கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-15 கிராமத்துக் காதல்

ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணும், ஒருஇளந்தாரியும் (இளைஞனும்) ஒருவரை ஒருவர் பாசத்துடன் பார்த்துப் பழகுகின்றனர். அவளுக்கு வீடு தெற்குத் தெருவில் இருக்கிறது. அவனுக்கு வீடு வடக்குத் தெருவில் இருக்கிறது.

அவர்களது புஞ்சைக் காடுகளும் அடுத்தடுத்து இருக்கிறது. எனவே, புஞ்சைக் காட்டுக்குப் போகிற வழியிலும், புஞ்சைக் காட்டின் வேலி ஓரங்களிலும் அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள்.

ஒரே ஊர், ஒரே ஜாதி, சமதையான அந்தஸ்து, ஒத்த வயது, சரியான ஜோடிப் பொருத்தம். எனவே இருவரும் கண்களால் பேசிக்கொள்கிறார்கள்.

சின்ன வயதில் மாமரத்தடியில் சேர்ந்து விளையாடிய பிள்ளைக் காதலர்கள்தான் அவர்கள். இப்போது வாலிப வயசு வந்தபின் அந்த இளந்தாரி மீசையை முறுக்கிக் கொண்டு அலைகிறான்.

அவளும் வயசுக்கு வந்தபின் ஆளே மாறிவிட்டாள். வசந்த காலப் பூந்தோட்டம் போல் பூத்துக் குலுங்குகின்றாள்.
அவன் அவளின் அழகை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். அவளும் அவனை விழுங்கி விடுவதைப்போல் பார்க்கிறாள். கண்ணும் கண்ணும் கலந்திடக் காதல் உருவாகிறது.

கண்களால் முதலில் பேசியவர்கள் கொஞ்ச நாள் கழித்து மௌனத்தை உடைத்து, உதடுகளை அசைத்துப் பேச முயல்கின்றார்கள். வார்த்தை வர மாட்டேன் என்கிறது அவளுக்கு. இளந்தாரி அவளின் மனதில் இடம் பிடிக்கும் எண்ணத்தில் ஒரு பாட்டை எடுத்து விடுகிறான்:

 "அள்ளட்டா முள்ளட்டா
 அடிமடியில் கட்டட்டா. .
 குச்சில் கட்டிக் காக்கட்டா. . .
 குணமயிலே உன் கால் தடத்தை. . ."

காதலி இந்தப் பாட்டைக் கேட்டு உருகிவிட்டாள். காதலன், காதலியின் கால்த் தடத்திற்கு குச்சில் (ஓலை வீடு) கட்டட்டுமா? அல்லது, உன் கால்த்தடம்பட்ட மண்ணை அப்படியே அதன் வடிவம் கலையாமல் அள்ளி அடிமடியில் கட்டட்டுமா. . .?" என்று கேட்கிறான்.

காதலன் இப்படிப் பாடினால் எந்தப் பெண்தான் தன் மனதைப் பறிகொடுக்க மாட்டாள்? காதலியின் நெஞ்சில் காதல் உணர்ச்சி தென்றலாய் வீசுகிறது. இப்போது அவளுக்கும் தைரியம் வந்துவிடுகிறது. காதலன் பாட்டிற்கு அவளும் பதிலாக ஒரு எசப்பாட்டை (எதிர்ப்பாட்டை) இசையுடன் எடுத்து விடுகிறாள்:
 "சந்தனக் கும்பாவிலே,
 சாதம் போட்டுப் பிசைகையிலே. . .
 உங்களை நினைத்தால்
 உண்ணுவது சாதமில்லை. . . !"
அவனை நினைத்துக்கொண்டு அவள் சாப்பிடுகிறாள். எனவே சாதம் தேவாமிர்தமாக இனிக்கிறது. மனதிற்குள் காதல் உணர்ச்சி வந்து விட்டால் அப்படித்தான்!

காதலி பாடியதைக் கேட்டதும் காதலனுக்குப் புதிய தெம்பு பிறக்கிறது. "இனித் தைரியமாக அடுத்த காதல் படிக்கட்டில் கால் வைக்கலாம்" என்று எண்ணுகிறான். எனவே அடுத்த பாட்டு ஒன்றை அவுத்துவிடுகிறான்:

"பத்து நாளா உறங்கவில்லை-பெண்ணே
பாய் விரித்தால் தூக்கமில்லை!
தூக்கம் வந்து தூங்கினாலும்-கண்ணே
ஏக்கம் வந்து எழுப்புதடி என்னை!"

காதலன் பாடியதைக் கேட்டதும் காதலி காதலன்மேல் மிகவும் பரிவு கொள்கிறாள். அடிக்கடி காதலனைச் சந்திக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.
அவனிடம் பேசி மகிழ வேண்டும் என்று விரும்புகிறாள். ஆனால் தனிமை கிடைக்கவில்லை. ஊராரின் கண்களை மறைத்து அவர்களால் பகல் பொழுதில் பேச முடியவில்லை. எனவே இரவுப் பொழுதில் ஏதாவது ஒரு குறியிடத்தில் இருவரும் சந்தித்துப் பேசி மகிழலாம் என்று நினைக்கிறார்கள்.

ஆசை அவளின் பிதடியைப் (கழுத்தைப்) பிடித்துத் தள்ளுகிறது. ஆனால் நாணமும் அச்சமும் அவள் கால்களைப் பூசணிக் கொடி கொண்டு கட்டிப் போடுகிறது. தனிமையில் இருட்டில் குறியிடத்தில் காதலனை நம்பிச் சென்றால் என்ன ஆகுமோ. .? ஏதாகுமோ. . ? என்று அச்சம் கொள்கிறாள். எனவே அவளை அறியாமலேயே அவளுக்குள் ஒரு பாடல் உருவாகி உருண்டு, உதட்டு வழியே வெளியேறிக் காற்றில் கலக்கிறது:
 "மண்குடம் உடைந்தால்
 மறுகுடம் வாங்கிடலாம்!
 பெண்குடம் உடைந்தால்
 பொருந்துமோ மீண்டும்?"

காதலன் அவளுக்குத் தைரியம் சொல்லித் தேற்றுகிறான். "குறியிடத்திற்கு வா. . . உன்னைத் தொடக்கூட மாட்டேன்" என்று கவித்துவமாக உறுதி கூறுகின்றான்:

 "கொண்டை கலைந்து விடாமல்
 கொண்டைப் பூ வாடிடாமல்
 கொஞ்சிப் பேசிக் கழித்திடுவோம்
 குறியிடம் வந்திடடி குணமயிலே!"

காதலன் கூறிய உறுதிமொழியைக் காதலி ஏற்கத் தயாராக இல்லை. தனிமையில் காதலனைச் சந்திக்கத் தயங்குகிறாள். தன் 'நிறை' அழிந்து விடுமோ. . என்று கவலை கொள்கிறாள். அவளின் அச்சம் அவன் பாட்டிற்கு எசப்பாட்டாய் அவள் நெஞ்சில் இருந்து புறப்பட்டு வந்து அவன் காதை நிறைக்கிறது:

 "கொண்டை கலையாட்டாலும்
 கொண்டைப் பூ வாடாட்டாலும்
 தண்ணிக் குடம் ததும்பிட்டா
 தலைகுனிவு ஆயிடுமே. . !"

காதலியின் பயம் காதலனுக்குப் புரிகிறது. என்றாலும் காதலன் அவளை விடுவதாகத் தெரியவில்லை, "நீ, நான் கூறும் குறியிடத்திற்கு வரவில்லை என்றால், நான், நீ படுத்து உறங்கும் உன் வீட்டிற்கே வந்துவிடுவேன்!" என்று மிரட்டுகிற தொனியில் பாடுகின்றான்:

 "ஊரார் உறங்கையிலே
 உற்றாரும் தூங்கையிலே
 நல்ல பாம்பு 'ரூபம்' கொண்டு
 நான் வருவேன் சாமத்திலே!"

காதலியும் லேசுப்பட்ட ஆளாகத் தெரியவில்லை. காதலனின் விரட்டும் பாட்டிற்கு அவள் வேறு மாதிரியான பாஷையில் அவனுக்குப் பாட்டாலேயே பதில் சொல்கிறாள்:
 "நல்ல பாம்பு வேடம் கொண்டு
 நடுச்சாமம் வந்தாயானால்-நான்
 ஊர்க்குருவி வேடம் கொண்டு
 உயரப் பறந்திடுவேன்!"

ஆண் விடுவானா? எப்படியாவது பெண்ணைக் கைப்பற்றிவிடவேண்டும் என்றுதானே அலைவான்! எனவே விரண்டோடும் பெண்ணைப் பாட்டாலேயே விரட்டிப் பிடிக்கப் பார்க்கிறான். காதலன் மீண்டும் பாடுகின்றான்:
 "ஊர்க்குருவி வேடம் கொண்டு
 உயரப் பறந்தாயானால்-நான்
 செம்பருந்து ரூபம் கொண்டு-உன்னைச்
 செந்தூக்காய்த் தூக்கிடுவேன்!"

அவள், அவனுக்கு மசிகிறவளாகத் தெரியவில்லை. தன் நிறை அழிந்துவிடாமல் காப்பதிலேயே காதலி கண்ணாய் இருக்கிறாள்:
 "செம்பருந்து வேடம் கொண்டு-நீ
 செந்தூக்காய்த் தூக்கவந்தால்-நான்
 பூமியைக் கீறியல்லோ
 புல்லாய் முளைத்திடுவேன்!"

என்று பாடுகிறாள். இப்போது பாடல் எதார்த்தத்தை விட்டு நழுவி, மிகை எதார்த்தத்தை நோக்கி நகர்கிறது.
காதலன் என்ன இளைத்தவனா? அவன், "உன்னை அடைந்தே தீருவேன்!" என்கிறான். அவள் பாட்டிற்குப் பதில் பாட்டுப் பாடுகிறான்:
 "பூமியைக் கீறி நீயும்
 புல்லாய் முளைத்தாயானால்-நான்
 காராம் பசு ரூபம் கொண்டு
 கடித்திடுவேன் அந்தப் புல்லை!"

இனியும் அவனிடம் இருந்து தப்பிக்க முடியாது என்று நினைத்த காதலி, காதலன் கூறிய குறியிடத்திற்கு இரவு நேரத்தில் செல்கிறாள்.
இரவும், தனிமையும், காதல் தீயை நெய் ஊற்றி வளர்க்கிறது. காதலன் கூறிய உறுதிமொழிகள் காற்றில் பறந்து விடுகிறது. எல்லை கடந்து நீளும் காதலனின் மூச்சுக் காற்றைத் தடுத்து நிறுத்தும் சக்தியை காதலியும் இழந்துவிடுகிறாள். வெறும் காதல், களவுக் காதலாகிறது.
மாமரத்தடியில் வைத்திருந்த வெற்றுக் குடம் காற்றில் அசைந்து பக்கத்தில் இருந்த பள்ளத்தில் உருள்கிறது. குடம் உருள்கின்ற ஓசையைக் கேட்டுத்தான் அவள் தன் நிலைக்குத் திரும்புகிறாள்.

வீட்டில் தாயிடம் "ஆற்றில் உள்ள ஊற்றில் தண்ணீர் எடுத்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தாள். வந்து வெகு நேரமானதால் வேகமாக ஆடை திருத்தி, காதலனைப் பிரிய மனமின்றிப் பிரிந்து விடைபெற்று ஆற்றை நோக்கி நடக்கிறாள்.
ஊற்றுத் தண்ணீர் ததும்பும் நிறை குடத்துடன் தாமதமாக வீடு திரும்பும் மகளைப் பார்த்து, "ஏன் இத்தனை தாமதம்?" என்று கோபத்துடன் கேட்கிறாள் அவள் தாய்.

மகள், தாமதமாக வந்ததன் காரணத்தைப் பாட்டாகவே பாடுகிறாள்:
 "பாசி படரும் தண்ணி
 பலபேரும் கோதும் தண்ணி
 தெளிஞ்ச தண்ணி நானெடுக்க
 நேரமாச்சி தாயாரே!"

தாயும் மகளின் பருவத்தைக் கடந்து வந்தவள்தானே! எனவே மகளின் வார்த்தை குழறுவதையும், மேனி வேர்த்துக் கொட்டுவதையும் கண்டு சந்தேகம் கொள்கிறாள். தன் மகள் காதல் வயப்பட்டிருப்பாளோ? என்று நினைக்கிறாள்.

எனவே தாயும் தன் பங்கிற்கு ஒரு பாட்டைப் பாடுகிறாள்:
 "மார்பு பதைப்ப தென்ன. . ?
 மலர்க் கண்கள் சிவந்த தென்ன?
 சோர்வு தெரிவ தென்ன?
 சொல்லிடம்மா என் மகளே!"

தாயின் வாயிலிருந்து இப்படி ஒரு பாட்டு வரும் என்று மகள் எதிர் பார்க்கவே இல்லை! என்றாலும் எதைஎதையோ சொல்லிச் சமாளித்துவிட்டு வீட்டிற்குள் செல்கிறாள்.

மகளின் மனதில் காதல் பேய் குடிகொண்டுவிட்டது என்பதைப் புரிந்து கொண்ட தாய், மகளைப் பார்த்து, "இனி நீ, வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்!" என்று சொல்லிவிடுகிறாள்.

பாவம் காதல் கொண்ட கன்னிப் பெண்! வீட்டிற்குள் பாயில் படுத்தபடியே கண்ணீர் வடித்தபடி மனதிற்குள் பாடுகிறாள்:
 "படுத்தால் உறக்கமில்லை
 பாய் விரித்தால் தூக்கமில்லை
 உறக்கச் சடவினிலும்
 உன் உருவம் தோணுதையா!"

காதலனை இனிக் காண முடியாது என்ற நிலை வந்தபிறகுதான் காதல் மேலும் கெட்டிப்படுகிறது! காதலனை நேரில் காண முடியாத தன் நிலையை நினைத்து மனதிற்குள் குமுறுகிறாள். அவளின் ஆதங்கம் இப்படி வெளிப்படுகிறது:

 "வட்ட முகமும் வடிவழகும்
 வாகான புன்சிரிப்பும்
 கட்டுடலும் கிளிப் பேச்சும்-என்னை
 கனவிலும் வாட்டுதையா. .!"
காதலனும், தன் பங்கிற்குக் காதலியை நினைத்துக் கலங்குகிறான். பிரிவு என்னும் நெருப்பு அவர்களைச் சுட்டுப் பொசுக்குகிறது:

 "அந்தி வேளை ஆனாக்க-உன்
 ஆசை முகம் தோணுதடி!
 உந்தன் முகம் காணாமல்
 ஊனுருகிப் போகுதடி!"

 என்று பாடுகின்றான். இருவர் காதலும் கடைசியில் கல்யாணத்தில் முடிகிறது. காதல் ஜெயிக்கிறது. களவுக்காதல், கற்பொழுக்கமாய்க் கனிகிறது. கிராமத்துக் காதலின் சுவையே தனிதான்!

No comments: