மனிதர்கள் தப்பு செய்தால் அவர்களைச் சிறையில் அடைத்து வைப்பதைப் போல் மாடுகள் தவறு செய்தால் அவைகளையும் அடைத்து வைக்கச்சிறைகள் இருந்தது உங்களுக்குத் தெரியுமா?” என்று ஒரு பெரியவர் என்னிடம் கேட்டனர்.
பெரியவர் சொன்ன ‘சேதி’ எனக்கு வியப்பாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருந்தது. எனவே, “தெரியாது சொல்லுங்கள் தாத்தா” என்றேன்.
பெரியவர் பேச ஆரம்பித்தார். அந்தக் காலத்தில் வீடு தவறாமல் சம்சாரிகளிடம் காளை மாடுகள் இருக்கும், அது தவிர பாலுக்காக எருமை மாட்டையோ, பசுமாட்டையோ வளர்ப்பார்கள். கிராமத்தில் சம்சாரி விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்ந்தால் அவன் பாடு தவிடு தாங்கிப் போகும் (மோசமாகி விடும்) எனவே விவசாயத்தோடு உபதொழிலாகக் கால் நடை வளர்ப்பையும் சேர்த்துச் செய்வார்கள். வீடுகளுடன் கன்று, காளைகளைக் கட்டிப் பேணி வளர்க்க என்று மாட்டுத் தொழுவத்தையும் சேர்த்துக் கட்டிக் கொள்வார்கள்.
ஒரு மனிதன் அடுத்தவன் தோட்டத்தில் புகுந்து, தேங்காயையோ, மாங்காயையோ பறித்தால், அவனைத் தோட்டத்தின் காவலாளி பிடித்து, தோட்டத்தின் உரிமையாளரிடம் ஒப்படைப்பார். தோட்டத்தின் உரிமையாளர் காவல்துறையினரிடம் ஒப்படைப்பார். காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் திருடனை நீதிமன்றத்தில் ஒப்படைப்பர். நீதிபதி தீர விசாரித்து திருட்டு ‘ருசுப்பட்டால்’ (நிரூபிக்கப்பட்டால்) திருடன் இத்தனை மாதம் சிறையில் இருக்க வேண்டும் என்று தண்டனை கொடுப்பார்.
இதேபோல் சில மாடுகள் அடுத்தவன் நஞ்சையில் அல்லது புஞ்செயில் மேய்ந்து மகசூலை அழித்து விட்டால் அந்த மாட்டைப் பிடித்து வந்து வயலின் உரிமையாளர் பவுண்டுத் தொழுவில் அடைத்து விடுவார். “அது என்ன பவுண்டுத் தொழு?” என்று நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. மாடுகளை (பிற சம்சாரிகளின் பயிர்களில் மேய்ந்து அழிமதி செய்த மாடுகளை) பிடித்து வந்து ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு நேரே, கிராம முனிசிப் வீட்டிற்குப் போவார்கள். அவருக்கு வீடும் அதுதான் ஆபீசும் அதுதான். வீட்டின் ஒரு பகுதியையே ஆபீசாக வைத்திருப்பார். இன்னேரம் தான் ஆபீசில் இருக்க வேண்டும் என்ற கணக்கு வழக்கெல்லாம் அந்தக் காலத்து கிராம முனிசிப்களுக்கு கிடையாது. எப்போது வேண்டுமானாலும், பொது மக்கள் போய் கிராம முனிசிப்யைச் சந்தித்துப் பேசலாம்.
கிராமுனிசிப் அவசர வேலையாக எங்காவது வெளியூர் போனால் அவருக்குப் பதில் உள்ளூரிலேயே தலையாரி, இருப்பார். அவரைச் சந்தித்து விபரம் கூறலாம். போனவர் “இன்னமாதிரி என் மகசூலை, இன்னாருக்குச் சொந்தமான எருமை மாடு மேய்ந்து விட்டது” என்று பிராது (புகார்) சொல்வார். உடனே கிராம முனிசிப் பவுண்டுத் தொழுவின் சாவியை தலையாரியிடம் எடுத்துக் கொடுத்து அந்த எருமை மாட்டைப் பவுண்டில் அடைத்து விடும் என்பார்.
தலையாரி பவுண்டுத் தொழுவின் சாவியை வாங்கிக் கொண்டு, பவுண்டுத் தொழுவின் பக்கம் செல்வார். மகசூலை மேய்ந்த மாட்டைப் பத்திக் கொண்டு புஞ்சைக்காரர் சென்று பவுண்டுத் தொழுவிற்குள் பத்தி விட்டு வெளியே வந்து விடுவார். உடனே தலையாரி பவுண்டுத் தொழுவை பூட்டிச் சாவியை கிராம முன்சீப்பிடம் ஒப்படைத்து விடுவார். இதுதான் தப்பு செய்த மாடுகளைச் சிறையில் அடைக்கும் நடைமுறை. இந்தமாதிரி அடுத்தவர் மகசூலை மேய்ந்து விடும் மாடுகளை அடைக்க அந்தக் காலத்தில் ஊர்தோறும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு கட்டிடத்தைக் கட்டி இருந்தார்கள்.
இந்தக் கட்டிடம் சதுர வடிவமானதாக இருக்கும். சுமார் பத்தடி உயரமான சுற்றுச் சுவர் கொண்டதாக இருக்கும். இச்சுவர் சுண்ணாம்புக் காரை கொண்டும், கருங்கல் கொண்டும் கட்டப்பட்டிருக்கும் சதுர வடிவான கோட்டைச் சுவர் போன்ற இந்தக் கட்டிடத்தில் வடக்கு நோக்கி ஒருவாசல் மட்டும் இருக்கும். வாசலையும் இரும்புக் கம்பி போட்ட கதவால் மூடி இருப்பார்கள். இதுதான் பவுண்டுத் தொழு என்பது.
இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் சிறிய ஓட்டுச் சாய்ப்பு இருக்கும். அதில் மேலோரமாக நீண்ட கம்புகளை வைத்துக் கட்டி இருப்பார்கள். சுற்றுச் சுவருக்கும், கம்பு காதுக்கும் இடையில் இப்போது நீள வசத்தில் ஒரு பள்ளம் கிடைக்கும். இந்தப் பள்ளப்பகுதியைத்தான் ‘அழி’ என்று சொல்கிறார்கள். இந்த நீள்வச பள்ளத்தில் வைக்கோலைப் போட்டு வைத்திருப்பார்கள். அதே தொழுவின் மற்றோர் பகுதியில்ஒருகல் தொட்டி கிடக்கும். அதைத் தண்ணீரால் நிரப்பி இருப்பார்கள். பவுண்டுத் தொழுவில் அடைக்கப்பட்டாலும் மாடு பட்டினி கிடக்க வேண்டாம். அங்கு கிடக்கும் வைக்கோலைத் தின்று கொள்ளலாம். பவுண்டுத் தொழுவிற்குள் இருக்கும் கல் தொட்டியில் தண்ணீர் குடித்துக் கொள்ளலாம்.
மாடுகளுக்குத் தண்டனை கொடுத்து அதைச் சிறையில் அடைத்தாலும் அதற்குத் தீவனமும் கொடுத்து அம்மாட்டின் பசியைப் போக்க வேண்டும், தாகத்திற்கு தண்ணீர் குடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மழைக்கும், வெயிலுக்கும் அம்மாடுகள் ஒதுங்க ஒரு சாவடி (நிழல் தரும் கட்டிடம்) வேண்டும் என்று சிந்தித்து மாட்டின் ஜெயிலை வடிவமைத்திருந்த நம் முன்னோர்களைப் பாராட்ட வேண்டும்.
தலையாரி பவுண்டுத் தொழுவில் மாட்டை அடைத்த செய்தி உடனே ஊருக்குள் பரவி விடும். எனவே, மாட்டின் உரிமையாளர் செய்தி தெரிந்து தலையாரியைத் தேடிக்கொண்டு கிராம முனிசிப் அலுவலகத்திற்கு வந்து விடும். கிராம முனிசிப் தலையாரியை அனுப்பி ஊர் நாட்டாமையைக் கூட்டிக் கொண்டு வரச்சொல்வார். நாட்டாமை வந்ததும், கிராம முனிசிப், நாட்டாமையுடன் சென்று மாடு மேய்ந்து அழிமதி செய்திருக்கிற இடத்தைப் பார்வையிட்டு அழிமதியைப் பொருத்து பாதிக்கப்பட்ட சம்சாரிக்கு இவ்வளவு பணத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று பேசி முடிவு செய்து மாட்டின் உரிமையாளரிடம் சொல்வார்கள்.
மாட்டின் உரிமையாளர், அத்தொகையை நாட்டாமையிடம் கொடுக்க, நாட்டாமை பாதிக்கப்பட்ட சம்சாரியை அழைத்து அந்த நஷ்ட ஈட்டுத்தொகையைக் கொடுத்து விடுவார். பின்னர் மாட்டைப் பவுண்டில் அடைத்ததால் ஏற்படும் பராமரிப்புச் செலவுக்கு என்று ஒரு தொகையை அரசாங்கத்திற்கு வாங்கிக் கொள்வார்கள். இப்படி பராமரிப்புச் செலவுக்கு என்று வாங்கும் அபராதத் தொகைக்குத் தனியாக ரசீது போட்டுக் கொடுத்து விடுவார், கிராம முனிசிப்.
அந்தக் காலத்தில், ஒரு நாளைக்கு ஒரு மாட்டிற்கு இவ்வளவு பராமரிப்பு செலவு என்று ஒரு கணக்கு இருந்தது. அந்தக்கணக்குப்படி பராமரிப்புச் செலவை மாட்டின் சொந்தக்காரரிடம் வாங்கி விடுவார். மாட்டை ஒருமுறை பவுண்டில் அடைத்தால், ஒருநாளைக்கு உரிய பராமரிப்புத் தொகையைக் கட்டிவிடவேண்டும், மாட்டின் உரிமையாளர் ரெண்டு, மூணு நாட்களாகத் தன் மாட்டை, மீட்க வரவில்லை என்றால் அதற்கு ஏற்ப பராமரிப்பு செலவைக் கூட்டிப் போட்டு அதை மாட்டின் உரிமையாளரிடம் வாங்கி விடுவார் கிராம முனிசீப்.
பவுண்டுத் தொழுவில் அடைபட்ட மாடுகள் போடும் சாணி சவதிகளை அள்ள என்று தனியே ஒரு சிப்பந்தியையும் (ஊழியரையும்) ஊரில் இருந்து நியமித்து இருப்பார்கள். காம்பவுண்டு போன்ற இந்த அமைப்பிற்கு ‘பவுண்டுத் தொழு’ என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியவில்லை! என்று சொல்லிவிட்டு ஒரு குறுஞ்சிரிப்பாணியைச் சிரித்தார். ஏன் சிரிக்கிறீர்கள் இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டேன்.
தாத்தா, தன் நரைத்த மீசையை ஒதுக்கிக் கொண்டு, ஒரு சம்பவத்தை நினைத்தேன்; சிரித்தேன் என்றார். “அது என்ன சம்பவம் சொல்லுங்கள்” என்று நான் ஆர்வத்துடன் கேட்டேன். தாத்தா அந்த சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார். ஒருநாள் நம்மூருக்கு ஒரு களைக் கூத்தாடிக் கூட்டம் வந்திருந்தது. அவர்கள் ஒரு இடத்தில் கூடாரம் போட்டுக் கொண்டு நம்ம ஊரிலும், பிறகு சுற்றுப்பட்டிகளுக்கும் சென்று களைக்கூத்து நடத்தி அதில் வசூலாகும் காசு, பணத்தைக் கொண்டு கஞ்சி காச்சிக் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் நாடோடி மக்கள். ஒரு மாட்டு வண்டியில் தன் தட்டுமுட்டுச் சாமான்களை அள்ளிப் போட்டுக் கொண்டு ஊர், ஊராய் போய் முகாமிட்டு, வித்தை காட்டிப் பிழைக்கிறதுதான் அவர்கள் தொழில். அதுஒரு ஒத்தக்காளை வண்டி அந்த வண்டிதான் அவர்களுக்கு வீடு. வண்டிக்கு கீழே, ஒரு கூண்டு தொங்கும். அதற்குள், ‘காடை, கருவாலி’ என்று ஏதாவது சில பறவைகள் கிடக்கும். வண்டிக்குள் (கூண்டு வண்டிக்குள்) தொங்கும் கூண்டுக்குள் கிளி ஒன்று கிடந்தது. ‘கீக்கீ’ என்று கத்திக் கொண்டே இருக்கும். ஊர் ஊராய்ச் செல்கிற இந்த நாடோடிகள், கோழிகளும், ஆடுகளும் வேறு வளர்ப்பார்கள். மரத்தடியில் வெட்டவெளியில் தான் இவர்களின் சமையல் நடக்கும். சாப்பாடும் அதே மரத்தடியில்தான் நடக்கும்.
இந்த நாடோடிக் கூட்டத்தினரின் காளை ஒரு சம்சாரியின் வெள்ளாமையில் விழுந்து மேய்ந்து விட்டது. வயல்காரனும் தலையாரியிடம் சொல்ல, தலையாரி, பவுண்டுத் தொழுவின் சாவியை எடுத்து வந்து அந்த மாட்டைப் பவுண்டுத் தொழுவிற்குள் அடைத்து விட்டார். (அன்று பார்த்து கிராம முனிசீப் ஊரில் இல்லை. அத்தோடு தலையாரிக்கும் இது களைக் கூத்தாடியின் மாடுதான் என்பது தெரியாது).
தலையாரிக்கு பவுண்டில் அடைத்த பின்தான் அது களைக்கூத்தாடியின் மாடு என்று தெரிந்தது. களைக்கூத்தாடி, ‘ஐயா, சாமி, என் மாட்டைத் திறந்து விடுங்கள்’ என்று கெஞ்சினான். தலையாரி, எனக்கு பவுண்டில் அடைக்க மட்டும்தான் அதிகாரம் உண்டு. கிராம முன்சீப் வந்த பிறகு கட்டவேண்டிய தண்டத்தை (அபராதத்தை) கட்டிவிட்டு வா. அதன்பிறகு தான் பவுண்டில் அடைத்த மாட்டைத் திறந்து விட முடியும்’ என்று சொல்லி விட்டார்.
களைக்கூத்தாடி, அன்று இரவு புறப்பட்டு அடுத்த ஊருக்குப் போக வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தான். அதற்குள், அவன் வண்டி மாட்டைப் பிடித்து பவுண்டில் அடைத்து விட்டார்கள். களைக்கூத்தாடியும், கிராம முன்சீப்பின் வீட்டு வாசலில் ராத்திரி பத்துமணி வரை காத்துக் கிடந்து பார்த்தான். கிராம முனிசீப்பின் மனைவி, ‘ஏய் களைக்கூத்தாடி. இங்கே என் வீட்டு முன்னால் “வயனம் காக்காதே” (உண்ணா நோன்பிருக்காதே) அவர் வர ரெண்டு மூணு நாளாகும். போய் ஊர் மடத்தில் படுத்து உறங்கு என்று சொல்லி விரட்டி விட்டாள்.
மறுநாள் காலையில் தலையாரி விடிந்ததும் விடியாமலும் இருக்கிற நேரத்தில் பவுண்டுத் தொழுவிற்குப் போய் கம்பிக் கதவு வழியாக எட்டிப் பார்த்திருக்கிறார். உள்ளே களைக் கூத்தாடியின் காளை மாட்டைக் காணவில்லை. கதவின் பூட்டும், பூட்டிய படியே தொங்குகிறது. களைக்கூத்தாடி முகாமிட்டிருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தால் அங்கே அவர்களின் வண்டியும் இல்லை; மாடும் இல்லை, அந்த நாடோடிக் கூட்டமும் இல்லை. பொழுது விடிந்ததும், ஊர் முழுவதும் இந்தச் செய்தி பரவி விட்டது. “பவுண்டுத் தொழுவின் பூட்டை உடைக்காமல், எப்படி மாடு வெளியே வந்தது?” என்பது யாருக்கும் புரியாத புதிராக இருந்தது.
அங்கு கூடி இருந்த கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவர் “அவனோ, களைக்கூத்தாடி பாவப்பட்டவன் அவன் வளக்கிற காளையை எப்படிப் பழக்கி இருப்பான்னு உங்களுக்குத் தெரியுமா? ராத்திரி நடுச்சாமம் போல, ஒரு நீண்ட காளையை (மூங்கில் கம்பை) இந்த பவுண்டுக்குள் நீள வசத்தில் போட்டிருப்பான், உரிமையாளனே கயிற்றில் நடக்கும் போது அவன் வளர்க்கும் காளை கம்பில் நடக்காதா? வித்தை தெரிந்த அந்தக்காளை, அந்த மூங்கில் கம்பில் ஏறி நடந்து சுவர் மேல் ஏறி பின் கீழே குதித்திருக்கும். மாடு வெளியே குதித்தபின் களைக்கூத்தாடி பவுண்டுச் சுவரின் மேல் ஏறி மூங்கில் களையையும் எடுத்துக் கொண்டு ஊரை விட்டுப் போயிருப்பான். இதுதான் நடந்திருக்கும். என்று பக்கத்திலிருந்து பார்த்ததைப் போல நடந்த ‘நடப்பை’ விவரித்தார்.
ஊர்க்காரர்களும் ஆமா... இருக்கும் அப்படித்தான் நடந்திருக்கும் என்று பெரியவர் சொன்னதை ஆமோதித்தார்கள். என்று கதை போல் சொன்னவர், அந்தக் களைக்கூத்தாடி செய்த காரியத்தை நினைத்துத்தான் சிரித்தேன் என்ற பெரியவர், முக்கியமான ஒரு குறுந்தகவலையும் சொன்னார். அந்தத் தகவலையும் இங்கே பதிவு செய்கிறேன். “இந்த மாதிரியான பவுண்டு தொழுக்கள் எல்லாம் நவாப்புகள் நம் நாட்டை ஆண்டகாலத்தில் கட்டப்பட்டவை. நவாப்பின் ஆட்சிபோய், வெள்ளைக்காரர்களின் ஆட்சி நடந்த போது, அவர்கள், இந்த பவுண்டுத் தொழுக்களை எல்லாம் தன் கட்டுப்பாட்டில், வைத்திருந்தார்கள்.
வெள்ளைக்காரர்கள் நாட்டை விட்டுப் போகும்போது, இந்த பவுண்டுத் தொழுக்களை எல்லாம் மத்திய அரசின் பராமரிப்பில் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்கள். இன்று பயன்படாமல் பராமரிக்கப்படாமல் தமிழகம் எங்கும் உள்ள இந்த மாட்டு ஜெயில்களை மாநில அரசுகள் தன்தேவைக்குப் பயன்படுத்த முடியாது. சட்டத்திருத்தம், கொண்டு வந்து மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு பெற்றால்தான் உண்டு.
No comments:
Post a Comment