கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-8 அப்படியும் சில பழக்கங்கள்; இப்படியும் சில வழக்கங்கள்

கீரைத்தண்டை அதிகமாகச் சாப்பிட்டால் காம உணர்ச்சி குறையும். எனவே, விதவையாகி வீட்டோடு இருக்கும் கைம்பெண்களுக்குக் கீரைத் தண்டு குழம்பு வைத்துக் கொடுப்பார்கள். முருங்கைக்காயை அதிகமாகக் குழம்பில் சேர்த்துச் சாப்பிட்டால் காம உணர்ச்சி அதிகமாகும். (திரைப்பட இயக்குனர் கே.பாக்யராஜ் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் இச்செய்தியை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார்) என்ற நம்பிக்கை போலத்தான் இந்தக் கீரைத் தண்டு சமாச்சாரமும்.
விதவைப் பெண்களை 'அறுதலி' என்றும் வட்டார வழக்கு மொழியில் அழைப்பார்கள். கீரைகளை அடிக்கடி அலுதலிகளுக்குச் சாப்பிடக் கொடுத்துவிட்டு, அவர்களை கோபத்தில் 'அறுத முண்ட', 'கீர முண்ட' என்று திட்டவும் செய்வார்கள். 'முண்டை' என்று வட்டார வழக்குச் சொல்லும் 'விதவைப் பெண்' என்பதையே குறிக்கிறது. வசவுவையும் போது முண்டை என்றும், அப்பெண்ணின் முதுகுக்குப்பின் 'அறுதலி' என்றும் சொல்வார்கள்.
'அறுதலி வளர்த்த கழுதைக் குட்டி' என்கிறது ஒரு சொலவம். (அறுபட்ட தாலியை 'அறுதலி' என்றார்கள்.)
'அறுதலிக்குக் கீரைத் தண்டு
ஆனைக்கு வாழைத் தண்டு' என்கிறது மற்றொரு சொலவம். யானை என்பதுதான் வட்டார வழக்கில் 'ஆனை' யாயிற்று. மதம் பிடித்த யானைக்கு எவ்வளவு முடியுமோ.. அவ்வளவு (வண்டி வண்டியாய்) வாழைத் தண்டைத் தின்னக் கொடுப்பார்கள். வாழைத்தண்டு யானையின் மதத்தைக் குறைக்கும் என்பது ஒருவித மிருக வைத்தியமாகும். "விதவைப் பெண்ணின் காம உணர்ச்சியைக் குறைக்க அடிக்கடி கீரைத் தண்டை (தண்டங்கீரையின் தண்டுப் பகுதி) தின்னக் கொடுக்க வேண்டும், மதம் பிடித்த யானை தன்னிலை பெற, வண்டி வண்டியாய் வாழைத்தண்டுகளைத் தின்னக் கொடுக்க வேண்டும்" என்பது அப்பழமொழியின் பொருளாகும்.
கிராமத்தில் சிலர் நூறு வயதைத் தாண்டியும் உயிரோடு இருப்பார்கள். படுத்த படுக்கையாகக் கிடக்கும் அப்படிப்பட்ட நபர்களைப் பராமரிக்க என்று ரெண்டு ஆள் தனியே தேவைப்படும். இப்படிப்பட்ட கேஸ்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, இன்னா போகப்போகுது உயிர்; அன்னா போகப் போகுது உயிர் என்று இழுத்துக்கிட்டே கிடக்கும். ஆனால் லேசில் (உயிர்) போகாது. வைத்தியர் மாலையில் நாடி பிடித்துப் பார்க்கும் போது நாடி கீழே விழுந்து கிடக்கும். வைத்தியர் "இன்றைக்கு ராப்பொழுதத் தாங்காது" என்று சொல்லி விடுவார். உடனே அக்கம் பக்கத்து சொக்காரர்களுக்கு (சொந்தக்காரர்கள் எனலாம்) செய்தி சொல்லி அனுப்புவார்கள். 'சிலேப்பனத்தில் கிடக்கு, சீக்கிரமாய் பெரிசு போய்ச் சேர்ந்து விடும்' என்று பெரியவர் பெற்ற பிள்ளைகள் நினைப்பார்கள்.
மறுநாள் காலையில் நாட்டு வைத்தியர் வந்து நாடி பிடித்துப் பார்த்துவிட்டு 'இப்ப நாடி நல்லாப் பேசுதே!' என்பார். சற்று நேரத்தில் துஷ்டி கேட்க வந்த பேரன், பேத்திகளிடம், கொள்ளுப்பேரன், நுள்ளுப் பேத்திமார்களிடம் பெரியவர் "சௌக்கியமா இருக்கீகளா?” என்று ஜாடையில் கேட்பார். (நுள்ளிப் பேத்தி என்றால் கொள்ளுப்பேத்தியின் பிள்ளை)
இனி, பெரியவருக்கும் ஒண்ணும் ஆகாது! என்று நிம்மதிப் பெரு மூச்சுவிட்டு விட்டு, சொந்த பந்தங்கள் கிளம்புவார்கள். மறுநாள் மீண்டும் பெரியவருக்கு அந்திக் கருக்கலில் 'சிலேப்பனம்' தட்டிவிடும். நாடி விழும். மறுநாள் நாடித்துடிப்பில் உசார் வந்துவிடும். இப்படியாக சில பெரிசுகள் நூறு, நூற்றிப் பத்து என்று தாண்டியும், சாகவும் செய்யாமல், பிழைத்து எழுந்திருக்கவும் செய்யாமல் கண்ணாமூச்சி (இது ஒரு கண்பொத்தி விளையாட்டு) காட்டிக் கொண்டே இருக்கும்.
இந்த மாதிரியான சூழலில் நூற்றிப்பத்து வயதைத் தாண்டிய அந்தப் பெரியவரை 'கருணைக் கொலை' செய்துவிடுவது என்று முடிவெடுப்பார்கள். அப்படி குடும்பத்துக்காரர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்தபின் பெரியவரின் உச்சந்தலையில் நிறைய விளக்கெண்ணணெயைத் (ஆமணக்கு முத்தில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணையைத்) தேய்ப்பார்கள். பிறகு செவ்விள நீர் தண்ணியைக் குடிக்கக் கொடுப்பார்கள்.
விளக்கெண்ணெய் குளிச்சி; இளனித் தண்ணியும் குளிச்சி, அத்தோடு அந்தப் பெரியவரை ஒரு இடத்தில் உக்கார வைத்து அவர் மேல் குடம் குடமாகத் தண்ணீரைக் கொட்டுவார்கள். இடைவிடாமல் தண்ணீரை பெரியவர் மேல் கொட்டும்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். குளிர்ச்சியில் செயற்கையாக ஜன்னி வர அத்தோடு மூச்சுத் திணறல் ஏற்பட, பெரியவர் 'சிவ பதவி' அடைந்துவிடுவார். இப்படி கருணைக் கொலை செய்வதை கிராமத்தில் "குளிப்பாட்டிப் படுக்க வைத்தல்" என்கிறார்கள்.
உயிர்போகும் தருவாய்க்கு வந்துவிட்ட முதியவரைக் கட்டிலில் இருந்து கீழே இறக்கி, வெறும் தரையில் போட்டுவிடுவார்கள். தரையில் கிடந்தபடி உயிர் போக வேண்டும் என்று கிராமத்து மக்களில் சில இனக்குழுவினர் நினைக்கிறார்கள். "பூமித்தாயின் மடியில் கிடந்தபடி உயிர் போவது புனிதம்" என்று அவர்கள் நம்புகிறார்கள். இப்படி கட்டிலை விட்டுச் சிலேப்பனத்தில் கிடப்பவரைத் தரையில் போட்டுவிட்டால், இனி அவ்வளவுதான், இன்னும் சற்று நேரத்தில் உயிர் போகப் போகிறது என்று சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் புரிந்து கொண்டு, ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிடுவார்கள். இப்படிச் செய்வதை "கட்டிலை விட்டிறக்கிப் போட்டாச்சி" என்று சொல்கிறார்கள்.
------------------------------------
கிராமத்தில் கோயில் கொடை ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே கோயில் வளாகத்திற்குள் கால் நட்டிக் காப்புக் கட்டி விடுவார்கள். இதற்கு 'காப்புத்தடை' என்று பெயர்.
கோயில் கொடை கொண்டாடுபவர்கள் மட்டும் (கோயிலுக்குப் பாத்தியப்பட்டவர்கள், வரி கொடுப்பவர்கள்) கோயில் கொடைக்கு காப்புக் கட்டிய பின் அனேகமாகத் தூரத்து ஊர் பயணத்தை மேற்கொள்ளமாட்டார்கள். வெளியூரில் துஷ்டி விழுந்தாலும் போக மாட்டார்கள். துஷ்டி வீட்டுக்காரர்களும் 'காப்புத்தடை' உள்ளவர்களுக்கு துஷ்டி சொல்லி ஆள் அனுப்ப மாட்டார்கள். காப்புக் கட்டுதல் என்பது ஒரு அடையாளமாகவும் திகழ்கிறது. ஊரில் உள்ள மற்றச் சமுதாய மக்கள், இன்னும் ஒரு வாரத்தில் அந்தக் கோயிலுக்கு 'கொடை' வரப்போகிறது என்று புரிந்து கொள்கிறார்கள். காப்புக் கட்டிய பின் வரிக்காரர்கள் 'சுத்த பத்தமாக' (அகப்பத்தியம், மனச்சுத்தம், உடல் உறவைத் தவிர்த்தல்) இருந்து கொள்வார்கள்.
-----------------------------------------------
கணவனோ, மனைவியோ புதன் அல்லது சனிக்கிழமையில் எண்ணை தேய்த்துக் குளித்த நாளன்று இரவில் உடல் உறவு கொள்ளக்கூடாது. எண்ணை தேய்த்துக் குளிப்பதால், உடலில் உள்ள நரம்புகள் தளர்ந்து போய் இருக்கும். அன்று இல்லற சுகத்தை அனுபவிப்பதால் தளர்ந்த நரம்பு முறுக்கேறிவிடும். அதனால் ஒருவித ஜன்னி நோய் வரும். இந்த நோய்க்கு 'சுகஜன்னி' என்று பெயர். ஜன்னியில் (நோயில்) கூட 'சுகமான ஜன்னி' இருக்கிறது?!
------------------------
ஒருவர் இறந்த பிறகு அவரை சுடுகாட்டிற்குக் கொண்டு போகும்வரை நிறைய சடங்கு சம்பிரதாயங்களைச் செய்கிறார்கள். பச்சைத் தென்னை மட்டையில், பச்சைத் தென்னை ஓலையில் பாடை செய்வது, சங்கூதுவது, கொள்ளிக் குடம் உடைக்க வைப்பது, இடுகாட்டிற்கு விறகு கொண்டு போவது, சவத்தை எரியூட்டுவது போன்ற காரியங்களை குறிப்பிட்ட சில சமுதாயத்தினர் செய்கின்றார்கள். இவர்களுக்கு, சுடுகாட்டில் வைத்து இறந்தவரின் உறவினர்கள் குறிப்பிட்ட அளவில் அவர்கள் செய்த வேலைக்காகப் பணம் கொடுப்பார்கள். இப்படிக் கொடுக்கப்படும் பணத்திற்கு 'சுடுகாட்டு சுதந்திரம்' என்று பெயர். இந்தச் சுடுகாட்டு சுதந்திரத்தைக் கொடுப்பவர்கள் இடது கையில் கொடுப்பார்கள். வாங்குபவர்கள் வலது கையால் வாங்கிக் கொள்வார்கள்.
--------------------------------------------------------------------
இளம் பிராயத்துக் காளை மாட்டைக் கோயிலுக்கு நேர்ந்து விடுவதற்கு 'சூலம் சாத்துதல்' என்று பெயர். இந்த மாட்டைச் சூலம் சாத்தியபின் 'கோயில் காளை' என்று அழைப்பார்கள். கோயில் காளையைக் காயடிக்க மாட்டார்கள். இக்காளைகளை யாரும் அடிக்கவும் மாட்டார்கள். சூலம் சாத்திய காளைகளுக்கு, வாழைப்பழம் போன்றவற்றைத் தின்னக் கொடுப்பார்கள். கோயிலுக்கு நேர்ந்து விடப்படும் மாட்டின் பிடியில் சூட்டுக் கோலால் ஒரு அடையாளம் இடுவார்கள். இதைத்தான் 'சூலம் சாத்துதல்' என்கிறார்கள். இந்த அடையாளத்தை (சூலம் சாத்தியதை) வைத்து ஊர் மக்கள் இது 'கோயில் காளை' என்று புரிந்து கொள்வார்கள். இது 'பொலி காளை' யாகவும் திகழும். ஊர் மந்தையில் உள்ள கிடாரியின் (பெண்மாடு)ச் மீது விழுந்து (உறவு கொண்டு) அக்கிடாரியைப் பலப்படுத்தும். (கருத்தரிக்கச் செய்யும், சினையாக்கும்).
யாருக்கும் கட்டுப்படாமல், செல்லப் பிள்ளையாக ஊரைச் சுற்றிக் கொண்டு, எந்த வேலை, ஜோலியும் பார்க்காமல், கன்னிப் பெண்களை 'டாவடித்'துக் கொண்டு அலைகிற பணக்கார வாலிபப் பையனைப் பார்த்து, "அவனுக்கு என்னப்பா, சூலம் சாத்தி நேர்ந்து விட்ட கோயில் காளையில்ல" என்று ஏளனமாக கேலி செய்வார்கள்.
'மது பொங்கினால் மழை வரும்' என்கிறது ஒரு சொலவம். ரொம்ப நாளாக மழை பெய்யவில்லை என்றால் கோயிலுக்கு நேர்ந்துகொண்டு 'மதுக்குடம்' எடுப்பார்கள். நவதானியங்களையும் அரைத்துப் புளிக்க வைத்து அதை ஒரு குடத்தில் ஊற்றி ஊற வைப்பார்கள். தானியக் கரைசல் புளித்துப் பொங்க, அதில் ஊமத்தங்காய்களையும் அரைத்துப் போடுவார்கள். இதனால் குடத்தில் உள்ள தானியக் கரைசல் புளித்துப் பொங்கும். இப்படிப் பொங்கும் குடத்தை 'மதுக்குடம்' என்கிறார்கள். பொங்கிய மதுக்குடங்களைக் கோயிலில் கொண்டு போய் வைத்தால், 'மது பொங்கியதைப் போல மழையும் (பெய்து வெள்ளம்) பொங்கும்' என்று நம்புகிறார்கள். கிட்டத்தட்ட இது 'முளைப்பாரி' எடுப்பது போலத்தான்.
ஒரு பானையில் மண் நிரப்பி அதில் தட்டாம் பயறு, பாசிப்பயறு முதலியவற்றின் விதைகளை நெருக்கமாகத் தூவி, அதை வெயில் அதிகம் படாத ஒரு இடத்தில் நாலைந்து நாட்களுக்கு வைத்துவிடுவார்கள். தினமும் பானையில் இருக்கும் மண்ணிற்கு நீர் ஊற்றி வருவார்கள். எனவே, பயறுவகை விதைகள் நெருக்கமாக பானையில் முளைத்து, வளர்ந்து நிற்கும். இப்பானையை நோன்பிருந்து கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். இதையே 'முளைப்பாரி' என்கிறார்கள்.
மழை வேண்டி ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து இரவில் 'மழைக் கஞ்சி' அதை வீடுவீடாகக் கொண்டு சென்று கொடுப்பார்கள். இப்படிக் கஞ்சி காச்சி ஊற்றுவதை 'மழைக் கஞ்சி ஊற்றுதல்' என்கிறார்கள். மழைக் கஞ்சி காச்சி ஊற்றினால், அந்த ஊரில் விரைவில் மழை வரும் என்று சில கிராமத்தில் வாழ்கின்ற மக்கள் நம்புகிறார்கள். கழுதைகளுக்கு (ஆண் கழுதைக்கும், பெண் கழுதைக்கும்) கல்யாணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் சில கிராமத்து மக்களிடம் காணப்படுகிறது.
------------------------------------------------------
அலங்காரம் இன்றி, சுற்றிலும் நான்கு புறங்களிலும் அடைப்பின்றித் தற்காலிகமாக ஒருவிதப் பந்தலை, எழவு வீட்டின் முன்பு போடுவார்கள். இந்தப் பந்தலைப் பார்த்ததுமே ஊரில் உள்ள மக்கள் இந்த வீட்டில் எழவு விழுந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள். இதற்கு 'எழவு வீட்டுத் தட்டிப் பந்தல்' என்று பெயர். இந்தப் பந்தலை எழவு வீட்டில் பதினாறு நாள் கழித்துதான் (விசேசம் முடிந்த பின்தான்) பிரிப்பார்கள். இந்தப் பந்தல் கல்யாண வீட்டுப் பந்தலில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.
--------------------------------------------------------------
சில இனக்குழு மக்களிடையே 'பணச் சாப்பாடு' என்ற பழக்கம் நடைமுறையில் உள்ளது. திருமணம் முடிந்தபின் நடக்கும் பெண் வீட்டார் அழைப்பின் போது மாப்பிள்ளை உடனே சாப்பிட்டில் கை வைக்க மாட்டார். தன்னுடன் வந்த அங்காளி, பங்காளிகள் (உறவினர்கள்) அனைவருக்கும் சாப்பாட்டு இலையில் பணம் (வசதிக்கு ஏற்ப ஐம்பதோ, நூறோ) வைக்க வேண்டும். எல்லோருக்கும் பணம் வைக்கப்பட்டதை உறதி செய்தபின்தான் மாப்பிள்ளை தன் சாப்பாட்டின் மேல் கை வைப்பார். இதைத்தான் பணச்சாப்பாடு என்கிறார்கள். (பாவம் பெண் வீட்டுக்காரர்கள், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு சாப்பாடும் கொடுத்து, பணமும் கொடுக்க வேண்டியதிருக்கிறது.)

No comments: