாகரிகங்கள் எல்லாவற்றிலும் இருந்த ஒரு விஷயமாகவே இருக்கிறது. அது இன்று படிப்படியாக அழிந்து போய்விட்டது என்றே சொல்லலாம். தென் தமிழகத்தில் வழங்கப்படுவது போல இந்தக் குறுஞ்சாமிகளின் வழிபாடு மற்ற பகுதிகளில் அவ்வளவாக இல்லை என்பது என் கருத்து.

கதைளைச் சொல்வதோடு, அதில் பின்னிப்பிணைந்திருக்கும் அக்காலத்து மக்களின் வாழ்வு முறை, நம்பிக்கைகள், கலாச்சாரம், அவர்களின் கோபம், ஆசைகள், வீரம், காதல் என்று பல செய்திகளை முன்வைக்கிறார் ஆசிரியர். மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, பட்டினி கிடந்தவனின் சாமியும் மழையிலேயே நனைந்தது; வெயிலிலேயே காய்ந்தது; பட்டினியும் கிடந்தது. சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள், இம்மக்களின் அன்றாடப் பசி தீர்க்கும் பொருட்களாகவே இருந்திருக்கின்றன. சாமிகளின் உருவங்கள், பெரிய கலை வேலைப்பாடுகள் இன்றி கைக்குக் கிடைத்த பொருளகளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன. மாட்டுச்சாணத்தின் மேல் நான்கைந்து அருகம்புல்லை வைத்து உருவாக்கப்பட்டு விடுகிறது ஒரு தற்காலிக சாமி. இந்த வழக்கம் தமிழகக் கிராமங்களில் இன்னும் பின்பற்றப்பட்டு வருகிறது.

தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டவர்கள் செய்ததாகச் சொல்லப்படுகிற அதிசயங்கள், பிற்காலச் சேர்க்கைகளாகக் கொள்ளப்படலாம். கதைகளுக்கு சுவாரஸ்யம் கூட்டும் பொருட்டும் இணைக்கப்பட்டிருக்கலாம்.

பிற்சேர்க்கையாக தான் மெற்கொண்ட களப்பணிகள் குறித்தும், குறுஞ்சாமிகளின் கதைகள் தேடியலைந்த கதையையும் எழுதி இருக்கிறார் கழனியூரன். சுமார் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் படித்து முடித்துவிடக்கூடிய ஒரு கதையை தெரிந்து கொள்ள இவர் பட்டிருக்கும் வேதனைகள், இவர் கொடுத்திருக்கும் உழைப்பு, இவர் செலவிட்டிருக்கும் நேரம், நிச்சயமாக பெரும் மரியாதைக்கு உரியவை. கற்பனையில் உதித்துவிடக்கூடிய கதைகளைக் காட்டிலும் உயிரோட்டமும், வாழ்க்கையும் கலந்திருக்கும் இக்கதைகள் அடுத்தத் தலைமுறைக்கு நம் வேர்கள் குறித்தான ஒரு அறிமுகப் பதிவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

-சேரல்
http://puththakam.wordpress.com/

வாய்மொழியில் உலவும் வரலாறுகள்

நான் ஹாரி பாட்டர் படித்ததில்லை. சில நண்பர்கள் அதைப்பற்றிப் பேசுகையில் படிக்கலாமோ என்ற எண்ணம் மட்டும் மேலெழுகிறது. வெறும் மாயாஜாலக் கதை என்றில்லாமல்,வெவ்வேறு வயதினருக்கும், வெவ்வேறு அனுபவமுள்ளவர்களுக்கும் அதில் விஷயமிருக்கிறது என்றொரு தோழி சொன்னார். அதில் உண்மை இருக்கலாம் என்ற நம்பிக்கையிருக்கிறது எனக்கு. என் பாட்டி சொன்ன கதைகளையும் அப்படியே தான் நம்புகிறேன். லாஜிக் என்ற கூட்டுக்குள் அடைபடாமல், கற்பனைச் சிறகுகளை விரித்துப் பறக்கும் கதைகள் அவை. என் பாட்டி, என்னை ஏழு கடல்கள், ஏழு மலைகள் தாண்டி அழைத்துப் போயிருக்கிறாள்; கால்கள் பரவாத தேசத்தில், தேவதைகளின் சிறகுகளுக்குள் தூங்கவைத்திருக்கிறாள்; பிள்ளையுண்ணும் அரக்கனின் பிடியிலிருந்து மீட்டிருக்கிறாள்; இரவுகளில் கிளியாகிவிடும் இளவரசியுடன் பேசவைத்திருக்கிறாள். பள்ளி விட்டு வரும் வழியில் பிரிந்து போகும் ஏதோ ஒரு வழி என்னை இன்னொரு உலகுக்கு இட்டுச் செல்லும் என்று நம்புமளவுக்குப் என்னைப் பாதித்திருக்கிறாள்.

என் பாட்டிக்குப் பிறகு நான் பலரிடம் கதை கேட்டிருக்கிறேன். ஆனால், அவள் சொன்ன கதைகளின் அனுபவத்தை வேறெவரிடமும் பெறமுடியவில்லை. எனக்கும், திகட்டத் திகட்டப் பரந்துகிடக்கும் அக்கற்பனை வெளிக்குமான இடைவெளியை அவளால் மட்டுமே நிறைக்க முடிந்திருக்கிறது. சமீபத்தில் எழுத்தாளர் கழனியூரனை நேரில் சந்தித்து உரையாடியபோதும், அவரின் நேர்முகம் ஒன்றைத் தொலைக்காட்சியில் பார்த்தபோதும் இக்கருத்து எனக்கு மேலும் வலுவுறுவதாய் இருந்தது.
கதைசொல்லியாய் இருப்பதொன்றும் இலகுவான காரியமில்லை; போலவே கதை கேட்பதுவும். பண்டைக் காலங்களில் இந்தக் கதை சொல்லிகளுக்கும் கதை கேட்போருக்குமிடையேயான சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாளில் கூடி, கதைகளைப் பகிர்ந்துகொண்டு பிரிந்திருக்கிறார்கள். சில நாட்களில் தொடரும் போட்டு மீண்டும் பிறிதொரு நாள் கதைப்பதும் உண்டு. இதில், கதைசொல்லிக்கும், கதை கேட்போனுக்குமான மனவோட்டம் ஒத்துப்போகாதபட்சத்தில் இவ்வமைப்பு நிச்சயமாகத் தோல்வியுறுகிறது. மேதாவித்தனமோ, அறியாமையோ...இருவரும் ஒரு நிலையில் இருக்கையில் பகிரப்படும் செய்தியில் இருவருமே ஒருமிக்க முடியும். ஒருவன் பேசும் மொழியை, அல்லது செய்யும் ஒரு சமிக்ஞையைப் புரிந்துகொள்ள ஒத்த அலைவரிசையுடைமை அவசியமாகிறது. வாழ்ந்த மனிதர்கள் எல்லோரும் கதை சொல்லிகளாகவும் இருந்ததில்லை; கதை கேட்போராகவும் இருந்ததில்லை. இரண்டுக்குமே தனியானதொரு அகவமைப்பு தேவையாய் இருந்திருக்கிறது.

இப்போதிருக்கும் தலைமுறையும் சரி, இனி வருகின்ற தலைமுறைகளும் சரி, இது போன்றதொரு அனுபவத்தைப் பெறும் வாய்ப்பு அருகியே போய்விட்டது. கதை சொல்லும் தாத்தா பாட்டிகள் எத்தனை குழந்தைகளுக்கு வாய்த்துவிடுகிறார்கள்? கதை கேட்கும் ஆர்வம் குழந்தைகளிடத்திலும் குறைந்து போய்த்தானே இருக்கிறது? குழந்தைகளை லாஜிக் இயந்திரங்களாகத்தானே வளர்த்துவிடுகிறோம். பாட்டிகள் கதை சொன்னாலும், அவர்கள் யதார்த்தத்தை மீறிய அந்த மிகை யதார்த்தக் கதைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. யதார்த்தம் தாண்டிய அழகியலும், வாழ்க்கைத்தத்துவமும் நிறைந்ததாகவிருக்கும் இக்கதைகளின் சங்கிலி பாதியிலேயே அறுந்துவிட்டது.

இச்சங்கிலியை ஒட்ட வைக்கும் ஒரு நல்ல முயற்சியாக இந்நூலைப் பார்க்கிறேன். நாட்டார் வழக்கில் இருக்கும் பல கதைகளில் 17 கதைகளைக் கொண்ட தொகுப்பு இது.

'விளிம்பு நிலை மக்களின் வரலாறுகளைச் சொல்லும் நாட்டார் கதைகளாக மட்டும் இத்தொகுப்பில் உள்ள பல கதைகள் அமைந்துவிட்டன. மக்கள் வரலாற்றைத் தொகுக்க வேண்டும் என்று கூக்குரலிடுபவர்கள் இத்தகைய தொகுப்புக் கதைகளைக் கவனிக்க வேண்டும்' என்கிறார் ஆசிரியர்.

மிகை யதார்த்தம் மட்டுமன்றி, நம் தொன்மையின் வேர்தேடு கேள்விகளுக்கான பல விடைகளையும் இக்கதைகள் கொண்டிருக்கின்றன. என் மூதாதையர் எப்படி வாழ்ந்தனர், அவர்களின் அகம் எப்படி இருந்தது, புறம் எப்படி இருந்தது, அவர்களின் காதல் எதைக்கொண்டாடியது, அவர்களின் அறம் எதைக்காத்தது என்பனவற்றுக்கான வாய்மொழி இலக்கிய ஆதாரங்களாக இருந்த இக்கதைகள் இப்போது எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன.

கழனியூரன் அவர்களிடம் பேசும்போது எழுத்தாளர் தி.க.சி பற்றியும், எழுத்தாளர் கி.ரா. பற்றியும் சொல்லிக்கொண்டே இருப்பார். அவர்கள் எத்தனை சுவாரஸ்யமான மனிதர்கள் என்ற பதங்கள் அடிக்கடி வந்துவிழுந்தவண்ணமிருக்கும். எனக்குக் கழனியூரனைப் பற்றிய எண்ணமும் இதுவாகவேயிருக்கிறது. இக்கதைகளின் வாசிப்பை, நான் என் பாட்டியிடம் கதை கேட்பதான அனுபவமாகவே உணரலானேன். அருகிருந்து ஒரு கதைசொல்லி கதைசொல்லும் அற்புத உணர்வைக் கொடுக்கவல்லதாயிருக்கிறது இந்நூலின் நடை.

சாமான்ய மனிதர்களின் வரலாறு எப்போதும் முக்கியத்துவம் பெறுவதில்லை. உயர் வாழ்க்கை வாழ்ந்த ஒருவனைப்பற்றிய குறிப்புகள் அறியப்படாமலேயே அழிந்துபோகின்றன. வரலாற்றின் நோக்கம் தறிகெட்டு கெட்டுப்போயிருக்கிறது. எளிய மனிதர்களின் வாழ்க்கை வாய்மொழிக்கதைகளில் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. அதை எழுத்துவடிவமாக்கும் பயணத்தில் ஒரு நல்ல படி இந்நூல். என் பாட்டன் என்ன செய்தான் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன் ஷாஜஹான் என்ன செய்தான் என்பது எனக்குத் திணிக்கப்பட்டுவிடுகிறது. என் பாட்டனின் வாழ்க்கையை அறிமுகம் செய்ய உதவுகிறது எனும் வகையில் இத்தொகுப்பு நன்றிக்குரியது

பின் குறிப்புகள் :

1. இத்தொகுப்பை எழுத்தாளர் கழனியூரன் அவர்கள் எனக்கு நினைவுப்பரிசாக வழங்கினார். அவருக்கு நன்றி!

2. பேனா எடுத்துக்கொண்டு உட்கார்ந்து திருத்துமளவுக்கு அச்சுப்பிழைகள் இருப்பது குறித்து மிக வருத்தம். அடுத்த பதிப்பில் பதிப்பகம் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

-சேரல்

(http://seralathan.blogspot.com/)
http://puththakam.blogspot.in

இல்லத்துப் பிள்ளைமார் சமூகப் பெண்கள் பாம்பு கடித்து இறப்பதில்லை


இல்லத்துப் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் இதுவரை பாம்பு கடித்து இறந்தார்கள் என்று சொல்ல முடியாது.

இதற்கு திருநெல்வேலி, மேலரத வீதியில், அருண் ஜீவல்லரி மார்ட் எனும் பெயரில் நகைக்கடை வைத்துள்ள சகோதரர் சுத்தமல்லி நடராஜன் அவர்கள் தெரிவிக்கும் கருத்தைப் பிரதிபலிக்கும் கதையைக் கழனியூரன் அவர்கள் நட்பு எனும் இணையதளத்தில் பாம்பின் கால் தடம் எனும் தலைப்பில் பதிவு செய்துள்ளார்.

இந்தப் பதிவிலுள்ள செய்தி அப்படியே தங்கள் பார்வைக்கு...

ஊர்வனவற்றுள் பாம்பு ஒரு வித்தியாசமான உருவ அமைப்பைக் கொண்டது. பாம்பைப் பார்த்துப் பயந்த ஆதி மனிதர்கள் பாம்புகளைப் பற்றி நிறையச் சேதிகளையும் படைத்திருக்கிறார்கள்.

பாம்பை மையமாகக் கொண்ட பல புராண மரபுக் கதைகள் நம்மிடம் உள்ளன. ஆதிசேடன் என்ற பாம்பைப் பற்றிய புராணச் செய்திகள் பெருந்தெய்வ வழிபாட்டு மரபில் உள்ளன. சிறுதெய்வ வழிபாட்டிலும் பாம்பிற்கு ஒரு தனி இடம் உள்ளது.

பத்து தலை நாகம் பாம்புப் படுக்கை என்று தொடங்கி, தாழம்பூவில் குடியிருக்கும் சிறு நாகம் வரை வண்டி வண்டியாக பாம்புகளைப் பற்றிய சேதிகளை அடுக்கலாம். பாம்புப் புத்தும் சிறுதெய்வ வழிபாட்டில் மக்கள் வழிபடும் ஸ்தலமாக உள்ளது. நாகம்மை ஒரு குறுஞ்சாமியாகும்.

நாகராஜனைக் கடவுளாக வழிபடும் மரபும் தமிழ்ச் சமூகத்தில் உள்ளது. நாகர்கோயிலில் உள்ள நாகராசாகோயில் புகழ்பெற்ற ஆலயமாகும். அக்கோயிலின் பெயரை ஒட்டித்தான் நாகர்கோயிலுக்கு அப்பெயர் வந்தது என்று எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் ஒருமுறை நேர்பேச்சில் என்னிடம் கூறினார்.

பாம்மை மையமாகக் கொண்ட பழமொழிகள் ஏராளமாக நடப்பில் மக்களால் சொல்லப்படுகிறது. பாம்புகளை மையமாகக் கொண்ட நாட்டுப்புறக் கதைகள் பல உள்ளன. பாம்பை மையமாகக் கொண்ட சேதிகளை மட்டும் திரட்டினால் ஒரு தனி நூலே எழுதலாம் என்று தோன்றுகிறது.

இந்த இதழில் பாம்பைப் பற்றிய இரண்டு பதிவுகளை மட்டும் வாசகர்கள் முன் வைக்கிறேன்.

திருநெல்வேலி டவுன் மேல ரத வீதியில் ஒரு நகைக்கடையின் விளம்பரப் பலகை. நடிகர் சொக்கலிங்க பாகவதர் கையில் தேசியக் கொடியை வைத்திருப்பதைப் போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த வித்தியாசமான விளம்பரத்தைப் பார்த்து, அந்த நகைக்கடைக்குள் சென்றேன்.

அந்த நகைக்கடையின் உரிமையாளர் பெயர் நடராஜன். தற்போது அவர் சுத்தமல்லி என்ற ஊரில் வசித்து வருகிறார். அவரோடு பலப்பல பேச்சாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அவர், நாங்கள் பிள்ளைமார் சாதியிலேயே தனி ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள். எங்கள் பிரிவிற்கு இல்லத்துப் பிள்ளைமார்என்று பெயர். சிலர் இப்பிரிவினரை ஈழுவர்என்றும் சொல்வார்கள். எங்கள் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் பாம்பைப் பற்றிய பயம் கிடையாது. எங்கள் பிரிவில் இதுவரை பெண்கள் யாரும் பாம்பு கடித்துச் செத்ததில்லைஎன்று சொன்னார்.

நான் உடனே ஏன் அப்படி?” என்று கேட்டு அவர் வாயைக் கிளறினேன். நகைக்கடை அதிபரான சுத்தமல்லி நடராஜன் கூறியதை இனி அப்படியே வாசகர்கள் முன் வைக்கிறேன்.

எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அந்தக் காலத்தில் விறகு பெறக்க காட்டிற்குப் போயிருக்கிறாள். அவளோட சொந்த ஊர் சொக்கம்பட்டி. அந்த ஊருக்கு மேற்கே சற்று தொலைவில் உள்ள மலங்காட்டிற்குச் சென்று விறகு பெறக்கி இருக்கிறாள். அவள் புள்ள பெத்த பொம்பளை. குழந்தை பெற்று சுமார் ஆறு மாசம்தான் இருக்கும். எரிக்க விறகு இல்லாம மலங்காட்டுக்கு விறகு பெறக்க வந்திருக்கிறாள்.

பகலெல்லாம் அலைந்து திரிந்து காடுகளில் தன்னால முறிந்து விழுந்து கிடக்கும் காய்ந்த சுள்ளிகளைப் பெறக்கி ஒரு கட்டாகக் கட்டி வைத்துவிட்டு மத்தியான நேர களைப்புத் தீர ஒரு மரத்தடியில் படுத்தாள். அவள் மட்டும்தான் தனியாக விறகு பெறக்க காட்டிற்குப் போயிருக்கிறாள். பசி களைப்போடு மரத்தின் நிழலில் படுத்தவள் தன்னை மறந்து தூங்கிவிட்டாள். தூக்கக் கலக்கத்தில் அவளின் மாராப்புச் சேலை எப்படியோ லேசாக விலகிட்டு. ஆறுமாசக் கைக்குழந்தைக்கு காலையில் பால் கொடுத்து தொட்டிலில் போட்டுவிட்டுத் தன் மூத்த மகளிடம் பிள்ளையைப் பார்த்துக்கச் சொல்லி விட்டுத்தான் காட்டிற்கு வந்திருந்தாள். அவள் நல்லா கட்டுமுட்டான பொம்பளை. பால் சுரப்புள்ள தனம் அவளுக்கு இயற்கையாக அமைந்து இருந்தது.

காட்டுக்குள்ள மரத்து நிழல்ல தன்னந்தனியா படுத்துக் கிடந்த அந்தத் தாயின் மார்பைப் பார்த்தது ஒரு பாம்பு. அந்தப் பாம்பிற்கோ கடுமையான பசி. எனவே மெல்ல ஊர்ந்து போய் அந்தத் தாயின் மார்புக் காம்பில் வாய் வைத்துச் சுவைத்துப் பாலைக் குடித்தது. தூக்கக் கலக்கத்தில் பசி மயக்கத்தில் அந்தத் தாய் தன் நினைவு இழந்தவளாகத் தன் பிள்ளைதான் பாலைக் குடிக்காக்கும் என்று நினைத்துத் தன்னையறியாமல் பாலைச் சுரந்து கொடுத்தாள்.

பாம்பும் தன் பசி அடங்கும் வரை அந்தத் தாயின் மார்பில் பாலைக் குடித்துவிட்டுத் திரும்பியது. அப்போது தற்செயலாகத் தூக்கம் கலைந்து கண் விழித்துப் பார்த்த அந்தத்தாய், தன் மார்புகளைப் பார்த்தாள். மார்பில் அமுதப்பால் சுரந்ததற்கான அடையாளம் இருந்தது. பாம்பு ஒன்று அந்த இடத்திலிருந்து ஊர்ந்து செல்வதையும் பார்த்தாள். என்ன நடந்திருக்கும் என்பதை ஒருவாறு அந்தத் தாய் யூகித்துக் கொண்டாள் என்றாலும் அவள் அதைரியப்படவில்லை – ‘பாம்பு கடித்துச் செத்தவர்களைவிட, பாம்பு கடித்துவிட்டதே என்று செத்தவர்கள் தான் அதிகம்என்பதை அந்தப் பெண் தெரிந்து வைத்திருந்தாள்.

பசியோடு வந்த ஒரு பாம்பிற்குப் பால் கொடுத்து பாம்பின் பசியை அமர்த்திய பெருமையோடு அந்தப் பெண் மாராப்புச் சேலையை சரிசெய்து கொண்டு மரத்தடியில் கிடந்த விறகுக் கட்டைத் தூக்கித் தலைமேல் வைத்துக் கொண்டு தன் வீட்டைப் பார்த்து நடந்தாள். இது ஒரு கதை.

எங்கள் சமூகத்தைச் சேர்ந்த இன்னொரு பெண், காட்டு வழியே சென்று கொண்டிருந்தாள். வழியில் ஒரு பாம்பைப் பார்த்தாள். பாம்பு என்றால் படையும் நடுங்கும்என்கிறது பழமொழி. ஆனால் அந்தப் பெண் அந்தப் பாம்பைப் பார்த்து பயப்படவில்லை.

அந்தப் பாம்பு மெலிந்து, தளர்ந்து, தன் நிலை மறந்து மயங்கிக் கிடப்பது போல் தோன்றியது. பாம்பும் ஒரு உசுப்பிராணி (உயிர் உள்ள பிராணி) தானேன்னு நினைச்ச அந்தப் பெண் அந்தப் பாம்பின் பக்கத்தில் போய்ப் பார்த்தாள்.

பாம்பின் கண்கள் ஒளி இழந்து காணப்பட்டது. பார்க்கவே பாவமாக இருந்தது. பாம்பும் அப்பெண்ணைக் கண்டு கலைந்து ஓடவில்லை. காட்டு வழி தனி ஆளாக இருக்கிறோம். ஆயிரம்தான் இருந்தாலும் பாம்பு விஷமுள்ள ஜந்து என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அந்தப் பெண்ணுக்கு அந்தப் பாம்பிற்கு ஏதோ ஒரு நோய் அல்லது சிக்கல் இருக்கிறது. எனவே தான் நடைபாதையில் கிடந்து இப்படி மருவிக் கொண்டு கிடக்கிறதுஎன்று நினைத்தாள்.

நடப்பது நடக்கட்டும் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்தப் பாம்பின் அருகில் சென்றாள். அப்போது அவள் உள் மனசு வேண்டாம் இந்த விஷப்பரீட்சை என்று சொன்னது.

நல்ல மத்தியான நேரம். காட்டு வழி அது. வழிப்போக்கர்களாக யாராவது வருகிறார்களா என்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரைப் பார்த்தாள். ஒரு ஈங்குருவியையும், சுடுகுஞ்சையும் காணலை! சவத்தப் பெய பாம்பு எக்கேடும் கெட்டுப் போகட்டும்என்று நினைத்து பாதையில் செல்லவும் அந்தப் பெண்ணுக்கு மனசு வரவில்லை. எனவே நடக்கது நாயகன் செயல்என்று கடவுளின் மேல் பாரத்தைத் தூக்கிப்போட்டுவிட்டு, அந்தப் பாம்பின் பக்கத்தில் போய் உற்றுப் பார்த்தாள்.

முதல் பார்வையில் ஒண்ணும் தெரியவில்லை, பாம்பின் வால் முதல் வாய் வரை உடம்புல புண் அல்லது காயம் இருக்கிறதா என்று பார்த்தாள் ஒன்றும் துப்புத் தெரியவில்லை. பாம்பு அழுவதைப் போல் இருந்தது. எனவே மேலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாம்பின் கிட்டப் போய் அதன் வாயைப் பார்த்தாள்.

அப்போதுதான் பாம்பின் வாயில் மேல் அன்னத்திற்கும், கீழ் அன்னத்திற்கும் நடுவில் ஒரு முள் குத்தி இருப்பது தெரிந்தது. பாவம் வாயில்லா ஜீவன் அது. அதன் வாயில் முள்ளும் குத்தி விட்டால் என்னவாகும். பாம்பு தன் வாயை எப்படியெல்லாமோ மேலும் கீழும் அசைத்துப் பார்த்திருக்கிறது. வசமாக வாயின் மேல் அன்னத்திற்கும் கீழ் அன்னத்திற்கும் சேர்ந்து தைத்த முள் நகரவில்லை!

அப்போது அந்தப் பெண்ணிற்கு பாம்பின் வாட்டத்திற்கான காரணம் தெரிந்து விட்டது. நடப்பது நடக்கட்டும் என்று நினைத்து துணிந்து அந்தப் பாம்பின் வாயில் குத்தியிருந்த நீளமான முள்ளை பையப் பூப்போலப் பிடுங்கி எடுத்தாள். பாம்பின் வாயில் இருந்து லேசாக ரத்தம் கசிந்தது. அந்தப் பாம்பு நன்றியோடு ஒரு முறை அப் பெண்ணை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு பாதையை விட்டு ஊர்ந்து ஒரு புதருக்குள் சென்று மறைந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

பாம்பிற்குப் பால் வார்க்கதேஎன்கிறது ஒரு பழமொழி. எங்கள் குலப்பெண் ஒருத்தி பாம்பிற்குத் தாய்ப்பாலே கொடுத்திருக்கிறாள். பாம்பைக் குட்டியிலேயே கொன்று விடுஎன்கிறது இன்னொரு பழமொழி. எங்கள் குலப்பெண் ஒருத்தி பாம்பிற்கு உயிர் பிச்சையே கொடுத்திருக்கிறாள். எனவே தான் எங்கள் குலப்பெண்கள் யாரையும் பாம்புகள் தீண்டுவதில்லைஎன்று பாம்புகளைப் பற்றிய சேதிகளை உணர்ச்சிமயமாய்ச் சொல்லி முடித்தார் தகவலாளர்.


பாம்புகளைப் பற்றிய இந்தத் தரவுகள் நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்டிருந்தாலும், அவைகள் உணர்த்தும் சேதிகள் அன்புமயமாய் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். நாட்டார் தரவுகளை அறிவுபூர்வமாக அணுகுவதைவிட உணர்வுபூர்வமாக அணுகுவதே நல்லது.

உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம்! கி.ராஜநாராயணன்

ட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ரா., தீவிரமான சிவாஜி ரசிகர். பூர்வீக இடைசெவல் கிராமத்துக்குப் போய் பத்து வருடங்கள் ஆகிவிட்டனவாம்.
இயல்பாகவே கி.ரா., சாப்பாட்டுப் பிரியர். 'சாப்பிடுறது ரெண்டு இட்லி. ஆனா, மூணு சட்னி வேணும் இவர் நாக்குக்கு’ என்று மனைவி கணவதி அம்மாள் இவரைக் கிண்டலடிப்பார். 'எழுத்தாளர் ஆகவில்லையென்றால், மிகப் பெரிய இசைக் கலைஞராக வந்திருக்கக்கூடியவர்’ என்கிறார் இவரைப் பக்கத்தில் இருந்து கவனிக்கும் எழுத்தாளர் கழனியூரன். ’ஒரு கதை கொடுங்க...’ என்று கேட்டால் கி.ரா-விடம் இருந்துவரும் முதல் பதில் 'இல்லை... முடியாது’ என்பதுதான். ஆனால், எழுத வேண்டும் என்று மனசு வைத்துவிட்டால், தகவல்கள் சரம்சரமாகக் கொட்டும். ஒரு கதையை மூன்று முறையாவது திருத்தி எழுதிவிட்டுத்தான் பத்திரிகைகளுக்குக் கொடுப்பார். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட கி.ரா., 'வலியோடு வாழ்வது எப்படி என்பதற்கு நாந்தான் உதாரணம்’ என்று அடிக்கடி சொல்லிச் சிரிப்பார். டி.கே.சி. ரசிகமணியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு வாரம் முன்பே தென்காசிக்குப் போய்விடுவார். விழா முடிந்தும் ஒரு வாரம் தங்கி இருப்பாராம். அந்த இரண்டு வாரங்களும் பேச்சு... பேச்சு... பேச்சு... என இலக்கியக் கச்சேரிதான். 'அந்தப் பேச்சுகளைப் பற்றிய பதிவுகள் எங்கும் இல்லை. அதைத் தொகுத்தால் கி.ரா-வின் நாவலைவிட முக்கிய இலக்கியமாக அவை இருக்கும்’ என்கிறார்கள் நண்பர்கள். வீட்டில் இருக்கும்போது கதர் வேட்டியும் மேல் துண்டும் மட்டுமே அணியும் கி.ரா., இலக்கிய நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது மட்டும் பண்ணையார் போல பட்டு வேட்டி சட்டை உடுத்திக்கொள்வார்!
http://yavvanam.blogspot.in/ 

மூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்

http://tamiltidings.blogspot.in/2011/12/blog-post_8751.html

தெய்வங்களான பலி ஆடுகள்-2

நம்ம ஊர்ல ரொம்பக் காலத்துக்கு முன்னால காவக்காரன் குடும்பம்னு ஒண்ணு இருந்துச்சு . வாரிசு பரம்பரையா, அந்தக் குடும்பத்துக்காரங்க அரண்மனைக் காவக்கரங்களா இருந்தாங்க . அந்த குடும்பத்தை சேர்ந்த ராக்கு முத்துத் தேவர்க்கு ஒரு அழகான மகள் இருந்தா . அவ பேரு பூவாத்தா , பூவாத்தா செக்க செவேலுன்னு செவத்த ரெட்டுப் போல இருப்பா. அவளுக்கு கரண்டக்கால் வரை தலைமுடி இருந்துச்சு .

ஒருநா பூவாத்தா குளத்துக்கு குளிக்கதுக்குப் போனா. குளிச்சி முடித்து, குளத்துக்கரையோரம் இருந்த மரத்தடியில் நின்று தன் தலைமுடியை விரித்து உலர்த்தியபடி, , தன் தலைக்கு சிக்கு எடுத்துகிட்டிருந்தா . அப்ப அந்த வழியா குதிரையில போன இளைய மகராஜா, பூவாத்தாளையும் அவளோட தலைமுடி அழகையும் பார்த்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு சூறாவளி காத்து அடித்து, அவளோட முடி, பக்கத்திலிருந்த கள்ளிச்செடி மேல் விழுந்துருச்சு . அத பார்த்த மகராஜா அதனை எடுக்கப்பொனாரு. 'அன்னிய ஆம்பளைகள் என் கேசத்தை தொடக்கூடாது' என்று சொன்னாள் பூவாததா . அத கேட்டதும் மகராஜா 'நான் யாருன்னு தெரியுமா'ன்னு கேட்டார். 'ஏன் தெரியாது? நீங்க இளைய மகாராஜாதான்னு தெரியும். தெரிஞ்சிதான் சொல்லுதேன்னா பூவாத்தா .

இளைய மகாராஜா தான் இன்னார்னு தெரிஞ்சும் தன் கேசத்தை தொடக்கூடாதுன்னு சொல்லிட்டாளேன்னு நினைச்சி, கோவத்துல தன் கையில இருந்த வாளால, கள்ளிச் செடியில மாட்டியிருந்தது போக மீதி உள்ள தலைமுடியை வெட்டிட்டார் .

தான் ஆசையா வளர்த்த தலைமுடியை இளைய மகாராஜா வெட்டிட்டாரேன்னு அழுதுகிட்டே வீடு போய் செர்ந்து 'நடந்த கதை'யை தன் அண்ணன்மாரிடம் சொன்னா பூவாத்தா . அண்ணன்மார்களுக்கு கோபம் தாங்க முடியவில்லை . 'என்ன செய்ய . அரண்மனையை எதிர்க்கவா முடியும்? இப்படிச் செய்யலாமா? இது முறையான்னு அவங்களுக்கா தெரியனும்! வேலியே பயிரை மேஞ்ச கதையா இருக்கேன்னு நினச்சு மனசுக்கு உள்ளேயே குமுறுனாங்க .

இதுக்கிடையில , மகாராஜா அவர்களைக் கூப்பிட்டு , 'பூவாத்தாளை கட்டிக்க ஆசப்படுதேன் .எப்ப கல்யாணத்தை வச்சிக்கலாம்னு இன்னும் ஒரு வாரத்தில் சொல்லி அனுப்புங்க' என்றார் .

'சரி மகராஜா'ன்னு சொல்லி தலையை ஆட்டிட்டு வந்தாங்க . வீட்டுக்கு வந்ததும் , குடும்பத்துக்காரன் ஆம்பளைங்க எல்லொருமாச் சேர்ந்து கூடி ஆலோசனை செய்தார்கள் .

குடும்பத்து மூப்பன் 'இந்த மகாராஜாவுக்கு நன்றியே இல்லை. நாம தலைமுறை தலைமுறையா உயிரை பணயம் வைத்து காபந்து பண்ணியிருக்கோம் . ஆனா இளைய மகாராஜா நம்ம வீட்டு பிள்ளை தலைமுடிய அறுத்து மானபங்கபடுத்துனது காணாது, பெண் வேறு கேட்கிறார். என்னதான் நாட்டை ஆளற ராஜாவானாலும் அவங்க குலம் கோத்திரம் வேற; நம்ம சாதி சனம் வேறதான் . அதனால , நாம மகாராஜாவுக்கு இந்த விசயத்துல விட்டுகொடுக்ககூடாது' என்றார் .

பிறகு , ஆம்பளைங்க எல்லோருமா கலந்து பேசி , 'நமக்கு நம்ம சாதியோட கௌரவம்தான் முக்கியம். இந்த ராஜாவுக்கு பெண் கட்டி கொடுக்கக் கூடாது . அதே சமயம் நாம ராஜாவை பகைச்சிக்கிட்டு இந்த நாட்டுல வாழவும் முடியாது . ராஜா அவமானப்படுத்துன பிள்ளையையும் நம்மோடு வச்சிக்கிட முடியாது . அதே சமயம் இந்த ராஜாவையும் தலைகுனிய வைக்கனும்' என்று முடிவெடுத்தாஙக .

அதுபடிக்கு மறுநாள் , அரண்மனைக்கு வார வெள்ளிக்கிழமை ராத்திரியில் எங்கள் வீட்டு பெண்ணை வில்வண்டியில் 'பெண் அழைத்து' அனுப்புகிறோம். ஆனால் நாங்கள் யாரும் கூடி வரமாட்டோம் . வண்டிக்காரன் மட்டும்தான் வருவான் என்று சொல்லை அனுப்பினார்கள் .

வெள்ளிக்கிழமை வந்தது . அன்னக்கி காலையில, பூவாத்தாளை குளிப்பாட்டி , புதுச்சேலை , சட்டை கொடுத்து உடுத்தச் சொல்லி ஜோடிச்சு , சாமிகும்புடச் சொன்னாங்க. பூவாத்தாளுக்கு , நம்மளை என்ன செய்யப் போறாங்கன்னே புரிய்லே. என்றாலும் ஐயாவும் அண்ணண்மாரும் சொன்னபடி செஞ்சா.

காவக்காரங்களோட மூப்பன் வீட்டுல ஒரு பெரிய 'மரிசல்' இருந்துச்சு . மரிசல்னா, தானியம் போட்டு சேர்த்து வைக்கிற இடம் . மூப்பன் வீட்டுல இருந்த மரிசல் , ரொம்ப பெரிசு . அதுல நூறு இருநூறு கோட்டைத் தானியம் போட்டு வைக்கலாம் . மகராஜாவுக்கு வரிக்குப்பதிலா அளந்து வாங்குற தானியத்தையெல்லாம் அதுலதான் போட்டு வைப்பாங்க .

மூப்பன் வீட்டு மரிசல் நிறைய அந்த வருசம் வரியா வந்த காடக்கன்னியை (தினைமாதிரியான ஒரு வகை தானியம் ) போட்டு வச்சிருந்தாங்க. காடக்கண்ணி 'கம்பு' என்ற தாணியம் மாதிரி இருக்கும் . ஆனா அதோட தொலி வழுவழுன்னு பட்டுமாதிரி இருக்கும் . காடக்கன்னி குமிஞ்சி கிடக்கிற இடத்துல காலை வைக்க முடியாது . ஒரு சாக்கு நிறைய காடக்கன்னியை அள்ளிக்கிட்டு அதன் மேலே ஒரு பனங்காயைப் போட்டா, அது வழுவி , வழுவி, சாக்கின் தூருக்கே போயிரும். அப்படி வழுக்கும் அந்த தானியம் .

பூவாத்தாளை கூட்டிக்கிட்டுப்போயி , மூப்பன் வீட்டுல இருந்த காடக்கன்னி மருசல்மேல் போட்டு இருந்த பலகை மேல் நின்னு சாமி கும்புடச் சொன்னாங்க . பூவாத்தாள் மருசல் மேல ஏறி நின்னு கண்களை மூடி கைகளை உயர்த்தியபடி சாமி கும்பிட்டாள் . அப்ப மூப்பன் ஒரு விசையைத் தட்டினான் . பூவாத்தா நின்ற பலகை தாழ்ந்தது .

பலகையில் நின்ற பூவாத்தாளும் காடக்கன்னி மறுசலின் உள்ளே இறங்கினாள் . 'தன்னைக் கொல்லத்தான் இத்தனை வேலையும் பார்த்தார்கள் ' என்பதை அப்போதுதான் உணர்ந்த பூவாத்தாள், 'சண்டாளப்பாவிங்களா.. நீங்களும் உங்க ராஜாவும் மண்ணாப் போவிங்க' என்று சாபம் கொடுத்துக் கொண்டே, காடக்கன்னி குவியலில் மூழ்கி , மூச்சுத் திணறி செத்துப்போனாள் .

அன்னக்கி ராத்திரி, மூப்பன் வீட்டு வில் வண்டியில் ஒரு பெரிய பெட்டியை ஏற்றி, அதில் ஒரு பெட்டைக் கழுதையை ஜோடித்து பெட்டிக்குள் வைத்துப்பூட்டி, அரண்மனைக்கு அனுப்பிவிட்டு , காவக்காரன் குடும்பத்துக்காரங்க அனைவரும் ராவோடு ராவா, ஊரைக் காலி பண்ணிட்டு போயிட்டாங்க .

அன்னையிலிருந்து அவங்க செஞ்ச காரியத்துக்குப் பரிகாரமா பூவாத்தாளுக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடுதாங்க. காடக்கன்னி தானியத்துல மாவிடிச்சி, பூவாத்தா சாமிக்கு படையல் வைச்சு கும்புடுறாங்க' .


நன்றி: மண் மணக்கும் மனுஷங்க

http://lldasu.blogspot.in/2006/08/2.html

தெய்வங்களான பலி ஆடுகள்

'தான்' என்ற ஆணவத்திற்காகவும் 'தன் சாதி உயர்ந்தது' என்ற போலி கௌரவத்திற்காகவும் விலையாகி பெற்ற தந்தையும் உடன் பிறந்த சகோதரனும் சேர்ந்து கைகோர்த்து நின்று எத்தனையோ கன்னிப் பெண்களை உயிரோடு புதைத்திருக்கிறார்கள் . தலையை வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள் . இப்படி கொலை செய்த பின் மனசாட்சி உள்ள சில மனிதர்கள் அதை நினைத்து வருந்தியிருக்கிறார்கள் . அதோடு பரிதாபமாக செத்த அந்த கன்னிப் பெண் பின்னாளில் ஆவியாக தனக்கோ , தன் குடும்பத்திற்கோ, அல்லது தன் வாரிசு பரம்பரையினருக்கோ தீங்கு செய்வாளோ என்ற பயமும் இருந்திருக்கிறது. எனவே கொலையுண்ட கன்னிப்பெண்ணை குலதெய்வமாக்கி வழிபட்டு தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்திட முயன்றிருக்கிறார்கள் . அதன்மூலம் மன அமைதி அடைந்திருக்கிறார்கள் .

இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் கடந்து வந்த பாதை மிகக்கடுமையானது . பெண்கள் அக்கினிக் குண்டங்களையும் நெருப்பாற்றையும் நீந்திவந்த நெடிய வரலாற்றுக்கு சான்றாதாராமாக எத்தனையோ நாட்டுப்புறக் கதைகளைக் கூறமுடியும் . இத்தகையை கதைகளில் எல்லாம் சம்பந்தப்பட்ட பெண் தவறு செய்தாள் என்பதற்கு எந்தவித சான்றும் இல்லை . அவள் அழகாய் இருந்தாள் என்பதைத் தவிர .

சாதிய பிரமைக்கு ஆட்பட்ட ஒருவன் , வலிமையானவனை எதிர்த்து போராட முடியாமலும் , தன் சாதி போலி கௌரவத்தை விட்டுக்கொடுக்கமுடியாமலும் இருதலைக்கொள்ளி எறும்பாக தத்தளித்தபோது , தான் பெற்ற மகளையே அழித்துவிடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளான் .

இங்கே சொல்லப்படப்போகிற கதையும் வழக்கமான 'கன்னித் தெய்வ வழிபாடு' சார்ந்த கதைதான் . ஆனால் அதில் அந்த பெண்ணை கொலை செய்த முறை மட்டும் புதுமையாக இருந்தது .. இனி கதை .. அடுத்த பதிவில் .


நன்றி : தாராமதி

http://lldasu.blogspot.in/2006/08/blog-post_28.html