கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-9 வாட வெத்திலை; வசங்குன வெத்திலை

வெற்றிலை போடும் பழக்கம் இன்னும் பலரிடம் உள்ளது. வெற்றிலை போட்டுப் பழகிவிட்டால், அந்தப் பழக்கம் லேசில் நம்மை விடாது.

வெற்றிலை அடிப்படையில் ஒரு மூலிகையோடும், சித்த வைத்தியர்கள் சில சூரணங்களையும், பஸ்பங்களையும் வெற்றிலையில் வைத்து மடித்துக் கொடுப்பார்கள்.
மாட்டு வைத்தியர்களும், மாடுகளுக்குச் சில மருந்துகளை வெற்றிலையில் வைத்து மடித்துக் கொடுப்பார்கள். வெற்றிலைச் சாறு, வெற்றிலைக் காம்பு, வெற்றிலை இவை யாவும் சித்த வைத்தியத்தில் பல விதங்களில் பயன்படுகிறது.
சாப்பிட்ட பின் 'தாம்பூலம் தரித்தல்' என்பதை சில பெரியவர்கள் அந்தக் காலத்தில் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள்.
ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை தாம்பூலம் தரிப்பதை (வெற்றிலை போடுவதை) ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பணக்காரர்கள் இளம் வெளிர் பச்சை நிற வெற்றிலையில் வாசனைச் சுண்ணாம்பைத் தடவி, வாசனைப் பாக்குடன் சேர்த்து மென்று சாப்பிடுவார்கள். ஏழைகளுக்கு முரட்டு வெற்றிலையும், கொட்டைப் பாக்கும், சாதாரண சுண்ணாம்பும் போதும்.
கிராமங்களில் பெருந்தனக்காரர் கம்பீரமாக ஒரு தாழ்வாரத்தில் உக்கார்ந்திருப்பார். விருந்தாட்கள் அல்லது உறவினர்கள் போனால், "வாங்க.. வாங்க" என்று வரவேற்றுவிட்டுத் தாம்பூலத் தட்டை விருந்தினரை நோக்கி மெல்ல நகட்டினால் 'உங்கள் வரவு நல்வரவாகுக!' என்று பொருள். அதே தாம்பூலத் தட்டை குண்டிக்குப் பின்னால் ஒழித்து வைத்தால், 'இந்த நேரம் இங்கு ஏன் வந்தாய்...?' என்று பொருள். புரிந்து கொள்ள வேண்டும். தாம்பூலத்தட்டின் அசைவு இங்கு செய்தியைப் பரிமாற்ற ஒரு கருவியாக உதவுகிறது.
கிராமத்தில் அடிக்கடி வெற்றிலை போடும் பழக்கம் உள்ள சில பெரியவர்கள், தன்னோடு எப்போதும் வெற்றிலைச் செல்லம், வெற்றிலை இடிக்க உதவும் சிறிய உரல், வெற்றிலை போட்ட எச்சிலைத் துப்ப ஒரு பணிக்கம் முதலியவைகளை வைத்திருப்பார்கள்.
சில பெரியவர்கள் வெற்றிலை போடும் 'அழகை' பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம். அதுவே ஒரு நிகழ்த்து கலை போல, நாடகக் காட்சி போல இருக்கும்.
பெரியவர், முதலில் தன் வெற்றிலைச் செல்லத்தைத் திறந்து, அங்கு கிடக்கும் கழிப்பாக்குகளில் (கொட்டைப் பாக்குகளில்) ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை முதலில் ஆராய்ச்சி செய்வார். ஏய்த்துப்போன (கெட்டுப்போன) பாக்கைப் பயன்படுத்தி வெற்றிலை போட்டால் தலை சுற்றும். எனவே முதலில் வாயில் போட வேண்டிய பாக்கை நன்றாகக் கவனித்துத் தேர்ந்தெடுத்து, பிறகு பாக்கின் உட்புறத்தில் (குழிந்த பகுதியில்) தன் வாயில் உள்ள காற்றை செலுத்திக் (ஊதிக்) கொள்வார். (பாக்கினுள் புழுப்பூச்சி ஏதும் இருந்து விடக்கூடாதே என்பதற்காக..) இத்தனை சோதனைகளுக்குப் பிறகுதான் பெரியவர் கழிப்பாக்கைத் தன் வாயில் போடுவார். அதன் பிறகு, வெற்றிலைச் செல்லத்தில் இருந்து சில வெற்றிலைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார். தேர்ந்தெடுத்த வெற்றிலையை, தன் மடிமீது விரித்தபடி கிடக்கும் சிறிய வெள்ளைத் துண்டின் மேல் போட்டு, மெல்ல முன்னும் பின்னும் தடவுவார். (வெற்றிலையில் ஏதாவது தூசு, துப்பட்டை இருந்தால் அதை நீக்கிவிட வேண்டும் என்பதற்காக)
இப்படிச் சுத்தம் செய்த வெற்றிலையைத் தன் கையில் வைத்து முன்னும் பின்னும் பார்த்து பரிசோதனை செய்த பிறகு வெற்றிலையின் காம்பை அதன் அடிப்பகுதியில் ஓரளவிற்கு ஒடிப்பார் (முழுவதுமாக வெற்றிலைக் காம்பை ஒடிக்க மாட்டார்). முக்கால் வாசி ஒடித்த வெற்றிலைக் காம்பை மெல்ல இழுப்பார். ஒடிந்த வெற்றிலைக் காம்போடு சேர்ந்து வெற்றிலையின் நரம்புகளும், கோர்வையாக வெளியே வந்துவிடும். நரம்பும், காம்பும் அந்த வெற்றிலையை இடது உள்ளங்கையில் வைத்து, அதன் முதுகில் சுண்ணாம்பு டப்பியில் உள்ள, வெண்ணை போன்ற பதமான சுண்ணாம்பை வலது கை சுட்டுவிரலால் எடுத்து தடவுவார். பின்னர், ஒரு திணுசாக அந்த வெற்றிலையை மடித்து, மிக லாவகமாகத் தன் வாயினுள் தினிப்பார். ரசித்து, ருசித்துச் சாப்பிடுவதைப் போல, கிராமத்துப் பண்ணையார் பேசிக் கொண்டோ, சங்கீதம் கேட்டுக் கொண்டோ வெற்றிலை போடும் காட்சியே மிகச் சுவாரஸ்யமாக இருக்கும்.
வாயில் பாக்கைப் போட்டுக் கடிக்க முடியாதவர்கள், வெற்றிலையையும் சேர்த்து மெல்ல முடியாதவர்கள் (பல் போன கிழவர்கள், கிழவிகள்) வெற்றிலையை இடிக்க என்று ஒரு சிறிய உரலையும், அதற்கேற்ற சிறிய இரும்பு உலக்கையையும் வைத்திருப்பார்கள். இந்த உரல் கல்லிலும் இருக்கும், இரும்பிலும் இருக்கும், பித்தளையிலும் இருக்கும். அது அவரவரின் வசதி வாய்ப்பைப் பொறுத்தது.
வெற்றிலைகளையும், பாக்கையும், சுண்ணாம்பு டப்பியையும் போடு வைக்க என்று ஒரு சிறிய பெட்டியை வைத்திருப்பார்கள். இந்தப் பெட்டிக்கு 'வெற்றிலைச் செல்லம்' என்று பெயர். இந்தப் பெட்டிக்குச் 'செல்லம்' என்று வெற்றிலைப் பிரியர்கள் பெயர் சூட்டிக் கொண்ட அருமைதான் என்னே!
இந்தச் செல்லப் பெட்டியில் பாக்குகளையும், சுண்ணாம்புக் கூட்டையும் போட்டு வைக்க என்று தனியே ஒரு சிறிய அறை இருக்கும். அந்த அறையை மூடவும், திறக்கவும் ஒரு கதவு வேறு இருக்கும். வெற்றிலைப் பிரியர்கள் எங்கு சென்றாலும் முதலில் இந்தச் செல்லப்பெட்டி நிறைய வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு முதலியவற்றை எடுத்து வைத்துக் கொள்வார்கள். வேட்டைக்குச் செல்கிறவன் தன் துப்பாக்கியில் தோட்டாக்களையும் போட்டுக் கொள்ள மறக்காமல் இருப்பதைப்போல.
இந்தச் செல்லப்பெட்டி தகரத்தால் செய்யப்பட்டதாகவோ, பித்தளையால் செய்யப்பட்டதாகவோ, வெள்ளியால் செய்யப்பட்டதாகவோ இருக்கும். அது அவரவர் வசதி வாய்ப்பைப் பொறுத்தது.
வெற்றிலை போட்டால் வாயில் ஊறும் எச்சிலை கண்ட இடத்தில் துப்பக்கூடாது என்பதற்காக, வெற்றிலைப் பிரியர்கள் தன் அருகில் ஒரு 'துப்பாணி'யையும் வைத்திருப்பார்கள். இந்தத் துப்பாணியும் மிகுந்த வேலைப்பாடுகள் உடையதாக இருக்கும். மண்ணாலும், அலுமினியத்தாலும், பித்தளையாலும் இந்தத் துப்பாணிக் குவளை செய்யப்பட்டிருக்கும். இதுவும் அவரவரின் வசதி வாய்ப்பைப் பொறுத்தது.
ஊத்துமலை ஜமீனை ஆண்ட மீனாட்சி சுந்தர நாச்சியார் ஒரு வெத்திலைப் பிரியர். அவர் தங்கத்தாலான வெற்றிலைச் செல்லமும், வெற்றிலை இடிக்கும் உரலும், உலக்கையும், வேலைப்பாடுகள் நிறைந்த துப்பாணிக் குவளையும் வைத்திருந்தார் என்று கதை சொல்லிகள் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.
தமிழர்களின் வாழ்வில் மருந்தாகவும், உணவாகவும், விருந்திற்குப் பிறகான உபச்சார பண்டமாகவும் பயன்பட்ட வெற்றிலை தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமாகவும் திகழ்ந்தது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் மாந்திரிகர், வெற்றிலையில் மை போட்டுக் காட்டுகிறார். இங்கு வெற்றிலை மந்திரப் பொருளாகிறது.
மங்கல வீட்டில் வெற்றிலைக்கு முக்கிய இடம் உண்டு. திருமணத்தை நிச்சயம் செய்வதை (உறுதி செய்வதை) வெற்றிலையைக் கை மாற்றிக் கொள்வதன் மூலமே செய்கிறார்கள். எங்கள் வட்டாரத்தில் திருமணம் உறுதி செய்யப்பட்டது என்பதை 'வெற்றிலை கைமாற்றியாச்சு' என்றே சொல்கிறார்கள். இச்சடங்கில் வெற்றிலை மங்கலமான சாட்சிப் பொருளாக பாவனை செய்யப்படுகிறது.
திருமணத்திற்கு உறவினர்கள் அழைக்கும் போதும், வெற்றிலை பாக்கு வைத்து (சுருள் கொடுத்து, வெற்றிலையில் பணத்தை வைத்துச் சுருட்டிக் கொடுத்து) அழைக்கும் பழக்கம் இன்னும் சில வட்டாரங்களில் நடைமுறையில் உள்ளது.
திருமணத்திற்குச் சென்ற உறவினர்களும், நண்பர்களும் தாங்கள் அன்பளிப்பு செய்யும் பணத்தை ஒரு வெற்றிலையில் வைத்துச் சுருட்டியே அந்தக் காலத்தில் கொடுத்தார்கள். தற்போதுதான் காகிதக் கவரில் பணத்தை வைத்துக் கொடுக்கும் நடைமுறை உள்ளது.
மணவீட்டார் கொடுக்கும் தாம்பூலக் கவரிலும் மறக்காமல், குறைந்தபட்சம் மூன்று வெற்றிலைகளையாவது போட்டுக் கொடுப்பார்கள். கல்யாண வீட்டிலும், புதுமனை புகும் போதும், பூப்புனித நீராட்டின் போதும், விருந்தினருக்குக் கொடுக்கும் கவர்களில் வெற்றிலையையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.
ஆரத்தி எடுக்கத் தயாரிக்கும் ஆரத்தித் தட்டிலும், பூப்பு நீராட்டு நீரிலும் வெற்றிலை இடம் பெறுகிறது.
வெற்றிலை சமாதானச் சின்னமாகவும் விளங்குகிறது. சண்டை போட்ட இருவரைச் சமாதானப்படுத்த ஊர்ப் பெரியவர்கள், வெற்றிலையைக் கொடுத்து ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொள்ளச் செய்வார்கள். உறவை விரும்பாதவர் வெற்றிலையை வாங்கி அதைக் கிழித்துப் போட்டு தன் எதிர்ப்பைக் காட்டுவார்.
'வெற்றிலை' காதல் உறவை மேம்படுத்தும் கருவியாகவும், காதலர்களின் வாழ்வில் திகழ்கிறது. காதலி மடித்துக் கொடுத்த வெற்றிலையைக் காதலன் வாங்கிப் போட்டுக் கொள்ள, அது செக்கச் செவேல் என்று உதட்டில் பிடித்தால், காதலி காதலன் மேல் அதிகப் பிரியத்துடன் இருக்கிறாள் என்றும், காதலன் மடித்துக் கொடுத்த வெற்றிலையைக் காதலி போட்டுக் கொள்ள அது செக்கச் செவேல் என்று வாயில் பிடித்துக் கொண்டால், காதலன் காதலி மேல் மிகவும் பிரியமாக இருக்கிறான் என்றும் நம்புகிறார்கள்.
அக்காளின் கணவருக்கு (மச்சானுக்கு) மச்சினிச்சி (கொளுந்தியாள்) வெற்றிலை மடித்துக் கொடுக்கும் போது சற்று கூடுதலாகச் சுண்ணாம்பைச் சேர்த்து மடித்துக் கொடுத்துவிடுவாள். அதை ஆசையுடன் வாங்கி மென்ற மச்சானின் வாய் பொத்து, வெந்து புண்ணாகிவிடும். அதைப் பார்த்த மச்சினிச்சி கைதட்டிச் சிரிப்பதும் உண்டு.
திரை இசைப் பாடல்களும் தன் பங்கிற்கு காதல் பாடல்களில் வெற்றிலையைப் பதிவு செய்துள்ளன.
"வெத்திலை மடிச்சுக் கொடு மாமா !
மத்ததை வெளியில் சொல்லலாமா..!”

"கொட்டப் பாக்கும், கொளுந்து வெத்திலையும்
போட்டா வாய் சிவக்கும்...”

"வெத்தலை, வெத்தலை, வெத்தலையோ,
கொளுந்து வெத்தலையோ...”
என்று அப்பதிவுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
சில நாட்டுப்புறப் பாடல்களிலும் வெற்றிலை பற்றிய பதிவு வருகிறது.
வயதான கணவருக்கு ஒரு கன்னிப் பெண்ணை ரெண்டாந்தாரமாகக் கட்டிக் கொடுத்து விடுகிறார்கள். வறுமையின் காரணமாக இல்லறத்தில் அந்த இளம் பெண்ணை, வயதானவரால் திருப்திப்படுத்த முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் அப்பெண், வெற்றிலையைக் குறியீடாகக் கொண்டு பின்வரும் பாடலைப் பாடுகிறாள்.
"வாட வெத்திலை; வசங்குன வெத்திலை,
வாய்க்கு நல்லால்லே!
வாக்கப் பட்ட புருஷன் 'கெதி'
வாழ்க்கைக்கு நல்லால்லே!”
இளம் தளிர் வெற்றிலைக்குப் பதில், வாடிய, வசங்குன (வதங்கிய - காய்ந்த) வெற்றிலையைப் போட்டுக் கொள்ளக் கொடுத்திருக்கிறார்கள் என் பெற்றோரும், உற்றாரும் என்கிறாள். கன்னித்தரத்து (வாலிபமான, கன்னி கழியாத) மாப்பிள்ளைக்கு என்னைக் கட்டிக் கொடுக்காமல், வாடிய வெற்றிலை போன்ற வயதான மாப்பிள்ளைக்கு என்னைக் கட்டிக் கொடுத்துவிட்டீர்களே! என்று மிகநுட்பமாக அந்தப் பெண் தன் 'காமசுக இழப்பை' அப்பாடல் வரிகளில் பதிவு செய்கிறாள். 'கெதி' என்றால் 'ஏலுவு' அதாவது சக்தி அல்லது பலம் என்று அப்பதத்திற்குப் பொருள் சொல்லலாம். ஒரு பெண் தன் சோகத்தைச் சொல்ல, வாடிய வெற்றிலையை உவமையாகக் காட்டுகிறாள். இதனால் பாட்டும் சுவையுடன் திகழ்கிறது.
நாட்டுப்புறக்கதைகள் சிலவற்றிலும் வெற்றிலையைப் பற்றிய பதிவு உள்ளது. 'வண்ணார மாடசாமி' என்ற குறுஞ்சாமியின் கதையில், வெற்றிலை முக்கியமான கதைத் திருப்பத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
அக்கதையின் நாயகியான அரசனின் மகள்
"போட்டேன்டா - உன் வெத்திலை
போகுதடா என் உசுரு" என்று
சொல்லிக் கொண்டே தீப்பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்வாள். (பார்க்க -எனது குறுஞ்சாமிகளின் கதைகள் - உயிர்மை பதிப்பக வெளியீடு)
அரசனே, சிற்பி ஒருவன் சிலை செய்யும் போது அவனுக்கு அடப்பக்காரனாக இருந்து (வெற்றிலை கொடுப்பதையே தொழிலாகச் செய்பவன்) வெற்றிலை மடித்துக் கொடுத்த சேதியும் ஒரு நாட்டுப்புறக் கதையில் பதிவாகியுள்ளது.
வெற்றிலைக்கொடி தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வந்ததற்கான காரணத்தைக் கூறும் புராண மரபுக் கதையை எனது சேகரிப்பில் வெளிவந்த 'மறைவாய் சொன்ன கதைகள்' (உயிர்மை பதிப்பக வெளியீடு) என்ற நூலில் காணலாம்.
வெற்றிலை சாகுபடி, வெற்றிலை வணிகம் பற்றி ஏற்கனவே விரிவாக 'கதை சொல்லி' இதழில் கட்டுரை ஒன்றை நான் எழுதியுள்ளேன்.
இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு ஆண்குழந்தை பிறந்து, அது 'சுன்னத்' என்ற விருத்த சேதசை சடங்கு நடக்கும் முன்பே இறந்துவிட்டால், அக்குழந்தையின் மையத்தைக் (சடலத்தை) குளிப்பாட்டும் போது, வெற்றிலையை வைத்து சுன்னத் செய்வதைப் போன்ற 'பாவனை' சடங்கை நடத்துவார்கள்.
இந்து சமுதாயத்தில் சில இனக்குழுவினர் இறந்துவிட்டால், அவரின் சடலத்தை, வீட்டை விட்டுச் சுடுகாட்டிற்கு அல்லது இடுகாட்டிற்கு அனுப்பும்போது சவமான அந்த மனிதனின் இடது கையில் சிறிது வெற்றிலையையும் வைத்து அனுப்புவார்கள். (நெற்றியில் அணாவை ஒட்டி வைத்து பிணத்தை வழியனுப்புவதைப் போல) ஆனால், அந்த வெற்றிலையை செத்தவனின் கை பிடிக்காது. எனவே, அப்பிணத்தின் இடது கையின் கீழே வெற்றிலைகளை வைப்பார்கள். இத்தகைய சூழலில் சொல்லப்படுவதுதான் 'செத்தவன் கையில் வெத்தலை கொடுத்தது போல' என்ற மரபுத் தொடர்.
ஆம்பளப் பிள்ளை பிறந்தால், உடனே அந்த வீட்டீல் வெற்றிலையில் சீனியை வைத்துக் கொடுப்பார்கள். அதிலிருந்து பிறந்திருப்பது ஆம்பளப் பிள்ளை என்று அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும், உறவுக்காரர்களும் தெரிந்து கொள்வார்கள்.
இப்படி வெற்றிலை என்பது தமிழ்ப் பண்பாட்டு மரபில், மனிதன் பிறந்தது முதல் அவன் இறந்து சுடுகாட்டிற்குச் செல்வது வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆட்சி செய்கிறது.

No comments: