கவிதைகள், சிறுகதைகள், நாட்டுப்புறக் கதைகள் என்று பன்முக ஆளுமைகொண்ட, தன்னுடைய ஊர் பெயரிலேயே 'கழனியூரன்’ என்ற புனைபெயரை உருவாக்கிக்கொண்ட எழுத்தாளர் சேக் அப்துல்காதர், தன் சொந்த ஊரான கழுநீர்குளம் குறித்து இங்கே பேசுகிறார்.
மண்தான் கழுநீர் குளத்துக்கும் மக்களுக்கும் எல்லாமுமாக
இருக்கிறது. மண்ணைக் கிண்டித்தான் வாழ்கிறார்கள்... வயிறு
வளர்க்கிறார்கள். உழைப்பு என்ற ஒற்றைச் சொல்தான் கழுநீர்குளத்து மக்களின்
உயிர்ப்புச் சொல். ஐப்பசி, கார்த்திகை இரண்டு மாதங்களும் நெல் நடவுக்
காலம். திருக்கார்த்திகை பண்டிகை நாளுக்கு மறுநாள் 'முடக் கார்த்திகை’ நாள்
என்று சொல்கிறார்கள். இடைவிடாது உழைக்கும் மக்கள், முடக் கார்த்திகை நாள்
அன்று மட்டும் ஓய்வு எடுப்பார்கள். கோடி ரூபாய் கொடுத்தாலும் வயலில் இறங்கி
நெல் நடவு செய்ய மாட்டார்கள்.
எங்கள் வீட்டில் இருந்து இரண்டு தெரு அடுத்து உள்ள மறவா
நடுநிலைப்பள்ளியில் நான் படித்தேன். பின் வீரகேரளம்புதூர் அரசு உயர்நிலைப்
பள்ளிக்கு மாறினேன். அதற்கு இரண்டு மைல் தூரம் நடந்தே செல்ல வேண்டும். இரு
பக்கமும் வயல். நடுப் பாதையில் வீசும் தென்றலை சுவாசித்துக்கொண்டே நானும்
என் நண்பர்களும் நடந்து செல்வோம். பள்ளி விடுமுறை நாட்களில் எங்களுக்குச்
சொந்தமான புன்செய் நிலத்தில் வயல் வேலைகள் செய்வேன். நாற்று நடவு முதல்
அறுவடை வரை எல்லாம் அத்துப்படி எனக்கு. எங்கள் புன்செய் நிலத்தின்
தலைமாட்டில் ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கிறது பெரிய ஆலமரம். புத்தனுக்குப்
போதிமரம் போல, எனக்கு இந்த ஆலமரம். இந்த ஆல மரத்தடியில் திறந்தவெளி தர்கா
உள்ளது. அந்தப் பகுதி வழியே போகிறவர்கள், வருகிறவர்கள் என, எல்லா சமய
மக்களும் இந்த தர்காவில் வேண்டிக் கொள்வார்கள். மரக் கிளைகளில் அமர்ந்து
தான் பாடப் புத்தகங்களைப் படிப்பேன். கவிதை எழுதத் தோணும்.
போது கையில் பேனா இருக்காது. வாழை இலையின் பின்புறம்
கருவேல மரத்து முள்ளைவைத்துக் கீறிக் கவிதைகள் எழுதி இருக்கிறேன். வயலில்
வேலை செய்து முடித்து, மதிய உணவுக்காகத் தக்காளி, வெங்காயம், மிளகாயைத்
தோட்டத்திலேயே பறித்து மண் பானையில் போட்டு அடுப்புத் தீயே ஏற்றாமல் உப்பு
மட்டும் சேர்த்துக் குழம்புவைப்போம். அதன் சுவையே தனி. அறுவடை முடிய இரவு
நேரம் ஆகிவிட்டால் வயலிலேயே நெற்கதிர்களுக்குக் காவலாகக் கையில் கம்புடன்
கொட்டக் கொட்ட நிலவொளியில் விழித்திருப்போம். களத்து மேடே எங்களுக்குத்
தலையணை. இரவு முழுவதும் வேலை ஆட்கள் நிறையக் கதைகளைச் சொல்வர்.
கி.ராஜநாராயணன் தன் துணைவியரோடு இவ்வூருக்கு வருகை புரிந்து இருக்கிறார்.
மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன், ரசிகமணி டி.கே.சி. அவர்களின் பேரன்
தீப.நடராஜன், தோப்பில் முகமது மீரான் எனப் பல இமயம் தொட்ட எழுத்தாளர்களின்
பாதம் பட்ட ஊர் இது.
என் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பலரும் இவ்வூரைச்
சேர்ந்தவர்களே. நான் படித்தது, பணி செய்வது என எல்லாமே இந்தக் கிராமம்தான்.
ஆணி அடித்ததைப் போல் எங்கும் இடம்பெயராத ஓர் எழுத்தாளன் நான். சில
எழுத்தாளர்கள் பணி நிமித்தம் மற்றும் பல காரணங்களால் வேறு ஊருக்கு
இடம்பெயரும் நிலை கிட்டும். ஆனால், பிறந்ததில் இருந்தே சொந்த ஊருடனும்
சொந்த ஊர் மக்களுடன் வாழும் பேறு பெற்றவன் நான்!''
நன்றி - விகடன்
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=14757
No comments:
Post a Comment