பட்டினத்தார்
திருவெண்காடரின் மகனாக வந்தடைந்த மருதவாணர் வளர்ந்து சிறந்து வாணிபத்தில் வல்லவராய்ப் பெரும் பொருள் ஈட்டித் தம் பெற்றோரை மகிழ்வித்து வந்தார். வணிகர் சிலருடன் கடல் கடந்து சென்று வாணிபம் புரிந்து பெரும் பொருள் ஈட்டி திருக்கோயில் பணிகட்கும், சிவனடியார்கட்கும் அளித்து வந்தார். அவ்வாறு கடல் வாணிபம் செய்து வரும்போது ஒருமுறை வணிகர்கள் பலரோடு கடல் கடந்து சென்றவர் அங்கிருந்து எருமுட்டைகளையும் தவிட்டையுமே வாங்கித் தம் மரக்கலத்தில் நிரப்பிக்கொண்டு ஊர் திரும்பினார்.
வழியில் அனைவர் மரக்கலங்களும் காற்றில் திசைமாறிப் போயின. உடன் வந்த வணிகர்கள் உணவு சமைத்தற்கு இவரிடம் கடனாக எரு மூட்டைகளை வாங்கிப் பயன்படுத்தி உணவு சமைத்தனர். சில நாட்கள் கழித்து அனைவரும் காவிரிப்பூம்பட்டினம் மீண்டனர்.
வரட்டியும் தவிடும்
வந்தடைந்த வணிகர்களில் சிலர் திருவெண்காடரிடம் மருத வாணர் பித்தராய் வீணே பொருளைச் செலவிட்டு தவிடும் வரட்டி யுமே வாங்கி வந்துள்ளார் என்று குறை கூறினார். திருவெண்காடர் மருதவாணர் வாங்கி வந்த வரட்டியைச் சோதித்துப் பார்த்தபோது அவற்றுள் மாணிக்கக் கற்கள் இருத்தலையும் தவிட்டைச் சோதித்த போது அதனுள் தங்கப்பொடி மறைத்து வைக்கப்பட்டிருத்ததையும் கண்டு தன் மகன் கடல் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க இவ்வாறு செய்துள்ளான் என வியந்து அதனை வணிகர்களிடம் கூறிப் பெருமையுற்றார்.
காதற்ற ஊசி
சில நாட்களில் சென்றபின் அனைத்து வரட்டிகளையும் தவிட்டையும் சோதித்தபோது அவற்றுள் ஒன்றும் இல்லாதிருத்தலைக் கண்டு தன் மகன்மீது சினம் கொண்டு அவரைத் தண்டிக்கும் கருத் துடன் தனி அறையில் பூட்டி வைக்கச் செய்து வாணிபத்தைத் தான் கவனித்து வரலானார். மருதவாணரின் தாயார் அவரைக்காண அறைக்குச் சென்றபோது சிவபிரான் மருகனோடும் உமையம்மை யோடும் அங்கிருத்தலைக் கண்டு தன் கணவர்க்கு அறிவிக்க அவரும் சென்று அவ்வருட் காட்சியைக் கண்டு அறையைத் திறக்குமாறு பணித்தார். மருதவாணரிடம் தன் செயலுக்கு மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினார். மருதவாணர் மெய்ந்நூற்பொருளை அவருக்கு உபதேசம் செய்தார். எனினும் பெருஞ்செல்வராகிய அவர்க்கு உலகப் பற்று ஒழியாமை கண்டு காதற்ற ஊசி ஒன்றையும் நூலையும் `காதற்ற ஊசியும் வாராது காண்நும் கடைவழிக்கே` என்றெழுதிய ஒலை நறுக்கினையும் ஒரு பெட்டியில் வைத்து மூடி வளர்ப்புத் தாயிடம் அளித்துத் திருவெண்காடரிடம் அதனைச் சேர்ப்பிக்குமாறு கூறி இல்லத்தை விட்டு மறைந்து சென்றார்.
திருவெண்காடர் மருதவாணர் அளித்ததாக மனைவி அளித்த பெட்டியை வாங்கித் திறந்து பார்த்தபோது காதற்ற ஊசி, நூல் ஆகியன வும் அறவுரை அடங்கிய ஓலை நறுக்கும் இருக்கக்கண்டு அவை உணர்த்தும் குறிப்பை உணர்ந்து இருவகைப் பற்றுக்களையும் அறவே விட்டுத் துறவறமாகிய தூய நெறியை மேற்கொண்டு ஊர் அம்பலத்தை அடைந்து அங்கேயே வாழ்ந்து வரலானார். திருவெண்காடர் தூறவு பூண்டதை அறிந்த அரசன் அவரை அணுகி `நீர் துறவறம் பூண்டதனால் அடைந்த பயன் யாது` என வினவிய போது `நீ நிற்கவும் யான் இருக்கவும் பெற்ற தன்மையே அது` என மறுமொழி புகன்றார். எல்லோரும் திருவெண்காடரைத் திருவெண்காட்டு அடிகள் என அழைத்தனர்.
தன்வினை தன்னைச்சுடும்
பெருஞ்செல்வரான திருவெண்காடர் துறவு பூண்டு பலர் வீடுகளுக்கும் சென்று பிச்சை ஏற்று உண்ணுதலைக் கண்டு வெறுப்புற்ற உறவினர் சிலர் அவர்தம் தமக்கையாரைக் கொண்டு நஞ்சு கலந்த அப்பத்தை அளிக்கச் செய்தனர். அதனை உணர்ந்த அடிகள் அதனை வாங்கி `தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்` எனக் கூறி தமக்கையார் வீட்டின் இறப்பையிற் செருகிய அளவில் வீடு தீப்பற்றி எரிந்தது
.
தாயார் இறந்தபோது வாழைப் பட்டைகளை அடுக்கித் தாயின் உடலை அதன் மீது வைத்துச் சில பாடல்களைப் பாடி ஞானத்தீயால் அவ்வுடலை எரித்து ஈமக்கடன்களை ஆற்றினார்
இரவில் பத்ரகிரி மன்னன் அரண்மனையில் அணிகலன்களைத் திருடியவர்கள் தாம் வேண்டிச் சென்று வெற்றியோடு களவாடிய அணிகலன்களில் மணிமாலை ஒன்றை விநாயகர்மீது வீசி எறிந்து சென்றனர். அம்மாலை விநாயகர் கோயிலில் தவமிருந்த திருவெண்காடர் கழுத்தில் விழுந்திருந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் திருடர்களைத் தேடி அரண்மனைக் காவலர்கள் வந்தனர். அடிகள் கழுத்தில் மணிமாலை இருத்தலைக் கண்டு அவரைக் கள்வர் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று கருதி பிடித்துச் சென்றனர். அரசனிடம் தெரிவித்து கழுமரத்தில் அவரை ஏற்றுதற் பொருட்டு கழுமரம் இருக்கு மிடத்துக்கு அழைத்து வந்தனர். அடிகள் தான் குற்றம் செய்யாமல் இருக்கவும் தன்னைத் தண்டித்த அரசன் செயலுக்கு வருந்தி `என் செயலாவது யாதொன்றுமில்லை` என்ற பாடலைப் பாடிய அளவில் கழுமரம் தீப்பற்றி எரிந்தது
அடிகள் இறைவன் கருணையை வியந்து `என்னையும் என் வினையையும் இங்கு இருத்தி வைத்தனை போலும்` என இரங்கிக்கூற சிவபிரான் திருஒற்றியூருக்கு அவரை வருமாறு பணித்தருளினார். அடிகள் எப்போது தனக்கு முத்தி சித்திக்கும் எனக் கேட்க பெருமான் பேய்க்கரும்பு ஒன்றை அவர் கையில் தந்து இக்கரும்பு எங்கு தித்திக்கிறதோ அங்கே உனக்கு முத்தி சித்திக்கும் எனக் கூறியருளினார்
திருவெண்காட்டு அடிகள் திருஒற்றியூரில் தங்கியிருந்த போது, கடற்கரையில் விளையாடும் சிறுவர்களோடு தாமும் சேர்ந்து மணலில் புதைதல் பின் வெளிப்படல் போன்ற விளையாட்டுக்களை நிகழ்த்தினார். முடிவில் சிறுவர்களைக் கொண்டு மணலால் தன்னை மூடச் செய்தார். நெடுநேரம் ஆகியும் அவர் வெளிப்படாதிருத்தலைக் கண்டு சிறுவர்கள் மணலை அகழ்ந்து பார்த்தபோது அடிகள் சிவ லிங்கமாக வெளிப்பட்டருளினார்.
No comments:
Post a Comment