கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-26 புராண விருச்சத்தின் கிளைக் கதைகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊத்துமலை என்ற கிராமம் உள்ளது. இவ்வூரில் உள்ள கதை சொல்லி ஒருவருக்கு அவ்வூர் மக்கள் வைத்துள்ள பெயர் ‘திருவள்ளுவர்’ என்பது. இப்போது அவருக்கு வயது எண்பது இருக்கும். இவர் ஏட்டுப் பள்ளியில் (குருகுலத்தில்) ஒன்றோ, இரண்டோ வகுப்பு வரை படித்தவர். என்றாலும் நாளாவட்டத்தில், தனது சுய முயற்சியில் திருக்குறளை மட்டும் தொடர்ந்து படித்து. அதில் ஓரளவு பாண்டித்தியம் பெற்றுள்ளார்.

 சில குறள் பாக்களுக்கு தனது பாணியில் பாமரத்தனமாக கிராமத்து மக்களுக்குப் புரியும் வண்ணம் விளக்கம் தருகிறார். வயல் வெளியில் பெண்கள் வேலை செய்யும் போது அவர்களுடன் சேர்ந்து வேலை செய்து கொண்டே. சில குறள் பாக்களுக்கு விளக்கமும் சொல்கிறார்.

 எப்பவும் திருக்குறள் பற்றியே இவர் பேசிக் கொண்டிருப்பதால், இவ்வூர் மக்கள் இவருக்கு ‘திருவள்ளுவர்’ என்றே பாமரத்தனமாகப் பட்டப்பெயரும் சூட்டி விட்டார்கள்.

ஊத்துமலை திருவள்ளுவர் என்ற இந்தக் கதைசொல்லி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோயில் மடத்தில் உக்கார்ந்து சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் சில கதைகளையும் சொல்கிறார்.

 சிறுவர்களுக்கு அவர் கூறிய கதைகள் மகாபாரதத்தில் உள்ள கிளைக்கதைகள் என்று சொன்னார். ஆனால் அச்சில் வெளிவந்துள்ள மகாபாரதத்தில் இக்கிளைக்கதைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

 கதைசொல்லிகள், கர்ணபரம்பரையாய் செவி வழியாக இத்தகைய கதைகளைப் புராண மரபுகளை மையமாகக் கொண்டு படைத்து உலவ விட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.


‘கி.ரா’ அவர்கள் நேர் பேச்சில் "மகாபாரதம் என்பதே நூற்றுக்கணக்கான கிளைக் கதைகளை ஒண்டிச்சி (ஒருங்கு சேர்த்து) படைக்கப்பட்ட பெருங்கதைதான்" என்று சொன்னது இந்த இடத்தில் என நினைவுக்கு வருகிறது.

 உலகமெங்கும் உள்ள புராண மரபுகளைச் சுற்றி ஆயிரக்கணக்கான கிளைக் கதைகள் சுழன்ற வண்ணம் உள்ளன.

எது எப்படி இருந்தாலும், நமக்குச் சில சொல் கதைகள் கிடைத்தால் சந்தோசம்தான்.

 இனி, கதைகளுக்குள் செல்வோமா?
 தூரோணாச்சாரியார்தான் தர்ம சகோதரர்கள் ஐவருக்கும், துரியோதனாதிபர்கள் நூறு பேறுக்கும் குரு.

ஒருநாள் குருநாதர் தர்மரையும் தூரியோதனனையும் தனித்தனியே அழைத்து, "இன்று இரவு உன் இல்லத்திற்கு வருகிறேன் நீ உன் வீட்டைத் நிறைத்து வை!" என்று சொன்னார்.

 இருவரும் ‘சரி’ என்றார்கள். துரியோதனன் தன் இருப்பிடத்திற்குச் சென்று, தன் சகோதர்களுடன் கூடி ஆலோசனை செய்தான். ஆலோசனையின் முடிவில் குருநாதர் வீட்டை நிறைத்து வை" என்று சொன்னதால் அவர்கள் தன் வீட்டினுள் வைக்கோலைத் திணித்து வைத்தார்கள். வீடு முழுவதும் வைக்கோலை இம்மியளவு கூட இடைவெளியில்லாமல் அடைத்து வைத்துவிட்டு, குருநாதரின் வருகைக்காகக் காத்திருந்தார்கள்.

 இரவு சுமார் எட்டு மணி அளவில் குருநாதர் வந்தார். துரியோதனன் பெருமையுடன் அவரை வரவேற்று; குருவே இதோ பாருங்கள், நாங்கள் எங்கள் வீட்டை நிறைத்து வைத்துள்ளோம்" என்றான்.

 குருநாதரும் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்து மனதிற்குள் சிரித்துக்கொண்டு, உதட்டில் ஒரு கேலிப் புன்னகையைத் தவழ விட்டபடி அங்கிருந்து புறப்பட்டார்.

 துரியோதனன், "குருவே எங்கு செல்கிறீர்கள்? நீங்கள் சொன்னதை நான் சரியாகச் செய்துள்ளேனா? இல்லையா? என்று பதில் கூடக் கூறாமல் போகிறீர்களே!" என்றான்.

 குருநாதர், "நான் இப்போது தர்ம சகோதரர்கள் இல்லத்திற்குப் போகப் போகிறேன். அவர்களையும், ‘வீட்டை நிறைத்து வையுங்கள்’ என்றுதான் பணித்துள்ளேன். அவர்கள் வீட்டை நிறைத்து வைத்துள்ள விதத்தைப் பார்க்கப் போகிறேன். உனக்கு விருப்பம் என்றால் நீயும் என்னுடன் தாராளமாக வரலாம்" என்றார்.

 துரியோதனனும் ‘சரி’ என்று சொல்லி குருவுடன் புறப்பட்டான் இருவரும் பஞ்சபாண்டவர்களின் இருப்பிடத்திற்குச் சென்றார்கள். தர்மர், இருவரையும் வரவேற்றுத் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றான் அங்கு அவர்களின் வீடு வெளிச்சமாக இருந்தது. வீட்டினுள் ஆங்காங்கே தீபங்களின் ஒளியால் வீடு நிறைந்திருப்பதை குருநாதர் பார்த்தார். குருவின் மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது தன் உதட்டில் ஒரு குறுஞ்சிரிப்பைத் தவழவிட்டபடி அர்த்தபுஸ்டியுடன், துரியோதனை ஏறிட்டுப் பார்த்தார்.


‘நிறைவு’ என்பதை தர்மர் எப்படிப் புரிந்திருக்கிறார் என்பதில் இருந்தும், துரியோதன் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறான் என்பதில் இருந்தும் இருவரின் ‘குணச்சித்திரமும், இக்குறுங்கதையில் விவரிக்கப்படுகிறது.

 மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு, இன்னொரு கிளைக் கதையையும் ஊத்துமலை திருவள்ளுவர் என்ற கதை சொல்லி கூறினார். அக்கதையும் தர்மரின் குணச்சித்திரத்தையும், துரியோதனனின் குணச்சித்திரத்தையும் சிறுவர்களுக்கு மிக எளிமையாக விளக்குவதாக உள்ளது.

 இனி அக்கதையையும் பார்ப்போம். குருநாதர் ஒருநாள், தர்மரையும் துரியோதனனையும் தனித்தனியே அழைத்து "நீ இந்த நகரத்தைச் சுற்றிப் பார்த்து இந்த நகரத்தில் எத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள்? எத்தனை கெட்டவர்கள் இருக்கிறார்கள்? என்று கணக்கெடுத்துவா" என உத்தரவிட்டார்.

 தர்மரும், துரியோதனனும் தனித்தனியே நகரத்தைச் சுற்றி வந்தார்கள். குரு இருவருக்கும் ஒரு வார காலம் அவகாசம் கொடுத்திருந்தார். இருவரும் ஒரு வாரகாலமாக அந்த நகரத்தை வீதி வீதியாகச் சுற்றி அலைந்து புள்ளி விபரங்களைச் சேகரித்தார்கள்.

 ஒருவாரம் கழித்து அதிகாலையில் துரியோதனன் குருநாதரை வந்து வணங்கி "குருவே, நீங்கள் சொன்னபடி நான் ஒரு வாரகாலமாக இந்த நகரத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டேன். இந்த நகரத்தில் ஒருவன்கூட நல்லவன் இருப்பதாகத் தெரியவில்லை" என்றான்.

 சற்றுநேரம் கழித்து மலர்ந்த முகத்துடன் தர்மர் வந்தார், குருவையும் துரியோதனனையும் வணங்கிவிட்டு, "குருவே, நான் ஒருவார காலமாக இந்த நகரத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டேன் இந்த நகரத்தில் கெட்டவர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை!" என்றார்.

 தர்மரைப் பார்த்து மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார் குரு என்று சொல்லி கதையை முடித்துவிட்டார் கதைசொல்லி.

 இக்கதைகளின் உட்பொருள் அப்போதைக்கு அதைக் கேட்ட பிள்ளைகளுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் அவர்கள் வளர்ந்த பிறகு மீண்டும் அக்கதையை நினைத்துப் பார்த்தால் அக்கதையின் உட்பொருளைப் புரிந்து கொள்வார்கள்.

 நகரம் என்பது நல்லவர்களும், கெட்டவர்களும் சேர்ந்து வாழும் பகுதிதான். அந்நகரத்து மக்கள் யாவரும் துரியோதனன் கண்களுக்குக் கெட்டவர்களாகவும். அதே நகரத்து மக்கள் யாவரும் தர்மருக்கு நல்லவர்களாகவும் தெரிகிறார்கள். ‘நன்மை, தீமை’ என்பதும், ‘நல்லது,கெட்டது’ என்பதும் பார்ப்பவர்களின் மனதையும், அவர்களின் குணத்தையும் பொறுத்தது என்ற கருத்தை இக்கதை நமக்கு உணர்த்துகிறது.

 இந்த மதிப்பீடு, ‘அழகு, அசிங்கம்’, என்பதற்கும் பொருந்தும். இக்கதையும் தர்மரின் குணச்சித்திரத்தையும், துரியோதனனின் குணச்சித்திரத்தையும் மிக எளிமையாக விளக்கி விடுகிறது.

 இதிகாசங்களில் இத்தகைய குறுங்கதைகள் பல உள்ளன. அவையாவும் ஜென் கதைகளைப் போல, சூஃபியிசக் கதைகளைப் போல, ஆழமான சிந்தனைகளையும் அர்த்தபுஸ்டியுடைய செய்திகளையும் கொண்டு, ஆனால் கேட்பதற்கு மிக எளிமையான கதைகளாகவும் திகழ்கின்றன.

 இதிகாசங்களை மையமாகக் கொண்டு, கதைசொல்லிகள் படைத்து உலவ விட்டிருக்கிற நூற்றுக் கணக்கான இதுபோன்ற கிளைக்கதைகளும் நடப்பில் உள்ளன. களப்பணியாளர்கள் இவை புராணக் கதைகள்தானே. ஏற்கனவே. மக்களுக்குத் தெரிந்த கதைகள்தானே என்று நினைத்து அவைகளைச் சேகரிக்காமல் விட்டு விடக்கூடாது.

 மகாபாரதத்தைப் போலவே, இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டும் சில கிளைக்கதைகள் கதை சொல்லிகளால் சொல்லப்படுகின்றன. அக்கதைகள், அச்சில் இல்லாதவை. வாய்மொழி வடிவில் மட்டும் உலவுபவை.

 புராணமரபின் கிளையில் பூத்துக் குலுங்கும் இத்தகைய குறுங்கதைகளில் சில குழந்தைகளுக்கு நீதி சொல்பவையாகவும் உள்ளன. அரிய பொருள் கொண்டதாகவும் திகழ்கின்றன.

No comments: