கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கடித இலக்கியம் -9 கல்யாண்ஜி- கி.ரா. வுக்கு எழுதியது

அன்புமிக்க மாமாவுக்கு,

வணக்கம்.

கல்யாண வீட்டுக்கு பூவுக்கு அச்சாரம் கொடுக்கும்போது, கழுத்தாரம் துணை ஆரம், விளக்கு ஆரம், படத்துக்கு ஆரம், தாம்பாள ஆரம், ‘மணவடை’ ஆரம், நிலை ஆரம், தூக்கு, விடு பூ என்று லிஸ்ட் போடும்போது, ஆண்டாள் ஆரம், தும்பிக்கை ஆரம் என்று அடையாளம் சொல்லுவார்கள். ஆண்டாள் ஆரம் முடிச்சுப் போடாமல், தோளில் இருந்து கீழே வரை தொங்கும். தும்பிக்கை ஆரம் என்கிறது யானை தும்பிக்கை பருமனுக்கு இருக்கும். மணமேடையில் நான்கு முகப்பிலேயும் இரண்டு இரண்டாகத் தொங்க விடுவார்கள். பார்க்க அம்சமாக இருக்கும். உங்களிடம் இருந்து இவ்வளவு பெரிய கடிதம் வந்தது, அப்படித் தும்பிக்கை சைசுக்கு ஆண்டாள் மாலை போட்டமாதிரி. ஒவ்வொரு வார்த்தையையும் பூக்கட்டுகிற மாதிரித்தான் எழுதியிருக்கிறீர்கள். வள்ளிக்கு மாத்திரம் காட்டி விட்டு, மூணாவது மனுஷன் பார்க்கிறவதற்கு முன்பு கழட்டிவைத்துவிட வேண்டும் போலக் கூச்சம் எனக்கு. நானாகத்தான் நிறுத்திக் கொண்டேன். பதிமூன்று பதினான்கு வாரம் எழுதினவுடனேயே ‘போதும், என்னத்துக்கு இதுக்கு மேல்’ என்று தோன்றி விட்டது. அந்தச் சமயம் பார்த்து எல்லாரும் கையைப் பிடித்துக்கொண்டு ‘நல்லா இருக்கு’ என்றார்கள். நாற்பது வருஷமாக ஏறிட்டுப் பார்க்காத சொந்தக் காரங்கள் எல்லோரும் பக்கத்திலே வந்து நின்று கொண்டு ‘வள்ளி மாப்பிள்ளை எழுதுவீங்கண்ணு தெரியும். இப்போதான் படிச்சோம்’ என்று சிரித்தார்கள். விசேஷ வீடுகளில் இரட்டை இலை போட்டுப் பரிமாறாத குறைதான். அவ்வளவு கவனிப்பு.

அப்புறம் இந்த பத்துப் பதினைந்து வாரத்துக்குள், எழுதி எழுதி, பக்கக் கணக்கு, எதைச் சொல்லணும், எதை விடணும் என்று பிடிபட்டு விட்டது. ஆனால் எதுக்குடா இந்த செவ்வாய், புதன் வருது என்றுதான் இருக்கும். கணக்குப் பரீட்சை எழுதப் போகிற மாதிரிதான் ஒவ்வொரு தடவையும். முதல்வரி எழுதுகிற வரைக்கும், என்ன எழுதப் போகிறேன் என்றே தெரியாது, எழுதின பிறகு சரியாக வந்திருக்கும். அடுத்த வாரத்துக்கு அன்றைக்கு ராத்திரியே ‘ரெடியா’ எழுதி வைத்துவிட வேண்டியதுதான் என்று தோன்றும். மறுபடியும் அடுத்த செவ்வாய் வரை ஒருவரி தோன்றாது. பெரிய இம்சையாகப் போய்விட்டது.

இதற்குள் உங்கள் மகளுக்கும் இதுக்கும் ஒத்துப் போகவில்லை. மகன் கல்யாணத்துக்கு ‘ஒரு ஸ்டெப்பும்’ எடுக்காமல், நான் மாடத்தெருவே கதி என்று ‘ராத் தங்க’ ஆரம்பித்துவிட்டது மாதிரி ஒரு வருத்தம். பேனாவைப் பிடுங்கவில்லையே தவிர, மற்ற எல்லாம் நடந்தது. பெண் பிள்ளைகள் கோபதாபம் எப்படி இருக்கும் என்றுதான் உங்களுக்குத் தெரியுமே. வீட்டில் நமக்கு இருக்கிற ஒரே நிம்மதியும் போய்விடக்கூடாது, அறுபது வயதுக்கு மேல முகத்தைத் தூக்கிக் கொண்டு இருந்தால் நன்றாக இருக்காதே என்று எனக்கு ஒன்றும் ஓடவில்லை. எழுதக் கூடாது என்று சொல்லவில்லையே தவிர, அதற்கு உண்டான எல்லா நெருக்கடியும் நமக்கு வந்துவிட்டது’ ரொம்ப நெருக்கமாக இருந்த ஒரு சிநேகிதன்கிட்டே சொல்லி அழக்கூடச் செய்தேன். மறுநாளே கண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதி, இந்த மாதிரி நான் நிறுத்திக் கொள்கிறேன் என்று தகவல் சொன்னேன். எழுதி, ஒரு பத்துவாரத்துக்கு அப்புறம், பத்து வாரம் இல்லை பத்து நாட்களுக்கு அப்புறம்தான் அனுப்பினேன். கதிர்வேலன், தளவாய் எல்லாம், ‘நிறுத்த வேண்டாம். எத்தனை வருஷம் வேணும்னாலும் எழுதச் சொல்லுங்க என்றுதான் உள்ளுக்குள்ளேயும் பேச்சு இருக்கு’ என்றார்கள்.

வீட்டு விவகாரத்தை வெளியே சொல்ல முடியாதில்லையா. இல்லை முப்பது வாரத்தோடு நிறுத்திக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். கடைசி வாரம் வந்த அன்றைக்கு, ‘நிறைந்தது’ என்ற வார்த்தையைப் பார்த்ததும், வீட்டம்மா முகத்தைப் பார்க்க வேண்டுமே. அப்படி ஒரு சந்தோஷம். எனக்கு பிள்ளை சாகக்கொடுத்த மாதிரி துக்கம்.

*

என்னுமோ மாமா. எனக்குத் தெரிந்ததை, இதுவரைக்கு எழுதினமாதிரி, எழுதிவிட்டேன். விகடன்காரர்களுக்கும் சந்தோஷம்தான். தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாத குறைதான். அதிலும் உதவி ஆசிரியர்களும், புகைப்படக்காரர்களும், லே அவுட் செய்கிறவர்களும் கொஞ்சின கொஞ்சு சொல்ல முடியாது. இந்த இலக்கியப் பங்காளிகள்தான் ஒரு வார்த்தை சொல்லக் கூடாது என்று வாயைத் தைத்துக் கொண்டார்கள். நிச்சயம் முதல் ஜோலியாக வாராவாரம் படித்திருப்பார்கள். ஆனால் அப்படி ஒன்று வருகிறமாதிரியே தெரியாதது மாதிரி அலட்சியமாக நடமாடிக் கொண்டு இருந்தார்கள்.

நீங்கள் ஒருத்தர்தான் நல்ல வார்த்தை சொன்னது. அந்த மனசு உங்களுக்குத்தான். அது போதும் எனக்கு.

அப்பாவுக் கென்ன ராஜா? நன்றாக இருக்கிறார். உங்கள் கடிதத்தைக் காட்டினேன். படித்துவிட்டு சந்தோஷப்பட்டார். உங்களை விசாரிப்பதாக எழுதச் சொன்னார்.

கணவதி அத்தைக்கும் உங்களுக்கும் எங்கள் குடும்பத்தாருடைய வணக்கமும் அன்பும். நீங்கள் இருவரும் நீடுழி வாழவேண்டும். உங்கள் இரண்டு பேரையும், உங்களுடன் இருந்த இரண்டு நாட் பொழுதையும் அவ்வப்பொழுது நாங்கள் நினைத்துக் கொள்வோம். எப்போது நினைத்தாலும் வெதுவெதுப்பாக, இதமாகத் தோன்றுகிறமாதிரி எல்லோரும் இருக்கிறார்கள்?

இன்னும் கொஞ்ச நாளைக்கு ‘லவ் லெட்டர்’ மாதிரி, உங்களுடைய

காகிதத்தைத்தான் படித்துக் கொண்டே இருப்பேன். ஒருத்தருக்கும் தெரியாமல் படிக்கப் படிக்கத்தான் ருசியே.

மீண்டும் உங்கள் இருவரையும் வணங்கி,

அன்புடன்
கல்யாண்ஜி

கடிதச் சேகரம்: கழனியூரன்

No comments: