கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 26, 2013

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-16

மாயாண்டி சுவாமிகளின்

சுவாமிகளின் அவதா-ரத்துக்கு வருவோம். கட்டிக்குளத்தில் குப்பமுத்து வேளாளர் – கூத்தாயி அம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர். மண்பாண்டம் செய்வது இவர்கள் தொழில். தவிர, உள்ளூரில் இருந்த ஐயனார் கோயிலில் பூசாரியாகவும் இருந்தார் குப்பமுத்து. சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் பக்தர்களாக இருந்தனர் இந்தத் தம்பதியர். அவ்வப்போது சுவாமிகளின் தரிசனம் பெற்று வந்தனர். ஒரு முறை ராமலிங்க சுவாமிகளிடம் திருவருட் பிரசாதம் பெற்ற பாக்கியத்தால், கூத்தாயி அம்மாளுக்கு காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரன்று (1858 ஜூலை) ஆண் குழந்தை பிறந்தது. அகிலத்தையே ஆளப் பிறந்த அந்த மகவுக்கு ‘மாயாண்டி’ எனப் பெயரிட்டனர். இளம் வயதிலேயே இறை ஞானம் கிடைக்கப் பெற்றது மாயாண்டிக்கு. பெற்றோரும் இதை உணரும் சம்பவம் ஒன்றும் விரைவிலேயே நடந்தது.

தான் பூஜை செய்யும் உள்ளூர் ஐயனார் கோயிலுக்கு சிறுவனான மாயாண்டியையும் கூட்டிச் செல்வது குப்பமுத்துவின் வழக்கம். அப்படி ஒரு நாள் கூட்டிச் சென்றபோது மகனை வெளிக் கூடத்தில் அமர்த்தி வைத்து விட்டு, ஐயனார் பூஜைக்காகக் கருவறைக்குள் சென்றார் குப்பமுத்து. ஐயனாரின் திருமந்திரங்களைச் சொல்லி அவருக்கு அபிஷேக ஆராதனைகளை முடித்து விட்டு வியர்வை சொட்ட வெளியே வந்த குப்பமுத்து அதிர்ந்தார். அவர் கண்ட காட்சி பதற வைத்தது.

குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன. கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்திவிடப் போகிறதோ என்கிற பீதியில், “ஐயனாரப்பா… எம் மகனைக் காப்பாத்து” என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து. பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார். என்னே அதிசயம்! நாகத்தைக் காணோம். தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி. ‘மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது’ என்பதை அப்போது உணர்ந்து கொண்ட குப்பமுத்து, அவனை அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர்.

No comments: