கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்-13

 ஹைக்கோர்ட் மகாராஜா

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏரல் என்ற ஊரின் அருகில் உள்ளது.ஆறுமுகமங்கலம் என்ற கிராமம் இந்த கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஒரு குறுஞ்சாமிக் கோயிலின் பெயர் ஹைக்கோர்ட் மகாராஜா என்பது முதலில் இந்தப் பெயரைக் கேள்விப்பட்டதும் எனக்கு வியப்பாக இருந்தது.
ஹைக்கோர்ட் என்பது ஒரு ஆங்கிலச் சொல் வெள்ளைக்காரர்கள் நம்மை ஆட்சி செய்ய ஆரமித்த பிறகுதான் ஆங்கில மொழியே தமிழ் நாட்டிற்குள் வந்தது எனவே இந்தச் சாமியின் வரலாறு வெள்ளைக்காரர்களின் ஆட்சிக்குப்பிறகுதான் என்று ஒரளவிற்கு இச்சாமி தோன்றிய காலத்தை நாம் யூகிக்க முடிகிறது.
ஹைக்கோர்ட் என்ற சொல் நீதிமன்றத்தை அதிலும் உயர் நீதிமனறத்தைக் குறிக்கும் சொல்லாகும் மகாராஜா என்ற சொல் கூட வடமொழிச் சொல்தான் இப்படி ஆங்கில மொழியாலும் வடமொழியாலும் ஒரு தமிழ்க் குறுசாமியின் பெயர் அமைந்திருப்பது முதலில் எனக்கு வியப்பை தந்தது.சுருட்டுச் சாமி வெள்ளைக்காரசாமி தூக்குசாமி என்ற பல குறுஞ்சாமிகளின் கதைகளை கேட்ட பிறகுதான் வெள்ளைக்காரர்களின் ஆட்சிக்காலத்திற்கு பிறகும் சில குறுசாமிகள் தோன்றி இருக்கின்றன என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன்.
தமிழ்நாட்டிலேயே மிகப் பெரியதும் மிக உயரமானதுமான பீடம் இந்த சாமிக்குத்தான் உள்ளது சுமார் மூன்றாள் உயரத்திற்கு உள்ளது இந்தச் சாமியின் பீடம்.அதற்கு ஏற்ப நாலாள் ஆப்புச் சேர்த்துக் கட்டும் அளவுக்கு அப்பீடத்தின் அடிப்பகுதி உள்ளது ஏணி வைத்து ஏறித்தான் இக்கோயில் பீடத்திற்கு மாலை சாற்றுகிறார் இக்கோயில் பூசாரி அந்த அளவுக்கு உயரமான கனபரிமாணத்துடன் இந்தக் கோயிலின் பீடம் கம்பீரமாக அமைந்துள்ளது.
சுட்டசெங்கல்லினால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது கோயிலுக்கு நடை உள்ளது கதவு உள்ளது பூட்டுசாவியும் உள்ளது ஆனால இக்கோயிலுக்கு மேற்கூரை மட்டும் பனை ஓலையால் வேயப்பட்டுள்ளது.
ஜோதிடம் பார்ப்பவர்கள் மாந்தீரிகம் செய்பவர்கள் கோடாங்கிகள் என்று பலரும் இக்கோயிலுக்கு வந்து இக்குறுஞ்சாமியை வணங்கி அருள் பெற்றுப் போகிறார்கள்.
இக்கோயில் பூசாரியிடம் ஏன் இந்தக் கோயிலுக்கு மட்டும் மேற்கூரை பனை ஒலையால் வேயப்பட்டிருக்கிறது என்று கேட்டேன் அதற்கு இக்கோயிலின் பூசாரி அது இக்கோயிலின் ஐதீகம் காசு பணம் இல்லாமல் மேற்கூரை கட்டவில்லை என்று நினைக்க வேண்டாம் இக்கோயிலுக்கு வரும் வருமானத்திற்கு குறைச்சல் ஒன்றும் இல்லை இக்கோயிலைச் சுற்றி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கூட காங்கிரிட் கட்டிடங்கல் கட்டப்பட்டுள்ளது ஆனால் கோயிலின் மூலஸ்தானத்தில் மட்டும் ஓலை வேயப்பட்டிருக்கிறது என்று விளக்கம் சொன்னார்.
இந்த சாமிக்கு ஏன் இந்த பெயர் வந்தது?என்று அக்கோயில் பூசாரியிடம் கேட்டோம் கோயில் பூசாரி இந்த சாமியும் சுடலை சாமிதான் கோர்ட்வரை மகாராஜான்னு சொல்லுதாங்க இச்சாமியை ஹைக்கோர்ட் மகாராஜான்னு சொல்லுதாங்க சாட்சி சொன்ன சாமின்னு இந்த சுடலையை சொல்லுவாங்க கோர்ட் வரைபோய் மனுஷ ரூபத்தில் இச்சாமி சென்று சாட்சி சொன்னதை மனதில் கொண்டு கோர்ட் என்பதை ஹைக்கோர்ட் என்று சற்று மிகைப்படுத்தி பாமர மக்கள் ஹைக்கோர்ட் மகாராஜா என இச்சாமியை அழைக்கிறார்கள் என்று விளக்கம் கூறினார்.
ஏன் இந்த சாமி கோர்ட் வரை போய் சாட்சி சொல்லியது?என்று பூசரியிடம் கேட்டேன் (தகவலாளர்களைக் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்ததால் நமக்கு புதிய புதிய சேதிகள் கிடைக்கும்)பூசாரி அது ஒரு பெரிய கதை தம்பி என்றார் நான் அப்படியா?>அந்தக் கதையை சொல்லுங்கள் என்றேன் பூசாரி ஹைக்கோர்ட் மகாராஜா என்ற சாமி கோர்ட்டுக்கு சென்று சாட்சி சொன்ன கதையை சொல்ல ஆரமித்தார் இனி பூசாரி சொன்ன அந்த்க்கதையை சொல்கிறேன் கேளுங்கள்.
கொஞ்ச காலத்துக்கு முன்னால இந்த ஊர்ல சின்னான்னு ஒருத்தன் இருந்தான் அவன் ஒரு அனாதை அப்புராணி வெள்ளாந்தியானவன் பைத்தியாரப் பயல் ஊர்ல உள்ள நாலைந்து பெருந்தனக்காரர்களோட மாடு கண்ணுகளை மேச்சிகிட்டு அவங்க கொடுக்க கஞ்சைக் குடிச்சிகிட்டு அவங்க எடுத்து கொடுக்கிற வேட்டியை உடுத்திகிட்டு தன் காலத்தை கழிச்சிகிட்டு இருந்தான்.
இப்படியா இருக்கும்போது ஒருநாள் மத்தியமான நேரத்துல மாடு கண்ணுகளை ஒரு மரத்தடியில் படுக்கப்போட்டுகிட்டு அவனும் மரத்தடி நிழல்ல உக்காந்திருந்தான்.
அப்போது ஒல்லியா மெலிந்த ஒரு மனுஷனை தாடியும் மீசையும் வச்சி ரெண்டு தடிப்ப சங்க கையில விச்சருவாளோட வெட்றத்துக்காக விரட்டிகிட்டு ஒடுனாங்Gக ஒடுகிற ஒடுசலான மனுசன் தலை தெறிக்க துண்டைக்காணோம் துணியைக் காணோம்னு உயிரைக்கையில் பிடிச்சிகிட்டு ஒடும்போது ஐயா என்னை விட்டிருங்க இனிமே உங்க சங்காத்துக்கே வரமாட்டேன் என்று மேல் மூச்சு கீழ்முச்சு வாங்க சொல்லிகிட்டே ஒடினான்.
முரடர்கள் ரெண்டு பேரும் அவனை விடலை ஒடுகிறவனை கையில் அரிவாளை வச்சிகிட்டு வெட்டுவதற்காக விரட்டுனாங்க இந்த சம்பவத்தை மரத்தடியில் படுத்துக்கிடந்த சின்னான் எந்திரிச்சி நின்று பார்த்தான் ஆனால் முரடர்கள் போய் தடுத்து நிறுத்துகிற அளவுக்கு சின்னானுக்கு தைரியம் இல்லை என்றாலும் நடக்கிற கொடுமையை மனம பதைபதைக்க பார்த்துக் கொண்டிருந்தான் சின்னான்.
அது உச்சி மத்தியான பொழுது ஒரு ஈங்குறுவியின் நடமாட்டமும் அந்த காட்டில் இல்லை உயிருக்கு பயந்து ஒடுகிறவன் உள்ளூர்க்காரன்தான் என்பதையும் அவன் இன்னார்தான் என்பதையும் கூர்ந்து பார்த்து தெரிஞ்சிகிட்டான் சின்னான் அதே மாதிரி விரட்டிக்கிட்டு போகிற ரெண்டு தடியன்களும் பக்கது ஊர்க்காரன் என்பதையும் அவர்களின் ஜாடை இன்னதுதான் என்பதையும் கூர்மையாக பார்த்து மனசில் பதிய வைத்துக் கொண்டான் சின்னான்.
கண்ணுக்கு எட்டும் தொலைவில் அந்த கொலை நடந்தது முரடர்களின் அண்டங்காக்காய் போல கறுப்பானவன்தான் தன் வலது கையில் இருந்த அருவாளை ஒடுகிறவனின் கால்களை நோக்கி குறிபார்த்து வீசினான் அருவாளைஒடுகிறவனின் குதிங்காலில் பட்டு ஐயோ அம்மா சுடலையே சாமியேன்னு சொல்லிகிட்டு தரையில் சாய்ந்தான் கையால் வெட்டுபட்டு ரெத்தம் கொட்டும் தன் வலது குதிங்காலை பிடித்துக்கொண்டே
இப்ப முரடர்களின் குட்டையானவன் கீழே உக்காந்திருக்கும் ஒல்லிக்கட்டையானவனின் தலைமுடியை கொத்தாக பிடித்து கொண்டு தன் கையில் இருந்த அருவாளை ஒங்கினான் வெட்டுவதற்காக அப்போது குதிங்காலில் வெட்டுப்பட்டவன் ஐயாமார்களே என்னை கொல்லாதே இருக்கிற சுடலை பார்த்துகிட்டு இருக்கார் அவர் உங்களை சும்மா விடமாட்டார் நான் புள்ளை குட்டிக்காரன் எந்ததப்பும் செய்யலை என்னைக் கொன்னுராதீங்க விட்டிருங்க என்று கெஞ்சினான்.
அருவாளை ஒங்கினவன் சுடலை வந்து சாட்சி சொல்லும் போது நான் பார்த்துகிடுதேன் எங்களுக்கு எதிரா எவன் சாட்சி சொல்ல வந்தாலும் அவனுவளுக்கும் கெதி இதுதான் என்று சொல்லிக்கொண்டே குட்டையானவன் வெட்டினான் குட்டையானவன் வெட்டிய வெட்டில் வெட்டுப்பட்டவன் தலை தூரப்போய் விழுந்தது வெட்டுபட்டவனின் உடல் தலை வேறு முண்டம் வேறு என்று ஆகியது முண்டத்தின் கழுத்தில் இருந்து ரத்தம் பெருகி ஒடியது.
மாடு மேய்க்கும் சின்னான் மரத்தடியில் இருந்து அந்தக் கொடூரமான கொலையைத் தன் ரெண்டு கண்களாலும் பார்த்தான் ஆனால் கொலைக்காரர்கள் சின்னானைப் பார்க்கவில்லை.கொலைக்காரர்கள் போன பிறகு மாடு கன்றுகளை அந்த இடத்தில் அமர்த்திப் போட்டு விட்டு ஒட்டமாய் ஊருக்குள் ஒடிபோய் கொலையுண்டவனின் பொண்டாட்டிக்காரியிடம் நடந்த கொலையைப் பற்றியும் கொலை செய்தது இன்னார்தான் என்றும் விபரமாகச் சொன்னான்.
கொலையுண்டவனின் பொண்டாட்டிக்காரி தன் தலையில் அடித்துக்கொண்டு குய்யோ முறையோ என்று ஒப்பிச் சொல்லி அழுததால் அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் எல்லாம் கூடினார்கள் ஆம்பளைகளில் சிலர் சின்னானைக் கூட்டிக்கிட்டு கொலை நடந்த இடத்தை பார்க்கச் சென்றார்கள் அங்கே தலை வேறு முண்டம் வேறாகக் கிடந்த பிணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே காவல் நிலையத்திற்கு தகவல் சொன்னார்கள்.
போலீஸ்காரர்கள் வந்து வழக்கு பதிவு செய்து பிரேதத்தை பரிசோதனைக்காக எடுத்துட்டுப்போனாங்க கொஞ்ச நாள் கழித்து வழக்கு விசாரணைக்கு வந்தது ஊர்க்காரர்களும் கொலையுண்டவனின் பொண்டாட்டிக்காரியும் கேட்டுக் கொண்டதின் பேரில் சின்னான் கோர்ட்டில் சாட்சி சொல்ல சம்மதித்தான்.
கொலைக்காரர்கள் முதலில் யாரும் நாம் செய்த கொலையைப் பார்க்கவில்லை யாரும் நமக்கு எதிராக சாட்சி சொல்ல வர மாட்டார்கள் என்று தான் நினைத்தார்கள் சின்னான் துணிந்து சாட்சி சொல்ல முன் வந்ததால் கேஸ் பலப்படும் என்று நினைத்தார்கள் எனவே இப்போது சின்னானை எப்படியாவது மடக்கி ஒன்று சாட்சி சொல்லாமல் கலைக்க வேண்டும் அல்லத் சின்னானை பிடித்து எங்காவது அடைத்து வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.
தூதாள் ஒருத்தன் மூலம் சின்னானிடம் முதலில் சமாதானமாகப் பேசி சாட்சி சொல்ல போகாதே உனக்கு நிறைய காசு பணம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை காட்டினார்கள் ஆனால் சின்னான் காசு பணத்திற்கு ஆசைப்படவில்லை நான் கண்களால் பார்த்ததை கட்டாயம் கோர்ட்டில் சொல்வேன் என்று உறுதியாக சொன்னான்.
பிறகு கொலைக்காரர்கள் அடியாட்களை வைத்து சின்னானை மிரட்டிப் பார்த்தார்கள் அதற்கு மசியவில்லை கடைசியில் ஒருநாள் மாடு மேய்க்க காட்டிற்கு சென்ற சின்னானின் வாயில் துணியைத் திணித்து அவன் காலையும் கையையும் கட்டி ஒரு வில்வண்டிக்குள் போட்டு கடத்திக்கிட்டு போயிட்டாங்க கொலையாளிகளின் சேக்காளிமார்கள் சின்னானை ஒரு பாழைடைந்த வீட்டிற்குள் ஒழித்து வைத்தார்கள்.
கோர்ட்டில் குறிப்பிட்ட நாளில் அந்த கேஸ் விசாரணைக்கு வந்தது சாட்சி சொல்ல வேண்டிய சின்னானை பிடித்து ஒரு விட்டில் சிறைவைத்து விட்டதால் கொலையாளர்கள் சந்தோசமாக கோர்ட்டுக்கு வந்தனர்.கொலையுண்டவனின் மனைவி பதை பதைத்தாள்.
வழக்கு விசாரணைக்கு வந்தது நீதிமன்ற ஊழியர் சின்னானின் பெயரை சொல்லி மூன்று முறை அழைத்தார்.அப்போது சாட்சி சின்னான் கோர்ட்டின் படிகளில் நடந்து வந்து கூண்டில் ஏறினான் அந்த காட்சியைக் கொலைக்காரர்களால் நம்பவே முடியவில்லை இது என்னடா அதிசயமா இருக்கு என்று நினைச்சாங்க.
சின்னான் என்ற வடிவத்தில் சுடலை என்ற சாமிதான் வந்திருக்கிறார் என்பது முதலில் யாருக்கும் தெரியவில்லை சின்னான் உருவத்தில் வந்த சாமி எந்த தயக்கமும் இன்றி தெளிவாக சாட்சி சொன்னதால் கொலையாளிகளில் ஒருவனுக்கு தூக்கு தண்டனையும் கொலை செய்தவனுக்கு துணையாக சென்றவனுக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கிடைத்தது.
கோர்ட் முடிந்த பிற்கு சின்னானைப் போய் பார்த்தால் அவன் அதே இடத்தில் காலும் கையும் கட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தான் அதன் பிறகு கொலையாளிகளின் கூட்டாளிகளில் இதில் தெய்வக்காரியம் ஏதோ இருக்கிறது என்று நினைத்து சின்னானையும் கொலை செய்யாமல் கட்டுகளை அவிழ்த்துவிட்டு ஒடிப்போ என்று விரட்டி விட்டார்கள்
சாகும்போது சாகப்போகிறவன் சுடலையை வேண்டிக்கொண்டதால் சுடலையும் செத்தவனின் விருப்படி கோர்ட் படி ஏறி சாடசி சொன்னதால் அன்று முதல் ஆறுமுகமங்கலத்தில் சுடலைக்கு ஹைக்கோர்ட் மகாராஜா என்ற பெயரில் பீடம் அமைத்துக் கோயில் கட்டி மக்கள் கும்பிட்டு வருகிறார்கள் என்று அச்சாமியின் வரலாற்றை ஒரு கதைபோல் சொல்லி முடித்தார் அக்கோயிலின் பூசாரி

No comments: