கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்-17

சிவராமத் தேவர்

தலையாரியின் திகிடுதத்தம்:

பத்தரைப் பங்காளித் தலைவன்மார்ன்னு பத்துப்ப்பேர் அந்தக் காலத்துல கோபாலசமுத்திரத்துல வாழ்ந்துகிட்டு இருந்தாங்க ஊர்க்காவல் காணிக்காவல் நீர்க்காவல் கோயில்காவல்ன்னு சகல விதமான காவல்களையும் அந்த சுற்று வட்டாரத்துல பத்தரைப் பங்காளி தலைவர்மார்கள் தான் செஞ்சுகிட்டு இருந்தாங்க.
சுற்று வட்டாரத்துக்குக் காவலுக்குக் கூலியாக வரும் தானியங்களையும் மீன் வகையறாக்களையும் காசுகளையும் இவர்கள் மொத்தமாகச்சேர்த்து பத்தரை பங்கு வைப்பார்கள் பத்துப் பேருக்குபத்து பங்கு போகமீதி அரைப்பங்கு அவர்களில் தலைவனாகச் செயல்படுகிறவனுக்கு என்று கொடுத்து விடுவார்கள் பங்கு பிரிக்கிற பொறுப்பு அந்த தலைவனோடதுதான் அதன் பேர் சேட்டைப்பங்கு.
இப்படித் தலைவனாக இருக்கிறவர் பரம்பரை பரம்பரையாக இருப்பார் அவர்களுக்கு மட்டும் ஒண்ணரை பங்கு பாகம் கிடைக்கும்
கோபாலசமுத்திரத்துல சுப்பிரமணியம் தான் அந்தக் காலத்துல ஒண்ணரைப் பங்குத் தலைவராக இருந்தார் அவருக்குப் பொறந்த புள்ள பேரு சிவராமன்.
சிவராமன் வளர்ந்து வாலிபமாகி தலைவராகவும் ஆனான் சிவராமன் வம்புதும்புகளுக்கு போகாதவன் நீதி,தவறாம நியாயப்படி காவல் கடமைகளைச் செஞ்சான்.
பத்தரை பங்காளிகளில் மாலகண்டர்ன்னு ஒருத்தர் இருந்தார் ஊர் தலையாரி அவர் ரொம்ப பொல்லாத ஆள்
அந்த ஊர்ல கிராம்சு(கிராம முன்சீப்)சொக்கலிங்கம்பிள்ளை இவர் தலையாரி மாலகண்டரோடு போய்வாரி வசூல் பண்ணுகிறது வழக்கம்.
ஒரு வாரம் வசூலாகும் வருப் பணத்தைச் சேர்த்து வச்சிருந்து மொத்தமாக அம்பாசமுத்திரம் கஜானாவில் கொண்டுபோய் கட்டுவார் கிராம்சு சொக்கலிங்கம்பிள்ளை.
அப்படி வசூல் செஞ்ச தொகையை ஒரு நாள் தலையாரி மால கண்டரிடம் கொடுத்து இந்தப் பணத்தை எண்ணிச் சரிபார்த்து நடு வீட்டு அலமாரியில் வைச்சூப் பூட்டிச் சாவியைக் கொண்டுவான்னார்.
மாலகண்டத்தேவர் ரூபாய் நோட்டுகளையும் நாணயத்தையும் எண்ணி ஐயா பணம் சரியா இருக்குன்னு சொல்லி சொக்கலிங்கம் பிள்ளையின் நடுவிட்டு அலமாரியின் நடுத்தட்டில் ஒரு துணிப்பையில் போட்டு வச்சார் ஆனால் அலமாரியை அடைத்துப் பூட்டாம அலமாரியின் சாவியை எடுத்து வந்து கிராம்சு சொக்கலிங்கம் பிள்ளையிடம் கொடுத்துட்டார்.
அன்னைக்கி பத்தமடையில் துளசி தாசுங்கிற நாடகம் நடந்திச்சி சொக்கலிங்கமும் மாலகண்டரும் வண்டி கட்டிக்கிட்டுப் புறப்பட்டாங்கா அதைப் பார்க்க.
அப்போ தலையாரி நடிப்புடன் எனக்கு வயிறு சரியா இல்லை கடமுடன்னு சத்தம் போடுது அத்தோட வண்டியையும் மாடுகளையும் இப்படி ராத்திரி நேரத்துல தனியா போட்டுட்டுப் போக முடியாது அதனால நான் இங்கனயே வண்டிக்கும் மாடுகளுக்கும் காவலாப் படுத்துக்கிடுதேன் நீங்க போய் நாடகம் பார்த்துட்டு வாங்கன்னார்.
தலையாரி சொல்றதுலயும் நியாயம் இருக்குன்னு நினைச்ச சொக்கலிங்கம் புறப்பட்டார்.
வெளியில தலையாரி மாடுகளை ஒரு மரத்தடியில் கட்டிட்டு அதுகளுக்குத் தீவனத்துக்குக் கொஞ்சம் வைக்கோலையும் அள்ளிப்போட்டுட்டு நேரே விறுவிறுன்னு சொக்கலிங்கம் வீட்டைப் பார்த்து நடையைக் கட்டினார்.
வீட்டுக்குப்போய் வீட்டுக் கூரையில இருந்த ஒட்டையைப்பிரிச்சி நடு வீட்டுக்குள்ள இறங்கிப்பூட்டாமப் போட்டிருந்த அலமாரியைத் திறந்து அதுக்குள்ள இருந்த பணப்பையை எடுத்துகிட்டு வந்த சொவடு தெரியாம வெளியே வந்தாரு ஊருக்கு ஒதுக்குப் புறமான ஒரு இடத்துக்கு வந்து பணப்பையை ஒரு மரத்தடியில புதைச்சிட்டு நேரே விறுவிறுன்னு திடலுக்கு வந்து மாடுகளுக்கு புல்லும் வைக்கோலையும் அள்ளிப்போட்டுட்டு வில்வண்டியிலேயே படுத்துட்டார் தலையாரி.
நாடகம் முடிஞ்சி வந்த சொக்கலிங்கம் தலையாரி தலையாரின்னு எழுப்பினாரு தலையாரி உறக்கம் கலைஞ்சி எந்திரிச்சார் ரெண்டு பேருமா வண்டில விட்டுக்கு புறப்பட்டாங்க.
காலையில சொக்கலிங்கம் அம்பாசமுத்திரம் கஜானாவில் கொண்டு போய் வரி வசூலான பணத்தைக் கட்ட அலமாரி பக்கம் போனா அது திறந்து கிடக்கு.
அலமாரிக்குள்ள பணப்பை இருக்கான்னு பார்த்தார் கிராம்சு கைப்பையைக் காணலை உடனே ஆள் அனுப்பி தலையாரியை கூப்பிட்டு வரச் சொன்னார் தலையாரி வந்ததும் என்னவே நேத்து வரி வசூலான பணத்தை எல்லாம் உம்மகிட்ட கொடுத்துத் தானே அலமாரியில வைக்கச் சொன்னேன் இப்ப பணத்தை காணமேன்னார்.
தலையாரி ஐயா நீங்க சொன்னமாதிரி சொன்ன இடத்துல அலமாரியிலதான் பணப்பையை வச்சேன் பணம் எப்படி காணாம போச்சோ?எனக்குத் தெரியாதுன்னு கையை விரிச்சுட்டார்.
கிராம்சு சொக்கலிங்கம் பிள்ளை நேரே பத்தரைப் பங்குத் தலைவன் மார்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கிற சிவராமர்கிட்ட போய் வழக்கைச்சொன்னார் சிவராமனுக்கு சின்ன வயசு தலையாரிக்கோ அம்பது வயதுக்கு மேல இருக்கும் என்றாலும் தலையாரி முன்னுக்கு பின் முரனான பதில் சொன்னார் அதனால சிவராமன் இன்னையில் இருந்து உம்மை பத்திரைப்பங்கிலிருந்து விலக்கி வைக்கிறோம்னு தீர்ப்புச் சொன்னார்.
அதனால தலையாரி சிவராமன் மேல் கோவமாக இருந்தார் இதற்கிடையில் மாடு மேய்க்கிற பிள்ளைகள் மரத்தடியில் கிள்ளி விளையாடுகையில் பணப்பை கிடச்சதுன்னு சொல்லி சிவராமனிடம் கொண்டாந்து கொடுக்க அவர் கிராம்சு சொக்கலிங்கம் பிள்ளையிடம் ஒப்படைத்தார்
எப்படியோ கை விட்டுப்போன முதல் கிடைத்ததேன்னு சந்தோசப் பட்டார் கிராம்சு பிள்ளை
தப்பு செஞ்ச ஒருத்தரபத்தரைப் பங்குலேர்ந்து துணிச்சலா நீக்கின கதையைச் சொல்லி முடித்தார் தாயார் தோப்பு ஊரைச்சேர்ந்த ருத்திரைமணி என்ற தகவலாளர்.
குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்திலிருக்கிறது கோபாலசமுத்திரம் இங்கு நீதியை நிலை நாட்டிய சிவராமனுக்கு கோயில் உள்ளது தென்னகத்திலேயே இந்தச் சாமிக்கு மட்டும் மீன் படையல் இடப்படுகிறது தென்காசிக்கு அருகில் மத்தளம் பாறை என்ற ஊரிலும் சிவராமத் தேவருக்கு பிடிமண் கோயில் உள்ளது

No comments: