கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்-18

 பொன் காத்த ஐயனார்

பல குறுஞ்சாமிகள் ஜாதிகளின் அடிப்படையிலும் தொழில் சார்ந்த குழுக்களின் அடிப்படையிலும் உள்ளன.அததகைய குறுஞ்சாமிகளுக்குப் பின்னால் சில கதைகளும் இருக்கின்றன.
அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள இடைகால் வழுதூர் என்ற ஊர் அந்த ஊரில் உள்ள ஒரு குருஞ்சாமியின் பெயர் பொன் காத்த ஐயனார் என்பது இந்த சாமிக்குத் தென் மாவட்டங்கள் எங்கும் பிடிமண் கோயில்கள் உள்ளன.
அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள இடைகால் என்ற ஊரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற தகவலாளரிடம் கேட்ட போது பொன் காத்த ஐயனாரின் பூர்வீகக்கதையை சொன்னார்.
கடையத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஆழ்வார் குறிச்சியில் கட்டிக்கொடுத்திருந்தது புதுப்பொண்ணும் மாப்பிள்ளையும் மகிழ்ச்சியாக விருந்துண்டு சந்தோஷமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர் பெண் வீட்டில் முதலில் ஒருவார காலம் தடபுடலாக விருந்து கொடுத்தார்கள்.
அதன் பிறகு சில நாட்கள் மாப்பிள்ளை வீட்டில் தடபுடலாக தம்பதியர்களுக்கு விருந்து கொடுத்தார்கள் அதன் பின் பெண்ணின் நெருங்கிய சொந்தக்காரர்களும் மாப்பிள்ளையின் மிக நெருங்கிய சொந்தக்காரர்களும் தத்தமது ஊருக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்தார்கள்.
இப்படியாக ஒருமாத காலம் விருந்தாக கழிந்தது புது மணத் தம்பதிகளுக்கு விருந்து சாப்பிட்டு சாப்பிட்டு மாப்பிள்ளைக்கு விருந்து சாப்பாட்டின் பேரில் ஒரு வெறுப்பே வந்து விட்டது வேலை என்று பார்த்து நாற்பது நாளைக்கு மேல் ஆகின்றது இப்படியே விருந்து என்று அலைந்தால் தன் தொழில் மறந்து போகும் என்று புது மாப்பிள்ளையின் தகப்பனார் சத்தம் போட்டார்,
புது மாப்பிள்ளைக்கு இப்படி வேலை ஜோலி இல்லாமல் வீடு வீடாய் போய் விருந்து சாப்பிட பிடிக்கவில்லை எனவே விருந்து சாப்பிட்டது போதும் என்ற முடிவுக்கு வந்தனர் அந்தப் புதுமணத் தம்பதியினர்.
அப்போது பெண்ணின் சித்தி மகள் வந்து வலுக்கட்டாயமாக தன் விட்டிற்க்கு மட்டும் வந்து மதியம் ஒரு வேளை மட்டும் விருந்து சாப்பிட்டு செல்லுமாறு வற்புறுத்தி அழைத்தாள் அந்த அழைப்பை புதுமணத் தம்பதியர்களால் தட்ட முடியவில்லை எனவே அப்பெண்ணுடன் மறுநாள் காலையில் விருந்து சாப்பிடச் சென்றனர் புதுமணத் தம்பதியினர்.
விருந்து கொடுத்தவர்கள் வழக்கமாக உற்சாகத்துடன் விருந்து பரிமாறினார்கள் புதுமணத் தம்பதியினர் மதிய விருந்தை ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள் மத்தியானப் சாப்பாட்டிற்கு பிறகு புதுமணத் தம்பதியினர் சற்று ஒஉவெடுத்துக்கொண்டு மாலையில் ஊரைப்பார்த்துக் கிளம்பினார்கள்.
விருந்து கொடுத்தவர்கள் இன்று ராத்திரிப் பொழுது மட்டும் எங்கள் வீட்டில் தங்கி விட்டு நாளை காலையில் புறப்பட்டு உங்கள் ஊருக்கு செல்லுங்கள் என்று சொன்னார்கள் ஆனால் புதுமாப்பிள்ளைக் கேட்கவில்லை நான் இப்பவே என் விட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஒத்தக் காலில் நின்றார்.
விருந்து கொடுத்தவர்கள் அப்படியானால் துணைக்கு எங்கள் வீட்டில் இருந்து யாராவது உங்களுடன் வருகிறோம் புதுப்பெண் கழுத்து நிறைய தங்க நகை போட்டு இருக்கிறாள் நீங்கள் இங்கிருந்து உங்கள் ஊருக்கு காட்டுப் பாதை வழியாக ஒத்தடியத் தடத்தில் தான் செல்ல வேண்டும் அந்தக் காட்டுப் பாதையில் கள்ளர் பயம் உண்டு என்று கூறினார்கள்.
ஆனால் புதுமாப்பிள்ளை அவர்கள் சொன்னதை எல்லாம் காதில் வாங்கி கொள்ளவில்லை தான் நினைத்த மூப்பில் பிடிவாதமாக நாங்கள் இப்போதே எங்கள் ஊருக்கு புறப்படுகிறோம் பொழுது இருட்டுவதற்குள் எப்படியும் விறு விறு என்று நடந்து எங்கள் ஊருக்கு போய்விடுவோம் நான் ஆம்பிளைதானே நீங்கள் யாரும் துணைக்கு வரவேண்டாம் என்று ரொம்பக் கராராகச் சொல்லி விட்டார்.
அதற்குமேல் புதுமாப்பிள்ளையைக் கட்டாயப்படுத்தி தங்க வைக்க விருந்து கொடுத்த வீட்டுகாரர்கள் விரும்பவில்லை.அப்ப சரி உஙக் இஸ்டம் போயிட்டு வாங்க என்று விடைக் கொடுத்து அனுப்பி விட்டார்கள்
வெயிலின் கடுமையை தணிந்ததும் சாயங்காலம் சுமார் நாலு மணி வாக்கில் புதுமாப்பிள்ளையும் புதுப்பொண்ணும் தங்கள் ஊருக்கு புறப்பட்டார்கள் அந்தக் காலத்தில் காரேது?ரெயிலேது?நடந்து தானே ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு போகணும் வசதி வாய்ப்பி உள்ளவர்கள் வில் வண்டியில் போவார்கள் ராஜாங்க உத்தியோகஸ்தர்கள் குதிரை வண்டியில் போவார்கள்.
புதுபொண்ணும் மாப்பிள்ளையும் சாதாரண குடிமக்கள்தானே எனவே அவர்கள் நடந்தே சென்றார்கள் ரெண்டு மூன்று ஊர் கடந்து தான் மாப்பிள்ளையின் ஊர் இருந்தது இருட்டும் முன்பு தன் ஊருக்குப் போய் விட வேண்டும் என்ற நினைப்பில் பொண்டாட்டியும் புருசனும் காலை எட்டிப் போட்டு விறு விறுன்னு நடந்தார்கள்.
காட்டு வழியில் வழுதூரின் எல்லைக்கு செல்லும்போது பொழுது மயங்கிவிட்டது இருள் பரவ தொடங்கிவிட்டது என்றாலும் பொண்டாட்டியும் புருசனும் ஒருத்தர் கையை ஒருத்தர் புடித்துக் கொண்டு நடந்தார்கள்.
அப்போது காட்டின் நடுப்பாதையில் மரத்தின் மேல் இருந்து ஒரு முரடன் அவர்கள் முன்னாள் குதித்தான் அவர்கள் கையில் நீளமான பட்டாக்கத்தி ஒன்று இருந்தது.
புதுமணத்தம்பதியர்களை பார்த்து ஏய் ரெண்டு பேரும் ஆடாம அசையாம நில்லுங்க என்றான் தார் கரத்த குரலில் இருட்டில் தாடியும் அந்த முரடனின் மீசையும் பம்பைத் தலையும் அவனைக் கொடுரமானவனாக காட்டியது.
அப்போது தான் புதுப்பெண் நினைத்தாள் விருந்து கொடுத்தவர்கள் சொன்னதைக் கேளாமல் விராப்பாக கிளம்பி வந்தது தப்பாக போச்சே என்று.
விருந்து கொடுத்தவர்களிடம் வீராப்பாக பேசிய புது மாப்பிள்ளைக்கு பட்டாக்கத்தியைப் பார்த்ததும் இப்ப சப்த நாடியும் ஒடுங்கி விட்டது வேர்த்து வேர்த்துக் கொட்டியது ஆக வலிய வந்து நேரங்கெட்ட நேரத்துல எசக்குபிசக்கா மாட்டிக்கிட்டோமே இனி என்ன செய்ய கடவுள்தான் இனி நம்மைக் காப்பாத்தணும் நாம் மட்டும் தனியே என்றால் இந்த முரடனுடன் போராடிப் பார்க்கலாம் இப்ப நம்ம கூட புதுப்பெண்ணாக பொண்டாட்டியும் இருக்கிறாள் முதலில் அவளின் மானத்தைக் காப்பாத்தணும் பிறகு அவள் கழுத்து நிறைய போட்டிருக்கின்ற நகையை காப்பாத்தணும் இப்ப என்ன செய்ய எப்படிச் சமாளிக்க என்று நினைத்து கை பிசைந்து நிற்க்கும்போது தான் அந்த அதிசயம் நடந்தது.
தற்செயலாக வழிப்போக்கனாக அந்த இடத்திற்கு வந்தார் ஒரு ஒங்கல் தாங்கலான மனிதர் அவர் ஆள் பார்க்க கட்டுமுட்டுமாக இருந்தார் அவருக்கு சுமார் நாற்பது வயது இருக்கும் கையில் ஒரு விச்சருவாளும் வைத்திருந்தார் தலையில் ஒரு துண்டை தலைப்பாகையாக கட்டியிருந்தார் புதுநிறமான அவரின் உருண்ட திரண்ட மார்பின் மேல் பலவீரத் தழம்புகள் இருந்தன.
வந்த வழிப்போக்கர் அங்கு என்ன நடக்கிற்து என்பதை ஒரு நொடியில் புரிஞ்சிக்கிட்டார் நேரே அந்த முரடனின் எதிரில் போய் நின்று கொண்டு தன் வலது கையால் வீச்சருவாளை ஒங்கியபடியே புதுமணத்தம்பதியர்களை பார்த்து பிள்ளைகளா நீங்க ஒடிப்போயிருங்க நான் இவனைக் கவனிச்சிக்கிருதேன் என்று சொன்னவர் தன் இடது கையால் போய் விடுங்கள் போய் விடுங்கள் என்பது போன்று கைக் கர்ணம்(சைகை)வேறு காட்டினார்.
புதுமாப்பிள்ளை ஏதோ அந்தக் கடவுள்தான் இந்தப் புண்ணியவாளனை அனுப்பி இருக்கிறார் இனி இந்த இடத்தில் ஒரு நிமிஷம் கூட நிக்கப்படாது தலை பிழைத்தது தம்பிரான் புண்ணியம் என்று நினைத்து தன் பொண்டாட்டியின் இடது கையை தன் வலது கையால் பிடித்து இழுத்துகொண்டு ஒரே ஒட்டமாக ஒத்தையடி பாதையில் கண் மண் தெரியாமல் ஒடினான்.
கையில் பட்டாக்கத்தியுடன் நின்ற கள்ளாளிப் பெயலுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது கோபாவேசத்துடன் அந்த வழிப்போக்கனை பார்த்தான் வெண்ணை திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாக தத்தர நேரட்த்தில் இந்த வழிப்போக்கன் வந்து நம்காரியத்தை கெடுத்துட்டானே என்று நினைத்த கள்ளாளிப் பெயல் பட்டாக்கத்தியால் வழிப்போக்கனை கொல்வதற்கு பாய்ந்தான்.
வழிப்போக்கனோ தன்னைக் காத்துக்கொள்வதற்காக கள்ளாளிப் பெயலைக்கொல்வதற்கு தன் கையிலிருந்த வீச்சருவாளை வீசியபடியே முன்னேறினான்.ஆளில்லாத நடுகாட்டிற்குள் வழிப்போக்கனும் கள்ளாளிபெயலும் தத்தம் கையில் இருந்த ஆயுதங்களால் உக்கிரமாக மோதிக்கொண்டார்கள்.
ஒருவரை ஒருவர் தற்காத்துக்கொள்ளவும் ஒருவரை ஒருவர் கொலை செய்ய முயன்றதால் அந்த இடத்தில் பெரியதொரு தாக்குதல் நடந்தது.விலக்கிவிடவும் தடுக்கவும் யாரும் இல்லாததால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டு காயபட்டார்கள் பலம் கொண்ட மட்டும் மோதிக்கொண்டார்கள் இருவருமே வில்லால கண்டனாக இருந்தனர் ஒருத்தனுக்கு ஒருத்தன் சளைத்தவனாகத் தெரியவில்லை.
இருவரும் மேலும் மாறி மாறி வெட்டும் குத்தும் விழுந்தது இருவர் உடம்பிலிருந்தும் ரத்தம் ஒழுகியது என்றாலும் ஒருவருக்கு ஒருவர்பின் வாங்காமல் நீயா? நானா? என்று பார்த்து விடுவது என்ற கோதாவின் சண்டையிட்டார்கள் எனவே ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்த தாக்கி அந்த இடத்திலேயே செத்து மடிந்தார்கள்
தன் ஊருக்குள் போன புதுமாப்பிள்ளை விடிந்ததும் விடியாததுமாக நடந்த நடப்பை அக்கம் பக்கத்துக்காரர்களுக்கு சொல்லி அவர்களில் சிலரைகூப்பிட்டுகிட்டு காட்டில் கள்ளன் வழி மறித்த அந்த இடத்திற்க்கு சென்றான் அங்கே வெட்டுக்காயங்களுடன் ரெத்தம் சிந்திய படி ரெண்டு பிணங்கள் கிடப்பதை கண்டு நாம் வந்தபிறகு அங்க என்ன நடந்திருக்கும் ஏது நடந்திருக்கும் என்பதை ஒருவாறு யூகித்துக் கொண்டான் புதுமாப்பிள்ளை.

ஒரு பெண்ணின் மானத்தையும் அவளின் நகையையும் காப்பதற்காக தன் இன்னுயிரை துறந்து பிணமாகி விட்ட அந்த மனிதனுக்கு அந்த ஊர் அவனின் பெயர் என்ன?வண்ணம்(சாதி)என்ன?மதம் என்ன?என்று எதுவும் தெரியாவிட்டாலும் அந்த மனிதனின் விரத்தையும் தியாகத்தையும் மதித்து அம்மனிதனின் பிணத்தை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தான் புதுமாப்பிள்ளை.

ஊருக்கு சென்று இன்னும் சிலரை அழைத்துகொண்டு வந்த அந்த வழிப்போக்கன் பிணமாக கிடந்த அதே இடத்தில் அவனை நல்லடக்கம் செய்து அந்த இடத்தில் ஒரு மரக்கன்றையும் நட்டு வைத்தார்கள்.
வழிப்போக்கனோடு மோதி சண்டையிட்டு தன் உயிரை விட்டு விட்ட அந்த கள்ளாளி பெயலையும் மனிதாபிமானத்துடன் அதே இடத்தில் சற்று தொலைவில் அடக்கம் செய்தார்கள் வழிப்போக்கனாக வந்து அநியாயத்தை எதிர்த்துப்போராடி ஒரு பெண்ணின் மானத்தையும் அவள் கழுத்தில் கிடந்த நகைகலையும் காப்பதற்காக தன் உயிரையே தியாகம் செய்த அந்த வீர மறவனுக்கு அப்பகுதி மக்கள் ஒரு கோயிலை கட்டி சிலையும் செய்து வைத்து வழிபடுகின்றனர்.
அந்த குறுஞ்சாமியின் பெயர்தான் பொன்காத்த ஐயனார் என்பது அன்று ஒரு பெண்ணைக்காத்தது போல் அந்தக் குறுஞ்சாமி என்றும் நம் குலப் பெண்களை காக்கும் என்ற நம்பிக்கையில் வழுதூர் பகுதி மக்கள் அக்குறுஞ்சாமிக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கொடை கொடுத்து வழிபட்டு வருகின்றார்கள்

No comments: