கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Tuesday, September 3, 2013

பழமொழிகளும் சொலவடைகளும்-7



கற்பனையிலும் கனவுலகிலும் வாழும் மனிதர்களைச் சில சொலவடைகள் கேலி செய்கின்றன. அத்தகைய சொலவடைகளையும் அதற்கான விளக்கங்களையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஒரு ஊர்ல ஒரு சம்சாரி இருந்தான். அவன் பேரு சுப்பன். அவனோ பரம ஏழை. நம்ம சுப்பன் அன்னாடம் காச்சி. ‘நாமும் சொந்தமா வெள்ளாமை செய்யனும்’ என்று சுப்பனுக்கு ஆசை. ஆனா அவனுக்கு என்று சொந்தமா ஒரு துண்டு நிலம் கூட இல்லை.

பக்கத்து வீட்டுக்காரருக்கு நிறைய நில புலன்கள் இருக்கு. அவரின் புஞ்சைக்காட்டில் அரைக்குறுக்கம் கரிசல் காடு மட்டும் தனியே மேடான இடத்தில் இருந்தது. உழாமல், பருவம் பார்க்காமல் அந்த நிலம் மட்டும் தரிசாகக் கிடந்தது. பக்கத்து வீட்டுக்காரர் சுப்பனிடம் ‘இந்தப் பூவில் (பருவத்தில்) இருந்து நீ அந்த மேட்டு நிலத்தை உழுது பயிர் வச்சிக்கோ. எனக்குப் பாட்டமா வெள்ளாமையில் நாலில் ஒரு பங்கைக்கொடு உழுது பயிர் வச்சிப் பராமரிப்பில் இருந்தாத்தான் நிலம் ‘களர்’ இல்லாமல் இருக்கும் என்றார்.

சுப்பனுக்கு சொந்தமா பயிர் வைக்க நிலம் கிடைத்தால் ரொம்பச் சந்தோசப்பட்டான். ‘தன் நீண்ட நாளைய கனவு நனவாகப் போகிறதே’ என்று நினைத்து மகிழ்ந்தான். அந்த நிலத்தை எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்? எப்படி உழ வேண்டும்? என்ன பயிர் வைக்க வேண்டும்? என்பது பற்றியே சதா சிந்திக்கத் துவங்கினான். விதவிதமான கனவுகளிலும் கற்பனைகளிலும் மிதக்கத் தொடங்கினான்.

சுப்பன் தன் மனைவியிடமும் தன் ஒரே மகளிடமும் தான் புதிதாகப் பயிர் வைக்கப் போகும் நிலத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். பேச்சு சுவாரஸ்யத்தில் இந்த ஆண்டு அந்த இடத்தைச் சீர்திருத்தம் செய்து முதன்முதலில் பருத்தி விதைக்க வேண்டும் என்று சொன்னான்.

உடனே அந்தச் சம்சாரியின் குடும்பமே கனவில் மிதக்கத் தொடங்கிவிட்டது. ‘கோவில்பட்டிக்குப் போய் அப்புண்டு நாயக்கர் கடையில் பருத்தி விதை வாங்கிட்டு வந்தால்தான் விதை சோர்வில்லாமல் முளைக்கும்’ என்றான் சுப்பன்.

அவன் மனைவியோ, ‘முதல் மழை பெய்தவுடனே உழனும். இப்பமே கந்தையா ஆசாரிகிட்டச் சொல்லி கலப்பை செய்யச் சொல்லுங்கள்’ என்றாள்.

பிள்ளை, ‘அப்பா பருத்தி விதைக்கப் போகும்போது என்னையும் உங்க கூட கூட்டிக்கிட்டுப் போவீங்களா? என்றது.

சுப்பனின் மனைவி ‘பருத்தி முளைத்ததும் நானே களை வெட்டிக் கொள்கிறேன்’ என்றாள். இந்த வருசம் மழை எப்படிப் பெய்யுமோ? என்று கவலைப்பட்டான் சுப்பன்.

சுப்பனின் மகளும் தன் பங்கிற்கு கற்பனைச் சிறகை விரிக்கத் துவங்கினாள். அப்பா, அப்பா பருத்தி வெடித்ததும் மடிப்பருத்தி எடுக்க நானும் வருவேன்’ என்றாள்.

‘நீ எல்லாம் காட்டுக்கு வரக்கூடாது. வந்தா பருத்தி மார் குத்தி உன் உடம்பெல்லாம் கோடு கோடா கீறல் விழுந்திரும். ஒழுங்கா மரியாதையா பைக்கட்டைத் தூக்கிக்கிட்டு பள்ளிக்கூடத்திற்குப் போ. படிப்பைக் கெடுத்து விட்டு, காடு, கரையெல்லாம் சுத்தவா நினைக்கிறாய்? என்று தன் மகளைப் பொய் கோபத்துடன் செல்லமாக ஒரு அடி. அடித்தாள் சுப்பனின் மனைவி.

மகள் தன் தந்தையைப் பார்த்து பருத்தி விதை விதைத்து, அது செடியாக வளர்ந்து, பருத்தி பூத்து, காய்த்து அது வெயிலில் வெடித்தபின் பருத்தியை எடுத்து தாட்டில் (சாக்கில்) வைத்து கோவில்பட்டிச் சந்தைக்கு கொண்டு போய் விற்றுப் பணம் வாங்கியதும், முதலில் எனக்கு ரெண்டு பாவாடை சட்டை எடுத்துத் தரணும் என்றாள் செல்லமாக.

சுப்பனும் கனவுலகில் மிதந்தபடி ‘மூதேவி, உனக்கு எதுக்கு இன்னும் புதுப்பாவாடை. ஏற்கனவே எடுத்துக் கொடுத்த பாவாடைகளை எல்லாம் என்னமா கிழிச்சி வச்சிருக்கே. இந்த லெட்சணத்தில பருத்தி வித்த காசில் உனக்குப் புதுப்பாவாடையும் சட்டையும் கேக்குதோ?’ என்று சொல்லிக் கொண்டே தன்னையறியாமல் அந்த அப்பக்காரன் தன் மகளை ஒரு புளிய விளாரால் அடி. அடியென்று அடித்தானாம். மகள் ‘ஏன் நம் தந்தை நம்மை அடிக்கிறார்’ என்று புரியாமல் ‘ஓ’ வென்று அழுதாளாம். பொண்டாட்டிக்காரி, ‘இப்ப என்ன நடந்துட்டுன்னு பிள்ளையைப் போட்டு அடிக்கிறீர்கள்?’ என்று சொல்லிக்கொண்டே புருசக்காரன் கையில் இருந்த புளிய விளாரைப் பிடுங்கினாளாம். அதன் பின்தான் அந்தச் சம்சாரி கனவுலகில் இருந்து விடுபட்டு நனவுலகுக்கு வந்து ‘அடடா, விதைக்காத பருத்திக்கும், காய்க்காத பருத்திக்கும், எடுக்காத பருத்திக்கும், விற்காத பருத்திக்கும், பெத்த பிள்ளையை அடித்து விட்டோமோ என்று நினைத்து வைக்கப்பட்டு தலைகுனிந்தானாம். இனி, இச்சம்பவம் சார்பான சொலவடையைக் கேளுங்கள். கருசக்காடு திருத்தி பருத்தி விதைச்சா அப்பா எனக்கொரு பாவாடை சட்டை என்றாளாம் மகள். எதுக்குடி பாவாடையும் சட்டையும் அதையும் கிழிக்கவா’ என்று சொல்லி அப்போதே அடித்தானாம் அப்பக்காரன்.

இந்த நீண்ட நெடிய சொலவடையின் பொருளை வாசகர்கள் இனி சுலபமாக உள்வாங்கி கொள்ளலாம். மேலே நான் சொன்னதைப் போல கனவுலகவாசிகளைக் கேலி செய்யும் தொனியில் இன்னும் சில சொலவடைகளும் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று. ‘வாங்காத மாட்டிற்கும் பீச்சாத பாலுக்கும்’ போட்ட சண்டை என்பது.

ஒரு ஊர்ல ஒரு பொண்டாடடியும் புருசனும் இருந்தாங்க. ரெண்டு பேருக்கும் உழைச்சி சீக்கிரமா பெரிய பணக்காரங்களா ஆயிரனும்னு ஆசை. ஆனால் தரித்திரம்தான் ஒட்டவிடலை.

பொண்டாட்டிக்காரி புருசனுக்கு பொறித்துக் கொடுக்க ஒரு நாட்டுக்கோழி முட்டையை வாங்கிக்கிட்டு வந்தாள். புருசக்காரன் ‘அடியே இந்த நாட்டுக்கோழி முட்டையை இன்றைக்குப் பொறிக்க வேண்டாம். பக்கத்து வீட்டுப் பாட்டி முட்டைகளை அடைவைக்கப் போகிறாள். அதில் கொண்டுபோய் இந்த முட்டையை வை. இந்த முட்டையில் இருந்து ஒரு கோழிக்குஞ்சு வெளிவரட்டும்’ என்றான்.

பொண்டாட்டிக்காரியும் தன் பங்கிற்கு ‘இந்த முட்டையில் இருந்து வரும் குஞ்சு பொட்டையாக இருந்தால் அது வளர்ந்து, பெரிய கோழியான பிறகு. நிறைய மூட்டைகள் இடும். பிறகு நாமும் அந்த முட்டைகளை அடை வைத்து நிறைய குஞ்சுகளைப் பொறிக்க செய்யலாம்’ என்றாள்.

புருசக்காரனும் பொண்டாட்டியோடு சேர்ந்து கனவுலகில் மிதக்கத் தொடங்கினான். அவன் அந்தக் குஞ்சுகளை எல்லாம் வளர்த்துப்பெரிய கோழிகளாக்கனும். பிறகு அந்தக் கோழிகளை எல்லாம் விற்று ஒரு பெண் ஆட்டங்குட்டியை வாங்கனும்’ என்றான்.

பொண்டாட்டிக்காரி அந்த ஆட்டுக்குட்டியை நன்றாக வளர்க்கனும். அது பெண்ணாடு என்பதால் சில குட்டிகளைப் போடும். அக்குட்டிகளையும் நன்றாக வளர்க்கனும். அந்தக் குட்டி ஆடுகளும் வளர்ந்த பிறகு அவைகளை விற்று ஒரு பசுமாட்டின் கன்றை வாங்கனும்’ என்றாள்.

புருசக்காரன் கற்பனைக் கதையைத் தொடர்ந்தான். ‘அந்த பசுமாட்டின் கன்று வளர்ந்து பெரிய பசு மாடாகிவிடும். அதன் பின் அது ஒரு கன்றை ஈனும். பசு கன்றை ஈனிய பிறகு பசுவில் பால் கறக்க வேண்டும்’ என்றான்.

உடனே அவசரமாக பொண்டாட்டிக்காரி, ‘முதன்முதலில் கறக்கும் பாலை எங்க ஐயா வீட்டுல கொண்டு போய் கொடுக்கனும்’ என்றாள். புருசக்காரன் அவளை முறைத்துப் பார்த்துவிட்டு, ‘அதெப்படி முதல் நாள் கறக்கும் பாலை எங்கையா வீட்டுலதான் கொண்டு போய்க் கொடுக்கனும்’ என்றான்.

அவள், ‘எங்கையா விட்டுக்குத்தான் கொடுக்கனும்’ என்று அழுத்தமாகச் சொல்ல அவனம் விடாமல் ‘எங்கையா வீட்டுலதான் கொண்டுபோய் பாலைக் கொடுக்கனும்’ என்று சொல்ல பொண்டாட்டிக்கும் புருசனுக்கும் பெரிய சண்டை வந்துட்டு. அவங்க போட்ட சண்டையில் அங்கே இருந்த முட்டை உடைந்துவிட்டது. அதன்பின் தான் கற்பனை உலகத்தில் இருந்து எதார்த்த உலகத்திற்குள் இருவரும் வந்தார்கள். இப்போது மீண்டும் வாங்காத மாட்டுக்கும் பீச்சாதயிலுக்கும் போட்ட சண்டை’ என்ற சொலவடையை நினைத்துப் பாருங்கள் அச்சொலவடையின் பொருள் மிக எளிதாகப் புரியும்.

காய்க்காத, எடுக்காத, பருத்திக்காக பெத்த பிள்ளையை அடித்த தகப்பனின் கதைக்கும் முத்தாய்ப்பாய் ஒரு முடிவு உண்டு. பயிர் வைக்க நிலம் தருகிறேன் என்று சொன்ன பக்கத்துவீட்டுக்காரன் அடுத்த வாரமே அந்நிலத்தை பணத் தேவைக்காக இன்னொருவனிடம் விற்றுவிடுவான்.

Monday, August 26, 2013

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-16

மாயாண்டி சுவாமிகளின்

சுவாமிகளின் அவதா-ரத்துக்கு வருவோம். கட்டிக்குளத்தில் குப்பமுத்து வேளாளர் – கூத்தாயி அம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர். மண்பாண்டம் செய்வது இவர்கள் தொழில். தவிர, உள்ளூரில் இருந்த ஐயனார் கோயிலில் பூசாரியாகவும் இருந்தார் குப்பமுத்து. சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் பக்தர்களாக இருந்தனர் இந்தத் தம்பதியர். அவ்வப்போது சுவாமிகளின் தரிசனம் பெற்று வந்தனர். ஒரு முறை ராமலிங்க சுவாமிகளிடம் திருவருட் பிரசாதம் பெற்ற பாக்கியத்தால், கூத்தாயி அம்மாளுக்கு காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரன்று (1858 ஜூலை) ஆண் குழந்தை பிறந்தது. அகிலத்தையே ஆளப் பிறந்த அந்த மகவுக்கு ‘மாயாண்டி’ எனப் பெயரிட்டனர். இளம் வயதிலேயே இறை ஞானம் கிடைக்கப் பெற்றது மாயாண்டிக்கு. பெற்றோரும் இதை உணரும் சம்பவம் ஒன்றும் விரைவிலேயே நடந்தது.

தான் பூஜை செய்யும் உள்ளூர் ஐயனார் கோயிலுக்கு சிறுவனான மாயாண்டியையும் கூட்டிச் செல்வது குப்பமுத்துவின் வழக்கம். அப்படி ஒரு நாள் கூட்டிச் சென்றபோது மகனை வெளிக் கூடத்தில் அமர்த்தி வைத்து விட்டு, ஐயனார் பூஜைக்காகக் கருவறைக்குள் சென்றார் குப்பமுத்து. ஐயனாரின் திருமந்திரங்களைச் சொல்லி அவருக்கு அபிஷேக ஆராதனைகளை முடித்து விட்டு வியர்வை சொட்ட வெளியே வந்த குப்பமுத்து அதிர்ந்தார். அவர் கண்ட காட்சி பதற வைத்தது.

குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன. கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்திவிடப் போகிறதோ என்கிற பீதியில், “ஐயனாரப்பா… எம் மகனைக் காப்பாத்து” என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து. பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார். என்னே அதிசயம்! நாகத்தைக் காணோம். தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி. ‘மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது’ என்பதை அப்போது உணர்ந்து கொண்ட குப்பமுத்து, அவனை அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர்.

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-15

.
குகை நமசிவாயர்

குகை நமசிவாயர் அப்போது சிவ பூஜையில் திளைத்திருந்தார். தங்களை மறந்து சிவ சகஸ்ரநாமத்தை துதித்துக் கொண்டிருந்தனர் அடியார்கள். நேராக நமசிவாயரிடம் வந்த ஊர்த் தலைவர், ஐயா... ஒரு நிமிடம்... என் கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு உங்கள் பூஜையைத் தொடருங்கள் என்றார். ஊர்த் தலைவரைப் பார்த்துப் புன்னகைத்த நமசிவாயர், கேளுங்கள்... என்ன உமது கேள்வி? என்றார். கிராமத்தில் உள்ள ஆலய பூஜைக்காக வளர்க்கப்பட்டிருந்த அனைத்து பூச்செடிகளில் இருந்தும் உம் ஆட்கள் அனுமதியே இல்லாமல் மலர்களைப் பறித்துக் கொண்டு போய் விட்டார்கள். எம் ஆலய சிவனுக்கு அணிவிப்பதற்குப் பூக்களே இல்லை. இது நியாயமா? என்று கோபம் கொப்பளிக்கக் கேட்டார். அவரைச் சுற்றி நின்றிருந்த ஊர்மக்கள் நமசிவாயர் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தனர். எல்லாம் சிவனே... நந்தவனத்தில் பூக்கும் பூக்கள் இறைவனுக்கு உரியவை. உங்கள் ஆலய இறைவனுக்கும் அவை சூட்டப்பட்டுள்ளன. எமது பூஜைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார் நிதானமாக. உமது பூஜைக்கு எமது கிராமத்து நந்தவனத்தில் இருந்து பறிக்கப்பட்ட பூக்கள் பயன்படுத்தப்பட்டது பற்றித்தான் இப்போது கேள்வியே. உமது சிவலிங்க பூஜைக்கு இந்தப் பூக்கள் அணிவிக்கப்படுவதற்கு எம் ஆலய இறைவன் ஒப்புக் கொள்ள மாட்டான். நீங்கள் தவறு இழைத்து விட்டீர்கள் என்றார் ஊர்த் தலைவர். எங்கும் நிறைந்தவன், எத்தகைய பூஜையையும் ஏற்றுக் கொள்வான். உங்கள் ஊர் சிவன், எம் சிவன் என்று பிரித்துப் பார்க்க வேண்டாம். இதெல்லாம் பேச்சுக்கு நன்றாக இருக்கும். சரி, நீங்கள் சொல்வது உண்மையானால் - அதாவது உமது சிவ பூஜைக்கு எம் ஆலய நந்தவனத்துப் பூக்கள் பயன்படுத்தியதை எம் கிராமத்து இறைவன் ஏற்றுக் கொண்டு விட்டான் என்றால், உமது செயலை நான் ஏற்றுக் கொள்கிறேன். வணங்குகிறேன் என்றார் ஊர்த் தலைவர். அப்படியே... உம் இறைவன் இதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் நமசிவாயர். இதோ, எம் ஆலய இறைவன் திருமேனியில் ஒரு மலர் மாலை இருக்கிறதே... அந்த மலர்மாலை இங்குள்ள பலரும் காணுமாறு தானாக வந்து உம் கழுத்தில் விழ வேண்டும். அப்படி நிகழ்ந்து விட்டால், உமது பூஜை முறை அனைத்தும் அந்த சிவனாரின் ஒப்புதலோடுதான் நடைபெறுகிறது என்பதை நான்மனமார ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-14

பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்

12வது வயதில் பாடகச்சேரி வருகை தந்து, மாடுகளை மேய்க்கும் பணியைச் செய்தார் ராமலிங்க சுவாமிகள்.
 அந்த வயதில் வடலூர் வள்ளலாரிடம் ஞானோபதேசம் பெற்றார். தனது ஞானத்தால் ஒரே நேரத்தில் இரண்டு ஊர்களில் தரிசனம் தருவது, தோன்றுவது, மறைவது போன்றவற்றை நிகழ்த்தியுள்ளார். உலோகத்தைத் தங்கமாக மாற்றும் ரசவாதம் அறிந்தவர் இவர். தியானத்தில் உடல் துவாரங்கள் ஒன்பதையும் தனித்தனியாகப் பிரிக்கும் "நவ கண்ட யோகம்' பயின்றவர்.பைரவ உபாசகர்.
 வெகு தொலைவில் இருப்பார். இவரை அழைத்து வருமாறு நாய்களிடம் வேண்டினால், அடுத்த நொடியில் அதே நாய்களுடன் கண் முன்பே தோன்றுவார். நூற்றுக்கணக்கான இலைகளில் அறுசுவை உணவு வைத்து, இவர் அழைத்தவுடன் எங்கிருந்தோ பெரும் திரளாக நாய்கள் தோன்றி வந்து உண்டுவிட்டுப் போகும் அதிசயங்களும் நிகழ்ந்தது

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-13

ஸ்ரீ மௌலா சாஹிப் சுவாமிகள்

ஸ்ரீ மௌலா சாஹிப் சுவாமிகளின் சித்தர் பீடம் முல்லா வீதியில் உள்ளது. இவர் பல ஆண்டுகள் லால்பகதூர் சாஸ்திரி வீதியில் தங்கி இறை பிரச்சாரம் செய்தவர். இவர் சவப்பெட்டி ஊர்வலத்தில் பிரெஞ்சு கவர்னரும் கலந்து கொண்டனர் என்பது மிகச்சிறப்பு வாய்ந்தது.

இவரின் சிறப்பு, இவர் இறந்து எத்தனையோ ஆண்டுகள் ஆனபின்பும் சவப்பெட்டியை கவர்னர் திறந்து பார்க்க ஆவல் கொண்டு திறந்து பார்க்கையில் மகானின் உடல் சற்றும் அழுகாமல் இருந்தது.

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-12


பொன்னாயிர சுவாமிகளின் அற்புதங்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதியில் தோன்றி, ஐம்பதாண்டுகள் மண்ணுலகில் மானுடருக்கு அருள்நலம் புரிந்த அந்த சித்தர்குலப் பெருமகனின் அருட்செயல்கள் அநேகம். முந்நூறு குடும்பங்களே உடைய கோட்டைப்புறச் செட்டி குலத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் பொன்னாயிர சுவாமிகள். ஐந்து குழந்தைகளில் கடைசிக் குழந்தையாக அவதரித்தார் பொன்னாயிரம். பெற்றோர் பெயர் தெரியவில்லை. சிறு வயது முதலே சுதந்திரமாகச் சுற்றித் திரிதலில் பெருவிருப்பம் கொண்டிருந்ததால், உடன் பிறப்புகளும் இவரைப் புறக்கணித்தனர்.

 இத்தகைய சுதந்திர மனப்பான்மையால், பல ஊர்கள் சுற்றி, பல்வேறு தொழில்களும் கற்றுக்கொண்டார். சித்தர்களுக்கே உரிய தன்மைகளான எதிலும் பற்றின்மை, காமம், கோபம், விருப்பு வெறுப்பு போன்ற உணர்வுகள் ஏதுவுமற்று இருந்தார் பொன்னாயிரம். பசி, தூக்கம் மறந்து காரியம் செய்தல், எவ்வுயிர்களிடத்திலும் எந்நிலையிலும் அளவற்ற கருணை, எப்போதும் பிறர்க்கு உதவும் இறைகுணம் என கருவிலேயே திருவாக விளங்கினார். இவ்விதம் முப்பத்தைந்து வயது வரை பல ஊர்களைச் சுற்றித் திரிந்த பொன்னாயிரம், பின்னர் தம் சொந்த ஊரான திருவில்லிபுத்தூரை வந்தடைந்தார். நெசவாளப் பெருமக்கள் வாழ்ந்துவந்த தெருக்களில் ஒன்றான ஊருணிப்பட்டித் தெருவில் அடைக்கலமானார்.

பிள்ளையில்லாக் கிழவிக்கு ஈசன் பிள்ளையாகச் சென்ற திருவிளையாடல் கதைபோல, இத்தெருவில் மொச்சை விற்கும் கிழவி ஒருத்திக்குப் பிள்ளையானார் பொன்னாயிரம். மருத்தாமலை எனும் நண்பர் ஒருவரும் பொன்னாயிரத்துக்கு மிக நெருக்கமான உளங்கலந்த நண்பரானார். இவ்விதம் கிழவியின் பராமரிப்பில் பல்லாண்டுகள் வாழ்ந்து வரலானார்.

பொன்னாயிரத்தைப் புடம்போடும்விதமான ஒரு நிகழ்வு முதியவர் ஒருவரால் நிகழ்ந்தது. ஒரு நாள் மாலை பொன்னாயிரம், மருத்தாமலை மற்றும் சில நண்பர்களுடன் முதலியார்பட்டி சுடுகாட்டில் கிணற்றில் குளித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர்கள் வரும் வழியிலுள்ள ஓய்வு மண்டபத்திலிருந்து அச்சமயம் ஒரு முனகல் சத்தம் வந்தது. மருத்தாமலை முன்சென்று பார்க்க, அங்கே மண்டபத்தில் நூறு வயது மதிக்கத்தக்க முதியவரொருவர் செக்கச்சிவந்த மேனியோடு கழுத்தில் உருத்திராட்ச மாலை அணிந்து மதிக்கத்தக்க தோற்றத்துடன் கடைசி நிமிடங்களில் இருந்தார்.
தோற்றம் தந்த மதிப்பில் அவர் அருகே சென்ற மருத்தாமலை அவரிடம், சாமி, என்ன செய்யணும், சொல்லுங்க! எனக் கேட்டார். முதியவரோ அவரிடம் பொன்னாயிரத்தைக் கைகாட்டி, அவரைக் கூப்பிடு என்று சைகை காண்பித்தார். பொன்னாயிரமும் அவர்முன் ஓடிவந்து நின்றார். முதியவர் பொன்னாயிரத்தைத் தன் பக்கத்தில் அமருமாறு சைகை காட்டினார். அமர்ந்தவுடன், தன் மடியிலிருந்து திருநீற்றுப்பையை எடுத்து பொன்னாயிரத்தின் நெற்றியிலும் மார்பிலும் பூசியதோடு, சிறிது வாயிலும் இட்டு, ஈனஸ்வரத்தில், நான் தருவதை நீ வாங்கிக் கொள்வாயா? எனக் கேட்க, பொன்னாயிரமும் சரி என்று தலையாட்டினார்.

பொன்னாயிரத்தின் தலையில் கை வைத்து, கிழவர் காதைக் கொடு என்றவாறே, அவர் காதில் ஏதோ ஒரு மந்திரத்தை முணுமுணுத்தார். அதைக் கேட்ட பொன்னாயிரத்தின் முகம் மலர்ந்த சமயம், முதியவரின் உயிர் பிரிந்தது. பின் அனைவரும் அந்த முதியவரின் நல்லுடலை, தகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்தனர். இதன் பின்னர் மகான் பொன்னாயிரத்தின் தேகம் முழுவதிலும் ஒரு புதிய ஒளி ஊற்று பரவியது. அவரிடமிருந்து இனங்கண்டு சொல்லமுடியாத ஒரு ஈர்ப்பு இருந்ததை அனைவருமே உணர்ந்தனர். பொதுமக்கள், பொன்னாயிரத்திடம் கூடுதல் பய பக்தியும் மரியாதையும் காட்டினார்கள். இயல்பிலேயே இறைகுணங்களோடு வாழ்ந்துவந்த பொன்னாயிரத்தை பொன்னாயிர சுவாமிகளாக, முதியவர் வடிவில் இறைவனே வந்து உயர்த்தி அருள்பாலித்திருப்பார் என்றுதான் இந்நிகழ்வைக் கொள்ளமுடிகிறது. இந்நிகழ்வுக்குப் பின்னர், பொன்னாயிர சுவாமிகளின் இறையருள் லீலைகள் தொடங்கின.

 ஒருமுறை பொன்னாயிர சுவாமிகள் தங்கியிருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து, தெருவில் பல குடிசைகள் எரிந்து தீ பரவிக்கொண்டிருந்தது. தீயை அணைப்பதற்கு மக்கள் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது பொன்னாயிர சுவாமிகளிடம் வந்து பொதுமக்கள் முறையிட, உடன் சுவாமிகள் தன் அறையிலிருந்த ஒரு குடையை எடுத்துவந்து வீதியில் நின்று விரித்து உயர்த்திப் பிடிக்க, உடனே வானில் மேகங்கள் கருகருத்து மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குப் பெய்த மழையில், குடிசைகளில் பற்றிக்கொண்டிருந்த தீக்கனல் முற்றிலும் அணைந்ததில் மக்களின் மனமும் குளிர்ந்தது. இந்நிகழ்வின் மூலம் ஊருணிப்பட்டி மக்களிடையே சுவாமிகளின் புகழ் பரவியது. இதன்பின் அன்றிலிருந்து இன்றுவரை அப்பகுதியில் தீ விபத்து எதுவும் இல்லை என்பதும்

குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.
அவரைத் தேடிச் செல்லும் தொழுநோயாளிகளுக்கும், இன்னும் பல தீராத நோய் கொண்டவர்களுக்கும் சுவாமிகள் தரும் மருந்தென்ன தெரியுமா? அவர் உடலிலிருந்து அழுக்கைத் திரட்டிக் கொடுத்து, இதைப் பாலில் போட்டுக் குடி என்பார். அவர்களும் அப்படியே செய்து குணமான செய்திகளும் உண்டு. சுவாமிகள், யார் வீட்டுக்குள்ளாவது திடீரென நுழைவார். அம்மா, கொஞ்சம் கஞ்சி கொடு என்பார். வீட்டுக்காரப் பெண், அய்யோ சாமி, கஞ்சி இல்லையே என்பாள். சுவாமிகள் சிரித்துக்கொண்டே, ம்! பானையைத் திற, கஞ்சி இருக்கும். கொண்டு வா என்பார். அப்பெண்ணும் கஞ்சி பானையைத் திறக்க, கஞ்சி நிறைந்திருக்கும். வியந்தவாறே அந்தப் பெண், சுவாமிக்குக் கஞ்சியுடன் ஊறுகாயும் சேர்த்துக் கொடுப்பாள். சுவாமிகள் வயிறு நிறையக் குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்புவார். குழந்தைகள் என்றால், பொன்னாயிர சுவாமிகளுக்குத் தனி இன்பம்.

குழந்தைகளுக்கு எந்த நோய் என்றாலும், சுவாமிகளிடம் தூக்கிக்கொண்டு வருவார்கள் பெற்றோர், உடன் திருநீற்றை அள்ளி, குழந்தைகள் உடல் முழுதும் பூசி வாயிலும் சிறிது போடுவார். உடன் நோய் நொடியில் மறையும். ஒருமுறை சிதம்பரம் போய் வருகிறேன் என்று சொல்லிப் புறப்பட்ட நண்பருக்கு, எதற்குக் காசெல்லாம் செலவழிக்கிறாய்? இங்கேயே நான் உனக்கு சிதம்பரத்தைக் காட்டுகிறேன் எனக் கூறி, அவர் தங்கியிருந்த நந்தவனச் சுவரில் ஒரு கரித்துண்டால் சதுரமாகக் கட்டம் போட்டு, இதோ பார் சிதம்பரம் என்று கூற, அந்தச் சுவரில் சிதம்பரம் கோயில் வாசலிலிருந்து சுவாமி சன்னதி வரை தெரிந்ததோடல்லாமல், போய் வருகின்ற மக்களும் தெளிவாகத் தெரிந்தார்கள். உடன் நண்பர், சுவாமிகளை விழுந்து வணங்கினார். சுவாமிகளைப் பார்க்கவரும் அன்பர்கள் தரும் பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் அனைத்தையும் ருசித்து ரசித்துச் சாப்பிட்ட பின், வாயிலிருந்து பல வண்ணப்பூக்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்து வந்தவர்களை ஆசிர்வதிப்பார் சுவாமிகள். பூவைப் பெற்றுச் செல்லும் பலருக்கும் அவர்கள் குடும்பத்தில் பல நன்மைகள்

பிறருக்காகவே வாழ்ந்த பொன்னாயிரம் சுவாமிகள், தாம் முக்தி பெறும் நாளை அறிந்தார். நெருங்கிப் பழகும் சிலரிடம் அதைத் தெரிவித்தார். மார்கழி மாத சித்திரை நட்சத்திரத்தில் நான் முக்தி அடைவேன். அப்போது திருப்பதியிலிருந்து ஒரு கிரீடம் வரும். அதை ஒரு நாள் முழுதும் என் தலைமேல் வைத்து எடுத்த பின்னர், என்னை அடக்கம் செய்யுங்கள். என் சமாதிமீது அமைக்கும் லிங்கத்தின்மேல் அந்த கிரீடத்தை வைத்து அனுதினமும் பூஜை செய்யுங்கள் என ஆசியருளினார்.


குறித்த நாளில் சுவாமிகள் முக்தியடைய, சிறிது நேரத்தில் ஓர் இளவயதுத் துறவி, கருப்பு நிற நெடிய உருவத்துடன், ஓங்கி உயர்ந்த கட்டான உடலழகோடு, நாகபடத்துடன் வண்ணக் கலை நுணுக்கங்களுடன் கூடிய கிரீடத்தைக் தாங்கி நந்தவனத்தில் நுழைந்தார். துறவியை வரவேற்ற சுவாமியின் பக்தர்கள், உள்ளே முக்தியடைந்திருக்கும் சுவாமிகளின் தலையில் அந்த கிரீடத்தைச் சூட்ட, சுவாமிகளின் உடல் மேலும் புதுப் பொலிவு பெற்றது. பொன்னாயிரம் சுவாமிகளுக்குத் தலையில் சூட்டிய கிரீடத்தை தன்னை மறந்து ரசித்துப் பார்த்த அந்தத் துறவி, அங்கிருந்து மறைந்தார். தலையில் கிரீடம் வைத்து ஒரு நாள் ஆன பின்னர், சுவாமிகளை அடக்கம் செய்யும் திருப்பணி ஆரம்பாகியது. ஆறடி அகலம், எட்டடி ஆழத்தில் குழி வெட்டி, துறவிகளை அடக்கம் செய்யும் விதிமுறைகளோடு பூக்கள், வாசனை திரவியங்கள் என்று பலவும் குவித்து சுவாமிகளை அமர்ந்த நிலையில் உள்ளே இருத்தி சமாதி ஏற்படுத்தினார்கள். இதன்பின் ஒரு வாரத்தில், சுவாமிகளின் சமாதிமீது அழகிய சிவலிங்கம் நிறுவப்பட்டது.

சமாதி எழுப்பி இரு வாரங்கள் கழிந்த நிலையில், எங்கள் தேவாலயத்துக்கு எதிரே இந்தச் சமாதி அமைத்துள்ளீர்களே! எனவே, அதை அகற்றுங்கள் என்று சொல்லிய வேற்று மதத்தைச் சார்ந்த சிலர், அப்போதிருந்த ஆங்கிலேயே மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தார்கள். இதன்பின் மாவட்ட ஆட்சியர் பரிவாரங்களுடன் வந்து சுவாமிகளின் சமாதியைப் பார்வையிட்டு, சமாதியை அகற்ற உத்தரவிட்டார். அவ்விதமே பணியாட்களும் சமாதியை இடித்து சிவலிங்கத்தை அகற்றி, சுவாமியை அடக்கம் செய்த பகுதியைத் திறந்தார்கள். பக்தர்களோ செய்வதறியாமல் சுவாமிகளை மானசீகமாக வேண்டியவாறு இருந்தனர்.

என்ன ஆச்சரியம் ! குழிக்குள், அதே அமர்ந்த நிலையில், ஒரு சிறிதும் வாடாமல் வதங்காமல், அன்றலர்ந்த செந்தாமரையாய்த் திகழ்ந்தது சுவாமிகளின் உடல். குழிக்குள் கொட்டப்பட்டிருந்த பூக்கள் அத்தனையும்கூட வாடாமல் புது மலர்களாய்க் காட்சி தந்தன. வாசனை திரவியங்களும் சுற்றுவட்டாரத்தில் பரவி கமகமத்தன. மாவட்ட ஆட்சியரும் பணியாட்களும், மனு தந்த வேற்று மதத்தினரும் சுவாமிகளின் அருளாற்றலை எண்ணி வியந்தார்கள். சமாதியை இடிக்கவந்த மாவட்ட ஆட்சியர் தன்னையறியாமல் சுவாமிகளைக் கைகூப்பி வணங்கினார். இதன்பின் மீண்டும் சமாதியை மூடி, சிவலிங்கத்தை அந்த இடத்திலேயே நிறுவச் செய்து, அங்கே பெரிய கோயில் எழுப்பவும் ஆலோசனைகள் சொல்லி விடைபெற்றார்.

 இதன்பின் நந்தவனத்துடன் கூடிய பெரிய அழகிய கோயிலை எழுப்பியதுடன், அற்புதமான வற்றாக்கிணறும் அமைத்தார்கள். கலையழகுமிக்க விநாயகர் சிலையும், ஆண்டிக்கோல அழகிய முருகன் சிலையும், கண் மயக்கும் எழில்மிகு நந்திச் சிலையும் என கோயில், பல அழகிய கலைநயமிக்க இறைவடிவங்களுடன் எழிலுறத் தொடங்கியது. கடைசியாக, பொன்னாயிர சுவாமிகள் சமாதி அடைவதற்கு சில தினங்களுக்கு முன் எடுத்துக் கொண்ட அந்தக் கால புகைப்படம் ஒன்றும் கோயில் முகப்பில் அழகுமிளிர அருளாசி தருகிறது. இடுப்பில் கட்டிய துண்டுடன், அமர்ந்த நிலையில்

 ஒரு துறவிக்குரிய அனைத்து லட்சணங்களுடன் தோற்றம் தருகிற சுவாமிகளின் கோலம் கண்கொள்ளா விருந்து ! இன்றும் தன்னைத் தேடிவரும் பக்தர்களுக்கு, பொன்னாயிரம் சுவாமிகளின் அருள்வெள்ளம் வற்றாத ஊற்றாகப் பெருகி வழிவதை காணலாம். நம் வாழ்நாளில் ஒருமுறையாவது பொன்னாயிரம் சுவாமிகளின் ஜீவ சமாதிக்குச் செல்வோம். வாழ்வில் எல்லா வளங்களும் பெறுவோம்

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-11

மூட்டை சுவாமிகளின் அற்புதங்கள்:

 ''ஒரு மழைக் காலத்தில், அதிக வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின் வயர் ஒன்று அறுந்து, நடு ரோட்டில் விழுந்து கிடந்தது. இதைக் கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கி அந்தப் பக்கமே செல்லாமல் இருந்தனர். சுவாமிகள் ரொம்ப சாதாரணமாகச் சென்று அந்த வயரைத் தன் கையால் எடுத்து அப்புறப்படுத்திப் போட்டார்...

சுவாமிகள் தியானத்தில் ஒரு முறை பேச்சற்றுக் கிடந்தபோது, பதறிப் போன சேலத்து பக்தர் ஒருவர், இவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டுப் போயிருக்கிறார். அங்கு சுவாமிகளைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், 'மூச்சே இல்லை. இறந்து விட்டார்!' என்று ரிப்போர்ட் எழுதி, இவரை மார்ச்சுவரியில் வைத்திருக்கிறார்கள்.
அடுத்த சில மணி நேரங்களில் சுவாமிகள், பழநியில் ஒரு மலையில் தவத்தில் இருந்தாராம். மார்ச்சுவரியில் சுவாமிகள் இருந்த அறையைத் திறந்து பார்த்த ஆசாமிக்கு அதிர்ச்சி... அங்கே இவர் இல்லை.
பழநி கல்லூரியில் வேலை பார்த்து வந்த பேராசிரியர் ஒருவர், இன்ன தேதியில் இறக்கப் போகிறார் என்பதை முன்கூட்டியே சொல்லி இருந்தார் சுவாமிகள். எந்த ஞான திருஷ்டி மூலம் சுவாமிகள் சொன்னாரோ தெரியவில்லை...

சுவாமிகள் சொன்ன தேதியில் திடீரென உடல் நலக் குறைவாகி இறந்து விட்டார்.