கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கடித இலக்கியம் -8 கி.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது.

தீப.நடராஜன்                     தென்காசி/23-12-03

அன்புக்குரிய நண்பர் கி.ரா. அவர்களுக்கு,
வணக்கம்.
உங்கள் கடிதத்தொகுப்பு இன்னொன்று வர இருப்பது எனக்கு அளவிலாத சந்தோஷம் தருகிறது.

தேர்ந்தெடுப்பதற்காகக் கடிதங்களைப் புரட்டினால் எதைவிடுவது என்பது தெரியவில்லை. ஒவ்வொரு வரியிலும் கரிசல்க்காட்டு ராஜாவின் முத்திரை விழுந்திருக்கிறது. அவரது ரசிப்புத் திறன் இருக்கிறது. பாணி வெளிப்படுகிறது.

கழனியூரன், எல்லாமே இருக்கட்டுமே என்றுதான் சொல்கிறார் ஃபோனில். அவருக்கு பெருமை பிடிபடவில்லை. உங்களுக்கு அருமையான சிஷ்யன் கிடைத்திருக்கிறார். இப்படி அவர் ஒரு காரியம் செய்ய முயற்சிப்பது பெரிய தொண்டு.

கணவதி அம்மையார் வரலாறு வருவது அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். புதுவைக்கு நீங்கள் போனபிறகு அவர் எத்தனையோ பேருக்கு அம்மாவாகி விட்டார். தண்ணீர் உயர உயர தாமரை உயருமாமே? அதே மாதிரி அண்ணாச்சி உயர உயர மதனியாரும் உயர்ந்துவிட்டார்.

இலக்கியவாதிகள் வரலாற்றில் இப்படி தம்பதியைப் பார்ப்பது அபூர்வம். காந்தாரி மாதிரி உங்களுக்கு இருக்கிறார் கணவதி, நீரிழிவைக்கூட விட்டு வைக்கவில்லை!
'மனம் மிகவும் தளர்ந்துள்ள சமயத்தில் ஒருவன் தன் நண்பர்கள் எழுதிய கடிதங்களை எல்லாம் படித்துப் பார்த்தல் நல்ல மருந்தாகும்' என்று ஒரு மேல்நாட்டு அறிஞன் கூறுகிறார்.

உங்கள் கடிதங்களை எல்லாம் இப்போது எடுத்துப் படித்தபோது எனக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டது.
எங்களை எல்லாம் எவ்வாறெல்லாமோ கணித்திருக்கிறீர்கள். பாராட்டியிருக்கிறீர்கள். ஊக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.
அது மட்டுமல்ல எங்களுடன் தனித்துவமான உறவைப் பேணி வந்துள்ளீர்கள். இதில் கணவதியும் உடன் இருக்கிறார்.

தாத்தாவும் கல்கியும் ராஜாஜியும் ஆவுடையப்ப பிள்ளையும் எப்படிக் குடும்பத்தோடு குடும்பமாக உறவை வைத்திருந்தார்களோ அதே போன்ற உறவை நீங்கள் எங்களிடம் நாட்டிவிட்டீர்கள்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டபின் குணமானதும் திவாகர் "சித்தப்பா' என்று என்னை விளித்து அன்பு பெருகும் கடிதம் அனுப்பினானே அதை இப்ப படித்ததும் உருகிவிட்டேன்.

27-7-89 அன்று நீங்கள் எழுதிய கடிதம்தான் இடைசெவலில் இருந்து எழுதிய கடைசிக் கடிதம்.
இன்றும் ராஜநாராயணன் என்று மனசு நினைக்கும்போது இடைசெவல்தான் காட்சி கொடுக்கிறது.
அது வானம் பார்க்கும் பூமியாகவோ, வறண்ட பிரதேசமாகவோ கண்ணுக்குப் புலப்படவில்லை.

கண்ணுக்குக் குளிர்ச்சியான பசுஞ்சோலையாக, மனசுக்குக் களிப்பூட்டும் மடுவாக இருக்கிறது.
முதல் முதலாக அந்த மண்ணில் அத்தானும் நானும் காலடி எடுத்து வைத்தவுடன் சபரி கொடுத்த டீ நாக்கில் சுவையூட்டுகிறது.
காரமும் வாசனையும் கலந்து பருப்புச் சாதத்தை மதனியார் இட்டது எத்தனை அருசுவை உணவிலும் கிடைக்காத நிறைவைத் தந்ததே?

இப்படி எண்ணங்கள் குமிழியிட்டுக் கொண்டே போகிறது.

ஆனந்தியின் மகள் கௌரியிடமிருந்து திடீரென்று ஒரு நீண்ட கடிதம் வந்தது. அவள் "இந்து" நாளிதழ் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவில் இருக்கிறாள். ஆங்கிலத்தில் வெகு சரளமாக எழுதக்கூடிய ஆற்றல் மிக்கவள். கலா விமர்சகர்.

டி.கே.சி., கல்கி, ராஜாஜி இவர்கள் காலத்தில் உங்களையெல்லாம் போல நான் கூட இருக்கவில்லையே என்று ஆற்றாமைப்படுகிறாள். அது ஒரு மகோன்னதமான காலமாக அவள் உணர்கிறாள்.

இடைசெவலை நினைக்கும்போது நான் ஒரு மகோன்னதமான காலத்தில் தொடர்புடையவனாக இருக்கிறேனே என்னும் பெருமிதம் ஏற்படுகிறது.
கணவதி அவர்களைப் பற்றிய எண்ணம் என் பேனாவை எங்கெங்கோ கொண்டு சென்றுவிட்டது. அவருக்கு என் அன்பும் வாழ்த்துக்களும் சொல்லுங்கள்.
         *                *                    *

டாக்டர் செண்பகராமன் அவர்கள் உங்களுக்கு கடிதம் எழுதினார்களே, வந்து சேர்ந்ததா?

டி.கே.சி.யின் சொந்த டாக்டர். ஒரு வரி எழுதுங்கள்.

இப்பொழுது எழுதுவது சிரமமாக இருக்கிறது என்று நண்பர் சொன்னார். சரி, அப்படித்தான் போலிருக்கு என்று தோன்றுகிறது.
எழுத்து முதலில் மனசில் ஏற்பட்டுப் பிறகு தானே தாளுக்கு வருகிறது. உங்கள் மனத்தில் எழுத்து இருந்து கொண்டேதான் இருக்கும். கைதான் எழுத மறுக்கிறது.

சிஷ்யப் பிள்ளைகளைக் கொண்டு எழுதச் சொல்லுங்கள். முதலில் ஒரு மாதிரி இருக்கும். பிறகு அதுவே பழக்கமாக வந்துவிடும்.

நீங்கள் சும்மா இருந்தாலும், நாங்கள் விட மாட்டோம்!
           *              *                  *

மும்பையில் எனக்கொரு பேனா நண்பர் கிடைத்துள்ளார். ஜெயா வெங்கடேசன். பெயர் தெரியும். வயசு தெரியாது. என் வயதை ஒட்டியவர்.
தாத்தாவிடம் ஈடுபாடு ஏற்பட்டு யாரிடமோ கேட்டு எனக்குக் கடிதம் போட்டார். தாத்தா புத்தகங்களில் என்னிடம் உள்ளவற்றை அனுப்பினேன்.
அடிக்கடி கடிதம் எழுதுவார்.  டி.கே.சி.தான் எனக்கு ஆதர்ஸம் என்கிறார்.

அவரது மகள் மூலம் "இதய ஒலி" "முத்தொள்ளாயிரம்" இரண்டையும் பாரீஸ் நகரத்தில் உள்ள புகழ்வாய்ந்த நூலகத்தில் சேர்த்து விட்டார்.
பெரிய காரியம். பாராட்டும், நன்றியும் கூறி எழுதினேன். 'உங்களுக்கு தாத்தா என்றால் எனக்கும் தாத்தாதானே? இது நான் செய்ய வேண்டிய கடமை. எனக்கு நன்றி சொல்லக் கூடாது' என்கிறார்.

ஃப்ரெஞ்ச் மொழியில் நூலகத்தார் என்ன எழுதியுள்ளனர் என்பதை அங்கு தெரிந்தவர்களிடம் கேட்டுத் தமிழில் எனக்கு அனுப்ப வேண்டுகிறேன்.
இன்னொரு மகிழ்ச்சிகரமான சேதி. கோவையிலுள்ள சில நண்பர்கள் சேர்ந்து தாத்தாவின் "தமிழ்க் களஞ்சியம்" கட்டுரைகளை நூலாக வெளிக் கொணர உள்ளார்கள். இந்த நற்செயலுக்குத் தூண்டுகோலாக இருப்பவர் நம் நண்பர் ல.சண்முகசுந்தரம் அவர்கள்.
டி.கே.சி.க்குத் தொண்டு செய்ய எங்கிருந்தெல்லாமோ அன்பர் தோன்றி விடுகிறார்கள்.

ஒரு பக்கம் இப்படி. இன்னொரு பக்கத்தில் "தமிழிசை" பற்றிப் பேசுபவர்கள் டி.கே.சி.யைத் தவிர்த்து மற்ற எல்லாரையும் பட்டியல் போடுகிறார்கள்.
எழுதத்தான் முடியவில்லை. படிக்க முடியும் என்ற எண்ணத்தில் வரைந்து தள்ளிவிட்டேன்.

         அன்புடன்
         தீப. நடராஜன்.


கடிதச் சேகரம்: கழனியூரன்


No comments: