கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Friday, May 16, 2014

நனவிடைத் தோய்தல் - 2

எங்கு பயணம் புறப்படுவதாக இருந்தாலும் தி.க.சியின் முன்னேற்பாடுகள் என்னை மலைக்கவைக்கும் முதலில் பயணம் செய்யவேண்டிய டிக்கெட்டை ஒரு கவரில் போட்டு அந்த கவரின் மேல், வண்டி எண், வண்டி திருநெல்வேலியில் இருந்து புறப்படும்நேரம், போன்ற விவரங்களை குறித்து விடுவார். அதை பணம் கொண்டு செல்லும் பையில் வைத்துவிடுவார். பயணத்தின் போது என்னென்ன பொருள்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு தாளில் பட்டியல் எழுதுவார். ’ சேவிங் பிளேடில் இருந்து,சோப்பு வரை தேவையான பொருள்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில்  இடம்பெற்றிருக்கும், சேவிங் பிளேடின் கவர் மீது கூட அதை முதலில் உபயோகித்த தேதியை குறித்துவிடுவார்.
பயணம் புறப்படும் முன்பு பட்டியலில் உள்ளபடி பொருள்கள் எல்லாம் இருக்கிறதா? என்று ஒன்றிற்கு இரண்டு முறை சரிபார்க்கச் சொல்வார். தி.க.சி எங்கு சென்றாலும் அவரின் பணப்பை என்னிடம் தான் இருக்கும் , நான் தான் எல்லாச் செலவுகளையும்செய்வேன் , பையைத் தரும்போது முதலில் அதில் எவ்வளவு பணம் இருந்தது , எவ்வளவு செலவாயிற்று , மீதம் எவ்வளவு இருந்தது என்று மட்டும் கணக்கு பார்க்கமாட்டார்.
ஈரோடு சென்று  அதிகாலையில் புகை வண்டியில் இருந்து இறங்கியதும் அவரை வரவேற்க திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் ரயில் நிலையத்திற்கே வந்திருந்தார், தி.க.சி அவரிடம் “நான் அறைக்குச் சென்று சற்று ஓய்வெடுத்து விட்டு , காலைகடன்களை முடித்து சிற்றுண்டியையும் அருந்திவிட்டுத் தயாராக இருக்கிறேன். முதலில் நான் தந்தை பெரியாரின் நினைவிடத்திற்குச் செல்லவேண்டும் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.
பலமுறை ‘ ஹார்ட் அட்டாக் ‘கால் பாதிக்கப்பட்ட எண்பது வயதைக் கடந்த தோழரை பத்திரமாக மீண்டும் திருநெல்வேலிக்கு கொண்டு சேர்க்க வேண்டுமே என்ற கவலையால் என் நெஞ்சு ’திக், திக்’ என்று அடித்துக் கொண்டிருக்கும்.
பொதுவாழ்வில் ஈடுபாடு கொண்டிருக்கும் பலருடன் நான் பழகி இருக்கிறேன். அவர்கள் சொல்வதற்கும் , செய்வதற்கும் இடையே மிகுந்த வேறுபாடு இருக்கும் படிப்பது ராமாயணம்? இடிப்பது பெருமாள் கோயில் என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்கிறவர்களுக்குமத்தியில் தி.க.சி சொல்லுக்கும் செயலுக்கும் இடையே அதிக இடைவெளி இல்லாமல் வாழ்ந்து காட்டினார்.
“உபதேஷம் பண்ணுகிறவன் அது ஊருக்கு தானடா நமக்கு இல்லே! என்று வாழாதவர் தி.க.சி. எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் அவர்களின் மூத்த மகன் கலப்பு திருமணம் செய்து கொண்ட போது தி.க.சி   தோப்பிலாருக்கு சமாதானம் கூறினார். அதைவரவேற்றுப்பேசி , தோப்பிலாரைத் தேற்றினார்.
தி.க.சியின் மகள் வழிப் பேத்தி அதே போல் கலப்பு திருமணம் செய்து கொள்ள விரும்பிய போது அதை தி.க.சி வரவேற்றார். தானே முன் நின்று அத்திருமணத்தை நடத்தி வைத்தார்.
அதே சமயம் தனிமனித சுதந்திரத்தையும் , சக மனிதர்களின் உணர்வுகளையும் மதித்தார், தி.க.சி நாத்திகர் என்பது உலகறிந்த உண்மை . ஆனால் தன் மனைவியின் பக்தி உணர்வை அவர் மதித்தார். அம்மாவின் பூஜை, புனஸ்காரங்களுக்கு அவர் தடையாகஇருந்ததே இல்லை.
அம்மா அவர்கள் நெற்றியில் எப்போதும் திருநீரும் , குங்குமமும் துலங்கும். தி.க.சி என்றும் தன் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டதே இல்லை. தன் மனைவி இறந்த போது நடைபெற்ற மதச் சடங்குகளில் கூட தி.க.சி கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர்குடும்பத்தாரும், பிள்ளைகளும் மத ஆச்சாரப்படி தன் மனைவிக்கு செய்யும் சடங்குகளைத் தடுத்து நிறுத்தவில்லை.
அம்மா அவர்களுக்கு மிகவும் முடியாமல் ஆகி படுத்த படுக்கையாக கிடந்த போது தி.க.சியே இளம் சூட்டில் வென்னீர் வைத்து அவர்களின் உடம்பை , ஈரத்துணியால் துடைத்து எடுத்து துணியும் மாற்றினார், அத்தோடு அம்மாவின் நெற்றியில் அவரேதிருநீறும் பூசினார். குங்குமப் பொட்டும் வைத்தார். அப்போது நானும் அருகில் இருந்தேன்.
நான் “ ஏன் நீங்கள் திருநீறு பூசி விடுகிறீர்கள் ? “ என்று கேட்கவில்லை. ஆனாலும் நான் பார்த்த பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட  தி.க.சியே “ நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டால் குங்குமம் வைத்து கொண்டால் அவள் மகிழ்ச்சியாக இருப்பாள். அது அவள் நம்பிக்கை சார்ந்த விஷயம் , அவளின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். அவளின் சுதந்திரத்தில் நான் ஆதிக்கம் செலுத்த விரும்பவில்லை! என்று கூறினார். ’இது முரண்பாடல்ல!’ என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன். வெளிப்படையாக பார்க்கும் போது “தி.க.சி. எப்போதும் படிப்பது, பேசுவது, எழுதுவது என்றே வாழ்ந்தார். தன் மனைவியை கூட பராமரிக்கவில்லை என்பதை போல தோன்றும். தி.க.சி. யின் நடவடிக்கைகளைப் பார்த்து நான் கூட அப்படி நினைத்ததுண்டு. ஒரு முறை அதிகாலை சுமார் 7.00 மணி அளவில் தி.க.சி. யின் அன்பகத்திற்கு செல்ல வேண்டிய நிலை வந்தது. நான் எப்போது தி.க.சி. யின் வீட்டிற்குச் சென்றாலும் முதலில் அம்மாவை தான் பார்ப்பேன் அதன் பின் தான் தி.க.சி. யை சென்று பார்ப்பேன். அம்மாவை போய் பார்த்த போது அவர்கள் படுத்திருந்த கட்டிலை விட்டே எழுந்திருக்கவில்லை. காய்ச்சலால் முனங்கி கொண்டிருந்தார்கள். தி.க.சி. தனக்கான அறையில் தான் படுத்திருப்பார். அம்மாவைப் பார்த்து விட்டு தி.க.சி. யை அவரின் அறைக்குச் சென்று பார்த்தேன். அவர் அன்றைய தினமணி நாளிதழைப் படித்து கொண்டிருந்தார். என்னை கண்டதும் ‘வாங்க கழனி’ என்ன அதிகாலையிலேயே வந்து விட்டீங்க!” என்று கேட்டார். நான் வேறு ஒரு சொந்த வேலையாக திருநெல்வேலி வந்தேன். அப்படியே உங்களையும் பார்த்து விட்டு போகலாமே! என்று வந்தேன், என்றவன் ‘அம்மா அவர்களைப் பார்த்தீர்களா? காச்சலால் முனங்கிக் கொண்டிருக்கிறார்களே! என்றேன்.
அப்பொழுது தி.க.சி. சொன்ன வாசகம் என்னை தூக்கி வாரிப் போட்டது. ”அப்படியா அதானே இன்னும் அவள் காப்பிக் கொண்டு வந்துத் தரக் காணோமே! என்று பார்த்தேன்’ என்றவர் தான் படித்துக் கொண்டிருந்த நாளிதழைக் கீழே வைத்து விட்டு அம்மாவைப் போய் பார்த்தார். அதன் பிறகு முதலில் ஒரு மாத்திரையைக் கொடுத்தார். பிறகு நானும் தி.க.சி. யும் அம்மாவை ஆட்டோவில் மருத்துவமனைக்கு கூட்டிக் கொண்டு சென்றோம். இந்த லட்சணத்தில் தான் தி.க.சி. தன் மனைவியை கவனித்தார் என்று இந்தச் சம்பவத்தை வைத்து யாரும் தவறாக எடை போட்டு விடக் கூடாது. அம்மா அவர்கள் தன் கடைசி காலத்தில் படுத்த படுக்கையாக கிடந்தபோது ஒரு தாய் தன் பிள்ளைக்கு பணிவிடைகள் செய்வதைப்போல ஒரு மகன் தன் தாய்க்கு பணிவிடைகள் செய்வதைப் போல தி.க.சி தன் மனைவிக்கு பணிவிடைகள் செய்தார். அம்மா தானே சாப்பிட முடியாத நிலை வந்தபோது தி.க.சி யே அம்மாவுக்கு ஊட்டிவிட்டார். அம்மாவை ஈரத்துணியால் துடைப்பது ஏன் அவர்களுக்கு ’பெட் பேன்’ வைத்து அவர்களின் மலத்தைக் கூட எடுத்து சுத்தம் செய்தார். எந்தக் கணவனும் தன் மனைவிக்கு செய்ய முன்வராத பல காரியங்களை முகம் சுழிக்காமல் செய்தார் . தி.க.சி தன் மனைவி மேல் வைத்திருந்த அன்பை , பாசத்தை அப்போது தான் நான் நேரடியாக பார்த்து உருகினேன் . ஒவ்வொருவரும் தன் மனைவியிடம் உள்ள பாசத்தை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். தி.க.சி அதில் தனி ரகமாக திகழ்ந்தார். அவர் வரட்டுத்தனமான கம்யூனிஸ்ட் அல்ல.! நெகிழ்ச்சிகரமான மனிதாபிமானி.
சிறுகதைகள் , குறுநாவல்கள் , நாவல்கள் , புதுக்கவிதைகள் என்று இன்றைய இலக்கியத்தின் வடிவங்களில் தி.க.சிக்கு மிகுந்த பரிச்சயம் உண்டு என்பது அனைவரும் அறிந்த செய்திதான். ஆனால் தி.க.சிக்கு மரபின் இலக்கியங்கள் மீதும் பரிச்சயமும், ஈடுபாடும் இருந்தது என்பது என்னைப் போல அவரிடம் மிக நெருங்கிப் பழகிய சிலருக்குத்தான் தெரியும்.
கம்பனின் பாடல்களுக்கும் , சிலப்பதிகார பாடல்களுக்கும் , திருக்குறளுக்கும் தி.க.சி அபாரமாக விளக்கம் கூறுவார் . ஏன் தொல்காப்பிய சூத்திரங்களுக்கும் , நன்னூல் நூற்பாக்களுக்கும் கூட விளக்கம் கூறுவார்.
பாரதியாரின் கவிதைகள் மீதும் , பாவேந்தரின் கவிதைகள் மீதும் தி.க.சிக்கு ஒரு மோகமே இருந்தது என்று சொல்லலாம் . அந்த அளவிற்கு எப்போதும் பாரதியாரின் கவிதைகள் குறித்தும் பாவேந்தரின் கவிதைகள் குறித்தும் பேசி மகிழ்ந்தார்.
என் குருநாதர் என்று வல்லிக் கண்ணனை எப்போதும் மறக்காமல் குறிப்பிட்டுக் கொண்டே இருந்தார். வல்லிக்கண்ணன் அவர்கள் ஒரு முறை திருநெல்வேலி வந்து சுமார் 10 நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை வந்தபோது தி.க.சி என்னை அழைத்து கழனி ,” என் குருநாதர் வல்லிக்கண்ணனை உங்கள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போய் 1 வாரம் வைத்து கொள்ளுங்கள் என்றார். வல்லிக்கண்ணனும் அதற்கு உடன் பட்டதால் நான் வ.க வை என் வீட்டிற்கு (கழுநீர் குளத்திற்கு ) அழைத்துக் கொண்டு சென்றேன், வ.கவுக்காக நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சைவ சமயலுக்கு மாறிவிடுங்கள் என்ற வேண்டுகோளை வைத்து வ.கவை என்னுடன் அனுப்பி வைத்தார். அதேபோல திரு ராஜகுமாரன் அவர்கள் தி.க.சி பற்றிய ஆவணப்படம் எடுக்க முன் வந்த போது அவரையும் அவருடன் வந்திருந்த புகைப்பட கலைஞரையும் தி.க.சி என் வீட்டிற்கே அனுப்பி வைத்தார்.
ராஜகுமாரன் இரண்டு , மூன்று முறை திட்டமிட்டும் வரமுடியாமல் போய்விட்டது கடைசியில் அவர் கேமராமேனுடன் வந்தபோது தி.க.சிக்கு உடல் நலமில்லை அன்று அவருக்கு 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தது என்றாலும் “ என்னை நம்பி வந்த கலைஞனை ஏமாற்றத்துடன் அனுப்ப எனக்கு மனமில்லை” என்று கூறி தி.க.சி அன்று காலை முதல் மாலை வரை  21 E, சுடலைமாடன் தெரு என்ற ஆவணப்பட படப்பிடிப்பிற்கு மிகுந்த உற்சாகத்துடன் ஒத்துழைத்தார்.  அவர் படித்த ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, கல்லூரி என்று பல இடங்களுக்கு காய்ச்சலுடன் ஆட்டோவில் பயணித்து படப்பிடிப்பிற்கு உதவினார்.
சகமனிதர்களின் சிரமத்தை , கஷ்டத்தை தி.க.சி எப்போதும் உணர்ந்திருந்தார். எண்பதைக் கடந்துவிட்ட தள்ளாத வயதிலும் “ ஏன் தி.க.சி திருநெல்வேலி டவுனில்   உள்ள தன் பூர்வீக வீட்டில் தனியே குடியிருக்கிறார்? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்ததைப் போலவே என் மனதிலும் எழுந்ததுண்டு.
திருநெல்வேலி பாளையங்கோட்டையிலேயே மகன் வண்ணதாசன் வீடும், மகள் சாந்தாவின் வீடும் இருந்தது. ஆனால் “இனி தன்னால் தனியே இயங்க முடியாது என்ற நிலைவரும் வரை தி.க.சி தனியாகவே வாழ்ந்தார்.
“ஏன் இப்படி தனியே கிடந்து கஸ்டப்படுகிறீர்கள்  மகன் வீட்டிற்குப் போய் வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டுக் கொண்டு அங்கேயே இருக்கலாமே ? என்று நானே ஒரு முறை தி.க.சியிடம் கேட்டேன்.
அதற்கு தி.க.சி,  ” கல்யாணி , ஒரு கலைஞன் அவன் தனிமையை விரும்புகின்றவன் . அவன் ஒரு வரியை எழுத என்ன பாடுபடுகிறான் என்பது எனக்குத் தான் தெரியும் . அவனது தனிமை , அவனது சந்தோஷம். நான் சந்தை மனிதன் , அவனுக்கு இரைச்சலே ஆகாது, என்னைப்பார்க்க என் நண்பர்களும் , தோழர்களும், வந்து கொண்டே இருப்பார்கள் , அதில் அவர்களுக்கும் சந்தோஷம் , எனக்கும் மகிழ்ச்சி , “ஈத்து உவக்கும் இன்பம் போல , ஒன்றைக் கொடுப்பதால் , கொடுத்தவனுக்கும் மகிழ்ச்சி, அதை பெற்றுக் கொள்கிறவனுக்கும் இன்பம் .
கல்யாணி என்ற கலைஞனின் ஏகாந்தத்தை கெடுத்துவிட கூடாது , அதே சமயம் என் வீடு , என் உலகம் என்பதையும் நான் இழந்து விடக்கூடாது.
அவன் உலகத்திற்குள் நான் புக முடியாது , அதேபோல என் உலகத்திற்குள் அவன் வரமாட்டான். என் தனிமை எனக்கு, அவன் தனிமை அவனுக்கு என்பதை நானும் அவனும் புரிந்து வைத்திருக்கிறோம், நான் தனியே இருக்கிறேன் என்று என்றும் நான் உணர்ந்ததே இல்லை. நான் எப்போதும் என் நண்பர்களோடும் , தோழர்களோடும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றே நம்புகிறேன் .”என்னை என் பிள்ளைகள் புரிந்து கொண்டு என் போக்கில் என்னை வாழவிட்டதே நான் செய்த பாக்கியம் “ என்று நீண்ட உரையை நிகழ்த்தினார். அதன் பிறகு நான் தி.க.சியிடம் அந்த பேச்சையே எடுப்பதில்லை.
இன்று புதிதாய் பிறந்தோம் என்று பாரதி கூறுவது போல தி.க.சி ஒவ்வொரு நாளும் நிகழும் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு , தன்னைப் புதுப்பித்துக்கொண்டு முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னை புதுமைக்கும் புதுமையாய் வாழ்ந்துகாட்டினார்.
‘கலை இலக்கியம்’ அரசியல் என்ற இரட்டைக்குதிரைகள் பூட்டிய வண்டியில் தி.க.சி பயணம் செய்தாலும் , எங்கும் அவரின் வண்டி சறுக்க வில்லை ,  குடைசாயவும் இல்லை, ஏனென்றால் தி.க.சி என்ற சாரதி அக்குதிரைகளின் லகான்களை மிக லாவகமாக பிடித்துக்கொண்டு பயணம் செய்தார்.
தன் உடன் பிறந்த சகோதரன் இறந்த போதும் , தன் வாழ்க்கை துணைவியார் இறந்தபோதும் , தான் பெற்ற மூத்த மகன் இறந்த போதும் தி.க.சி துவண்டார். அவர்களைப் பிரிந்த வருத்தத்தில் வாடினார், ஆனால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டு தி.க.சி.  துடிதுடித்தார்.  அன்று முழுவதும் அவர் யாரோடும் பேசவில்லை , சாப்பிடவும் இல்லை இது தான் தி.க.சி.

No comments: