கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 26, 2013

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-8

சிவயோகியர்                

திருமூலர் சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமான் மற்றும் நந்தீசரிடம் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் தெரிந்தவர். திருமூலருக்கு அகத்தியர் மீது அதிக அன்பு மற்றும் மரியாதை உண்டு, எனவே அகத்தியரை சந்தித்து சிலகாலம் அவருடன் தங்குவதற்கு விரும்பினார், தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை நோக்கிச் சென்றார்.போகும் வழியில் பசுபதி, திக்கேதாரம்,  காசி, நேபாளம் , விந்தமலை, த்ருவாலங்காடு, திருப்பருப்பதம், திருக்காளத்தி, காஞ்சி ஆகிய திரு-தலங்களை தரிசித்து ஆங்கே இருந்த சிவயோகிகளை கண்டு அளவளாவி மகிழ்ந்தார்,தில்லையில் இறைவனின் அற்புத திருக்கூத்தாடியருளும் திருநடனத்தை கண்டு மகிழ்ந்தார், திருவாவடுதுறையில் இறைவனை வழிபட்டு சென்றபோது  காவிரி கரையில் பசு கூட்டங்கள் கதறி அழுவதனை கண்டார்.
மூலன் என்பவர்  தினமும் அங்கு வந்து பசுக்களை மேய்ப்பார். அவர் தன் விதி முடிந்த காரணத்தினால் உயிர் நீங்கி இறந்து கிடந்தார். மூலன் இறந்ததை கண்ட பசுக்கள் அவரது உடம்பினை சுற்றி சுற்றி வந்து வருந்தி கதறி கண்ணீர் விட்டன.பசுக்களின் துன்பம் கண்ட திருமூலர் அவற்றின் துயரை துடைக்க எண்ணினார்,   எனவே  தன்னுடைய உடம்பை மறைவான இடத்தில் வைத்துவிட்டு பரகாயப் பிரவேசம் (கூடு விட்டு கூடுபாய்தல்) என்னும் பவன முறையினால் தனது உயிரை மூலன் உடம்பினுள் புகுமாறு செலுத்தி திருமூலராய் எழுந்தார்.

மூலன் உயிருடன் எழுந்ததை கண்ட பசுக்கள் மகிழ்ந்தன  மூலனின் உடலினை மோந்து, நக்கி, களிப்போடு துள்ளி குதித்தன. மனம் மகிழ்ந்த திருமூலர் பசுக்களை மிகவும் நன்றாக மேய்த்தார். வயிரார மேய்ந்த அந்த பசுக்கள் தங்களது ஊரை நோக்கி நடந்தன.

அவற்றை பின் தொடர்ந்து சென்ற திருமூலர் பசுக்கள் தங்களது வீடுகளுக்கு சென்றதை கண்டு மகிழ்ந்தார். அப்பொழுது வீட்டில் இருந்து வெளியே வந்த மூலனினுடைய மனைவி, மூலன் வடிவிலிருந்த திருமூலரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்ல என்றும், மூலன் இறந்துவிட்டான் எனவும் கூறினார். இதை நம்பாத அவள் அவ்வூர் பெரியவர்களிடம் முறையிட்டால், திருமூலர் தான் ஏற்றிருந்த மூலனின் உடலில் இருந்து விலகி தான் ஒரு சிவயோகியார் என்பதனை நிருபித்தார். பிறகு மறுபடியும் மூலனின் உடலில் புகுந்தார். இதனை கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியை தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

அவர்களிடம் இருந்து விடைபெட்ற்ற திருமூலர் தனது உடலை தேடி சென்றார், அனால் எங்கு தேடியும் அவர் உடல் கிடைக்கவில்லை.

மூலனின் உடம்பிலேயே தங்கி திருவாடுதுறை திருக்கோவிலை அடைந்தார்.

No comments: