கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Tuesday, September 3, 2013

பழமொழிகளும் சொலவடைகளும்-7கற்பனையிலும் கனவுலகிலும் வாழும் மனிதர்களைச் சில சொலவடைகள் கேலி செய்கின்றன. அத்தகைய சொலவடைகளையும் அதற்கான விளக்கங்களையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஒரு ஊர்ல ஒரு சம்சாரி இருந்தான். அவன் பேரு சுப்பன். அவனோ பரம ஏழை. நம்ம சுப்பன் அன்னாடம் காச்சி. ‘நாமும் சொந்தமா வெள்ளாமை செய்யனும்’ என்று சுப்பனுக்கு ஆசை. ஆனா அவனுக்கு என்று சொந்தமா ஒரு துண்டு நிலம் கூட இல்லை.

பக்கத்து வீட்டுக்காரருக்கு நிறைய நில புலன்கள் இருக்கு. அவரின் புஞ்சைக்காட்டில் அரைக்குறுக்கம் கரிசல் காடு மட்டும் தனியே மேடான இடத்தில் இருந்தது. உழாமல், பருவம் பார்க்காமல் அந்த நிலம் மட்டும் தரிசாகக் கிடந்தது. பக்கத்து வீட்டுக்காரர் சுப்பனிடம் ‘இந்தப் பூவில் (பருவத்தில்) இருந்து நீ அந்த மேட்டு நிலத்தை உழுது பயிர் வச்சிக்கோ. எனக்குப் பாட்டமா வெள்ளாமையில் நாலில் ஒரு பங்கைக்கொடு உழுது பயிர் வச்சிப் பராமரிப்பில் இருந்தாத்தான் நிலம் ‘களர்’ இல்லாமல் இருக்கும் என்றார்.

சுப்பனுக்கு சொந்தமா பயிர் வைக்க நிலம் கிடைத்தால் ரொம்பச் சந்தோசப்பட்டான். ‘தன் நீண்ட நாளைய கனவு நனவாகப் போகிறதே’ என்று நினைத்து மகிழ்ந்தான். அந்த நிலத்தை எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்? எப்படி உழ வேண்டும்? என்ன பயிர் வைக்க வேண்டும்? என்பது பற்றியே சதா சிந்திக்கத் துவங்கினான். விதவிதமான கனவுகளிலும் கற்பனைகளிலும் மிதக்கத் தொடங்கினான்.

சுப்பன் தன் மனைவியிடமும் தன் ஒரே மகளிடமும் தான் புதிதாகப் பயிர் வைக்கப் போகும் நிலத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். பேச்சு சுவாரஸ்யத்தில் இந்த ஆண்டு அந்த இடத்தைச் சீர்திருத்தம் செய்து முதன்முதலில் பருத்தி விதைக்க வேண்டும் என்று சொன்னான்.

உடனே அந்தச் சம்சாரியின் குடும்பமே கனவில் மிதக்கத் தொடங்கிவிட்டது. ‘கோவில்பட்டிக்குப் போய் அப்புண்டு நாயக்கர் கடையில் பருத்தி விதை வாங்கிட்டு வந்தால்தான் விதை சோர்வில்லாமல் முளைக்கும்’ என்றான் சுப்பன்.

அவன் மனைவியோ, ‘முதல் மழை பெய்தவுடனே உழனும். இப்பமே கந்தையா ஆசாரிகிட்டச் சொல்லி கலப்பை செய்யச் சொல்லுங்கள்’ என்றாள்.

பிள்ளை, ‘அப்பா பருத்தி விதைக்கப் போகும்போது என்னையும் உங்க கூட கூட்டிக்கிட்டுப் போவீங்களா? என்றது.

சுப்பனின் மனைவி ‘பருத்தி முளைத்ததும் நானே களை வெட்டிக் கொள்கிறேன்’ என்றாள். இந்த வருசம் மழை எப்படிப் பெய்யுமோ? என்று கவலைப்பட்டான் சுப்பன்.

சுப்பனின் மகளும் தன் பங்கிற்கு கற்பனைச் சிறகை விரிக்கத் துவங்கினாள். அப்பா, அப்பா பருத்தி வெடித்ததும் மடிப்பருத்தி எடுக்க நானும் வருவேன்’ என்றாள்.

‘நீ எல்லாம் காட்டுக்கு வரக்கூடாது. வந்தா பருத்தி மார் குத்தி உன் உடம்பெல்லாம் கோடு கோடா கீறல் விழுந்திரும். ஒழுங்கா மரியாதையா பைக்கட்டைத் தூக்கிக்கிட்டு பள்ளிக்கூடத்திற்குப் போ. படிப்பைக் கெடுத்து விட்டு, காடு, கரையெல்லாம் சுத்தவா நினைக்கிறாய்? என்று தன் மகளைப் பொய் கோபத்துடன் செல்லமாக ஒரு அடி. அடித்தாள் சுப்பனின் மனைவி.

மகள் தன் தந்தையைப் பார்த்து பருத்தி விதை விதைத்து, அது செடியாக வளர்ந்து, பருத்தி பூத்து, காய்த்து அது வெயிலில் வெடித்தபின் பருத்தியை எடுத்து தாட்டில் (சாக்கில்) வைத்து கோவில்பட்டிச் சந்தைக்கு கொண்டு போய் விற்றுப் பணம் வாங்கியதும், முதலில் எனக்கு ரெண்டு பாவாடை சட்டை எடுத்துத் தரணும் என்றாள் செல்லமாக.

சுப்பனும் கனவுலகில் மிதந்தபடி ‘மூதேவி, உனக்கு எதுக்கு இன்னும் புதுப்பாவாடை. ஏற்கனவே எடுத்துக் கொடுத்த பாவாடைகளை எல்லாம் என்னமா கிழிச்சி வச்சிருக்கே. இந்த லெட்சணத்தில பருத்தி வித்த காசில் உனக்குப் புதுப்பாவாடையும் சட்டையும் கேக்குதோ?’ என்று சொல்லிக் கொண்டே தன்னையறியாமல் அந்த அப்பக்காரன் தன் மகளை ஒரு புளிய விளாரால் அடி. அடியென்று அடித்தானாம். மகள் ‘ஏன் நம் தந்தை நம்மை அடிக்கிறார்’ என்று புரியாமல் ‘ஓ’ வென்று அழுதாளாம். பொண்டாட்டிக்காரி, ‘இப்ப என்ன நடந்துட்டுன்னு பிள்ளையைப் போட்டு அடிக்கிறீர்கள்?’ என்று சொல்லிக்கொண்டே புருசக்காரன் கையில் இருந்த புளிய விளாரைப் பிடுங்கினாளாம். அதன் பின்தான் அந்தச் சம்சாரி கனவுலகில் இருந்து விடுபட்டு நனவுலகுக்கு வந்து ‘அடடா, விதைக்காத பருத்திக்கும், காய்க்காத பருத்திக்கும், எடுக்காத பருத்திக்கும், விற்காத பருத்திக்கும், பெத்த பிள்ளையை அடித்து விட்டோமோ என்று நினைத்து வைக்கப்பட்டு தலைகுனிந்தானாம். இனி, இச்சம்பவம் சார்பான சொலவடையைக் கேளுங்கள். கருசக்காடு திருத்தி பருத்தி விதைச்சா அப்பா எனக்கொரு பாவாடை சட்டை என்றாளாம் மகள். எதுக்குடி பாவாடையும் சட்டையும் அதையும் கிழிக்கவா’ என்று சொல்லி அப்போதே அடித்தானாம் அப்பக்காரன்.

இந்த நீண்ட நெடிய சொலவடையின் பொருளை வாசகர்கள் இனி சுலபமாக உள்வாங்கி கொள்ளலாம். மேலே நான் சொன்னதைப் போல கனவுலகவாசிகளைக் கேலி செய்யும் தொனியில் இன்னும் சில சொலவடைகளும் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று. ‘வாங்காத மாட்டிற்கும் பீச்சாத பாலுக்கும்’ போட்ட சண்டை என்பது.

ஒரு ஊர்ல ஒரு பொண்டாடடியும் புருசனும் இருந்தாங்க. ரெண்டு பேருக்கும் உழைச்சி சீக்கிரமா பெரிய பணக்காரங்களா ஆயிரனும்னு ஆசை. ஆனால் தரித்திரம்தான் ஒட்டவிடலை.

பொண்டாட்டிக்காரி புருசனுக்கு பொறித்துக் கொடுக்க ஒரு நாட்டுக்கோழி முட்டையை வாங்கிக்கிட்டு வந்தாள். புருசக்காரன் ‘அடியே இந்த நாட்டுக்கோழி முட்டையை இன்றைக்குப் பொறிக்க வேண்டாம். பக்கத்து வீட்டுப் பாட்டி முட்டைகளை அடைவைக்கப் போகிறாள். அதில் கொண்டுபோய் இந்த முட்டையை வை. இந்த முட்டையில் இருந்து ஒரு கோழிக்குஞ்சு வெளிவரட்டும்’ என்றான்.

பொண்டாட்டிக்காரியும் தன் பங்கிற்கு ‘இந்த முட்டையில் இருந்து வரும் குஞ்சு பொட்டையாக இருந்தால் அது வளர்ந்து, பெரிய கோழியான பிறகு. நிறைய மூட்டைகள் இடும். பிறகு நாமும் அந்த முட்டைகளை அடை வைத்து நிறைய குஞ்சுகளைப் பொறிக்க செய்யலாம்’ என்றாள்.

புருசக்காரனும் பொண்டாட்டியோடு சேர்ந்து கனவுலகில் மிதக்கத் தொடங்கினான். அவன் அந்தக் குஞ்சுகளை எல்லாம் வளர்த்துப்பெரிய கோழிகளாக்கனும். பிறகு அந்தக் கோழிகளை எல்லாம் விற்று ஒரு பெண் ஆட்டங்குட்டியை வாங்கனும்’ என்றான்.

பொண்டாட்டிக்காரி அந்த ஆட்டுக்குட்டியை நன்றாக வளர்க்கனும். அது பெண்ணாடு என்பதால் சில குட்டிகளைப் போடும். அக்குட்டிகளையும் நன்றாக வளர்க்கனும். அந்தக் குட்டி ஆடுகளும் வளர்ந்த பிறகு அவைகளை விற்று ஒரு பசுமாட்டின் கன்றை வாங்கனும்’ என்றாள்.

புருசக்காரன் கற்பனைக் கதையைத் தொடர்ந்தான். ‘அந்த பசுமாட்டின் கன்று வளர்ந்து பெரிய பசு மாடாகிவிடும். அதன் பின் அது ஒரு கன்றை ஈனும். பசு கன்றை ஈனிய பிறகு பசுவில் பால் கறக்க வேண்டும்’ என்றான்.

உடனே அவசரமாக பொண்டாட்டிக்காரி, ‘முதன்முதலில் கறக்கும் பாலை எங்க ஐயா வீட்டுல கொண்டு போய் கொடுக்கனும்’ என்றாள். புருசக்காரன் அவளை முறைத்துப் பார்த்துவிட்டு, ‘அதெப்படி முதல் நாள் கறக்கும் பாலை எங்கையா வீட்டுலதான் கொண்டு போய்க் கொடுக்கனும்’ என்றான்.

அவள், ‘எங்கையா விட்டுக்குத்தான் கொடுக்கனும்’ என்று அழுத்தமாகச் சொல்ல அவனம் விடாமல் ‘எங்கையா வீட்டுலதான் கொண்டுபோய் பாலைக் கொடுக்கனும்’ என்று சொல்ல பொண்டாட்டிக்கும் புருசனுக்கும் பெரிய சண்டை வந்துட்டு. அவங்க போட்ட சண்டையில் அங்கே இருந்த முட்டை உடைந்துவிட்டது. அதன்பின் தான் கற்பனை உலகத்தில் இருந்து எதார்த்த உலகத்திற்குள் இருவரும் வந்தார்கள். இப்போது மீண்டும் வாங்காத மாட்டுக்கும் பீச்சாதயிலுக்கும் போட்ட சண்டை’ என்ற சொலவடையை நினைத்துப் பாருங்கள் அச்சொலவடையின் பொருள் மிக எளிதாகப் புரியும்.

காய்க்காத, எடுக்காத, பருத்திக்காக பெத்த பிள்ளையை அடித்த தகப்பனின் கதைக்கும் முத்தாய்ப்பாய் ஒரு முடிவு உண்டு. பயிர் வைக்க நிலம் தருகிறேன் என்று சொன்ன பக்கத்துவீட்டுக்காரன் அடுத்த வாரமே அந்நிலத்தை பணத் தேவைக்காக இன்னொருவனிடம் விற்றுவிடுவான்.

No comments: