கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கடித இலக்கியம் -3 சுப்ரபாரதி மணியனுக்கு அன்புடன் கந்தர்வன்

கந்தர்வன்

கந்தர்வன்- 31.3.88

அன்புள்ள சு.பா.ம. வணக்கம்.

சிறுகதைத் தொகுப்பும் நாவலும் கிடைத்தன. சி.க.தொகுப்பைப் படித்து முடித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது. உடனே கடிதம் எழுதியிருக்க வேண்டும். நிறைய வேலைகளும், தொல்லைகளும். சரி.

முதலில் Readolility. நான் முன்பு படித்துவிட்டு எழுதியதற்கு மாறாக இத்தொகுப்பில் அநேகக் கதைகளில் அந்தக் குறையில்லை. ஆனால் எனக்குப் பிடித்த சில கதைகளில் கூட Reapeatation  நிறைய உள்ளன.

கனவுகள் இதழுக்குப் பணம் வந்திருக்குமே.

நான் இப்போதுதான் ஒரு தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறேன். அதனாலேயே ஒரு எழுத்தாளன் விமர்சிக்கிறான் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு வாசகனின் விமர்சனமாகவே எடுத்துக்கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் தொகுப்பைப் படித்து முடித்ததும் சுஜாதாவின் இதற்கான முன்னுரையைப் படித்தேன். உங்களைப் பற்றிய மதிப்பீடுகளை இந்தத் தொகுதியின் பின் பகுதியிலும் கனவு இதழிலும் படித்தேன். செகாவுக்கு எதிர்மறையாக எப்படி  அசோகமித்திரனும் அவர் போன்று எழுதுபவர்களும் படைக்கிறார்கள் என்று மழுப்பலாக எழுதிய க.நா.சு. வின் விமர்சனம் ஒன்றை தினமணியில் படித்தேன். அப்புறம் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

இந்தத் தொகுப்பின் சிறந்த கதை ‘அப்பா’தான். பொதுவாக இந்தத் தொகுப்பு முழுவதிலும் கதாசிரியர் நிறைந்த மனிதாபிமானத்தோடு அலைகிறார்.

‘அப்பா’வில் இந்த மனிதாபிமானம் + sentiments + அகப்போராட்டம் + புறப்போராட்டம் இவை அனைத்தும் ஒரு ஆழ்ந்த தத்துவ அமைதியோடும், அழகான கலை வடிவோடும் நிற்கிறது. ‘பணத்தைப் பாக்கெட்டில் வைத்தபடியே அப்பா தாராளமாய்ச் சிரித்தார்’ என்று சொல்ல உண்மை மீது அசாத்திய நம்பிக்கை வேண்டும். நடைமுறை உறவுகள் பற்றிய தத்துவ ஞானம் நிறைய வேண்டும். அதைத் தொடர்ந்து வரும் “அவனை ஒரு கை.......” பயங்கர Satire & sentiment + யதார்த்தம்.

அடுத்து எனக்குப் பிடித்த கதை ‘இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்’ இந்தத் தலைப்பில் கோடிகோடியாய்ச் சோகமுண்டு. வெளிப்படும் அர்த்தம் பூமியெங்கும் விரிந்து கிடப்பது போலிருக்கிறது. ‘தலைமுறை இடைவெளி’ சரியாய் வந்திருக்கிறது.

பழைய டர்பன்களைப் பற்றிய விவரங்களில் நிறைய repeation உண்டு. என்றாலும் இதிலுள்ள நடைச்சிறப்பு வேறு கதைகளில் இல்லை.

‘இன்னொரு முறை மௌனம்’ என்னை வெகுவாய் பாதித்த கதை. ஞாபகத்திலிருந்து ஒருநாளும் மறந்து போகாது. ஐதராபாத் சாலையிலல்ல. என் கண்ணில் படும் சாலைகளில் எல்லாம் அந்தப்பெண்ணே, அவளைப்போன்ற நிலையிலுள்ள பெண்ணே நின்று கொண்டிருப்பது போலவும் சுயநலத்தோடு நானும், சமூகமும் ஒதுங்கி நடப்பது போலவும் தோன்ற வைத்த கதை.

இந்தச் சிறுகதைத் தொகுப்பு பற்றி என் நண்பர்கள் தங்களுக்கு விமர்சனங்களை உங்களுக்கு நேராக அனுப்புவார்கள். முதலில் திரு. சுந்தர்ராமன் (வங்கி ஊழியர்-ஜே. கே. படித்தவர்) அனுப்புவார்.

இந்தக் கதையின் கடைசி வரி ‘அவளின் கைகள்...’ க்குக் கவித்துவமாய் நிறைய அர்த்தம் இருந்தாலும் அதற்கு முன்வரியிலேயே கதை முடிந்துவிடுகிறது. கதையின் தாக்கத்தை வாசகனிடமும் நீர்த்துப் போகாமல் பாதுகாக்க வேண்டியது கலைஞனின் கடமை என்றால் அந்தக்கடைசி வரி தேவையில்லை.

இதுபோலவே இதிலுள்ள பல கதைகள் முடிந்த பின்னும் தொடர்வது உங்கள் பாணியாக இருப்பதைப் பார்க்கிறேன். கதையாக முடிவதைவிடவும் கவிதையாக வரவேண்டுமென்ற சங்கதி மேலோங்கியிருக்கிறது.

நிழல்-உறவு கதையிலும் கதை. “இந்தக் கடையெல்லாம் வர்றதுக்கு எங்களுக்காக்காதா...” என்பதோடு கதை அழகாகவே முடிகிறது. மறுபடி நீட்டி ஒரு கவிதா உணர்வைக் கொண்டு வருவது அல்லது ஓவியத்திற்கு shade கொடுப்பது போல் இன்னும் கொஞ்சம் நகாசு செய்வது அல்லது பந்தயத்தில் ஓடிவந்தவன் எல்லையில் சட்டென்று நின்று விடாமல் வேகம் குறைந்து கொஞ்ச தூரம் ஓடி நிற்பது இப்படி ஏதோ ஒன்று உங்கள் பாணியாக இருக்கிறது.

இதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

சில வேறு தினங்களின் நடையில் கிராமத்தின் சித்திரம் இல்லை. இலக்கணப்படி இந்தக் கதை சரியாக வந்திருக்கிறது. மத்தியதர வர்க்கத்தின் நகரவாசிப் பார்வையில்  உள்ளது. பழைய ஞாபகத்தில் நின்று கிராமியமாக இருந்திருந்தால் எவ்வளவோ சிறப்புகளை அடைந்திருக்க வேண்டியது இந்தக் கதை. ஓலையைத் தீயில் போட்டதற்குப் பின்னணியில் எவ்வளவு குமைச்சலிருந்திருக்க வேண்டும். அடையாளம் வலிமையாய்ச் சொல்லியிருக்க வேண்டும். என்றாலும் இதன் ஆரம்பமுதல் இறுதி வரை சிறப்பாக வந்திருக்கிறது. இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும்.

உங்களுடைய அனுபவப் பரப்பு குறைவாக இருப்பதாக ஒரு விமர்சனத்தில் படித்தேன். ‘அடையாளம்’ ‘அது ஒரு பருவம்’ எல்லாம் பரந்த அனுபவப்பரப்பிற்கு  உதாரணங்கள் தாம். ஆனால் அந்த விமர்சகர் சொல்வதில் உண்மை இல்லாமலும் இல்லை. ஒரே மாதிரி கதை சொல்வது என்கிற விஷயம் இப்படி அனுபவப் பரப்புக்குறைவு என்ற கருத்திற்கு எடுத்துச் சென்றிருக்குமோ என்று சந்தேகம் வருகிறது.

இது ஒரு நல்ல சிறுகதைத் தொகுப்பு. உங்கள் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் கடிதம் எழுதுகிறேன்.

என் பாராட்டுகளும், வாழ்த்துகளும்

அன்புடன்

கந்தர்வன்

No comments: