கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-25 தர்ஹாக்களைச் சுற்றிச் சுழலும் சொல் கதைகள்

தமிழில், ‘இஸ்லாமிய நாட்டார் மரபுகள்’ என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதுகிறபோது, தமிழகத்தில் உள்ள சில தர்ஹாக்களின் வரலாறுகளை அல்லது கதைகளைப் பதிவு செய்ய வேண்டியது நேர்மையான ஆய்வாளரின் கடமை என்று கருதுகின்றேன்.இன்றைய இஸ்லாமிய ஆன்மீக நெறியாளர்களின் பிரச்சாரங்களாலும், வஹாபியாளர்களின் அறிவுபூர்வமான ஆன்மீக அணுகுமுறையாலும், தர்ஹாக்களைப் பற்றிய பதிவுகளும், உரையாடல்களும், மேட்டிமைசார் இஸ்லாமிய சமூகத்தினரால் நேரடியாகவும், மறைமுகமாகவும் தடை செய்யப்படுகின்றன.தர்ஹாக்களின் பின்னுள்ள ஆன்மீக அரசியல் பற்றிப் பேச நானும் விரும்பவில்லை. ஆனால் தர்ஹாக்களைச் சுற்றியுள்ள உணர்வுபூர்வமான ஆன்மீக அணுகுமுறைகளை நாம் ஒரேயடியாய் ஒழித்துவிட்டால், எளிய இஸ்லாமிய மக்களின் தத்துவார்த்தமான நம்பிக்கை சார்ந்த தளத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிடும் என்று கருதுகிறேன். எது எப்படி இருப்பினும், தர்ஹாக்களை மையமாக வைத்துத்தான் ஒரு காலத்தில் இஸ்லாமிய மார்க்கம் அடையாளப்படுத்தப்பட்டது என்பதை யாரும் மறைக்க முடியாது. இந்தப் பழங்கதைகள் அறிவுசார் தளத்தில் இயங்கும் வகாபிகளுக்குத் தேவையில்லாமல் இருக்கலாம். என் போன்ற களப்பணியாளர்கள் தர்ஹாக்களின் வரலாறுகளையும், அதைச் சுற்றிச் சுழலும் புனைகதைகளையும் பதிவு செய்யாமல் இருக்க முடியாது.தமிழகம் முழுக்க உள்ள தர்ஹாக்களின் பின்னணியில் உள்ள வரலாறுகளை அல்லது கதைகளைச் சேகரித்தால், அவை ஒரு தனி நூலாக வெளியிடும் அளவிற்குக் கிடைக்கும் என்று எண்ணுகிறேன்.சான்றாக, புதுச்சேரி, சையது அஹம்து மௌலானா சாஹிபு மெய்ஞானி தர்ஹாவின் வரலாற்றைக் கீழே தருகிறேன்.இக்கட்டுரையைக் கொடுத்து உதவிய புதுச்சேரி, முல்லா வீதியில் இருக்கும் தர்ஹா நிர்வாகத்தினருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இயற்கை இகந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த தர்ஹாவின் வரலாறு சொல்லப்படுகிற அதே வேளையில் ஞானியாரின் உடல் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மௌலானா அவர்களின் உடல் உள்ள பெட்டியை எடுத்து வர அரசு அதிகாரிகளும் சென்றார்கள். மாநிலத்தின் கவர்னரின் உத்தரவுப்படி, ஞானியவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பன போன்ற அறிவியல்பூர்வமான செய்திகளையும் நாம் பரிசீலனை செய்ய வேண்டும்.புதுச்சேரி ஹஜரத் சையது அஹமது மௌலா சாஹிபு மெய்ஞானி தர்ஹாவின் வரலாற்றை அத்தர்ஹாவின் நிர்வாகத்தினர் தந்தபடி வாசகர்களுக்குத் தருகிறேன்.கி.பி.17ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் ஆற்காடு என்னும் ஊரில் வெள்ளாளர் குலத்தில் மிகச் செல்வச் சிறப்புமிக்க வணிகர் குடும்பத்தில் பிறந்தவர் இந்த மெய்ஞானி.இவர், செல்வத்தைச் சிறிதும் மதியாதவராய் இளமையிலேயே, ஆன்மீகத்தில் தாகம் உடையவராய்த் திகழ்ந்தார். இவர் முழுமையான இறை உணர்வினால் ஆளப்பட்டு வந்தார். பகலெல்லாம் நோன்பு வைத்துக் கொண்டும், இரவில் இறைவனின் உள்நிலையில் வணங்கிக் கொண்டும் இருப்பதையே தம் தொழிலாகக் கொண்டொழுகினார். தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி கொண்டார். இவரிடம் பல சீடர்கள் இருந்ததாகத் தெரிய வருகிறது.இவர் ஒரு நாள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு புதுச்சேரிக்கு வந்தார். பல ஆண்டுகள் புஸ்ஸி வீதி (லால்பகதூர் சாஸ்திரி வீதி) லா காலேஜ் (சட்டக்கல்லூரி) தற்போது உள்ள இடத்தில் தங்கி இறைப்பிரச்சாரம் செய்து வந்தார். திடீரென்று ஒருநாள் இவர் காணப்படவில்லை. எங்கே சென்றார்? என்ன ஆனார்? யாருக்கும் எதுவும் புரியவில்லை. இவர் காணப்படாததற்கு சீடர்கள் மனம் கலங்கினர்.இந்நிலையில் இவர் தரை மார்க்கமாகவோ அல்லது கடல் மார்க்கமாகவோ லட்சத்தீவுக்கு எப்படியோ சென்று இறைப்பணி செய்து கொண்டிருந்தார்களாம். அப்போது அத்தீவை ஆண்டுவந்த முஸ்லீம் மன்னர் ஒரு நாள் இவரது ஆன்மீக செயலைக் கேள்விப்பட்டு இவரை அழைத்துவந்து நாளடைவில் தம் நண்பராக்கிக் கொண்டார். மன்னர் ஆண்டவன் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவராகையால் ஆன்மீகவாதியான மௌலாசாஹிப் அவர்களுடைய ஆன்மீகக் கருத்துகளாலும் வணக்க வழிபாடுகளாலும் கவரப்பட்ட அந்தப் பெரியவரை மன்னர் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார். அந்த நாளில் பிற மதங்களில் இருந்து இஸ்லாத்தில் சேருவோருக்கு மௌலா என்ற பெயரை இணைத்துக் கொள்வது வழக்கம். இதன்படி அப்பெரியாரின் பெயர் சையது அஹமது மௌலா சாஹிப் என்று மாற்றப்பட்டது. மற்றவர்கள் மௌலா சாஹிப் என்றே அழைத்து வந்தார்கள்.

இவர் லட்சத்தீவு மன்னருடன் இரண்டு முறை ஹஜ் பயணம் செய்து புனித காபாவை தரிசித்துள்ளார்.இந்த நிலையில் சில ஆண்டுகள் இறைவன் பணியைச் செய்துவந்த இவர், மன்னரிடம் இறுதிக்காலத்தில் தன் வேண்டுதலை நிறைவேற்றி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.அதாவது தான் மரணித்த பின்பு தனது உடலை கபனிட்டு பெட்டியில் வைத்து தன்னுடைய பெயரையும் தன்னுடைய வரலாற்றையும் அதில் எழுதிவைத்து கடலில் விட்டுவிடுமாறு கூறியுள்ளார். அந்த நாளில் ஆகாயமார்க்கம் வழியாக லட்சத்தீவிற்குச் செல்ல முடியாமல் இருந்ததால் கடல் மார்க்கம் வழியாகச் செல்லலாம் என்று சொல்லி இருக்கிறார். அதன்படியே மௌலா சாஹிபு இறந்தபின்பு அவரின் மையத்தை கபனிட்டு, ஒரு பெட்டி செய்து அதில் வைத்து கடலில் மன்னர் மிதக்க விட்டுவிட்டார்.பலநாட்களுக்குப் பிறகு அந்தப் பெட்டி அந்த நாளைய வட ஆற்காட்டின் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரி கடற்பகுதிக்கு மிதந்து வந்துள்ளது. கடல் அலையில் மிதந்துவந்த அந்தப் பெட்டி அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் கைகளில் அகப்படாமல் செல்லவே அவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். அந்தப் பெட்டி (சுந்தன) முஸ்லீம் சமய முறைப்படி அமைக்கப்பட்டிருந்ததால் அதைக் கண்ணுற்ற மீனவர்கள் கடற்கரைக்கு வந்து அங்குள்ள முஸ்லிம் பெரியவர்களிடம் அதனைத் தெரியப்படுத்தினர். ஊர் முக்கியஸ்தர்கள் பலரும் படகில் சென்று அந்தப் பெட்டியை கரைக்குக் கொண்டுவந்து பார்த்ததில் அது ஒரு முஸ்லீம் சம்பிரதாயத்தின் பிரகாரம் இருந்ததால் யாரோ ஒரு முஸ்லீம் பெரியவரின் (சுந்தன) சவப்பெட்டியாக இருக்கலாம் என்று கருதி அதனை தற்போது 7-ஆம்நாள் திருச்சபை(7th Day Adventist Church) இருக்கக்கூடிய இடத்தில் முஸ்லிம்களால் நல்லடக்கம் செய்யப்பட்டார். அந்தக் காலத்தில் முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் இன்று 7-ஆம் நாள் திருச்சபை இருக்கும் இடமாகும் என்று புதுவை வரலாறு கூறுகிறது.பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் பிரஞ்சுக்காரர்களின் குடியேற்றம் பெருகப் பெருக வெள்ளையர் பகுதியில் வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் இந்துக்களின் பகுதிக்குக் குடிபெயர வேண்டியதாயிற்று. கபர் தனித்து விடப்பட்டதால் அங்கிருந்த பெரியார் சமாதியை அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டனர். கபர் தனித்து விடப்பட்டதால் அஃது பாழடைந்து போயிற்று. அது கபர் (கல்லறை) இடமாக இருந்ததால் பிரஞ்சுக்காரர்கள் அதனை எதற்கும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்கள். நாளடைவில் பொது ஜனங்கள் அவ்விடத்தில் அதனை கழிப்பிடமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். ஒரு மகானின் அடக்கஸ்தலத்தில் இவ்விதம் அசுத்தம் செய்யப்படுவது கண்டு முஸ்லிம் மக்கள் மனம் வருந்தினர்.மௌலா சாஹிபுவின் தெய்வீக சக்திக்கு இது ஏற்றதாக இல்லாததால் ஒரு நாள் திடீரென்று ஊர் காஜியார், ஊர் நாட்டாண்மைக்காரர் ஆகியோர் கனவில் பெரியார் தோன்றி தம்மை அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அசுத்தம் செய்வதை எடுத்துக்கூறி (7th Day Adventist Church) ஏழாம்நாள் திருச்சபை இடத்தில் இருப்பது தம் பூத உடலே என்று தெளிவுபடுத்தி தம்மை அந்த இடத்தை விட்டு அகற்றும்படி கூறியுள்ளார். இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறே பலமுறை அவர்களின் கனவில் தோன்றித் தன்னுடைய சமாதியை (கபரை) அங்கிருந்து பெயர்த்தெடுத்து தற்போதுள்ள பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் அடக்கம் செய்யுங்கள் என்று கூறினார். இதனை காஜியார், நாட்டாண்மைக்காரர்கள், ஊர் முஸ்லீம் ஜனங்கள் ஒன்று கூடி ஆலோசித்து இது சம்பந்தமாக கவர்னரை அணுகி விபரத்தைச் சொல்லலாம் என்று முடிவு செய்தார்கள்.அதன்படி காஜியார், நாட்டாண்மைக்காரர்கள், ஊர் பிரமுகர்கள் அனைவரும் கவர்னரை நேரில் சந்தித்து ஏழாம் நாள் திருச்சபையுள்ள இடத்தில் முஸ்லிம் மஹான் ஒருவர் அடங்கியுள்ளார். அங்கு அசுத்தம் செய்யப்படுவதால் தன்னை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்றி அடக்கம் செய்யும்படியாக தங்களின் கனவில் தோன்றிக் கூறியதை எடுத்துக் கூறினார்கள்.கவர்னர், காஜியார் மற்றும் பெரியோர்கள் சொல்லியதைக் கேட்டு நகைத்தார். உடனே கவர்னரைக் காணச் சென்றிருந்த அனைவரும் தாங்கள் சொல்வது உண்மை இல்லை என்றால் கவர்னர் கூறும் தண்டனையையோ அல்லது அபராதத்தையோ தாங்கள் ஏற்கத் தயார் என்றார்கள். அதற்கு கவர்னர் இது சம்பந்தமாக மற்ற அதிகாரிகளுடன் தாம் கலந்து ஆலோசனை செய்தபிறகு தெரியப்படுத்துவதாகச் சொல்லி அனுப்பிவிட்டார்.இந்த நிகழ்ச்சியைச் சாதாரணமாக எடுத்துக் கொண்ட கவர்னர் அதற்கு முக்கியத்துவம் தராமல் வாளாயிருந்துவிட்டார். அப்போதைய கவர்னராக இருந்து வந்தவர் (Francis Martin). ஒரு நாள் கவர்னர் கனவில் மஹான் தோன்றி அவரை அச்சுறுத்தி முஸ்லிம்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தெரிவித்தார். அவரும் அவருடைய கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் கூறினார் என்று கூறப்படுகிறது.ஒருநாள் திடீரென்று கவர்னர் அவர்கள் ஊர் காஜியார், நாட்டாண்மைக்காரர்களை அழைத்துவருமாறு அதிகாரிகளை அனுப்பினார். எல்லோரும் அழைப்பை ஏற்று கவர்னரைச் சந்தித்தனர். அப்போது கவர்னர் தாம் கனவில் கண்ட அதிசயத்தை விளக்கிக் கூறியதுடன், உடனே இதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நாம் செய்வோம் என்று உறுதியளித்தார். கவர்னரைக் காணச்சென்றிருந்த அனைவரும் நல்ல பதிலை ஏற்று சந்தோஷத்துடன் திரும்பினர்.


ஒருவெள்ளிக்கிழமையன்று தொழுகையை முடித்துவிட்டு காஜியார், பேஷ்இமாம் (மதகுரு) மற்றும் ஊர் மக்கள் அனைவரும் மௌலா சாஹிபு அடக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு வந்தனர். அங்கு ராணுவ அதிகாரிகளும், பிரஞ்சு அரசு அதிகாரிகளும் வந்திருந்தனர். மௌலா சாஹிபு அவர்கள் கனவில் காட்டிய குறிப்பை வைத்து ஓர் இடம் காட்டப்பட்டது. அவ்விடத்தைத் தோண்ட ஆரம்பித்தனர். அப்போது அம்மண்ணிலிருந்து இரத்தம் பீறிட்டு அடித்தது. அந்தக் குருதி அங்கு சுற்றி இருந்த அனைவர்மீதும் பட்டது. அதைக்கண்ட பிரஞ்சு அதிகாரிகள் ஆச்சரியப்பட்டனர். காஜியார் சொன்னது உண்மையே என்றுணர்ந்து மன்னிப்புக் கேட்டனர்.மௌலா சாஹிபு அடக்கம் செய்யப்பட்டு உள்ள அந்த இடத்திலிருந்து அந்தப்பெட்டியை ஊர்வலமாக தற்போது அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு எடுத்துச் சென்றார்கள். அவர்களுடன் பிரஞ்சு அதிகாரிகளும் ஏனைய ஊர் மக்களும் சென்றார்கள். முல்லா வீதி குத்பா பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் உள்ள காலிமனையில் பெட்டியை வைத்தார்கள். பெட்டியைத் திறந்து பார்த்தார்கள். முஸ்லிம் வழமைப்படி, மையத்தை அடுக்கடுக்காக மூன்று துணியில் வைத்து சுற்றி தலைமாட்டிலும் கால்மாட்டிலும் கயிற்றால் கட்டப்பட்டு துணியால் மூடப்பட்டிருந்தார். தலைமாட்டுப் பக்கத்துணியைப் பிரித்துப் பார்த்தார்கள். சச்சிதானந்த நிலையில் பெரு வாழ்வு நடத்துகின்ற திருவாளர் போன்று இளம் புன்னகையோடு ஓர் உடல் அழியாது பச்சையாக இருந்தது. தூங்காமல் தூங்கி சுகம் பெறுகின்ற நிலைபோன்றிருந்தது. யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கும் யோகி போன்று காட்சியளித்தார். எல்லோரும் மௌலா சாஹிபு உடல்நிலையைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.அந்தப் பெட்டியில் வைத்திருந்த ஆதாரத்தைக் கொண்டு காஜியாரும் இஸ்லாமியப் பொது ஜனங்களும், பள்ளிவாசல் நிர்வாகிகளும், நாட்டாண்மைக்காரர்களும் முன்னின்று மௌலா சாஹிபு அவர்களின் பூத உடலை இஸ்லாமிய முறைப்படி தற்போது உள்ள இடத்தில் ராணுவ மரியாதையுடன் நல் அடக்கம் செய்தனர். அதாவது குத்பா பள்ளிவாசல் தென்புறத்தில் உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இது ஏறக்குறைய இரண்டரை நூற்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சியாகும்.இனி, இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் அண்ணன் மகள் டாக்டர். ஆ.ப.ஜெ.மு.நசீமா அவர்கள் ஏப்ரல் 2008 ஆய்வுக்களஞ்சியம் என்ற இதழில் வெளியிட்டுள்ள ‘ஆதிபிதாவின் மக்கள் அடக்கம் செய்யப்பட்ட தர்ஹா‘ என்ற கட்டுரையை வாசகர்கள் முன் வைக்கிறேன்.

ஆபில், காபில் தர்ஹாவைச் சுற்றியுள்ள கதையும் புனைவுத்தன்மை மிக்கதாக உள்ளது என்றாலும், தர்ஹாவின்மேல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையில், இத்தகைய தர்ஹாக்களும் பாதுகாக்கப்படுகிறது.மேலே கூறப்பட்ட, புதுவை சையது அஹமது ஞானியார் தர்ஹாவின், வரலாற்றிலும் இனி நாம் பார்க்க இருக்கின்ற இராமேஸ்வரம் ஆபில்-காபில் தர்ஹாவின் வரலாற்றிலும் ‘கனவு‘ தான் திருப்புமுனையாக அமைந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.ஆதியில் மனிதர்கள் மிகவும் உயரமானவர்களாக இருந்தார்கள் என்ற ஒரு கருத்தாக்கம் நாட்டார் கதை மரபில் உள்ளது. ராச்சச மனிதர்களைப் பற்றிப் பல புராண மரபுக் கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ‘திஸால்‘ என்ற ராச்சசன் பனையைப் புடுங்கி பல் தேய்த்தான் என்று இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மூதாட்டிகள் கதைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த அடிப்படையில் நாற்பது அடி நீளமுள்ள கபாஸ்தான் என்ற செய்தி மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. இனி ஆபில் காபில் தர்ஹாவின் வரலாற்றைப் பார்ப்போம்.தமிழகத்தின் கடைக்கோடியிலுள்ள இராமேஸ்வரம் நகரின் தென்பகுதியில் ரயில் நிலையத்திற்கருகில் உள்ளது ஆபில் காபில் தர்ஹா. மானுட குலத்தின் ஆதிபிதாவாகிய ஆதம் (அலை) அவர்களுக்கும் ஹவ்வா அம்மையாருக்கும் பிறந்த ஆபில், காபில் சகோதரர்கள் இவ்விடத்தில் அடக்கம் செய்யப்பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. கிழக்கு, மேற்காக நாற்பது அடி (40 அடி) நீளத்தில் அமைக்கப்பெற்று இங்குக் காணப்படும் இரண்டு சமாதிகள் ஆபில் காபில் என்பவர்களுக்கு உடையவை என்று பலப் பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வருகின்றன.ஆபில் காபிலைக் குறித்த செய்திகள் கிறிஸ்தவ சமய மறைநூல் பைபிளின் பழைய ஏற்பாட்டிலும், இஸ்லாமியர்களின் இறைமறை திருக்குர்ஆனிலும் காணக்கிடைக்கின்றன.எனினும் அவர்கள் இங்கே எப்பொழுது வந்தார்கள், ஏன் இங்கே அடங்கப்பெற்றார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.ஆயினும் இராமேஸ்வரத்தின் பூர்வக்குடிகளான மரைக்காயர் குடும்பத்தவர்க்கு தொன்று தொட்டு நம்பிக்கைச் சின்னமாகவே இத்தர்ஹா இருந்து வருகிறது. இவர்கள் தங்கள் குடும்பத்து மணமக்களை முதன்முதலாக அழைத்து வருவது தர்ஹாவிற்குத்தான்! குழந்தை பிறந்து நாற்பது நாட்கள் கழிந்ததும் முதன் முதலாகக் குழந்தையைத் தூக்கி வருவதும் தர்ஹாவிற்குத்தான். மரைக்காயர்களை அடியொற்றிய இராமேஸ்வரம் வாழ் இஸ்லாமியப் பெருங்குடி மக்களும் தங்கள் குடும்பத்து நிகழ்வுகளிலும் முதன்மைப்படுத்துவது தர்ஹாவையே!இந்த தர்ஹா குறித்த செவிவழிச் செய்தி இஃது. ஆபிலும் காபிலும் சண்டையிட்ட காரணத்தால் ஒருவர் உயிரிழக்கச் செய்வதறியாது திகைக்கிறார் மற்றவர்! அப்போது காகங்கள் இரண்டு அடித்துக் கொண்டு கீழே விழுகின்றன. ஒன்று இறக்க மற்றதோ அதை அடக்கம் பண்ணும் பணியில் ஈடுபடுகின்றது.பரபரவென்று மண்ணில் குழிபறித்து வைத்துவிட்டுப் பறந்து சென்று தன் அலகினால் நீரை முகந்து வந்து காலமாகிவிட்ட காகத்தைக் கழுவிக் குளிப்பாட்டியது. சிறு துணியைப் பொறுக்கி வந்து அதன்மேல் மரித்த காகத்தை மண்ணுக்குள் வைத்து அள்ளி மேலே போட்டு மூடிவிட்டு மனதில் சுமையோடும் கண்களில் நீரோடும் பறந்து சென்றது.இந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பாபில் அக்காகத்தைப் பின்பற்றி இறந்துவிட்ட ஆபிலைக் குளிப்பாட்டி துணி போர்த்தி தொழுது அடக்கம் செய்கிறார்! சிலகாலம் அங்கேயே சுற்றி அலைந்து அவரும் மறைந்து போனார்.கடற்கரையில் ஒரு நாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனின் கையில் தட்டுப்படுகிறது தெய்வத்திருமேனி ஒன்று! சிறுவன் அத்தெய்வ விக்கிரகத்தை ஆராதித்தான்! அன்பால் பூஜித்தான்! காலம் கண்டெடுத்த தெய்வத்தை மக்கள் கூட்டத்தைக் கூட்டிவந்து வழிபட வைத்தது. சிறு கோயில் எழுந்தது, பெரிதாகவும் வளர்ந்து கொண்டு இருந்தது.பூர்வக்குடியினரான மரைக்காயர் உறங்கும்போது கனவொன்று காண்கிறார். ‘தற்போது கோயில் எழுந்து கொண்டிருக்கும் இடத்திற்கு அண்மையிலேயே அடங்கப் பெற்றவர்கள் ஆபிலும் காபிலுமாகிய நாங்கள்! ஊருக்குப் புறத்தே குடிகொள்ள விழைகிறோம்! தெற்குக் கோடியில் உங்கள் தோப்புக்கருகில் எலுமிச்சம் பழங்கள் காணக்கிடைக்கும் அவ்விடத்திலேயே நாங்கள் அடக்கமாகிறோம்‘ என்றார்கள்.


அதிகாலை எழுந்து அவர் விரைந்தோடிச் சென்று பார்க்க தலைமாட்டுக்கும் கால்மாட்டுக்குமாய் 40 அடி நீள அளவில் எலுமிச்சம்பழங்கள் தட்டுப்படுகின்றன. அந்த அளவிலேயே சமாதிகள் அமைக்கிறார். மேற்கூரை அமைத்து தர்ஹா ஏற்படுகிறது. இராமநாதசுவாமி கோயிலில் ஆபில்காபில் நினைவில் தங்கக் கொடிமரம் காட்சி தருகிறது.மதநல்லிணக்கம் பேணிய மண்ணின் மைந்தர்கள் மனமுவந்து உலவவிட்ட செய்திகளாக இருக்கலாம்!திருக்குர்ஆனில் ‘அல்லாஹ்‘ ஒரு காகத்தை அனுப்பினார். அது பூமியைத் தோண்டிற்று. அவனுடைய சகோதரனின் சடலத்தை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பதனை அவனுக்குக் காண்பிப்பதற்காக என்று பாகம்:6, அத்தியாயம்:5 அல்மாயிதா எனும் தலைப்பின் கீழ் அமையும் வசனம் ஆபிலும் காபிலும் ஆதிபிதா ஆதமின் மக்கள் என்பதையும் அவர்கள் மரித்து அடங்கப்பெற்ற விபரத்தையும் எடுத்துரைக்கின்றது!இத்திருவசனத்தின் வாயிலாக ஆபில் காபில் சமாதிகள் காணக்கூடியதே என்பதும் பெறப்படுகின்றது.ஆபில் காபில் தர்ஹாவைக் காண்பதற்கென்று தமிழகமெங்குமிருந்து தினந்தோறும் மக்கள் வந்து செல்கிறார்கள். இன்றளவும் சர்வ சமயத்தவரும் நேர்த்திக்கடன் வைத்து வழிபடும் புனித இடமாகவே இந்த தர்ஹா இருந்து வருகிறது.இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்து மன்னர் குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி இந்தப் புனித இடத்தின் பராமரிப்புக்கென்று இராமநாதபுரத்தை அடுத்த புதுக்குளம் (எக்ககுடி) என்ற கிராமத்தை கி.பி.1744இல் சர்வ மானியமாக வழங்கி யுள்ளதற்கான செப்புப்பட்டயம் உள்ளது என்று ‘இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்‘ என்ற தம் நூலில் திரு.எஸ்.எம்.கமால் குறிப்பிட்டுள்ளார்

No comments: