கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, July 22, 2013

செவக்காட்டுச் சேதிகள்- 13 அழிப்பாங் கதைகள்

Land

மொழிதான் சிந்தனையைத் தூண்டும் கருவி. எழுத்துமொழி தோன்றுவதற்கு முன்பு பேச்சு மொழி தான் வழக்கில் இருந்தது. பேச்சுமொழி வழக்கில் இருந்த கால கட்டத்திலேயே கதைகளும் (நாட்டுப் புறக்கதைகளும்) சொலவடைகளும், (பழமொழிகளும்) அழிப்பாங்கதைகளும் (விடுகதைகளும்) பாடல்களும் (நாட்டுப்புறப்பாடல்களும்) தோன்றி விட்டன. கதைகளைத் தவிர்த்து, பாடல்களையும், அழிப்பாங்கதைகளையும், பழமொழிகளையும் கூர்ந்து கவனித்தால் அவைகள் யாவும் எதுகை, மோனை மற்றும் இடையடித் தொடை உடையனவாகத் திகழ்வதை நாம் உணரலாம்.

Landஎதுகையையும், மோனையையும், பாட்டில் மட்டுமின்றி, பழமொழிகளிலும், விடுகதைகளிலும் தமிழர்கள் பயன்படுத்தியதன் நோக்கம் அவைகள் எளிதில் மனனம் (மனப்பாடம்) செய்து நினைவில் வைத்துக்கொள்ள உதவும் என்பதுதான். ‘அழிப்பாங்கதைகள்’ என்று கிராமத்து மக்கள் சொல்வதை நகர்புறத்து மக்கள் ‘விடுகதைகள்’ என்று கூறுகின்றார்கள். இந்த அழிப்பாங்கதைகள் என்று தோன்றியது, அவைகள் யாரால் படைக்கப்பட்டது என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. நாட்டார் தரவுகள் அனைத்தும் இந்த வரையறைக்கு உட்பட்டதுதான்.

‘கதை’ என்ற சொல்லை நாட்டுப்புறத்து மக்கள் ‘கதைத்தல்’ என்ற சொல்லில் இருந்து பெற்றிருக்க வேண்டும். ‘கதைத்தல்’ என்ற சொல் இன்றும் இலங்கைத் தமிழர்களின் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் உள்ளது. ‘கதைத்தல்’ என்ற சொல்லை இலங்கைத் தமிழர்கள் ‘சொல்லுதல்’ என்ற பொருளிலேயே இன்றும் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறார்கள். ‘என்ன கதைக்கிறீர்கள்?’ என்ற தொடரை, இலங்கைத் தமிழர்கள் என்ன சொல்கிறீர்கள்? என்ற பொருளிலேயே பயன்படுத்துகிறார்கள். ‘கதைத்தல்’ என்ற சொல் ‘கதை’ என்ற வேர்ச்சொல்லில் இருந்துதான் பிறந்திருக்க வேண்டும். கிராமத்து மக்கள், ஏதாவது சுவையான ஒரு செய்தியைச் சொல்ல வரும் முன், ‘அந்தத் ‘கதை’யை ஏன் கேட்கிறாய்? என்றும், அந்தக் ‘கூத்தை’ ஏன் கேட்கிறாய்? என்றும் சொல்லிச் சிரிப்பார்கள்.

மேலே கண்ட பேச்சுவழக்கில் கதை, கூத்து என்ற சொற்கள், அச்சொற்களுக்கே உரிய நேர்பொருளை உணர்த்தாமல், ‘சம்பவம் அல்லது செய்தி’ என்ற மற்றோர் பொருளைத்தான் உணர்த்துகின்றன. இந்த முறையில் பார்த்தால்தான் ‘அழிப்பாங்கதை’ அல்லது விடுகதை என்ற சொற்களில் உள்ள ‘கதை’ என்ற சொல்லின் பொருளைப் புரிந்து கொள்ள முடியும்.

சொல்லாராய்ச்சியை இத்துடன் நிறுத்திக்கொண்டு, இனி விடுகதைக்குள் செல்வோம். பேச்சு மொழியின் வழியே சிந்தனையை வளர்க்க வேண்டும் என்று கருதிய நம் முன்னோர்கள், விடுகதை என்ற ‘புதிர்’களை உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்கள். இந்த புதிர்த் தன்மையும், பாடல் தன்மையும் கொண்ட கதைகள் பூட்டுச் சாவி போன்ற அடைப்பும் திறப்பும் கொண்டதாகும். யோசித்து, விடை தேடும் மரபை இந்த விடுகதைகள் பெற்றுள்ளன. எனவேதான் இவைகளுக்கு ‘அழிப்பாங்கதைகள்’ என்ற பெயரை கிராமத்து மக்கள் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.

இனி வாசகர்கள் முன்னால் இன்றும் கிராமத்து மக்களிடம் புழக்கத்தில் உள்ள சில அழிப்பாங்கதைகளையும், அதற்கான விடைகளையும் வைக்க விரும்புகிறேன்.

‘உணவை எடுத்திடுவாள்
உண்ணாமல் வைத்திடுவாள்
உடல் மெலிந்த பெண்
அவள் யார்?’

இது ஒரு விடுகதையாகும். விடுகதைகளில் ‘உருவகம்’, என்ற யுக்தி மிக லாவகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் புதிரின் விடை ‘அகப்பை’ என்பதாகும். புதிர் விடையுடன் மிக இயல்பாகப் பொருந்தி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மருத்துவர்கள், மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து விட்டு, நோயாளியைப் பார்த்து, ‘காலையில் இந்த மாத்திரையையும், இந்த மருந்தையும் சாப்பிடுங்கள்’ என்று சொல்லாமல், காலையில் இன்ன மாத்திரையையும், இந்த மருந்தையும் எடுத்துக்கங்க.. என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.

மேலே கண்ட வாக்கியத்தில் ‘சாப்பிடுங்கள்’ என்ற சொல்லுக்குப் பதில் ‘எடுத்துக்கங்க’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இருவேறு பொருளுடைய சொற்கள் இங்கு வேறு ஒரே பொருளில் பேச்சு வழக்கில் பின்படுத்தப்படுகிறது. நான் மேலே குறிப்பிட்டுள்ள விடுகதையில் ‘உணவை எடுத்திடுவாள்’ என்ற சொல் இரண்டு விதமான பொருளைத் தாங்கி நிற்கிறது.

பானைகளின், சட்டிகளின் வடிவங்கள் காலத்தால் மாறி இருக்கிறது. ஆனால் பானை, சட்டி என்ற பாத்திரங்களின் பயன்பாடு மாறவில்லை. அதேபோல் ‘அகப்பை’ என்ற ஒரு சமையல் கருவியின் வடிவம் காலம் தோறும் மாறி வந்திருக்கிறது. ஆனால் அதன் பயன்பாடு மாறவில்லை. அகப்பையை உடல் மெலிந்த பெண் என்று உருவகித்திருப்பது கவித்துவமாக உள்ளது. இப்போது அதே விடுகதையை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள், விடுகதையின் ‘மோனை’ச் சொற்களும், இசைலயமும், அந்த விடுகதையை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள உதவுவதை உணர்வீர்கள்.

மனிதனின் வாழ்வியலோடு, நீக்கமறத் தொடர்பு கொண்டது, உணவு. அந்த உணவோடு நெருங்கிய தொடர்பு கொண்டது அகப்பை. எனவே ‘அகப்பை’ என்ற விடையை நோக்கிப் பயனப்படும் இந்த விடுகதையை யாரோ ஒரு கிராமத்துக் கலைஞன் மிக இயல்பாகப் படைத்து செவிவழியாக என்றோ உலவ விட்டிருக்கிறான். அந்த விடுகதை ‘செவிச் செல்வமாக’ இன்றும் மக்களின் நாவில் உலவிக் கொண்டிருக்கிறது.

சாப்பாட்டோடு சம்பந்தப்பட்ட இன்னோர் விடுகதை,

தாய் இனிப்பு,
மகள் புளிப்பு,
பேத்தி தித்திப்பு

என்பதாகும். இந்த அழிப்பாங்கதையின் விடைகள் பால், தயிர், நெய் என்பதாகும். இந்த அழிப்பாங்கதையில் முதல் இரண்டு வார்த்தையும் இன்னோர் வார்த்தையை விடையாகக் கொண்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு வரிக்கும் ஒரு விடை வருகிறது. இப்படி ஒரே அழிப்பாங்கதைக்கு பல விடைகள் வருவது ரொம்பவும் அபூர்வமாகும்.

தாய், மகள், பேத்தி என்று மூன்று தலைமுறை உறவு முறைகளைப் பாலில் பார்த்திருப்பது ரசிக்கத்தக்கதாக உள்ளது. பாலைத் தாய், என்றும் மகளைத் தயிர் என்றும், பேத்தியை நெய் என்றும் விடையோடு உருவகம் செய்திருக்கிற கற்பனை நம்மை அசர வைக்கிறது. அத்தோடு இனிப்பு, புளிப்பு, தித்திப்பு என்று சுவைகளோடு, பாடல் வரிகளை அமைத்திருப்பதால், படிப்பதற்கு சுவையாகவும் இருக்கிறது. (இனிப்பு ஒரு வித சுவை, தித்திப்பு வேறு வித சுவை).

மொத்தமும் ஆறே வார்த்தைகள்; அதில், வரிக்கு வரி, இயைபுத் தொடை, தாய், மகள், பேத்தி என்ற உறவுமுறைச் சொற்களையே ஒவ்வொரு வரியின் முதல் வார்த்தையாக அமைத்துள்ள புதுமை. இப்படி, இந்த அழிப்பாங்கதை தன்னுள் ஒரு சித்து விளையாட்டையே நிகழ்த்திக் காட்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தொல்காப்பியர் என்ற இலக்கணப் புலவர் காட்டியுள்ள ‘பிசி’ என்ற இலக்கணத்திற்கு ஏற்ற இலக்கியப் பிரதியாகவும் இந்த அழிப்பாங்கதை திகழ்கிறது.

‘வெள்ளையாம்
வெள்ளைக் குடம்
விழுந்தால் சல்லிக்குடம்’

என்ற புதிர்பாடலின் விடை முட்டை என்பதாகும். முட்டையை ‘வெள்ளைக்குடம்’ என்று உருவகம் செய்திருப்பது அழகு. முதல் வரியில் ‘வெள்ளையாம்’ என்ற சொல் இரண்டாம் வரியான, ‘வெள்ளைக்குடம்’ என்பதற்கு துணையாக வந்துள்ளது. இது வெற்றசைச்சொல், இசை லயம் கருதியும், ஓசை நயம் கருதியும் வந்துள்ளது. பெண்களின் தலைக்கு, தலையோடு சேர்ந்த தலைமுடியின் ‘கொண்டை’ அழகுக்கு அழகு சேர்ப்பது போல், இப்பாடலில் ‘வெள்ளையாம்’ என்ற தனிச்சொல், விருதாக (தேவையற்ற நிலையில்) நின்றாலும் பாடலுக்கு மேலும் சுவை கூட்டுகிறது. இப்படி பாடலில் முதல் சொல்லையே வெற்றசைச்சொல்லாக அமைத்து பாடல் புனைவதும் ஒரு வித கவிதை யுக்திதான்.

மண்குடங்கள் அதிகமாக மக்களின் பயன்பாட்டில் இருந்த காலகட்டத்தில், இந்த விடுகதை தோன்றி இருக்க வேண்டும். மண்குடம் கைதவறி கீழே விழுந்து விட்டால், துண்டு, துண்டாக நொறுங்கி விடும். இப்படி, மட்பாண்டங்கள் உடைந்து துண்டு, துண்டாக நொறுங்குவதை கிராமத்து மக்கள் ‘சல்லி’ ‘சல்லி’யாக நொறுங்கி விட்டது என்று கூறுவார்கள். இந்த சொல்லாட்சி ‘சல்லி’ என்று ஒருகாலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயத்தின் பெயரில் இருந்து பிறந்திருக்க வேண்டும். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘நயா பைசா’ என்ற நாணயம் இன்று புழக்கத்தில் இல்லை.

‘நயா பைசா’வைப்போல ஒரு காலத்தில் அதாவது சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த நாணயம் தான் ‘சல்லி’க்காசு என்பது. மிகவும், குறைந்த மதிப்புள்ள இந்த ‘சல்லிக்காசு’ என்ற சொல் சில நாட்டார் மரபுத்தொடர்களில் பதிவாகியுள்ளது. அவைகள் சல்லிக்காசுக்குப் பெறாத பெயல்.. சல்லிப்பயல் என்பதாகும்.

கீழே விழுந்து உடைந்த மட்பாண்டத்தின் துண்டுகளை, ‘ஓட்டுச்சல்லி’ என்று சொல்வார்கள். பானை கீழே விழுந்து சல்லி, சல்லியாக (துண்டு, துண்டுகளாக) உடைந்து விட்டது என்றும் பேச்சுவழக்கில் சொல்வார்கள். இந்த அழிப்பாங்கதையில், வரும் ‘சல்லிக்குடம்’ என்ற சொல்லாட்சி, உடைந்த மட்பாண்டத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. இத்தகைய விடுகதைகள், நம் முன்னோர்களின் பழங்காலத்து வாழ்வியலையும் மிக நுட்பமாக பதிவு செய்து வைத்துள்ளன.

மூன்றே வரியில் ஒரு விடுகதை. அதற்கு முத்தாய்ப்பான ஒரு விடை என்று பார்க்கும் போது இவைகள், ஒருவித இலக்கியப் பிரதியாகத் திகழ்வதுடன், ஒருவிதத்தில் மக்களைக் காலங்காலமாகச் சிந்திக்கத் தூண்டிக் கொண்டிருக்கிறது.

மட்பாண்டங்கள், சித்தர்களின் பாடல்களில் பல இடங்களில், ‘நிலையாமை’ என்ற தத்துவத்தின் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

‘நந்தவனத்தில் ஒரு ஆண்டி
நாலாறு மாதமாய், குயவனை வேண்டி
கொண்டு வந்தாண்டி, ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!

என்ற திரையிசைப் பாடல் ஒரு சித்தர் பாடலில் இருந்து பெயர்த்து எழுதப்பட்டதாகும். இந்தப் பாடலிலும் ‘தோண்டி’ (சிறிய மட்குடம்) என்பது நிலையாமை என்ற தத்துவத்தின் ‘குறியீடாக’ அப்பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சட்டி அல்லது பானை (மட்பாத்திரங்கள்) என்ற விடைக்கு உரிய விடுகதை,

திண்டாடித் திண்டாடி வந்தது,
தீப்பிடித்து மந்தையிலே வெந்தது,
பாழும் மனையிலே புகுந்தது,
பறக்கோலம், இறக்கோலம் ஆனது.

என்பதாகும். இந்த விடுகதையிலும் வரிக்கு வரி, வந்தது, வெந்தது, புகுந்தது, ஆனது என ஒத்த ஒசை உடைய சொற்கள் வந்துள்ளது.

மண்ணில் இருந்து குயவன், சிரமப்பட்டு மனையின் (கருவியின்) மூலம் பானையை விளைவது (செய்வது); பிறகு, சுள்ளையில் வைத்துப் பானையைச் சுடுவது; அப்பானையை சம்சாரி ஒருவன் வாங்கிச் செல்வது, பிறகு, அப்பானை உடையும் வரை, தினமும் படாத பாடுபடுவது என்று ஒரு பானையின் வாழ்க்கையையே, இந்த விடுகதை நான்கே வரியில் சொல்லி விடுகிறது. இத்தகைய அழிப்பாங்கதைகள், காலந்தோறும் மக்களால் படைக்கப்படுகின்றன. அவைகள் சிந்தனைச் சொத்துக்களாகும்

No comments: