கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-18 பொங்கல்

தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் பண்டிகைகளுள் ‘பொங்கள்’ என்பது மிக முக்கியமான பண்டிகையாகும்.

ஒருகாலத்தில் தமிழகம் எங்கும் பொங்கல் பண்டிகை மிக விமரிசையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.

தமிழகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட பல்வேறு கலாச்சாரப் படையெடுப்புகளால், பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.

இனக்குழு மக்களும், ஒத்த பண்பாடுடைய மக்கள் குழுவினரும் கொண்டாடும் பண்டிகைகள், அம்மக்களைப்பற்றி, அறிந்துகொள்ள உதவும் வாழ்வியல் சான்றாதாரங்களாகும்.

மானுடவியல் சார்ந்த ஆய்வுக்கு பண்டிகைகளும் உதவுகின்றன. அரசியல், பொருளாதாரம், வாணிபம், ஆன்மீகம் போன்ற காரணங்களால் தமிழகத்தில் ஏற்கனவே கொண்டாடப்பட்டு வந்த பண்டிகைகள் சாரமிழந்தவண்ணம் உள்ளன.

தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் உற்சாகத்துடன், இன்று பொங்கல் பண்டிகையை தமிழ் மக்கள் கொண்டாடுவது இல்லை.

தீபாவளி என்பது இடையில் வந்த பண்டிகை. பொங்கல் என்பது தமிழர்கள் நாகரிகம் பெற்ற காலத்தில் இருந்து கொண்டாடி வரும் ஆதிப் பண்டிகை.
பொங்கலுக்கு முதல் நாள் ‘போகி’ என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘போகி’ என்பது வடமொழிச் சொல்லாகும். தமிழர்கள் கொண்டாடும் ஒரு பண்டிகைக்கு எப்படி வடமொழியில் பெயர் இருக்கும்?

‘போக்கு’ என்பதுதான் நாளடைவில் ‘போகி’ என்று திரிந்திருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

வடமொழியின் ஆதிக்கத்தால் தமிழ் வருடப் பிறப்பு என்பது சித்திரைக்குச் சென்றது, தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் யாவும் வட மொழியில் இருந்ததுபோலவே, தமிழர்களின் இந்தப் பண்டிகையின் பெயரையும், வடவர்களின் ஆதிக்கம் மாற்றி இருக்கவேண்டும்.

பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழர்கள் கொண்டாடும் இந்தப் பண்டிகை குறிப்பிடத் தகுந்ததாகும். ‘சுற்றுச் சூழல்’ சார்ந்த சிந்தனையுடன் இந்தப் பண்டிகை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

‘பழையன கழிதல்’ என்ற மரபை, ஒரு பண்டிகையாகக் கொண்டாடும் தமிழர்களின் நாகரிகத்தை எண்ணி நாம் பெருமை கொள்ளலாம்.

பயன்படாத பொருள்களையும் பானை (மண்பானை) சட்டிகளையும், அழுக்கான ஆடைகளையும், வீட்டை விட்டு அப்புறப்படுத்தி, அவைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் கொண்டு போய் போட்டுவிடுவது அல்லது அழித்துவிடுவது என்ற நிகழ்வையே தமிழர்கள், ‘போகி’ப் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.

போகிக்கு மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.  பொங்கல் என்பது இயற்கைக்கு நன்றி சொல்லும் பண்டிகையாகும். சகல உயிர்களையும் ஆக்கவும், அழிக்கவும் வல்லது சூரிய சக்தி. சூரியனே நமக்கு உணவு தருகிறது. சூரியன் இல்லை என்றால் எந்தத் தாவரமும் இப்பூமியில் தழைக்காது.

சூரியன் ஆதிஜோதியாகும். சூரிய வணக்கம் என்பது இயற்கையை வழிபடுவதாகும். எனவேதான் சிலப்பதிகார காப்பியத்தை இளங்கோவடிகள் தொடங்கும்போது, இறைவணக்கம் பாடாமல்,
 ‘ஞாயிறு போற்றுதும்
 திங்களைப் போற்றுதும்
 மாமழை போற்றுதும்’
என்று இயற்கையின் மாபெரும் சக்திகளான, சூரியனையும், சந்திரனையும், மழையையும் போற்றித் தன் காவியத்தை எழுதத் துவங்குகின்றார்.

இயற்கை வழிபாடுதான் ஆதித் தமிழரின் வழிபாட்டு மரபாகும். பொங்கல் அன்று சூரிய சக்தியைத் தமிழர்கள் வழிபடுகிறார்கள்.

‘சூரியனே, உன் ஆற்றலாலும், எங்களின் உழைப்பாலும், பூமித்தாய் தந்த காய்களையும், கனிகளையும், கிழங்குளையும், மஞ்சளையும், கரும்பையும் உன் ஒளிக்கதிரின் முன் படைத்து உனக்கு நன்றி சொல்கிறோம்’ என்று பொங்கல் அன்று சூரியனின் முன் தன் நிலத்தில் விளைந்தவைகளைப் படைத்து தமிழன் வழிபட்டான்.

உருவ வழிபாடு என்பதும், ஜாதிமத வேறுபாடு என்பதும் இந்த இயற்கை வழிபாட்டில் இல்லை. பொங்கல் இடுவதும், அதைக் குடும்பத்தோடும், உற்றார் உறவினரோடும் பகிர்ந்து உண்பதும், விருந்தோம்பல் செய்வதும்தான் பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சமாகும்.

ஆரியப் பண்டிகைகளில் இருந்து தமிழர்களின் பண்டிகை மரபு வேறுபடுவதை நாம் இங்கு கவனித்து நோக்க வேண்டும்.
‘சுற்றுச்சூழல்’ சார்ந்த அறிவியல் பூர்வமான ‘போகி’ போன்ற பண்டிகை உலகில் வேறு எங்காவது கொண்டாடப்படுகிறதா. . .? என்பது தெரியவில்லை. சூழல் அறிவியலுக்காக ஒரு பண்டிகை கொண்டாடுவதை யார்தான் வரவேற்காமல் இருப்பார்கள்?

இயற்கைக்கு நன்றி சொல்வது, பொங்கலிட்டு (உணவு சமைத்து) விருந்தோம்பல் செய்வது என்பதற்காக ஒரு பண்டிகை கொண்டாடும் வழக்கம் உலகில் வேறு எங்காவது உள்ளதா என்பதும் தெரியவில்லை!

பொங்கல் அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு துவங்குகிறது. ஒரு ஆண்டின் துவக்கத்தை பண்டிகையாகக் கொண்டாடுவதும் சிறப்புதானே!

ஆதிமனிதர்கள் வேட்டைச் சமூக வாழ்விற்குப் பிறகு, ஆடு, மாடுகளையே மேய்த்து நாடோடிகளாக வாழ்ந்தார்கள். பின்னர் நீர் வளம் உள்ள பகுதிகளில் அவர்கள் நிலையாக வாழத் துவங்கி கால கட்டத்தில் விவசாயம் செய்தார்கள்.
விவசாயம் செய்து வாழ்கிறபோதும், ஆடு, மாடுகளை மேய்ப்பதை அவர்கள் ஒரு உபதொழிலாகச் செய்து வந்தார்கள்.

ஆடு, மாடுகளோடான உறவு விவசாயிகளுக்கு மிகப் பழமையானதாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் இந்த உறவுச்சங்கிலி, பாசத்தால் மாடுகளை மனிதர்களோடு பிணைத்துள்ளது. தான் வளர்க்கும் மாடுகளை, இன்றும், கிராமத்துச் சம்சாரிகள் சிலர் தன் பிள்ளைகளைப் போலவே பாவிக்கிறார்கள்.

அதிகாலையில், எழுந்ததும் சம்சாரி கண்களைத் திறந்து மாட்டுத் தொழுவத்திற்குச் சென்று தான் வளர்க்கும் கால்நடைகளின் முகத்தில்தான் விழிப்பர். சில சம்சாரிகள், மாடுகளோடு பேசுவார்கள். அதைக் கேட்டு அந்தமாடும், ஏதோ அவர் சொல்வது புரிந்து விட்டதைப்போலத் தலையாட்டும்.
வறுமை வந்து, தான் வளர்த்த மாடுகளை விற்கும்போது கண்ணீர்விட்டுக் கதறி அழும் சம்சாரிகளை நான் பார்த்திருக்கிறேன்.

ஒருசம்சாரி வளர்க்கும் மாடு இறந்துவிட்டால், சம்சாரியின் பிள்ளை செத்துவிட்டதைப்போல பாவித்து ‘துஷ்டி’ கேட்டு (துக்கம் விசாரித்து) வரும் சக, சம்சாரிகளை நான் பார்த்திருக்கிறேன்.

மாடுகளை உழவும், வண்டி இழுக்கவும், பால் தரவும் பயன்படும் ஒரு உயிரியாக மட்டும் பார்க்காமல் அவைகளை தன் சொந்தப் பிள்ளைகளாகப் பராமரிக்கும் எத்தனையோ சம்சாரிகளை நான் தரிசித்திருக்கிறேன்.

வாயில்லா ஜீவன்களான மாடுகளுக்காகவும் ஒரு பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று நினைத்த தமிழர்களின் பண்பாடு உயர்ந்ததல்லவா. . .? மாடுகளுக்கு என்று ஒரு பண்டிகையைக் கொண்டாடும் இந்த மரபும் உலகில் வேறு எங்காவது இருக்கிறதா. . .? என்று தெரியவில்லை.
மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளின் கொம்புகளைச் சீவி, அதற்கு வண்ணமடித்து, அவைகளுக்கு பிரியமான உணவுகளைத்  தின்னக் கொடுத்து அவைபால் அன்பு செலுத்துவதையே ஒரு பண்டிகையாகக் கொண்டாடும் மரபு போற்றத்தக்கதல்லவா. . .?

மாடுகளைக் கொண்டாடும் மரபின் இன்னோர் வடிவம்தான் ஜல்லிக்கட்டும், மஞ்சுவிரட்டும். தான் வளர்த்த காளை வெற்றி வாகை சூட வேண்டும் என்று நினைத்துத்தான், அத்தகைய காளைகளைத் தயாரித்து பயிற்சி கொடுத்து, அக்காளையை வளர்ப்பவர்கள் ஜல்லிக்கட்டிற்கு அனுப்புகிறார்கள்.

போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் போன்ற பண்டிகைகள், தமிழகம் எங்கும் உள்ள கிராமங்களில் ஒரு காலத்தில் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டன. அன்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், வீர விளையாட்டுகளும் நடத்திக் காட்டப்பட்டன. ஆனால், இன்று உலகெங்கும் உள்ள தமிழர்கள், பொங்கல் பண்டிகையை ஒரு சடங்காகவே கொண்டாடி வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகையின் உண்மையான, தாத்பரியத்தை தமிழர்கள் மெல்ல, மெல்ல மறந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது மறக்கடிக்கப்படுகிறார்கள்.
பண்டிகைகளுள் ‘பொங்கல்’ தமிழர்களின் அடையாளமாகும். அடையாளங்களை அழித்தொழிக்கும் பண்பாட்டு அரசியலில் இருந்து தமிழர்கள் தனது தனித்துவத்தைக் காக்க வேண்டிய தருணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பண்டிகைகள் வெறும் கொண்டாட்டங்களுக்கு மட்டுமானவை அன்று. அவை ஒரு சமூகத்தின் கலாச்சார பண்பாட்டுப் பதிவுகளாகும்.
மரபான நம் வேர்களைத் தேடிச் சென்று மீட்டெடுப்பதைப்போல பொங்கல் சார்ந்த பண்பாட்டு மரபுகளை மீட்டெடுப்பதும், அவைகளைப் பேணிக் காப்பதும் தமிழர்களின் கடமை என்று கருதுகிறேன்

No comments: