கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Thursday, August 1, 2013

சொலவடைகளும் பழமொழிகளும் -6

சில சொலவடைகளுக்கு விளக்கம் சொல்ல ஒரு கதையையே சொல்ல வேண்டிய திருக்கும். இன்னும் சில சொலவடைகளுக்கு விளக்கம் சொல்ல சில காட்சிகளை விளக்க வேண்டியதிருக்கும். பல சொலவடைகளுக்கு வாழ்வியல் எதார்த்தம் சார்ந்து பொருள் சொல்ல வேண்டியதிருக்கும்.


 இந்த வாரம் காட்சி விளக்கம் சொலவடைகளை மட்டும் பார்ப்போம். ஓரு ஊர்ல ஒருத்தி இருந்தாள். அவளை அசலூர்ல கட்டிக் கொடுத்திருந்திச்சி. அவள் புருஷன் சம்சாரித்தனம்தான் (விவசாயம்) பார்த்தான். ஆள் பார்க்க வாட்டசாட்டமா, ஆஜானுபாகனா இருப்பான். அவளோ, ஒல்லியாய் பூங்கொடி போல இருப்பாள். ரெண்டு பேரையும் ஜோடியாய்ப் பார்ப்பவர்கள் அவளைப் பார்த்து ‘ஐயா பாவம்Ó என்பார்கள்.

 ‘எப்படா ஒடிஞ்சி விழுமோம்னு அவள் இருக்காள். இடும்பன்தடி’ மாதிரி அவன் இருக்கான். பாவம் அந்தப் புள்ளை அவளை வச்சி எப்படிச் சமாளிப்பாள்?Ó என்று அனுதாபப்பட்டார்கள்.

 பார்க்க ஆள் பயில்வான் மாதிரி இருப்பதால் பொண்டாட்டிக்காரி புருசன் கிட்ட வந்தாலே பயந்தாள். பயந்து என்ன செய்ய. ராத்திரி நேரத்தில் ‘கிட்ட வராதே’ என்றா தொட்டுத் தாலி கட்டுன புருஷனைப் பார்த்துச் சொல்ல முடியும்? எப்படியோ ‘பல்லைக் கடி நெல்லைக் கடி’ன்னு காலத்தையும் நேரத்தையும் ஓட்டுனாள். அவள் புருசக்காரனுக்குக் ‘கோழிக்காமம்’ கொஞ்ச நேரத்திற்கு ஒரு தடவை பெண்டாட்டிக்கிட்ட ‘பேசிப்பெரக்கி’ இருக்கனும்னு  ஆசைப்படுவது அவன் இயல்பாக இருந்தது. அவளோ காமம் என்றாலே காத தூரம் ஓடினாள்.

 ‘கட்டுன புருசனின் இடைஞ்சலில் இருந்து நாலு நாள் விடுதலையாகி இருப்போமே’ என்று நினைத்துக் கொண்டு பக்கத்தூரில் இருக்கும் தன் அக்காளின் வீட்டிற்குப் புருசனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.

 அந்தக் காலத்தில் கார் ஏது, ரெயில் ஏது நடந்தேதான் போனாள். அக்காக்காரியின் வீடு போய்ச் சேரவே அந்திக் கருக்கல் நேரமாயிட்டு. அக்காவும் மச்சானும் காடுகரையில இருந்து அப்பதான் வீட்டுக்கு மாடு, கன்றுகளோடு வந்து சேர்ந்திருந்தார்கள்.

 தங்கச்சிக்காரியைக் கண்டதும், அக்காக்காரிக்கு ரொம்ப சந்தோஷம். தங்கச்சிக்காரியை ஆப்புச் சேர்த்துக் கட்டிப் (ஆரத்தழுவி) பிடிச்சுக்கிட்டு, அங்க எப்படி கொளுந்தன் உன்னை நல்லா கவனிச்சிக்கிடுதாகளா? சோறு தண்ணிக்கு மயக்கமில்லையே’ என்று குசலம் விசாரித்தாள்.தங்கச்சிக்காரி முகம் வாடி இருப்பதைப் பார்த்து, அவளுக்குப் பிடித்தமான கோழிக்குளம்பு வைத்தாள். எல்லாரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் இடத்திற்குப் படுக்கப் போனார்கள்.

 இங்கே அக்காக்காரியின் கதையும் அதுவாகத்தானிருந்தது. ‘புருசனுக்குப் பயந்து எங்கடா போய் ஒளிவோம்’ என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தாள். பாயில். தங்கச்சிக்காரியுடன் படுத்துக்கிடந்த அக்காக்காரியை அவள் புருசன் நடுச்சாமம் போல ‘அந்தக்’ காரியத்திற்காகத் தட்டி எழுப்பினான். தங்கச்சிக்கும்  முழிப்புத் தட்டிட்டு அக்காக்காரி இன்னக்கி என்னால முடியாது என்று சொல்லிவிட்டுத் தங்கச்சிக்காரியைப் பார்த்து கண்ணைக் காட்டினாளாம். இந்தச் சூழலின் பின்புலத்தில் ‘அங்க சடச்சி, அக்கா வூட்டுக்குப் போனாளாம். அக்கா தூக்கி மச்சாங்கிட்டப் போட்டாளாம்’ என்ற சொலவடையைச் சொல்லிப் பாருங்கள். அதன் பொருள் பூரணமாகப் புரியும்.

 இதேபோல காட்சிப்படுத்தப்பட்ட இன்னொரு சொலவடை. அங்கனம் (நடத்தை) கெட்ட கழுதை. ஆத்துக்குப் போச்சாம். அங்க ரெண்டு கழுதை மறைவுக்கு வான்னுச்சாம்’ என்பது.

 இங்க ‘கழுதை’ என்பது பெண்ணைக் குறிக்கிறது. நடத்தை கெட்ட பெண்ணை நடத்தை கெட்ட ஆண் மிக எளிதில் அடையாளம் கண்டு கொள்வான். எங்கு சென்றாலும் அவர்களுக்குள் எளிதில் தொடர்பு ஏற்பட்டு விடும். ஏதோ ஒரு அலைவரிசையில் அவர்களின் புலன்கள் பேசாமல் பேசிக்கொள்கின்றன.

 நடத்தை கெட்டவளின் நடை, உடை, பாவனை, பேச்சு லாயக்கு முதலியவை ‘அவள் அப்படித்தான்’ என்று ஆண்களுக்குக் காட்டிக் கொடுத்து விடுகிறது. எனவே மிக இயல்பாக இடத்தை கெட்ட பெண்ணை எளிதில் இனம் கண்டு மற்ற ஆண்கள் அவளை மறைவுக்கு வாரியா?’ என்று அழைக்கிறார்கள். இந்தச் சொலவமும் இதற்கு முந்திய சொலவமும் கிட்டத்தட்ட ஒரே சேதியைத்தான் பேசுகின்றன.

 ஒரு தாய்க்கு மூன்று பிள்ளைகள். மூன்றும் பொட்டப் பிள்ளைகள். தகப்பக்காரன் சின்ன வயசிலேயே இறந்துட்டான். மூத்தமகள் கெட்டிக் கொடுத்த இடத்தில் நில, புலன், வீடு வாசல் என்று வசதியாக இருந்தாள். அவளுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று என்று பிள்ளைகளும் இருந்தன. அதே மாதிரி கடைக்குட்டிப் பிள்ளையும் கெட்டிக் கொடுத்த இடத்தில் வீடு, வாசல், சொத்து சுகம் என்று வசதியாக இருந்தாள். அவரிருக்கும் ரெண்டு பிள்ளைகள் பிறந்திருந்தன. ஆனால் நடுவுள்ளவளுக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் இல்லை. அவள் புருசனும் சின்ன வயசிலேயே இறந்துட்டான். வீடு என்ற பேருக்கு ஒரு குச்சில் மட்டும் இருந்தது. மற்றபடி அன்னாடம் வேலைக்குப் போனால்தான் சாப்பாடு என்ற நிலமை.

 தனக்கு மூத்த அக்காக்காரியும் தனக்கு இளைய தங்கச்சிக்காரியும் வாக்கப்பட்டுப் போன இடத்தில் வசதியாக இருக்க தன் நிலமை இப்படி ஆயிட்டே என்று நினைத்து அடிக்கடி வருத்தப்படுவாள். தன் தலைவிதியை எண்ணி நொந்து கொள்வாள். அவள் வயிற்றில் ஒரு புழுபூச்சியும் வைக்கவில்லை. பிள்ளைகள் நினைப்பு வரும் போதெல்லாம் அக்கா வீட்டுக்காவது அல்லது தங்கச்சி வீட்டுக்காவது போயிருவாள்.

 அக்கா வீட்டுக்குச் சட வார (ஓய்வெடுக்க) போனாலும், அவள்  சகோதரியின் நில¬யைப் புரிந்து கொள்ளாமல் அவளையும் தன்னோடு வேலை செய்ய காடுகரைக்கு கூட்டிக் கொண்டு போய்விடுவாள். அதே மாதிரிதான் தங்கச்சிக்காரியும் அக்காள் அலுத்துச் சடைச்சி நம் வீட்டுக்குச் ‘சட வார’ வந்திருக்காளே’ என்று நினைக்காமல் தன்னோடு வயக்காட்டிற்கு வேலை செய்ய அழைத்துச் செல்வாள்.

 பாவப்பட்ட நடுவுள்ளவளின் கஷ்டத்தை சகோதரிகள் இருவருமே புரிந்து கொள்வதில்லை. இப்படிப்பட்ட சூழலில் நடுவுள்ளவளின் வாய்மொழியாக,

 ‘அக்காட்டச் சலிச்சி தங்கச்சி வீட்டுக்குப் போனா அங்க அரைக்கோட்டை  விதப்பாட்டுக்கு களைவெட்டச் சொன்னாளாம் என்ற சொலவடை பிறக்கிறது. இப்போது வாசகர்கள் இந்தச் சொலவடை சொல்ல வரும் பொருளைப் புரிந்து       கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

 ...........

 ஆசைக்கு அளவில்லை. எவ்வளவு பணம் சேர்ந்தாலும். பணத்தின் மீது உள்ள ஆசை மனிதனுக்கு அடங்குவதில்லை. ஆனால் சாப்பாட்டு விசயத்தில் மட்டும் ஒருகட்டத்தைத் தாண்டியதும் ‘போதும்’ என்று சொல்லி விடுகிறான். அதேபோலதான் தாகத்திற்குக் குடிக்கிற தண்ணீர் விசயத்திலும் தாகம் தீர்ந்தவுடன் ‘போதும்’ என்று தலையாட்டி விடுகிறான். மனிதன் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை உணவும்  நீரும் அவனுக்கு அத்தியாவசியமானதாக இருக்கிறது. வண்ணம் மாறலாம். வடிவம் மாறலாம். ருசியும் மாறலாம். ஆனால் உணவு, நீர் என்ற அடிப்படைத் தன்மை மாறாது. ‘அகிலத்தில் திகட்டாதது அன்னமும், நீரும்தான்’ என்கிறது ஒரு பழமொழி

No comments: