கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-32 ஊரும் பெயரும்

பல இனக்குழுமக்கள் ஒரு இடத்தில் சேர்ந்து வாழ ஆரம்பித்த பிறகு, அந்த இடத்திற்கு அம்மக்கள் ஒரு பெயரையும் சூட்டிக் கொண்டார்கள்.

இப்படிச் சூட்டப்பட்ட ஊரின் பெயர்கள், வெறும் பெயர்களாக மட்டும் அல்லாமல், அவைகளும் நம் பண்பாட்டின் அடையாளமாகவும், இயற்கையின் அமைப்பையும் குறிப்பனவாக உள்ளன.

பொத்தாம் பொதுவாகப் பார்க்கும்போது, ஊரின் பெயர்கள் சாதி சார்ந்ததாகவும், நில அமைப்பு, தாவரம், மரம் போன்றவற்றின் பெயர் சார்ந்ததாகவும் திகழ்கின்றன.

சில ஊரின் பெயர்களில் இருந்து அப்பகுதி மக்கள் செய்யும் தொழிலையும், அவர்கள் வணங்கும் தெய்வத்தையும், அறிந்து கொள்ளமுடிகிறது. வரலாற்றுச் சுவடுகளாகவும், புராண மரபுக் குறியீடுகளாகவும், போர்கள், மானியங்கள், அரசமைப்புகள் சார்ந்ததாகவும் சில ஊரின் பெயர்கள் திகழ்கின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சில ஊர்ப் பெயர்களையும், அப்பெயர்களுக்குப் பின்னால் உள்ள செய்திகளையும் பற்றி இக்கட்டுரையில் பேசலாம் என்று எண்ணுகிறேன்.

‘திருநெல்வேலி’ என்ற ஊரின் பெயருக்குப் பின்னால் ஒரு புராண மரபுக்கதை உள்ளது. நெல்லுக்கு வேலியிட்ட அக்கதையின் நினைவாகவே, திருநெல்வேலிக்கு அப்பெயர் சூட்டப்பட்டதாம்.

பாளையக்காரர் ஒருவரின் கோட்டை இருந்ததால், பாளையங்கோட்டை என்று பெயர் பெற்றது.

குற்றால நாதரும், குழலாள்மணி அம்மையும் வீற்றிருந்து அருளாட்சி செய்யும் ஊர் குற்றாலம். செம்மையான கோட்டை அமைந்த ஊர் செங்கோட்டை.

தேன்கூடுகள் அதிகம் காணப்படும் பொத்தை (சிறிய மலை) உள்ள ஊர் தேன்பொத்தை. பசுமையான பொழில்கள் (சோலைகள்) சூழ்ந்த ஊர் பைம்பொழில்.

ஆற்றின் தெற்குக் கரையில் அமைந்த ஊர் தென்கரை. ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்த ஊர் வடகரை.

ஜாதி மோதல் வந்தபோது, குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால், அடைக்கலபட்டணம் என்று ஒரு ஊர் பெயர் பெற்றுள்ளது.

இரண்டு பிரிவாகச் செல்லும் ஆற்றின் நடுவே அமைந்த ஒரு ஊரின் பெயர் உள்ளாறு என்பதாகும். ஆற்றின் போக்கில் (வழியில்) அமைந்த ஊர் ஆற்றுவழி.
குத்துக்கல் போன்ற அமைப்பிலான கற்கள் அதிகம் காணப்படும் ஊரின் பெயர், குத்துக்கல் வலசை. அம்மையாய் அப்பனாய் இறைவன் வீற்றிருக்கும் ஊர் அம்மையப்பபுரம்.

அழகான மலைமேல் கோயில் அமைந்த ஊர் திருமலைக்கோயில். தந்தை (அச்சன்) ஸ்தானத்தில் உள்ள போர்வீர் ஒருவரின் நினைவாகத் திகழும் ஊர் அச்சன்புதூர்.
வாள் ஏந்திப் போர் புரிந்து வெற்றி பெற்றதன் அடையாளமாக ஒரு ஊருக்கு, நம் முன்னோர்கள் வாளேந்தி ரஸ்த்தா என்று பெயர் வைத்துள்ளார்கள்.

குறுநில மன்னர்கள், கட்டளையாக (தானமாக) வழங்கிய ஊர் கட்டளையூர் ஆகும். பனைகள் அதிகம் காணப்படும் ஊர் பனையூர். கட்டளை ஊரை அடுத்து, ஒவ்வொரு மைல் தொலைவிலும் மேற்கு நோக்கிச் சென்றால், வரும் ஊரின் பெயர்கள், வரிசையாக, ஒன்றாம் கட்டளை, இரண்டாம் கட்டளை, மூன்றாம் கட்டளை, நான்காம் கட்டளை, ஐந்தாம் கட்டளை என்று அமைந்துள்ளது.

கரிசல்மண் அதிகமாகக் காணப்படும் ஊர் கரிசலூர். பொட்டலான இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஊர் பொட்டல்புதூர்.

இடையர் என்ற ஜாதியைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழும் ஊர் இடையர்தவணை. ரெட்டியார் என்ற ஜாதியைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழும் ஊர் ரெட்டியார்பட்டி என்பதாகும்.

தேவர் இனமக்கள் அதிகமாக வாழும் ஊர் தேவர்குளம். நாடார் சமுதாய மக்கள் அதிகமாக வாழும் ஊரின் பெயர் அணைந்தநாடார்பட்டி என்பதாகும்.

நெல் அதிகமாக விளையும் செவக்காட்டு நிலம், நெல்கட்டும்செவல் என்று பெயர்பெற்றது.

நீர்நிலைகளைக் குறிக்கும் சொற்களுடன் சில ஊர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இனிப் பார்ப்போம்.

‘குளம்’ என்று முடியும் ஊரின் பெயர்கள் பல இம் மாவட்டத்தில் உள்ளது. ஆலங்குளம், துந்திகுளம், கழுநீர்குளம் என்பன அவற்றில் சிலவாகும்.

நீர் ஊற்றைக் குறிக்கும் வகையில், தன்னூற்று, கல்லூத்து, ஊத்துமலை போன்ற ஊரின் பெயர்கள் உள்ளன.

குட்டம் (சிறியகுளம்) என்ற நீர் நிலையைக் குறிக்கும் வகையில் அச்சன்குட்டம், ஆண்டான்குட்டம் போன்ற ஊர்கள் திகழ்கின்றன.

கடவுள் பெயரை அடையாகக்கொண்டு, இராமனூர், சீதைகுறிச்சி, நவநீதகிருஷ்ணபுரம், பிரம்மதேசம், முருகன்குறிச்சி போன்ற ஊர்களின் பெயர்கள் அமைந்துள்ளன.

குறிப்பன்குளம், குத்தப்பாஞ்சான், மாயமான்குறிச்சி போன்ற ஊர்களின் பெயர்கள் இராமாயணக் கதையை நினைவுபடுத்துகின்றன. புராண மரபுக் கதைக்களமாகத் திகழ்ந்ததால் இவ்வூர்கள் இப்பெயர்களைப் பெற்றதாக இப்பகுதி கதைசொல்லிகள் கூறுகின்றார்கள்.

இராமகதையில் மான் வடிவில் வந்த மாரீசன் இந்த இடத்தில்தான் மாயமாக மறைந்து போனான் எனவேதான் இந்த இடத்திற்கு (ஊருக்கு) மாயமான் குறிச்சி என்று பெயர் வந்தது என்கிறார்கள் கதைசொல்லிகள்.

மாயமானை குறிவைத்துக் குத்துவதற்காக இராமன் பாய்ந்து சென்ற இடமே குத்தப்பாஞ்சான் என்று பெயர் பெற்றது என்று கதைசொல்லிகள் கூறுகின்றார்கள்.

இப்படி, புராணமரபுக் கதைகளோடு பொருத்தமான தொடர்புடைய ஊர்ப் பெயர்கள் தமிழகம் எங்கும் பரவலாகக் காணப்படுகின்றன.

எங்கள் வட்டாரத்தில் உள்ள பல ஊர்களின் பெயர்கள், சமுத்திரம், குளம், நல்லூர், புதூர், ஊற்று, மலை என்ற பொதுப்பெயருடன் முடிகிறது. மனிதர்களின் பெயர்களுக்கு இன்சியல் இருப்பதைப் போன்று சில ஊரின் பெயர்களுக்கு முன்னாலும் இன்சியல் உள்ளது. ஆர்.என்.கே.புரம், வீ.கே.புரம், கே.நவநீதகிருஷ்ணபுரம், எம்.கல்லத்திகுளம் என்ற ஊர்ப் பெயர்களை அதற்குச் சான்றாகக் கூறலாம்.

காடு, கரை, கம்மா, வரப்பு, தவணை என்று விவசாயிகளின் பயன்பாட்டில் உள்ள சொற்களை ஈறாகக் (கடைசியாக) கொண்டு சில ஊரின் பெயர்கள் அமைந்துள்ளது.
தானம், மான்யம், கட்டளை, என்ற வார்த்தைகளுடன் முடியும், ஊர்கள் எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக குறுநில மன்னர்களின் ஆட்சிக் காலத்தில அன்பளிப்பாக, குறிப்பிட்ட ஒரு சமூக மக்களுக்குக் கொடுக்கப்பட்டதுதான் ஏன், எதற்காக, யாரால், யாருக்கு இந்த மானியம் வழங்கப்பட்டது என்று ஆய்வு நோக்கில் தேடினால், அவ்வூரின் பெயர்களுக்குப் பின்னால் நிச்சயம் ஒரு கதை கிடைக்கும்.

இன்றைக்குப் புதிதாக உருவாக்கப்படுகின்ற நகர்கள் அல்லது ஊரின் பெயர்கள் பெரும்பாலும் அரசியல் தலைவர்களின் பெயராகவோ. .  அல்லது அப்பகுதியில் புகழ் பெற்ற நபரின் பெயராகவோ. . . அல்லது கடவுளின் பெயராகவோ உள்ளன. அதேபோல் அந்தக் காலத்தில் அப்பகுதியை அண்ட குறுநில மன்னர்களின் பெயர்கள் சில ஊர்களுக்குச் சூட்டப்பட்டுள்ளது.

சேரமான் பெருமாளூர், பாண்டியாபுரம் போன்ற பெயர்களை அதற்குச் சான்றாகக் கூறலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊர்களின் பெயர்களை மட்டும் ஆய்வு செய்வதும் ஒருவிதத்தில் நாட்டார் களஆய்வு சார்ந்ததுதான்.

ஊர்ப்பெயர்களின் ஆய்வுக்கு இக்கட்டுரை ஒரு வழிகாட்டி மட்டுமே. விரிவாகவும், விளக்கமாகவும் ஊர்களின் பெயர்களை ஆய்வு செய்ய இடம் உள்ளது. அந்தந்த வட்டாரத்தில் உள்ள நாட்டுப்புறவியல்துறை சார்ந்த ஆய்வாளர்கள் இத்தலைப்பில் ஆராய்ந்தால் நமக்குப்புதிய பல செய்திகள் கிடைக்கும்.

No comments: