கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-10 ஞானவல்லி மெகர்பானுவின் மசாலாக்களும் , இளவரசன் அப்பாசின் பதில்களும்

நாட்டுப்புறவியலுக்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பும் உள்ளது. குறிப்பாக பக்கீர்ஷாக்கள் என்ற இஸ்லாமிய கலையாளர்கள் செய்துள்ள பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தக் கட்டுரையில் பக்கீர்கள் பாடும் கதைப் பாடல்களில் காணப்படும் கேள்வி - பதில்களைப் பற்றி மட்டும் சில செய்திகளை வாசகர்கள் முன் வைக்கிறேன்.
பக்கீர்கள் கிராமங்களில் இரவு நேரத்தில் ஒரு குழுவாக அமர்ந்து, சில கதைப் பாடல்களைப் பாடுவார்கள். அப்படிப்பாடும் கதைப் பாடல்களில் ஒன்று 'நூறு மசாலாக்கதை' என்பது.
'மசாலா' என்பது பாரசீகச் சொல். இச்சொல்லுக்கு வினா அல்லது புதிர் என்று நாம் பொருள் கொள்ளலாம்.
சீனமா நகரை ஆளும் 'பாகவதி' என்ற அரசனுடைய மகளின் பெயர் மெகர்பானு. அவள் பருவ வயதை அடைந்து பல கலைகளையும், ஞான மார்க்கத்தையும் கற்றுத் தேர்ந்து ஞானவல்லியாகத் திகழ்ந்தாள்.
இவள் தன்னைப் போல் ஞானமும், அறிவும் உள்ள இளவரசனைத்தான் மணமுடிக்க வேண்டும் என்று எண்ணுகிறாள். எனவே "நான் கேட்கும் நூறு கேள்விகளுக்கு எந்த நாட்டு இளவரசன் சரியான பதிலைச் சொல்கிறானோ, அவனைத்தான் நான் மணமுடிப்பேன். என்னுடைய கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சொல்லாத இளவரசர்கள், எத்தனை கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லையோ அத்தனை கசையடிகளைப் பெற்றுச் செல்லவேண்டும்" என்று அறிவிப்பு செய்தாள்.
ஞானவல்லியான மெகர்பானு தர்க்க மண்டபம் ஒன்றையும் அதற்காக அமைத்தார். அம்மண்டபத்தில் சான்றோர்களும், அறிஞர்களும், புலவர் பெருமக்களும் அமர்ந்து அந்த அறிவுப் போட்டியைக் கண்டுகளிக்கவும், உரிய ஏற்பாடுகளையும் மெகர்பானு என்ற இளவரசி செய்திருந்தார்.
அண்டை அயலில் உள்ள நாட்டின் இளவரசர்கள் ஒவ்வொருவராய் வந்து ஞானவல்லியான மெகர்பானுவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முன் வந்தார்கள். ஒவ்வொருவரும் ஞானவல்லி மெகர்பானுவின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் கசையடிகளைப் பெற்றுத் தலை கவிழ்ந்து சென்றார்கள்.
ஐந்தமா என்ற நகரத்தைத் தலைநகராகக் கொண்டு அகம்மது ஷா என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தார். அவர் பெயர் அப்பாஸ். அவரும், இளம் வயதினராக கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார்.
ஞானவல்லி மெகர்பானுவின் அறிவிப்பைக் கேள்விப்பட்டு, 'அப்பாஸ்' இளவரசர், ஞானவல்லியின் ஞானக் கேள்விகளுக்கு விடையளிக்க முன் வந்தார்.
தர்க்க மண்டபம் தயாரானது. மசாலா (புதிர்) போடும் நாளும், கிழமையும் அறிஞர்களால் முடிவு செய்யப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில், தர்க்க மண்டபத்தில் சான்றோர்களும் அறிஞர்களும் ஆர்வத்துடன் கூடினர்.
ஞானவல்லி மெகர்பானு தோழியர்கள் புடைசூழ, தர்க்க மண்டபத்தில் தனக்குரிய இடத்தில் தலைக்கனத்துடன் வந்தமர்ந்தாள். அப்பாஸ் என்ற இளவரசரும் தர்க்க மண்டபத்தில் தனக்குரிய இடத்தில் வந்தமர்ந்தார்.
அறிஞர் பெருமக்கள் சிலர் நடுவர் பொறுப்பை ஏற்க, 'மசாலா' நிகழ்வு ஆரம்பமானது.
மெகர்பானு வழக்கமான தனது முதல் கேள்விக் கணையைத் தொடுத்தார். (பாடல் வரிகளால்)
"நீர் யார் மகன் காணும்?
உம்மை யார் வளர்த்தது?
என்று சொல்லாவிட்டால்
சொல்வேன் உமை நானும் !”

ஞானவல்லியின் அலட்டலான மசாலாவிற்கு (கேள்விக்கு) அப்பாஸ் இளவரசர் அமைதியாக,
"அடி ஞானப் பெண்ணே! - என்னைக்
கொல்வேன் என்று சொன்ன
குங்குமச் சந்தனமே! - நான்
'ஆதம்' மகன் தானடி! - என்னை
அந்த 'அல்லாஹ்' வளர்த்தானடி - உன்னைச்
சொல்லால் வெல்லத் தாண்டி..” என்று பதிலளித்தார்.
(இறைவன் ஆதம் என்ற மனிதனைத் தான் முதன் முதலில் படைத்தான். 'ஆதம்' என்ற ஆதி மனிதனில் இருந்த இந்த மானுடம் தழைத்தது என்ற கருத்தை 'ஆதம் மகன் தானடி' என்ற பாடல் வரி விளக்குகிறது.)
அப்பாஸ் இளவரசரின் பதிலைக் கேட்டு சபை "சபாஸ்" என்றது.

ஞானவல்லி தனது அடுத்த கேள்விக் கணையை எடுத்துத் தொடுத்தாள்.
"மானிலேயும் பெரிய மான்.
அறுபடாத மான் அது என்ன...?
மீனிலேயும் பெரிய மீன்
அறுபடாத மீன் அது என்ன...?
மாவிலேயும் நல்ல மாவு
இடிபடாத மாவு அது என்ன...?”

உடனே தயக்கம் ஏதும் இல்லாமல் இளவரசர் அப்பாஸ், ஞானவல்லியின் மசாலாவிற்கு (புதிருக்கு) பாட்டாலேயே பதில் சொன்னார்.
"மானிலேயே பெரிய மான்
அறுபடாத மானானது - அது
ஈ மானடி ஞானப் பெண்ணே!
மீனிலேயும் பெரிய மீன்
அறுபடாத மீனானது - அது
ஆமீனடி மெகர்பானே..!
மாவிலேயும் நல்ல மாவு
இடிபடாத மாவும் ஆனது - அது
'கலிமா' தானடி கண்ணே !” என்று.
அப்பாஸ் இளவரசரின் பதிலை ஆமோதித்து தர்க்க மண்டபத்தில் கூடி இருந்த அறிஞர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
(ஈமான் - மனதால் இஸ்லாமியன் என்று உறுதி கொள்வது.
ஆமீன் - 'ஆம்' என்று ஆமோதித்து இறை வசனத்தை ஏற்றுக் கொள்வது.
கலிமா - இம்மந்திரத்தைச் சொல்வதே முஸ்லீம்களின் முதல் கடமையானது.)

கேள்விக்கணைகளுக்கு உடனுக்குடன் சற்றும் யோசிக்காமல் 'டாண்,டாண்' என்று பதில் சொல்லும் அப்பாஸ் இளவரசரின் அறிவுக் கூர்மையைக் கண்டு திகைத்த ஞானவல்லி மெகர்பானு, அடுத்து மிகவும் தேர்ந்தெடுத்த மசாலா ஒன்றை எடுத்து சபை முன் வைத்தாள்.
"ஆதத்துடைய மக்களுக்கு
அல்லா படைத்தான்
ஐந்து வீடுகள் - அந்த
ஐந்து வீடுகளின் பெயரை
அவையோர்கள் அனைவரும்
அறியும் படி சொல்லவும் மன்னா...!”

ஞானவல்லியின் மசாலாவைக் கேட்ட அப்பாஸ் அரசர்,
"கேளடி, கிளி மொழியே...
ஆதத்துடைய மக்களுக்கு
அல்லா படைத்தளித்த -
ஐந்து வீடுகளின் பெயர்களை !
முதல் வீடு தகப்பன் வீடு!
அடுத்த வீடு தாய் வீடு!
அருளான 'கரு' வீடு!
மூன்றாம் வீடு 'துன்யா'
நான்காம் வீடு 'கப்ரு'
ஐந்தாம் வீடு மறுமை.” என்று பாட்டாலே பதில் சொன்னார்.
'தகப்பன் வீடு' என்றது, ஆதியில் கரு வித்தாகத் தகப்பனின் உதிரத்தில் இருந்தது. 'துன்யா' என்பது இந்த உலகம். 'கப்ரு' என்பது முஸ்லீம்களை அடக்கம் செய்யும் மண்ணறை. மறுமை என்பது சொர்க்கம் அல்லது நரகத்தைக் குறிக்கும். மறு உலகம். இதைத் தமிழ் மரபும் 'வீடு' என்றும் 'வீடு பேறு' என்றும் குறிப்பதை இந்த இடத்தில் நாம் எண்ணிப் பார்க்கலாம். (அறம், பொருள், இன்பம், வீடு).

அப்பாஸ் இளவரசர் அசராமல் தன் 'மசாலா'க்களுக்கு பதில் சொல்வதைக் கேட்டு தன் மனதிற்குள் அவரின் அறிவை ரசித்த ஞானவல்லி மெகர்பானு என்ற இளவரசி தனது அடுத்த மசாலாவை அவிழ்த்து விட்டாள்.
நெத்தி படாத தொழுகை என்ன?
நேரமில்லாத பாங்கு என்ன?

அப்பாஸ் இளவரசர் அசராமல், ஞானவல்லியின் அந்தக் கேள்விகளுக்கும் விடை சொன்னார்.
"அடி, ஞானப்பெண்ணே.
நெத்திபடாத தொழுகை - அது
'ஜனாசா' தொழுகை.
நேரமில்லாத பாங்கு - அது
பேறுகால வீட்டுப் பாங்கு...”
ஞானவல்லி தொடர்ந்து தளராமல் தன் மசாலாக்களை அள்ளி வீசினாள்.
"கத்திபடாத கறியும் என்ன?
காலம் தவறிய நகராவும் என்ன?”

அப்பாஸ்,
“'கத்தி படாத கறியானது - அது
பறவையிட்ட முட்டை.
காலம் தவறிய நகரா - அது
மௌத்தை அறிவிக்கும் ஓசை..” என்று உடனுக்குடன் தயங்காமல், மயங்காமல் பதில் கூறினார்.
பொதுவாக தொழுகிறபோது நெற்றியானது தரையில் படவேண்டும். ஐவேளைத் தொழுகையின்போதும், உக்கார்ந்த (ஸஜிதா) நிலையில் இருந்தபடி முன்புறம் கவிழ்ந்து, தலை தாழ்த்தி, நெற்றி தரையில் அல்லது தரைமேல் விரிக்கப்பட்ட விரிப்பில் (பாய் அல்லது ஸல்லா துணியில்) படும்படி தொழுவார்கள். ஆனால், இறந்தவர்களை அடக்கம் செய்யும் முன் தொழுகிற தொழுகையின் போது (ஜனஸா தொழுகையின்போது) மட்டும் நின்ற நிலையில் தொழுவார்கள். ஜனஸா தொழுகையின் போது மட்டும் நெற்றி தரையில் படாது.
ஐவேளையும் பாங்கு சொல்வது (தொழ வாருங்கள் என்று அழைப்பு செய்வது) குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நடைபெறும். ஆனால் அந்த ஊரில் இஸ்லாமிய மக்கள் குடியிருக்கும் வீடுகளில் (ஜமாத்தில்) குழந்தை பிறந்தால், உடனே அப்போது ஒரு பாங்கு சொல்லி அதன்மூலம் குழந்தை பிறந்த செய்தியை அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்குத் தெரிவிப்பார்கள்.
மோதினார், ஒரு மந்திரத்தை (அல்லாஹ் அக்பர்) சொல்லி அறுத்த ஆடு, ஒட்டகம், மாடு, கோழி, முயல் முதலியவற்றின் கறியைத்தான் (ஹலால் செய்யப்பட்டது) இஸ்லாமியர்கள் புசிப்பார்கள். ஆனால் கோழி முட்டை, வாத்து முட்டை போன்றவற்றை உடைக்கும்போது மட்டும் அதற்கு விதிவிலக்கு உண்டு. என்றாலும் முட்டைகளைச் சமையலுக்காக (பொரிக்க) உடைக்கும் போது,
"பிடிக்கச் சிறகில்லை,
அறுக்கக் கழுத்துமில்லை,
எனவே உடைக்கிறேன்.
உனக்கும் எனக்கும்
வழக்கும் இல்லை!” என்று
சொல்லுகிற இஸ்லாமிய நாட்டார் நம்பிக்கை ஒன்றும் கிராமாந்தரங்களில் நடப்பில் உள்ளது. ஐவேளையும் தொழுகைக்கான பாங்கோசைக்கு முன் பள்ளிவாசலில் உள்ள 'நகரா' என்ற தோல் கருவியை மோதினார் அடித்து ஓசை எழுப்பி, தொழுகைக்கு ஆயத்தமாகுங்கள் என்று அறிவிப்பு செய்வார். ஊரில் யாராவது இறந்துவிட்டால் (மௌத்து நிகழ்ந்துவிட்டால்) அந்த 'மௌத்து'ச் செய்தியை அறிவிப்பதற்காக, இடைப்பட்ட நேரத்தில் (தொழுகை நேரம் தவிர்த்து) நகராவைத் தொடர்ச்சியாக அடித்து இந்த ஊர் ஜமாத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை ஊர் மக்களுக்கு அறிவிப்புச் செய்வார்கள். தொழுகை நேரமற்ற நேரத்தில் நகரா ஒலிக்கும் ஓசை ஊர் மக்களுக்கு 'ஜமாத்' சேதியை அறிவிக்கும்!
ஞானவல்லி மெகர்பானுவின் மசாலாக்களுக்கு உடனுக்குடன், திகைக்காமல் பதில் அளிக்கும் அப்பாஸ் இளவரசரின் புலமையைக் கண்டு, தர்க்க மண்டபத்தில் இருந்த அறிஞர்கள் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.
சபையோர்கள், ஞானவல்லியைப் பார்த்து "ம் அடுத்த மசாலாவைப் போடுங்கள்" என்று கூறினார்கள்.

இளவரசி, தனது அடுத்த மசாலாவை எடுத்து அவை முன் வைத்தாள் ராகத்தோடு,
"மரத்துக்குள்ளே... ஒரு பூப்பந்து - அது
குடத்துக்குள்ளே காய் காய்த்தது - அந்தக்
காயானது பழமும் ஆனது - பின்
கனிந்ததுமே கீழே விழுந்தது.
கீழே விழுந்த கனி, மாங்கனியல்ல
திகட்டாமல் தித்திக்கும் கனி.
அந்தக் கனி.. என்ன கனி..?
அப்பாஸ் அரசரே... இப்போதே
செப்பும் பார்ப்போம்! " என்று பாடினாள்.

இளவரசர் அந்த மசாலாவுக்கும் தனது மதி நுட்பத்தால் அருமையாக விடையளித்தார்,
"விளையாட்டுக் கதைபோட்டு
வெற்றி பெற நினைக்கும்
மெகர்பானே! ஞானப்பெண்ணே!
திகட்டாமல் தித்திக்கும் கனி
இப்புவியில் பிள்ளைக் கனி...!”
என்று மசாலாவுக்கு உரிய புதிரை விடுவித்தார் எனத் தொடர்கிறது.
நூறு மசாலா என்ற பக்கீர்கள் பாடும் வசனம் இடை இட்ட கதைப்பாடல்.
மரம் என்பது மனிதன் (ஆண்) அவனுக்குள் சுழலும் பூப்பந்து, விந்தாகும். குடத்திற்குள் காய் என்பது கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தை. காய் கனியாவது, பத்துமாதம் நிறைந்த பின் பிரசவமாகி, குழந்தை பிறப்பது. இப்போது ஞானவல்லி போட்ட மசாலாவின் பொருள் வாசகர்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.
பக்கீர்கள் என்ற கலையாளர்களிடம் வாய் மொழித் திரளாக இதுபோன்ற எண்ணற்ற கதைப் பாடல்கள் உள்ளன. நான் மேலே தந்தது ஒரு மாதிரிதான். அவைகளை எல்லாம் குறுந்தகடுகளில் பதிவு செய்யலாம் அல்லது எழுத்துப் பிரதிகளாகப் பதிப்பிக்கலாம்.
தர்ஹாக்களை மையமாகக் கொண்டு சுற்றிச் சுழலும் இத்தகைய பிரதிகளை, நவீன இஸ்லாமிய மார்க்க சுத்திகரிப்புவாதிகள் அலட்சியக் கண் கொண்டு பார்க்கிறார்கள். இப்பிரதிகளை அழிந்துவிடாமல் பாதுகாத்தால் தமிழ் இலக்கிய உலகுக்கு அருமையான இலக்கியச் செல்வங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்

No comments: