கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-29 விடுகதைகள்

பாமர மக்கள் வாய்மொழி மூலமாகப் படைத்து மக்கள் மத்தியில் உலவவிட்ட இலக்கிய வகைகளுள் ‘விடுகதை’ என்பது குறிப்பிடத்தக்ககதாகும்.

விடுகதைகளின் சொற்செட்டும், அமைப்பு முறைகளும் தனியே ஆராயத்தக்கவை. கிராமத்து மக்கள் மிக இயல்பாக விடுகதைகளைத் தன் வேலைகளுக்கு இடையே பதிவு செய்து விடுகிறார்கள்.

காடு கரைகளில் வேலை செய்யும்போது ஒரு பெண் விடுகதை ஒன்றைப் போட, மற்றப் பெண்கள் அவ்விடுகதைக்கான விடையைக் கூற முயற்சி செய்வார்கள். கடைசியாகச் சரியான விடையைச் சொல்லும் பெண் மற்றப் பெண்களின் பாராட்டைப் பெறுவாள்.

வேலைத்தலத்தில், விடுகதையையும் அதற்கான விடையையும் தெரிந்து கொண்ட பெண்களில் சிலர், அக்கதையை மீண்டும் மீண்டும் மனதிற்குள்ளேயே பல முறை சொல்லிப்பார்த்து, தன் நினைவில் பதியவைத்துக் கொள்வாள்.

தன் மனதில் (நினைவில்) பதிந்த அந்த விடுகதையை அப்பெண், புதியவள்களுடன் காடு, கரைகளில் வேலை செய்யும்போது போடுவாள். அக்கதைக்கு மற்றப் பெண்கள் விடை சொல்ல முயல்வார்கள். இப்படியாக வாய்மொழி மூலமாக விடுகதைகள் பரவுகின்றன.

விடுகதைகள் நினைவாற்றலை வளர்க்கின்றன. நவீனத்துவமான, புதிரான மொழிநடையை உருவாக்குகின்றன. பொது மக்களின் கற்பனை வளத்தைப் பெருக்க முயல்கின்றன.

விடுகதைகளை எங்கள் வட்டாரத்தில் ‘அழிப்பாங்கதைகள்’ என்று சொல்கிறார்கள். பூட்டுவதும், திறப்பதுமான ஒருவித புதிர்த்தன்மை கொண்டதால் (விடை மூலம் விடுவிக்க வேண்டியதிருப்பதால்) இத்தகைய படைப்புக்களை விடுகதைகள் என்று கூறினார்கள் போலும்.

விடுகதைகளுக்கான விடையைக் கூறுபவர்களுக்குச் சன்மானம் எதுவும் கொடுக்கும் வழக்கம், நடைமுறையில் இல்லை. ஆனால் ‘கற்பனை மகுடம்’ ஒன்றை விடுகதை சொல்லிகள் விடை சொன்னவருக்குச் சூட்டி மகிழ்கிறார்கள்.

சில விடுகதைகள் மிக நீளமானதாக இருக்கும். விடுகதைகளுக்கு அடிவரையறை இல்லை. ஒரே வரியில் உள்ள விடுகதையும் உண்டு. முப்பது, நாற்பது வரிகள் உடைய விடுகதையும் உண்டு.

மிக நீண்ட விடுகதையின் முடிவில் ‘இந்தக் கதையை அழிப்பவர்க்கு, சென்னப் பட்டணம் பட்டும் (ஆண்களுக்குப் பட்டுவேட்டி/பெண்களுக்குப் பட்டுச் சேலை), இராம-கிருஷ்ண மேடையும் தாரேன்’ என்று இருக்கும்.

சென்னப்பட்டணம் (சென்னைப் பட்டினம் அல்ல) பட்டு என்பதும், இராம-கிருஷ்ண மேடை என்பதும் கற்பனையாக விடுகதையை அழிப்பவர்க்கு, விடுகதை சொல்லிகள் கொடுக்கும் கௌரவமாகும். இந்தக் கற்பனைப் பரிசு என்பதும் சுவாரஸ்யமான விசயம்தான்.

விடுகதைகள் எப்போது தோன்றியது என அறுதியிட்டுக் கூற முடியாது. அனேகமாக, எழுத்து மொழி மானுட சமூகத்தில் தோன்றுவதற்கு முன்பே, மக்கள் வாய்மொழியாக மட்டும் மொழியைப் பயன்படுத்தி வந்த காலகட்டத்திலேயே விடுகதைகளை உருவாக்கிச் சொல்லும் வழக்கம் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

விடுகதைகளின் கனபரிமானம், ஆளுக்குத் தக மாறும் தன்மை கொண்டதாக இருக்கும்.

குழந்தைகளுக்கு முன்னால், ஒருவர், விடுகதை போடும்போது, மிக எளிய, நேரடியாக விடை கூறக்தக்க கதைகளைப் போடுவார். அதேசமயம் வாலிபர்கள் முன் விடுகதை போடும்போது விடுகதைசொல்லி, சற்றே கிலுகிலுப்பான, பாலியல் தொனியுடைய விடுகதைகளை முன்வைப்பார். வயோதிகர்களோ, கற்றறிந்தவர்களோ கூடி இருந்தால் அவர்கள்முன் தத்துவார்த்தமான, எளிதாக விடைகூற முடியாத புதிர்க் கதைகளைப் போடுவார்.

ஆக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்துவிதமான பருவத்தினருக்கும் ஏற்ற விடுகதைகள் புழக்கத்தில் உள்ளன.

ஆண்கள் தங்களுக்குள் மட்டும் கூறிச் சிரித்து மகிழும், விடுகதைகளும், பெண்கள் தங்களுக்குள் மட்டும் போட்டுக் கொள்ளும், ரகசியமான கதைகளும் நடப்பில் உளளன.

மிகப் பழமையான இந்த நாட்டார் சொல்கதை வடிவம், இன்றுவரை புத்துயிர்ப்புடன் எழுந்து மொழியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

தொல்காப்பியர், ‘பிசி’ என்று இந்தவிடுகதை இலக்கியத்திற்கான, இலக்கணத்தை வகுத்துள்ளார். இன்றைக்கு வெளிவருகிற சில குழந்தைகளுக்கான இதழ்கள், அவர்களுக்கு ஏற்ற விடுகதைகளைப் புதிது புதிதாகப் படைத்துப் பிரசுரித்துக் கொண்டிருக்கின்றன.

ராணி வார இதழ், காலம்தோறும் புதிது புதிதாக மக்கள் மத்தியில் உருவாகும் விடுகதைகளைத் தொடர்ந்து பதிவு செய்தவண்ணம் உள்ளது. நாட்டார் கலை வடிவங்களில் ‘விடுகதை’ என்பது மட்டும், இன்றுவரை பேசப்படுவதாகவும், ரசிக்கப்படுவதாகவும் உள்ளது.

விடுகதை என்ற இந்த வகைமை, உலகம் முழுவதும் எல்லா மொழிகளிலும் உள்ளது. மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் விடுகதைகள் உருவாகியுள்ளன. யாராவது, தமிழ் மொழியில் உள்ள விடுகதைகளோடு, ஏனைய மொழியில் உள்ள விடுகதைகளை ஒப்பாய்வு செய்தால் நல்லது.

விடுகதைகள் காலம்தோறும் தோன்றிய வண்ணம் உள்ளன. அவைகளில் சில நிலம் சார்ந்த மணமுடையதாகவும் இருக்கின்றன.

குறிஞ்சி நிலத்தில் தோன்றிய விடுகதைகள், மலையைப் பற்றியும், அதன் வனப்பையும், அழகையும், அப்பகுதியில் உள்ள தாவரங்கள் பற்றியும் பேசுகின்றன. அதேபோல முல்லை, மருதம், நெய்தல் என்று நிலம் சார்ந்த கருப்பொருளுக்கு ஏற்ப, விடுகதைகளின் பாடு பொருள்கள் திகழ்கின்றன.

மருத நிலத்தில் தோன்றிய விடுகதை, கழனியில் விளையும் தாவரங்களைப் பற்றிப் பேசுகின்றன. சான்றாக,

‘பச்சைப் பசேல் என்றிருக்கும்



பாகற்காயும் அல்ல

பக்கமெல்லாம் முள் இருக்கும்

பலாக்காயும் அல்ல

உள்ளே வெளுத்திருக்கும்

தேங்காயுமல்ல

உருக்கினால் நெய்வடியும்

வெண்ணையுமல்ல. .’

என்ற விடுகதையைக் கூறலாம்.

இந்த விடுகதையின் விடை ‘ஆமணக்கு’ என்பதாகும். ஆமணக்கு என்பது, மருத நிலத்தில் அதிகமாக விளையும் தாவரம். இந்தத் தாவரத்தின் விதையை ஆமணக்கு முத்து என்று சொல்வார்கள். ஆமணக்கு முத்தில் இருந்ததுதான் விளக்கெண்ணை தயாரிக்கிறார்கள்.

ஆமணக்கு என்ற தாவரத்தின் காயை, நேரில் பார்த்தவர்கள் மட்டுமே, குறிப்பாக மருதநில மக்கள் மட்டுமே, இந்தப் புதிர்க் கதையை நன்கு அனுபவிக்க முடியும்.

இந்த விடுகதை வரிக்கு வரி ஒரு புதிரைச் சொல்லி அதற்கு ஏற்ற ஒரு விடையையும் அடுத்த வரியில் சொல்லி அவ்விடையையும் மறுத்து, வாசகனை பொதுவிடை தேடச் சொல்லித் தூண்டுகிறது. இதுபோன்ற விடுகதைகளின் அமைப்பு முறைகளைப்பற்றி மட்டும் தனியே ஒரு கட்டுரை எழுதலாம்.

விடுகதையில் மொழி விளையாட்டுகளுக்கும், சொற்சேர்க்கை களுக்கும் தனி இடம் உள்ளது. பல விடுகதைகள், சொற்சாமர்த்தியத்துடன் திகழ்கின்றன. அமைப்பியல் நோக்கிலும் விடுகதைகளைப்பற்றி ஆய்வுகள் நிகழ்த்த இடம் உள்ளது.

சான்றாக,

பல்லிருக்கிறவன் கடிக்க



மாட்டேன் என்கிறான்

பல்லிலாதவன் கடிக்கிறான்

அவர்கள் யார்?

என்ற விடுகதையைப் பாருங்கள்.

‘பல்’ என்ற சொல் சாதாரணமாகப் புழக்கத்தில் இருக்கும் சொற்களைத் தவிர்த்து இங்கு, சீப்பின் பல்லைக் குறித்துவருகிறது. ‘சீப்பிற்கும் பல் உண்டு’ என்ற ரீதியில் பொருள் தேடினால், விடுகதையின் முதல் இரண்டு வரிகளுக்கும் ‘சீப்பு’ என்ற விடை கிடைக்கும்.

இனி, ‘கடிக்கும்’ என்ற சொல்லாட்சி, எதார்த்தமான பொருள் நிலையில் இருந்து விலகி, ‘புதுச்செருப்பும் கடிக்கும்’ என்ற ரீதியில் நாம் பொருளைத் தேடினால் மூன்றாவது வரிக்கு விடையாகப் ‘புதுச்செருப்பு’ என்று தீர்மானிக்கலாம்.

‘பல்’ என்ற சொல்லும் அதற்குத் தொடர்புடைய ‘கடிக்கும்’ என்ற சொல்லும், நடைமுறை பிசகிய வெளியில் பொருள் தேடும் படி இவ்விடுகதையில் இருப்புக் கொண்டுள்ளன. இந்த மாதிரியாக, விடுகதையின் கட்டமைப்புக் குறித்தும் ஆய்வுகளை நிகழ்த்தலாம்.

நாட்டார் பாடல்களில், நாட்டார் கதைகளில் பழமொழிகளில், பாலியல் பதிவுகள் இருப்பதுபோல விடுகதைகளிலும் பாலியல் பதிவுகள் உள்ளன.

விடுகதைகளில் நேரடியான பாலியல் பதிவு உள்ளதுபோல, மறைமுகமான பாலியல் சுவை உள்ள அழிப்பாங்கதைகளும் உள்ளன.

சில விடுகதைகளைக் கேட்கும்போது பாலியல் சுவை வெளிப்படையாகத் தெரியும். ஆனால் உண்மையில் உள்ளுறையாக, இறைச்சிப் பொருளாக, குறியீடாக, அக்கதைகள் வேறொரு பொருளைத்தரும். இத்தகைய இரட்டுற மொழிதல் தொனியுடைய விடுகதைகளுக்கு கிராமத்து இளவட்டப் பிள்ளைகளிடையே (ஆண், பெண் இருபாலரிலும்) ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது.

சான்றாக, அத்தகைய விடுகதை ஒன்றை இங்கே பதிவு செய்கிறேன். பெண் ஒருத்தி சொல்வது போன்று இந்த விடுகதையின் அமைப்பு உள்ளது.

ரெண்டுங் கெட்டவரே,

ரெண்டாங் கெட்டவரே,

ரெண்டு காலையும்





தூக்கிக்கிட்டு

உள்ளே விட்டவரே!

இந்த விடுகதையைக் கேட்டவுடன் இளவட்டப் பிள்ளைகளின் கற்பனைக் குதிரை தட்டப்பட்டு, கனவு நிலையில் பாலியல் பொருளை யூகித்துச் சிரித்து மகிழ்வர்.

உண்மையில் இந்த புதிர்க் கதையின் விடை, கால்சட்டை அதாவது ‘டவுசர்’ என்பதாகும்.

இப்போது மீண்டும் ஒருமுறை அந்த விடுகதையைப் படித்துப் பார்த்து ‘டவுசர்’ என்ற விடையுடன் கதையைப் பொருத்திப் பாருங்கள் . சரியாக இருக்கும்.

ஓசை நயம் கருதி, ‘ரெண்டுங்கெட்டவரே, ரெண்டாங்கெட்டவரே’ என்ற தொடர் சிறிய மாற்றத்துடன் இருமுறை இந்த விடுகதையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நேரடியாகவே பாலியல் சார்ந்த விடையைக் கொண்ட விடுகதைகளும் கிராமாந்தரங்களில் நடப்பில் உள்ளது. அத்தகைய விடுகதைகளில் ஒன்றையும் வாசகர்கள் முன்வைக்கிறேன்.

அக்கறையும் இக்கரையும் கோரை,

நடுவுல ஓடை - அது



நல்லவுக, பெரியவுக,

அமைகிற மேடை.



அது என்ன?

இந்த விடுகதையின் விடை நேரடியாகவே பெண்குறியைக் குறிக்கிறது.

விடுகதைகளில் கதைப் பாங்கும் உள்ளது. புதிர்த்தன்மையுடைய நாட்டார் கதைகள் சில, கதைக்கணக்குகள் சில, நீண்ட அழிப்பாங்கதைகளாகவே திகழ்கின்றன.

புதிர்கதைகளின் இந்தக் கற்பனை வெளி, சிந்தனையுடன் வாசகனை ரசிக்க வைக்கிறது