கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்-1

ஊமையன் கோயில்

சாமிக்குக் கோயில் இருக்குது அரசனுக்குக் கோயில் இருக்குது மாட்டுக்காக உயிருவிட்ட மனுசன் ஒருத்தனுக்கு கோயில் இருக்குது உங்களுக்குத் தெரியுமா?சின்னக்கோவிலாங்கெளம்னு ஒரு ஊரு இந்த ஊருல மாடு,கன்னு இல்லாத வீடே இல்லைன்னு சொல்லலாம் ஊர்ல பெரும்பாதிப் பேரு வெவசாயம் பாக்குததால மாடு கன்ன மேய்க்க ஒருத்தர நெயமிச்சுருவாங்க இங்க மாடு மேய்ச்சிகிட்டு இருந்த கருப்பங்கர கெழவன் மண்டையப் போட்டுட்டாரு
அந்த நேரத்துல அந்த ஊருக்கு ஒரு ஊமையன் வந்தான்
ரொம்பக் கெழவனாவும் இல்லாம ரொம்ப எளந்தாரியாவும் இல்லாம நடுவாந்தமா இருந்தான் ஊர் மடத்துல படுத்துக் கெடந்திருந்தவனை எழுப்பி நீ யாரு? ஒம் பேரு என்ன?ஓம் வண்ணம்(ஜாதி)என்னன்னு கேட்டாரு ஒரு பெரியவரு அவன் பேபேன்னு என்னவெல்லாமோ சொன்னான் யாருக்குப் புரிஞ்சுது?ஊமையன் பாஷை உடையாளுக்குத்தான் (தாய்க்குத்தான்)தெரியுங்கிறது சொலவாம் அன்னையப் பொழுதுக்கு அந்தப் பெரியவரு அவனத் தன்னோட கூட்டீட்டுப் போயி வயிறாரச் சோறுப்போட்டுத் தங்க வைச்சாரு.

விடிஞ்சோன பெரியவரு ஊமையங்கிட்ட இன்னிக்கு எம் மாடு கன்னுகள மேய்ச்சலுக்குப் பாத்திக்கிட்டு போறயான்னு சைகையாலேயே கேட்டாரு ஊமையனும் சரின்னு சைகையாலேயே பதில் சொன்னான் ஏதோ வானத்திலிருந்து குதிச்சு வந்தவன் மாதிரி அந்த ஊருக்கு வந்த ஒரு வீட்டு மாடு கன்ன மேச்சவன் நாளானதும் ஊர் மாடு கன்னு பூரா மேய்க்க ஆரமித்தான்.

மாடு மேய்க்கும் போது எல்லாரும் மாடு பத்த ஏதாச்சும் கம்பு வச்சிருப்பாரு ஆனா ஊமையன் சீங்கொழல(புல்லாங்குழல்)எப்பவும் இடுப்புல சொருகி வைச்சிருப்பான் அந்த சீங்கொழலுதான் அவஞ்சொத்து
காலைலே வெயிலு வந்தோன மாடுகள மேய்ச்சலுக்கு ஒவ்வொரு தொழுவாமா அவுத்து வுடுவான அந்த காலத்துல மாடுக எல்லாம் ஒண்ணாக் கூட மாட்டு மந்தை இருக்கும் எல்லா மாடுகளும் அங்கதான் கூடும் அப்புறம் அதுக எல்லாத்தையும் பத்திக்கிட்டுக் காட்டுக்கு போவான் ஊமையன்.உச்சிப் பொழுதானதும் கொளக்கரைப் புளிய மரத்தடியில் ஒக்காந்து சீங்குழல எடுத்து ஒரு ராகத்த வாசிப்பான் மேஞ்சிக்கிட்டிருந்த எல்லா மாடுகளும் தன்னால மரத்தடியில கூடியிரும் வெயிலு தாழற வரைக்கும் மாடுக மரத்தடியில படுத்து அசை வெட்டும்(அசை போடும்)அப்புறம் கொளத்துக்குள்ள போயி வெயிலுக்கு எதமா மாடுக குளிக்கும் சாயந்தரமானா திரும்பியும் மேய்ச்சலுக்குப் போகுங்க

கருக்கலானதும் ஊமையன் சீங் கொழல எடுத்து இன்னொரு ராகம் வாசிப்பான மேய்ச்சலுக்குப் போன எல்லா மாடுகளும் புளிய மரத்தடியில ஒன்னாக் கூடுங்க பொழுது மசங்கின ஒடனே மாடுகளப் பத்திக்கிட்டு மந்தைக்கு வருவான் பழகுன மாடுக தானா அதுக வீட்டுக்கு போயிரும் புது மாடுகளை விட்டுக்காரங்களே வந்து பத்திக்கிட்டுப் போயிருவாக.
இப்படி மாடு மேய்ச்சிக்கிட்டிருந்த சமயம் ஒரு நா உச்சிப் பொழுதுல மாடுகள தவிப்பார போட்டுட்டு லேசாகக் கண்ண மூடிட்டான் அப்ப உளுந்து வறுத்தா ஒரு வாசம் வருமே அப்படி ஒரு வாசன ஊமையன் மூக்குத் தொலைக்குது ஊமையன் கண்ணத் தெறந்து பாக்குறான் ஒரு பெரிய நல்ல பாம்பு படமெடுத்து ஒரு மாட்டக் கொத்தறத்துக்குத் தயாரா நிக்குது
அத பாத்தோன ஊமையனுக்கு வெடவெடன்னு வந்திருச்சு ஒடிப்போயி அப்படியே அந்த பாம்போட கழுத்த கெட்டியாப் புடிச்சிட்டான் நல்ல பாம்பு சும்மா விடுமா?மாட்டக் கொத்த வந்த பாம்பு ஊமையனைக் கொத்திருச்சி கொத்துன நொடியிலே ஒடம்புல வெஷம் பரவிடுத்து வெஷம் பரவுனாலும் ஊமையன் தன்னோட புடியை விடல கையில இறுக்கிப் புடிச்சதுனாலேயே பாம்பும் செத்துப் போயிருச்சி ஊமையனும் அப்படியே மரத்தடியிலேயே செத்துப்போயிட்டான்

இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த மாடுக கண்ணீர் வடிச்சதுக எந்த மாடும் கொளத்துக்குப்போய் தண்ணிக்குடிக்கல சாயந்தர மேச்சலுக்கும் போகல சீங்கொழலு சத்தங்கேக்காதனால மாடுக அப்பிடியே படுத்தது படுத்தபடியே கிடந்தது
பொழுது மசுங்குன பொறவும் மாடுக மந்தைக்கு வராததால ஊர் மக்க எல்லாரும் கையில தீப்பந்தத்தோட ஊமையனையும் மாடுகளையும் தேடி புளிய மரத்தடுக்கு வந்தாங்க

மரத்தடியில ஊமையன் வாயில நொரத் தள்ளி கையில நல்ல பாம்போட கெடக்க மாடுக கண்ணுல தண்ணியோட கெடக்க அதப் பார்த்த ஊர்சனம் பூராவும் அலுவசப்பட்டு (அதிசயப்பட்டு)அப்பிடியே மூக்கு மேல விரல வைச்சாங்க
எங்கிருந்தோ வந்த ஊமையன் ஊர் மாடுகள காப்பாத்த தன்னோட உசிரையே கொடுத்தானே அவன் தெய்வாம்சமானவன்னு சொல்லிப் புளிய மரத்தடியில அவன அடக்கம் பண்ணி அடையாளத்துக்கு ஒரு கல்லையும் நட்டு வச்சாக இன்னிக்கும் சுத்து வட்டாரத்துல மாடு கன்னுகளுக்கு சொகமில்லைன்னா ஊமையப்பா உன் சன்னதியில காள மாடு வாகனம் செஞ்சு வைக்கிறேன் மாட்டைக் குணப்படுத்திக் கொடுப்பா வேண்டிக்கிறாங்க சுகமயிட்டா உடனே வேண்டுனபடியே கல்லால செஞ்ச உருவத்தக் கொண்டு வந்து ஊமையங் கோயில்ல வைக்கிறாங்க

இன்னிக்கு அந்தச் சன்னதியில் நட்டிருந்த கல்ல எடுத்துகிட்டு ஊமையனுக்கு செல வச்சிருக்காங்க இப்போ ஊமையப் பரு செலயச் சுத்தி சின்னக் கோயிலக் கட்டியிருக்காங்கன்னு ஊமையப்பன் கோயிலு கதையைச் சொல்றாரு சூரங்குடி மாடசாமி.

1 comment:

ஜெகதீஸ்வரன் said...

இக்கோவில் எந்த மாவட்டத்தில் எந்த ஊரில் அமைந்துள்ளது நண்பரே. முதல் பத்தியில் சின்னக் கோவிலூர் போன்று எழுத வந்துள்ளீர்கள். ஆனால் இடையே கௌ போன்ற சொல் வந்து புரிதலை கெடுத்துவிட்டது. நன்றி..