கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 26, 2013

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-12


பொன்னாயிர சுவாமிகளின் அற்புதங்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதியில் தோன்றி, ஐம்பதாண்டுகள் மண்ணுலகில் மானுடருக்கு அருள்நலம் புரிந்த அந்த சித்தர்குலப் பெருமகனின் அருட்செயல்கள் அநேகம். முந்நூறு குடும்பங்களே உடைய கோட்டைப்புறச் செட்டி குலத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் பொன்னாயிர சுவாமிகள். ஐந்து குழந்தைகளில் கடைசிக் குழந்தையாக அவதரித்தார் பொன்னாயிரம். பெற்றோர் பெயர் தெரியவில்லை. சிறு வயது முதலே சுதந்திரமாகச் சுற்றித் திரிதலில் பெருவிருப்பம் கொண்டிருந்ததால், உடன் பிறப்புகளும் இவரைப் புறக்கணித்தனர்.

 இத்தகைய சுதந்திர மனப்பான்மையால், பல ஊர்கள் சுற்றி, பல்வேறு தொழில்களும் கற்றுக்கொண்டார். சித்தர்களுக்கே உரிய தன்மைகளான எதிலும் பற்றின்மை, காமம், கோபம், விருப்பு வெறுப்பு போன்ற உணர்வுகள் ஏதுவுமற்று இருந்தார் பொன்னாயிரம். பசி, தூக்கம் மறந்து காரியம் செய்தல், எவ்வுயிர்களிடத்திலும் எந்நிலையிலும் அளவற்ற கருணை, எப்போதும் பிறர்க்கு உதவும் இறைகுணம் என கருவிலேயே திருவாக விளங்கினார். இவ்விதம் முப்பத்தைந்து வயது வரை பல ஊர்களைச் சுற்றித் திரிந்த பொன்னாயிரம், பின்னர் தம் சொந்த ஊரான திருவில்லிபுத்தூரை வந்தடைந்தார். நெசவாளப் பெருமக்கள் வாழ்ந்துவந்த தெருக்களில் ஒன்றான ஊருணிப்பட்டித் தெருவில் அடைக்கலமானார்.

பிள்ளையில்லாக் கிழவிக்கு ஈசன் பிள்ளையாகச் சென்ற திருவிளையாடல் கதைபோல, இத்தெருவில் மொச்சை விற்கும் கிழவி ஒருத்திக்குப் பிள்ளையானார் பொன்னாயிரம். மருத்தாமலை எனும் நண்பர் ஒருவரும் பொன்னாயிரத்துக்கு மிக நெருக்கமான உளங்கலந்த நண்பரானார். இவ்விதம் கிழவியின் பராமரிப்பில் பல்லாண்டுகள் வாழ்ந்து வரலானார்.

பொன்னாயிரத்தைப் புடம்போடும்விதமான ஒரு நிகழ்வு முதியவர் ஒருவரால் நிகழ்ந்தது. ஒரு நாள் மாலை பொன்னாயிரம், மருத்தாமலை மற்றும் சில நண்பர்களுடன் முதலியார்பட்டி சுடுகாட்டில் கிணற்றில் குளித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர்கள் வரும் வழியிலுள்ள ஓய்வு மண்டபத்திலிருந்து அச்சமயம் ஒரு முனகல் சத்தம் வந்தது. மருத்தாமலை முன்சென்று பார்க்க, அங்கே மண்டபத்தில் நூறு வயது மதிக்கத்தக்க முதியவரொருவர் செக்கச்சிவந்த மேனியோடு கழுத்தில் உருத்திராட்ச மாலை அணிந்து மதிக்கத்தக்க தோற்றத்துடன் கடைசி நிமிடங்களில் இருந்தார்.
தோற்றம் தந்த மதிப்பில் அவர் அருகே சென்ற மருத்தாமலை அவரிடம், சாமி, என்ன செய்யணும், சொல்லுங்க! எனக் கேட்டார். முதியவரோ அவரிடம் பொன்னாயிரத்தைக் கைகாட்டி, அவரைக் கூப்பிடு என்று சைகை காண்பித்தார். பொன்னாயிரமும் அவர்முன் ஓடிவந்து நின்றார். முதியவர் பொன்னாயிரத்தைத் தன் பக்கத்தில் அமருமாறு சைகை காட்டினார். அமர்ந்தவுடன், தன் மடியிலிருந்து திருநீற்றுப்பையை எடுத்து பொன்னாயிரத்தின் நெற்றியிலும் மார்பிலும் பூசியதோடு, சிறிது வாயிலும் இட்டு, ஈனஸ்வரத்தில், நான் தருவதை நீ வாங்கிக் கொள்வாயா? எனக் கேட்க, பொன்னாயிரமும் சரி என்று தலையாட்டினார்.

பொன்னாயிரத்தின் தலையில் கை வைத்து, கிழவர் காதைக் கொடு என்றவாறே, அவர் காதில் ஏதோ ஒரு மந்திரத்தை முணுமுணுத்தார். அதைக் கேட்ட பொன்னாயிரத்தின் முகம் மலர்ந்த சமயம், முதியவரின் உயிர் பிரிந்தது. பின் அனைவரும் அந்த முதியவரின் நல்லுடலை, தகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்தனர். இதன் பின்னர் மகான் பொன்னாயிரத்தின் தேகம் முழுவதிலும் ஒரு புதிய ஒளி ஊற்று பரவியது. அவரிடமிருந்து இனங்கண்டு சொல்லமுடியாத ஒரு ஈர்ப்பு இருந்ததை அனைவருமே உணர்ந்தனர். பொதுமக்கள், பொன்னாயிரத்திடம் கூடுதல் பய பக்தியும் மரியாதையும் காட்டினார்கள். இயல்பிலேயே இறைகுணங்களோடு வாழ்ந்துவந்த பொன்னாயிரத்தை பொன்னாயிர சுவாமிகளாக, முதியவர் வடிவில் இறைவனே வந்து உயர்த்தி அருள்பாலித்திருப்பார் என்றுதான் இந்நிகழ்வைக் கொள்ளமுடிகிறது. இந்நிகழ்வுக்குப் பின்னர், பொன்னாயிர சுவாமிகளின் இறையருள் லீலைகள் தொடங்கின.

 ஒருமுறை பொன்னாயிர சுவாமிகள் தங்கியிருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து, தெருவில் பல குடிசைகள் எரிந்து தீ பரவிக்கொண்டிருந்தது. தீயை அணைப்பதற்கு மக்கள் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது பொன்னாயிர சுவாமிகளிடம் வந்து பொதுமக்கள் முறையிட, உடன் சுவாமிகள் தன் அறையிலிருந்த ஒரு குடையை எடுத்துவந்து வீதியில் நின்று விரித்து உயர்த்திப் பிடிக்க, உடனே வானில் மேகங்கள் கருகருத்து மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குப் பெய்த மழையில், குடிசைகளில் பற்றிக்கொண்டிருந்த தீக்கனல் முற்றிலும் அணைந்ததில் மக்களின் மனமும் குளிர்ந்தது. இந்நிகழ்வின் மூலம் ஊருணிப்பட்டி மக்களிடையே சுவாமிகளின் புகழ் பரவியது. இதன்பின் அன்றிலிருந்து இன்றுவரை அப்பகுதியில் தீ விபத்து எதுவும் இல்லை என்பதும்

குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.
அவரைத் தேடிச் செல்லும் தொழுநோயாளிகளுக்கும், இன்னும் பல தீராத நோய் கொண்டவர்களுக்கும் சுவாமிகள் தரும் மருந்தென்ன தெரியுமா? அவர் உடலிலிருந்து அழுக்கைத் திரட்டிக் கொடுத்து, இதைப் பாலில் போட்டுக் குடி என்பார். அவர்களும் அப்படியே செய்து குணமான செய்திகளும் உண்டு. சுவாமிகள், யார் வீட்டுக்குள்ளாவது திடீரென நுழைவார். அம்மா, கொஞ்சம் கஞ்சி கொடு என்பார். வீட்டுக்காரப் பெண், அய்யோ சாமி, கஞ்சி இல்லையே என்பாள். சுவாமிகள் சிரித்துக்கொண்டே, ம்! பானையைத் திற, கஞ்சி இருக்கும். கொண்டு வா என்பார். அப்பெண்ணும் கஞ்சி பானையைத் திறக்க, கஞ்சி நிறைந்திருக்கும். வியந்தவாறே அந்தப் பெண், சுவாமிக்குக் கஞ்சியுடன் ஊறுகாயும் சேர்த்துக் கொடுப்பாள். சுவாமிகள் வயிறு நிறையக் குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்புவார். குழந்தைகள் என்றால், பொன்னாயிர சுவாமிகளுக்குத் தனி இன்பம்.

குழந்தைகளுக்கு எந்த நோய் என்றாலும், சுவாமிகளிடம் தூக்கிக்கொண்டு வருவார்கள் பெற்றோர், உடன் திருநீற்றை அள்ளி, குழந்தைகள் உடல் முழுதும் பூசி வாயிலும் சிறிது போடுவார். உடன் நோய் நொடியில் மறையும். ஒருமுறை சிதம்பரம் போய் வருகிறேன் என்று சொல்லிப் புறப்பட்ட நண்பருக்கு, எதற்குக் காசெல்லாம் செலவழிக்கிறாய்? இங்கேயே நான் உனக்கு சிதம்பரத்தைக் காட்டுகிறேன் எனக் கூறி, அவர் தங்கியிருந்த நந்தவனச் சுவரில் ஒரு கரித்துண்டால் சதுரமாகக் கட்டம் போட்டு, இதோ பார் சிதம்பரம் என்று கூற, அந்தச் சுவரில் சிதம்பரம் கோயில் வாசலிலிருந்து சுவாமி சன்னதி வரை தெரிந்ததோடல்லாமல், போய் வருகின்ற மக்களும் தெளிவாகத் தெரிந்தார்கள். உடன் நண்பர், சுவாமிகளை விழுந்து வணங்கினார். சுவாமிகளைப் பார்க்கவரும் அன்பர்கள் தரும் பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் அனைத்தையும் ருசித்து ரசித்துச் சாப்பிட்ட பின், வாயிலிருந்து பல வண்ணப்பூக்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்து வந்தவர்களை ஆசிர்வதிப்பார் சுவாமிகள். பூவைப் பெற்றுச் செல்லும் பலருக்கும் அவர்கள் குடும்பத்தில் பல நன்மைகள்

பிறருக்காகவே வாழ்ந்த பொன்னாயிரம் சுவாமிகள், தாம் முக்தி பெறும் நாளை அறிந்தார். நெருங்கிப் பழகும் சிலரிடம் அதைத் தெரிவித்தார். மார்கழி மாத சித்திரை நட்சத்திரத்தில் நான் முக்தி அடைவேன். அப்போது திருப்பதியிலிருந்து ஒரு கிரீடம் வரும். அதை ஒரு நாள் முழுதும் என் தலைமேல் வைத்து எடுத்த பின்னர், என்னை அடக்கம் செய்யுங்கள். என் சமாதிமீது அமைக்கும் லிங்கத்தின்மேல் அந்த கிரீடத்தை வைத்து அனுதினமும் பூஜை செய்யுங்கள் என ஆசியருளினார்.


குறித்த நாளில் சுவாமிகள் முக்தியடைய, சிறிது நேரத்தில் ஓர் இளவயதுத் துறவி, கருப்பு நிற நெடிய உருவத்துடன், ஓங்கி உயர்ந்த கட்டான உடலழகோடு, நாகபடத்துடன் வண்ணக் கலை நுணுக்கங்களுடன் கூடிய கிரீடத்தைக் தாங்கி நந்தவனத்தில் நுழைந்தார். துறவியை வரவேற்ற சுவாமியின் பக்தர்கள், உள்ளே முக்தியடைந்திருக்கும் சுவாமிகளின் தலையில் அந்த கிரீடத்தைச் சூட்ட, சுவாமிகளின் உடல் மேலும் புதுப் பொலிவு பெற்றது. பொன்னாயிரம் சுவாமிகளுக்குத் தலையில் சூட்டிய கிரீடத்தை தன்னை மறந்து ரசித்துப் பார்த்த அந்தத் துறவி, அங்கிருந்து மறைந்தார். தலையில் கிரீடம் வைத்து ஒரு நாள் ஆன பின்னர், சுவாமிகளை அடக்கம் செய்யும் திருப்பணி ஆரம்பாகியது. ஆறடி அகலம், எட்டடி ஆழத்தில் குழி வெட்டி, துறவிகளை அடக்கம் செய்யும் விதிமுறைகளோடு பூக்கள், வாசனை திரவியங்கள் என்று பலவும் குவித்து சுவாமிகளை அமர்ந்த நிலையில் உள்ளே இருத்தி சமாதி ஏற்படுத்தினார்கள். இதன்பின் ஒரு வாரத்தில், சுவாமிகளின் சமாதிமீது அழகிய சிவலிங்கம் நிறுவப்பட்டது.

சமாதி எழுப்பி இரு வாரங்கள் கழிந்த நிலையில், எங்கள் தேவாலயத்துக்கு எதிரே இந்தச் சமாதி அமைத்துள்ளீர்களே! எனவே, அதை அகற்றுங்கள் என்று சொல்லிய வேற்று மதத்தைச் சார்ந்த சிலர், அப்போதிருந்த ஆங்கிலேயே மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தார்கள். இதன்பின் மாவட்ட ஆட்சியர் பரிவாரங்களுடன் வந்து சுவாமிகளின் சமாதியைப் பார்வையிட்டு, சமாதியை அகற்ற உத்தரவிட்டார். அவ்விதமே பணியாட்களும் சமாதியை இடித்து சிவலிங்கத்தை அகற்றி, சுவாமியை அடக்கம் செய்த பகுதியைத் திறந்தார்கள். பக்தர்களோ செய்வதறியாமல் சுவாமிகளை மானசீகமாக வேண்டியவாறு இருந்தனர்.

என்ன ஆச்சரியம் ! குழிக்குள், அதே அமர்ந்த நிலையில், ஒரு சிறிதும் வாடாமல் வதங்காமல், அன்றலர்ந்த செந்தாமரையாய்த் திகழ்ந்தது சுவாமிகளின் உடல். குழிக்குள் கொட்டப்பட்டிருந்த பூக்கள் அத்தனையும்கூட வாடாமல் புது மலர்களாய்க் காட்சி தந்தன. வாசனை திரவியங்களும் சுற்றுவட்டாரத்தில் பரவி கமகமத்தன. மாவட்ட ஆட்சியரும் பணியாட்களும், மனு தந்த வேற்று மதத்தினரும் சுவாமிகளின் அருளாற்றலை எண்ணி வியந்தார்கள். சமாதியை இடிக்கவந்த மாவட்ட ஆட்சியர் தன்னையறியாமல் சுவாமிகளைக் கைகூப்பி வணங்கினார். இதன்பின் மீண்டும் சமாதியை மூடி, சிவலிங்கத்தை அந்த இடத்திலேயே நிறுவச் செய்து, அங்கே பெரிய கோயில் எழுப்பவும் ஆலோசனைகள் சொல்லி விடைபெற்றார்.

 இதன்பின் நந்தவனத்துடன் கூடிய பெரிய அழகிய கோயிலை எழுப்பியதுடன், அற்புதமான வற்றாக்கிணறும் அமைத்தார்கள். கலையழகுமிக்க விநாயகர் சிலையும், ஆண்டிக்கோல அழகிய முருகன் சிலையும், கண் மயக்கும் எழில்மிகு நந்திச் சிலையும் என கோயில், பல அழகிய கலைநயமிக்க இறைவடிவங்களுடன் எழிலுறத் தொடங்கியது. கடைசியாக, பொன்னாயிர சுவாமிகள் சமாதி அடைவதற்கு சில தினங்களுக்கு முன் எடுத்துக் கொண்ட அந்தக் கால புகைப்படம் ஒன்றும் கோயில் முகப்பில் அழகுமிளிர அருளாசி தருகிறது. இடுப்பில் கட்டிய துண்டுடன், அமர்ந்த நிலையில்

 ஒரு துறவிக்குரிய அனைத்து லட்சணங்களுடன் தோற்றம் தருகிற சுவாமிகளின் கோலம் கண்கொள்ளா விருந்து ! இன்றும் தன்னைத் தேடிவரும் பக்தர்களுக்கு, பொன்னாயிரம் சுவாமிகளின் அருள்வெள்ளம் வற்றாத ஊற்றாகப் பெருகி வழிவதை காணலாம். நம் வாழ்நாளில் ஒருமுறையாவது பொன்னாயிரம் சுவாமிகளின் ஜீவ சமாதிக்குச் செல்வோம். வாழ்வில் எல்லா வளங்களும் பெறுவோம்

No comments: