கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, July 22, 2013

செவக்காட்டுச் சேதிகள்-20 கண்ணே கண்ணுறங்கு

தாலாட்டுப் பாடல்களை எல்லாம் சேகரித்து வைத்துக் கொண்டு அவைகளைக் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்தால், அக்கால மக்களின் வாழ்வியல், சமூகவியல், பொருளாதாரம், பண்பாடுகள், தொழில் மரபுகள், நாட்டு நடப்புகள், சில வரலாற்று உண்மைகள் போன்றவை பதிவாகி இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

மின்னணு இயந்திரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற இன்றைய கால கட்டத்தில் நாம் பல கலாச்சாரக் கூறுகளை இழந்து வருகிறோம். அப்படி நாம் இழந்த இலக்கியச் செல்வங்களில் தாலாட்டுப் பாடல்களும் ஒன்றாகும்.

இயந்திரமயமான வாழ்க்கை, அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை, தனிக்குடித்தன வாழ்க்கை, அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த கிடைத்திருக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், தாலாட்டுப் பாடல் பாட வெட்கப்படும் நகரத்துப் பெண்களின் மனப்பான்மை, தாலாட்டுப் பாடல்களை மனதில் நிலை நிறுத்தி மீண்டும் ராகத்தோடு பாட இயலாத நிலை போன்ற காரணங்களால் தாலாட்டுப் பாடல்கள் இன்று வாய்மொழி மரபில் இருந்தும் விடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கிராமந்தரங்களில் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருந்த தாலாட்டு பாடல்கள், வட்டாரத்துக்கு வட்டாரம், ஜாதிக்கு ஜாதி, சிற்சில மாற்றங்களுடன் பாடப்பட்டு வந்தது.

தாய் என்ற அன்புக் கடலில் விளைந்த வலம்புரி முத்துக்கள் போன்ற இந்த தாலாட்டுப் பாடல்களில் தாய்மையின் பாசமும், பரிவும் நிறைந்து காணப்படுகின்றது.

பெண்கள் தாலாட்டும் போது இசை லயமும், ஓசை ஒழுங்கும், எதுகையும், மோனையும், இடையடித் தொடைகளும், உவமையும் உருவகமும், உள்ளுறையும் எப்படியோ அவர்களின் பாடல்களில் மிக இயல்பாய் வந்து உட்கார்ந்து கொள்கின்றன.

சிலநேரங்களில் தன் சொந்த சோகங்களையும் சுய வாழ்வின் அவலங்களையும், நேரடியாகவும் மறைமுகமாகவும், குறிப்பாகவும், குறியீடாகவும் சொல்ல, தாய்மார்கள் தாலாட்டுப் பாடல்களை பயன்படுத்தி இருக்கின்றார்கள்.

அந்தக் காலக் குழந்தைகள் முதன் முதலில் தாயின் தாலாட்டுப் பாடல்களைத்தான் கேட்டது. இந்தக் காலக் குழந்தைகள் முதன் முதலில் சினிமாப் பாடல்களைத்தான் கேட்கின்றன.

அந்தக் காலத்தில் பிறந்த அனேகக் குழந்தைகளுக்கு குடிக்க தாய்ப்பால் கிடைத்தது. இந்தக் காலத்து குழந்தைகள் பலருக்குக் குடிக்கப் புட்டிப்பால்தான் கிடைக்கிறது.

தாலாட்டுப் பாடலில் உள்ள இசை குழந்தையைத் தூங்க வைக்கிறது. பரிச்சயமான தாயின் குரலில் குழந்தை தன்னை மறந்து நித்திரை கொள்ள ஆரம்பிக்கிறது. ஆனால் தாலாட்டுப் பாடலின் பொருளும், சொற் சுவையும், கவி இன்பமும், அதைக் கேட்கும் பெரியவர்களையும் சொக்க வைக்கிறது.

‘தால்’ என்றால் ‘தொட்டில்’ என்று பொருள். தாய் தொட்டிலை ஆட்டிக் கொண்டே பாடும் பாடலை தாலாட்டுப் பாடல் என்று அழைப்பது மிகவும் பொருத்தம்தான்.

தாலாட்டுப் பாடல்கள் ‘ஆராரோ’ என்றோ ‘ராரீரி..’ என்றோ ‘ரோரோ’ என்றே வெற்றிசைக் சொற்களுடன் ஆரம்பிக்கின்றது. தாய் தாலாட்ட ஆரம்பத்தில் இருந்து குழந்தை கண்ணயர்ந்து தூங்கும் வரை, தாலாட்டுப் பாடலின் நீளம் அமைகிறது. தாலாட்டுப் பாடலின் நீளம் சமய சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி கூடவோ குறையவோ செய்கிறது.

தாலாட்டுப் பாடல்களை எல்லாம் சேகரித்து வைத்துக் கொண்டு அவைகளைக் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்தால், அக்கால மக்களின் வாழ்வியல், சமூகவியல், பொருளாதாரம், பண்பாடுகள், தொழில் மரபுகள், நாட்டு நடப்புகள், சில வரலாற்று உண்மைகள் போன்றவை பதிவாகி இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

சில தாலாட்டுப் பாடல்கள் தாயின் குலப் பெருமை, மாமன்மார் மகிமை, பாட்டனாரின் வீரதீரம், பிறந்த வீட்டு சிறப்பு, புகுந்த வீட்டு நிலை, பிறந்த ஊரின் பெருமை பற்றி பேசுகின்றன.

எதார்த்தத்தை சில தாலாட்டுப் பாடல்கள், பேசுவதைப் போலவே, மிகைக் கற்பனைகளையும் புனைவுகளையும் பற்றிச் சில தாலாட்டுப் பாடல்கள் பேசுகின்றன. சில பாடல்கள் நீதி சொல்லும் பாடல்களாகவும் திகழ்கின்றன.

ஒரே குழந்தையைத் தாய் தாலாட்டும் போது ஒரு விதமாகவும், அதே குழந்தையை அக்குழந்தையின் அத்தை தாலாட்டும் போது வேறு விதமாகவும், சித்தி தாலாட்டும் போது வேறு விதமாகவும், பாட்டி தாலாட்டும் போது இன்னொரு விதமாகவும் வித விதமாகப் பாடுகின்றார்கள். சில வீடுகளில் ஆண்கள் தாலாட்டுப் பாடி குழந்தையைத் தூங்க வைப்பதையும் நான் கேட்டிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்.

சில தாலாட்டுப் பாடல்களைப் பார்ப்போம். ஒரு தாய் தான் தாலாட்டும் போதே தன் குழந்தையைப் பறவைகள் பலவும் தாலாட்டும் என்று பாடுகிறாள். இயற்கையை நேசிக்கும் கவியுள்ளத்தையும், பறவைகளையும், வண்டுகள் உள்ளிட்ட உயிரினங்களை நேசிக்கும் தாயுள்ளத்தையும் இந்தத் தாலாட்டு பாடலில் நாம் காண முடிகிறது.

மயிலாடும் சோலையிலே
மாடப்புறா தாலாட்ட..
வண்டாகும் சோலையிலே
வண்ணப்புறா தாலாட்ட...
செண்டாடும் சோலையிலே
சேடியறும் தாலாட்ட...
குயில் கூவும் சோலையிலே
கோடி சனம் தாலாட்ட
கொஞ்சும் கிளி ரஞ்சிதமே
கோமகனே நீயுறங்கு....!
வெள்ளி விளக்கெரிய
விடி விளக்கு நின்றெரிய
தங்க விளக்கெரிய
தனி விளக்கு நின்றெரிய
நீலப் பொன் தொட்டிலிலே
நித்தம் நீ நித்திரை செய்...

பூக்களைக் கொண்டே ஒரு வீடு கட்டினால் எப்படி இருக்கும்? அப்படிக் கட்டிய வீட்டினுள் நுழைந்தால் அங்கு எப்படிப்பட்ட வாசனை இருக்கும். இந்தக் கற்பனையே சுகமாகத்தான் இருக்கிறது. இனி, பாடலைப் பாருங்கள்.

முல்லைப்பூ கட்டிடமாம்
முழத்துக் கொரு உத்திரமாம்
மூடித் திறந்தால்
மல்லிகைப்பூ வாசனையாம்!
தாழம்பூ கட்டிடமாம்
தளத்திற்கொரு உத்திரமாம்
சாத்தித் திறந்தால்
சாதிமல்லி வாசனையாம்!

தாய் தன் குழந்தைக்கு எப்படி எல்லாம் தொட்டில் கட்ட வேண்டும், தொட்டில் செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறாள் பாருங்கள்.

பட்டாலே தொட்டில்
பவளத்தால் கொடிக்கயிறு
பட்டுத் தொட்டிலிலே - என்
பாக்கியமே கண் அசறு...
பச்சை இலுப்பை வெட்டி
பால் வடியத் தொட்டில் கட்டி
பாக்கு மரம் வெட்டி
பளபளப்பாய் தொட்டில் செய்து
பளபளக்கும் தொட்டிலிலே - என்
பாலகனே கண் அசறு...! - என்று

தொடரும் இப்பாடலில் பால் மரத்தில் தொட்டில் செய்வது பற்றிய ஒரு குறிப்பு வருகிறது. பால் மரத்தில் (ஆலமரம், இலுப்பை பரம் போன்றவற்றில்) தொட்டில் செய்து அதில் பாலகனைப் போட்டு ஆட்டினால் தாயின் மார்பில் வற்றாமல் பால் சுரக்கும் என்ற நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை இப்பாடலில் பதிவாகியுள்ளது.
எத்தனை வகையான மரங்களைக் கொண்டு தொட்டில்களைச் செய்யலாம் என்ற செய்தியை அத்தாய் அடுத்து வரும் பாடல் வரிகளில் குறிப்பிடுகின்றாள்.

அஞ்சு மரத்தாலே,
பஞ்சமரத் தொட்டில் செஞ்சு
அங்கம் குளிர
ஆயிரம் தான் தீர
அருமை மகனை
ஆதரவாப் போட்டாட்ட

என்கிறாள். இனி பஞ்ச மரம் (ஐந்து மரங்கள்) எவை எனப் பட்டியலும் இடுகிறாள்.

நீண்ட மரம் நெல்லி,
நெடு மரம் மா, இலுப்பை,
ஆண்ட பலா மரம்
அரு¬மான தேக்கு மரம் என
ஐந்து மரம் பலகையால்
அழகான தொட்டில் செய்து

எனப்பாடிவிட்டு இனி செய்த தொட்டிலுக்கு இருபுறமும் தூண் எப்படி இருக்க வேண்டும் என்றும் அதே பெண் அடுத்த பாடலில் விவரிக்கிறாள்

கரும்பு வெட்டி மொழி நறுக்கி,
கணுக்கணுவாய் தூண் நிறுத்தி
தூணுக்கொரு தொட்டில் கட்டி
துரைமகனைப் போட்டாட்ட...

என்று தொடர்கிறது, தாலாட்டுப் பாடல்.

ரசனை மிக்க கவிதை அனுபவத்தை இப்பாடல்கள் தருகின்றன. கற்பனையின் கொடி முடியில் நின்று, கனவுகளின் மொழி நடையில், எப்படிப் பாடுகிறாள் பாருங்கள், ஒரு கிராமத்துப் பெண்.

தங்கச் சங்கு கழுவி
தட்டிலே பாலாத்தி
பாலமுதம் பருக வந்த
பசுங்கிளியை யாரடிச்சா...?

சந்தையிலே முல்லைப்பூ
ஆஞ்சரமாய் விற்கிறதாம்.
முல்லைப்பூ வாங்கப்போன
செல்லக்கிளியை யாரடிச்சா...?

மாமன் அடிச்சானோ...
மல்லிகைப் பூங் கொத்தாலே
அத்தை அடிச்சாளோ,
அரப்பூக் கம்பாலே,
பாட்டி அடித்தாளோ...
பாலுத்தும் சங்காலே..
தாத்தா அடித்தாரோ...
தங்கப் பிரம்பாலே

- என்று அடுக்கடுக்காய், சளைக்காமல் பாடிக் கொண்டே போகிறாள் அப்பெண். கடைசியில்,

யாரடித்தார் நீ அழுதாய்...?
அடித்தாரைச் சொல்லி அழு
நீரடித்து நீர் விலகாது
நிம்மதியாய் தூங்கி முழி...

என்று பாடுகின்றாள். ‘நீர் அடித்து நீர் விலகாது’ என்பது ஒரு கிராமத்துப் பழமொழி. நீரை நீரால் அடித்தால் வலிக்காது என்பது ஒரு நுட்பமான பதிவாகும்.

மேலே பாடல் வரிகளில் நுட்பமான ஒருவித குடும்பப் பதிவும் உள்ளது. குழந்தையை அத்தை அரளிப்பூச் செண்டாலும், பாட்டி பாலூத்தும் சங்காலும், தாத்தா தங்கப் பிரம்பாலும் அடித்ததாகப் பாடுகிறார்.

தங்கப் பிரம்பால் அடித்தால் குழந்தைக்கு வலிக்கும், பாலூத்தும் சங்கை ஒரு கயிற்றில் கட்டி, அதைக் கொண்டு குழந்தையை அடித்தாலும், குழந்தைக்கு வலிக்கும், அரளிப்பூக் கம்பால் அடித்தாலும் பிள்ளைக்கு வலிக்கும், மல்லிகைப்பூக் கொண்டு அடித்தால் குழந்தைக்கு வலிக்காது.

குழந்தைக்கு மாமன் என்றால் தாய்க்கு சகோதரன் முறை வரும். குழந்தைக்கு அத்தை என்றால், தாய்க்கு நாத்தனார் அல்லது மதினியார் முறை வரும். குழந்தைக்குத் தாத்தா என்றால் தாய்க்கு மாமா முறை வரும். குழந்தைக்கு பாட்டி என்றால் தாய்க்குஅத்தை முறை வரும். தன் சகோதரன் மட்டும் மல்லிகைப் பூங் கொத்தைக் கொண்டு அடித்தானோ...? என்று தாய் கேட்கிறாள். தன் சகோதரன் மேல் உள்ள பாசத்தை அத்தாய் இப்பாடல் மூலம் சொல்லாமல் சொல்கிறாள். அதே சமயம், தன், மாமன், மாமி மற்றும் நாத்தனார், மதினி மேல் உள்ள வெறுப்பையும் சொல்லாமல் இப்பாடல் மூலம் சொல்கிறாள்.

கடைசியில் யாரடித்தார் என்ற கேள்விக்கான விடையையும் அதே பாட்டில் சொல்லி புதிர்க் கேள்விகளுக்கு விடையும் தருகிறாள், அத்தாய். இனி, அப்பாடலைப் பார்ப்போம்.

ஆரும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
அவனாக அழுதான்
அம்மா மடிதேடி...

என்று பாடி முடித்து விடுகிறாள்.

தாலாட்டுப் பாடல்கள், கற்பனைகளின் ஊற்றாக, நயம் மிக்க கவிதைகளாகத் திகழ்கின்றன. இத்தகைய இலக்கிய வரிகள் இன்று காற்றில் கலந்த கானல் வரிகளாக மாறிவிட்டன.

கிராமத்து மக்களின் வாழ்வியலில் இருந்து கூட இன்றைய காலகட்டத்தில் தாலாட்டுப் பாடல்கள் விடைபெற்று விட்டன. இத்தகைய தாலாட்டுப் பாடல்களைச் சேகரிப்பதும் அவைகளைத் தொகுப்பதும், பகுப்பதும், ஆய்வுகளுக்கு உட்படுத்துவதும் ஒருவித இலக்கியச் சேவையாகும்.

பெண்கள் பாடும் இத்தகைய தாலாட்டுப் பாடல்களை ஒளிப்பதிவு செய்து அவைகளைக் குறுந்தகடுகளாக வெளியிட யாராவது முன் வந்தால் நல்லது. அப்படிச் செய்தால் தலைமுறைகளைத் தாண்டியும், தாலாட்டுப் பாடல்கள் நிலைத்து நிற்க வாய்ப்புள்ளது.

No comments: