கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-13 நாட்டர் மாட்டு வாகடம் (எ) பசு வைத்தியம்


ஆதி மனிதர்கள் காடுகளில்தான் வாழ்ந்தார்கள். காடுகளில்தான் மிருகங்களும் வாழ்ந்தன எனவே காடுகளில் வாழ்ந்த மனிதர்களைத் தாக்குவதையே சில மிருகங்கள் தொழிலாகக் கொண்டிருந்தன. காடுகளில் வாழ்ந்த மனிதர்கள். தன்னைத்தாக்க வரும் மிருகங்களிடம் இருந்து தற்காத்துக் கொண்டு வாழ்ந்த அதே வேளையில், சில மிருகங்களைத் தன் வாழ்வியல் வசதிக்காகப் பிடித்து அவைகளை ‘வசக்கி’ (பழக்கப்படுத்தி) வளர்க்கவும் தொடங்கினான்.

மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும் உள்ள உறவு என்பது கோடிக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் பந்தமாகும். அதேபோல் மனித இனம் கணக்கற்ற காலம். மிருகங்களையும், பறவைகளையும் வேட்டையாடி, மகிழ்ந்திருக்கிறது சில மிருகங்களையும், பறவைகளையும் தனது பராமரிப்பில் வைத்துப் பேணிக்காத்து வளர்ந்திருக்கிறது.

இந்த நீண்ட நெடிய உறவினால் மிருகங்களைப் பற்றியும் பறவைகளைப் பற்றியும் மனித குலம் தெரிந்து கொண்ட “உண்மைகள்” பலவாகும்.
மிருகங்களையும், பறவைகளையும் தன் செல்லப் பிராணியாக வளர்த்த மனிதர்கள். அவைகளுக்கு நோய், நொடிகள் வந்த போது சில வைத்தியங்களையும் செய்தார்கள்.

கைப்பக்குவமாகவும், மூலிகைகளைக் கொண்டும். மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் நம் முன்னோர்கள் செய்த வைத்திய முறைகள்யாவும் அழிந்து விட்டன.

சில கிராமங்களில் இன்றும் மிருக வைத்தியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆடு, மாடு, குதிரை, கழுதை, நாய், முயல் போன்ற வளர்ப்பு மிருகங்களுக்கும், கோழி, கிளி, மைனா, புறா போன்ற வளர்ப்புப் பறவைகளுக்கும் நாட்டு வைத்தியமுறையில். சிகிச்சை அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த அரிய வைத்திய முறைகளை கால்நடை சார்ந்த நவீன மருத்துவத்துறை சேகரித்திருக்கிறதா... அவைகளை முறையாகப் பதிவுசெய்து ஆய்வுகளுக்கு உட்படுத்தி இருக்கிறதா என்று தெரியவில்லை.

மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் செய்யப்படும் நாட்டு வைத்தியத்திற்கு ‘வாகடம்’ என்று பெயர். இத்தகைய வைத்திய முறைகள் குரு, பாரம்பரியமாக, வாய்மொழி வடிவிலேயே பாதுகாக்கப்பட்டு வந்தது. பிற்காலத்தில், இத்தகைய வைத்திய முறைகளைச் சில புலவர்கள் (மிருக வைத்தியம் தெரிந்த புலவர்கள்) செய்யுட்களாக இயற்றி வைத்தார்கள். அவைகளையும் சில மிருக வைத்தியர்கள். மனனம் செய்து வைத்துக் கொண்டு, கால் நடைகளுக்குச் சில வைத்தியங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில், அனைத்து விதமான, வைத்திய நூல்களும் செய்யுள் வடிவில் இருந்ததைப் போலவே, சில வாகட நூல்களும் செய்யுள் வடிவிலேயே இருந்தன. அவைகள் பிற்காலத்தில் மலிவுப் பதிப்பாக, குகிலி இலக்கிய நூல்களைப் போல, மக்கள் கூடும் இடங்களில் விற்பனையும் செய்யப்பட்டன.

இப்படிப்பட்ட வைத்திய நூல்களில் குதிரை வாகடம், கழுதை வாகடம், பசு வாகடம், எறுமை வாகடம், காளை வாகடம், ஆட்டு வாகடம், கோழி வாகடம் என்று தனித்தனி நூல்களும் இருந்தின. அவைகள் எல்லாம் அழிந்தொழிந்து விட்டன.

மிருகங்களுக்கு வைத்தியம் செய்து நீண்ட காலம் அனுபவப்பட்ட, அனுபவசாரத்தில் இருந்து, கண்டுபிடிக்கப் பட்ட வைத்திய முறைகளில் ஒன்று மாட்டு வாகடம் என்பது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம் என்ற ஊரில் வசித்து வரும் கருத்தப் பாண்டி என்ற மாட்டு வைத்தியரிடம் இருந்து நான் சேகரித்த சில “தாவுகளை” என் பாணியில் இனி வாசகர்களுக்கு, வழங்குகின்றேன்.

தம்பி, முதல்ல மாடுகளுக்கு, வழக்கமா வருகிற சில நோய்களின் பெயர்களையும் அதன் விளக்கத்தையும் சொல்கிறேன் கேளுங்கள்.

* அமுரி நோய் - இந்நோய் கண்ட மாடுகள் ஒரே சீராக மோளாமல் (சிறு நீர் கழிக்காமல்) சொருக்கு, சொருக்கு என்று நீர்விடும் (சிறுநீர் கழிக்கும்)

* இந்து நோய் - இந்நோய் கண்ட மாடுகள் நாலுகாலும் தளர்ச்சியுற்று, படுத்த படுக்கையாகக் கிடக்கும்.

* அவுரி நோய் - இந்நோய் கண்ட மாடுகளின் வாயில் நீர்வடியும், நீர் நாயோட்டமாக ஓடிக் கொண்டே இருக்கும், பின்பு நடக்க மாட்டாமல் சரீரம் (உடல்) நடுங்கும் நாக்கை நீட்டும்.

* குதிரைப்படுவன் - இந்நோய் வந்த மாடுகளுக்கு, கண் மறைந்திருக்கும் ; செவி தாழும்; வாய் வீங்கும்.

* சுடரி நோய் - இந் நோய் கண்ட மாடுகள் வெயிலில் போய் நிற்கும்; பல்லைக் கடிக்கும்; கொட்டாவி கொள்ளும் (விடும்) வாய் அசை வெட்டாது.

* உறமடக்கி நோய் - இந்நோய் தாக்கியமாடுகள், செருமிக் கொண்டே இருக்கும், மூச்சு விடாமல் கணைக்கும், அலறிக் கூப்பிடும்.

* முகப்படுவன் - இந்நோய் வந்த மாடுகள். முகத்தில் வீக்கம் காணப்படும்; தீவனம் தின்னாது, நுனிப் புல் மேயும், கண் சிவந்து காணப்படும்.

* அறுகுனி - இந்நோய் வந்த மாடுகளின் -  நாலு சந்தும் (தொடையும்) வீங்கிக் காணப்படும்; இந்நோய் வந்த மாடுகள் போடும் சாணி (சாணம்) நாறும் (வீசும்).

* நீர்பாட்டு - இந்நோய் வந்த மாடுகளின், வயிறு, கன்னம், இருபுற விலா முதலியன வீங்கிக் காணப்படும்.

* நெரி நோய் - இந்நோய் வந்த மாடுகளுக்கு வயிறு இரையும் (சத்தமிடும்) சாணி துர்-நாற்றமுடையதாக இருக்கும். வாய் நீர் வடியும், கண்ணில் பீளை (பூளை) சாடும்.

* புலிமுகச் சிலந்தி : இந்நோய் கண்ட மாடுகள் மூக்கடைக்கும்; வாய் புண்ணாகும்; இரை தின்னாது.

இப்படி நூற்றுக் கணக்கான நோய்கள் மாடுகளுக்கு வரும். சில மாடுகளைப் பார்த்த மாத்திரத்திலேயே, “இம்மாட்டிற்கு இன்ன நோய்தான் வந்திருக்கிறது என்று சொல்லி விடுவோம். அதெல்லாம் மாடுகளுக்கு வைத்தியம் பார்க்கப்பார்க்க. அனுபவத்தில்தான் புரியும்.

பெரிய மாடுகளுக்கு கொடுக்கும் காட்டமான மருந்துகளைக் கன்றுக் குட்டிகளுக்குக்  கொடுத்து விடக் கூடாது. அதே போல விருதா மாடுகளுக்குக் கொடுக்கும் காட்டமான மருந்துகளை செனை (சினை) மாடுகளுக்கு (கற்ப முற்றமாடுகளுக்கு) கொடுத்திடக்  கூடாது. இதுபோன்ற விபரங்களும் அனுபவத்தில்தான் தெரியும். அதேபோல், எருமைக்கு கொடுக்கும் மருந்தைப் பசு மாட்டிற்குக் கொடுத்திடக் கூடாது.

இன்ன, இன்ன நோய் கண்ட மாடுகளுக்கு, இன்ன, இன்ன மருந்தைத்தான் கொடுக்க வேண்டும், அதுவும் இத்தனை வேளைதான்; இத்தனை நாளைக்குத்தான், இத்தனை அளவுதான் கொடுக்க வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. அதை எல்லாம். குருவிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.

மாட்டு வைத்தியத்தில், ரெண்டுமுறை உள்ளது. ஒன்று மருந்து கொடுத்து நோயைக் குணப்படுத்துவது, மற்றொன்று. சூட்டுக் கோலால் மாடுகளின் உடம்பில் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட வடிவங்களை சூடு போடுவதன் மூலம் குணப்படுத்துவதாகும். சில நோய்களுக்கு, மருந்து கொடுத்து  சூட்டுக் கோலால் சூடும் போட வேண்டியதிருக்கும் என்றார் வைத்தியர்.

(மாட்டு வைத்தியர் கருத்தப்பாண்டி சூட்டுக் கோல் போடும் சிகிச்சை முறை பற்றிச் சொன்ன போது எனக்கு மனிதர்களுக்குச் செய்யப்படும் ‘அக்குப் பஞ்சர்’ என்ற வைத்தியம் நினைவுக்கு வந்தது)

இனி “சில மாட்டு நோய்களையும், அந் நோய்களுக்கான மருந்துகளையும் சொல்கிறேன் கேளுங்க” என்ற வைத்தியர், தொடர்ந்து மாடுகளுக்கு வரும் நோய்களைப் பற்றியும் அதற்கான வைத்திய முறைகள், மருந்துகள் பற்றியும் சொல்லலானார்.

காளை மாடுகளுக்குப் ‘பெருநாடி’ என்று ஒரு நோய் வரும். இந்நோய் வந்த மாடுகளின் வாயில் நீர் வடியும், கறுப்புநிறமாய் கழிம்பு போல் (வழக்கத்திற்கு மாறாய்) சாணி போடும். அடிக்கடி பல்லைக் கடிக்கும். இந்நோய் நீங்க. கால்படி வேலம்பட்டைத் தூள். கால்படி விளாம்பட்டைத்தூள் இவற்றுடன் ஒரு படி திணை அரிசியையும் சேர்த்து இவைகளைக் காடித் தண்ணீரில் (புளித்த கேப்பைக் கூழின் தண்ணீரில்) வேக வைத்து ஒரு நாளைக்கு மூன்று வேளை கொட்டான் வைத்துப் புகட்ட வேண்டும். என்று சொன்ன வைத்தியர், ‘கொட்டான்’ என்றால் என்ன வென்று உங்களுக்குத் தெரியுமா..?” என்று கேட்டார். நான், “தெரியாதே ஜயா!” என்று சொன்னேன்.

உடனே. வைத்தியர் தன் வீட்டினுள் சென்று மூங்கில் குழாயில் செய்த ஒரு கருவியை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் காட்டினார். குழந்தைகளுக்கு மருந்து புகட்ட உதவும். ‘சங்கு’ போல். மாடுகளுக்கு மருந்து புகட்ட உதவும் கருவியின் பெயர் தான் கொட்டான் என்று புரிந்து கொண்டேன்.

‘இந்தக் கொட்டான் மூலம் எப்படி மாட்டிற்கு மருந்து புகட்டுவீர்கள்?” என்று கேட்டேன்.

கணுவில் இருந்து வெட்டப்பட்ட அடிப்பாகமாகவும், நுனியில் சாய்வான வாய்ப்பகுதியாகவும் ஆன மூங்கில் குழாயாக அந்தக் கொட்டான் இருந்தது. வைத்தியர், “இந்த மூங்கில் குழாயில். மருந்தை ஊற்றி, மாட்டின் தலையை மூக்கனாங்கயிற்றோடு சேர்த்துத்தூக்கிப் பிடித்துக் கொண்டு, அதன் மேல் தாடையையும், கீழ்த்தாடையையும்  பிரித்து (வாயைப் பிளக்க வைத்து) மாட்டு வாயின் உள் நாக்கிற்கு அருகில் மருந்து ஊற்றப்பட்ட இந்த கொட்டானின் நுனிப்பகுதியைக் கொண்டு சென்று, மருந்தை ஊற்றி விடுவேன்” என்றார்.

பெருநாடி நோய்க்கு இப்படி, ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் மேலே கண்ட மருந்தைக் கொடுத்ததுடன் இன்ன மாதிரியான வடிவில் மாட்டின் இடது விலாப்பகுதியில் சூட்டுக் கோல் கொண்டு சூடும் போட வேண்டும்” என்ற வைத்தியர் சூடுபோட வேண்டிய வடிவத்தைத் தரையில் தன் ஆள்காட்டி விரலால் விரைந்தும் காட்டினார். இப்படி,


“சூட்டுக் கோல். என்றால் எப்படி இருக்கும்? அதை நெருப்பில் பழுக்கக் காய வைத்தா மாடுகளின் மேல் இப்படிப்படம் போடுவீர்கள்?” என்று கேட்டேன்.

சூட்டுக் கோல் என்றால். அது சாதாரண இரும்புக் கம்பி இல்லை. சூட்டுக்கோல் தயாரிப்பதே ஒரு பெரும் கலை. பத்திருபதுவிதமான, பழைய அல்லது தேய்ந்த இரும்புச் சாமான்களையும் அத்தோடு சில மூலிகைகளையும் சேர்த்து நன்றாக உலையில் காய வைத்துத் திரவமாக உருக்கி பின் அதைக் காய வைத்துச் சூட்டுக் கோல்களை உருவாக்குவார்கள். எனவே சூடான சூட்டுக் கோலால், மாட்டின் தொலியில் படம் போல மிக லாவக மிகப் போட்டு விடுவார்கள். சூடு போட்ட இடத்தில் உடனே ஒரு பச்சிலைச் சாற்றையும் ஊற்றி விடுவார்கள். இதனால், சூடு போட்ட இடத்தில் புண்விரைவில் ஆறி, அந்த இடத்தில் தழும்பு விழுந்து விடும்.

மனிதர்கள் அழகுக்காகத்தான் உடம்பில் பச்சை குத்திக் கொள்வதைப் போலதான் இதுவும். மாடுகளுக்குப் போட்ட சூடு தழும்பானபின் அதுவும் ஒரு வித ஓவியம் போல் பார்க்க அழகாகவும் இருக்கும். இது ஒரு வைத்திய முறை, நரம்புகளுக்கு விரைப்புக் கொடுத்து நோயைக் குணமாக்கத்தான் இத்தகைய சூடுகளைப் போடுகிறார்கள், மாடுகளைக் கொடுமைப் படுத்துவதற்காக அல்ல. என்று விளக்கம் சொன்ன வைத்தியரிடம்  இன்னொரு மாட்டு நோயையும் அதற்கு உரிய மருந்தையும் சொல்லுங்கள் என்றேன்.

வைத்தியர், ‘தொடை’ நோய் என்றொரு நோய் மாடுகளுக்கு வரும். இந்நோய் கண்ட மாடுகள். ஏதாவது ஒரு காலைத் தூக்கிக் கொண்டே நிற்கும். செவி (காது) மடல் தாழ்ந்து, தளர்ந்து தொங்கும். இரை தின்னாது.

தொடை நோய் வந்த மாடுகளுக்கு கால்கிலோகிலுப்பைப் புண்ணாக்கையும், கால்கிலோ மதுக்காரை வேர்ப்பட்டையையும் நன்றாக அரைத்து எடுத்து, அதைச் சாராயத்தில் கலந்து கொட்டான் மூலம் புகட்ட வேண்டும்.

இப்பண்டுகத்தை மூன்று நாளைக்கு காலையும் மாலையும் செய்து வரவேண்டும். அத்தோடு பேய்ப்பீர்க்கை இலைச் சாற்றில், வெள் நெற்றியும், சிறிது மிளகும் சேர்த்து  நன்றாக அம்மியில் வைத்து அரைத்து மாட்டின் பிட்டி முதல் கால்குழம்பு வரை, ஆதியோடந்த மாகத் தேய்த்து விட வேண்டும் அத்தோடு. சூட்டுக் கோலால் மாட்டின் இடது விலாவில் சுடவேண்டும்” (சூடுபோட வேண்டும்) என்றவர். சூடு போட வேண்டிய வடிவத்தைத் தரையில் படமாகவும் வரைந்து காட்டினார், இப்படி,


“தம்பி இது போன்ற நூற்றுக்கணக்கான சூட்டுக் கோல் வைத்தியம் மாட்டு வைத்திய சாஸ்த்திரத்தில் நடைமுறையில் இருக்கிறது. நூற்றுக் கணக்கான மருந்துகளும், மாட்டு வாகடத்தில் இருக்கிறது” என்றார் மாட்டு வைத்தியர் கருத்தப்பாண்டி.

மாட்டு வைத்தியர் கூறிய வைத்திய முறைகளையும், மருந்துகளையும் கேட்டு எனக்கு வியப்பு ஏற்பட்டது. மாடு கன்றுகளோடு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தலைமுறை தலையாகப் பழகிய நம் முன்னோர்கள் ஆராட்சி செய்து கண்டு பிடித்த இது போன்ற அறிவியல் பூர்வமான, சித்த வைத்தியக் கூறுகள், காலவெள்ளத்தால் அழிந்து, மறைந்து போய்க் கொண்டிருக்கிறதே என்று நினைத்து என் மனம் மிகவும் வருந்தியது.

நாம் தொலைத்து விட்ட அறிவு சார் சொத்துக்களின் வரிசையில் இந்த மாட்டு வாகடம் என்ற பசு வைத்திய சாஸ்திரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். வேறு என்னதான் செய்ய முடியும் நம்மால்?

No comments: