நாட்டுப்புறக் கதைகள் என்றால் அவை பழங்காலத்தில் தோன்றியவையாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. சொல்கதைகளைப் படைத்துக்கொண்டும், அவைகளை வாய்மொழி வாயிலாகச் சொல்லிக் கொண்டும்தான் இருக்கிறார்கள்.
பள்ளிகளில், கல்லூரிகளில், குறிப்பாக இருபாலரின் பள்ளி விடுதிகளிலும் கல்லூரி விடுதிகளிலும், விதவிதமான சொல்கதைகள் உருவாகிக்கொண்டும், அவை சொல்லப்பட்டுக்கொண்டும், இருக்கின்றன.
திருநெல்வேலி பாளையங்கோட்டை, நாட்டுப்புறவியல் துறையின் தற்போதைய இயக்குனர் அருள்தந்தை திரு. சேவியர் அந்தோணி அவர்கள் சுனாமியைப்பற்றி மக்கள் உண்டாக்கி உலவவிட்டிருக்கிற கதைகளை மட்டும் சேகரித்து 'சுனாமிக் கதைகள்' என்று ஒரு நூலை வெளியிட்டுள்ளார்.
அக்கதைகளைப் படித்தபோது அவைகளில் கிராமியக்கதைகளுக்கே உரிய அனைத்துக்கூறுகளும் இருப்பதைப் பார்த்து மிகவும் வியப்புற்றேன். இக்கதைகள் யாவும் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் களப்பணி செய்து சேகரிக்கப்பட்டுள்ளது. கதைகளைச் சொன்ன மாணவர்கள், இக்கதைகளைத் தன் பெற்றோர்களிடம் இருந்தோ, அண்டை அயல்வீடுகளில் வாழும், பெரியவர்களிடம் இருந்தோ அல்லது தாத்தா, பாட்டிமார்களிடம் இருந்தோ கேட்டுத் தெரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்கள். ஆக இக்கதைகளின் மூலம், நவீன காலத்திலும் நாட்டுப்புறக்கதைகள் படைக்கப்படுகின்றன என்ற செய்தியை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
'வாள் நழுவல்' என்று ஒரு கதை. இக்கதை புராண மரபுக் கதைபோல வானுலகில், சிவபெருமானும், பார்வதி தேவியும் சண்டை போடுவாங்க என்று ஆரம்பிக்கிறது. சற்று நேரத்திற்குள் கதை ஒரு ராஜாவைப்பற்றிப் பேசுகிறது.
புராண காலத்திலிருந்து ராஜா-ராணி காலத்திற்குப் பின் நவீனத்துவ பாணியில் ஒரே தாவாகத் தாவும் இக்கதையில், அடுத்து கடல்கன்னி ஒரு கதாபாத்திரமாக வந்து சேர்கிறாள்.
மிகையதார்த்தமான இக்கதையில் இடையே ஒரு தங்கவாள் வருகிறது. அந்தவாள் வானுலகத்தில் இருந்து பூமிக்குப் பயணிக்கிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி என்ற ஊரில் உள்ள மு.கார்த்தி என்ற ஏழாம் வகுப்புமாணவன் சொன்ன கதை இது. இம்மாணவன், "இக்கதையை என் அம்மா எனக்குச் சொன்னாள்" என்று கூறுகிறான். இனிக் கதையைக் கேளுங்கள்.
தேவலோகத்தில் சிவபெருமானும் பார்வதிதேவியும் இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் சண்டை போடப்போட மின்னல் வெட்டுது, பிறகு 'டமார்'னு ஒரு சத்தம் கேட்குது. அதனால வானத்துல இடி இடிக்கிறது. இடியைத் தொடர்ந்து வானத்துல இருந்து தண்ணீர் மழையாக கொட்டுது.
அந்த மழை நீர் பூமியில வெள்ளமா பாயுது. அந்த வெள்ளம் பள்ளமான ஒரு இடத்துல தேங்குது. தண்ணீர் தேங்கிய இடத்தில, ஒரு அதிசயக்கல் ஒன்று கிடக்கிறது. அந்தக் கல் நாளாவட்டமாக, வளர்ந்து பெரிய பாறையா ஆகுது. பிறகு அந்தப் பாறையே பவளப்பாறையா மாறிடுது- பின். அந்தப் பவளப்பாறை ஒரு பெட்டி மாதிரி ஆகிவிடுகிறது.
அந்தப் பெட்டிக்குள்ள ஒரு தங்க வாள் இருக்கிறது. அந்த வாளை எடுக்கிறதுக்கு நிறையபேர் போட்டிபோட்டுக்கிட்டு வாராங்க. வாளை எடுக்க நடந்த போட்டியில் பலர் ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டு இறந்து விடுகிறார்கள்.
இந்தச் செய்தி அந்த நாட்டு அரசனின் காதில் விழுகிறது. எனவே அந்த நாட்டு ராஜாவே அந்தத் தங்கவாளை எடுத்துவரப் புறப்படுகிறார்.
"ராஜா தங்கவாளை எடுக்க வருகிறார்" என்ற செய்தியைக் கேள்விப்பட்ட கடல்கன்னி அந்த இடத்திற்கு வருகின்றாள். தங்க வாளை எடுக்கப்போகும் ராஜாவைப் பாத்து கடல்கன்னி, "ராஜாவே! அந்தப் பெட்டியைத்திறந்து அதிலிருக்கும் தங்கவாளை எடுக்கவேண்டாம்" என்று கெஞ்சுகிறாள். ஆனால், ராஜா, கடல் கன்னி சொன்னதைக் கேட்கவில்லை.
பவளப் பாறை போன்ற பெட்டியைத் திறந்து, அதில் நீள்வசத்தில் குத்தப் பட்டு நிற்கும், வாளை வெளியே எடுக்கிறார். அது ஒரு கூர்மையான வாள். அந்த வாளை எடுத்துக்கிட்டு பவளப்பாறையை விட்டு வெளியே வருகிறார் ராஜா.
வெளியே வந்த ராஜா, "இதோ நான் அந்த வாளை எடுத்துட்டேன்" என்று பீத்திக்கொள்கிறார். (தற்பெருமை பேசுகிறார்). திரும்பத் திரும்ப ராஜா இப்படிச் சொல்லும்போது அந்த வாள் கைநழுவி கடலுக்குள்ளே விழுகிறது. வாள் கடலுக்குள் போகும்போது தன்னோடு ராஜாவையும் சேர்த்து கடலுக்குள் இழுத்துக் கொண்டு செல்கிறது. எனவே ராஜா திக்குமுக்காடிப்போய், "அந்த வாளைப் பழையபடி அது இருந்த மாதிரியே பெட்டிக்குள் குத்தி வைக்கவேண்டும்" என்று ஓங்கிக் குத்துகிறான். எனவே அப்பவளப்பெட்டியில் ஓட்டை விழுந்துவிடுகிறது. எனவே கடல்கொந்தளித்து சுனாமி வந்தது என்று பையன் கதையைச்சொல்லி முடிக்கிறான். வந்த சுனாமியில் நாம் இழந்த உயிர்கள் பல, சேதங்கள்பல. இதற்கிடையில் சுனாமி வந்ததால் நமக்கு இப்படி ஒரு அற்புதமான சொல்புனைவுக்கதை கிடைத்திருக்கிறது.
இனி வரும் கதை, மதுரை மாவட்டத்தில் ஆட்டுக்குளம் என்ற ஊரில் எட்டாம் வகுப்பு படிக்கும் விக்ரம் என்ற மாணவன் சொன்னது. "இக்கதையை என் பாட்டி எனக்குக் கூறினாள்" என்று கூறுகின்றான் சிறுவன்.
குழந்தைகளின் உலகுக்குள் இக்கதை நம்மை நகைச்சுவை உணர்வுடன் அழைத்துச் செல்கிறது. சுனாமியில் வந்த சோகத்தை மறந்து கதையைக் கேட்கும் நாம் சிரிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.
ஒரு ஊர்ல, ஒரு யானையும், ஒரு எறும்பும் சேக்காளிமார்களாக (நண்பர்களாக) இருந்தார்கள். ஒருநாள் காலையில் அந்தச் சேக்காளிமார்கள் ரெண்டுபேரும் (யானையும் எறும்பும்) வாக்கிங் போனாங்க. அப்போ ஒரு அலை வந்து அந்த எறும்பைத் தூக்கிக்கிட்டுப் போயிடுச்சி. உடனே யானைக்குச் சோகம் தாங்க முடியலை.
எனவே யானை காட்டுக்குள்ள போயி, காட்டுக்குள்ள இருந்த தன் சேக்காளி யானைகளிடம் 'இன்ன' மாதிரி விபரம் என்று நடந்த கதையைச் சொல்லி அழுதது. அதைக் கேட்டு மற்ற யானைகளும் அழுதன. 'சரி, வாங்க, நாம எல்லோருமா ஒரு கப்பல்ல போயி கடல்அலை இழுத்துக் கிட்டுப்போன அந்த எறும்பை மீட்டு வருவோம்'னு சொல்லின காட்டு யானைகள்.
சொன்னபடியே காட்டுயானைகள் எல்லாம் புறப்பட்டு கடற்கரைக்கு வந்து அங்கே நின்ற கப்பல் ஒன்றில் ஏறி, காணாமல்போன எறும்பு நண்பனைக் கண்டுபிடிக்கக் கடலுக்குள் சென்றன.
கடலில் எறும்பு மிதப்பதுமாதிரி ஒரு இடத்தில் தெரிந்தது. உண்மையில் அது எறும்பு இல்லை. எறும்பு போல 'செத்தல்' (காய்ந்த கறுப்பு நிறக்குச்சி) தான் கடலில் மிதந்தது.
கடலில் கப்பலில் போய்க்கொண்டிருந்த யானை கடலில் மிதக்கும் செத்தலை எறும்புதான் என்று நினைத்து, எறும்பைக் காப்பாற்றவேண்டுமே என்பதற்காகக் கடலுக்குள் குதித்தது.
'தொபுக்கடீர்' என்று கடலில் குதித்த அந்த யானை கடலுக்குள் மூழ்கியது. கடலுக்குள் மூழ்கிய அந்த யானையைக் காப்பாற்ற இன்னொரு யானையும் கடலுக்குள் மூழ்கியது. இப்படியாக கப்பலில் இருந்த யானைகள் எல்லாம் கடலில் மூழ்கும் யானையைக் காப்பாற்ற ஒரே நேரத்தில் கடலில் குதித்ததால், கடல்தண்ணீர் பொங்கி சுனாமி உருவாகிவிட்டது என்று கதையைச் சொல்லிமுடித்தான் சிறுவன்.
இக்கதை கை,கால் முளைத்து காடு, கடல் என்று ரெக்கை கட்டிப் பறக்கிறது. 'நட்பு' என்ற ஒற்றைச் சரத்தில் கோக்கப்பட்ட இக்கதை, குழந்தைகளை மகிழ்விக்கும் விதத்தில் படைக்கப்பட்டுள்ளது.
காலம்தோறும் இத்தகைய சொல்கதைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு இக்கதையும் தக்க சான்றாகத் திகழ்கிறது.
இனி வேறொரு கதையைப் பார்ப்போம்.
நம்ம திருவாங்கூர் ராசா இருக்காங்களே, அவுங்களுக்கு மார்கழி மாசம் கல்யாணத்துக்குப் பரிசம் போட்டாங்க.
பரிசம் போட்டு முடிச்சதும் பத்திரிகை அடிச்சி வெத்தல பாக்கு வச்சி ஊர் உலகம் எல்லாம் கொடுத்தாங்க. சொந்தபந்தம் எல்லாத்தையும் அழைச்சாங்க.
மலையை அழைச்சாக, செடிய அழைச்சாக, மரம்,கொடி எல்லாத்தையும் அழைச்சாக. எல்லாத்தையும் அழைச்சவங்க, கடல் அரசியை மட்டும் அழைக்க மறந்துட்டாங்க.
கடல்அரசியும் திருவிதாங்கூர் ராசா கல்யாணத்துக்கு நமக்கு வெத்தலை பாக்கு வச்சி அழைப்பாங்கன்னு நினச்சிக் காத்துக் கிடந்தாள்.
ம்ஹும். . . திருவிதாங்கூர் ராசா கடல்அரசியைத் தன் கல்யாணத்திற்கு அழைக்கவேயில்லை.
ஒருநாள் கடல்அரசி மலைகிட்டப் போயி, 'ராசா உனக்கு வெத்தலை பாக்கு வச்சி அழைச்சாரா'ன்னு கேட்டிச்சி.
மலை கடல்அரசியைப் பார்த்து, 'என்னை அன்னைக்கே, வெத்திலை பாக்கு வச்சி அழைச்சிட்டாங்களே, ஏன் உன்னை வெத்திலை பாக்கு வச்சி அழைக்கலியா?'ன்னு ஏளனமா கேட்டிச்சி.
மலை சொன்னதைக் கேட்டதும் கடல் அரசிக்கு ரொம்ப மானக் கேடாயிட்டு என்றாலும் நம்ம ராசா இன்னைக்கு இல்லை என்றாலும் நாளைக்கு நம்மையும் வெத்திலை பாக்கு வச்சி அழைப்பாக! என்று நினைத்துக் காத்திருந்தது.
ஆனால், ராசா, தன் கல்யாணத்துக்கு கடல் அரசியை அழைக்கவே இல்லை.
கல்யாணத்துக்கு முந்திய ராத்திரி வரை, கடல் அரசி கண்விழித்து 'ராசா கல்யாணத்துக்கு கூப்பிட வருவாரா. . .?' என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது.
அந்தப் படுபாவி ராசா, கடல் அரசியை கல்யாணத்துக்கு அழைக்கிற மாதிரியே தெரியலை.
மறுநாள், பொழுது விடிஞ்சிட்டு. ராசாவோட அரண்மனையில கல்யாண வேலைகள் எல்லாம் தடபுடலா நடந்துகிட்டு இருக்கு.
ஒருபக்கம் மோளச் சத்தம், இன்னொரு பக்கம் வேட்டுச் சத்தம் என்று ஊரே அல்லோல கல்லோலப்பட்டுக்கிட்டு இருக்கு. எங்க பார்த்தாலும் சிரிப்பும், சந்தோசமுமா மக்கள் போகவும் வரவுமா இருக்காக. . .
அதைப் பார்க்கப் பார்க்க கடல்அரசிக்கு வயத்தெரிச்சலாப் போச்சி. கடல் அரசிக்கு அண்டகாரம் முட்டும்படியாக்கோவம் வந்திச்சு. கடல்அரசிக்கு வந்த கோவத்தை அடக்க முடியலை.
ராசா, மணமகளின் கழுத்துல தாலி கெட்டுகிற நேரம் நெருங்க நெருங்க, கடல்ல நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பொங்கிக்கிட்டே இருந்திச்சி.
ராசா, மணமகளின் கழுத்தில்தாலி கட்டப் போகும்போது கடல் ஆத்திரத்துல பொங்கி எழுந்து ஊரையே அழிச்சிட்டு. இதுதான் சுனாமி உருவான கதை என்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஆன்னிமோனிக்கா என்ற ஐந்தாம் வகுப்பு மாணவி சுனாமி பற்றிய இக்கதையைச் சொன்னாள்.
சொந்த பந்தங்களை உரிய முறையில் தன் வீட்டு விசேசத்திற்கு அழைக்கவில்லை என்றால் அவர்கள் கோவித்துக் கொள்வார்கள் என்ற எதார்த்த வாழ்வியல் நடைமுறையும், வெற்றிலைபாக்கு வைத்து கல்யாணத்திற்கு அழைக்கும் நாட்டார் மரபையும் இக்கதை பதிவு செய்துள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

No comments:
Post a Comment