கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கடித இலக்கியம்-6 இளசை அருணாவுக்கு ரகமி எழுதியது

நமஸ்காரம்
தாங்கள் 'தினமணி கதிர்' ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தை அவர் பார்வையிட்ட பின்னர் அதனையே நானும் பார்வையிடும் நல்வாய்ப்பினைப் பெற்றேன். தங்களிடம் என்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். நான் சென்னையில் பிரபலமான தினசரி 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் 25ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்புள்ள பதவியில் பணியாற்றியபின், 1978ல் அந்நிறுவனத்தினின்று விலகியவன். நான் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் (1953-1978) அந்நாளில் கவி பாரதியார் எமது பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியபோது (1920-21) அவருடன் இணைந்து பணியாற்றிய உதவி ஆசிரியர்கள், தொடர்ந்து பணியாற்றி வந்தனர். இவர்களுடன் எனது உத்தியோக முறையில் நானும் அவர்களுடன் நெருங்கிப் பழகியதோடு, கவி பாரதியாரைப் பற்றி அவர்கள் ஆதார பூர்வமாக கூறின விஷயங்களை தொகுத்து அவ்வப்போது தமிழ்நாட்டு எல்லாப் பத்திரிகைகளிலும் எனது புனை பெயரில் வெளியிட்டு வந்து கொண்டிருக்கிறேன். இது விவரம் தாங்களும் அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.
தவிர சுதேசமித்திரனின் பழைய பிரதிகளிலிருந்து நம் பாரத தேச விடுதலைக்காகப் பாடுபட்டவர்களின் முக்கிய தலைவர்களின் குறிப்புகள் மற்றும் இதர விஷயங்கள் சுதேசமித்திரன் பத்திரிகையில் செய்தி ரூபத்தில் வெளிவந்தவைகளை தனியாக தொகுத்து வைத்துள்ளேன்.
இந்த ரீதியில் 1911 ஜுன் 17முதல் 1912 பிப்ரவரி 15வரையில் வெளிவந்த "கோர்ட்டு வர்த்தமானம்" பகுதியின் கீழ் "திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்கொலை வழக்கு" தலைப்பில் வெளியான அனைத்துச் செய்திகளை சுமார் 750பக்கங்களுக்கு மேலாக ஆதார பூர்வமாக சேகரித்து எழுதி வைத்துள்ளேன். இது தவிர இக்கேஸ்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளாகிய முதல் குற்றவாளி எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி (பின்னர் இவர் நந்திமலையில் ஓங்கூர் ஸ்வாமி என்ற பெயரில் இருந்தவர்) 7வது குற்றவாளி ஆலப்புழை ஹரிகர அய்யர். 12வது குற்றவாளி செங்கோட்டை 'கஸ்பா' எஸ்.வி. அழகப்பபிள்ளை ஆகியோருடன் தொடர்பு கொண்டு அவர்கள் தந்த திடுக்கிடும் விஷயங்களுடன் இக்கேஸ் தீர்ப்பு வெளியான 'மாடர்ன்-லா-ஜர்னல்' 1912ல் வெளிவந்த சட்டத்தொகுப்பு தவிர, போலீஸ் தரப்பில் வெளியிட்டுள்ள நுணுக்கமான விவரங்கள் வெகு சிரமப்பட்டு சேகரித்தேன். இவையனைத்தும் ஒன்று சேர்க்க எனக்கு 15 ஆண்டுகள் ஆயிற்று!
தமிழ்நாட்டில் செங்கோட்டை வாஞ்சியைப் பற்றி ஆதாரபூர்வமான ஒரு தகவல் இதுவரை எவரும் பதிப்பகத்தார் வெளியிட்டதில்லை. அவரவர்கள் கர்ண பரம்பரையாகக் கேட்டதுடன் தங்களது கற்பனை சரக்குகளையும் சேர்த்து ஏதோ, தவறான கருத்துடன் வாஞ்சியின் வரலாற்றை திரித்துக் கூறுகின்றனர். ஏன்? இன்றைய சினிமா, நாடக உலகிலும் வாஞ்சிக்கு பைஜாமா அணியச்செய்து அதற்குமேல் ஜிப்பா, இவற்றோடு வாஞ்சியை அறிமுகப்படுத்தி விட்டனர். தமிழ் மக்களும் கண்டு களித்துவிட்டனர். அறிமுகப்படுத்தியவர்களுக்கு ஆதார பூர்வ தகவல்கள் கிடைக்காததே இதற்கு பெரும் குறை. எனவே எனக்குக் கிடைத்த ஆதாரபூர்வமான விஷயங்களை கதை ரூபத்தில் சொன்னால் இன்றைய இளந்தலைமுறைகள் விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் ஜெனித்ததே "வீரவாஞ்சி" என்ற எனது படைப்பு.
தங்கள் கடிதத்திற்கான எனது பதிலை தாங்கள் பொறுமையுடன் படித்ததற்கு மிக்க வந்தனம்.
என்றும் தங்கள் விசுவாசமுள்ள
அன்பன்
ரகமி
11.6.83
கடிதச் சேகரம்: கழனியூரன்

No comments: