கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-14 சாட்டையடி

அரசர்கள் நாட்டை ஆண்ட காலத்தில், குற்றம் செய்தவர்களுக்கு கசையடி கொடுப்பார்கள். இதற்கு ‘சாட்டையடி’ என்று பெயர்.

அடிமைகளைச் சாட்டையில் அடிக்கும் காட்சியை ‘அடிமைப் பெண்’ என்ற திரைப்படத்தில் காணலாம்.

இடக்காக ஒருவன் கேள்வி கேட்க அதற்கு இன்னொருவன் மடக்காக (எதிர் மறையாக) பதில் சொன்னால். கேள்வி கேட்டவனுக்கு பதிலால் சரியான ‘சாட்டையடி’ கொடுத்தான் என்று பேச்சு வழக்கில் சொல்கிறார்கள்.

குற்றம் செய்தவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் வழக்கமும் பழந்தமிழகத்திலும் இருந்தது. சவுக்கடி என்பது வேறு. சாட்டையடி என்பது வேறு. தோலால் செய்யப்பட்ட நீளமான கயிறு போன்ற கருவியால் எதிரியை அடிப்பது சவுக்கடி, துணியால் நீளமாகச் சாட்டை போன்று செய்யப்பட்ட கருவியால் எதிரியை அடிப்பது சாட்டை அடியாகும்.

மாடுகளை அடிக்கும் கம்பில் ஒரு தோல் கயிறு கட்டப்பட்டிருக்கும். அதற்குச் சாட்டைக் கம்பு என்று பெயர். ‘சாட்டை’யின் அடி ‘சுர்’ என்று மாட்டின் மேல் விழும். அந்த அடியை மாடுதான் தாங்க வேண்டும். அதே சாட்டையால் (சாட்டைக் கம்பால்) மனிதனை அடித்தால் எப்படி இருக்கும்...!
இடுப்பில் அழுக்கான ஒரு குட்டைப் பாவாடை போன்ற உடுப்பு. அரையில் இறுக்கிக்கட்டப்பட்ட பெல்ட். காலில் சலங்கை வலது கையில் பழந்துணியால் தயாரிக்கப்பட்ட நீண்ட சாட்டை. இடது கையில்முழங்கைக்குக் கீழும், மணிக்கட்டுக்கு மேலும் கீறல், அதிலிருந்து வடியும் ரெத்தம்.

அவன் அருகிலேயே ஒரு பெண். அவள் கழுத்தில் தொங்கும் உறுமி மேளம். அப்பெண் மிகவும் கருணை பொங்கும் தாளகதியில். உறுமி மேளத்தை அடிக்க, அந்தத் தாளத்திற்கு ஏற்ப தன் கால்களில் கட்டிய சலங்கைகள் குலுங்க, ஆடிக்கொண்டே அந்த வாலிபன் தன் வலக்கையில் உள்ள சாட்டையைச் சுழற்றி ஒரு அடி அடிப்பான். அப்போது ‘சொடக்’ என்று அவன் மேல் சவுக்கடி விழும்.

பேருந்து நிலையங்களில், ஜனங்களின் நடமாட்டம் அதிகமாக உள்ள தெருக்களில், மக்கள்கூடும் இடங்களில், இத்தகைய, அச்சம்தரும், அருவருப்பை வரவழைக்கும் ஒரு செயலைப்பார்த்து, நீக்கள், கருணையுடன் சில நாணயங்களை அவர்களுக்குக் கொடுத்து விட்டோ, அல்லது முகத்தைச் சுழித்துக் கொண்டு, முணு முணுத்தபடியோ, அவர்களையும் அவர்கள் சிந்தும் ரெத்தத்தையும் கடந்து சென்ற அனுபவம் உங்களுக்கும் இருக்கும். பரிதாபத்திற்கு உரிய இக்கலைஞர்கள் குறிப்பிட்ட ஒரு இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்.

இந்த இனக்குழு மக்களைப் பொதுவாக ‘சாட்டையடிக் காரர்கள்’ என்று அழைக்கிறார்கள். தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு மக்கள் மத்தியில் ஒரு வித கழிவிரக்கத்தை ஏற்படுத்தி இவர்கள் ‘எச்சை’ வாங்கி வயிறு வளர்க்கிறார்கள்.

இந்த இனக்குழு மக்கள் தங்களுக்குள் ஒரு வித தெலுங்கு மொழியில் பேசிக் கொள்கிறார்கள். இந்தப் பரிதாபத்துக்குரிய கலையாளர்களின் பின்னால் சென்று. அவர்கள் எங்கு வசிக்கிறார்கள்? எப்படிச் சமைக்கிறார்கள்.? எவ்வாறு குடும்பம் நடத்துகிறார்கள் என்று யாராவது கவனிக்கிறார்களா..?

சாட்டையடிக் காரர்களும் ஒரு சமூகமாகத்தான் வாழ்கிறார்கள். இவர்களுக்கும், நாள், நட்சத்திரம், சடங்கு சம்பிரதாயங்கள் நம்பிக்கைகள், வினோதமான வாழ்வியல் முறைகள், எழுதப்படாத சட்ட திட்டங்கள் எல்லாம் உண்டு.

இந்த இனக்குழு மக்கள் தங்கள் இனக்குழுவிற்குள்ளேயே இளைஞர்களுக்கு, கன்னிப் பெண்களைப் பேசி முடிவு செய்து நிச்சயம் செய்து கொள்கிறார்கள். இந்த இனக்குழு மக்களுக்கு ஒரு மூப்பன் (தலைவன்) உண்டு. அவரே இம்மக்களின் நல்ல காரியங்களையும் (திருமணம் -பூப்பு), கெட்ட காரியங்களையும் (இறப்பு) முன் நின்று நடத்துகிறார். இவ்வினக்குழுவைச் சார்ந்த இளைஞர்கள் ஜாதி விட்டு இன்னோர் ஜாதியில் திருமணம் செய்து கொள்ள அனுமதி கிடையாது. அப்படிச் செய்து கொண்டால், மூப்பன் அந்த இளைஞனை ஜாதியை விட்டு விலக்கி வைத்து விடுவார்.

சாட்டையடிக்காரர்கள். பெரும்பாலும் நாடோடிகளாகவே வாழ்கின்றார்கள். ஊருக்கு ஒதுக்குப் புறமான திறந்த வெளியில், ‘டெண்ட்’கள் அமைத்து அதில்தான் வாழ்கிறார்கள் திறந்த வெளியில் சமையல் செய்து திறந்த வெளியில் உக்கார்ந்து சாப்பிட்டாலும், இவர்களும் ஒரு விதத்தில் சந்தோசமாக வாழ்கிறார்கள்.

நாடோடிகளாக வாழ்வதால், ஊர். ஊராகச் சென்று. சாட்டை அடித்து, ரெத்தம் காட்டி, காசு வாங்கி வாழ்வதால், இவர்களால் நிரந்தரமாக ஒரு இடத்தில் குடியிருக்க முடியவில்லை. எனவே பள்ளி சென்று கல்வி கற்கும் வாய்ப்பு இந்த இனக்குழு மக்களுக்குக் கிடைப்பதில்லை.

இந்த இனக்குழுவைச் சார்ந்த பத்து வயதுச் சிறுவனுக்கு, இவ்வினக் குழுவின் மூப்பின். எப்படி சாட்டையை லாவகமாகப் பிடிக்க வேண்டும்? எப்படிச் சாட்டையைச் சுழற்ற வேண்டும்? சாட்டை, சுழன்று உடலைச் சுற்ற வேண்டும்? அப்போது ‘சொடக்’ என்று உடம்பில் அடி விழுவது போன்ற சத்தம் வர வேண்டும்! ஆனால். சாட்டை பையனின் உடம்பில் ‘படக்’ கூடாது! என்று லாவகமாக சாட்டையை அடிக்கும் வித்தையை படிப்படியாகக் கற்றுக் கொடுக்கிறார்.

அதேபோல், கையில் எந்த இடத்தில் கத்தியால் கீற வேண்டும். கீறும் போது ரெத்தம் வரவும் வேண்டும். சில நொடியில் அந்த இடத்தில் ரெத்தம் உறைந்து கெட்டிப் படவும் வேண்டும். பார்ப்பவரின் இதயத் துடிப்பை அதிகப் படுத்தும் இந்தக் காரியத்தால், ரெத்தம் சிந்தும் பையன் ரெத்தத்தை முழுவதுமாக இழந்து மயக்கமடைந்து விடவும் கூடாது. இந்த வித்தையில் இவை தவிர மறை முகமாகக்  கையாள வேண்டிய சில தொழில் ரகசியங்களையும், யுக்தி களையும் மூப்பன் அந்தச் சிறுவனுக்கு, நாளாம்பரமாக, (படிப்படியாக) கற்றுக் கொடுத்து அவனை ஒரு சாட்டையடிக் காரனாகத் தயார் செய்கிறார்.

அதேபோல, மூப்பனின் மனைவி, (மூப்பி) அந்த இனக்குழுவைச் சேர்ந்த எட்டு வயது சிறுமிக்கு எப்படி உறுமி மேளத்தை லாவகமாக அடித்து இசையை எழுப்புவது என்று கற்றுக் கொடுக்கிறாள்..

‘இளமையில் கல்’ என்பது இவ்வினக் குழு மக்களுக்கு, வித்தைகற்கும் விசயமாகவே இருக்கிறது. இவ்வினக் குழுவைச் சேர்ந்த சிறுவனும், சிறுமியும், மிக இயல்பாகி. ‘குலவித்தை கல்லாமல் பாகம்படும்’ என்பதற்கேற்ப, இக்கலை சார்ந்த தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இங்கே, மூப்பனும், மூப்பியும் குருக்களாகத் திகழ்கின்றார்கள்.

இம்மக்களுக்குள் பால்யத்திலேயே (இளமையிலேயே) மாமன் மகன், அத்தை மகள், உறவு முறை உள்ளவர்களை, இன்னார்க்கு, இன்னார் தான் கணவன் மனைவி என்று நிச்சயம் செய்துகொள்கிறார்கள். ஆனால், பிராயம் (பருவம்) வந்தபின் தான் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

இவர்கள் தங்களின் குலதெய்வத்தை ஒரு பெட்டியில் வைத்து எந்த ஊருக்குச் சென்றாலும் தன்னோடு எடுத்துக் கொண்டு சென்றுவிடுகிறார்கள். ஓலைப் பெட்டியில் இருக்கும் குலதெய்வ சாமிக்கு, தினசரி வழிபாடும் மாதாந்திர வழிபாடும் உண்டு.

ஆண்டுக்கு ஒருமுறை இவர்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கூடி. தங்களுக்குள் உள்ள வரி, வம்புகள் பற்றிப் பேசித் தீர்த்துக் கொள்கிறார்கள்.

இவர்களும், பெண்களுக்கான. பூப்பு நீராட்டு, போன்ற சடங்குகளையும், திருமணச் சடங்குகளையும் நடத்துகிறார்கள். அப்போது மது அருந்துதல், ஆடிப்பாடி மகிழ்தல் என்று சந்தோசமாகப் பொழுதைக் களிக்கிறார்கள்.

இத்தகைய குடும்ப விழாக்களின் போது, மூப்பனும், மூப்பியும், நிறை சுளவு தானியத்தைத் தலையில் வைத்துக் கொண்டு பெண்கள் மொத்தமாக அடிக்கும் உறுமி இசைக்கு ஏற்றவாறும், ஆண்களின் காலில் கட்டிய சலங்கை ஒலிகளுக்கு ஏற்றவாறும் ஆடுகிறார்கள். மூப்பனும், மூப்பியும் அப்படி ஆடும் போது. அவர்கள் தலையில் இருக்கும் சுளகு சரியவும் செய்யாது, சுளகில் இருக்கும் தானியங்கள் சிந்தவும் செய்யாது.

இவ்வினக் குழுவைச் சார்ந்த பெண்கள் வீட்டுக்கு விலக்கமானால் அந்த மூன்று நாட்களும், உறுமியைக் கையால் தொடவும் மாட்டார்கள். ‘உறுமி’ என்பது அவர்களுக்கு தெய்வாம்சம் பொருந்திய ஒரு கருவி. வீட்டுக்குத் தூரமான பெண்கள் உறுமியைத் தொட்டால் உறுமிக்குத் தீட்டுப் பட்டுவிடும் என்று நம்புகிறார்கள். (அப்படியாவது அந்த நாட்களில் அவ்வினப் பெண்களுக்கு ஓய்வு கிடைக்கிறதே, அந்த மட்டில் மகிழ்ச்சி.)

பறவைகளையும், சிறியவிலங்குகளையும் வேட்டையாடி, அதன் மாமிசத்தை உண்பது. மழை, வெயில், குளிர், என்று பாராமல், டெண்டுகளில் வாழ்வது. திறந்த வெளியில் இரவில் மனைவியுடன் சேர்ந்து இல்லற சுகத்தை அனுபவிப்பது என்று இந்த நாடோடி மக்களின் வாழ்க்கைக்குப் பின்னால் எத்தனையோ துயரம் சார்ந்த பதிவுகள் உள்ளன.

இந்தக் கணினியுகத்திலும். இவ்வினமக்களின் கால்களில் கட்டப்பட்ட சலங்கைகள் குலுங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இவ்வின மக்களின் இனிய, எளிய உறுமி இசை நம் காதுகளை நிரப்பிக் கொண்டுதான் இருக்கின்றன.

அதிர்ச்சியையும், பயத்தையும் இசையோடு உருவாக்கி பொதுமக்களிடம் ‘யாசகம்’ பெற்று வாழும் இம்மக்களின் அடுத்த தலைமுறையாவது பள்ளிகளுக்குச் செல்லுமா..? பாடம் படிக்குமா..? படித்துப் பட்டம் பெறுமா..?

நம் மனசாட்சியின் மீது இக்கட்டுரை ஒரு ‘சாட்டையடி’யாக விழுந்தால் எனக்குச் சந்தோசம்தான்.

“இவர்கள் வெறும் பிச்சைக்காரர்கள் அல்லர்! இவர்களும் கலையாளர்களே..!” என்ற உண்மை நமக்கு உறைத்தால் நல்லது.

தன் உதிரத்தைப் பூமியில் வழிய விட்டு, பரிதாபத்தை ஏற்படுத்தும் இந்த இனக்குழு மக்களை யாரால் சமூக நீரோட்டத்திற்கு மீட்டெடுக்க இயலும்?

சடங்குகளும் சம்பிரதாயங்களும், கண்ணுக்குத் தெரியாத விலங்குகளாக, இவர்களின் கால்களைக் கட்டிப் போட்டுள்ளன.

சமூகவியல் சார்ந்த ஆய்வாளர்களின் கவனம் இவர்கள் மேல் விழுந்தால் நல்லது.

நாட்டுக்குள்ளே ‘காட்டு மனிதர்களாக’ வாழும் இம்மக்களை, என்று வீட்டு மனிதர்களாகக் காணப் போகிறோம்?

No comments: