கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Tuesday, July 23, 2013

மறைவாய் சொன்ன கதைகள் 2

பேராசை தந்த பெருநஷ்டம்

நாட்டார் பாலியல் கதைகளை அச்சில் பதிவு செய்வதில் பத்திரிகை உலகிலும், பதிப்புலகிலும் மாபெரும் தயக்கம் இருந்தது.

கி.ரா. அவர்கள் முதல் அடி எடுத்து வைத்ததால் தாய் வார இதழில் நாட்டார் பாலியல் கதைகள் தொடராக வெளிவந்தது. உயிர்மை பதிப்பகம் ‘மறைவாய் சொன்ன கதைகள்‘ என்ற தலைப்பில் அக்கதைகளை நூலாக வெளியிட்ட பிறகு அத்தொகுப்பு குறித்து, இன்றைய தளங்களில் பல்வேறு மதிப்பீடுகள் பதிவாகியுள்ளன. அவையாவும் ஆரோக்கியமானதாகவும் சரியாக உள்வாங்கப் பட்டதாகவும் இருக்கின்றன.



 நாட்டார் பாலியல்கதைகள் பலவற்றை எழுத்தாளர்கள் பலரும் ஏற்கனவே தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள். ஆனால் அக்கதைகளை எழுத்தில் (அச்சில்) பதிவு செய்வதில்தான் அவர்களுக்குச் சிக்கலும் தயக்கமும் இருந்திருக்கிறது.



எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்கள் உயிரோடு இருந்தபோது, அவரின் நினைவில் இருந்த சில நாட்டார் பாலியல் கதைகளை எனக்குச் சொன்னார்கள் (என் வீட்டில் வந்து தங்கியிருந்தபோது). நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அத்தகைய கதைகளில் சிலவற்றை எனக்கு எழுதியும் அனுப்பினார்கள். அக்கதைகளில் ஒன்றை இந்த வாரம் வாசகர்களுக்குச் சுவைக்கத் தருகிறேன்.



நாட்டுப் புறக்கதைகளில் நீதி சொல்லும் கதைகளை மட்டும் தனியே தொகுக்கலாம். சில பாலியல் கதைகளும் நீதிக் கதைகளாக உள்ளன. அத்தகைய கதைகளுள் ஒன்றுதான் ‘பேராசை தந்த பெருநஷ்டம்‘ என்ற கதை.



இக்கதையில் வரும் கணவன் தன் ஆண்குறியை அறுத்துவிடுவதாக ஒருசெய்தி வருகிறது. ஆணாய் இருந்து, பெண்ணாய் மாறும் அலிகள் செய்து கொள்ளும் ‘குறி‘ நீக்க அறுவைச் சிகிச்சையை அத்தகவல் நினைவூட்டுகிறது. அடுத்து இக்கதையில் வரும் மாய எதார்த்த கற்பனைக்காக, ‘கடவுள்தன்மை‘ கட்டமைக்கப்பட்டுள்ளது.



பாலியல் கதைகளும் நீதி சொல்லும் என்பதற்கு இக்கதை சரியான சான்றாதாரமாகத் திகழ்கிறது. பாலியல் கதைதான் என்றாலும் இக்கதையில் அறக்கழிவான பதிவுகள் ஏதும் இல்லை. பாலியல் சார்ந்த செய்திகளும், காமம் கடந்து மிக நளினமாக, சுவையாகச் சொல்லப்பட்டுள்ளன.



இக்கதையை ‘வ.க.‘ அவர்கள் எழுதியனுப்பிய அதே வடிவத்தில் வாசகர்களுக்குத் தருகிறேன். இனிக் கதைக்குள் செல்லுங்கள்.




ஒருவன். ரொம்ப இரக்க சுபாவம் உள்ளவன்.

அவன் மனைவி பிள்ளை பெறும்போது பட்ட கஷ்டத்தைக் கண்டு ரொம்பவும் தவித்துப்போனான். மனவேதனைபட்டான். ‘சே, என்னலேதானே அவளுக்கு இந்தக் கஷ்டம். நான் அவ கூடப் படுக்காமல் இருந்தால், அவள் இப்படி செத்துப் பிழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிராதே!‘ என்று யோசித்தான்.




 யோசிக்க யோசிக்க, ‘எனக்கு இது இருக்கப்போய்த்தானே அவ கூடப் படுத்து, அவளைப் பண்ணணும்னு ஆசையும் துடிப்பும் வருது! அதனாலேதான் பிள்ளை உண்டாவது, பிள்ளை பொறக்கிறது முதலிய கஷ்டங்கள் எல்லாம் வருது‘ என்று அவனுக்குத் தோணலாயிற்று.




 அவனுடைய ‘பிரசவ வைராக்கியம்‘ வெறும் நினைப்பாக இருந்து விடவில்லை.

அவன் ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு மறைவிடத்திற்குப் போனான். கடவுளைப் பிரார்த்தித்தபடி தன்னுடைய ‘அதை‘ நறுக்கி எறிந்து, மண்ணில் புதைத்துவிட்டான். தக்க மருந்துகள் போட்டு, காயத்தை ஆற்றி, குணப்படுத்திக் கொண்டான். இதை எல்லாம் ரொம்ப ரகசியமாகச் செய்து முடித்தான். ஒரு ஈ, காக்கைக்குத் தெரியாது. அவ்வளவு சாமர்த்தியமாகச் செய்து தீர்த்தான். இதில் அவனுக்கு மிகுந்த திருப்தி.

பிள்ளை பெற்றவள் உரிய முறைப்படி உடம்பைத் தேற்றிக் கொண்டாள். நல்லபடியா எழுந்து நடமாடினாள். வேலைகளைச் செய்தாள். சந்தோஷமாக இருந்தாள்.




ஒருநாள் அவளுக்கு அந்த ஆசை ஏற்பட்டது. புருஷன்காரனோடு சிரித்துச் சிரித்துப் பேசினாள். இடித்து உரசினாள். சீவிச் சிங்காரித்து, தலைமுடித்து பூ வைத்துக் கொண்டு, தன் விருப்பத்தை பல வகையிலும் அவனுக்கு வெளிப்படுத்தினாள்.




ஆனால், அவனோ முன்னே மாதிரி ஈடு கொடுக்கலே. சுரத்தே இல்லாமல், ஒதுங்கி ஒதுங்கிப் போனான். ‘இருக்கட்டும், இருக்கட்டும், ராத்திரி என்கிட்டத்தானே வரணும்‘ என்று அவள் மனசில் எண்ணிக் கொண்டாள்.




ராத்திரி வந்தது. அவன் படுக்கையைப் போட்டு நீட்டி நிமிர்ந்தான். அவள் வழக்கமான சேட்டைகள் எல்லாம் பண்ணினாள். அவன் கட்டையாய்க் கிடந்தான். ‘சும்மா இருடீ. நமக்கு அதெல்லாம் எதுக்கு!‘ என்று முணுமுணுத்தான்.


‘அட என் ரிஷி மவனே’ என்று அவள் பழிப்புக் காட்டி, அவன் வேட்டியை விசுக்கென்று இழுத்து அவிழ்த்தாள். ‘ஐயோ, இது என்ன’ என்று அலறினாள். அங்கே அவன் ‘இது’ இல்லாமல் போனதுதான் காரணம்.


மேலே, அவன் நடந்ததைச் சொன்னான். அவளுக்கு அழுகை வந்தது. ஆத்திரம் வந்தது. பெருமையும் சந்தோஷமும்கூட ஏற்பட்டது. ‘இவருக்கு நம்மமேலே எவ்வளவு பிரியம் பார்த்தையா! எவ்வளவு அன்பும் ஆசையும் இருந்தா இப்படிச் செய்திருக்கமுடியும்’ என்று உருகிப்போனாள்.




பிறகு ஆசையோடு அவனைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு, ‘இதெல்லாம் உலகத்திலே ஏற்பட்டதுதானே! பொம்பிளையா இருந்தா புள்ளை உண்டாகிறது, கஷ்டப்படுறது, பெத்துப் பிழைக்கிறது எல்லாம்தான். இதெல்லாம் கடவுள் வகுத்த அமைப்பு. இதுக்குப் போயி நீங்க இப்படிப் பண்ணிக்கிடலாமா?’ என்றாள்.


‘சரி. நீங்க நான் சொல்றபடி கேக்கணும். நீங்க சுயநலத்தினாலே இப்படிச் செய்யலே. அதுனாலே கடவுள் மனசு இறங்குவாரு. நேரே கோயிலுக்குப் போயி தவம் இருங்க. கடவுள் வந்து என்ன வேணும்பாரு. நீங்க விசயத்தைச் சொல்லுங்க. எல்லாம் நல்லபடியா முடியும்’ என்று சொல்லி, பெண்டாட்டிக்காரி புருஷனை அனுப்பி வைத்தாள்.


அவனும் கோயிலுக்குப் போய், உண்ணாமல் தின்னாமல், தண்ணி கூடக் குடிக்காமல், கடுமையாகத் தவசு இருந்தான்.




கடவுள் வந்தார். ‘பக்தா, என்ன வரம் வேணும், கேள்’ னாரு.




அவன் விசயத்தைச் சொன்னான். தன் பெண்டாட்டி அனுப்பி வைத்தாள் என்பதையும் சொன்னான்.


‘உன் தூய அன்பை மெச்சினேன்’ என்று சொன்ன கடவுள் எதிரே பார்த்தார். காராம்பசு ஒன்று புல்மேய்ந்து கொண்டு நின்னுது. ‘சரி. அந்தப் பசுவின் மடு ஒன்றை நறுக்கி உனக்குப் பொருத்திக்கோ. அது ராத்திரி நேரங்களில் மனைவியைத் திருப்திப்படுத்தும் சாதனமாக விளங்கும். பகலில் எவ்வளவு பால் வேண்டுமானாலும் தரும்’ என்று சொல்லி விட்டு மறைந்து போனார்.


அவனும் அப்படியே செய்தான்.




வீட்டுக்கு வந்தான். வந்ததும் வராததுமாகவே, பெண்டாட்டி, ‘என்ன, போன விசயம் என்னாச்சு?’ என்று பறந்தாள்.


‘எல்லாம் நல்ல சமாச்சாரம்தான். உள்ளே வா’ என்று அவளை வீட்டுக்குள் கூட்டிப்போய் விவரத்தைச் சொல்லி அதையும் காட்டினான்.


அவள் கடவுளைக் கும்பிட்டு, பால் பீச்சினாள். ஒரு செம்பு நிறையக் கறந்தாள். இரண்டுபேரும் குடித்தார்கள். ரொம்ப ருசியாக இருந்தது.




அவள் ராத்திரி ரொம்ப நேரம் ஆகட்டும் என்று கூடக் காத்திருக்கவில்லை. காத்திருக்கமுடியலே அவளால். கருக்கல் நேரத்திலேயே அவனைக் கட்டிப் பிடித்துப் படுத்தாள். திருப்தியாக இருந்தது அவளுக்கு.




ஆகவே, அவர்களுக்குக் கவலையே இல்லை என்று ஆகிவிட்டது. பாலுக்குப் பாலும்ஆச்சு; சுகத்துக்கு சுகமும் ஆச்சு! ‘அதை’ப் பக்தியோடு, கடவுள் படத்து பக்கத்திலே வைத்து, தினமும் பூஜை செய்து வந்தாள்.




இப்படி நடந்து வருகிற நாளிலே ஒருநாள், பக்கத்து வீட்டுக்காரி, ‘ஏளா, கொஞ்சம் பாலு இருந்தாக் கொடேன்’ என்று கேட்டபடி வந்து சேர்ந்தாள்.




இவளும் தாராளமாகக் கொடுத்தாள்.




அவள் போய்விட்டு, பிறகு வந்து, ‘இது ஏது இந்தப் பாலு? எவ்வளவு ருசியா இருக்குங்கே! இவ்வளவு ருசியும் மணமும் உள்ள பாலை இதுவரை நான் குடிச்சதே இல்லை. எங்கே வாங்குறே பாலு?’ என்று அக்கறையாக விசாரித்தாள்.




இவளுக்குப் பெருமை தாங்கலே. தன் புருசனைப் பத்தியும், தன் பேரிலே அன்பு கொண்டு அவன் செய்த காரியத்தைப் பத்தியும், அப்புறம் கடவுளிடம் போய் வரம் வாங்கி வந்த விவரத்தையும் நீட்டி நீட்டிப் பேசினாள்.


‘ஏளா, இது என்ன அதிசயமா இருக்கு? இதெல்லாம் நெசமாத்தான் நடந்ததா?’ என்றாள் பக்கத்து வீட்டுக்காரி.


‘கண்ணாணை! பின்னே நான் பொய்யா சொல்லுதேன்?’ என்று சினந்து, இவள் அந்த அதிசய விஷயத்தையும் எடுத்துக் காட்டினாள்.


அடுத்த வீட்டுக்காரிக்கு பொறாமை பத்திக்கிட்டு வந்தது. மேலுக்கு ‘எல்லாம் ஆண்டவரோட கிருமை’ என்று சொல்லி வைத்தாள்.




வீடு திரும்பியதும் தன் புருசனை பிடிபிடி என்று பிடித்தாள் அவள். நீரும் சரியான ஆம்பிளையா? உமக்கு என்மேலேஆசை உண்டுமா? அன்பு உண்டுமா? பிரியம் உண்டுமா? - இப்படி அடுக்கி, அடுத்த வீட்டுப் புருசன் தன் பெண்டாட்டிக்குச் செய்த நன்மையைச் சொன்னாள். இப்படி தினம் காலையிலும் மாலையிலும் ‘கொடை கொடுத்து’ அவள் தன் புருஷனை சரிக்கட்டினாள். தன் கண் முன்னாலேயே அவன் ‘தம்பி’யை (ஆண்குறியை) வெட்டி எறியும்படி செய்தாள். தகுந்த பச்சிலைகள் கொண்டு பண்டுவம் பார்த்தாள். சரியானதும், அவனைக் கடவுளிடம் வரம்பெற அனுப்பி வைத்தாள்.




அவன் முன்னாலும் கடவுள் தரிசனம் கொடுத்தார். ‘என்ன வேணும்?’ என்று கேட்டார். அவன் வேண்டியதைச் சொன்னான்.




கடவுள் குறும்புத்தனமாகப் புன்னகை பூத்து எதிரே பார்த்தார்.




அப்பதான் ஒரு கழுதை, பெட்டைக் கழுதையை நினைத்து நீட்டிக்கிட்டு, யேவ் யேவ் என்று கத்தி, காமத்தைத் தணித்துக் கொண்டிருந்தது. மெதுமெதுவாக ‘அது’ சுருங்கிக்கிட்டிருந்தது.




கடவுள், கழுதையோட ‘சாமான்’ அந்த மனுசனுக்கு வந்து பொருந்தும்படி அருள்புரிந்துவிட்டு, மறைந்துபோனார்.




உடனேயே அவனுக்கு பெண்டாட்டி நினைப்பு எடுத்துவிட்டது. வெறிவேகத்திலே வீடு வந்து சேர்ந்தான்.




அவன் பெண்டாட்டிக்காரி ரொம்ப ஆவலாக புருஷன் வரவை எதிர்பார்த்து, வாசலில் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும், வாயெல்லாம் பல்லாகி, ‘என்னா, போன காரியம் என்னாச்சு’ என்று கேட்டாள்.




அவன்தான் அவளையே எண்ணிக்கிட்டு, அதே நினைப்பாக வாறானே! அவளைக் கண்டதும் சும்மா விடுவானா? வேகமாக அவளை இழுத்துக்கிட்டு வீட்டுக்குள்ளே போனான். அவசரம் அவசரமாக அவளை அனுபவிக்க ஆரம்பிச்சான். கழுதைக் காமத்தோடு அவளை அனுபவிக்க அவளுக்கு ‘இது’ கிழிஞ்சே போச்சு. அவ செத்தே போனாள்.




அதுதான் பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க - பேராசைப் படக்கூடாது; பேராசைப்பட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும்; பொறாமை குடியையே கெடுத்துப் போடுமின்னு. பெரியவங்க சும்மாவா சொன்னாங்க? எல்லாம் அனுபவ ஞானத்தின் மீது பிறந்த பேச்சுக்கள்தான்.

No comments: