கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கடித இலக்கியம் -5 லா.ச.ராமாமிர்தம், இளசை அருணாவுக்கு

தென்காசி
26-8-73

க்ஷேமம்.

தாயின் சன்னதியில் வேஷங்களைக் களைவோமாக.

உங்கள் தாயை நான் கண்டதில்லை.

ஆனால் அம்மாவைத் தனித்தனியாகக் காணத் தேவையில்லை. அம்மா காலமாவதில்லை.அவளால்தான் காலத்தையும் கடக்க முடியும்.

தன் சேய்காப்பில் அரக்கபலமும்
 மூலமூர்க்கமும்
 தெய்வ கருணையும்
ஒருங்கே

அவளிடம்தான் சேரப்பெறும்.
 துளியாய் உன் வயிறில் துயின்று
 தளிராய் உன்தோளில் துயின்று
 உயிரை உன் மார்பில் பருகி
 நீயே என் குருவாய்
 உன் மடியில் என் முதல்சொல்லைப் பயின்று
 நான் களிறாகி
 எங்கெங்கு திரிந்தாலும்
 என்னென்ன புரிந்தாலும்
 உன் அடைகாப்புள்தான் இயங்குகிறேன்..
 என்ன உயரப் பறந்தாலும்
 அதோ-என்மேல் வெம்மை தடுப்பில்
 உன் சிறகு நிழல் தட்டுகிறது.
 உன் நிழல்தான் என் மதில். .
 அம்மா. . ! உன் எல்லைதான் என்ன?
 நீயே அறியாய். . .
 அதுதான் உன் மஹிமை.
 உங்கள் தாய்க்கு என் அஞ்சலி. . .
     லா.ச.ராமாமிருதம்

கடிதச் சேகரம்: கழனியூரன்

No comments: