கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கடித இலக்கியம் -1 கல்யாண்ஜி- கி.ரா. வுக்கு எழுதியது

அன்புமிக்க கி.ரா மாமாவுக்கு,

வணக்கம்,

தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாகக் கோடைமழை. இந்த வீடு ஒரு அற்றத்தில் இருக்கிறது. எதிர்ப்பக்கம் திறந்தவெளி. நீர்க்கருவை முளைத்துக் கிடக்கிறது. அசலூரில் இருந்துவந்து கொத்து வேலை, தச்சு வேலை செய்துகொண்டிருக்கிறவர்களுக்கு இந்த இடம் தோது. கால் கழுவ கல்வெட்டாங்குழியில் வருஷம் முழுவதும் தண்ணீர் கிடக்கும். அதனால் இந்தமாதிரி நேரத்தில் பீ வாடை அடிக்கும். மாடு கன்று மேயும்போது புல், செடிகொடி, காட்டுத் துளசி கடிபடுகிறவாடை. செம்போத்து, தவிட்டுக் குருவி, மைனாச் சத்தம். முன்பு மயில் இருந்தது ஒன்று இரண்டு. பூச்சி பொட்டு நடமாட்டம் குறைந்துவிட்டது. அவ்வளவாக இல்லை. மண்புழு, வளையல் பூச்சி, நத்தை எல்லாம் அதனதன் காலத்தில் தட்டுப்படுகின்றன. உலகம் ரொம்பக் கெட்டுப் போய்விடவில்லை.

* உங்களுக்கு எழுதவந்த விஷயமே வேறு. ஒரு காரியமாகத்தான் இந்தக் கடிதம்.

நாங்கள் இரண்டுபேரும் நம்வீட்டிற்கு வந்து இருந்தபோது புதுவை இளவேனில் நாலைந்து போட்டோ எல்லோரையும் எடுத்தார் அல்லவா. அது எல்லாம் எனக்குக் கிடைக்குமா. இங்கே நமக்கு வேண்டியவர் ஒருத்தர், (ஆழி பதிப்பகம்-செந்தில் நாதன்) என்னுடைய குரலில் என்னுடைய சில கவிதைகளைப் பதிவு செய்து அதைக் குறுந்தகடாகக் கொண்டுவர நினைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடுகிறார். எனக்குப் பின்னால் கலாப்பிரியா அப்புறம் வேறு இன்னொருத்தர் என்று வரிசையாகச் செய்ய உத்தேசம். அப்படி CD போடுகிறபோது, அந்ததந்தப் படைப்பாளி வாசிக்கிற கவிதைகளையும், நேர்த்தியாக அச்சடித்துக் கொடுக்கப் போகிறார்.

காவ்யா போட்டிருக்கிற நகுலன் புத்தகம் மாதிரி நிறைய நல்ல புகைப்படங்களுடன் இருக்க வேண்டும். சின்ன வயதுப்படம், பள்ளிக்கூடத்துப்படம், ஏதாவது சிநேகிதர்கள் கூட இருப்பது, குடும்பத்தோடு இருப்பது என்று, பேப்பர்-பேனாவைத் தாண்டி இருந்தால் நல்லது என்று நினைக்கிறார். அதுக்கெல்லாம் எனக்கு வழியில்லை. சரி. வருகிற படமாவது நல்ல படமாக இருக்கட்டுமே என்றுதான் இளவேனில் எடுத்த படங்களைக் கேட்டுப் பார்க்கத் தோன்றிற்று.

நீங்கள்தான் எடுத்துச் சொல்லவேண்டும். இளவேனில் முகவரியை அவருடைய கவிதைத் தொகுப்பிலேயே எழுதி வைத்த ஞாபகம். ஆனால் அதை யாருக்கோ படிக்கக் கொடுத்தேன். திரும்ப வரவில்லை.

* கணவதி அத்தை எப்படி இருக்கிறார்கள். வள்ளிக்கு கணவதி அத்தை, மதுரையில் ஜெயபாஸ்கரன் அம்மா இப்படி இரண்டு மூன்று பேரை ரொம்பப் பிடித்துப் போயிருக்கும். (எல்லோரையும் பிடிக்கும் என்று பொய் சொல்ல அவள் என்ன கதையா எழுதுகிறாள். அல்லது தாடிவளர்த்த சாமியார்கள் மாதிரிப் பிரசங்கம் பண்ணுகிறாளா). அரிவாள் மனையைப் பிடுங்கிக் காய்கறி நறுக்கத் தொடங்குவதில் இருந்தே அது தெரிந்துவிடும். தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டே நடமாடுவதில், எதிர்எதிராக உட்கார்ந்து பரிமாறிக் கொண்டு சாப்பிடுகிறதில், ராத்திரி ரொம்ப நேரம், அநேகமாக விடிய விடியக்கூட, பேசிக்கொண்டே படுத்திருப்பதில் எல்லாம் அது தெரிந்துவிடும். அந்த இடத்தில் நாமெல்லாம் பொருட்டே இல்லை, புழு பூச்சி மாதிரித்தான்.

வள்ளியும் கணவதி அத்தையும் இருக்கிற உலகத்தில், அப்படி ஒரு புழுவாக இருக்கச் சந்தோஷம்தான் எனக்கு.

விகடனில் தேனி. ஈஸ்வர் எடுத்த படங்களைக் கேட்டால் கொடுப்பார்களா, தெரியவில்லை.கடிதச் சேகரம்: கழனியூரன்

No comments: