கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கடித இலக்கியம் -4 வண்ணதாசன் தி.க.சிக்கு எழுதியது

மதுரை-16
2. 3. 95


அன்புமிக்க அப்பாவுக்கு,
வணக்கம்.

ராமகிருஷ்ணன், இசக்கி அண்ணாச்சி எடுத்த உங்கள் புகைப்படம் ஒன்றை அனுப்பியிருந்தார். ரொம்ப நன்றாக இருந்தது.

ஸ்ரீதருக்குத் தோன்றியது இத்தனை வருடத்திலேயும் எனக்குத் தோன்றாமல் போயிற்று. பத்து வருஷம் இருபது வருஷமாகக் கேமரா வைத்திருக்கிற நண்பர்கள் எனக்கும் உண்டு. கோபாலின் பெட்டிக் கடை ஆரம்பித்தது. என் சகலர் சண்முகம் அண்ணாச்சியின் நிலை யாஷிகா உட்பட நானே நிறைய படம் எடுத்திருக்கிறேன். எடு என்றால் ரோல் ரோலாக எடுத்துத் தர விருத்தாசலம் வேறு பக்கத்திலேயே வண்ணாரப்பேட்டையில் இருந்தான். ஆனால் உங்களையும் அம்மாவையும் படம் எடுக்கவேண்டும் என்று எனக்கு இதுவரை தோன்றாமல் போனதுதான் நிஜம். அன்பின் உபதேசியங்களில் ஒருத்தனாக மட்டுமே நான் இருந்திருக்கிறேன் என்ற உண்மையின் சவுக்கடி மேலே விழுந்துகொண்டு இருக்க ஸ்ரீதர் எவ்வளவு உயரத்துக்குப் போய்விட்டான்.

இதுமாதிரி எவ்வளவு தப்பை நான் செய்து கொண்டிருக்கிறேனோ. யார் யார் வந்து செய்தபின் உறைக்கப்போகிறதோ. இந்தக் குற்ற உணர்வுகளெல்லாம் அப்புறம் வைத்துவிட்டு, இந்தப் புகைப்படத்தின் நேர்த்திக்கு மகிழ்ச்சியடைகிறேன். அம்மாவையும், அம்மா அப்பா நீங்கள் இருவராகவும் எடுத்திருக்கிறீர்களா அன்றைக்கு.

*

கோயம்புத்தூர் போய்த் திரும்பிவிட்டேன். கடிதத் தொகுப்பின் பணி அன்றைக்குத்தான் ஆரம்பமாயிற்று.

வண்ணநிலவன், கலாப்ரியா, ரவிசுப்ரமணியன், நான் மற்றும் திரு. நஞ்சப்பன் எல்லோரும் பூர்வாங்கமாக இதுகுறித்துப் பேசினோம். விக்ரமாதித்யன் வரவில்லை. அவரிடமிருந்து எனக்கோ, வைகறைக்கோ எந்தத் தகவலும் இல்லை. அவரை சென்னை தினமணி அலுவலகத்தில் யாரோ பார்த்தாக (ராஜமார்த்தண்டன்) ராமச் சந்திரன் சொன்னார்.

எழுத்து ஒன்றின் மூலமாகவே, புதிய புதிய மனிதர்களை அடைய முடிந்த சாத்தியங்களுக்கான நிறைவுடன் நான் இருக்கிறேன். சுபமங்களா பேட்டிக்குப் பிறகு, முக்கியமாகக் கவிதை தொடர்பான என் பதில்களால், நான் மிகப் பலரின் தனிப்பட்ட விரோதத்தையும் எதிர்விமர்சனத்தையும் தோண்டத் தோண்ட வந்துகொண்டிருக்கிற தாக்குதல்களாகவும் சந்திக்க நேர்ந்துவிட்ட இந்த நாட்களில், கோவையில் கழித்த இந்த ஒரு நாள் மிக முக்கியமானதாகிறது எனக்கு.

திரு. விஜயா வேலாயுதம் எங்களைச் சந்திக்க நஞ்சப்பன் வீட்டிற்கே வந்திருந்தார். மார்ச் 18ல் நெல்லையில் சந்திக்கலாம் என்று தெரிவித்தார். என்னுடைய தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் 3ம் பதிப்பு வெளியிட விருப்பம் தெரிவித்தார்.

ஞானியையும் சந்திக்க முடிந்தது. சாந்தாராம் என்கிற அவருடைய உதவியாளர் இல்லாத நிலையில் சிக்கல்களுடன் அவரைச் சந்தித்தது துயரம் தருவதாக இருந்தது. எந்தத் தீவிரமான தத்துவப் பரிச்சயங்கள் இன்றியும்கூட, நான் ஞானியை ஒரு முதிர்வும் கனிவும் நிறைந்த மனிதராக உணர்கிறேன். தமிழ் இலக்கிய, கருத்துலகில் சூழலில் அவர் இருப்பு தொடர்ந்த முக்கியத்துவம் உடையதாகப் படுகிறது.

*

இந்தியா-டுடே, புதிய பார்வை கதைகளுக்குப் பிறகு, சதங்கை, சுபமங்களா இதழ்களுக்காக மேலும் இந்தச் சிறுகதைகளை அனுப்பியிருக்கிறேன். இதேபோலத் தொடர்ந்து எழுதி, காலச்சுவடு, இலக்கு இதழ்களுக்கும் அனுப்பிவிட முடிந்தால் நன்றாக இருக்கும்.

*

ராஜுவுக்கும் பாலாஜிக்கும், இன்றைக்கு லட்சக்கணக்கான தமிழகப் பதினாறுகளுக்கும் திங்கட்கிழமை தேர்வுகள் துவங்குகின்றன. முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் படித்துக் கொண்டிருக்கிற ராஜுவைப் பார்க்க எனக்கும் சந்தோஷமாக இருக்கிறது.

*

அம்மாவுக்கு எங்களது வணக்கத்தைச் சொல்லுங்கள். போன தடவை வந்திருக்கும்போது, பஸ்
ஸ்டாண்ட் வரை வந்து அம்மா வழியனுப்பிய கருணையினால் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாராவது வழியனுப்பவும், துணையிருக்கவுமாக இருந்தால் இந்த வாழ்க்கை எவ்வளவு அடர்த்தியாகிவிடுகிறது.
எல்லோர்க்கும்

அன்புடன்-
கல்யாணசுந்தரம்
கடிதங்கள் தொகுப்பு: கழனியூரன்

No comments: