கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-1 வெண்ணையில் விலங்கு

தாலாட்டில் ஆரம்பித்து வாழ்க்கை ஒப்பாரியில் முடிகிறது. எனவே எனது இந்தத் தொடரை தாலாட்டிலிருந்து ஆரம்பிக்கிறேன்.

தாலாட்டுப் பாடும் பழக்கமும் இன்று தாய்மார்களிடம் குறைந்து வருகிறது. தாலாட்டுப் பாட ஆரம்பித்ததும் பெண்களுக்கு எங்கிருந்தோ ஒரு ராகம் கிடைத்துவிடுகிறது. தாலாட்டுப் பாடும் போது தாய்மையின் கனிந்த குரல் கேட்பதற்கு சுகமாகத்தான் இருக்கிறது.

தாலாட்டுப் பாடலின் பொருளும், சுவையும் வானத்தில் பட்டம் ஒன்று பறப்பதைப் போல எல்லைகளுக்குட்பட்ட சுதந்திர வெளியில் மிதக்கிறது. மிகை கற்பனைகளுக்கும், மிகை எதார்த்த கற்பனைகளுக்கும், எதார்த்தங்களுக்கும் இத்தகைய பாடல்களில் நிறையவே இடம் இருக்கிறது.

தாலாட்டுப் பாடல்களுக்கு இருக்கும் முக்கியமான குறிக்கோள் அழும் குழந்தையை அமைதிப்படுத்தித் தூங்கவைப்பதுதான். ஆனால் தாய் தாலாட்டுப் பாடும் சாக்கில் தன் உள்ளக்கிடக்கைகளையும், தான் பிறர்க்கு அல்லது இந்த சமுதாயத்திற்குச் சொல்ல நினைத்ததையும் தாலாட்டுப்பாடல்கள் மூலம் சொல்லிவிடுகிறாள்.

"தலைப் பிள்ளை பெற்றால் தானே வரும் தாலாட்டு" என்ற பழமொழியும், "தாலாட்டு இசையின் தாயூற்று" என்ற பழமொழியும், "தாலாட்டும் ஒப்பாரியும் தனக்குத் தக்கன" என்ற பழமொழியும் வழக்கத்தில் உள்ளன.

குழந்தைகள் சேட்டை செய்கிறபோது, தாய் திட்டுவதும், ஏதாவது தண்டனை கொடுப்பேன் என்று மிரட்டுவதும் வாடிக்கைதான். இங்கேயும் ஒரு தாய் தன் குழந்தையைப்பார்த்து, "நீ சேட்டை செய்தால் உன் கைக்கு விலங்கு மாட்டிவிடுவேன், வெய்யிலில் உன்னை நிறுத்திவிடுவேன், மழையில் நனைய விட்டுவிடுவேன் என்று மிரட்டுகின்றாள். ஆனால் அந்த மிரட்டலும், உருட்டலும் அழகான ஒரு கவிதையாகத் தாலாட்டில் உருவெடுத்து விடுகிறது. கற்பனையும் கவித்துவமும், எதார்த்தமும் கை கோர்த்து நிற்கும் அந்தத் தாலாட்டுப் பாடல்வரிகளைப் பாருங்கள்.

  "வெண்ணையில் விலங்கு செஞ்சி
   வெயிலில் போட்டு வைப்பேன்
  மண்ணால் விலங்கு செஞ்சி
   மழையில் போட்டு வைப்பேன்!"

என்று அந்தத் தாய் தன் குழந்தையை மிரட்டுகின்றாள். எந்தத் தாயின் உள்ளமாவது, தன் குழந்தைக்கு இரும்பால் விலங்கு செய்து போட வேண்டும் என்று விரும்புமா? உன் கைகளுக்கு விலங்கு மாட்டுவேன் என்று அந்தத் தாய் தன் குழந்தையைப் பார்த்து மிரட்டுகிறாள். ஆனால் அந்த விலங்கை வெண்ணையில் செய்து உன் கையில் மாட்டுவேன் என்கிறாள். என்ன அழகான தண்டனை இது! வெண்ணையில் செய்த விலங்கைத் தன் பிள்ளைக்குச் செய்து மாட்டினாலும், பிள்ளையின் கைகளை அது உறுத்தும் என்று நினைத்த தாய், வெண்ணையில் விலங்கு செய்து போட்டதோடு நிறுத்தாமல், உன்னை வெயிலில் கொண்டு போய் நிறுத்துவேன் என்கிறாள். வெயில் பட்டதும் வெண்ணை உருகி நெய்யாகி விடும்தானே! என்ன அன்பான தண்டனை இது!

மண்ணால் விலங்கு செய்து பிள்ளையின் கைகளில் மாட்டுவேன் என்ற தாய், அத்தோடு விடாமல், உன்னை மழையில் கொண்டுபோய் நிறுத்துவேன் என்கிறாள். மண்ணால் செய்யப்பட்ட விலங்கு, மழைநீர் பட்டதும் கரைந்து விடும்தானே! இது என்ன தண்டனையா..? பரிசா..?

தன் பிள்ளையை அடித்தாலும், நோகாமல்அடிக்கிற தாய்மையின் மேன்மையை நாம் இந்தப் பாடல் வரிகளின் மூலம் அனுபவிக்க முடிகிறது. ஏதோ ஒரு கிராமத்து தாய் ஒருத்தி ஏனோதானோ என்று பாடிய பாட்டு என்று நாம் இந்தத் தாலாட்டுப் பாடலை ஒதுக்கி விட முடியாது. இது ஒரு தரமான, சுவைமிக்க இலக்கியப் பிரதியாகவும் திகழ்கிறது. கனவுகளும், கற்பனையும் கலந்த கவித்துவமான இத்தகைய பாடல்கள் பலவற்றைத் தாலாட்டுகளில் தரிசிக்க முடிகிறது.

இன்னொரு தாய் பாடும் தாலாட்டைக் கேளுங்கள். அவள் ஒரு ஏழைப் பெண். பகல் முழுவதும் காடுகரைகளுக்கு வேலைக்குப் போய் விட்டுக் கருக்கலில் களைப்போடு வீடு திரும்புகிறாள்.

காட்டில் வேலைசெய்கிறபோது கழனியின் கரையில் உள்ள கருவேலமரத்தில் தொட்டில் கட்டித் தன் பிள்ளையை அதில் போட்டுவிட்டு, கழனியில் களைவெட்டியவள் கருக்கலில் களைப்போடு, தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வருகிறாள். அங்கும் அவளுக்கு வேலைகள். மாடு, கன்றுகளுக்குத் தீவனம் வைப்பது, மாடு கன்றுகளுக்குத் தண்ணீர் காட்டுவது, பசுமாட்டில் பால் கறப்பது, அத்தோடு இரவு சாப்பாட்டிற்கு, சோறு பொங்குவது என்று பல வேலைகள் செய்ய வேண்டியதிருக்கிறது.

எனவே கைப்பிள்ளையைத் தொட்டிலில் போட்டுவிட்டு, வீட்டில் உள்ள வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கின்றாள். பசு மாட்டில் பாலைக் கறந்து அதைக் காய்ச்சுகிறாள். தொட்டிலில் போட்ட குழந்தை சிறுநீர் கழித்தது. எனவே ஈரம் தட்டுப் பட்டதால் தூக்கம் கலைந்து விழித்து அழுகிறது, குழந்தை.

இப்போது கணவர் வீட்டிற்கு வந்து விட்டார். வந்தவர், வீட்டிற்குள் கிடந்த கட்டிலில் போய் படுத்துக் கொண்டார். கட்டிலில் படுத்துக் கிடந்த கணவர், பகவெல்லாம் வேலை செய்து விட்டுக் களைத்துப் போய் நம் மனைவி வந்திருக்கிறாளே.. என்று நினைத்து மனைவியின் மேல் இரக்கம் வைக்காமல், "அடியே கட்டிலுக்கு வா..." என்று காதல் சுகத்திற்கு அழைக்கின்றான். தொட்டிலில் குழந்தை அழுது கொண்டிருக்கிறது. அடுப்பில் பால் பொங்கிக் கொண்டிருக்கிறது. பாலைக் காய்ச்சும்போது, மிக கவனமாகக் காய்ச்சவேண்டும். அடுப்பில் தீ அதிகமாக எரிந்தால் பால் பொங்கி வழிந்துவிடும். எனவே கவனமாகப் பார்த்துப் பாலைக் காய்ச்ச வேண்டியதிருக்கிறது. அது ஒரு புறம். தொட்டிலில் போட்ட பாலகன் அழுகிறான் அது ஒரு புறம்.

கணவன், பால் அடுப்பில் காய்வதையும் குழந்தை தொட்டிலில் கிடந்து அழுவதையும் பார்த்துக் கொண்டு கட்டிலில் படுத்துக் கிடக்கும் கணவன், பாலோடும், பாலகனோடும் கிடந்து அல்லாடும் தன் இல்லாளுக்கு எந்த வகையிலாவது உதவி செய்ய முன் வரவேண்டும். ஆனால், அவனோ, இடம், பொருள், இங்கிதம் தெரியாமல் அவளைக் கட்டிலுக்கு அழைக்கிறான் கண் ஜாடை காட்டி.

இத்தகைய இக்கட்டான சூழலில் அந்தப் பெண் பாட ஆரம்பிக்கின்றாள், இப்படி...

  "பாலும் அடுப்பினிலே
  பாலகனோ தொட்டிலிலே
  பாலகனைப் பெற்றப்
  பாண்டியரோ கட்டிலிலே..."

என்று சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப என்ன பொருத்தமாகப் பாடல்வரிகள் வந்து விழுந்திருக்கிறது பாருங்கள்.

அவள் தன் கணவனைப் பாண்டியன் என்கிறாள். பாண்டிய மன்னன் என்பதைத் தான் 'பாண்டியன்' என்று சுருக்கமாகக் கூறுகின்றாள். இங்கு 'நீ என்ன பாண்டியனா..?' என்று தன் கணவனைப் பார்த்து கேலியாகக் கிண்டலாக அங்கதச் சுவையுடன் பேசுகிறாள்.

கணவன் கட்டில் சுகம் வேண்டிக் கட்டிலில் படுத்துக் கிடக்கிறான். மனைவிக்கு எந்த விதத்திலும் அவன் உதவ முன் வரவில்லை என்ற செய்திகளை நாம் வெளிப்படையாக இந்தப் பாடல் வரிகளின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒரு பெண் படும் பாட்டை இந்தப் பிரதி மிக எளிதாக நமக்குச் சொல்கிறது.

அதே பெண், பாலைக் காய்ச்சி எடுத்து, அதை உரியின் மேல் பாதுகாப்பாக வைத்துவிட்டு, அழுகின்ற பிள்ளையைத் தாலாட்டுப் பாடி ஆறுதல் படுத்தி தொட்டிலின் அருகில் வந்து, தொட்டிலை ஆட்டிக் கொண்டே

  "யாரடித்தார் நீ அழுதாய்?
  அடித்தாரைச் சொல்லி அழு!"

என்று நீட்டி முழக்கித் தாலாட்டுகிறாள்.

கணவன் எசப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுவதைப் போல, கட்டிலில் படுத்துக் கொண்டே, ராகத்தோடு பின்வருமாறு பாடுகிறான்,

  "யாரும் அடிக்கவில்லை
  ஐவிரலும் தீண்டவில்லை
  தானே அழுகின்றான்
  'தம்பி துணை வேண்டும்' என்று"

வாசகர்களுக்கு கணவன் பாடும் பாட்டின் பொருள் புரியும் என்று நம்புகிறேன். பூடகமான இந்த வரிகளில், மனைவியை காதல் சுகத்திற்காகக் கட்டிலுக்கு அழைக்கின்ற கணவனின் மனநிலை தெரிகிறது.

அன்பையும், பாசத்தையும், ஆசையுடன் பிசைந்து மொழியின் அழகில் குழைத்து இயற்றப்பட்ட தாலாட்டுப் பாடல்கள் மிகை எதார்த்தக் கற்பனைகளுடன் இருந்தாலும் அவைகள் கேட்கவும், படிக்கவும் ரஸமான சுகானுபவத்தைத் தருகின்றன.

ஒரு தாய் பாடும் தாலாட்டுப் பாடலைக் கேளுங்கள்,

  "கானல் அடிக்கிதுன்னு
  கையாலே குடை பிடிச்சு
  வெய்யில் அடிக்கிதுன்னு
  விரலாலே குடை பிடிச்சு

  தரையிலே விட்டா
  தண்டைக்கால் நோகுமின்னு
  மார்மேல் தொட்டில் கட்டி
  மடிமேல் நடை பழக்கி
  தோள்மேல் தொட்டில் கட்டி
  தொடைமேல் நடை பழக்கி..."

என்று பாச வரிகள் நீள்கிறது.

தாலாட்டுப் பாடல்களில் உள்ள வர்ணனைகளும், அணி நலன்களும், அதைப் படிப்பவர்களுக்கும், தாயின் குரலில் கேட்பவர்களுக்கும் ஒருவித கிலுகிலுப்பைத் தருகின்றன. இலக்கியச் சுவை மிகுந்த இத்தகைய தாலாட்டுப் பாடல்கள் படிக்கும் தோறும் நமக்குள் ஒருவித பரவசத்தை விதைக்கின்றன.

  "பார்த்தியனூர் சந்தையிலே
  பார்த்தெடுத்த பவழமே!
  கிளியனூர் சந்தையிலே
  தேர்ந்தெடுத்த ரத்தினமே!

  *
 
  வாசமுள்ள கஸ்தூரியே..!
  வாடாத மரிக்கொழுந்தே..
  பூசுகிற சந்தனமே,
  பொற்பூ புன்னகையே..!

  *

  மல்லிகை மொட்டே
  மறையாத சூரியனே..!
  மாசி மாவடுவோ
  வைகாசி மாம்பழமோ
  கோடைப் பலாவோ
  கொட்டிவச்ச ரத்தினமோ
  குத்தாலச் சாரலோ
  குவிச்சி வச்ச ரத்தினமோ
  கண்ணே கண்ணுறங்கு
  கண்மணியே நீயுறங்கு...."

என நீளும் தாலாட்டுப் பாடல்களில், வர்ணனையின் அழகைத் தரிசிக்க முடிகிறது. தாலாட்டுப் பாடல்கள் என்ற நாட்டார் செல்வங்களைப் பாதுகாப்பது தமிழுக்கும், தமிழிசைக்கும் நன்மை பயக்கும்.

No comments: