கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்-10

அனந்தாயி

அந்தணக் குலத்தில் பிறந்தவர் சீமான் அரிகிருஷ்ணர் மனைவி அனந்தாயி ரெண்டு பேரும் வைகுண்டம்கிற ஊர்ல செல்வச் செழிப்போட வாழ்ந்துகிட்டு இருந்தாங்க.
இவங்களுக்கு கிருஷ்ணத்தம்மை என்கிற ஒரு பொட்டப்பிள்ளை புள்ளைக்கு ஜாதகம் கணிக்க ஒரு சோசியரைக் கூட்டிக்கிட்டு வந்தார் அரிகிருஷ்ணர் சோசியர் இந்த புள்ளைக்கு நாக தோசம் இருக்கு அது நீங்கணும்னா இந்த புள்ளையோட சேர்த்து ஒரு ஆண் கீரிப்பிள்ளையையும் வளர்க்கணும்னார்.
சரின்னு அந்த பொட்டப்புள்ளையோட சேர்த்து கீரிப்புள்ளையையும் வளர்த்துகிட்டு வந்தாள் அனந்தாயி ஒரு நாள் அவ கீரை பறிக்கத் தன் வீட்டுக்குப் பின்னால இருக்கிற தோட்டத்துக்கு போனாள்.
அப்ப வீட்டுக்குள்ள ஒரு பெரிய பாம்பு நுழைஞ்சிடுச்சு தொட்டில்ல கிடந்து உறங்குகிற புள்ளையை பாம்பு கடிச்சிருமோன்னு நினைச்ச கீரிப்பிள்ளை அந்தப் பாம்பை வழிமறிச்சு துண்டு துண்டா கடிச்சி போட்டுட்டு வீட்டுப் பின்கட்டு வாசலுக்குப் போச்சி
பின்கட்டு வழியா வந்த அனந்தாயி வாயெல்லாம் ரெத்த ரெத்தமா நிக்குற கீரிப்பிள்ளையைப் பார்த்து புள்ளையைத்தான் அது கடிச்சிடுச்சின்னு தப்பாநினைச்சி கையில கிடச்ச விறகுக் கட்டைய எடுத்து அந்த கீரிப்பிள்ளையை ஒரே அடியா அடிச்சிக் கொன்னுட்டா.
வீட்டுக்குள்ள போய் பார்த்தா தொட்டில்ல புள்ளை தூங்கிகிட்டு இருக்கு பாம்பு துண்டு துண்டா நறுக்கபட்டு தொட்டிலுக்கு பக்கத்துலேயே கிடக்கு அனந்தாயிக்கு என்ன நடந்திருக்குன்னு அப்பதான் புத்தியில உரச்சது.
புருஷன் வீட்டுக்கு திரும்பினதும் நடந்ததையெல்லாம் சொல்லி அழுத அனந்தாயி இந்தப் பாவ தோசம் தீர இப்பமே பாவநாசத்துக்கு தீர்த்தமாடப்போகப் போறேன்னா ஆனா அவளுக்கு பதிலா பாவம் கோக்கக் கிளம்பினாரு அரிகிருஷ்ணர் கூட ரெண்டு பேரு கால்நடையா நடந்து அகத்திய முனிவர் வாழ்ந்த அகத்தியர் அருவிக்குப் போய் தீர்த்தமாடிட்டு காட்டு வழியா நடந்து வந்துகிட்டு இருந்தாங்க பொழுது இருட்டிட்டு வழியில ஒரு மண்டபத்துல படுத்தாங்க.
நடுச்சாம வேளையில வந்து ஒரு சர்ப்பம் அரி கிருஷ்ணரைத் தீண்டிட்டு அந்த இடத்துல அவர் மாண்டுட்டார் கூட படுத்திருந்தவஙக் காலையில் எழுந்திருச்சி பார்த்தாங்க.
மலக்காட்டு வழியில என்ன செய்ய முடியும் அதனால அங்கனயே மலக்காட்டுல அவரோட பிணத்தை எரிச்சாங்க.
ஊருக்கு வந்து அனந்தாயிட்ட நடந்த சம்பவத்தை சொன்னாங்க அவளும் விதியை நினைச்சி நொந்துகிட்டு செய்ய வேண்டிய கடனைச் செஞ்சாள்.
விசேஷமெல்லாம் முடிஞ்ச பிறகு அரிகிருஷ்ணரின் சொந்தக்காரர்கள் அவரின் சொத்து பத்துகளுக்கு ஆசைப்பட்டு அனந்தாயியையும் அவ புள்ளையையும் ஊரை விட்டே துரத்திட்டாங்க.
மனம் நொந்து போன அனந்தாயி அன்னக்கி ராத்திரியே அந்த ஊர் மணியக்காரரான முத்தையனிடம் போய்த் தன் வழக்கைசொன்னாள்
மணியக்காரர் அம்மா பொழுது விடியட்டும் காலையில பிரதிவாதிகளையும் கூப்பிட்டு விசாரிச்சி தீர்ப்பு சொல்லுறேன்னார்.
இந்தச் சேதி அரிகிருஷ்ணரின் சொந்தக்காரர்கள் காதில் எட்டியது உடனே அவர்கள் எல்லோருமே ஒன்று சேர்ந்து ராவோடு ராவா மணியக்காரரின் விட்டுக்கு போய் வேண்டிய மட்டும் காசு பணத்தை கையூட்டாக் கொடுத்து ஆண் வாரிசு இல்லாததனால உனக்கு வீடு வாசல்லயும் சொத்து சுகத்துலையும் பங்கு இல்லைன்னு சொல்லித் தீர்ப்புச் சொல்லிருஙகன்னு சொன்னாங்க
மணியக்காரரும் ஒப்புக்கிட்டார்.
மறுநாள் காலை பொழுத் விடிஞ்சதும் அநந்தாயி மணியக்காரரின் வீட்டுக்கு போனாள் மணியக்காரர் அம்மா தாயே ராவோட ராவா உன் குடும்ப பங்காளிமார்களை கூப்பிட்டு விசாரிச்சேன் நம்ம ஊர் வழக்கப்படி ஆண் வாரிசு இல்லாதவர்களுக்கு குடும்பச் சொத்தைக் கொடுக்கிற வழக்கம் இல்லை அதனால நீ உன் புள்ளையை தூக்கிகிட்டு உன் ஊருக்கு போயிருன்னு தீர்ப்புச் சொன்னார் அவளை பெத்தவங்களும் ஏற்கனவே கையிலாசம் போய்ச் சேர்ந்திருந்தாங்க.
கடவுளுக்குப் பிறகு மலை போல நம்பியிருந்த மணிக்காரரும் கைவிட்டதால அனந்தாயி மனங்கொதிச்சி கண்ணிர் விட்டு அழுதாள் விதியேன்னு தன் புள்ளையைத் தூக்கிகிட்டு தலைவிரி கோலமா ஊராரையும் ஊர் மணிக்காரரையும் புருஷோனட சொந்தங்களையும் ஆங்காரத்தோடு திட்டினாள்
இதுவரை செல்வச் செழிப்போடு வாழ்ந்த நாம் கட்டின புருஷன் இல்லாத இந்த பூமியில சொத்து சுகத்தையும் வீடு வாசலையும் இழந்துட்டு இனி எப்படி வாழறதுன்னு நினைச்சி மருகினாள்.
எங்காவது ஆறு குளத்துல விழுந்து செத்து உயிரை மாய்ச்சிரலாம்னு நினைச்சவ பிள்ளையை தூக்கி இடுப்புல இடுக்கிகிட்டு ஊரை விட்டுக்கிளம்பி மேற்கால போய் அங்க இருந்த கனையில தன் புள்ளையை வீசி எறிஞ்சிட்டு எனக்கு பாதகமா தீர்ப்புச்சொன்ன மணியக்காரன் குடும்பமும் என் சொத்து சுகங்களை பிடுங்கி அபகரிச்சிகிட்ட குடும்பமும் வெள்ளத்தால் அழிஞ்சி போகட்டும்ன்னு சாபம் கொடுத்துட்டு தானும் சுனை நீருக்குள்ள விழுந்து செத்துட்டாள்.
அனந்தாயி இட்ட சாபம் பலித்தது உடனே மேற்கு மலையில் இடி இடித்தது மேகம் திரண்டு கருத்தது மின்னல் வெட்டியது பேய் மழை பெய்தது ஆத்துல இரு கரையும் பொங்க வெள்ளம் வந்தது.
ஆத்து வெள்ளம் கரை கடந்து அணை கடந்து பெருகி வர மணியக்காரரின் வீடே வெள்ளத்தில் நொறுங்கிப்போச்சு மணியக்காரரையும் அவரோட வீட்டுல இருந்தவங்களையும் வெள்ளம் அடிச்சிகிட்டுப் போயிட்டு அதே மாதிரி அனந்தாயி புருஷன் சொந்தங்காரங்க வீட்டுக்குள்ளையும் காட்டு வெள்ளம் புகுந்துட்டு எல்லாரும் வெள்ளத்துல சிக்கி மூச்சித் திணறிச் செத்துட்டாங்க.
துரோகம் செய்தவர்களை நீதி தவறி தீர்ப்புச் சொன்னவங்களை வெள்ளத்தை ஏவி அதன் மூலமா அழிச்சிக் கொன்னதால அனந்தாயியை மக்கள் வெள்ளமாரி அம்மன்ங்கற பெயரால் சாமியாகக் கும்பிடுறாங்கன்னு வெள்ளமாரியம்மனோட கதையைச் சொல்லி முடித்தார் மாயமான் குறிச்சியைச் சேர்ந்த சுடலையாண்டி என்ற பூசாரி.

No comments: