பிரிய சகோதர,
வணக்கம். உங்கள் கடிதங்கள் கிடைத்தன. நலம் அறிந்து மகிழ்கிறோம். நாங்கள் அனைவரும் நலம்.
மே-31 ஆம் தேதி நீங்கள் அனுப்பிய கார்டு 2 ஆம் தேதி இயல்பாக வழங்கப்பட்டது. தெண்டம் இல்லை. வேறு எவரது கார்டு பேரிலும் 10 தேதி முடிய தெண்டம் கொடுக்க நேர்ந்ததில்லை.
ஆனால் தூத்துக்குடி ஜானகி 8ம் தேதி 25 பைசா கார்டில் எழுதி அனுப்ப, 11ஆம் தேதி அதை 1 ரூ கொடுத்து வாங்க வேண்டியதாயிற்று.
உங்களுடைய 29.05.2001 (செவ்வாய்) கார்டு, முகவரியில் சென்னை - 5 என்பதற்கு பதிலாக 'சென்னை - 2 - 600002' என எழுதப்பட்டிருந்ததால் பட்டண உலா நடத்திவிட்டு இன்று வந்தது. 1ரூ கொடுத்து வாங்க நேர்ந்தது.
நீங்கள் எண்ணுவது போல சென்னை நண்பர்கள் என்னுடன் அடிக்கடி ஃபோன் தொடர்பு கொள்வதில்லை. மு.பரமசிவம் சில மாதங்களுக்கு ஒருமுறைதான் இங்கு வருவார். சும்மா பார்த்துப் பேசிப் போக பஸ் செலவு 7-8 ரூபாய்; அத்துடன் பஸ்சுக்காகக் காத்திருப்பது நீண்ட நேரம் என்பதால் மு.ப. அடிக்கடி இங்கு வர விரும்புவது கிடையாது. ஃபோனில் பேசுவதும் இல்லை.
திருப்பூர் கிருஷ்ணன் தொடர்பு கொள்வதேயில்லை. 'குமுதம்' வேலை அவருக்குக் கிடைக்கவில்லை. வேறு எங்காவது முயல்கிறாரா என்பதும் தெரியவில்லை. 'தீபம்' மாதிரி ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்ற மன அரிப்பு அவருக்கு இருக்கிறது. மார்ச் மாதம் சேலம் பயணத்தில் அது பற்றி விரிவாகப் பேசினார். அது சம்பந்தமாக அவர் முயன்று கொண்டிருந்தாலும் இருக்கலாம்.
பா.அமிழ்தன் 10 நாள் - 15 நாட்களுக்கு ஒருதடவை ஃபோன் பண்ணுவார். அதுகூட, 'பூங்கொடி'யில் கொடுத்த அவருடைய சிறுகதைகள் இன்னும் புத்தகமாக வரவில்லையே; சுப்பையாவுக்கு நினைவுபடுத்துங்களேன் என்று ஞாபகமூட்டுவதற்காகத்தான். அத்துடன் ஏதாவது வம்பளப்பு இருக்கும்.
அ.நா.பாலகிருஷ்ணன் அலுக்காமல் ஊர்வழி போய்வந்து கொண்டிருக்கிறார். அப்படி திரும்பி வந்ததும் ஃபோனில் தெரிவிப்பார்.
இப்படியாக நண்பர்கள் அவரவர் உலகில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
செ.யோகநாதன் நவம்பர் - டிசம்பரில் (2000) சென்னை வரக்கூடும் என்று முன்பு எழுதியிருந்தார். வரவில்லை. நான் 8மாதங்களாக அவருக்கு எழுதவில்லை. அண்மையில் கடிதம் எழுதினேன். பதில் வந்தது. நலமாக இருக்கிறார். 'ஆதவன்' என்ற இலங்கை தினசரியில் ஞாயிறுதோறும் சஞ்சிகைப் பகுதியை அவர் கவனித்துக் கொள்கிறார். (குணசேன எனும் பிரபல புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் தமிழ் பிரிவுக்கு ஆசிரியராகவும் பணிபுரிகிறார்.) 'ஆதவன்' இதழில் சஞ்சயன் என்ற பெயரில் கட்டுரைகள், நூல் மதிப்புரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்.
சாகித்ய அகாடமி விருது விஷயமாக 'காலச்சுவடு' வெளியிட்ட எதிர்ப்புக் கட்டுரைகள், கருத்துரைக்குக் கண்டனம் தெரிவித்து சஞ்சயன் கட்டுரை 'ஆதவன்' இதழில் வந்ததாம். (அந்த நறுக்கு அனுப்பப்படவில்லை) மல்லிகை ஆண்டு மலரில் அவர் கட்டுரை எழுதியுள்ளது பற்றியும் தெரிவித்துள்ளார். (ம.மலர் எனக்கு வரவில்லை) 'தி.க.சி.யை விசாரித்ததாகச் சொல்லுங்கள். அவருக்கும் கடிதம் எழுதுகிறேன்' என்று வழக்கம்போல் குறிப்பிட்டிருக்கிறார்.
நெய்வேலி இராமலிங்கத்திடமிருந்து தகவல் எதுவும் இல்லை. நலமாகத்தான் இருப்பார்.
ஜுன் 7 மாலை (வியாழன்) திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் 'கலை' பத்திரிகை ஆண்டு விழா சிறப்பாக நடந்தது. வ.க. தலைமை. 2000ல் வெளிவந்த சிற்றிதழின் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறுகதை : புற்று - அபிமானி எழுதியது. 'போராளி' இதழில் (இந்த இதழை நான் பார்த்ததில்லை.) 2ம் பரிசு : இருள் வாசம் - அமிர்தம் சூர்யா ('கவிதாசரன்' இதழ்) கவிதை : 1. க.இரத்தினகிரி ('மதுமலர்' இதழ்) 2. மு.கிருஷ்ணகுமார் (சுந்தரசுகன்). கட்டுரை : 1. சீக்கியக் கருத்தியலும் தமிழ்ச் சிந்தனை மரபும் - பேராசிரியர் பி.ஆனந்தகுமார் ('இந்திய ஒப்பிலக்கியம்' காலாண்டிதழ்)
2. எழுத்தும் எழுத்தாளனும் - விழி. பா.இதயவேந்தன் (தாமரை)
கவிதைக்கான பரிசுகள் பெற வேண்டியவர்கள் வரவில்லை. மற்றவர்கள் வந்து பரிசு பெற்று, பேசவும் செய்தனர் (முதல் பரிசு - 1000 ரூ, இரண்டாம் பரிசு 500 ரூ.)
ஸ்டாலின் குணசேகரன், எழுத்தாளர் சிவகாமி, வழக்குரைஞர் பி.கே.இராசகோபால், 'தாமரை' மகேந்தரன் மற்றும் சிலர். திலகவதியும் பசுமைக் குமாரும் வரவில்லை. ஆச்சர்யப்படுவதற்கு உரிய விஷயம்: 'தினமணி' 6ஆம் தேதி இதழில் வெகு விரிவாக இந்நிகழ்ச்சி பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. பரிசு பெற்றவர்கள் விவரம், பேசுகிற அனைவர் பெயரும் தந்து நல்ல 'பப்ளிசிட்டி' கொடுத்தது. நிகழ்ச்சி நடந்த பின்னர் செய்தி வெளியிடவில்லை.
நல்ல கூட்டம் தான்.
ஸ்டாலின் குணசேகரன் அடிக்கடி சென்னை வருகிறார். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து பேசுகிறார். அவர் தயாரிக்கும் வரலாற்றுக் களஞ்சியம் 2 பாகங்கள் முடிந்துவிட்டனவாம். மூன்றாவது தயாராகிறது. விரைவில் வெளியீட்டுவிழா நடக்கும் என்றார்.
சிவகாமி 'புதிய கோடாங்கி' இதழை மீண்டும் (மாதப் பத்திரிகையாக) நடத்துகிறாராம். அவரது ஜப்பான் அனுபவங்களைப் பற்றி எழுதும்படி 'குங்குமம்' கேட்டிருக்கிறதாம். எழுத இருக்கிறேன் என்றார். 'தாமரை' க்கும் எழுதும்படி மகேந்திரன் கேட்டுக் கொண்டார். எழுதுவதாகச் சொன்னார் சிவகாமி.
'புதுவிசை' காலாண்டிதழ் உங்களுக்குத் தரப்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். நாறும்பூநாதன் தவறாது எனக்கு அனுப்புகிறார். இதழ் 6 அண்மையில் வந்துள்ளது. பயனுள்ள சிந்தனைக் கட்டுரைகள் பல உள்ளன. கல்யாண்ஜி கவிதைகள் 3 இருக்கின்றன. 'புதுவிசை' வெளியிடுகிற கவிதைகள் எல்லோருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. பலவற்றை என்னால் ரசிக்க இயலவில்லை.
பொதுவாக நவீன கவிஞர்கள் எழுதி, சிற்றிதழ்கள் வெளியிடுகிற நவகவிதைகள் பலவும் எதற்காக எழுதப்படுகின்றன, அவற்றை எழுதும் கவிஞர்கள் என்ன சொல்ல ஆசைப்படுகிறார்கள் என என்னால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. அது என் குறைபாடு என்றுதான் இன்றைய கவிஞர்கள் சொல்வார்கள்.
திருநெல்வேலியில் தயாராகும் 'யாதுமாகி' (லெனாகுமார்) கவிதை இதழும் வந்தது. படித்தேன். அபிப்பிராயம் : மேலது!
படித்து கருத்து சொல்வதற்கென வந்துள்ள புத்தகங்கள் மிகப்பல. சில சமயம் தினசரி 2 அல்லது 1 என்று படித்து வருகிறேன். (120 பக்கங்கள் 140 பக்கங்கள், 96 பக்கங்கள் என்றுதான் இருக்கும்.)
கவிஞர் கருமலைப்பழம்நீ யின் சமீபத்திய வெளியீடுகள் 4, குடந்தை கீதப்பிரியன் - 3, ஹரணி சிறுகதைகள், விக்கிரமன் சமூக நாவல் 'சந்திரமதி' (இது பெரிய புத்தகம் - 240 பக்கங்கள்) இப்படிப் பல.
இவ்வாறு கடிதங்கள் எழுவதிலேயே அதிகமான காலம் கரைந்து போகிறது. வேறு எதுவும் எழுதவில்லை.
'மீடியா' 'மிஸ்லீட்' பண்ணவும் கூடும் என்பதற்கு சென்னையில் மழை பற்றி சன்டிவி ஒளிபரப்பிய தகவல் சான்று ஆகும். சென்னையில் 'கோடை மழை' சில பகுதிகளில் பெய்தது. ஏர்போர்ட்டில் பெரும் மழை என்று ஒருநாள் செய்தி பத்திரிகைகளில் வந்தது. இப்படி எங்காவது பெய்த மழையையும், காட்சிகளையும் படம் பிடித்துக் காட்டி சென்னையில் மழை என்று சொல்வது பொய்யும் ஆகாது; உண்மையும் ஆகாது!
யதார்த்தத்தில், சென்னையில் சரியாக மழை பெய்யவில்லை. திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் பகுதிகளில் ஒருநாள் கனமான தூறல். ஒரு இரவில் அரை மணிநேரம் பெரும் தூறல். பின்னர், அவ்வப்போது வானம் படம் காட்டியது மழை பெய்வது போல. இதனால் ரோடுகள் சதசதத்தன. சகதியும் அசிங்கமும் ஆயின.
ஏரிகள் பக்கம் மழையும் இல்லை; தண்ணீர் வரத்தும் இல்லை; கிருஷ்ணா நதி நீர் வருவதும் நின்று போச்சு.
தண்ணீர் தட்டுப்பாடு சென்னையில் நீடிக்கிறது. ஒவ்வொரு தெருவிலும் குடிதண்ணீர் லாரியை எதிர்பார்த்து நூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் குடங்கள் வரிசை, வரிசையாக மணிக்கணக்கில் காத்திருக்கின்றன. லாரி வந்ததும் தண்ணீர் பிடிப்பதற்காக பெண்கள் அலைமோதும் காட்சி கொடுமையானது. தெருவில் இதரர்கள் (வழிப்போக்கர்கள்) நடக்கவே முடியாத நெருக்கடி.
இதெல்லாம் சுலபத்தில் தீரக்கூடிய பிரச்சினைகள் இல்லை.
சிலருடைய வாழ்க்கையில் துன்பங்கள் (வியாதிகள்) தொடர்கதையாக வளர்கின்றன. மும்பை 'சங்கொலி' பாலகிருஷ்ணனுக்கு விபத்தும் பாதிப்புகளும் தொடர்கதையாக இருக்கின்றன.
மே பிற்பகுதியில் ஒரு நாள் இரவு கடை அடைத்துவிட்டு, அவர் வீடு திரும்பும் வழியில் ஒரு 'வேன்' இடித்துத் தள்ளியதில் இடது கையில் சிறு எலும்பு முறிவு. கட்டு போட்டிருக்கிறது. மூன்று வாரங்கள் படுக்கையில் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். அப்படி ஒரு கார்டு வந்தும் 15 நாட்கள் ஆகின்றன.
'சமரசம்' என்ற மாதமிருமுறை முஸ்லீம் பத்திரிகையில் ('இந்தியா டு டே' அளவு புத்தகம்) திருப்பூர் கிருஷ்ணன் 'நேர்காணப்பட்டிருக்கிறார். விசேஷமான தகவல்கள் இல்லை. விழிப்பு உணர்வோடேயே கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார்.
'உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?' 'நன்றாக எழுதுகிற எந்த எழுத்தாளரையும் எனக்குப் பிடிக்கும்' என்பது போல.
அன்பு
வ.க
கடித சேகரம் - கழனியூரான்

No comments:
Post a Comment