
தற்போது பஹ்ரைன் நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் அப்துல் கையூம் தான் பிறந்து வளர்ந்த நாகூர் என்ற ஊரைப் பற்றிய கவிதைகளை எழுதி அக்கவிதைகளை மட்டும் தொகுத்து ‘அந்த நாள் ஞாபகம்’ என்ற அழகிய சிறுநூலைத் தமிழ் இலக்கிய உலகுக்குப் படைத்துத் தந்துள்ளார்கள்.
இடைக்காலத்தில் சிலேடை உலா, அந்தாதி, பிள்ளைத்தமிழ் என்று பல்வேறு சிற்றிலக்கியங்களைப் படைக்கும் மரபு, நம் தமிழ்ப் புலவர்களிடம் இருந்தது. அத்தகைய ஒரு மரபைப் பின்பற்றிக் கவிஞர் இந்நூலைப் படைத்துள்ளார்.
எதுகை, மோனை மற்றும் இயைபுத் தொடையுடன் கூடிய ஆசிரிய விருத்தத்தால் இக்கவிதைகள் அமைந்துள்ளன. இசையோடு பாடுவதற்கு ஏற்ற வகையிலும் இப்பாடல்கள் திகழ்கின்றன.
கடல் கடந்து வாழும் கவிஞர், தான் பிறந்து வளர்ந்த ஊரின் அமைப்பை, அழகை, அவ்வூர் மக்களின் உணவுப் பழக்க வழக்கத்தை, அவர்கள் அணியும் உடைகளை, அவ்வூர் பெற்றெடுத்த இசைவாணர்களை, புலவர்களை, எழுத்தாளர்களை, அரசியல்வாதிகளை, நாகூர் தர்ஹாவின் மேன்மைகளை, அத் தர்ஹாவை சுற்றி நடைபெறும் சில அறியாமைசார் பழக்கங்களை, அம் மக்கள் பேசும் வட்டார வழக்கு மொழியை என்று ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளார் இந்நூலில்.
தலை நிமிர்ந்து நிற்கும் தர்காவின் கலசம். அந்தக் கலசத்தின் பிம்பம் அருகில் உள்ள அலை அடிக்கும் குளத்தில் விழுகிறது. இந்தக் காட்சி கவிஞரை கவிதை எழுதத் தூண்டுகிறது.
கிண்ணமென கவிழ்ந்திருக்கும்
தர்கா கலசம்
கிழக்குவாசல் குளக்கரையில்
பிம்பம் பதிக்கும்”
என்று அக்காட்சியை தன் கவிதை மூலம் காட்டுகிறார். ரசித்து அனுபவிக்க நல்ல கவிதை ஒன்று தமிழுக்குக் கிடைக்கிறது.
தேநீரை அந்த ஊர்மக்கள் ‘தேத்தண்ணி’ என்றும், மிளகு ரசத்தை ‘மொளவுத் தண்ணி’ என்றும் விருந்தை ‘சோத்துக் களரி’ என்ற
வார்த்தையாலும், குழம்பை ‘ஆணம்’ என்றும் அவர்கள் சார்ந்த வட்டார வழக்குமொழி நடையில் பேசுவதையும், இறவாரம், யானீஸ் அறை, கலாரி, பலகட்டு மனைகள், வெண்துப்பட்டி, பசியாறல் (சாப்பிடுதல்), சோறு, சூலி, திறப்பு (சாவி), அசதி (சோர்வு), ஊஞ்சல் பாட்டு, மறவை சோறு, சீதேவி, வாங்கனி (வாருங்கள்), போங்கனி (போங்கள்), அகடம் பகடம், காண்டா (உருளைகிழங்கு), போன்ற எண்ணற்ற வழக்குச் சொற்களை மிகக் கவனத்துடன் இத்தொகுப்பில் கவிஞர் பதிவு செய்துள்ளதால், இத்தொகுப்பு நூல் ஒரு நாட்டார் தரவாகவும் திகழ்கிறது.
நல்லிணக்கம் பேணுகின்ற
நாகூர் போன்று
நானிலத்தில் வேறுஒரு
நற்பதி ஏது?
என்று வினவி தாம் பிறந்த ஊரின் பெருமை பேசும் கவிஞர்,
போலிகளும் இவ்வூரில்
பிழைப்பது உண்டு
பொட்டலத்து சர்க்கரையை
புனிதம் என்று
என்ற கவிதையில் அவ்வூரில் உள்ள மாசு மருவையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
இன்றைய நவீன கவிதை உலகில் மரபான இம்முயற்சி மிகவும் பாராட்டத்தக்கதாகும்
No comments:
Post a Comment