கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-11 நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்

கணவன் இறந்து போன ஏழாவது அல்லது எட்டாவது மாதத்தில் தாலியறுத்த பெண் குழந்தை பெற்றால் ஊரார் அவளது கற்பைப் பற்றிச் சந்தேகப்படுவார்கள். எனவே ’கணவன் இறக்கும் இந்நாளையில் மனைவி கர்ப்பமுற்றிருக்கிறாள் என்பதை ஊர், உலகத்திற்கு அறிவிப்பதற்காக, மூதாட்டி ஒருத்தி செம்பு நீரில் பூக்களைப் போடும் சடங்கை நிகழ்த்துகிறாள்.’
இறந்தவனின் (கணவனின்) சடலம் வீட்டினுள் ஒரு மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் போது, சில பெண்கள், ஆண்கள் கூடி நிற்கும் இடத்திற்குச் செல்வார்கள். அப்பெண்களின் வயதான மூதாட்டி ஒருத்தி நன்றாக மினுக்கப்பட்ட (தேய்த்து சுத்தமாக கழுவப்பட்ட) பித்தளைச் செம்பு ஒன்றைத் தன் கையில் எடுத்துக் கொண்டு, ஆண்களின் நடுவே சென்று சிறிது மணலைக்கொட்டி, அம்மணலின் மீது பித்தளைச் செம்பை (செம்பு ஆடாமல், அசையாமல், உருளாமல் இருக்கத்தான் மணல்) வைப்பாள். மூதாட்டி பித்தளைச் செம்பை எடுத்துக் கொண்டு, சபை (ஆண்கள் கூடி நிற்கும் இடம்) நடுவே வரும் போதே, ஊரார் "இறந்தவரின் மனைவி முழுகாமல் இருக்கிறாள்" என்ற செய்தியைப் புரிந்து கொள்வார்கள்.
மணல் மேல் வைத்த செம்பில் அந்த மூதாட்டி (செம்பு நிறையும் வரை) தண்ணீரை ஊற்றுவாள். இப்போது தாலியறுக்கப்போகும் பெண்ணுக்கு ரொம்ப (மிகவும்) சொந்தக்காரியான சில பெண்கள் அந்த மூதாட்டியைச் சுற்றி நின்று கொள்வார்கள்.
மூதாட்டி முதலில் தன் மடியில் மறைத்து வைத்திருக்கும் ஒரு பிச்சிப் பூவை எடுத்து நிறை செம்பு நீரில் மிதக்கவிடுவாள். அப்போது செம்பைச் சுற்றி நிற்கும் பெண்கள் சோகமாக உச்சுக் கொட்டுவார்கள். மூதாட்டியின் செயலைப் பார்த்து ’இறந்து போனவனின் மனைவி முழுகாமல் இருக்கிறாள்’ என்பதை ஊரார் புரிந்து கொள்வார்கள். பிறகு மூதாட்டி, இன்னொரு பிச்சிப் பூவை எடுத்து நிறை செம்பு நீரில் போடுவாள். இப்போது ஊரார் ’இறந்து போனவரின் மனைவி இரண்டு மாதக் கருவை அவள் வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள்’ என்பதைப் புரிந்து கொள்வார்கள். மீண்டும் மூதாட்டி தன் மடியில் மறைத்து வைத்திருக்கும் பிச்சிப் பூ ஒன்றை எடுத்து, நிறை செம்பு (நீர் நிறைந்த செம்பு) நீரில் மிதக்கவிட்டால், கணவனை இழந்தவள் மூன்று மாதம் கர்ப்பமுற்றிருக்கிறாள் என்பதை ஊரார் புரிந்து கொள்வர். இந்தச் சடங்கு திருநெல்வேலி மாவட்டத்தில் யாதவ சமுதாய மக்களிடம் இன்னும் நடைமுறையில் உள்ளது.
பிள்ளத்தாச்சியான தாய் இறந்தால், தாயின் வயிற்றில் இருந்த ஏழு அல்லது எட்டுமாத சிசுவும் சேர்ந்தே இறந்துவிடும். இப்படி இறந்த கர்ப்பிணித் தாயின் பிணத்தை எரிக்கும் முன், அல்லது புதைக்கும் முன் தாயின் வயிற்றை ஒரு கத்தியால் கீறி, தாயின் வயிற்றில் உள்ள பிண்டத்தை (இறந்த குழந்தையை) வெளியே எடுத்து, அதைத் தனியே புதைப்பார்கள். தாயுடன் சேர்த்துப் புதைக்க மாட்டார்கள்.
ஆறுமாதக் கைக்குழந்தை இறந்துவிட்டால், இக்குழந்தையை அடக்கம் செய்யும் முன், பிணமான ஆண் குழந்தையின் காது மடல்களில் காட்டக் கருவை முள் கொண்டு ஓட்டை போடுவார்கள். இறந்த அக்குழந்தை பெண்ணாக இருந்தால், அக்குழந்தையின் மூக்கிலும் காட்டுமுள் கொண்டு, மூக்குத்தி போடும் இடத்தில் குத்துவார்கள். இறந்த குழந்தைகளுக்குக் காது குத்துவதன் மூலம், மூக்கைக் குத்துவதன் மூலம் அக்குழந்தையைக் கோரைப் படுத்துகிறார்கள். 'கோரை' (குறை - காயம்) பாடாத குழந்தையைப் புதைத்தால், அக்குழந்தையை மாந்திரிகர்கள் தோண்டி எடுத்துக் கொண்டு சென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் சில இனக்குழு மக்கள் இச்சடங்கைச் செய்கின்றார்கள்.
சில சமுதாயத்தில் யாரேனும் இறந்துவிட்டால், இறந்த வீட்டின் பங்காளிகள் பழைய மண் சட்டிகள், பழைய பாய், பழைய சுளவு (முறம்), தேய்ந்த விளக்குமாறு இவற்றோடு சூடமும் (கற்பூரமும்) சேர்த்து ஊரின் எல்லையில் உள்ள பாதையோரம் போட்டு விடுகின்றார்கள். இப்பொருள்கள் இறந்தவர், இறந்தவள் பயன்படுத்திய பொருள்களாக இருக்கும். இறந்தவர் பிணம் அந்த வீட்டை விட்டு வெளியேறு முன், அவர் பயன்படுத்திய பொருள்களை அவருக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேற்றி விடுகின்றனர். இச்சடங்கிற்கு ’வழிகாட்டி விடுதல்’ என்று பெயர்.
சில சமுதாயத்தில் சாவு நிகழ்ந்த வீட்டில் பறை ஒலியை எழுப்பச் செய்வார்கள். இதற்குச் 'சாவுப்பறை' என்று பெயர். சாவு வீட்டில் பறை அடிப்பவர்கள் ஒரே சுதியில் அடித்துக் கொண்டே இருக்க மாட்டார்கள். முதலில் எழவுச் செய்தியை ஊராருக்கு அறிவிக்க ஒரு விதமாகவும், எழவு விழுந்தபின், மாமன் கோடி வரும் போது வேறு விதமாகவும், பிணம் குளிப்பாட்டப்படும் போது மற்றோர் விதமாகவும், இறுதி ஊர்வலம் ஆரம்பிக்கப் போகிறது என்பதை ஒருவிதமாகவும், நுணுக்கமான வேறுபாட்டுடன் பறையை அடிப்பார்கள். பறையின் ஓசையை வைத்தே இப்போது எழவு வீட்டில் என்ன சடங்கு நடக்கிறது என்பதை ஊர் மக்களும், ஊருக்குள் துஷ்டி கேட்டு வருகின்ற வெளியூர்க்காரர்களும் யூகித்துக் கொள்வார்கள். 'சாப்பறை' யின் சத்தம் பொதுப்பறையின் ஒலியில் இருந்து வேறுபடும். அதிலும் சடங்குகளைக் குறிக்க நுட்பமான வேறுபாட்டுடன் இச்சாப்பறை ஒலிக்கப்படுகிறது. இசையின் நுட்பங்களை பறை முழக்கும் கலைஞர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் என்ற செய்தியையும், அந்த நுட்பமான இசை வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாக கிராமத்து மக்களும் திகழ்ந்திருக்கிறார்கள் என்பதையும், இப்பதிவின் மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
சில ஊர்களில் துஷ்டி விழுந்துவிட்டது என்பதை அறிவிக்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு வெடியை வெடிக்கச் செய்கிறார்கள். இவ்வெடியை கிராமத்து மக்களே தயாரித்துக் கொள்கிறார்கள். இவ்வெடிக்கு ’கதனை வெடி’ என்று பெயர்.
பிணத்தை எடுக்கப் போகும்போது மட்டும், தொடர்ந்து மூன்று கதனை வெடிகளை ஒன்றன்பின் ஒன்றாக வெடிக்கச் செய்கிறார்கள். மூன்று முறை தொடர்ந்து வெடிக்கும் வெடியின் ஓசையைக் கேட்டுக் கிராமத்து மக்கள் பிண ஊர்வலம் புறப்படப் போகிறது என்பதைப் புரிந்து கொண்டு, ஆங்காங்கே நிற்பவர்கள் எல்லாம் ஒன்று திரண்டு எழவு வீட்டின் முன் கூடி விடுகிறார்கள்.
கிறிஸ்தவ சமயத்திலும் ஊருக்கு ஊர், துக்க வீட்டுச் செய்தியை அறிவிக்கும் முறைகள் மாறுபட்டுக் காணப்படுகிறது.
சில ஊர் சர்ச்களில் இரண்டு விதமான மணிகளை (சிறிய மணி, பெரிய மணி அல்லது வெளிநாட்டில் (ஜெர்மன் நாட்டில்) இருந்து வரவழைக்கப்பட்ட மணி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மணி) வைத்திருக்கிறார்கள். இரண்டு மணிகளும் வெவ்வேறு சத்தத்தைக் கொண்டதாக இருக்கும். எது ஆலய மணியின் ஓசை, எது துக்க மணி ஓசை என்று ஊர் மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.
சில ஊர்களில் ஒரே மணிதான் இருக்கும். அவர்கள் மணியை வேறுபடுத்தி அடிப்பதன் மூலம் துக்கச் செய்தியை அறிவிக்கின்றார்கள்.
"டொயிங், டொயிங், டொயிங்" என்பதை 3 தட்டு எனப் புரிந்து கொண்டால் பின்வரும் வகைகளில் துக்க மணியடிக்கப்படுவதைப் புரிந்து கொள்கிறார்கள்.
குழந்தை இறந்துவிட்டால் - 3 தட்டு
பெண் இறந்துவிட்டால் - 4 தட்டு
ஆண் இறந்துவிட்டால் - 5 தட்டு
அவ்வூர் பங்கு தந்தை (மதகுரு) இறந்துவிட்டால் - 6 தட்டு
மறை மாவட்ட கத்தோலிக்க குரு இறந்துவிட்டால் - 7 தட்டு
என்று ஒரு முறைமையுடன் ஆலய மணியை அடிப்பதைக் கொண்டு, அன்று இறந்தது குழந்தையா, ஆணா, பெண்ணா, பங்கு தந்தையா... என்று ஊர் மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.
(ஆதாரம் : அருள் தந்தை சேயர் அந்தோணி அவர்கள் எழுதியுள்ள 'சேதி' என்ற நூல்)
தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத பழங்காலத்தில், மேல் சாதிக்காரர்களின் சாவுச் செய்தியைக் கீழ்ச்சாதிக்காரர்களில் சிலர் ஊர் ஊராகச் சென்று சொன்னார்கள். இப்படி எழவுச் செய்தி சொல்லப்போகும் நபருக்கு, எழவு வீட்டில் இருந்து ஒரு கூலியைக் கொடுத்து அனுப்புவார்கள். எழவு சொல்லி வந்தவருக்கு (எழவு செய்தியைச் சொன்ன நபருக்கு) அச்செய்தியைப் பெற்றுக் கொண்ட குடும்பத் தலைவரும் கூலியாகக் கொஞ்சம் பணம் கொடுப்பார். இதற்கு ’மாத்தாயம்’ என்று பெயர். மாத்தாயக் கூலியை, எங்கு யாரிடம் கடன் வாங்கியாவது உடனே கொடுத்துவிட வேண்டும். (இதில் மட்டும் தவணை சொல்லவோ, கடன் சொல்லவோ கூடாது) இந்த வழக்கத்தின் அடிப்படையாகப் பிறந்ததுதான், "மாத்தாயக் கூலியும், மாரடிச்ச கூலியும் மடிமேல" என்பது.
சில ஊர்களில் சமுதாய நாட்டாமையைத் தேர்ந்தெடுக்கும்போதே 'ஓடும் பிள்ளை' என்ற ஊர் கூட்டியையும் தேர்ந்தெடுத்து விடுவார்கள். ஓடும் பிள்ளைதான் ஊர்க் கூட்டம் கூடப்போகிறது என்பதை வீடு, வீடாகப் போய்ச் சொல்வார். ஓடும் பிள்ளைதான் ஊர் நாட்டாமையிடம் செய்தியைச் சொல்லி அழைத்து வருவார். 'ஓடும் பிள்ளை' போய் அழைத்தால்தான் ஊர்க் கூட்டத்திற்கு நாட்டாமையும் வருவார். ஓடும்பிள்ளை ஊர் மக்களுக்கும், நாட்டாமைக்கும் நம்பிக்கைக்குரியவராகவும் செயல்படுவார்.
திருமணம், கிரகப்பிரவேசம், பூப்புனித நீராட்டு போன்ற சுபகாரியங்களுக்கு சுபவிழாவைக் கொண்டாடுகிறவர்கள் நேரில் போய் அழைத்தால்தான் சொந்தக்காரர்கள் சுபவிழாவிற்கு வருவார்கள். ஆனால் துக்கம் சார்ந்த வீட்டிற்கு தகவல் காதில் விழுந்த உடன் போய்விடுவார்கள்.
சொந்த பந்தங்களின் சண்டை, சச்சரவுகள் துக்க வீட்டில் முறிந்துவிடும். துக்க வீட்டுக்காரரும், யார் இன்னும் நம் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வரவில்லை என்று மனதிலேயே கணக்கு வைத்திருப்பார். இந்தச் செய்தியை உழவுக்கள்ளம் இருந்தாலும் எழவுக்கள்ளம் இருக்கக்கூடாது என்ற பழமொழி வலியுறுத்துகிறது.
எழவு வீட்டிற்கு அழையாத விருந்தாளியாக செல்லும் சொந்தக்காரர்கள் மங்கல காரியங்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்தால்தான் செல்வார்கள். கல்யாணத்திற்கு சொந்தக்காரர்களை அழைப்பதிலேயே பல முறைகள் அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்தது. சேக்காளிமார்களைத் தற்செயலாகச் சந்தித்துக் கொள்ளும் இடத்தில் கூப்பிட்டாலும் போதும். சொந்தக்காரர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க வேண்டும். சில சமுதாயத்தில் சொக்காரர்களையும், சம்பந்தக்காரர்களையும் வெற்றிலை, பாக்குடன் பணமும் வைத்து அழைக்க வேண்டும் என்ற 'கட்டு' உள்ளது. இந்தக் கட்டிற்கு (வழக்கத்திற்கு) 'பணம் பாக்கு வைத்தல்' என்று பெயர். இந்தப் பணம் பாக்கையும் "யாருக்கு முதலில் வைப்பது?" என்பதிலும் சில எழுதாத சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
அறிவியல் முன்னேற்றத்தாலும், தகவல் தொடர்பு சாதனங்களின் அசுர வளர்ச்சியினாலும் உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற புதிய பொருளாதாரக் கொள்கைகளாலும் நம் முன்னோர்கள் கையாண்டு வந்த இத்தகைய வினோதமான பழக்க வழக்கங்கள் இன்று வழக்கொழிந்து போய்விட்டன. என்றாலும் இந்தப் பழக்க வழக்கங்களின் பின்னால் உள்ள உளவியல் சார்ந்த அணுகுமுறைகளுக்காகவாவது இத்தகைய செய்திகளை எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.

No comments: