கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-2 பாய் விரிக்க...

‘பாய்’ என்ற இந்த வார்த்தைக்குப்பின்னால் எத்தனை விதமான தகவல்கள் இருக்கின்றன என்பதை மட்டும் இந்தக் கட்டுரையின் மூலம் பதிவு செய்கிறேன்.

வீட்டில் சாணம் மெழுகிய வெற்றுத் தரையில் படுத்து உறங்கிய ஆதிமனிதன், சற்று சுகமாகப் படுத்து உறங்க வேண்டி பாய்களைப் பின்ன ஆரம்பித்தான்

முதன்முதலில் தென்னை ஓலையில் இருந்துதான் பாய்களைத் தயாரித்தார்கள். முற்றாத இளம் தென்னை ஓலையை வெட்டி எடுத்து, நடுவில் உள்ள தண்டு போன்ற மட்டையை இரண்டாக வெட்டிப்பிளந்துவிட்டால் மட்டையுடன் கூடிய இரண்டு துண்டு ஓலைகள் கிடைக்கும்.

இரண்டு துண்டுகளில் மட்டைப்பகுதிகளும், வெளிப்புறமாக வரும்படி வைத்து ஓலைகளைப் பின்னினால் நமக்கு தென்னம் பாய் கிடைக்கும்.

இளம்பச்சை (தென்னை) ஓலைகளால் பின்னப்பட்ட இந்தத் தென்னம்பாய் படுப்பதற்கு சுகமாக இருக்கும். குளிர்ச்சியாகவும் இருக்கும்.

இதே போல இளம் பனை ஓலையை வெட்டி, அதையும் மட்டைப்பகுதியில் இரண்டாக வெட்டிப்பிளந்து (முழு ஓலையையும்) விசிறி மாதிரி விரித்து அதன் மேல் மண்ணை அல்லது மணலை அள்ளிப் போட்டு வைத்தால் படுப்பதற்குப் பனை ஓலையால் ஆன இரண்டு பாய்கள் கிடைத்துவிடும்.

ஆட்டுக்கிடையில் காவலுக்கு இருப்பவர்கள் இத்தகைய பனை ஓலையைப் பயன்படுத்துவார்கள். பனையின் குருத்து ஓலையை வெட்டி, அதைப் பக்குவமாக நீரில் நனைய வைத்து ஓலை இதழ்களை மட்டும் கிழித்தெடுத்து ஒருவிதப் பாய்களை முடைவார்கள். இந்தப் பனை ஓலைப் பாய்களைச் சுருட்டியும்  வைத்துக் கொள்ளலாம். குருத்து ஓலை இலக்குகளால்(இதழ்களால்) நெய்யப்படும் இந்தப் பனை ஓலைப் பாய்களும் படுப்பதற்கு சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.

கொஞ்சம் வசதி வாய்ப்புள்ளவர்கள் தாழை மடல்களால் பின்னப்பட்ட பாய்களில் படுப்பார்கள். இது மெத்தை போன்று படுப்பதற்கு மிகவும் சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். தாழை மடல்களை வெட்டித் தண்ணீரில் ஊறவைத்து, அதை இலக்கு(இதழ்)களாகப் பிரித்து அதிலிருந்து தாழம்பாய்களைப் பின்னுவார்கள்.

நாணல் புல் நீண்டு வளரும். அதை அறுத்து வந்து மிதமாகக் கையை வைத்து, அவைகளைப் பனை நாரால் கோத்து ஒருவிதப் பாயை உருவாக்குவார்கள். இதற்கு நாணல் பாய் என்று பெயர். இதே நாணலை வைத்து, மழைக்காலத்தில் நனையாமல் போட்டுக் கொள்ள ‘கொங்காணி’களையும்  இந்த நாணல் தட்டையில் இருந்து தயாரிக்கிறார்கள். நாணல் பாய் மெத்தைபோல் படுப்பதற்கு ‘மெத்,மெத்’ என்று சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.

தொழில்நுட்பம் வளர்ந்த பின்தான் கோரைப்பாய் நெய்தார்கள். ஆற்றோரத்தில் நீரோட்டம் உள்ள இடங்களில் கோரைப்புற்கள் வளர்கின்றன. இந்தக் கோரைகள் முளைத்ததில் இருந்து அறுவடை ஆகும் வரை நீர்ப்பிடிப்பான நிலத்தில் நின்று வளர்வதால், இதிலிருந்து செய்யப்படுகிற பாய்கள் படுப்பதற்கு, சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கின்றன.

இதுவரை, நாம் பார்த்த பாய்கள் எல்லாம், தென்னை, பனை, தாழை, நாணல், கோரைப்புல் போன்ற தாவரங்களால் தயாரிக்கப்பட்டவைதான்.

தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டதால் இந்தப் பாய்களில் படுத்து எழுந்தால் உடலின் வெப்பம் குறையும். உடல் வலியும் போகும். ஒரு விதத்தில் மறைமுகமான மருத்துவக்குணமாகும் இது.

இன்றைக்கு நமக்கு பன்னாட்டு நுகர் கலாச்சாரத்தால் கிடைக்கிற போம் மெத்தைகள் உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். உடம்பில் மேலும் அலுப்பை ஏற்படுத்தும்.

மேலே கண்ட பாய்கள் பச்சைத் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதோடு அவையாவும்  ஒருவிதை இலைத் தாவரங்கள் என்பதையும் நாம் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும். ஒற்றை விதை இலைத்தாவரங்கள் (புல் முதல் பனை வரை) யாவும் குளிர்ச்சியைத் தருவன என்பது அறிவியல் பூர்வமான உண்மையாகும்.

இன்றைக்குப் பாயின் பயன்பாடு நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக் கொண்டே வருகிறது. பாய் நெசவு என்ற தொழிலும் இன்று இயந்திரமாகிவிட்டதால் வீட்டில் தறிப்போட்டு பாய்களை நெய்து வந்த ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் இன்று வேலை இன்றி தெருவில் நிற்கிறார்கள்.

தென்மாவட்டங்களில் வாழும் இஸ்லாமியர்களே பெரும்பாலும் பாய் நெசவுத்தொழிலைச் செய்து வந்தார்கள். அவர்கள் வாழும் பகுதிகளில் ஆற்றோரம் உள்ள கோரைகளை அறுத்து வந்து முதலில் இரண்டாகக் கீறுவார்கள். இதற்கு சூரிக்கத்தி என்ற இருபுறமும் கூரான கத்தி பயன்படுத்தப்படும். இப்படிக் கீறிய கோரைகளை ‘முடி’களாக(கட்டுகளாக) கட்டி வெயிலில் காய வைப்பார்கள். பிறகு அக்கட்டுகளை ஆற்றுநீரில் அல்லது குளத்து நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைப்பார்கள். இப்போது இரண்டாகக் கீறப்பட்ட கோரைகள் சற்று உப்பி இருக்கும். எனவே அதை மீண்டும் இரண்டாக சூரிக்கத்தி வைத்துக் கீறுவார்கள். பிறகு அக்கோரைகளை முடிகளாக(கட்டுகளாக) முடிந்து வெயிலில் காய வைப்பார்கள். காய்ந்த கோரைகளை மூன்றடி உயரம், நான்கடி உயரம் என்று உயர அளவுப்படி பிரித்துக் கொள்வார்கள். மொத்தக் கோரையில் பத்தில் ஒரு பங்குக்கோரையைப் பிரித்து எடுத்து அதில் பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று தனித்தனியாகச் சாயம் ஏற்றிக்கொள்வார்கள்.

ஊரைச்சுற்றி உள்ள கற்றாழை வேலிகளில் உள்ள கற்றாழைக் குருத்துகளை ஒடித்து வந்து, அதை ஒரு பலகை மற்றும் 'தரஸ்கு' (இருபுறமும் கைப்பிடியுள்ள கூரான நீள்வசமான அரிவாள்) என்ற கருவியில் இழைத்து எடுத்து அதில் இருந்து ‘மறல்’ எடுப்பார்கள். இது கிழவியின் நரைத்த தலை முடி மாதிரி நீளமாக இருக்கும்.

இந்த மறலைப்பிரித்த பின் அதையே கொட்டையாக (முடியாக) கட்டி அதிலிருந்து ‘கதிர்’ என்ற கருவி மூலம் நூல் நூற்பார்கள். இப்போது பாய் நெய்யத் தேவையான மூலப்பொருள்களான கோரையும், நூலும் தயார். இந்த இரண்டு மூலப்பொருள்களையும் நெசவாளர்கள், இயற்கைத் தாவரங்களில் இருந்து (கோரைப்புல், கற்றாழை) எளிய உழைப்பு மூலம் பெற்றுக் கொண்டார்கள்.

இனி, பாய் நெசவு செய்ய, முக்காலி மிதிபட்டை, அன்னகுழல், குச்சாலி, இழுத்துக்கட்ட கயிறுகள், இருந்து நெசவு செய்யச் சிறிய நீள்வச பெஞ்சுகள் முதலிய எளிய கருவிகள்தான் தேவை.

இப்படித் தென் மாவட்டங்களில் இயற்கையாய்க் கிடைக்கும் தாவர மூலப்பொருள்களில் இருந்து கோரைப்பாய்களும், ஓலைப்பாய்களும், தாழம்பாய்களும் தயாரிக்கப்பட்டன. இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்த கீழ்த்தட்டு மக்களே பாய் நெசவு என்ற தொழிலைச் செய்து வந்தார்கள்.

பாய்களை இன்று பிளாஸ்டிக் கோரைகளால் இயந்திரங்களைக் கொண்டு தயாரிக்கிறார்கள். இத்தகைய செயற்கை இழைகளால் ஆன பாய்கள் நம் உடல்நலத்திற்கும், தட்பவெப்பத்திற்கும் ஏற்றதல்ல.

‘பாய்’ என்ற உடன் பலரின் நினைவிற்கு பத்தமடைப் பாய்தான் நினைவுக்கு வருகிறது. பத்தமடைப்பாய்கள் மெல்லிய கோரைகளைக் கொண்டும், பருத்தி நூலைக் கொண்டும், கடினமான உழைப்பைக் கொண்டும் முக நுட்பமான வேலைப்பாடுகளுடன், கலையழகுடன் நெய்யப்படுகிறது. இத்தகைய பத்தமடைப் பாய்கள் இன்று ஆடம்பரப் பொருள்களாகவும் கலைப்படைப்பாகவும் மாறி விட்டது. இப்பாய்களையும் பத்தமடை என்ற ஊரிலும், அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் இஸ்லாமியச் சமுதாயத்தவர்களால் நெய்யப்படுகிறது.

ஓலைகளால் பாய்கள் பின்னப்படும். கோரைகளால் பாய்கள் நெய்யப்படும். (தமிழனின் கலைச் சொல்லாட்சி எவ்வளவு அருமையாக உள்ளது பார்த்தீர்களா...)

பாய் ஓய்வின் குறியீடு, இல்லற இன்பத்தின் அடையாளம். ‘பாய் விரிக்க புன்னை மரமிருக்க’ என்ற பாடல் வரிகளில் காதல் உணர்வுடன் ‘பாய்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தென் மாவட்ட முஸ்லிம்கள்தான் மகளைக் கட்டிக் கொடுக்கும்போது பலவித சீர் செனத்திகளைக் கொடுக்கிறார்கள். அத்தோடு மறக்காமல் ஒரு பாயையும், தலையணையையும் கொடுக்கிறார்கள். மகளை மருமகனுக்குக் கட்டிக் கொடுக்கிறபோது கூடவே பாயையும் கொடுத்து அனுப்புவதில் வாழ்வியல் சார்ந்த உள்அர்த்தம் வாசகர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

தமிழ்க்கலாச்சாரத்தோடும், பண்பாட்டோடும், இயற்கையோடும் இயைந்த ‘பாய்’ என்ற பயன்பாட்டு அம்சம் நம்மை விட்டு விடைபெற்றுச் சென்றுகொண்டிருக்கிறது

No comments: