நான் ஹாரி பாட்டர்
படித்ததில்லை. சில நண்பர்கள் அதைப்பற்றிப் பேசுகையில் படிக்கலாமோ என்ற எண்ணம்
மட்டும் மேலெழுகிறது. வெறும் மாயாஜாலக் கதை என்றில்லாமல்,வெவ்வேறு வயதினருக்கும், வெவ்வேறு அனுபவமுள்ளவர்களுக்கும் அதில்
விஷயமிருக்கிறது என்றொரு தோழி சொன்னார். அதில் உண்மை இருக்கலாம் என்ற
நம்பிக்கையிருக்கிறது எனக்கு. என் பாட்டி சொன்ன கதைகளையும் அப்படியே தான்
நம்புகிறேன். லாஜிக் என்ற கூட்டுக்குள் அடைபடாமல், கற்பனைச் சிறகுகளை விரித்துப் பறக்கும் கதைகள்
அவை. என் பாட்டி, என்னை ஏழு
கடல்கள், ஏழு மலைகள்
தாண்டி அழைத்துப் போயிருக்கிறாள்; கால்கள் பரவாத
தேசத்தில், தேவதைகளின்
சிறகுகளுக்குள் தூங்கவைத்திருக்கிறாள்; பிள்ளையுண்ணும் அரக்கனின் பிடியிலிருந்து மீட்டிருக்கிறாள்; இரவுகளில் கிளியாகிவிடும் இளவரசியுடன்
பேசவைத்திருக்கிறாள். பள்ளி விட்டு வரும் வழியில் பிரிந்து போகும் ஏதோ ஒரு வழி
என்னை இன்னொரு உலகுக்கு இட்டுச் செல்லும் என்று நம்புமளவுக்குப் என்னைப்
பாதித்திருக்கிறாள்.
என் பாட்டிக்குப்
பிறகு நான் பலரிடம் கதை கேட்டிருக்கிறேன். ஆனால், அவள் சொன்ன கதைகளின் அனுபவத்தை வேறெவரிடமும்
பெறமுடியவில்லை. எனக்கும், திகட்டத்
திகட்டப் பரந்துகிடக்கும் அக்கற்பனை வெளிக்குமான இடைவெளியை அவளால் மட்டுமே நிறைக்க
முடிந்திருக்கிறது. சமீபத்தில் எழுத்தாளர் கழனியூரனை நேரில் சந்தித்து
உரையாடியபோதும், அவரின் நேர்முகம்
ஒன்றைத் தொலைக்காட்சியில் பார்த்தபோதும் இக்கருத்து எனக்கு மேலும் வலுவுறுவதாய்
இருந்தது.
கதைசொல்லியாய்
இருப்பதொன்றும் இலகுவான காரியமில்லை; போலவே கதை கேட்பதுவும். பண்டைக் காலங்களில் இந்தக் கதை சொல்லிகளுக்கும் கதை
கேட்போருக்குமிடையேயான சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட
நாளில் கூடி, கதைகளைப்
பகிர்ந்துகொண்டு பிரிந்திருக்கிறார்கள். சில நாட்களில் தொடரும் போட்டு மீண்டும்
பிறிதொரு நாள் கதைப்பதும் உண்டு. இதில், கதைசொல்லிக்கும், கதை
கேட்போனுக்குமான மனவோட்டம் ஒத்துப்போகாதபட்சத்தில் இவ்வமைப்பு நிச்சயமாகத்
தோல்வியுறுகிறது. மேதாவித்தனமோ, அறியாமையோ...இருவரும்
ஒரு நிலையில் இருக்கையில் பகிரப்படும் செய்தியில் இருவருமே ஒருமிக்க முடியும்.
ஒருவன் பேசும் மொழியை, அல்லது செய்யும்
ஒரு சமிக்ஞையைப் புரிந்துகொள்ள ஒத்த அலைவரிசையுடைமை அவசியமாகிறது. வாழ்ந்த மனிதர்கள்
எல்லோரும் கதை சொல்லிகளாகவும் இருந்ததில்லை; கதை கேட்போராகவும் இருந்ததில்லை. இரண்டுக்குமே
தனியானதொரு அகவமைப்பு தேவையாய் இருந்திருக்கிறது.
இப்போதிருக்கும்
தலைமுறையும் சரி, இனி வருகின்ற
தலைமுறைகளும் சரி, இது போன்றதொரு
அனுபவத்தைப் பெறும் வாய்ப்பு அருகியே போய்விட்டது. கதை சொல்லும் தாத்தா பாட்டிகள்
எத்தனை குழந்தைகளுக்கு வாய்த்துவிடுகிறார்கள்? கதை கேட்கும் ஆர்வம் குழந்தைகளிடத்திலும்
குறைந்து போய்த்தானே இருக்கிறது? குழந்தைகளை
லாஜிக் இயந்திரங்களாகத்தானே வளர்த்துவிடுகிறோம். பாட்டிகள் கதை சொன்னாலும்,
அவர்கள் யதார்த்தத்தை
மீறிய அந்த மிகை யதார்த்தக் கதைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. யதார்த்தம்
தாண்டிய அழகியலும், வாழ்க்கைத்தத்துவமும்
நிறைந்ததாகவிருக்கும் இக்கதைகளின் சங்கிலி பாதியிலேயே அறுந்துவிட்டது.
இச்சங்கிலியை
ஒட்ட வைக்கும் ஒரு நல்ல முயற்சியாக இந்நூலைப் பார்க்கிறேன். நாட்டார் வழக்கில்
இருக்கும் பல கதைகளில் 17 கதைகளைக் கொண்ட
தொகுப்பு இது.
'விளிம்பு நிலை
மக்களின் வரலாறுகளைச் சொல்லும் நாட்டார் கதைகளாக மட்டும் இத்தொகுப்பில் உள்ள பல
கதைகள் அமைந்துவிட்டன. மக்கள் வரலாற்றைத் தொகுக்க வேண்டும் என்று
கூக்குரலிடுபவர்கள் இத்தகைய தொகுப்புக் கதைகளைக் கவனிக்க வேண்டும்' என்கிறார் ஆசிரியர்.
மிகை யதார்த்தம்
மட்டுமன்றி, நம் தொன்மையின்
வேர்தேடு கேள்விகளுக்கான பல விடைகளையும் இக்கதைகள் கொண்டிருக்கின்றன. என்
மூதாதையர் எப்படி வாழ்ந்தனர், அவர்களின் அகம்
எப்படி இருந்தது, புறம் எப்படி
இருந்தது, அவர்களின் காதல்
எதைக்கொண்டாடியது, அவர்களின் அறம்
எதைக்காத்தது என்பனவற்றுக்கான வாய்மொழி இலக்கிய ஆதாரங்களாக இருந்த இக்கதைகள்
இப்போது எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன.
கழனியூரன்
அவர்களிடம் பேசும்போது எழுத்தாளர் தி.க.சி பற்றியும், எழுத்தாளர் கி.ரா. பற்றியும் சொல்லிக்கொண்டே
இருப்பார். அவர்கள் எத்தனை சுவாரஸ்யமான மனிதர்கள் என்ற பதங்கள் அடிக்கடி
வந்துவிழுந்தவண்ணமிருக்கும். எனக்குக் கழனியூரனைப் பற்றிய எண்ணமும்
இதுவாகவேயிருக்கிறது. இக்கதைகளின் வாசிப்பை, நான் என் பாட்டியிடம் கதை கேட்பதான அனுபவமாகவே
உணரலானேன். அருகிருந்து ஒரு கதைசொல்லி கதைசொல்லும் அற்புத உணர்வைக்
கொடுக்கவல்லதாயிருக்கிறது இந்நூலின் நடை.
சாமான்ய
மனிதர்களின் வரலாறு எப்போதும் முக்கியத்துவம் பெறுவதில்லை. உயர் வாழ்க்கை வாழ்ந்த
ஒருவனைப்பற்றிய குறிப்புகள் அறியப்படாமலேயே அழிந்துபோகின்றன. வரலாற்றின் நோக்கம்
தறிகெட்டு கெட்டுப்போயிருக்கிறது. எளிய மனிதர்களின் வாழ்க்கை வாய்மொழிக்கதைகளில்
மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. அதை எழுத்துவடிவமாக்கும் பயணத்தில் ஒரு நல்ல
படி இந்நூல். என் பாட்டன் என்ன செய்தான் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன் ஷாஜஹான்
என்ன செய்தான் என்பது எனக்குத் திணிக்கப்பட்டுவிடுகிறது. என் பாட்டனின் வாழ்க்கையை
அறிமுகம் செய்ய உதவுகிறது எனும் வகையில் இத்தொகுப்பு நன்றிக்குரியது
பின் குறிப்புகள்
:
1. இத்தொகுப்பை
எழுத்தாளர் கழனியூரன் அவர்கள் எனக்கு நினைவுப்பரிசாக வழங்கினார். அவருக்கு நன்றி!
2. பேனா
எடுத்துக்கொண்டு உட்கார்ந்து திருத்துமளவுக்கு அச்சுப்பிழைகள் இருப்பது குறித்து
மிக வருத்தம். அடுத்த பதிப்பில் பதிப்பகம் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.
-சேரல்
(http://seralathan.blogspot.com/)
http://puththakam.blogspot.in
http://puththakam.blogspot.in
No comments:
Post a Comment