கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-24 கண்ணுபடப் போகுதையா. . .

நாட்டார் நம்பிக்கை சார்ந்த விசயங்களில் ‘கண்ணேறு கழித்தல்’ என்பதும் ஒன்றாகும். கண்ணேறு கழித்தல் என்பதை ‘கண்திருஷ்டி கழித்தல்’, ‘கொதிபிடித்தல்’ என்று பல்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள்.

கண்ணேறு கழித்தல் என்பதை ‘சுத்த ஹம்பக், மூடநம்பிக்கை’ என்று அறிவுஜீவிகள் எளிதில் புறந்தள்ளிவிடலாம். ஆனால் ‘கண்ணேறு கழித்தல்’ போன்ற நம்பிக்கைகள் மக்களின் வாழ்வில் இன்றும் நடைமுறையில் உள்ளது. அதிலும் கிராமத்து மக்களின் வாழ்வில் இப்பழக்கம் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.

கண்ணேறு கழித்தல் என்பது மனம் சார்ந்தது. உளவியலை அடிப்படையாகக் கொண்டது. எனவே இத்தகைய பழக்கவழக்கங்களை எளிதில் நம் வாழ்வியலில் இருந்து துடைத்து எறிந்துவிட முடியாது.

கண்களுக்கு என்று ஒருவித ‘சக்தி’ இருக்கிறது என்பதை அறிவியலாரும் ஒப்புக் கொள்கிறார்கள். சிலர் பார்வையிலேயே மற்றவர்களை ‘வசக்கி’விடுவார்கள். (தன்வசப்படுத்திவிடுவார்கள்).

காதல் வாழ்வில் கண்களுக்கும் கண்கள் பேசும் மொழிக்கும் ஒருவித ஆற்றல் இருப்பதைக் காதலர்கள் உணர்கிறார்கள். கண்களின் வழியே மனதை வசப்படுத்தும் கலையை ‘மெஸ்மரிசம்’ என்று சொல்கிறோம். மெஸ்மரிசம் என்பது அறிவியல்பூர்வமானதே!

கண்களின் சக்தியைப் பற்றிப் பின்வரும் பழமொழிகள் பேசுகின்றன. அவை,

‘கல்லெறிக்குத் தப்பினாலும்

கண்ணெறிக்குத் தப்ப முடியாது.’


‘விண்ணேறு தப்பினாலும்

கண்ணேறு தப்பாது’

என்பவையாகும்.

‘கண்ணேறுபடுதல்’ என்ற செய்தியை நாட்டுப்புறப்பாடல் ஒன்றும் பதிவு செய்துள்ளது.

சீலம் பலகையிலே

செவ்வந்திப் பூ மெத்தையிலே

சீமானும் செல்வியும்

சேர்ந்து விளையாடையிலே

எந்த சண்டாளி பார்த்தாளோ. . .

எப்படித்தான் கண்ணூறு போட்டாளோ. . .


சீலம் பலகைவிட்டு

செவ்வந்திப் பூ மெத்தைவிடர்

சீமானையும் தப்பவிட்டு-இப்போ

செல்வியவள் வாடுறாளே. . .!


-என்பதுதான் அப்பாடலாகும்.

நாட்டுப்புறக்கதை ஒன்றும் ‘கண்ணூறு’ பற்றிப் பேசுகிறது. அக்கதை உயிர்மை பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்துள்ள எனது, ‘மண்ணின் கதைகள்; மக்களின் கதைகள்’ என்ற நூலில் ‘கருங்கண்காரன்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

மனித சமூகத்தின் ஆதி பழக்கங்களுள் கண்ணேறு கழித்தல் என்பதும் ஒன்றாகும். இப்பழக்கம் உலகம் முழுவதும் இன்றும் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகிறது.

அழகை, செழிப்பை, வளமையை பொறாமைக்குணம் கொண்டவன் கெட்ட எண்ணதுடன் கூர்ந்து பார்த்தால் அந்த அழகுக்கு, வளமைக்கு, செழிப்பிற்கு ஏதேனும் தீங்கு நேரலாம் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதுதான் கண்ணேறுபடுதல் என்பதாகும்.

அழகான குழந்தையின் கன்னத்தில் கறுப்பு மையினால் பொட்டுவைத்து அக்குழந்தையின் அழகைக் குறைப்பதன் நோக்கம் கண்ணேறுபடாமல் இருக்கவேண்டும் என்பதால்தான்.

புதிதாகக் கட்டிய வீட்டின் முன்னால் பூசணிக்காயில் விகாரமான படம் வரைந்து வைப்பது, நிறைமகசூல் விளைந்த கழனியின் நடுவில் சோளக்காட்டு பொம்மையை நட்டு வைப்பது போன்றவையும் கண்ணேறுபடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

இதே அடிப்படையில்தான் அழகான வீட்டின் முகப்பில் நிர்வாணமான சிறுவனின் சிலையை வைக்கிறார்கள். அழகான தேரின் சிற்பங்களுக்கு இடையில் கோயில் பிரகாரங்களில், காணப்படும் ஆண்-பெண் கலவிசார் சிற்பங்கள் இடம் பெற்றிருப்பதன் நோக்கமும் கண்ணேறுபடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்று கருதுவதற்கும் இடமுண்டு.

‘கண்ணேறு கழித்தல்’ என்பது ‘தொற்று மந்திரம்’ என்ற கோட்பாடு சார்ந்ததாகும். ஒருவர் மேல் படிந்துள்ள கண்திஷ்டியை, இன்னொரு உயிர்மேல் அல்லது இன்னொரு பொருள்மேல் மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தொற்று மந்திரம் செயல்படுகிறது.

உதாரணமாக, கண்ணேறுபட்டவரின் தலையை மூன்று முறை கோழி முட்டையில் சுற்றி அதை அழித்துவிடுவது. கற்பூரம், எலுமிச்சம்பழம், உப்பு, மிளகுவத்தல், காலடிமண், போன்றவற்றைத் தலையைச்சுற்றி முச்சந்தியில் வீசி எறிவதன் மூலம் கண்ணேறு கழிந்துவிடும் என்று கிராமத்து மக்கள் நம்புகிறார்கள். இத்தகைய செயல்கள் யாவும் ‘தொற்று மந்திரம்’ என்ற கோட்பாடு சார்ந்ததே!

புதுவெள்ளத்துடன் கரைபுரண்டு ஓடிவரும் ஆறு தன்னோடு பல்வேறு பொருள்களை இழுத்துச் செல்வதைக் கண்ட ஆதிமனிதர்கள் அத்தகைய ஆற்றில் மூழ்கி எழுந்தால், தன்மீது உள்ள பழிபாவங்களையும், நோய்களையும் கண்திஷ்டிகளையும் ஆறு (ஆற்றுவெள்ளம்) அடித்துச் சென்றுவிடும் என்று நம்பினார்கள். இந்த உளவியல் காரணத்தால்தான் மனிதர்கள் புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று நீராடிவருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் ‘பாவநாசம்’ என்ற ஊர் உள்ளது. தாமிரபரணிநதியின் நீர் பாவநாசத்தைத் தாண்டிவரும் இடத்தில் மூழ்கி எழுந்தால் தன் பாவங்கள், தன்மீது உள்ள கண்ணேறு முதலியவை நீங்கிவிடும் என்று இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். மக்களின் பாவங்களை நாசம் செய்யும் புண்ணிய ஸ்தலம் என்பதாலேயே இவ்வூர் ‘பாவநாசம்’ என்று பெயர் பெற்றது என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.

மரணப்படுக்கையில் இருக்கும் ஒருவரது பாவங்களைப் போக்கி அவரைச் சொர்க்கத்திற்கு அனுப்புவதற்காகப் பசுமாடு ஒன்றை யாருக்காவது தானமாகக் கொடுப்பார்கள். மரணப் படுக்கையில் இருப்பவர் முன் பசுமாடொன்று நிறுத்தப்படும். அவர் தன் கையினால் மாட்டின் வாலைத் தடவிக்கொடுப்பார். இதனால் அவரின் பாவங்கள் பசு மாட்டின்மேல் மாற்றப்படுகிறது என்று நம்புகிறார்கள். இத்தகைய பசுமாடுகளை ஏழைகளுக்கோ, கோயில்களுக்கோ, அல்லது சவுண்டிப் பிராமணர்களுக்கோ கொடுத்துவிடுவார்கள்.

கண்ணேறு கழிப்பதற்காகச் சில மாந்திரிகர்கள் தாயத்துகளை சம்பந்தப்பட்ட நபரின் கழுத்தில் அல்லது கையில் கட்டுவார்கள். தாயத்தின் வடிவம் ஆண்குறியின் உருவத்தோடு ஒப்புமையுடையதால் அதுவே ஒரு கண்திஷ்டி பரிகார வடிவமாகக் கருதப்படுகிறது.

கேரள மாநிலத்தில் உள்ள மலம்புழா என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் வழிந்து செல்லும் கால்வாய்க்கரையில் நீர்த்தேக்கத்திற்கு மிக அருகிலேயே நிர்வாண கோலத்தில் ஒரு பெண்ணின் உருவத்தைச் செய்து வைத்துள்ளார்கள். கண்ணேறுபட்டு நீர்த்தேக்கத்திற்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே அணைக்கட்டின் பக்கம் அப்பெண்ணின் நிர்வாணச் சிலை வைக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்கள்.

தான் பெற்ற அழகான பிள்ளைகளுக்கு கருப்பன், கருப்பாயி, குப்பன், பிச்சை, முனி போன்ற பெயர்களை நிஜப்பெயர்களாகவோ, பட்டப் பெயர்களாவோ பெற்றோர்கள் சூட்டுகின்றார்கள். கண்ணேறு பற்றிய அச்ச உணர்வின் காரணமாகவே இத்தகைய பெயர்களைச் சூட்டியுள்ளனர்.

அழகான குழந்தைகளைக் கண்டு எமன் ஆசைப்படுவானாம். அதனால் குழந்தையின் காது மடல்களைக் குத்திக் காயப்படுத்திவிட்டால் அக்குழந்தைகளின் அருகில் எமன் வரமாட்டானாம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் குழந்தைகளுக்கு (இருபாலருக்கும்) காதுகுத்தும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

குழந்தை பிறந்த பதினோராம்நாள் அக்குழந்தையின் கைகளுக்கு கறுப்புவளையல் அணிகின்றார்கள். இதுவும் கண்ணேறுபடாமல் இருப்பதற்காகத்தான்.

தாசிகள் எப்போதும் போகித்தவண்ணம் வாழ்பவர்கள். அவர்கள் வாழ்வில் விதவைக் கோலம் என்பது கிடையாது. எனவே தாசியின் கழுத்து மாலையில் இருக்கும் மணிகள் அதிஸ்டம் வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது. சில குடும்பப் பெண்கள் தன் தாலியுடன், தாசிகள் அணியும் கழுத்துமாலை மணிகளையும் சேர்த்து அணிந்து கொள்கின்றார்கள். இதனால் தாசிபோல் தனக்கும் ‘போகம்’ வாய்க்கும் என்றும் சாகும்வரை விதவைக்கோலம் வாய்க்காது என்றும் நம்புகிறார்கள். இவை யாவும் உளவியல் சார்ந்த பழக்க, வழக்கங்கள்தான்.

புதுமனை புகும்போது புதுமனையின் உள்ளே முதன்முதலாக பசுமாட்டினை (கோமாதா) அழைத்துச் செல்வது, முதன்முதலாக, பால் காச்சுவது போன்ற செயல்களைச் செழிப்பு மந்திரம் காரணமாகவே செய்கிறார்கள்.

கண்ணேறு கழித்தல் என்பது குழந்தை பிறந்தது முதல் அது வளரும் பல்வேறு நிலைகளிலும், கடைசியாகச் சாகும் தறுவாயிலும், செத்தபின்பும் (பல்வேறு சடங்குகளாக) நிகழ்த்தப்படுகிறது.

கண்ணேறு கழிப்பவர்கள் சிலபாடல்களை இசையுடன் மனதிற்குள்ளேயே முணுமுணுப்பார்கள். அத்தகைய பாடல்களில் ஒன்றை இங்கே வாசகர்களின் பார்வைக்குத் தருகிறேன்.

‘பாவி கண்ணு; பாப்பா கண்ணு

மூளி கண்ணு; மோபி கண்ணு

உற்றார் கண்ணு; பெற்றார் கண்ணு

நாய்க் கண்ணு; நரிக்கண்ணு

பேய்க் கண்ணு; பிசாசுக்கண்ணு

பாம்புக் கண்ணு; பல்லி கண்ணு

எல்லார் கண்ணும் சுடு,சுடு,சுடு’

என்பது அப்பாடல்களில் ஒன்றாகும்.

கால்நடைகளுக்கும் கண்ணேறுபடும் என்று கிராமத்து மக்கள் நம்புகிறார்கள். கண்ணேறுபடுவதிலிருந்து கால் நடைகளைக் காப்பதற்காக அவற்றின் கழுத்தில், நடுவே துளையிட்ட சிரட்டை, பெரிய சோழிகள் (சோவிகள்), கருப்புமணிகள், வெண்சங்கு, நீலமணி, பித்தளை மணி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைக் கட்டுவார்கள்.

கடலாமை ஓட்டின் துண்டு, மனித மண்டை ஓட்டின் துண்டு, இரும்பு மோதிரம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை கால் நடைகளின் கால்களில் கட்டிவைப்பார்கள்.

மாட்டின் கொம்புகளுக்கு சாயம் பூசுவதும் கண்ணேறுபடாமல் இருக்கத்தான். கறவைமாடு மேய்ந்துவிட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பும்போது, உலக்கையைத் தாண்டி செல்வதும் கண்ணேறு கழிக்கும் பரிகாரம்தான்.

கடைக்காரர்கள் தங்கள் கடையில் இரண்டு கண்களைப் படமாக வரைந்து தொங்க விட்டிருப்பார்கள். அதன்கீழே ‘என்னைப்பார் சிரி’ என்று எழுதியிருப்பார்கள். சில கடைக்காரர்கள் கழுதையின் படம் வரைந்த பதாகை ஒன்றைத் தொங்க விட்டிருப்பார்கள். அதன்கீழ் ‘என்னைப்பார் யோகம் வரும்’ என்று எழுதப்பட்டிருக்கும். சில கடைக்காரர்கள் எலுமிச்சம் பழத்தை அல்லது இரட்டையாக ஒட்டிப் பிறந்த மிளகாய் வற்றலைக் கட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். சிலர் மாட்டு லாடம் அல்லது தேய்ந்த குதிரை லாடத்தைக் கட்டித் தொங்கவிட்டிருப்பார்கள்.

புதிய கார் அல்லது புதிய வாகனம் வாங்கினால் அதன் முன் பகுதியில் கறுப்பு கம்பளி ஆடையின் கிழிந்த துண்டைக் கட்டி வைக்கிறார்கள். இதுவும் கண்ணேறு கழிக்கும் நம்பிக்கை சார்ந்த செயல்தான்.

‘கண்ணேறு கழித்தல்’ என்ற இந்த வழக்கம் பல்வேறு வடிவங்களில், நம்முன் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்றான கண்ணேறு கழித்தல் என்ற சடங்கு நம்மை அறியாமல் நம்மைச் சுற்றி நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

நான் ஏற்கனவே இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியபடி கண்ணேறு கழித்தல் என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. மிக விரிவாக ஆராயத்தக்க ‘கண்ணேறு கழித்தல்’ என்ற செயல்பாட்டை இங்கே இக்கட்டுரை மூலம் அறிமுகம் செய்கிறேன்.

No comments: